கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 5,616 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

தூங்கி நீண்ட நேரத்திற்குப் பின் அறைக்கதவு தட்டப்படுகிறது, மிருதுவாக, திடுக்கிட்டு விழிக்கிறேன். யார் என்ற கேள்வியும் பதற்றமும் சட்டெனப் பற்றுகிறது. எழுந்திருக்கத் தயங்கி உட்கார்ந்தே இருக்கிறேன். யாராக இருந்தாலும் தட்டிவிட்டுப் போய்விட மாட்டார்களா என ஏக்கம் படர்கிறது.

கதவு தட்டும் ஒலி படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெகு தொலைவிலிருப்பது போன்று பாவனை செய்து கொள்கிறேன். நொடிக்கு நொடி. தட்டுதல்கள் என்னை நெருங்கி வருகின்றன. தடதடவென்று தாறுமாறாய் இருள் நிறைந்த அறையெங்கும் ஓசைபெருகி நிரம்பிக் கொண்டிருக்கிறது.

திறக்க வேண்டுமென்கிற பிரக்ஞை துளியுமற்ற நிலையில் கதவையே வெறிக்கிறேன். இனியும் திறக்காமலிருக்க இயலாது என்ற நிலையில் பயம் அழுத்துகிறது. நள்ளிரவில் யாரும் அசட்டுத்தனமாகக் கதவைத் தட்டப்போவதில்லை. நாளைய சமையலைப் பற்றியோ, வேலைக்காரப் பெண் வராததைப் பற்றியோ சொல்லப் போவதில்லை. அது ஒரு கெட்ட செய்தியாக இருக்கக்கூடும். இதேபோன்று பல நடு இரவுகளில் சொல்லப்பட்ட செய்திகள் மோசமானவை, சூழலையே அழித்தவை. இப்பொழுதெல்லாம் கதவு தட்டும் ஒலியே பயம் கொள்ளச் செய்கிறது. கதவு தட்டப்படுதலை எதிர்நோக்கியே இரவுகளைத் தொடர்வது தாங்க இயலாத துன்பமாகவே மாறிவிட்டது.

திடீரென அறையெங்கும் வெளிச்சம் பரவி என்னைக் கலைக்கிறது.

“சனியனே, கண்ணத் தொறந்து பார்த்துக்கிட்டுத்தான் கதவத் தொறக்காம உட்கார்ந்திருக்கியா?”

தூக்கம் கலைந்த கோபத்தில் கத்திக் கொண்டே கதவைத் திறக்கப் போகிறான். அவனுக்கு எல்லாவற்றையும் விட தூக்கம்தான் முக்கியம்.

அவன் கதவை நெருங்க எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அதிர்கிறது எனக்குள். கதவுக்குப் பின்னிருந்து என்ன செய்தி வரப்போகிறதோ, யா அல்லாஹ்! இதயம் முணுமுணுத்துத் துடிக்கிறது வேகமாக ஓடிப்போய் அவனுடைய கைகளைப் பிடித்துத் தடுக்க வேண்டும் போலிருக்கிறது.

கதவின் தாழ்ப்பாளை மிகுந்த சப்தத்தோடு இழுத்துத் திறக்கிறான், குழந்தை விழித்துக்கொள்ளப் போகிறதே என்கிற நினைவின்றி! வெளியில் யாரோ நின்று அவனிடம் மெலிதாகப் பேசுவது கேட்கிறது. கிசுகிசுப்பாய் ஒலிக்கும் குரல் புரியாமல் கவனித்துக் கேட்க முற்பட்டேன். பேசுவது யார் என்று பார்க்கலாமே என்ற எண்ணத்தில் படுக்கையிலிருந்தபடியே எட்டிப் பார்க்கிறேன் , முகத்தைப் பார்த்தாவது செய்தியை அனுமானிக்கலாம் என்கிற எண்ணத்துடன். அவனுடைய உருவம் வெளியில் நிற்பவரை முற்றிலுமாக மறைத்திருக்கிறது.

கட்டிலை விட்டு எழுந்திருக்கிறேன் என்னவென்று கேட்கலாம் என்று எத்தனை முயற்சித்தும் வலுவற்றுச் சாய்கிறது உடல்.

படபடப்பு தாங்க இயலாமல் கண்களை மூடிக் கொள்கிறேன். மனதில் ஆண்டவனை நினைத்துக்கொள்கிறேன். சிறிது நேரத்தில் என்னை வந்தடையப் போகும் அச்செய்தி யாரைப் பற்றியதாக இருக்கும், என்னை என்ன செய்யக்கூடும்? பாதியில் நிறுத்திவைத்திருக்கும் புத்தகம் நினைவுக்கு வருகிறது. மனதில் அம்மாவின் ஞாபகம் வருகிறது. நான் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறேன்? நிமிடத்தில் ஒவ்வொருவரின் முகமும் தோன்றி மறைகிறது.

அவன் வெளியில் செல்கிறான்; ஹாலில் இருக்கும் போனில் பேசுகிறான்; யாருடன் என்று தெரியவில்லை, எனக்கு மூச்சுமுட்டிற்று. சுவாசிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பீதியில் உடம்பெங்கும் கொதிப்பது போல் இருக்கிறது.

முன்பு வந்த செய்திகள் துக்கத்தைக் காட்டிலும் பயத்தை உறுதி செய்து விட்டிருந்தன. நிரந்தரமான பயம், துக்கத்தைவிட பயம் வலுவானது. இதோ வரப்போகும் செய்தி எல்லாவற்றையும் முழுக்கப் புரட்டிப் போடலாம். இப்பொழுது அறைக்குள் வந்து ஹேங்கரில் தொங்கும் சட்டையை எடுத்து மாட்டியபடி வெளியில் போகிறான்.

“என்ன?”

வேகமாகக் கேட்கிறேன். என் குரல் மிகமிகச் சன்னமாக வெளிவருகிறது.

என் பக்கம் திரும்பாமலே, “ஒண்ணுமில்லை”என்றான். அறைக்கதவை வெளியில் தாளிட்டு விட்டுச் செல்கிறான்.

அவனுடைய அலட்சியமிக்க பதில் வழக்கம் போல் வெளிப்பட்டிருக்கிறது. அவனின் அலட்சியங்கள் வெளிப்படும் சமயம் அழுகையையோ, கோபத்தையோ தூண்டிவிடும். இப்பொழுது அப்படியில்லாமல் நிம்மதியாக இருந்தது. தெம்பாகக் கூட இருந்தது. செய்தி மோசமென்னும் பட்சத்தில் அலட்சியம் காட்டத் தோன்றாது. சந்தோஷமாகக் கூட இருந்தது அவன் பதில்.

சில நொடிகள்தான் நீடிக்கிறது அம்மனநிலை. இன்னொரு சந்தேகம் வருகிறது. அவனுடைய ’ஒண்ணுமில்லைக்கு அர்த்தம் அக்கறையாகவும் இருக்கலாம். என்னிடம் மறைக்கவேண்டிய செய்தியாக இருந்து ஒண்ணுமில்லை என்றானோ? அப்படியென்றால்…

திரும்பவும் பயம் வந்து பற்றிக் கொள்கிறது. அழுகை வரும் போல் இருக்கிறது. அவன் முகத்தையேனும் கூர்ந்து கவனித்திருந்தால் குழப்பத்திற்கு இடமின்றிப் போயிருக்கும். என்னை நானே கடிந்து கொள்கிறேன், ஆத்திரத்துடன்.

குரலைக் கவனித்திருந்தால் கூட ஓரளவு புரிந்திருக்கும். நினைப்பெல்லாம் அந்தச்செய்தியை அறிந்து கொள்வதில் இல்லை, தவிர்ப்பதில்தான் இருக்கிறது. தலை வலித்தது. இரு

கைகளாலும் தலையை இறுக்கமாகப் பற்றுகிறேன்.

நேரம் என்னவாகயிருக்கும் என்று தெரியவில்லை. அதனைத் தெரிந்து கொண்டுதான் என்ன ஆகப்போகிறது? ஜன்னலுக்கு வெளியே தெருநாய் ஒன்று ஊளையிடும் குரலை நடுங்கச் செய்தது. நாய் ஊளையிடுவது துர்சகுனத்திற்கான அறிகுறி என்கிற நினைவு துன்புறுத்திற்று. நாயின் குரலைக் கேட்டு இன்னும் சில நாய்கள் அதனோடு சேர்ந்து ஓலமிடுகின்றன. ஒவ்வொன்றாய்ச் சேர்ந்து தொடர்ச்சியான ஓலம். எங்கிருந்து வந்தன இத்தனை நாய்கள் என்று தெரியவில்லை.

அவன் வரும் வரைக்கும் கதவையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் பார்வை நிலைகொள்ள மறுக்கிறது. என்ன என்ன என்கிற கேள்வி மண்டைக்குள் எதிரொலிப்பது போல் இருக்கிறது.

இருட்டு எங்கும் மையம் கொண்டிருந்தது. திடீரென பாழடைந்த குகைக்குள் இருப்பது போன்ற பிரமை தட்டிற்று. சிலந்தியின் கால்களில் பூச்சியாய், பயம் கவ்வ உடல் துவள்கிறது. வாய் திரும்பத் திரும்ப முணுமுணுக்கிறது ‘யா அல்லா, என்னைக் காப்பாற்று.’

இருப்புக்கொள்ளாப் பதற்றத்துடன் அமர்ந்திருந்ததில் உடல் இறுகி வியர்க்கிறது. அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்கிறது. என்னைச் சூழ்ந்த மர்மம் விலகப் போகும் தருணமிது. அவன் சட்டையின் பட்டன்களை எடுத்தபடி உள்ளே வருகிறான்.

கதவைத் தாழிடுகிறான். ஒன்றும் பேசாமல் தூங்கப் போகிறான். விளக்கைப் போடுகிறேன், விபரம் கேட்கலாம் என்று. சற்றைக்கு முன் அறைக்குள் நிரம்பியிருந்த இருள் நொடியில் காணாமல் போகிறது. கண்மூடித் தூங்க முயற்சித்தவன்,

“சனியனே தூக்கத்தைக் கெடுக்காதே, லைட்ட அமத்து”

கோபமாய்க் கத்துகிறான். பதில் பேசாமல் லைட்டை அணைக்கிறேன். வெளியில் காத்துக் கொண்டிருந்த இருள் அரவமின்றி உள்ளே வந்துவிட்டது. தலைக்கு மேல், விட்டத்தில், உடம்பில், முக்கியமாக அவன் முகத்தில் என்று பரவியிருக்கிறது. இருள் மிக வசீகரமாய் இருந்தது. வெளிச்சம் நுழையாத கட்டிலுக்கடியில் சவுகரியமாக உட்கார்ந்து என்னைப் பார்க்கிறது.

கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் அமர்ந்திருக்கிறேன். பதற்றமும் பீதியும் பற்ற எத்தனை நேரம் இருப்பது? அறிந்து கொள்வதனாலான விளைவுகளை நிச்சயம் எதிர் கொள்ளத்தான் வேண்டும். இப்பொழுது இல்லையெனில் பிறகு! அறிந்து கொள்வதைத் தள்ளிப்போட்டு என்ன செய்யப் போகிறேன்? பதற்றமும் பயமும் கொன்றுவிடும் போலிருந்தது.

“என்ன விஷயம், எங்க போனீங்க?”

வெடுக்கென திரும்புகிறான்.

“ஒண்ணுமில்லைன்னா விடமாட்டியா, ஒனக்குத் தேவையில்லாததை கேட்டு உயிர வாங்காதேடி, இவளால் எப்பப்பாரு தொல்லை, சனியன்”

கத்திவிட்டு சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்ளுகிறான். அலட்சியம் உச்சத்தில் இருந்தது அவனின் குரலில்.

எங்கிருந்தோ வந்த அமைதி ஆசுவாசப்படுத்திற்று என்னை; அல்லாவே என்று முணுமுணுக்கிறேன். பதற்றம் துளியுமின்றி நீங்கியதில் படபடப்பு குறைந்திருந்தது; போதும், இனி பயமின்றி இருக்கலாம். தூங்க முயற்சித்துத் தூங்கலாம். இருப்பினும் கதவு பூட்டியிருப்பது பயம் கொள்ளவே செய்கிறது. தெரு நாய் ஊளையிடுவதை இன்னும் நிறுத்தவில்லை

கதவு திறந்து இருக்கட்டுமே என்று தோணுகிறது. பயமற்றிருக்கக் கதவு திறந்திருக்கத்தான் வேண்டுமென்று படுகிறது. பயம் தொடர்ந்தால் பைத்தியம் பிடித்துவிடுமோ என்றிருக்கிறது.

“என்னங்க.”

அவனை எழுப்புகிறேன். அதற்குள் தூங்கிவிட்டான்.

“என்ன?”

எரிச்சலாய்க் கேட்கிறான். “கதவு திறந்தே இருக்கட்டுமே” தயக்கமாக இழுக்கிறேன். ஒன்றும் புரியாமல் “ஏன்?” என்கிறான்.

“சும்மாதான்”

“நடு ராத்திரியில ஏண்டி உயிர வாங்கிற, யாராவது பார்த்தா காறித் துப்புவாக, கதவப்பூட்டிட்டு படுக்க மாட்டே”

கத்திவிட்டுப் படுத்துக் கொள்கிறான். பதிலைப் பேசத் தோன்றாமல் அமர்ந்திருக்கிறேன்.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *