பொருத்தம் சரியா?

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 164 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கதிரேசா.. இன்னைக்குப் பொண்ணு வீட்டுக்காரங்க வர்றாங்க”

“அதுக்கென்னக்கா”

“அதுக்கென்னவா?”- என்று கேட்டபடிச் சமையலலையில் நுழைந்தாள் வளர்மதி. கதிரேசன் வெறுப்புடன் கேட்டதில் நியாயம் இருக்கிறது. கதிரேசனைப் பார்க்க வந்த பெண்வீட்டார் பலர் விலகி ஓடினார்கள், காரணம் குள்ளமான அவனது தோற்றம்.

அக்கம் பக்கத்துப் பெண்களின் பேச்சில் கதிரேசன்தான் கதாநாயகன். “சர்க்கஸ் கோமாளி மாதிரி இருக்கிற இவனுக்கு யாருடி குடுப்பாங்க” – வனஜா கேட்டாள் தன் கணவன் ஆணழகன் என்ற நினைப்புடன்.

கிருத்திகா வீடு.

“ஐயோ, இந்த இடமாவது நல்லபடியாக முடியணும்” – கிருத்திகாவின் அம்மா.

“ஆமா, சரோஜா, நமக்கும் வயசாவுது. வர்றவங்க எல்லாம் முப்பது, முப்பத்தஞ்சி பவுன் கேக்கறாங்க. நம்ப கண் மூடறதுக்குள்ள நம்ம பொண்ணு கல்யாணத்தப் பாக்க முடியுமோ? முடியாதோ?”

கிருத்திகா மௌனமாக நின்றாள்.

“கிருத்திகா.”

“என்னப்பா“

“மாப்பிள்ளை, அண்ணன், தம்பிங்க ஒரே வீட்ல இருக்காங்களாம். எல்லாம் விவசாயம்தான். பவுன் எதுவும் கேக்கலை. நல்ல குணமா இருந்தாப் போதுமாம். ஆனால், மாப்பிள்ளை சிறிது குள்ளமாம். நீ அவுங்ககிட்ட நல்லபடியா நடந்துக்கணும். அண்ணன். தம்பி இருக்கணும். நீ அந்தக் குடும்பத்துக்குத் தூணா இருக்கணும்.”

“சரிப்பா.”

“ஏங்க இன்னும் தோட்டமே நெலைக்கலை, அதுக்குள்ளே தென்னம்பிள்ளை வைக்க ஆசைப்படுறீங்களே. கிருத்தி… நீ உள்ளே போய் மற்ற வேலைகளைக் கவனிம்மா.”

“சரிம்மா.”

மாடியில் உலர்ந்த துணிகளை மடித்தபடிச் சிந்தனையில் ஆழ்ந்தாள் கிருத்திகா.

அவளுடன் படித்த தோழிகள் பலர் வசதியான வீட்டில் வாழ்கிறார்கள். நல்ல மிடுக்கான தோற்றம் கொண்ட தங்கள் கணவர்களின் அழகை அவர்கள் பூரிப்போடு பேசிக் கொள்வார்கள். வருப்வர்கள் எல்லாரும் ஏகப்பட்ட பவுன் கேட்கத் திருமணம் நம் வாழ்வில் நடக்குமா? என்பதே அவளுக்குக் கேள்விக் குறியாக இருந்தது. அவள் பெற்றோருக்கு அவள் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாகத் தென்பட்டது. குள்ளமான தன் கணவனுடன் தான் நடந்து போவதைக் கற்பனை செய்து பார்த்தாள். பக்கத்து வீட்டுத் தோழிகள் மாடியில் துள்ளியபடி வந்தனர்.

“கிருத்திகா…மாப்பிள்ளை குள்ளமாமே” – கிண்டலாக.

அமைதியாகப் புன்னகை செய்தாள் கிருத்திகா.

“அந்தக் குள்ளனாவது இவளுக்குக் கிடைச்சானே, அதுக்கு மகிழ்ச்சி அடையணும்” – அவர்கள் கிககிகத்தது காதில் விழுந்தது. எதிர்பாராத விதமாகத் திருமணம் நடந்தது. பள்ளியறைச் சாளரம் வழியாக வெளியே நோக்கினாள். இன்னும்பல பெண்கள் கேலியாகச் சிரித்தது தெரிந்தது: சாளரக் கதவுகளைத் தாழிட்டுத் திரும்பினாள்.

அருகில் கதிரேசன் அமர்ந்து இருந்தான்:

“என்னைப் புடிச்சிருக்கா?” – தயங்கியபடிக் கதிரேசன்.

“ம்… புடிக்காமலா சம்மதிச்சிருக்கேன்.”

“பெத்தவங்கள் மனசு புண்படாமல் இருக்கக்குக்கூட இசைந்து இருக்கலாம், இல்லையா.”

“என்ன பதிலையே காணோம்? மத்தவங்க என்னைக் கேலி பேசறதைப் பார்த்த போது உனக்கு “வேதனையா இல்லையா ? இப்படி ஒருத்தனுக்கு மனைவியா அமைஞ்சதை நெனைக்கும் போது வருத்தமா இல்லயா?”

“ஆனா, ஒன்ணு மட்டும் நிச்சயம், உன்னைக் கண் கலங்காமக் காப்பாத்துவேன்.”

“எனக்கு உங்களைப் புடிச்சிருக்கு.”

“ஆமாம் கருப்பு, சிவப்பு, நெட்டை, குட்டை, ஒல்லி, குண்டு பாத்தா தான் எல்லோம் பாக்குறாங்களே தவிர மனப் பொருத்ததை யாரும் பாக்கிறது இல்லை. மண விலக்கிலே முடியற திருமண வாழ்க்கைக்குக் காரணம் மனப் பொருத்தம் இல்லாததுதான். என் மனமும் தூய்மையா இருக்கு. உங்க மனமும் தூய்மையா இருக்கு. நீங்க நல்ல கறுகறுப்பாகவும் இருக்கீங்க. நீங்க யாரையும் நம்பி வாழலையே. குள்ளமா இருக்கறது நல்லதுதானே”

“உண்மையாகவா சொல்றே?”

“ஏன்”

“அப்பதான் வாசப்படி தலையில் இடிக்காது” – என்று சிரித்தாள். அவள் சிரிப்பில் கதிரேசனும் கலந்து கொண்டான். அதில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன.

– ஐ.இரவிசந்திரன்

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *