சத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 120 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கமலை அடித்துக் கொண்டிருந்த கந்தசாமி அவள் வருகிறாளா’ என்று குளத்துக் கரையைப் பார்த்தான். மணி பத்துக்கு மேலாகிறது. இன்னும் அவள் ‘கஞ்சி கொண்டு வரவில்லை. இரண்டு ‘செவலைக் காளைகள் நோக்கரவின் இருபுறத்திலும் கழுத்தைக் கொடுத்து ‘கமலைக் கிடங்கில் முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருக்க, அவன் வால் கயிற்றைப் பிடித்து லாவகமாகக் கிணற்றுத் தண்ணிரை கூனையில் ஏற்றி, பிறகு, அதே லாவகத்தோடு வடத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, ‘இடத்தை’ மாட்டின் வாலைத் திருகிக் கொண்டு, ‘வலத்தை மாட்டின் அடிவயிற்றைக் காலால் வருடிக் கொண்டே ‘ம்பா. ம்பா… பய மாடு… ம்பா…’ என்று சொல்லிக்கொண்டும், சாட்டைக் கம்பால் லேசாகத் தட்டிக் கொண்டும், கிடங்கில் அத்துமானம் வந்ததும், ஒரு அழுத்தத்தோடு உட்கார்ந்து, வால் கயிற்றைச் சுண்டி, தண்ணீரைக் கொட்டினான். அக்கம் பக்கத்து வயல்களிலும் இதே மாதிரி’கமலை’ அடிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

கந்தசாமி, அலுப்போடு ஒரு ‘சொக்கலால் பீடியை எடுத்து, பற்றவைக்கப் போனான். அதற்குள் காத்தாயி கஞ்சிக் கலயத்தோடு வந்துவிட்டாள். அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். உழைப்பின் முத்திரையாக அவளுக்கு ஆண்டுக்கு ஒரு வயது குறைந்துகொண்டிருந்தது. சிம்மம்போல் பார்வையும், தேக்குக் கட்டைபோல உடம்பும் கொண்ட முப்பது வயது கந்தசாமிக்கு, அவள் சரியான ஜோடிதான்.

“என்ன பிள்ளே, கரையிலே ஆளைக் காணோம். திடீருன்னு மதுரைவீரன் மாதிரி வந்து நிக்கே?”

கந்தசாமியின் நகைச்சுவைக்குக் காத்தாயி, சிரிக்காமல் கடுகடுப்பாகப் பதிலளித்தாள்.

“தோட்டத்து வழியா வாறேன். நேத்து மிளகாய் கொத்துக் கொத்தாய்க் கிடந்தது. எந்த இருசாதிப்பய மவனோ பறிச்சிட்டு போயிட்டான். தங்க நகையை தவிட்டுக்கு வித்து, பொன்னு நகையைப் பொடிப்பொடியாய் வித்து, பயிர் வச்சால் கட்டையிலே போற பய, பறிச்சிக்கிட்டுப் போயிட்டான். பேச்சியம்மா, நீதாம்மா பறிச்சவன் கையைப் படக்குன்னு ஒடிக்கணும்.”

‘மிளகாய்’ களவு போன செய்தி, கந்தசாமியை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமலே, “யாருடி பறிச் சிருப்பா? ” என்றான்.

“இல்லாதவன் வயது எல்லாத்துக்கும் மயனியாம்! இதுக்கு வேறே போயி சாஸ்திரம் பாக்கனுமாக்கும். ஓங்க அண்ணன்தான் பறிச்சிருப்பாரு. நேத்து அவுக வீட்ல துவையல் வாடையைப் பார்த்தபோதே எனக்குத் தெரியும். ஒங்களுக்குன்னு வாச்சிருக்காரே அண்ணாத்த, அவரு கம்மா இருந்தாலும், அவரு கையி கம்மா இருக்காதே.”

கந்தசாமி ஒன்றும் பேசாமல், ‘கமலையை அவளிடம் கொடுத்துவிட்டு, கை காலை அலம்பிவிட்டு கமலக் கல்லில் இருந்த கலயத்தை முடியிருந்த ‘கும்பாவை’ எடுத்தான். பானையில் இருந்த ‘அவிச்ச அவித்திக் கீரையையும் சோளச் சோற்றையும் கும்பாவில் வைத்து, வாய்க்கால் தண்ணீரை ஊற்றி, நாலு மிளகாய்களை, முனைகளை முறித்து விட்டு, உப்பை எடுத்துக் கரைத்து விட்டு, ஒரு கவளத்தை வாயில் வைத்தான். காத்தாயி, வடத்தில் அமர்ந்து மாடுகளை “ம்பா.பய மாடு..ம்பா.நான் மாடு” என்று சொல்லிக் கொண்டே முன்னாலும் பின்னாலும் வந்தாள்.

“ஏ. புள்ளே உப்பு கொஞ்சம் அதிகமா கொண்டு வரக்கூடாது?”

“என்மைா, வாயி நீளுது? இதுக்கு மட்டும் குறைச்ச இல்ல: அன்னனுக்கு அநியாயமா நிலத்தை அளந்து கொடுத்தி ருக்காங்கன்னு நான் நாய்மாதிரி கத்துறேன். சண்டைபோட்டு நிலத்த வாங்க துப்பு இல்ல. உப்பு வேனுமாம் உப்பு.”

“எங்க அண்ணன சொன்னியான்னா ஒன்வாய் அழுவிப் போகும்.”

“இதனால்தான் ஊரே ஒம்மப் பாத்துச் சிரிக்கிது. துப்புக் கெட்ட பிராந்தன்னு நேத்துக்கூட மாடசாமி தாத்தா சொல்றாரு. அதனால்தான் ஒம்ம அண்ணன் மிளகாயைப் பறிச்சிருக்காரு. இருக்கிறவன் இருக்கிறபடி இருந்தா, சிரைக்கிறவன் சரியாய் சிரைப்பாங்கறது சரிதான்.” (பிராந்தன் என்ற வட்டாரமொழிக்கு, தேசீய மொழி ‘லூஸ்’)

“நான் என்னடி சரியில்லாமப் போயிட்டேன்?”

“உம்ம அண்ணன், நீரு சரியா இருந்தா மிளகாய் பறிப்பானா?” ( ர்’ ‘ன்’ ஆகியது.)

“அவர் பறிச்சான்னு எதை வச்சி சொல்ற?”

“நான் கும்பிடுற பேச்சியம்மா கேளாம போகமாட்டா. அவன் கையில கரையான் அரிக்கும். மிளகா பறிச்ச அவன் விரல்ல வீக்கம் வராம போவாது.”

கந்தசாமி, அவளை உரக்கத் திட்டுவதற்காக எழுந்த போது, அவன் அண்ணன் சுப்பையா அங்கே வந்தான். வீங்கியிருந்த அவன் பெருவிரலில் விளக்கெண்ணெய் போட்டு ஒரு துணி சுத்தியிருந்தது. கந்தசாமிக்கு அண்ணனிடம் ஏதோ பேச வேண்டும் போலிருந்தது. அதற்குள் காத்தாயி முந்திவிட்டாள்.

“கையில என்ன மச்சான் கட்டு? வீங்கியிருக்கு?”

“நேத்து ராத்திரி தோட்டத்திலே குத்துக் காலுல கையை வச்சேன். ஏதோ கடிச்சது தோணிச்சி. இதுக்குள்ள வாழைக்காய் மாதிரி வீங்கிட்டு. நீ என்னடா ஒரு மாதிரி இருக்கே? காலா காலத்தில சாப்பிடக் கூடாது?”

காத்தாயி, கந்தசாமியை ஒரக்கண்ணால் பார்த்துத் திருப்தி தெரிவித்தான்.

“சரி நான் வாறேன். செங்கோட்டைக்குப் பாரம் ஏத்திக்கிட்டுப் போவணுமுன்னு நினைச்சேன், விரலைப் பாத்தா முடியாது போலிருக்கு. சீக்கிரம் சாப்பிட்டு கமலையை வாங்கேண்டா. பொம்பளையை எவ்வளவு நேரம் வடத்தில விடுறது? பிராந்துப் பயலுக்கு எப்பவும் அசமந்தந்தான்.”

சுப்பையா செல்லமாகத் திட்டிக் கொண்டே எங்கேயோ போனான். காத்தாயி, “பேச்சியம்மா, அவன் விரலு வெள்ளரிக்காய் மாதிரி வீங்கணும்” என்றாள், மச்சான் போனதும்.

கந்தசாமி அண்ணனுக்கு வக்காலத்து வாங்கினான்.

“பார்க்கிறவ கண்ணுக்குப் பச்சையெல்லாம் பாம்பாம். அவருக்கு விரல் வீங்கிட்டா மிளகாய் பரிச்சதா ஆயிடுமா? போடி!”

“இதனால்தான் ஒம்ம அண்ணங்கூட, ஒம்ம பிராந்துப் பயன்னு சொல்லிட்டுப் போறான்.”

காத்தாயி, தான் நேரடியாகக் கூறமுடியாததை மச்சான் மூலமாக ‘பிராந்துப் பய’ என்று புருசனைச் சொன்னதில், மகிழ்ந்து போனாள். கந்தசாமிக்குப் பகீரென்றது. அவள் சொல்வது மாதிரி, அண்ணனுக்கு மிளகாய் பறிச்சதால்தான், பேச்சியம்மா ஒரு வேளை பாம்பா வந்து கடிச்சிருப்பாளோ?

அண்ணனுக்குப் பாம்பு கடிச்சிருக்கும் என்ற எண்ணத்தால், அவனுக்கு சகோதர பாசத்தால் பயமும், அதே நேரத்தில், அண்ணனும் தன்னை ‘பிராந்துப் பய ன்னு சொன்னதால் கோபமும் ஒருங்கே வந்தன. பேச்சியம்மா காட்டிக் கொடுத்திட்டாள்! மிளகாய் பறிச்சவன், நிலத்திலேயும் ஏன் ஏமாத்தியிருக்கக் கூடாது?

“நீ சொல்றதப் பாத்தா, என் அண்ணன் கிட்ட பாகத்துக்கு அதிகமான நிலமிருக்குமோ?”

காத்தாயி பிடித்துக் கொண்டாள்.

“இதுக்குப் போயி பஞ்சாங்கம் பார்க்கனுமாக்கும். நீங்க பிராந்தன்னு அவனுக்குத் தெரியும். உங்க அய்யா மண்டையைப் போட்ட கையோடு கர்ணத்துக்குக் கையில கொடுத்து நிலத்திலே பிடிச்சிட்டான்”

கந்தசாமி, ஒன்றும் பேசாமல் ‘கமலையை வாங்கினான். கொஞ்ச நேரம் கழித்து, மாட்டை அவிழ்த்துவிட்டு. தண்ணீர் பார்த்த பையனை வீட்டுக்கு, மாடுங்கள பத்திக் கிட்டுப் போகும்படி சொன்னான். காத்தாயி அவனைப் பத்திக்கிட்டு, வயலுக்குள் போனாள்.

“பாத்தியா, பத்து மரக்கா விதப்பாட்ல நமக்கு நாலு மரக்கா தான் இருக்கும். அவனுக்கு ஆறு மரக்கா. ஒம்ம கண்ணு நல்ல கண்ணா இருந்தால் சரியாப் பார்க்கலாம்.”

அந்தச் சமயத்தில், கந்தசாமி வயலை உற்றுப் பார்த்தான். அவன் இப்போது ‘பிராந்தன்’ இல்லை. அவனை யாராலும் ஏமாற்ற முடியாது. நிலத்தைப் பார்த்தான். பார்த்துக் கொண்டே நின்றான்.

அப்போது காத்தாயியின் அண்ணன், அதாவது பெரிய தாத்தா பேரன் கருப்பசாமி வந்தார். அவர் ‘பஞ்சபாண்டவர் வனவாசத்தை’ ராகம் போட்டுப் படிப்பவர். சகுனி, அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கந்தசாமி நிலத்தை கண்ணால் அளந்து கொண்டே, “நீ சொல்றது மாதிரி இருந்தாலும் இருக்குண்டி பேசாம கர்னத்தைக் கூட்டியாந்து அளந்திட வேண்டியதுதான்” என்றான்.

பேசப்போன ‘தங்கச்சியை கண்களால் அடக்கிவிட்டு, “மாப்பிள்ளை மச்சான். சொல்றேன்னு தப்பா நினைச்சாலும் சரிதான் கலகம் பிறந்தாதான் நியாயம் பிறக்கும். பாண்டவங்க கலகம் பண்ணுன பிறகுதான் நாடு கிடைச்சுது வரப்ப வெட்டி வயலுக்குள்ள வைக்கறத விட்டுப்புட்டு, கர்னத்துக்கிட்ட போகணுமாம். ஆம்பிள பேசற பேச்சா இது?”

“நான் எதுக்குச் சொல்றேன்னா…” கந்தசாமி இழுத்தான்.

“இதுக்குத்தான் ஒம்ம ஊர்க்காரங்க பிராந்தன்னு சொல்றாக” என்றாள் காத்தாயி.

“வாயை மூடுடி!”

“என் வாயை மூடலாம். ஆனால், ஊர் வாய மூட உலமுடியா இருக்கு?”

“அவளை ஏன் கோபிக்கிறிய? ஊர்க்காரங்க ஒம்ம பிராந்தன்னு சொல்றதக் கேட்டு அவள் மனசு பொறுக்காம சொல்றா. ஒமக்கு ஒண்ணுன்னா அவ மனசு கேக்குமா?”

அண்ணனின் பேச்சால், காத்தாயி, முதல் தடவையாகக் கணவனைப் பிராந்தன்னு சொல்றதுக்காக வருத்தப்பட்டு, அந்த வருத்தத்திற்குச் சாட்சியாகப் பொல பொலவென்று கண்ணிர் வடித்தாள்.

கந்தசாமிக்குக் கோபம் வந்துவிட்டது. அவனா பிராந்தன்? அண்ணன் ஏமாற்றினால், அவனா விடுவான்?

‘மம்பெட்டியை எடுத்து வரப்பை வெட்டினான். காத்தாயி வெட்டப்பட்ட கற்களையும், மண்ணையும் எடுத்து மச்சான்’ வயலுக்குள் சரியாக பாதி வயலில் வைத்தாள்.

“இன்னும் கொஞ்சம் தள்ளி வை. இதில வச்சாலும் சுப்பையாவுக்குத்தான் அதிக நிலம் இருக்கும்” என்றார் கருப்பசாமி.

காத்தாயி, ஒரிஜினல் எல்லைக் கோட்டிற்கு அப்பால், இரண்டு மரக்கால் விதப்பாடு ‘தள்ளி வைத்தாள். ஆலோசனை கூறிய கருப்பசாமி நைலாக நழுவினார். விவகாரத்தைச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் விவகாரம் நடக்கும்போது ஸ்தலத்தில் இருக்கக் கூடாது. அப்புறம் எனக்குத் தெரியாதுன்னு சொல்ல முடியுமா?

புது வரப்பும், புது வயலும் உருவாயின. அன்று சாயங்காலம், நிலத்தைப் பார்வையிட வந்த சுப்பையா மனைவி பாப்பம்மாள் “இந்த அநியாயத்தைக் கேக்க ஆளில்லையா.ஆளில்லையான்னு” கத்தினாள். கந்தசாமியின் வயலுக்குள் “பேச்சியம்மா கேளு, கேளு” என்று மண்ணை அள்ளித் தட்டினாள். அக்கம் பக்கத்து வயல்காரர்கள் ஓடிவந்தார்கள் “சுப்பையா வரட்டும், விவகாரத்தைத் தீர்த்திடலாமு ன்னு பலர் சொன்னார்கள். “இப்பவே வரப்பை வெட்டிக் கந்தசாமியின் பங்கு வயலுக்கும் அப்பால் எல்லைக் கோட்டை வைக்க வேண்டும்” என்று பாப்பம்மாளின் தாய்-மாமா கத்தினார்.

“வாங்க மாமா, வெட்டி வைப்போம்” என்றாள் பாப்பம்மாள்.

தாய்மாமா, “இருட்டிட்டு…நாளைக்கு வச்சிடலாம்’ என்று சொல்லிவிட்டு நழுவினார்.

பொழுது புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்த்தன.

செங்கோட்டைக்குப் போன சுப்பையா, திரும்பி வந்தான். தனது நிலம் சுருங்கியது கண்டு, அவன் முகம் சுருங்கியது. நேராய்த் தம்பி வீட்டிற்குப் போனான்.

“ஏலே பிராந்துப் பயல எந்தப் பய பேச்சைக்கேட்டு வரப்ப வச்சேல?” என்றான் கோபமாக.

கந்தசாமிக்கு ஒரே கோபம் அவன் என்ன பிராந்தனா? காத்தாயியைப் பார்த்தான். அவள் அசிங்கமாக’ப் பேசுவாள் என்று நினைத்து, அவனே பதிலளித்தான்.

“அய்யா செத்ததும், நீ அவசரம் அவசரமாக நிலத்தப் பிரிக்கனுமுன்ன போதே, எனக்குச் சந்தேகம். ஒனக்கு ஆறு மரக்கால், எனக்கு நாலு மரக்காலா?”

கப்பையா, சூடானான்.

“ஏல, பிராந்துப் பயல கேட்பார் பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போகாதல.”

கந்தசாமி, அண்ணனைப் பார்த்து முறைத் தான். அவன் விரலைப் பார்த்தான். பேச்சியம்மாள் இன்னும் அந்த விரவில் வீக்கமாக இருந்தாள். மிளகாய் பறிச்சான். இப்போ பிராந்துப் பய என்கிறான். அவன் என்ன பிராந்தனா?

கந்தசாமி, ஒரு முறைப்பை ராக்கெட்டாக்கிப் பேச்சை வெடித்தான்.

“அப்படித்தான் வைப்பேன். உனக்குத் தைரியமிருந்தா என்ன வேணுமுன்னாலும் பண்ணிக்க.”

சுப்பையா, பக்கத்தில் கிடந்த ‘மம்பெட்டியை எடுத்து ஒரே போடாய்ப் போடலாமோன்னு நினைச்சான். பிறகு என்ன நினைத்தானோ, நேராகக் கர்ணத்திடம் போனான்.

அந்த ஊர் கர்ணத்திற்கு. அப்போது பணமுடை. எஸ்.எஸ்.எல்.சி.க்காரியான தன் மகளை, ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு வரன்’ பேசிவிட்டார். அந்தப் பிள்ளையாண்டான் ‘ஸ் கூட்டர் வேண்டும்’ என்று உயிரை எடுத்து வருவது, அவரது ‘ஆஸ்துமா கம்ப்ளைன்டை அதிகமாக்கியது. அந்த ஆஸ்துமா மூச்சில், சுப்பையாவை ஏற இறங்கப் பார்த்தார்.

“நீ வேறே என் உயிரை எடுக்கிறியா? மனுஷன் கல்யாணத்தை நிச்சயிச்சிட்டு அவஸ்தப்படுறான். நிலத்தை அளக்கிறதுக்கு இப்பவா நேரம்? நிலம் ஒடியா போவது? அளக்கலாம், பொறுத்து அளக்கலாம்” என்றும், சுப்பையாவை அளந்தார்.

“அப்படி இல்ல ஐயா. அந்த பிர்ாந்துப் பய, பெண்டாட்டி பேச்சைக் கேட்டு வரப்ப வெட்டிட்டான். விபரீதமாகப் போகுமுன்னால, ஐயாதான் வந்து அளக்கணும்.”

“நான் நிலத்த அளக்கிறதில நேரத்த செலவழிச்சா எனக்குப் படியளக்குறது யாரு? ஒரு கோட்டை நெல்லுக்கு எங்க கிடைக்குமுன்னு தேடிக்கிட்டிருக்கேன். அது இன்னிக்குக் கிடைச்சால் நாளைக்கி வரேன். நாளைக்குக் கிடைச்சா, நாளைக் கழிச்சி வாறேன். அடுத்த மாசம் கிடைச்சால், அதுக்கு அடுத்த “

சுப்பையா புரிந்து கொண்டான். இரவோடு இரவாக ஒரு கோட்டை நெல், கர்னத்தின் வீட்டில் அடைக்கலமானது. கர்ணத்தை மச்சான் மசக்குறான்’ என்பதைப் புரிந்த காத்தாயி, கந்தசாமியின் முதுகில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றிவிட்டாள். பிறகு இரண்டு மூட்டை சோளத்தை ஏற்றி விட்டாள். பிறகு இருவரும் போட்டி போட்டுப் படியளந்தார்கள். கர்ணம், நகர்ந்தபாடில்லை. ஸ்கூட்டர் வாங்க. இவ்வளவு போதாது. “தாசில்தார் நாளைக்கு வர்றாரு:” நாளக் கழிச்சி வருவதாய் சொன்னார்.” பிறகு, ஆர்.டி.ஓ. மீது பழியைப் போட்டார். அதற்குப் பிறகு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் மீது பழி சுமத்தினார். கடைசியில் “நாளைக்கு வரேன்” என்றார்.”நாளை நாளை என்னாதே’ என்று சம்மாவா பாடினார்கள்? நாளை வரவே இல்லை.

சுப்பையா பொறுமை இழந்தான். ஆக்கிரமிப்பை எப்படி முறியடிப்பது என்று திட்டம் போட்டான். ஊர்க்காரர்கள் எல்லாம். அவனைப் பார்த்து, கண்ணைச் சிமிட்டினார்கள். அவன் மனைவியின் சொந்தக்காரர்கள் சிலர், அவனைப் பார்த்து “இந்த உடம்ப வச்சிக்கிட்டு எதுக்குய்யா இருக்கனும் நீ?” என்றார்கள்.

பெண்டாட்டிக்காரி கடைசியாக இருந்த ஒரு ஆயுதத்தை பிரயோகித்தாள். “நீ ஒரு ஆம்பிளையா? இந்தப் பிராந்தங்கிட்ட இருந்து நிலத்தைப் பிடுங்க முடியல; இதுக்கு மட்டும் குறைச்சலில்ல. நிலத்தைப் பிடுங்குறதுக்கு முன்னால என்கிட்ட வரக் கூடாது. ஆம்பிளையாம், ஆம்பிளை.”

மனைவி இரவில் கொடுத்த அடி, சுப்பையாவுக்கு பகலிலும் வலித்தது. நேராக வயலுக்குப் போனான். அவன் மனைவி, பாப்பம்மாளும் பின்னால் போனாள்.

வயலில் கந்தசாமி, ‘ஏழு மரக்கால்’ விதப்பாட்டிலும், எரு போட்டுக் கொண்டிருந்தான். சுப்பையாவுக்கு ரத்தம் கொதித்தது. பிராந்துப் பயலுக்குத் திமிரைப் பாரேன்!

“ஏலே கந்தசாமி, கடைசியா சொல்றேன்.வயலை விடப் போறியா இல்லியா?”

“முடியாது என்ன செய்யனுமோ செய்துக்கோ.”

“ஏ பிராந்தா, கேட்பார் பேச்சக் கேக்காதல!” கந்தசாமிக்கு மூக்கு முட்டக் கோபம். அவன் பிராந்தனா?

“நீ ஆம்பிளையா இருந்தால் செய்யுறத செய்துக்க, நிலத்த விட முடியாது.”

கந்தசாமிக்கு வயிறு முட்ட ஆத்திரம். அவன் ஆம்பிளை இல்லையா?

‘மம்பட்டியை எடுத்து, வரப்பை வெட்டப் போனான்: தம்பி கந்தசாமி மம்பட்டியைப் பிடித்தான். காத்தாயியும், பாப்பம்மாளும் ஒருவர் தலைமுடியை, இன்னொருவர் பிடித்தார்கள். அவர்கள் நகராத’ மாடுகளை வாலைப் பிடித்து முறுக்கி நகர வைத்தவர்கள். ஒவ்வொருத்தியும், இன்னொருத்தியின் தலைமுடியை மாட்டு வாலாக நினைத்துக் கொண்டார்கள்.

பெண்கள் சண்டையிடும்போது, ஆண்கள் கம்மா இருக்கலாமா? கூடாது. ஆகையால் கந்தசாமியும், சுப்பையாவும் கட்டிப் புரண்டார்கள் பயிர்கள் மேலே உருண்டார்கள். வரப்பு மேலே கட்டிப் புரண்டார்கள். பயிர்கள் மேலே அந்த நான்கு பேரும், இரண்டு இரண்டு பேராக வயல் முழுவதும் உருண்டு. அடுத்த வயலுக்கு உருளப் போனார்கள் இப்படியே போனால், எல்லா வயலிலும் பயிர்கள் பாழாகும் என்பதைப் புரிந்து கொண்ட, அக்கம் பக்கத்து ஆசாமிகள் ஓடிவந்து ‘விலக்கு’த் தீர்த்தார்கள். அவர்கள் வந்தபிறகும் பிடியை இறுகவிடாத அண்ணன் தம்பி இருவருக்கும் ‘தர்ம அடி’ (பொதுமக்கள் கொடுக்கும் அடி) கொடுத்துப் பிரித்தார்கள்.

கந்தசாமிக்கு மூச்சு இளைத்தது. சுப்பையாவுக்குக் கை வலித்தது. அவர்களின் மனைவிமார்கள், திட்டிக் கொண்டே கட்டி உருண்டதால், அவர்களுக்கு வாய்தான் அதிகமாக வலித்தது, விவகாரம் பேசப்பட்டது.

“கந்தசாமி, நீ என்ன இருந்தாலும் இவ்வளவு தூரம் வரப்பைத் தள்ளி வைக்கக் கூடாதுல ரெண்டு மரக்கால் விதப்பாட்டை எடுத்திருக்கியே” என்றார் நியாயத்தை நியாயமான முறையில் பேசும் ஐயாசாமி. எல்லோரும் ஆமாம் போட்டார்கள். கந்தசாமிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. தெரியவேண்டிய அவசியமுமில்லை. அவன் மனைவி காத்தாயி பேசினாள். அவளுக்குப் பொய்யோ, மெய்யோ, சமயோசித அறிவு உண்டு.

“என்ன தாத்தா, நியாயம் பேசுறிய நியாயம்? என் நாத்தனார் நாலு பேருக்கும். அவங்க பொண்ணுக சமஞ்சதிலிருந்து’ கல்யாணம் வரைக்கும் வரவு செலவு பாத்திருக்கேன். மொத்தம் ரெண்டாயிரம் ரூவா ஆச்கது. அவரு பாதியைக் கொடுக்கணுமில்ல. கொடுத்தாரா?”

“அவள் சொல்றது அநியாயம். ஒவ்வொரு விசேஷத்துக்கும் என் கையாலேயே பணம் கொடுத்தேன். வேணுமுன்னா பிராந்துப் பயகிட்ட கேட்டுப்பாருங்க” என்றான் சுப்பையா.

‘பிராந்தன்’ அண்ணன் கொடுத்ததுக்கு அடையாளமாக ஆமாம்’ என்று தலையாட்டுவதற்காக, முகத்தைத் தூக்கிக் கீழே கொண்டு போடப் போனான். அதற்குள், மின்னல் வேகத்தில் காத்தாயி குறுக்கே புகுந்து, “பேச்சியம்மா சத்தியமா, அவரு ஒரு பைசாக் கூட பொதுச் செலவுக்குத் தரல. ஆயிரம் ரூவாயைத் தந்திரட்டும், நிலத்தை விடுறோம்” என்றாள் ‘சபையில்’ மனைவியைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் கந்தசாமி, இப்போது அவளுக்குத் தலையை ஆட்டினான்.

அதுமட்டுமல்ல, எப்படியும் தூக்கிய தலையைக் கீழே கொண்டுவந்துதானே ஆகவேண்டும்? “அடி காத்தாயி நீ உருப்படுவியாடி. ஆயிரம் ருவாய்வேற அந்த மனுஷங்கிட்டே (அதாவது தன் புருஷன்கிட்ட) வாங்கிப்புட்டு இப்போ நாக்கு மேலே பல்லைப் போட்டு இல்லன்னா சொல்லுற. நீ வெள்ளச் சீலை கட்டலன்னா என் பேரு பாப்பம்மா இல்லேடி”

“நீலிக்குக் கண்ணிரு நெத்தியிலேயாம். ஒன் புருஷன் எங்களப் பண்ணியிருக்கிற கொடுமைக்கு, நீங்க துள்ளத் துடிக்கப் போகலன்னா என் பேரு காத்தாயி இல்லை”

ஐயாசாமி குறுக்கிட்டார்.

“பிச்சைக்காரத்தனமா பேசாதிய பிச்சைக்கார பயவுள்ளியளா…எதுக்கு இவ்வளவு சண்டை சச்சரவு? நாளைக்கி வெள்ளிக்கிழமைதான். நம்ப வீரபத்திர காளியம்மன் முன்னால சத்தியம் பண்ணிடுங்களா. அவ கேட்டுட்டுப் போறா. போன வருஷம் கள்ளச் சத்தியம் பண்ணுன காடசாமி பாம்பு கடிச்சி செத்தான். பொய் சொல்றவன் மாட்டிக்கிடுவான்.”

மறுநாள் வீரபத்ர காளியம்மன் முன்னால் ஊரே திரண்டது. கந்தசாமியும், கப்பையாவும் குளித்துவிட்டு ஈரத் துன்ரியோடு வந்தார்கள். காத்தாயியும், பாப்பம்மாவும் கணவன்மார்க்கு முன்னால், கேடயம் போல் நின்றார்கள்.

“வீரபத்திர காளியம்மன் அறிய, நான் சொல்றது. என் தம்பி கந்தையா பொதுச் செலவுக்கு செலவளிச்ச எல்லாப் பணத்திலேயும் பாதியை நான் குடுத்திட்டேன்; நான் சொல்றது பொய்யின்னா, அம்மன் என்னையோ, என்னோட பொண்டாட்டியையோ கையோட கால முடக்கலாம்.” என்று சொல்லி சுப்பையா ஏற்றி வைக்கப் போகும் கர்ப்பூரத்தை “அவன் காசே தரல: நான் சொல்றது பொய்யின்னா, ளன்னையோ, என்னோட பொண்டாட்டியையோ அம்மன் கையோட காலோட முடக்கலாம்” என்று கந்தசாமி கற்பூரத்தை அனைத்துவிட்டால் போதும். ரெண்டு மரக்கா விதப்பாடோ அல்லது ‘களையாய் ஆயிரம் ருவாயோ மிஞ்சும்.

காத்தாயிக்குப் பகீரென்றது. அம்மனிடம் ‘முழுப் பூசணிக்காயை மறைக்கலாமா? கைநீட்டி வாங்கிய பணத்தைத் தரலேன்னு சொல்லலாமா? பொய் சொல்றதுக்காக குடலை உருவிடுவாளோ? கையைக் கால முடக்கிடுவாளோ? ஏற்கனவே அவளுக்குக் கை கால் உளைச்சல்.

ஆனால், கந்தசாமி கலங்கவில்லை. காத்தாயி சொல்லி விட்டாள். அவன் சத்தியம் செய்தே ஆகவேண்டும். சத்தியம் செய்யறதா சபதம் போட்டுட்டு, இப்போ பின்வாங்கறதுக்கு அவன் என்ன பிராந்தனா?

“என் தம்பி கந்தசாமி செலவளிச்ச..” என்று சொல்லிக் கொண்டே கர்ப்பூரத்தை ஏற்றப் போனான் சுப்பையா. அதற்குள் அவன் கை நடுங்கியது. “என் தம்பி” என்ற வார்த்தை, அவனிடத்தில் சகோதர பாசத்தைக் கிளப்பி விட்டது. பிராந்துப் பயலை சின்ன வயசில் எத்தனை தடவை தோளில் தூக்கி வச்சி விளையாடி இருக்கிறான். எத்தனை தடவை, பெரிய பசங்க தம்பியை அடிக்கும்போது, அவன், அந்தப் பசங்களை அடிச்சி, தம்பியை சிரிக்க வச்சிருக்கிறாள். அவள் தம்பியை அடிக்கலாம். காயம் ஆறிடும். ஆனால், அம்மன் அடித்தால்? அவள், காத்தாயி, பழி பாவத்திற்கு அஞ்சாதவ கள்ளச் சத்தியம் பண்ணுற வம்சத்துல பிறந்தவ. ஆனால், அவன் வம்சம் அப்படியா? தம்பி கள்ளச் சத்தியம் பண்ணினாலும், அவன் வம்சத்துக்குத் தானே கெட்ட பேரு தம்பி அழிஞ்சாலும் அவன் அழிஞ்சாலும் ஒண்னுதானே! தம்பியை-அன்போடும் ஆசையோடும் வச்சி விளையாடு தம்பியை அழிய விடுறதா? ரெண்டு மரக்கா விதப்பாடுதானே, போனால் போகட்டும்!

சுப்பையா கர்ப்பூரத்தை ஏற்றவில்லை. “சத்தியமும் வேண்டாம், கித்தியமும் வேண்டாம். நான் அவனுக்குக் குடுக்க வேர்ைடியது நிசந்தான்; குடுத்திடுறேன்” என்று சொல்லி விட்டு கோவிலை விட்டு வேகமாக வெளியேறிய சுப்பையாவைப் பார்த்து ஊரே சிரித்தது. அவள் தம்பி கந்தசாமி கூட, மார்பை நிமிர்த்திக் காட்டினான். காத்தாயிக்கு ஒன்றுமே புரியவில்லை.

இப்போது, சுப்பையாவை, யாரும் லட்சியம் செய்யவில்லை. நியாயஸ்தன் என்று நினைத்த சுப்பையா, கடைசியில் ஒரு “மொள்ளமாறிதானா’ அவன் மனைவி பாப்பம்மாளும் “தம்பி கிட்ட குடுக்கிறதா வாங்குன பணத்தை எவர்கிட்ட குடுத்தீரு? நீங்க ஆம்பளையா?” என்கிறாள்.

சுப்பையா, எதற்கும் கவலைப்படவில்லை. “எக்குடி தோற்பினும் தோற்பது நின்குடியே” என்று ஒரு புலவர், மன்னன் ஒருவளிடம் ஒரு காலத்தில் கூறியது அவனுக்குத் தெரியாததுதான். ஆனால், அந்தக் கவிதைக்கு, அவன் ஒரு கருத்தாவாகி, விளக்கமாகி, ஊருக்கு விளங்காமலே நிற்கிறான்.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *