கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 2,854 
 
 

(1959ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

5.தந்திக் குமாஸ்தா 

தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யருக்கு இன்று ஆபீஸிலே வேலை ரொம்பவும் கடுமை. ஊரிலே உள்ள சாவு கலியாணம். நல்லது பொல்லாதது. லாப நஷ்டம் எல்லாத்துக்குமாகச் சேர்த்து அவர் கட்டு கட அடித்துத் தானே யாகவேண்டும்? பிறருடைய சுபச் செய்திகளையும் அசுபச் செய்திகளை தந்தியிலே தட்டித் தட்டி, அதிலே பட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கான மனப் பக்குவம் பெற்று விட்டவர் அவர். தந்தியடிக்கும் யந்திரத்தைப்போல உணர்ச்சி யற்றவர்தான் அவரும்; வேண்டுமானால் எதிலும் பட்டுக் கொள்ளாத வேதாந்தியைப்போல என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பிறர் விஷயங்களிலே வேதாந்தியைப் போலவும். தந்தி யந்திரத்தைப் போலவும் ஆகிவிட்டாரே தவிர, தன் சொந்த விஷயங்களிலும் அப்படி ஆகிவிட்டார் என்று சொல்லி விட முடியாது. சற்றே ஆத்திரமும் கோபமும் அதிகம் உடைய மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும். 

அன்று விஜயபுரம் தபாலாபீஸீலே புதுப் போஸ்டு மாஸ்டர் வந்து வேலை ஒப்புக் கொண்டிருந்தார். புதுப் போஸ்டுமாஸ்டரும் பழைய போஸ்டுமாஸ்டரும் ஒத்துப் பேசிக் கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை – தந்தி யிலாகாவைத்தான் இருவரும் நிண்டி நிண்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்று பூராவும், உடனே நடக்க வேண்டிய வேலை கெட்டது என்பது மட்டுமல்ல; நச்சுத் தாங்காமல் விசுவநாதய்யருக்கு வாழ்க்கையிலே உத்சாகம் போய்விட்டதுபோல இருந்தது. பழைய போஸ்டு மாஸ்டர் புதியபோஸ்டு மாஸ்டர் இருவரையுமே மனமார திட்டிக் கொண்டு, மணி ஆறானாலும் வழக்கமாத் தபாலாஸில் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருபவர் அன்று உரிய காலம் ஆனதும் ஒரு நிமிஷம்கூடத் தாமதிக்காமல் விடுவிடென்று வீடு நோக்கி நடந்துவிட்டார். 

அவர் வீட்டுவாசற்படி ஏறும்போது உள்ளிருந்து சின்னம்மாளின் குரல் கேட்டது: “நளினி! அடீ நளினி! எங்கேடியம்மா தொலைஞ்சு போயிட்டே நீ?” என்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தாள் சின்னம்மா. 

“பாவம்! அந்தப் பொண்ணைப் போட்டு எப்போ பார்த்தாலும் படுத்திண்டு!” என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் விசுவநாதய்யர். 

நளினி தன் சின்னம்மாளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது விசுவநாதய்யர் காதில் விழுந்தது. நின்று கேட்டார். கொஞ்சுதலான குரலில் சற்று மெதுவாகவே நளினி சொல்லிக்கொண்டிருந்தாள்: “நான் எங்கேயும் தொலைஞ்சு போயிடல்லியே சின்னம்மா! கொல்லையிலே கிணத்திலேருந்து ஜலம் இழுத்து அண்டாவை ரொப்பச், சொன்னயே ரொப்பிண்டிருந்தேன்” என்றாள். 

சின்னம்மா எரிந்து விழுந்தாள்; “சரி சரி வாயாடிண்டு நிக்காதே போ! அஸ்தமிக்கப் போறது கொல்லைக் கதவைச் சாத்திப்பிட்டு வாசல்லே விளக்கு ஏத்தி வை, போ! உன்னோடு வாயாடிண்டு நிக்க எனக்குப் போது ஏது?” அவள் குரலில் தொனித்த கடுமை விசுவநாதய்யருக்குக் கோபமூட்டியது. “இந்தா! அவள் ஒண்ணும் வாயாடல்லெ! நீ தான் நாளுக்கு நாள் வாயாட ஆரம்பிக்கிறே; பாவம். அது என்ன பண்ணித்து! நீ கூப்பிடரத்துக்கு முன்னாடி அதுவந்து ஏன்னு கேக்கறது. கேட்பாரில்லையேன்னு விரட்டி விரட்டி அடிக்கறயே நீ! நன்னாருக்கா உனக்கு?” என்று சற்றுக் கடுமையாகவே கேட்டார் தன் மனைவியை.

“பொண்ணுக்குப் பரிஞ்சு பேச நீங்களும் ஆரம்பித்து விட்டேளோல்லியோ! அது உருப்பட்டாப்லேதான் போங்கோ!” என்றாள் சின்னம்மா வெடுக்கென்று.  

“சித்தே அடக்கமாத்தான் பேசேன்; அப்படிப்பேசினால் உங்கப்பா ஆஸ்தியெல்லாம் போயிடுமோ?” என்றார் விசுவநாதய்யார். 

“எங்கப்பா ஆஸ்தி ஏதாவது சேர்த்து வைத்திருந்தால் இங்கே ஏன் இந்தப் படுகுழியிலே என்னைத் தள்ளியிருக்கப் போறா? தெய்வத்துக்குத்தான் தெரியும்….” என்று சொல்ல வந்ததை முடிக்கக் கூட முடிக்காமல் விசிக்க ஆரம்பித்து விட்டாள் சின்னம்மாள். 

அவளுக்குப் பக்கபலமாக ராஜுவும் அவள் காலைக் கட்டிக்கொண்டு சற்று உரக்கவே அழ ஆரம்பித்துவிட்டான். 

“ஆபீசிலேதான் அவஸ்தைன்னா. வீட்டுக்கு வந்தால்… ஆபீசிலேயே இருந்துவிட்டால் தேவலைன்னு இருக்கு!” என்று முணுமுணுத்தார் விசுவநாதய்யர். பிறகு “உன்னை என்ன சொல்லிவிட்டேனாம் நான். பெரிசாக? என்னவோ அந்தச் சின்னப் பொண்ணைப் பிரமாதமா கோவிச்சுக்கறயே கொஞ்சம் பிரியமாகத்தான் அதோட பேசிண்டு இருக்கப் படாதான்னு கேட்டால், என்னவோ ஆத்திரம் பொத்துண்டு வந்துடுத்து அழ ஆரம்பிச்சுட்டா என்னதான் பண்றது?” என்றார் அதட்டலாகவும், கெஞ்சுதலாகவும். 

விசிப்பதை நிறுத்திவிட்டுப் பதில் எதுவும் சொல்லாமல் நின்றாள் சின்னம்மாள். 

விசுவநாதய்யர் சொன்னார்: ‘ஆபிசிலே இன்னிக்கு வேலைத் தொந்தரவு ரொம்ப ஜாஸ்தி. லேசா மண்டையை இடிக்கிறது. பால் இருந்தால் காபி போட்டுக் கொடு.’ 

காபி போட்டுக்கொண்டு வர சின்னம்மாள் சமையலறைக்குள் போனதும் விசுவநாதய்யர் சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு கொல்லைப்புறம் போய்க் கைகால் முகம் கழுவிக் கொண்டு வந்து தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்து கொண்டு முற்றத்தில் கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு “அப்பாடா!” என்று சாய்ந்தார். வாசல் திண்ணையில் விளக்கேற்றி வைத்துவிட்டு நளினி வந்தாள். 

“அப்பா! இன்னிக்கு எதித்தாத்திலே….” என்று ஆரம்பித்தாள் நளினி. 

“இங்கே வா நளினி” என்று விசுவநாதய்யர் அவளைத் தன்னருகில் அழைத்து அருகில் அணைத்தாற்போல உட்கார வைத்துக்கொண்டு தலையையும் முதுகையும் தடவிக் கொடுத்தார். அவள் முகமும் கண்ணும்தான் எவ்வளவு அழகா யிருந்தன! அவள் அம்மாவைப் போலவேதான் இருக்கிறாள் இவளும் என்று பெருமையுடன் எண்ணினார் அவர். தலை வாரிப் பின்னிப் பூ வைத்தால்…? 

“ஏம்மா நளினி, காலாகாலத்திலே தலைவாரிப் பின்னிப் பொட்டு இட்டுக்கப்படாதோ நீ!” என்றார் விசுவநாதய்யர். 

‘இனிமேல்தான் அப்பா!’ என்றாள் நளினி. பிறகு அவசரம் அவசரமா அன்று நடந்ததை எல்லாம் சொல்ல முற்பட்டாள்: “எதிராளாத்துக்கு இன்னிக் காத்தாலை பட்டணத்திலேருந்து ஒரு மாமா வந்தா. அந்த மாமாவை ஏதோ பாங்கிலே களவாடிபுட்டார்னு மத்தியானமா போலீஸ்காரா வந்து அழச்சிண்டு போயிட்டா” என்றாள் நளினி. 

“யாராத்திலே? கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியாத்திலேயா?” 

“இன்னிக்கு ஏதோ போலிஸ் தந்திபோச்சு, கைது செய்தாகிவிட்டது; பட்டிணத்துக்கு இரவு ரெயிலில் கொண்டு வருகிறோம்னு. எதிராளாத்திலே யாரு?…” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் விசுவநாதய்யர். 

“பர்வதம் மாமிக்குத் தம்பியாம்; பட்டணத்திலே ஏதோ பாங்கியிலே வேலையா யிருக்கிறாராம்” என்றாள் நளினி. சற்று நேரம் கழித்துச் சொன்னாள்; ‘எனக்கென்னவோ அவரை பார்த்தால் திருடியிருக்கப்பட்டவராகத் தோணல்லே!’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது சின்னம்மாள் வந்து விட்டாள். 

சின்னம்மாள் டம்ளரில் காபியை விசுவநாதய்யர் பக்கத்தில் வைத்துவிட்டுச் சொன்னாள்: “இன்னி முழுக்க இதான் காரியம் இவளுக்கு! எந்தாத்திலே எந்தக் கரியாப் போறவன் எப்படிப்போனால் இவளுக்கென்ன? ஊர் வம்பை யெல்லாம் விலைக்கு வாங்கிண்டு வராள்; சொன்னாத் தெரியமாட்டேங்கறது. அந்தப் போலீஸ்காரனோடே எல்லாம் சரிக்குச் சமமா வார்த்தையாடிண்டு நிக்கறா; நீங்க கண்டிக்கிறதோ கிடையாது. நான் கண்டிச்சா கோவிச்சுக்க வேறே ஆரம்பிச்சுடறேள்” என்றாள். 

“இல்லே அப்பா! அந்த சப்-இன்ஸ்பெக்டர் வந்து நீ யார் பொண்ணுன்னு என்னைக் கேட்டார்; நான் பதில் சொன்னேன்!” என்றாள் நளினி. 

“அது சரி; கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்?…” என்று விசாரித்தார் விசுவநாதய்யர். 

“அவர் ஆத்திலே இல்லவேயில்லை. கார்த்தாலை கிராமத்துக்குள் போனவர் இப்போத்தான் சித்த முன்னாடி நான் வாசல்லே விளக்கேத்திண்டிருக்கச்சே வந்தார்” என்றாள் நளினி. 

“ஐயோ பாவம்! மானமான மனுஷன்; ரொம்ப சாது. அவருக்குத்தான் ரொம்பவும் கஷ்டமாயிருக்கும்” என்றார் விசுவநாதய்யர். 

எதிர்வீட்டுக் காரியங்களுக்கு அவர் அப்படிப் பரிவது சின்னம்மாவுக்குப் பிடிக்கவில்லை. “நம்ம கவலை நமக்குத் தலைக்கு மேலே கிடக்கு! அவாத்துக் காரியத்துக்கெல்லாம் நாம் கஷ்டப்படறதுன்னு ஆரம்பிச்சா அவ்வளவுதான் – நம்ம காரியம் எதுவும் நடக்காது” என்றாள். 

“அவாள் ஒத்தாசையும் நமக்கு என்னிக்காவது வேண்டித் தான் இருக்கும் ” என்று சொல்லிவிட்டு, காபி டம்ளரைக் காலி பண்ணிவிடாமல் அதில் ஒருவாய் காபியுடன் நளினியிடம் கொடுத்து, “சாப்பிடம்மா” என்றார். 

“இப்படிச் செல்லம் கொடுத்துக் கொடுத்துத்தான் அது உருப்படாமேப் போயிண்டிருக்கு” என்றாள் சின்னம்மாள். 

விசுவநாதய்யர் பதில் சொல்லவில்லை. எழுந்து வாசல் பக்கம் போனார். நளினியும் டம்ளரில் இருந்த காபியை மடக்கென்று குடித்துவிட்டு அப்பாவுடன் வாசல் திண்ணைக்கு வந்தாள். என்றைக்கும் போலிருந்தால் சின்னம்மாள் நளினியைக் கூப்பிட்டிருப்பாள். ஆனால், ஏனோ இன்றுகூப்பிடத் துணிய வில்லை. 

எதிர்வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. 

நளினி ஏதேதோ சொல்லிக்கொண்டே யிருந்தாள். அதில் பாதி விசுவநாதய்யர் காதில் விழவேயில்லை. விழுந்ததில் பாதி அவர் மனசில் உரைக்கவேயில்லை. அவர் ஏதோ ஆபிஸ் ஞாபகத்தில் ஆழ்ந்திருந்தார். நளினி அன்றைக்கு நடந்த அபூர்வ சம்பவத்திலே மனம் லயித்து என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்தாள். 

எதிர்வீட்டுக் கதவைத் திறந்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வெளியே வந்தார். திண்ணையில் நின்று ஒரு நிமிஷம் தயங்கினார். பிறகு படி இறங்கித் தெருவைக் கடந்து விசுவநாதய்யரை நோக்கி வந்தார். 

“நடந்து போச்சுன்னு கேள்விப்பட்டேன்…. இப்பதான் நளினி சொன்னாள்” என்றார் விசுவநாதய்யர். 

“என்னவோ எங்காவது கண்காணாத இடத்திலே நடந்திருந்தா எனக்கு ஒண்ணும் சிரமம் இருந்திராது. இன்னிக்கின்னு, இந்தக் காரியத்துக்குன்னு அந்தப் பிள்ளையாண்டான் என் கிரகத்தைத் தேடிண்டு வந்திருக்க வேண்டாம்! என்ன பண்றது – என் கிரகசாரம்!” என்றார் சாஸ்திரிகள். 

“என்னவோ, எல்லாம் நல்லபடியா முடியணும்னு ஈசுவரனைப் பிரார்த்திக்க வேண்டியதுதான்; நம்மவேறென்ன பண்ணமுடியும்?” என்றார் விசுவநாதய்யர். 

“அவர் அப்படிப்பட்டவர்னு பார்த்தாத் தெரியல்லை மாமா!” என்றாள் நளினி.

“அவனுக்கு வேறு யாரும் இல்லை; ஏதாவது வழக்காடற தானால் நம்பதான் செய்யணும்னு என் ஆமடையாள் சொல்றா, எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல்லே; உங்களைக் கேட்டால் தெரியும்னு…”

“எனக்குத்தான் என்ன தெரியும். இதெல்லாம்பற்றி? யாராவது வக்கீலைப் பார்த்து… நான் வேணும்னா சொல்றேன் – நாளைக்குப் பார்க்கலாம். வைத்தியநாதன் தம்பி ஸ்ரீனிவாசன் வந்திருக்கான். அவன் பட்டணத்திலே பெரிய வக்கீல்னு சொல்றா; நாளைக் காலம்பற வாங்கோ; நம்ம ரெண்டு பேருமாகப் பார்த்து என்ன செய்யறதுன்னு விசாரிப்போம்” என்றார் விசுவநாதய்யர். 

“இன்னிப் போதுக்கு இன்னும் சாப்பாடுகூட ஆகல்லே; இனிமேல்தான் போய் ஸ்நானம். சாப்பாடு எல்லாம்” என்றார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். 

“என்னவோ, நம் இஷ்டப்படியா நடக்கிறது எல்லாம்? போய்ச் சாப்பிடுங்கோ; கார்த்தாலை வாங்கோ. வக்கீலைப் பார்க்கலாம்” என்றார் விசுவநாதய்யர். 

6.பட்டணத்து பாங்கி 

“பட்டணத்திலுள்ள அநேக பாங்கிகளிலே எது சிறந்தது. எது பணமும், நாணயமும், நாகரீகமும், மரியாதையும் கொண்டது?” என்று யாரையாவது கேட்டால் பதில் சொல்ல வெகுவாகத் தயங்குவார்கள். ஒன்றுக்கொன்று போட்டி போடக் கூடிய பல பாங்கிகள் இருக்கின்றன. ஆனால் எது மிகவும் திறமையற்றது, பாங்கி என்கிற பெயருக்கே லாயக் கற்றது. நாணயமோ, பணமோ இல்லாதது? என்று கேட்டால் யாரும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள் தயங்காமல் கொள்ளாமல் உடனே பட்டணத்து பாங்கிதான் என்று பதில் அளித்துவிடுவார்கள். 

ஆனால் சமீப காலம் வரையில் – அதாவது ஒரு வாரத்துக்கு முந்தி வரையில் – பட்டணத்து பாங்கி என்கிற பெயரே யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனால் இந்த ஒரு வாரத்திலே அது பெயரும் புகழும் பெறக்கூடிய வகையில் பல காரியங்களைச் சாதித்துவிட்டது. 

கேவலம் ஒரு இருபதினாயிரம் ரூபாய் திருட்டுப் போனதைச் சமாளித்துக் கொள்ள முடியாமல், பாங்கியை மூடிவிட்டார்கள் என்றால் அதைப் பாங்கி என்று எப்படிச் சொல்வது? இருபது கோடியா, இருபது லக்ஷமா கொள்ளை போனது? இரண்டும் இல்லை; இருபதினாயிரம்! அதைச் சமாளிக்க முடியாமல் பாங்கி முறிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டவுடனேயே பட்டணம் நகைக்கத் தொடங்கி விட்டது. அந்தப் பாங்கியிலே பணம் போட்டிருந்தவர்கள் சொல்பப் பேர்வழிகள்தான்; அதுவும் மிகவும் சொற்பப் பணம் தான் போட்டிருந்தார்கள். அவர்களுக்கு பணம் போன துக்கம் ஒருபுறம் இருக்க, இந்தப் பாங்கியில் போய்ப் பணம் போட்டோமே என்கிற உணர்ச்சிதான் அதிகமாகத் தலைதூக்கி நின்று நகைக்கத் தூண்டியது. 

இட வசதி அதிகம் கிடைக்காத இந்த நாட்களிலே மிகவும் நல்ல இடத்தில், வசதியான பெரிய இடத்தில்தான் பட்டணத்துப் பாங்கி குடியேறியிருந்தது. பெரிய கூடத்தில் பளபளக்கிற தேக்குமரத் தடுப்புக்கு மேலே பித்தளைக் கிராதிகள் கண்ணைப் பறித்தன. இரண்டு சேவகர்கள் பம்பரம் போலச் சுழன்று கொண்டிருந்தனர்; அவர்கள் சற்றே வெளிச்சமான இடத்துக்கு நடந்தால் போதும் அவர்கள் டவாலி வில்லைகள் டால் வீசின. நாலைந்து குமாஸ்தாக்கள் ஓயாமல் ஒழியாமல் எப்பொழுதும் பெரிய பெரிய புத்தகங்களைத் தூக்கமாட்டாமல் தூக்கிப்போட்டுப் புரட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லா பாங்கிங் அலுவல்களும் உண்டு என்று விளம்பரம் செய்வார்களே அது போல, அந்த பாங்கிலும் எல்லா பாங்கிங் அலுவல்களும் உண்டு. அதுமட்டுமல்ல; சின்ன பாங்கிகளில் உள்ளதுபோல் ஒரே ஆசாமி எல்லா அலுவல்களையும் பார்த்துக் கொண்டான் என்றும் இல்லை. ஒவ்வொரு அலுவலுக்கும் ஒவ்வொரு குமாஸ்தா உண்டு. ஒவ்வொரு குமாஸ்தாவும் சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்றாலும் ஜோராகச் சட்டை போட்டுக்கொண்டு, ஜோராகக் கிராப் சீவிக்கொண்டுதான் வந்து கொண்டிருந்தார்கள். யாராவது தப்பித் தவறி வருகிற மனிதரையும் ஒவ்வொரு ஜன்னலிலும் கால்மணி நேரமாவது காக்க வைக்கிற தோரணையிலும் குறைவில்லை. 

இந்த பாங்கியின் மானஜிங் டைரக்டர், ஏஜெண்டு எல்லாம் ஒருவரே. அவர் பெயர் குருஸ்வாமி. பெயருக்குப் பின்னால் நாலைந்து பட்டங்கள் ருந்தன. இந்த பாங்கிக்கு முன்னால் அவர் பல கம்பெனிகள் ஆரம்பித்துத் திவாலாக்கி யிருப்பவர் என்பது பட்டணத்தில் பலபேருக்குத் தெரியாது. ஏனென்றால் குருஸ்வாமி அதற்குமுன் கல்கத்தா, லாகூர் போன்ற வடக்கத்தி இடங்களில் இருந்து வியாபாரம் செய்தவரே தவிர, பட்டணத்தில் அவருக்கு அதிகமாக நட மாட்டம் இருந்ததில்லை; தனி நண்பர்களும் இருந்ததில்லை. குருஸ்வாமியின் பேச்சு வியாபகத்தில், அவர் நடையுடை பாவனைகளில் மயங்கிச் சிலர் இரண்டொரு வருஷங்களுக்கு முன் அவரை வைத்து ஒரு பாங்கி நடத்த ஒப்புக்கொண்டார்கள். வடக்கே நிலைமை தெளியாது, இனி அங்கே சமாளிப்பதற் கில்லை என்று அறிந்துகொண்ட குருஸ்வாமி இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். 

ஆரம்பத்தில் நல்லெண்ணத்துடன்தான் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அந்த நல்லெண்ணம் அதிக காலம் நீடிக்கவில்லை. அவசரத் தேவைகளுக்குப் பாங்கி, பணத்தைக் கையாட குருஸ்வாமி தயங்கவில்லை. ஒன்றிரண்டு தரம் கையாடிய பிறகு தொழில்முறை சரியாகத் தெரியாத சகோதர அப்பாவி டைரக்டர்கள் கவனியாதது கண்டு, தயக்க மில்லாமலே கையாடவும், அவசியம் இல்லாதபோதும் பணம் எடுக்கவும் தலைப்பட்டார்! ஆயிற்று; பட்டணத்து பாங்கி மூடப்படவேண்டிய சந்தர்ப்பத்தைக் குருஸ்வாமி ஏற்படுத்திக் கொண்டார். தகுதியான சந்தர்ப்பத்தில் தான் மாட்டிக் கொள்ளாதிருப்பதற்கு ஏதாவது யுக்திசெய்துவிட்டு நழுவி விடுவது என்பதுதான் அவருடைய வேலைத் திட்டம். 

விதி குறுக்கிட்டது. அவர் என்ன பண்ணுவார்? 

சீதாராமன் – ஆமாம், விஜயபுரம் அக்கிரகாரத்திலிருந்த வைதிக சிரோமணி கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் சம்சாரம் பர்வதத்தம்மாளுடைய சகோதரனான சீதாராமன் வேலை யில்லாமல் பட்டணத்துக்கு வந்து தெருத் தெருவாகத் திரிந்து கொண்டிருந்தவன். அகஸ்மாத்தாக ஒரு ஹோட்டலில் காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் குருஸ்வாமியைச் சந்தித்தான். பிறகு அவர் பட்டணத்து பாங்கியின் ஏஜெண்டு என்று தெரிந்துகொண்டு சந்தித்தான் நாலைந்து தடவைகள் வெகு மரியாதையாக. பிறகு ஒருநாள் தன் கஷ்ட நிலைமையைச் சொல்லி, தனக்கு அவர் பாங்கியில் வேலை போட்டுத் தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டான். குருஸ்வாமிக்கு அவனிடம் ஏதோ பற்றுதல் விழுந்தது; வேலைக்கு எடுத்துக் கொண்டார். 

சீதாராமன் வந்ததனால் என்று சொல்வதற்கில்லை. ஊரெங்கும் பணப் புழக்கம் அதிகமானதன் காரணமாகப் பட்டணத்து பாங்கியிலும் ஓரளவு பணம் புரண்டது. வெகு சீக்கிரமே கடையைக் கட்டிவிட்டுக் கிளம்பிவிடுவது என்று எண்ணியிருந்த குருஸ்வாமி, இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் நிறையப் பணம் கிடைக்கும்போலிருக்கிறதே என்று எண்ணிக் காத்திருந்தார். அவர் காத்திருந்தது வீண் போகவில்லை. பட்டணத்துப் பாங்கியிலேகூடக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் பெருகிக்கொண்டிருந்தது. 

அவ்வளவு குமாஸ்தாக்களும் இருந்தார்கள் என்று பெயரே தவிர அவர்களையும் மீறி குருஸ்வாமியே பணம் போடுகிறவர்கள், வாங்குகிறவர்கள் எல்லோரையும் கவனித்துக் கொள்வார். அவருக்கு அதிலே ஓர் உண்மையான அக்கறை யிருந்தது! வழக்கம்போல் அப்படிக் கவனித்துக் கொண்டிருக் கையில் ஒருநாள் யாரோ ஒருவன் பாங்கு திறக்கையிலேயே ரொக்கமாக ஒரு பை நிறையப் பணம் கொண்டுவந்து அந்தப் பாங்கியிலே கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றான்; இருபதினாயிரம் ரூபாய் கொண்டு வந்திருந்தான் அவன், அவன் எதற்காகத் தன் பாங்கியைத் தேடி வரவேண்டும் என்பது குருஸ்வாமிக்குச் சற்று ஆச்சரியமாகவே யிருந்தது. அவன் எதற்காக வந்திருந்தால் என்ன? அவன் எவ்வளவுதான் யுக்திக்காரனானாலும், அவனையும்விட யுக்திக்காரனில்லையா குருஸ்வாமி? 

இதைப்பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்குவதற்கு முன்னரே அன்றுமுதல் ஒரு வாரத்திற்கு லீவு வேண்டும் என்று சீதாராமன் ஒரு விண்ணப்பம் கொண்டு வந்து தந்தான். சீதாராமன் ஒரு வாரம் ஊரில் இருக்கமாட்டான் என்பதுபற்றி குருஸ்வாமிக்குச் சந்தோஷம் என்றே சொல்ல வேண்டும்; லீவு கொடுத்துவிட்டார். 

பாங்கி வேலைகள் வழக்கம்போலவே நடந்தன. அன்று வசூலான பணத்தையெல்லாம் மத்தியானம் மூன்று மணிக்கு வாங்கித் தன் பெட்டியில் வைத்துப் பத்திரமாக இரண்டு பூட்டுக்களையும் பூட்டினார் குருஸ்வாமி. நாலு மணிக்கு ஆபீஸிலுள்ள குமாஸ்தாக்களெல்லோரும் கிளம்பத் தயாராகி விட்டனர். சீதாராமன் மாத்திரம் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்; பழைய வியவகாரங்கள் ஏதாவது எழுத வேண்டியது பாக்கியிருக்கும் என்று எண்ணினார் குருஸ்வாமி. 

அவர் காபி சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் போது சீதாராமனும் போய்விட்டான். அவன் தன் சகோதரி விஜய புரத்தில் இருப்பதாகவும் அங்கு போவதாகவும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தான். ஐந்து மணி வரையில் ஏதோ தபாலிருந்து – சொந்தத் தபால் – எழுதி முடித்தார். பிறகு பூட்டிக் கொண்டு வெளியே கிளம்பினார். 

இரவு ஒன்பதுமணி வரையில் அவருக்கு ஒன்றும் சந்தேகம் தட்டவில்லை. ஒன்பது மணிக்குச் சாப்பிட்டுவிட்டுத் துப்பறியும் நாவல் ஒன்றைப் படிக்க ஆரம்பிக்கையில் ஏதோ ஞாபகம் வந்தது. அவர் பாங்கிக்கும் வீட்டுக்கும் அதிக தூரம் இல்லை நடந்தே போய்விட்டார். வாசல் காப்போன் இன்னும் சாப்பிட்டுவிட்டு வந்து படுக்கவில்லை. கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போய்ப் பெட்டியை திறந்து பார்த்தார். கட்டு நோட்டுகளையும் காணவில்லை. 

சரியாக இருபதினாயிரத்துக்கு நோட்டுக்கள் இருந்தனவே!…. 

– தொடரும்…

– நளினி (காவிரிக்கரை நாவல்), முதற் பதிப்பு: 1959, சந்தியா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *