தேவதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 14,788 
 

நேர்த்தியாக வகுந்தெடுத்து சீவப்பட்ட தலையில் மல்லிகையை வைத்துக்கொண்டு அவசரமாய் கிளம்பினாள்.

அம்மா! நேரமாச்சு வேகமா சாப்பாடு எடுத்து வை , ஏம்மா பூ வாசம் இல்லாம இருக்கு?!.

ஆமாடி, உனக்கு மட்டும் எல்லாமே குறையாத்தான் தெரியும், மாவட்டத்துக்கே மண்டபம் மல்லிதான் பேமசு, உனக்கு அதுலயும் குறையா?!.

இந்தா மதியத்துக்கு தயிரை பிரட்டி உருளைகிழங்கு வச்சிருக்கேன் நேரத்துக்கு சாப்பிடு.

சரி சரி, நேராமாச்சு நான் பாத்துக்குறேன். வாசலில் நின்றவாறு போயிட்டு வரேன் அம்மா என்றாள் வெண்பா!..

வழக்கத்தைவிட இன்று அதிக அலங்காரம் செய்திருந்தால்!.

எங்கும் பக்தி பாடல்கள் ஒலிக்க, திரும்பிய பக்கம் எல்லாம் காவி உடைகளும் பலமொழிகள் பேசும் மக்களின் நடமாட்டத்தின் நடுவே இருபக்கம் வரிசைபடுத்தபட்ட சாலைக்கு மத்தியில் ஓங்கி உயர்ந்து ராஜகோபுரம்!.

இந்திய பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் சங்கமிக்கும் சிவன் தலம்.

பல மாநிலத்தில் இருந்தும் மக்கள் தங்கள் பாவத்தை போக்க வந்து சேருமிடம்.

அவர்களில் ஒருவனாய் அவனும், ஆம் அலைகடல் சங்கமிக்கும் இடத்தில் ஆதரவற்றவன் தன் வாழ்வாதரத்தை தேடி.

மஞ்சள் மாநகரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், மழை பொய்த்துபோய் வறட்சியில் விவசாயம் அழிந்து ,இருந்த நிலத்தையும் வித்தும் கடனை அடைக்க முடியாமல் தங்களை பூமித்தாயிடம் அடக்கிகொண்ட குடும்பத்தில் தனியாளாய் பிறந்தவன் புகழ்!.

பெற்றோர் இறந்ததும் அவர்களுக்கு திதி கொடுக்க தனியாளாய் வந்தவனுக்கு அடைக்கலம் தந்து தன்னோடு அனைத்துகொண்டது தீர்த்த பூமி.

தெருவின் முக்கில் உள்ள பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டுவிட்டு காத்திருந்தாள் பேருந்துக்காக,வழக்கம் போல் பேருந்திலிருந்து யாழினி கைகாட்ட அவளோடு இணைந்துகொண்டால் வெண்பா.

நகரிலிருந்து அரைமணி நேர பயணத்தில் வந்துவிடும் அவள் வேலை செய்யும் கம்பெனி, ஆம் இந்த பகுதியில் பலரை வாழவைக்கும் தொழிலில் இதுவும் ஒன்று , இங்குவரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கும் சங்கு அழகுபொருட்கள் தயாரிக்கும் இடம்.

தினமும் காலை எட்டு மணிமுதல் மாலை ஆறுமணி வரை வேலை, வாரத்தில் ஒருநாள் லீவு கிடைக்கும், தினம் கூலி இருநூறு ரூபாய் கிட்டதட்ட ஐநூறு நபர்கள் வேலை செய்வார்கள் அதில் பெண்களே அதிகம்.

பேருந்து நிலையத்திலிருந்து கம்பெனி கூப்பிடும் தொலைவே, வெண்பா இன்னைக்கு சாயங்காலம் சீக்கிரம் போனும் நீயும் வாரியா?!. அந்த சூப்பர்வைசர் பெர்மிசன் கொடுக்கமாட்டானே, சும்மாவே என்மேல கடுப்பாதான் இருப்பான் பாக்கலாம் என்றவாறு கம்பெனிக்குள் நுழைந்தனர்!.

ஏம்மா லேட்டு, அண்ணே பஸ் லேட்டாயிடுச்சு!, ஆமா உங்களுக்கு மட்டும் பஸ்க்காரன் டெய்லி லேட்டாவரான் ,போம்மா போயி வேலைய ஆரம்பிங்க என்று அதட்டினான் சூப்பர்வைசர்.

வெண்பா, நீ இன்னைக்கு ஒருநாள் குடோன் இன்சார்ச் பாத்துக்க அந்தபையன் லீவு!.

ஏன் இப்படி போகுது உன் முகம், சாயங்காலம் ஆறு மணிக்கு எல்லாம் விட்டுக்கு போயிடலாம் , போ போய் வேலையை பாரு சரியா? !.

சரிண்ணே!..

கவலையோடு போனாள் வெண்பா, இந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்த இரண்டு வருசத்துல கடந்த ஆறு மாசமா அவள் ரெம்பா சந்தோசமாகவும்,அதிக ஆர்வத்துடனும் வேலைக்கு வந்தாள். ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது குடோனுக்கு ஏதாவது சாக்கு சொல்லி போய்வருவாள், ஆனால் இன்று அவளுக்கு குடோன் போவது எரிச்சலாக இருந்தது, ஆம் அவன் இல்லாத அந்த இடம்!.

முதல்முறையாக குடோனுக்கு சொல்லும்போது ,இனிமே இந்த வேலைக்கு வரக்கூடாது இன்னைக்கே அம்மாகிட்ட சொல்லிடனும் என்ற முடிவோடு போனாள். சரக்குகளை அட்டைபெட்டியில் அடுக்கி அதனை பேக்கிங் செய்துவரும் பார்சலை ஆர்டருக்கு ஏற்றவாறு குறியிட்டு அனுப்புவதே அவளுக்கு ஒதுக்கபட்ட வேலை.

ஏங்க யோசிச்சுகிட்டு நிக்கிறிங்க?!..

இல்ல எனக்கு இந்த வேலை தெரியாது அதான்!..

பயப்புடாதிங்க நான் சொல்லித்தரேன், கொஞ்ச நேரத்தில் நீங்களே செய்ய பழகிடுவிங்க என்றான். அவளும் வேகமாக தலையாட்டினாள், புகழுக்கும், வெண்பாவிற்க்கும் முதல் சந்திப்பு இப்படிதான் தொடங்கியது.

மதிய உணவு வேளைக்குள் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தால், அவன் பேச்சின் நேர்த்தியும் பொறுமையும் கடமையில் கண்ணாயிருப்பதும் குறிப்பாக கண்ணை பார்த்து பேசுவதும் அவளுக்குள் அவன் மீது மரியாதையை உருவாக்கியது.

ஏங்க நீங்க சாப்பிடலையா, சாப்பிட்டு வேலை பாக்கலாம் வாங்க என்றான் புகழ். கம்பெனியிலையே தங்கி வேலைபார்க்கும் புகழுக்கு , கடை சாப்பாடுதான்.

நீங்க சாப்பிடலையா சார்?!.,நீங்க சாப்பிடுங்க நான் சாப்பிட்டுக்குறேன், இல்ல நான் மட்டும் தனியா…அதான் ஓ புரியுது, இருங்க நான் சாப்பட்டை வாங்கிட்டு இங்கயே வரேன் என்றவாறு சாப்பாட்டை வாங்க கிளம்பியவன், சிறிது நேரத்தில் தயிர் சாதம் வடையோடு வந்தான்.

குடோனில் எப்போதும் இருவர் மட்டுமே வேலை பார்ப்பார்கள், குறியீடு எழுதும் பையன் உடம்பு சரியில்லாம லீவு எடுத்ததால் ஒருவாரம் வெண்பாவை குடோனுக்கு மாற்றிவிட்டனர்.

சாப்பிட உட்கார்ந்தவுடன் வெண்பா சார், சாதம் எடுத்துக்கங்க என்று பாக்ஸை நீட்டினாள் வேண்டாங்க நீங்க சாப்பிடுங்க எனக்கு இதுவே போதும் என்றான், சரி கொஞ்சம் வெஞ்சனமாவது எடுத்துக்கங்க என்றாள்.

சரி என்பதுபோல தலையாட்டியதும் வெண்பா அவர் இலையில் வெஞ்சனம் எடுத்து வைத்தாள், அதனை எடுத்து திண்டதும் ஆ!.என்றான்.

சார் என்னாச்சி?!..

ஏதோ குத்திருச்சு என்றதும், வெண்பா சிரித்துவிட்டாள், அவன் வெட்கிபோனான்!..

சார், கருவாட்டுல முள்ளு இருக்கும்ல சார் பார்த்து சாப்பிடுங்க என்றாள்.

கருவாடா?!..

ஆமா சார், சீலா கருவாட்டு சம்பல்..

சொல்லிருக்கலாம்லங்க நான் வெங்காயம் தக்காளிய தெரிஞ்சதும் ஏதோ கூட்டுனு நினைச்சேன்.

ஏன் சார் நீங்க இதுக்கு முன்னால சாப்பிட்டதில்லையா? !..

இல்லங்க எங்க பக்கம் இப்படி எல்லாம் செய்யமாட்டாங்க. மன்னிச்சிடுங்க சார், எனக்கு தெரியாது.

ஐயோ, பரவாயில்லைங்க! ..நல்லா டேஸ்ட்டா இருக்குங்க, யார் நீங்க செஞ்சதா?!..

இல்ல சார், அம்மாதான் நான் லீவு நாள்னா சமைப்பேன்.

சார்னு சொல்லாதிங்க எனக்கு உங்களைவிட இரண்டு மூனு வயசுதான் வித்தியாசம் இருக்கும், நீங்க பெயர் சொல்லியே கூப்பிடுங்க.

சரிங்க சார் நீங்களும் வெண்பானு கூப்பிடுங்க, வாங்க, போங்க எல்லாம் வேணா.

பத்திங்களா மறுபடியும் சார்னு கூப்பிடுறிங்க!, நீங்களுந்தான்! …

இருவரும் சிரித்துக்கொண்டனர், இருநாட்களில் தங்கள் குடும்ப விசயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்க்கு நண்பர்களாயினர்.

இந்த ஒருவார காலத்திற்க்குள் தன்னை எப்போதும் இல்லாத அளவு அழகுபடுத்திகொண்டு வர ஆரம்பித்தாள் வெண்பா!..

என்னாடி ரொம்ப நேரம் கண்ணாடில நிக்கிற, என்னவோ பரபரப்பாவே இருக்க? !..

அப்டிலாம் இல்லையே!. ஹீம், இன்னைக்கு என்ன புதுசா கம்பெனிக்கு சேலைகட்டி?!..

அதுவாம்மா, நான் சொன்னேன்ல கம்பேனில விசேசம்னு. எப்படி சொன்ன?!..

நீ மறந்திருப்ப போம்மா!..இருக்கும்டி

சூப்பரா இருக்கு வெண்பா சேலை!..

சேலை சூப்பரா இருக்கா? , சேலைல நான் சூப்பரா இருக்கேனா?!..என்று முகத்தை சுழிச்சவாறு வைத்துக்கொண்டாள்.

ஐயோ நீங்கதான் அழகு வெண்பா என்று பதறியடித்து சொன்னான்.

அந்த பயம் இருக்கட்டும் என சொல்லிக்கொண்டே சிரித்தாள் அவனும் சேர்ந்தே!.

ஒருவாரம் ஓடிப்போனதே தெரியவில்லை இருவருக்கும், கடைசிநாள் மூஞ்சியை உம்முணு வைத்துகொண்டு இருந்தாள், ஏன் வெண்பா உம்மணாமூஞ்சி மாதிரி இருக்கிங்க?!..

வேண்டுதல் அதான் என்றால் வெறுப்பாய், இப்ப என்ன சொல்லிட்டேன் இவ்ளோ கோவம்?!..

பின்னே இன்னைக்கு கடைசிநாள், நாளைலயிருந்து குடோன் வேலை கிடையாதுல என்றால் பரிதாவமாய்! ..

சிரித்துகொண்டே அட நீங்கவேற இதுக்குதானா, நாம ஒரே கம்பெனிலதான வேலைபாக்குறோம் டெய்லி பார்த்திட்டா போச்சு என்றதும், அவளும் வேறு வழியில்லாமல் சமாளித்துக்கொண்டு ஆமாம்ல மறந்துட்டேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்!..

அவள் மனம் பதைபதைத்து கொண்டிருந்தது, எப்படிதான் இப்படி அசால்ட்டா சொல்றானோ, நான்தான் தேவையில்லாம ஆசையை வளர்த்துகிட்டேன் போல, பெண்புத்தி பின்புத்திதான் என்று முனங்கினாள்!..

என்ன வெண்பா! , கூப்பிட்டிங்களா?!..

இல்லை சாமி, நான் என்ன நெனச்சு புலம்பிகிட்டு இருக்கேன் என்றாள்.

ஏன் வெண்பா, உங்களுக்கு என்ன அம்மா அப்பா உங்களை சுத்தி சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்க என்ன கவலை?!..பாருங்க என்னமாதிரி யாருமில்லாத அனாதை இல்லையே என்றான்.

அழுகையோடு நிமிர்ந்து புகழை பார்த்தாள், அவன் பதறி வெண்பா நான் ஏதும் தப்பா சொல்லிட்டனா என்று அவளருகில் வந்தான்.

அவள் அழுதுகொண்டே குடோனைவிட்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினாள்.

இவன் குழம்பிபோனான் கூடவே கவலையுமாய்!..

இரண்டு நாட்களுக்கு பிறகு இன்னைக்குதான் வெண்பா கம்பெனி வந்தால், சூப்பர்வைசர் பதிலால் பலவாறு யோசிக்க ஆராம்பித்தால்!..

ஒருவேளை நம்ம அழுதுகிட்டு வந்ததால அவர் ஏதும் தப்பா நினைச்சிருப்போரோ?!..

பயத்தில ஏதும் ஊருக்கு போயிருப்பாரோ?..

யோசித்தவாறு நடந்தாள் குடோன் வாசலில் நின்ற பையன் வாக்கா, நீதான் இன்னைக்கு இன்சார்ஜ்ஜா?!..

ஆமாடா!..உங்க இன்சார்ஜ் எங்கடா?!..

அதை ஏக்கா கேட்குற!..

பாவம்க்கா, புகழ் அண்ணாக்கு ரெண்டு நாளா பயங்கர காச்சல், அப்புறம் நேத்து நைட்டு குளிரும் ஓவராகி ரொம்ப முடியாம போச்சு. கம்பெனில உள்ளவங்கதான் நம்ம அரசு ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்காங்க, பாவம் கூட இருந்து பார்க்ககூட ஆளில்லை என்று உச்சுகொட்டினான்!.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் மேலுதடை தொட்டது..நீ ஏக்கா ஆழுவுற?!..

ஒன்னுமில்லடா கண்ணுல தூசி பட்டிருச்சு போல அதான் என்று தன் முந்தானை தலைப்பால் துடைத்துக் கொண்டால்,அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை மனம் படபடப்புடன் அடித்துக்கொண்டது.

மாலை வேலை முடிந்தவுடன் வேகமாக பஸ்சுக்காக ஓடினாள், அண்ணே GH க்கு ஒரு டிக்கெட்!..

ஆஸ்பத்திரி வாசலில் இறங்கி பதட்டத்துடனே உள்ளே நுழைந்த எதிர்பட்ட நர்சிடம், மேடம் புகழ்னு ஒருத்தர் நேத்து ராத்திரி காய்ச்சல்க்காக அட்மிட்…

ஆமா அவருக்கு நீங்க சொந்தம்மா?! தலையாட்டினாள் , ஏம்மா அந்தப்புள்ள தனியா கஷ்டப்படுது இப்படி லேட்டா வர்ர!.கொஞ்சமாவது அக்கறை இருக்க போ, நேரபோயி இடதுபக்கம் திரும்பு சுவத்த ஒட்டுனாப்புல இரண்டாவது பெட்ல பாரு..

வேகமாக ஓடியவள், அவன் கிடந்த நிலையை பார்த்து கண் கலங்கினாள், கட்டிலின் ஓரம் திரும்பி படுத்தவாறு கையில் டிரிப் ஏற ஏதோ முணுமுணுத்தவாறு தூக்கத்தில் இருந்தான்.

திடீரென முழித்தவன் தன்னருகில் வெண்பா நின்று அழதுகொண்டிருப்பதை பார்த்து, மெல்லியதாக சிரித்து நீங்க எப்ப வந்திங்க?! இப்ப எதுக்கு அழுகை, பாருங்க உங்க கண்ணீர்ல என் கை நனைஞ்சு நான் முழிச்சுட்டேன் என்றதும், அவள் அழுகையை நிறுத்திவிட்டு.

இப்ப எப்படி இருக்கு?. சாப்பிட்டிங்களா?!..ஐயோ வர்ர அவசரத்தில் எதும் வாங்காம வந்துட்டேன் என்று பிதற்றினால்!.

பரவாயில்லை நீங்க வந்ததே போதும் , உங்களுக்கு நேரமாச்சு வீட்ல தேடபோறாங்க என்றான்.

அவள் தலையசைத்தபடி விருப்பமில்லாது வேறு வழியும் இல்லாது உடம்ப பார்த்துகங்க நான் காலையில் வர்ரேன் என்றாள்!. உங்களுக்கு ஏங்க சிரமம் நீங்க வேலைக்கு போங்க, நான் பார்த்துக்கிறேன் என்றான் புகழ்.

அங்கிருந்து கிளம்பினாள், ஏனோ அவள் மனம் அங்கயே சுற்றி கொண்டிருந்தது.

காலையில் வேகமாக எழுந்தவள் அடுப்படியில் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டு அவள் அம்மா வந்து சேர்ந்தாள், என்னடி இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சு அடிப்படில என்ன பன்ற? !..

இல்லம்மா, என் தோழிக்கு உடம்பு முடியல ஒரே காய்ச்சலாம் GH ல் சேத்துருக்காக அதான் அவளுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு எடுத்திட்டு போய் கொடுக்கலாம்னு ..!

அப்ப நீ இன்னைக்கு வேலைக்கு போலையா?!..

சாப்பாட்டை கொடுத்திட்டு அப்படியே போய்டுவேன், அவங்க வீட்லயும் GH ல் இருப்பதால் கடைலதான் சாப்புடுறாக அதான். சரிம்மா, நான் ஏதும் உதவி பன்னவா?!..

வேணாம்மா நீ போய்படு நான் பார்த்துக்குறேன் என்றவள், அடுப்பில் உலைய போட்டுட்டு ,புதினாமல்லி மற்றும் வதக்குன வெங்காயம் மிளகாயை போட்டு மிக்சியில் அரைக்க ஆரம்பித்தாள்.

வெந்தய கஞ்சி, புதினா மல்லி துவையலோடு சுடுதண்ணீரையும் எடுத்துவைத்துவிட்டு, குளிக்க சென்றாள்.

ஆறுமணிக்கெல்லாம் தயாராகி சாப்பாடு கூடையை எடுத்துக்கிட்டு கிளம்பி நேராக GH போனாள், பெட்டில் ஆள் இல்லை.

மேடம் இங்க இருந்தவர்?!.

அவரா?! இப்பதான் இறங்கி போனாரு, அனேகமா பாத்ரூம் போயிருப்பாரும்மா!..

சிறிது நேரத்தில் வந்த புகழ் அவளை கண்டதும் திடுக்கிட்டான், வெண்பா என்ன காலையிலையே அதுவும் சீக்கிரமா?!..

அவள் அசையாது நின்றாள்!..வெண்பா உன்னைதான் என்றதும் நினைவு வந்தவளாக, என்ன புகழ் என்றாள்!.

நான் பேசியதைகூட கேட்காத அளவுக்கு என்ன யோசனை?!..

ஒன்னுமில்லையே!..இருக்கு ஆனா மறைக்கிற , ஏய் உண்மையை சொல்லு!.

இல்ல அதுவந்து, வந்து?!..

இல்ல, முதல்தடவையா என்ன நீங்க வெண்பா அப்டினு உரிமையா கூப்பிட்டிங்க அதான்!!..

எனக்கும் உங்க ஊர்பேச்சு ஒட்டிருச்சு என்றவாறு சிரித்தான்!.. சரி இருக்கட்டும் வாங்க முதல்ல சாப்பிடுங்க என்று வெந்தய கஞ்சியையும் துவையலையும் எடுத்துவைத்தாள்.

ஏதுக்கு இது எல்லாம், நான்தான் கடைல சாப்பாடு வாங்கிருப்பேன்ல. முதல்ல சாப்பிடுங்க, இந்தமாதிரி பத்தியமா கடையில உங்களுக்கு யார் தருவா? !..

அதுவும் சரிதான் இருந்தாலும் உனக்கு வீண் சிரமம், சாரி உங்களுக்கு!..

தயவு செய்து போங்க , வாங்க இந்த மரியாதைய நிறுத்திட்டு, உரிமையா வெண்பா அப்டினு கூப்பிடுங்க. எனக்கு உங்கட்ட வேண்டியது அன்புதான் மரியாதையில்ல ,என்றவளை வியப்போடு பார்த்தான்!.

கஞ்சியை குடித்தவாரே வேலைக்கு போனும்ல நீ போ ,என்றவனை பார்த்து முறைத்தவாறு மாத்திரைகளே போடுங்கனு பாத்திரங்களை எடுத்துவைத்தாள்.

வெண்பா நீ வேலைக்கு போலையானு கேட்டேன்?!..

துணையா இருக்கலாம்னு வந்தேன், இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு, நான் இங்க இருக்ககூடாது அவ்ளோதானே போறேன் விடுங்க என கூடைய எடுத்துகிட்டு திரும்பியவளை கைய பிடித்தான் அடுத்தகணமே அவள் மூர்ச்சையாகி போனாள்!.

ஆனந்தகண்ணீரோடு அவனை திரும்பி அணைத்துக்கொண்டாள், அவன் செய்வதறியாது நிற்க.

இன்னைக்கு மட்டுமில்லை என்னைக்கும் உங்களுக்கு துணையாக இருக்க ஆசைபடுறேன் என்றாள்!..

முதல்முறையாக அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி அவள் உச்சந்தலையை நனைத்தது, கைகள் அவளை அணைத்தவாறு!..

தேவதையாகி போனாள் அவனுக்கு அடைக்கலம் தந்து!..

– பிப்ரவரி 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *