கல்யாணப் பித்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 1,779 
 

(1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராகவய்யர் அடிக்கடி கல்யாணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெற்றவர். அவருக்கு அவர் கணக்குப்படி ஐம்பது வயது தானாயிற்று. ஊராருடைய மதிப்புப்படி ஐந்து வயது அதிகம். உண்மையில் சஷ்டிபூர்த்திக்கு இன்னும் ஒரு வர்ஷந்தான் பாக்கி. அதுவும் கணக்காய்ச் சொல்லப் போனால் பத்து மாஸமும் பதினைந்து நாளும்தான் பாக்கி. அவருக்கு அநேக மனைவிகள் வந்து போனார்கள். கடைசியாக இருந்தவள் பரலோகம் போய் மூன்று மாஸமாகிறது. அவள் புருஷனுடன் குடித்தனம் செய்த தெல்லாம் ஆறு மாஸந்தான். இது வரை ஐந்து பெண்மணிகள் அவருடைய மனைவிகளாக, ஸுமங்கலிகளாக “மஞ்சளும் குங்குமமாகப்” போனார்கள்.

அவருக்கு, ‘அதிக’ ஸொத்துண்டென்று ஊரில் சொல்லிக் கொள்வார்கள். அவருக்கு வாழ்க்கைப் பட்டு அறுத்துப் போனால், பெண்ணுக்கு சோற்றுத் துணிக்குக் கஷ்டமிராது. ஆனால் உண்மையில் அவருடைய ஜாதகப்படி தன் மனைவி எவளுக்கும் அவ்வித கஷ்ட ஸ்திதியைக் கொடுக்கக் கூடியவரல்லர். இவ்விஷயம் அவரிருக்கும் ஊரிலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசத்திலும் யாவருக்கும் தெரியும். ஆகையால் பெண்ணைக் கொடுக்கப் பிரியப்படுகிறவர்கள், பெண் அறுத்து நிற்குமே என்று விசாரப்படுவதில்லை.

அவருக்கு முதல் முதலில் கல்யாணப்பேச்சு ஆரம்பித்தது முதற்கொண்டு நாளது வரையில் வந்த பெண்களின் தொகை 365 என்று பெருமை பாராட்டிக் கொள்வார். அது உண்மை யென்றுயாவரும் நம்பலாம். அந்தப் பெண்களின் ஜாதகங்களையெல்லாம் அவர் பத்ரமாகப் புஸ்தகமாய் பைண்ட் செய்து வைத்திருக்கிறார்.

வாஸ்தவமான கல்யாணங்களேயன்றி பொய்க் கல்யாணங்கள் சிலவும் அவருக்கு நடந்திருக்கின்றன. இவற்றில் எருக்கன் செடிக்கு அவர் கல்யாணம் செய்தது சேரவில்லை. ஒரு சமயம் அவர் பெண்பித்து பிடித்து-இரண்டாவது தாரம் தவறின பிறகு – அலைகையில், ஒரு தரகரிடம் கல்யாணத்துக்குச் சொல்லியிருந்தார். அவர் ஒரு போக்கிரியின் குடும்பத்தில் கமிஷன் வாங்கிக்கொண்டு, அவ்வீட்டுப் பெண், பதினைந்து வயதுள்ள ஒரு விதவையை, கன்னிகையாகக் காட்டி நிச்சயம் செய்து ஆயிரம் ரூபாய் அவர்களுக்குச் சேர்ப்பித்தார். கல்யாணம் ஒரு புண்யக்ஷேத்திரத்தில் அதிக ஆடம்பரமொன்று மின்றி நடந்தது. ரூபாயும் நகையும் பெற்றுக்கொண்டு பெண்ணுடன் ஸம்பந்திகள் ஊர் போனார்கள். ருதுவானவுடன் பெண்ணை அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள். ராகவய்யரும் ஒப்புக் கொண்டிருந்தார். சில நாள் கழித்து ராகவய்யர் ஸம்பந்திக்குக் கடிதம் போட்டார். பதில் ஒன்றும் வரவில்லை. ஸம்பந்தியின் ஊருக்குப்போனார். விதவைப் பெண்ணுக்குக் கல்யாணமாவது, எதோ பைத்தியம் பிடித்திருக்கிறாற் போலிருக்கிறதே என்று சொல்ல, ஊரில் விசாரித்து, பெண் உண்மையில் விதவைதான் என்று அறிந்து, வெளியில் சொன்னால் வெட்கக்கேடென்று திரும்பி வந்து விட்டார்.

இன்னொரு சமயம், அவருடைய விரோதிகளில் சிலர் ஒரு தாரிப் பெண்ணை அவருக்குக் கல்யாணம் செய்வித்து வேடிக்கை பார்த்தார்கள். அதிலும் கொஞ்சம் பணம் நஷ்டம் ஏற்பட்டது.

இப்படிப் பல அவமானங்கள் ஏற்பட்ட போதிலும், ஸந்ததி யில்லாவிட்டால் ஸ்வர்க்கத்தை யடைய முடியாதென்றும், தனக்கு எள்ளும் ஜலமும் இறைக்க ஒருவருமில்லாமல் தான் புத் என்னும் நரகத்தில் விழுந்து கஷ்டப்பட நேரிடுமென்றும் எண்ணி மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ளத் தீர்மானித் தார். அப்போது தான் அவருக்கு மேலே சொன்ன வயது. அன்றையதினம் காலையில் அவர் தமது வீட்டுவாயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். தெருவில் தரகர் சாமா சாஸ்திரிகள் போய்க்கொண்டிருந்தார்.

“சாஸ்த்ரிகளே, எது அவஸரமோ.”

“இல்லை, அவஸரமொன்று மில்லை.” என்று சொல்லிக் கொண்டே, சாஸ்த்ரிகள் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். ஏதோ லாபகரமான விஷயமிருக்கு மென்று சாமா சாஸ்திரிகள் எண்ணினார்.

“உங்களிடம்தான் பேசவேண்டுமென்றிருந்தேன். நல்ல வேளையாக நீங்களாகவே வந்து விட்டீர்கள்.”

“என்ன ஸமாசாரம்?”

ராகவய்யருக்கு டணத்தின் மேலும் சாமா சாஸ்திரிகளின் மேலுந்தான் விசேஷ பிரியம். எந்த ரகஸ்யமான விஷயமானாலும் அவரிடம் சொல்லப் பின் வாங்கமாட்டார். தனக்காக அவர், பெண் தேடும் விஷயத்தில், பட்டபாடு கணக்கு வழக்கில்லை யென்று ஸந்தோஷப்படுவார்.

“ஸமாசார மென்ன. இப்படியே எனது கோரிக்கை நிறைவேறாமலே போகிறதே என்றுதான் கவலை. அதுதான், ஸந்ததியில்லாத குறைதான்.”

“வாஸ்தவந்தான். ஈசுவரன்தான் கிருபை செய்யவில்லை. மற்றபடி நம்மாலானதை யெல்லாம் செய்து விட்டோம்.”

“அப்படியே விட்டு விடலாமா. ஈசுவரன் மேல் பாரத் தைப் போட்டு விட்டு நாம் கையைக் கட்டிக்கொண் டிருக் கலாமா?

“முன்பு சொன்னபடியே செய்கிறது தானே. உங்கள் ஒன்று விட்ட தம்பி பேரனை ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளுகிறதாகச் சொன்னீர்களே.”

“அதெல்லாம் பிரயோசனப்படுமா. நம்மது என்றிருக்க வேண்டாமா?”

ஐந்தாவது மனைவி இறந்த பிறகு அவர் கல்யாணத்தில் வெறுப்புக்கொண்டு, ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ள எண்ணினார். அதைத்தான் சாஸ்திரிகள் குறிப்பிட்டார். ஆனால் இப்போது அவர் மனம் மாறியதைக் கண்டு, நமக்காக வேண்டிய தென்ன, கல்யாணம் செய்துகொண்டு கஷ்டப்படுவதும் ஸுகப்படுவதும் அவரைச் சேர்ந்தது. நமக்கு தாகு கிடைக்கின்ற வரையில் கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடுசெய்ய வேண்டியது தான் நமது கடமை என்று தீர்மானித்தார் சாஸ்திரிகள்.

“அப்படியானால் மறுபடியும் கல்யாணம் செய்ய உத்தேசமா?”

“ஆம், அதுதான் யுக்தமென்று எண்ணுகிறேன். பெரிய பெண்ணாக கொஞ்சம் லக்ஷணமாகவும் இருக்கட்டும். வயஸாகி விட்டது. ஆத்துக்குவர நாளாக்கக் கூடாது.”

“அப்படியே பார்க்கிறேன்.”

“எதாவது நோக்கத்திலுண்டோ?”

“இருக்கு. ஆனால் கொஞ்சம் விசாரித்துச் சொல்லவேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்கிறேன்.”

II

சாமா சாஸ்திரிகள் ஏற்கனவே ஒரு இடம் குறிப்பிட்டிருந்தார். தக்கவரனாக இருந்தால் பெண் வீட்டாருக்கு அதிக பணம் வாங்கிக் கொடுத்து, அதில் மூன்றில் ஒரு பங்கு பெறுவதாக ஏற்பாடு செய்திருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த பெண்ணுக்கு வயது பதின்மூன்று. தகப்பனாரில்லை. தாயார் மாத்திரம் இருந்தாள். இதரபந்துக்கள் பலர் இருந்தபோதிலும், உறவு கொண்டாடுவதில்லை. பெண்ணின் தாயார் குப்பம்மாள் ஒரு பெரிய மனிதன் வீட்டில் சமையல் செய்து போட்டு ஜீவனம் செய்துகொண்டிருந்தாள். பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிப் பலவாறு முயன்றும், ஸர்வ ஏழையாக சமையல் செய்து போட்டு ஜீவனம் செய்பவளுடைய பெண்ணை எவனும், முதல் தாரமாக, அல்லது வயோதிக மாகாதவன் இரண்டாந் தாரமாகக் கல்யாணம் செய்துகொள்ள ஸம்மதிக்கவில்லை. கல்யாணம் செய்து கொள்ளுகிறவர் ஸகல செலவையும் தாமே போட்டுக் கொள்ள வேண்டும். மங்கலியம் முதல் அவரே செய்து போட வேண்டும். அப்படிச் செலவு செய்ய ராகவய்யர் போன்று கல்யாணப் பித்து பிடித்தவர்கள் தவிர வேறு எவரும் முன் வர வில்லை.

குப்பம்மாள் அதிக ஸம்பத்தில் வாழ்ந்தவள். அவள் புருஷன் குப்பய்யர் தக்க ஸொத்துள்ளவர். எல்லாம் ரொக்கமாக இருந்தது. நிலங்களாக இருந்தால் பாடுபட முடியாதென்றும், லேவாதேவியில் வியாஜியம் முதலியவை நேரிடுமென்றும் பயந்து பணத்தை பாங்கியில் வட்டிக்குப் போட்டிருந்தார். வட்டியைக்கொண்டு ஸுக ஜீவனம் செய்து வந்தார்.

அவர் பெண்ணுக்கு வயது பத்து ஆகும்போது கல்யாணம் செய்ய எண்ணினார். அந்த ஸமயம் ஒரு நாள் அவருடைய பால்ய ஸ்நேகிதர் சேஷய்யர் என்பவர் ஏதோ கார்யமாக ஊருக்கு வந்தார். இருவரும் பழைய பழக்கத்தை விடாமல் சேஷய்யர் குப்பய்யர் வீட்டில் சில நாள் தங்கினார். ஒரு நாள் கல்யாணப் பேச்சு வந்தது. ஏதாவது தக்க வரன் உண்டா என்று குப்பய்யர் சேஷய்யரைக் கேட்க சில இடங்களைக் குறிப்பிட் டார். அப்புறம் சேஷய்யருக்கும் ஒரு பையன் உண்டென்றும் ஸ்ரீதரிய வரவே, குலங்கோத்திரம் விசாரிக்க வேண்டியதில்லை; நல்ல சம்பந்தமென்று குப்பய்யர் தமது பெண்ணைச் சேஷய்யர் பையனுக்குக் கொடுப்பதாகச் சொன்னார், சேஷய்யரும் ஒப்புக் கொண்டார். சீர் வரிசைகள் முதலியவைகள் எல்லாம் தீர்மானமாயின. நாளும் அந்த வர்ஷம் ஆனி மாஸத்தில் கடையில் குறிப்பிட்டார்கள்.

கல்யாணத்துக் பத்து நாள் முன் குப்பய்யர் பணம் போட்டிருந்த பாங்கி முறிந்து போனதாக ஸங்கதி வந்தது. எழுபத்தையாயிரம் ரூபாய் ஒரே தொகையாக முழுகிப்போயிற்று. அதைக் கேட்டதும் குப்பய்யர் திப்பிரமை கொண்டு இரண்டு நாளில் பரலோகம் போனார்.

குப்பய்யர் இறந்து போகவும், அந்த வர்ஷம் கல்யாணம் நின்றுபோயிற்று. ஆனால் சேஷய்யர் மாத்ரம் சொன்னவாக்குத் தவறக் கூடாதென்று எண்ணினார். குலங்கோத்திரம் விசாரிக்க வெண்டியதில்லை; பெண் நன்றா யிருக்கிறது; ஸொத்தில்லா விட்டால் போகிறது என்று ஸமாதானம் செய்து கொண்டார். குப்பய்யர் மனைவியோ பெரிய இடத்தில் கல்யாணமானால் தான் ஏழையா யிருப்பதால், ஒரு ஸமயம் அவர்கள் பெண்ணை, சரியாக வைத்துக் கொள்ளமாட்டார்களோ என்று எண்ணினாள் அதோடு அவளுடைய பந்துக்களில் சிலர் இப்போது உறவு கொண்டாடி அவளிடம் உள்ள நகைகளையும் ஸ்வல்ப ரொக்கத் தையும் பறிக்க எண்ணி, பந்துக்களில் இரண்டொரு பையன் களை வரனாக ஏற்பாடு செய்தார்கள். ஆனால் இந்தக் கல்யாண ஏற்பாடுகள் கடைசியில் தவறிப் போயின. அவளிடம் இருந்த நகைகளும் ரொக்கமும் அழிந்தன. இவை போகவே, அவரவர்கள் பந்துத்வத்தை மறந்து விட்டார்கள்.

அதன் பிறகும் சேஷய்யர் தமது வாக்கை நிறைவேற்ற எண்ணி, குப்பம்மாளையும் அவர் பெண் கமலத்தையும் தமதூருக்கு அழைத்து வந்தார். தனியாக ஒரு வீட்டில் இருக்கச் செய்தார். குப்பம்மாள் பணத்தில் பந்துக்கள் அபகரிக்காமலிருந்த ஸ்வல்ப பணத்தைத் தக்க இடத்தில் கொடுத்து வட்டி கிடைக்கும்படி ஏற்பாடு செய்தார். அந்த வர்ஷமே – அதாவது, குப்பைய்யர் இறந்த இரண்டாவது வர்ஷம்- கல்யாணம் செய்ய எண்ணினார். ஆனால் பையன் படிப்புக்குக் கெடுதிவருமென்று தோன்றியதால், அவன் படிப்பு முடிந்த பிறகு, தைமாஸத்தில் கல்யாணம் செய்யலாமென்றிருந் தார்.

பையன் புத்திசாலி, லக்ஷணமானவன். அடிக்கடி குப்பம்மாள் வீட்டுக்குப் போய் வருவான். பெண்ணிடம் அவனுக்கு அதிகப் பிரியம் ஏற்பட்டது. அவளுக்கும் பையன் மேல் பிரியந்தான். இரண்டு பேர்களும் பிரியமாயிருப்பதைக் கண்டு குப்பம்மாள் தன் பெண் கல்யாணமான பிறகு ஸௌக்கியமாயிருப்பாள் என்று மனக்கோட்டை கட்டினாள்.

ஆனால் மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய் வது ஸகஜமாக இருக்கிறது. திடீரென்று சேஷய்யரும் இறந்து போனார்.சேஷய்யர் பணக்காரரென்று பெயர் வாங்கி யிருந்தாலும், கடன் ஸொத்துக்கு முக்கால் பங்குண்டு. கடன் காரர்கள் ஹிம்ஸை செய்தார்கள். ஒன்றுக்கு முக்காலாகவும் பாதியாகவும் விற்றதில் மிச்ச மொன்றும் தேறவில்லை. கமலம் போலவே பையனும் ஏழையாகிவிட்டான். அதன் மேல் கல் யாணப் பேச்சு நின்று விட்டது. பையனுக்கு பால்ய வயதில் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொள்ள இஷ்டமில்லை. தன் சாப்பாட்டுக்கே தனது மாமனை எதிர்பார்த்திருக்கும் நிலைமையில். தன் படிப்புக்குக் கூட கஷ்டம் வரும் போலிருக்கையில், கல்யாணம் செய்துகொள்வது யுக்தமாகத் தோற்றவில்லை. ஆனால் தனது நிலைமை சற்று உயர்ந்தால் கமலத்தையே கல்யாணம் செய்து கொள்வதாக மாத்ரம் வாக்குக் கொடுத்தான்.

பெண்ணுக்கோ வயதாயிற்று. அதிக நாள் தாமஹிப்பது இனிக்கூடாது. குப்பம்மாள் ஒரு பெரிய மனிதன் வீட்டில் போய் சமைத்துப்போட்டு ஜீவனம் செய்து வந்தாள். தன் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கொடுத்து கவலை ஒழிந்திருக்கலாமென்று எண்ணி, அதற்காக அநேக கல்யாண தரகர்களிடத்தில் சொல்லியிருந்தாள்.

பையன் – சாம்பசிவன்- தட்டுத் தடுமாறி எப். எ-பரிக்ஷை தேறி பட்டணத்தில் போய் நாற்பது ரூபாயில் ஒரு வேலைக் கமர்ந்தான். அவன் தாயாரும் பட்டணத்தில் அவனுடன் இருந்தாள். ராகவய்யர் பெண் தேட எண்ணினபோது, சாம்பசிவனுடைய கல்யாண ஏற்பாடு நின்று போய் எட்டு மாஸமாயிற்று.

சாம்பசிவன் ஒரு உத்யோகத்தில் அமரவே அவனுக்குப் பெண் கொடுக்கச் சிலர் வந்தார்கள். ஆனால் அவன் மனம் கமலத்தையே நாடியிருந்தது. தன் தாயாரிடத்தில் அவன் ஜாடையாகச் சொல்லியும் அவள் சற்றும் ஸம்மதிக்கவில்லை. நான்கு பேர்களுக்கு நாற்பது ரூபாய் போதாதென்று ஆக்ஷேபித்தாள். சாம்பசிவனோ எந்த விதத்தில் கமலம் தனக்குக் கிடைப்பாளென்று யோசனை செய்தான்.

இந்த ஸமயத்தில் அவனுக்குச் சம்பளம் உயர்ந்தது. இப் போது அறுபது ரூபாய். அவனுக்கு சற்று தைரியம் உண்டாயிற்று. மறுபடியும் தன் தாயாரிடம் பிரஸ்தாபித்தான். இந்த ஸமயம் பரம ஏழையான பெண் வேண்டாமென்று அவள் சொல்லிவிட்டாள்.

ஒரு வாரத்துக் கெல்லாம் அவனை வேறு ஊருக்கு மாற்றினார்கள். அவனும் அவன் தாயாரும் அவ்வூரில் போய் தங்கினார்கள். அது தான் ராகவய்யர் இருக்கும் ஊர்.

ராகவய்யர் ஆறாந் தடவை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரென்றும் ஒரு பெண்ணை, அநியாயமாகக் கிணற்றில் தள்ளப்போகிறார்கள் என்றும் அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஆனால் அந்தப் பெண் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. கல்யாணத்துக்கு முதல் நாள் குப்பம்மாளும் கமலமும் வந்து சேர்ந்ததும், உண்மையில் சாம்பசிவனைவிட அவன் தாயார் அதிகமாக வருத்தமடைந்தாள்.

சாமா சாஸ்திரிகளை தூஷிக்காதவர்கள் எவர்களும் இல்லை. கமலத்தைக் கண்டு பரிதபிக்காதவர்களும் கிடையாது.

III

“சாமாசாஸ்திரிகளைத் திட்டுவதில் பிரயோஜன மென்ன” என்றான் ஒருவன். சில திண்ணை தூங்கிகள் கல்யாணத்துக்கு முதல்நாள் இரவு ஒரு திண்ணையில் உட்கார்ந்து வம்புபேசினார் கள். “ராகவய்யர் பணக்கொழுப்புப் பிடித்துப்போய் அறுபது வயதில் கல்யாணம் செய்து கொள்ளுகிறாரே. அவரது கொட் டத்தையல்லவா அடக்கவேண்டும். பெண்ணின் தாயாரைத்தான் சொல்லிப் பிரயோஜனமென்ன. வயிற்றுக்கொடுமை. பெண்ணை வைத்துக் கொண்டு தவிக்கிறாள். எவனைக் கேட்டாலும் ஆயிரங்கொடுக்கிறாயா, ஐந்தூறு கொடுக்கிறாயா என்கிறான். சீர் என்ன செய்கிறாய் என்கிறான். ஏழைகளுக்கு பெண்ணிருந் தால் கஷ்டந்தானே?”

“அதென்னவோ எனக்குத் தெரியாது. இந்தக் கல்யா ணம் நடக்கக் கூடாது. என்றான் இன்னொருவன். அவனுக்கும் ராகவய்யருக்கும் எப்போதும் போதாது. அதோடு அவன் பெண்ணைப் பார்த்ததும் பச்சாத்தாபம் உண்டாகிவிட்டது. அவன் பெயர் ராமசேஷன்.

“அதற்கு என்ன செய்கிறது? பெண்ணுக்கோ வயஸாகி விட்டது. கல்யாணம் நடந்தாக வேண்டும்.” என்றான் வேறொருவன்.

“எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பெண்ணுக் கேற்றதாக நம்மூரில் ஒருவனை இப்போதே தீர்மானம் செய் வோம். நாளையதினம் முகூர்த்த ஸமயத்தில் அவனுக்கு அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்து விடுவோம்” என்றான் ராமசேஷன்.

“அது நன்றாயிருக்குமா?” என்றான் ஒருவன்.

“அறுபது வயதுக் கிழவனுக்கு பன்னிரண்டு வயதுப் பெண்ணைக் கல்யாணம் செய்து வைப்பது நன்றாயிருக்கிறாதா?”

“அது இருக்கட்டும். வரன் யார்?”

“சீதாராமய்யர் பிள்ளை சுப்பிரமணியனுக்கென்ன?”

“பையன் ஈடு போதாது.'”

இவ்விதம் இரண்டு மூன்று பையன்களை உத்தேசித்து பொருத்தம் பார்த்தார்கள். இரவில் ஒரு முடிவுக்கும் வரவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் தீர்மானம் செய்து கொண்டார்கள். எப்படியாவது ராகவய்யருக்குக் கல்யாணம் நடக்கக்கூடாது. அதே ஸமயத்தில் வேறு ஒரு பையனுக்கு – எந்த ஊரிலிருந்தாவது கொண்டு வந்து – கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும்.

ராமசேஷன் தான் இதற்கெல்லாம் அக்ஷதை போட்டுக் கொண்டவன். அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்து வந்தான். எந்த ஸமயங் கூப்பிட்டாலும் வந்து பொருத் தம் முதலியவை பார்க்க அருந்தநாராயண வாத்தியார் தயாராக இருந்தார். அவருக்கும் ராமசேஷனிடம் பயம். மாட்டேனென்றால் ஏதாவது கஷ்ட முண்டாக்குவான். மறு நாள் காலையில் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து வந்தன. அநேசமாய்க் கல்யாணம் நடந்துவிடுமென்று தோன்றிற்று. ராமசேஷனுக்கு ஒரு வரனும் நிச்சயமாக வில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் வரனைத் தவிர மற்றவைகளுக் கெல்லாம் ஏற்பாடு செய்து விட்டான்.

ராகவய்யர் க்ஷவரம் செய்து கொள்ள அம்பட்டனைப் பார்த்தார். அவன் வருவதாகச் சொன்னவன் வரவில்லை. வேறு அம்பட்டனைப்பார்த்தார். ஸ்வதந்தரக்காரன் மாட்டேனென்று வராமலிருக்க, தான் வேலைக்கு வருவது சரியெல்லவென்று மறுத்து விட்டான். ராகவய்யர் சற்று திகைத்தார். உடனே ராமசேஷனுடைய சிஷ்யன் ஒருவன், அங்கு தயாராக இருந்தவன், இதற்கென்ன பிரமாதம், ஊர் அம்பட்டன்கள் எப்போதும் இப்படித்தான். ஸமயத்தில் இடக்கு செய்கிறவர்கள். பக்கத்தூருக்குப் போய் வந்து விடலாமென்று யோசனை சொன் னான்,

“பக்கத்தூர் மூன்று மைல் தூரமாயிற்றே.”

“அதற்கென்ன. இப்போது தான பெரியாத்துக்குக் குதிரை வண்டி வந்தது. இன்னும் போகவில்லை. அதைப் போக வரப் பேசிவைத்துக் கொண்டால் முகூர்த்த நேரத்துக்கு வந்து விடலாம்.”

“அப்படியானால் அதை ஏற்பாடு செய்” என்றார் ராகவய்யர்.

இருவரும் ஜட்காவண்டியில் ஏறி உட்கார்ந்தார்கள். குதிரைவேகமாகப் போகவேண்டு மென்றான் சிஷ்யன். வண்டிக்காரன் சவுக்கால் குதிரையை நாலு தட்டுத் தட்டினான். அப்புறம் குதிரை கட்டுக் கடங்கவில்லை. முகூர்த்த நேரமும் போய் விட்டது. குதிரை நின்றபாடில்லை. ராகவய்யர் வருத்தப்பட் டார். குதித்திறங்கி நடந்து ஊருக்குப் போவதானாலும் ஸாயர்திரந்தான் ஊர்சேரலாம். ஆனால் அவருக்கு ராமசேஷன் மேல் கொஞ்சங்கூட ஸந்தேகங் கிடையாது.

ராமசேஷனோ வானகப்படாமல் தவித்தான். கடைசியாக ஒரு யோசனை தோன்றிற்று. சாம்பசிவன் வீட்டுக்கு ஓடினான்.

“சாம்பசிவய்யர்” என்று கூப்பிட்டான். சாம்பசிவன் வெளியில் வந்தான். “என்ன சமாசாரம்” என்று கேட்டான். இருவரும் உட்கார்ந்தார்கள்.

ராம்: “நீர் எந்த ஊர் ?”

சாம்: நான்..

ராம: “உமக்கு இன்னும் கல்யாணமாகவில்லையே?”

சாம்: “ஆகவில்லை.”

ராம : “உமது கோத்ரம் என்ன. நக்ஷத்திரம் என்ன, ”

சாம்: “பாரத்வாஜ கோத்ரம். மிருகசீரஷ நக்ஷத்திரம். ஏன் கேட்கிறீர்’

சாம் : “ஸகோத்ரம் இல்லை. ராகவய்யருக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறதே. அது நடக்கக்கூடாது என்று கங்கணம் கட்டியிருக்கிறோம். வேறு வரன் பார்த்தோம். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. நீர் கல்யாணம் செய்து கொள்ளுகிறீரா? பெண் நன்றாயிருக்கிறாள். நீர் பார்த்திருப்பீரே. ஆனால் ஏழை. எழையாயிருந்தாலென்ன. உமக்கு ஈசுவரன் நல்ல சம்பளமுள்ள உத்யோகம் கொடுத்திருக்கிறார். ஆகையால் இதைத் தட்டாதேயும்”.

சாமப: இந்தப்பெண் ஏற்கனவே எனக்கு நிச்சயமானது தான் அஸந்தர்ப்பத்தால் நின்று போயிற்று. ஒருதடவை அவள் தகப்பனார் கல்யாணம் நிச்சயமாகியிருக்கையில் பணம் நஷ்டமடைந்து விஸனத்தால் இறந்து போனார். இன்னொரு தடவை என் தகப்பனார் இறந்து போகவே நின்று போயிற்று.”

ராம: “அப்படியானால் ஏற்கனவே பார்த்து நிச்சயமானதா. அப்போது திருப்தியாகப் போய்விட்டது. உமக்கு இஷ்டந்தானா?”

சாம்ப: “என் தாயாரைக் கேட்டுத் தான் சொல்ல வேண்டும்.”

ராமசேஷனுக்கு நிற்க் நேரமில்லை. சாம்பசிவனுடன் தானும் உள்ளே போனான். விஷயங்களை எடுத்துச் சொன்னான். கல்யாணத்துக்கு ஸம்மதித்தால் ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்தாள் சாம்பசிவன் தாயார். ராமசேஷன் எதற்கும் தான் ஜவாபுதாரி யென்றுசொல்லி ஸமாதானம் செய்தான். அதோடு ராகவய்யர் ஊருக்குத்திரும்பி வர ஸயந்திரமாகுமென்பதையும் காரணத்தோடு தெரிவித்தான். அரைமனதுடன் ஸம்மதித்தாள் சாம்பசிவன் தாயார்.

உடனே ராமசேஷன் சாம்பசிவனை தனது சிஷ்யன் ஒருவனிடம் கல்யாணத்துக்குத் தயாராக்க ஒப்புவித்து, குப்பம்மாளிடம் ஓடினான், அவளுக்கு வானின்னாரென்று தெரியவே சந்தோஷமாயிற்று. ஆனால் இப்படி தப்புக் காரியம் செய்வதில் தனக்குக் கெடுதலேற்படக் கூடாதே என்று விசாரப்பட்டாள். ராமசேஷன் எதற்கும் தானிருப்பதாக அபயதானம் செய்தான்.

ராகவய்யருக்கு ஏற்பட்ட லக்கினத்தில் சாம்பசிவனுக்கும் கமலத்துக்கும் விவாசம் நடை பெற்றது. ராமசேஷனுடைய சிஷ்யர்கள் வீட்டைச் சுற்றிலும் காவலிருந்து யாதொரு கலகமும் ஏற்படாதபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராமசேஷன் அருகிலிருந்து கல்யாண விமரிசைகளை சரிவர நடத்தி வந்தான்.

ராகவய்யருடைய பந்துக்கள் சச்சரவு செய்ய முயன்றார்கள். ஊரிலுள்ளார் சிலர் ராமசேஷனுடைய குணங்களை ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லவே வாயை மூடிக் கொண்டார்கள்.

ஸாயந்திரம் நலுங்கு நடை பெற்றது. தம்பதிகள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து யாவரும் ஸந்தோஷப்பட்டார்கள். அந்த ஸமயம் ராகவய்யரும் சிஷ்யனும் ஒரு குதிரை வண்டியில் வந்து இறங்கினார்கள். கலகம் நடக்குமோ என்று யாவரும் பயந்தார்கள். ராமசேஷன் அப்போது அங்கில்லை பந்தலில் பெண்ணும் மாப்பிள்ளையும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். ராகவய்யர். பிரமை கொண்டார்.

காலையில் ஏறிப்போன குதிரை வண்டி சற்று மெதுவாக போன ஸமயம் பார்த்து ராகவய்யர் வணடியிலிருந்தால் ஏதா வது ஆபத்து வருமென்று பயந்து கீழே குதித்தார். உடனே சிஷ்யனும் குதித்தான். குதிரை வண்டி சிஷ்யன் ஜாடை காட்டவே கட்டுக் கடங்காதது போல் போய் மறைந்து போய் விட்டது. அந்த ஸமயம் எதிரில் ஒரு குதிரை வண்டி வரவே அதில் ஏறிக்கொண்டு ஊர் வந்தார்கள்.

ராம சேஷன் வந்தான்.

“தாத்தா. வாருங்கள். என் இவ்வளவு தாமஸம். நீங்கள் இருந்து நடத்திவைத்திருந்தால் எவ்வளவு திருப்திகரமாக இருக்கும். நீங்கள் வருவீர்கள், வருவீர்கள், என்று ரொம்ப நாழிகை காத்திருந்தோம். லக்னம் தவறிப் போகிறதாயிருந்தது. யாரடா, சந்தனம் தேங்காய் வெற்றிலைப்பாக்குக் கொண்டு வா”.

உடனே யமகிங்கர்கள் வந்தாற் போல ஆறேழு பேர்கள் வந்து சேர்ந்தார்கள். ராகவய்யருக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஏதாவது பேசினால் உதை விழு மென்று தோன்றிற்று. யாரோ சூது செய்து இப்படித் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று கண்டார். பிற்பாடு யோசித்து செய்யவேண்டியதை செய்வோம்; இப்போது வாயை மூடிக் கொண்டிருப்போம் என்று தீர்மானித்தார். ராமசேஷனுக்கும் தனக்கும் முன்பு நேர்ந்த மனஸ்தாபத்தை எண்ணி அதை இனி மேல் வளர விடக்கூடா தென்று ஸமாதானம் செய்து கொண்டார்.

தாம்பூலத்தைப் பெற்றுக்கொண்டு, ‘நீ செய்த ஏற்பாடு தான் சரி, பெண்ணுக்கும்பையனுக்கும் பொருந்தியிருக்கிறது.” என்றார். வேறு எது சொன்னாலும் யுக்தமல்ல வென்று அவருக்கு நன்றாய்த் தெரியும். கூட உட்கார்ந்து கொண்டு, தம்பதி -களின் நலுங்குவிளையாட்டைப் பார்க்கலானார்.

– சிறுகதைகள், முதற் பதிப்பு: 1922, வி.நாராயணன் & கம்பெனி, மதராஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *