கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,591 
 
 

“எல்லாரும் ஏறியாச்சா?”

அப்பாவின் குரல் உரத்துக் கேட்டது. பயணம் ஆரம்பித்தது முதல் முழு உற்சாகத்தில் இருந்தார். மகன் திருமணம் முடிந்து தலையில் ஏறிய சம்பந்திக் கிரீடம் இன்னும் ‘பளா பளா’.

ரேவதி ஏறப் போனாள். புதுப் புடவையின் ஜரிகை இம்சித்தது.

“அவளை ஸ்ரீதரோட உட்காரச் சொல்லு.”

மற்றவர்கள் சிரித்தனர். காரணமே இல்லாமல் ஒரு சிரிப்பு, ரேவதி ஸ்ரீதரோடு உட்கார்ந்தாள்.

மற்றவர்களும் ஏறிக்கொள்ள வேன் கதவு மூடிக்கொண்டது.டிரைவருக்கு அருகில் அப்பா.

“ரெடி. போகலாம்.”

“பாம்பே பாட்டு வைக்கச் சொல்லுங்கோ.”

“சேஷகோபாலன்… எனக்கு.”

“பழைய சாங்ஸ்…”

அப்பா நீதிபதியானார்.

“எல்லாம் உண்டு. இன்னும் மூணு நாள் நாம இதே வேன்லயே போகப் போறோம். எல்லோரோட விருப்பமும் நிறைவேற்றப்படும்.”

அரபிக் கடலோரம் அலற ஆரம்பிக்க, வாண்டு தினேஷ் முகமெல்லாம் தீவிரமாய் உச்சஸ்தாயியில் தானும் பாடினான். பெண்கள் வேறு பேச்சு பேச ஆரம்பித்தார்கள்.

ஸ்ரீதருக்கு ரேவதியின் இறுக்கம் புரியவில்லை. ஒரு வேளை இத்தனை கும்பலாய் பயணிப்பதில் வருத்தமா?

“பிடிச்சிருக்கா…”

“எ… ன்ன?”

“இந்தப் பிரயாணம்தான். ரொம்ப நாளாச்சு, நாங்க ஒண்ணா டிராவல் பண்ணி மூணு வருஷம் முன்னால ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருச்செந்தூர் போனோம். அப்பறம் இப்பதான்.”

அவனுக்கும் ரேவதிக்கும் இடையில் நூலிழை இடைவெளி இருந்து கொண்டேயிருந்து. இன்னமும் நெருங்கினான். புது வாசனை அடித்தது.

“எல்லோருக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு…” என்றான்.

புகழ்ச்சி மலர்ச்சி தந்திருக்க வேண்டும். இல்லை. அவள் தலையில் முல்லை மாதிரி.

மொட்டாய் கட்டிக் கொடுத்த சரம் விலைக்கு வாங்க, கடைசி வரை மலராமலே வாடிப் போகும். பாதி மலர்ந்ததும் மலராத சரம் சூடிக் கொண்டதும் முழுசுமாய் மலர்ந்து வாசனை பத்தடிக்கு முன்பே ஆளை இழுக்கும்.சரம் வாங்கும் போது தரம் புலப்படாது. ரேவதியின் மெளனம் மலரப் போவதா? மொட்டா?

“நாம எல்லோரும் ஒண்ணாதான் இருக்கப் போகிறோமா…” என்றாள் திடீரென.

என்ன கேட்கிறாள்?

“ஆமா… ஏன் கேட்கறே?”

“உங்க ஒபீனியன் என்ன . வேற எடம் பார்க்கிற ஜடியா இருக்கா?”

“எ..துக்கு. இதுவரை. நான் அப்படி எதுவும் யோசிக்கலே” என்றான் தடுமாற்றத்துடன்.

பக்கத்தில் இருந்தவர்களின் கவனம் இவர்கள் மீது இல்லைதான். குரலும் தணிந்துதானிருந்தது. இருந்தாலும் ஸ்ரீதர் சங்கடபட்டான். ரேவதி பேசியது கேட்டிருக்குமா?

“எனக்குன்னு சில ஆசை… எதிர்பார்ப்பு… இருக்கு…” என்றாள்.

“புரியுது. ஆனா…”

“நாம தனியாப் போகலாமே.”

நூலிழை இடைவெளி காணாமல் போனது. நெருங்கியிருந்தாள்

“சட்டுனு என்னால… எதுவும்.”

“இப்பவே வேணாம். எல்லா ஊரும் சுத்தி… வேனை விட்டு இறங்கின பிறகு.”

மேகமும் வெளிச்சமும் மாறி மாறி பிரதிபலிப்பு.

ஸ்ரீதர் மௌனமாய் வார்த்தைகளைத் தேடினான்.

“வாம்மா… வாம்மா” என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“ரேவு வந்து… எனக்கும் சிலது… என் ஆசைன்னு இருக்கு. உனக்கும் நல்லதுதான். நாம ஒண்ணா இருந்தா..”

நூல் தாம்புக் கயிறானது. ரேவதி எதிர்ப்புறம் நகர்ந்தாள்.

“ரேவு ப்ளீஸ்”என்றான் அடிக்குரலில்.

“சூடா காபி வேணும்.”

யாருடைய குரலோ ஒலித்தது.

“பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஹோட்டல். நின்னு காபி குடிச்ச பிறகுதான்அடுத்த ஊர். இங்கே காபி ரொம்ப பிரமாதமா இருக்கும்.”

அப்பாவின் பதில் கேட்டது.வேன் நின்று வெளிப்பட்டபோது காற்று பட்டு உடல் குளிர்ந்தது.

“ஹப்பா! உள்ளே ஒரே இறுக்கம்.”

“சும்மாவா. பதிமூணு பேரு.”

“சம்சாரக் குடும்பம்னா அப்படிதான்.”

“வளவளன்னு பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாம ஹோட்டலுக்குள்ளே போங்கோ.”

ரேவதி வேன் அருகிலேயே நின்றாள். ஸ்ரீதர் நகர்ந்தவன் இவள் வராதது கண்டு திரும்பி வந்தான்.

“வாயேன். காபி வேணாமா..”

“நான் வரலே…”

“சரி. இங்கே நீ மட்டும் தனியா நிக்காதே. வா.”

“நான் ஊருக்குப் போறேன்…”

“எ.. ன்ன.”

கிளம்பும்போதே அவள் துணிகள் மட்டும் தனி சூட்கேஸில் வைத்திருந்தாள். சீட்டுக்கு அடியிலிருந்ததைத் தேடி எடுத்தாள்.

“நீங்க யோசிச்சு வைங்க. நான் போறேன்.”

“ரேவு.. என்னது…”

ஸ்ரீதரின் நிலை குழப்பமானது. இந்த நேரம் பார்த்து பெரியவர்கள் யாருமே அருகில் இல்லை…

“ரேவதி… நில்லு…ப்ளீஸ்…”

அதற்கு மேல் இரைச்சலிட முடியவில்லை. ஹோட்டலுக்குள் ஓடினான்.

“அப்பா.”

“என்னடா…”

முகம் நசுங்கிப் போனது. என்னவென்று சொல்ல.

“அவ…கோவிச்சுண்டு போயிட்டா.”

‘யாரு… ரேவதியா? என்னடா உளர்றே. புரியும்படியா சொல்லுடா.”

சொன்னான். அவன் வார்த்தைகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. குரல் பிசிறடித்தது.

“சீக்கிரம் கிளம்புங்கோ…”

“ஏன் “என்றனர் சிலர் புரியாமல்.

அவசரமாய் பணம் கொடுத்து பாதி காப்பியை அப்படியே வைத்து பஸ் ஸ்டாண்டிற்குள் ஓடி… ரேவதியைக் காணோம்.

“அந்த வழியா இப்பத்தான் ஒரு பஸ்ஸு கிளம்பிப் போறது.”

“வேனை எடுக்கச் சொல்லு. ஃபாலோ பண்ணு”

சுற்றுலாவின் மகிழ்ச்சி அடிபட்டுப் போனது. என்ன பெண்ணிவள். ஸ்ரீதர் உள்ளுர நொந்து கொண்டான்.

“அந்த பஸ்ஸைப் பிடிக்கணும்பா.”

முக்கிய தெருவின் வாகன நெரிசலிடையே வேன் ஊடுருவி முன்னேறியது. ஓவர்டேக் செய்து நிறுத்தப்பட்டது. பஸ் ஹாரன் அலறியது.

“சீட் இல்லை சார்.”

கண்டக்டரின் மறுப்பை மீறி பஸ்ஸினுள் அலசினான். அதோ… ஜன்னலை ஒட்டி ரேவதி.

“ரேவதி… வா.. இறங்கு.”

கவனிக்காதவள் போல அமர்ந்திருந்தாள். அப்பா தளர்ந்த வேட்டியை இறுக்கிக் கொண்டு இவனையும் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார்.

“யோவ்… பார்த்து வாய்யா.. காலை மிதிச்சுக்கிட்டு..”

பெட்டியை எடுத்து ஸ்ரீதரிடம் கொடுத்தார்.

“வாம்மா… கீழே வா. வேற எங்கேயும் போக வேணாம். திரும்பிரலாம். வீட்டுல போய் எது வேணா பேசி தீர்த்துக்கலாம். வாம்மா.”

கை கூப்பினார். உடம்பு நடுங்கியது.ரேவதி அரைமனதாய் எழுந்து கீழே இறங்கினாள்.

“ரைட்…” என்றார் கண்டக்டர்.வேனில் எவரும் பேசவில்லை. நடப்பதின் விபரீதம் புலப்பட்டு குழந்தைகளிடம் கூட மெளனம்.

“கோவிலுக்குத் தம்பதியா…”

யாரோ முனகினார்கள்.

“வேணாம் இப்ப எதுவும் வேணாம். ஊருக்கே போலாம். வேனைத் திருப்புப்பா.”

பம்பாய்… சேஷகோபாலன்… யாரும் எதுவும் கேட்கவில்லை. ஸ்ரீதரின் அருகிலேயே ரேவதி அமர்ந்திருந்தாள். கிளம்பிய போது இருந்த மனநிலை சுத்தமாய் அடிபட்டு சங்கடமான அமைதி.

“ஊர்ல போய் யாரும் எதுவும் பேச வேணாம் கேட்க வேண்டாம். புரியுதா?”

அப்பா பத்து வயசு கூடியிருந்தார்.

“என்னங்க நீங்க? அவதான்.. கொஞ்சங் கூட மரியாதையே இல்லாம.”

“ஸ்ஸ். நீங்க என் பேச்சைக் கேட்பீங்கதானே.”

மெளனித்தார்கள்.

“ஸ்ரீதர்… அனுசரிச்சுப் போறதுதான் குடும்பம். உனக்கும் பொறுப்பு இருக்கு. அவ விருப்பப்படி செய்யி.”

“அ…ப்பா…”

“டேய்… எங்கே இருந்தாலும் சந்தோஷம் வேணும்டா… மனசு ஒட்டரதுதான் முக்கியம்.”

அதன் பின் அப்பா வெளிப்புறமே வெறித்தார். முன் ஜன்னலின் கீழ் தார் ரோடு வழுக்கிக் கொண்டு மறைந்தது.

ரேவதிக்கும் அவனுக்கும் இடையில் இடைவெளி காணாமல் போயிருந்தது. தலையிலிருந்த முல்லை மட்டும் வாடி மணம் தொலைத்திருந்தது.

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *