திருவிழாவில் தொலைந்தவள்

3
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 28,163 
 

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், மிகப் பிரமாண்டமாகத் தொடங்கவிருந்த புத்தகத் திருவிழாவில்… பிரபாகரன் என்கிற பிரபா வேலைபார்க்கும் ‘எழுதுகோல்’ பதிப்பகமும் ஒரு ஸ்டால் பிடித்தது. அத்தனை பதிப்பகத்தினரும் குட்டி யானைகளில் வந்து குவிந்த புத்தக பண்டல்களைப் பிரித்து மேய்ந்து அடுக்கி அலங்கரிக்கத் தயாராகினர்.

‘எழுதுகோல்’ பதிப்பகத்தில் பணியாள் எனப் பார்த்தால், பிரபா மட்டுமே. ஒவ்வொரு பிரின்டிங் பிரஸ்ஸுக்கும் சென்று புத்தகப் பார்சல்களை அள்ளிக் கொண்டுவந்து ரகவாரியாகப் பிரித்து இரும்பு ரேக்குகளில் அடுக்க வேண்டும். அச்சக மை வாசனையோடு அரசியல், ஆன்மிகம், கட்டுரை, கதை… என எழுதி ஒட்டப்பட்டிருந்த ரேக்குகளில் அடுக்கிக்கொண்டிருந்தபோதுதான், அந்த குளோப்ஜாமூன் குரல் பிரபா காதில் விழுந்தது.

”எக்ஸ்கியூஸ் மீ…”

அவள் நின்றிருந்தாள். நீலநிற சுடிதாரில் வெள்ளைக் கொடி படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்திருந்தன. கண்களில் தீபம் தெரிந்தது.

”சொல்லுங்க… என்ன வேணும்?” என்றான், வலிக்காத வார்த்தைகளில்.

”14-15 ஸ்பேனர் கொஞ்சம் கிடைக்குமா? ப்ளீஸ், ரெண்டே நிமிஷத்துல திருப்பிக் குடுத்துர்றேன். எதிர்லதான் ஸ்டால் போட்டிருக்கோம்” என்றாள்.

அந்த ‘ப்ளீஸ்’ அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாக… காடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்றவைத்ததுபோல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.

”கொஞ்சம்னா எப்படி… பாதியா உடைச்சுத் தரட்டுமா?” என அவன் கேட்டதும், மெலிதாகப் புன்னகைத்தாள்.

இன்னும் 18 நாட்கள் எதிரிலேயே இருக்கப்போகிறாள். உடனடியாகப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. டூல் பாக்ஸைத் திறந்து சௌம்யா கேட்ட ஸ்பேனரை எடுத்து எண்களைச் சரிபார்த்துக் கொடுத்தபடி… ”ஐ’யம் பிரபாகரன்” என்றான்.

”சௌம்யா” என்றாள் தயங்கியபடி.

பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும்போது அது இன்னும் அழகாகிவிடுகிறது.

”ரெண்டு நிமிஷத்துக்குமேல ஆச்சுன்னா வாடகை தந்துரணும்” என்ற பிரபாவின் அடுத்த காமெடி அஸ்திரத்துக்கும் புன்னகைத்தாள்.

திருவிழாவில் தொலைந்தவள்

அவள் அடிக்கடி ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என அவன் உள்மனதில் ஒரு ராட்சதப் பல்லி கத்தியது.

துரிதகதியில் வேலைபார்த்தான். தனது ஸ்டால் பணிகளை முதலில் முடித்துவிட்டு பிறகு அவளுக்கு உதவலாம் என இருந்தான். ‘வா ராஜா வா… வா… இதான் ஓன் டாவா…’ – அவன் செல்போன் ரிங்க, ஓனர்தான் அழைத்தார்.

”சொல்லுங்க சார்…”

”ஆபீஸ் வரை வந்துட்டுப் போ.”

”சார், இங்க ஆள் இல்லை. நான் எப்படி விட்டுட்டு வர முடியும்?”

”யோவ்… பக்கத்துல பார்த்துக்கச் சொல்லிட்டு வாய்யா…”

அதற்கு மேல் கேள்வி கேட்டால் அவனின் எதிர்காலம் பற்றி அபசகுன வார்த்தைகளில் ஆருடம் சொல்வார்.

”ஓ.கே சார்… வர்றேன்” – போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு ஸ்டால் முன் இருந்த ஸ்கிரீனை மூடினான்.

எதிரே இருந்த ஸ்டாலில் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தாள் சௌம்யா. அறிவுக்களஞ்சியம், ஈஸியாக ணீ, தீ, நீ, பீ சொல்லிக்கொடுக்கும் சி.டி-க்கள்,அனிமேஷன், கேம்ஸ் டி.வி.டி-க்கள் என அனைத்தும் குழந்தைகளுக்கானது.

”ஸ்பேனருக்கு வேலை

முடிஞ்சுதுங்களா?”

”தூக்கிட்டு ஓடிட மாட்டேன்… இந்தாங்க” என ஸ்பேனரைக் கொடுத்தாள் பொய்க் கோபத்துடன்.

”உங்ககிட்டயே இருக்கட்டும். நான் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்துர்றேன். எங்க ஸ்டால் மேல ஒரு கண்ணை வெச்சுக்கங்க” என்றான்.

”எனக்குப் பசிக்குதே. நான் சாப்பிடப் போகணுமே” என்றாள் 15 சதவிகிதச் சிணுங்கல்களுடன்.

”அவ்வளவுதானே… நான் லன்ச் வாங்கிக் குடுத்துட்டுப் போறேன். ஓ.கே-வா?” என்றதும், சில விநாடிகள் யோசித்து ”எதுக்குங்க உங்களுக்குச் சிரமம்?” என்றாள்.

”எதிரெதிர் ஸ்டால்ல இருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த உதவிகூட செஞ்சுக்கலைனா எப்படிங்க?”

‘சரி’ எனத் தலையாட்டியவள், 500 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.

”ஏங்க, எழுபது ரூபாய்க்கு இதைக் கொடுத்தா ஹோட்டல்காரர் திட்டுவாருங்க” – பொய், சுலபமாக வந்தது.

”என் காசுல வாங்கிட்டு வர்றேன். நீங்க சில்லறை மாத்திவைங்க” என்றபோதே, அதை மறுப்பதற்கான காரணத்தையும் யோசித்துவைத்தான்.

பைக் ஸ்டாண்டில் இருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்தான்.

நல்ல ஹோட்டலாக நந்தனம் முழுக்கத் தேடினான். ‘நல்லா இருந்தது’ என சௌமியாவிடம் பாராட்டு வாங்கவே, இத்தனை அலைச்சல்.

கடை கடையாகத் தேடிச் சாப்பிட்டு, ஃபேஸ்புக்கில் பதிவுபோடும் திவாகருக்கு போன் போட்டான்.

”வெஜ்ஜா… நான்-வெஜ்ஜா..?” என்றான் திவாகர்.

”இன்னைக்கு வெள்ளிக்கிழமை வெஜ் சொல்லு.”

”தி.நகர் வந்தா நிறைய இருக்கு. உஸ்மான் ரோடு எண்டுல ரைட்ல போனின்னா இருக்கும்” என அவன் சொன்ன தெருவை நினைவுபடுத்திக்கொண்டு பயணமானான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அரங்கத்துக்குள் வர, சௌம்யா ஸ்டாலில் நடுத்தர வயது தம்பதி அமர்ந்திருந்தனர். அவர்கள்தான் பதிப்பக உரிமையாளர்கள். உணவு பார்சலை சௌம்யாவிடம் கொடுத்தான்.

அதை வாங்கிக்

கொண்டவள், ”நீங்க சாப்பிட்டீங்களா?” என்றாள்.

அந்த ‘சாப்பிட்டீங்களா?’, பிரபாகரனை அன்று இரவு முழுவதும் உறங்கவிடாமல் அறையில் நடமாடவிட்டது. தூங்கின நண்பனை பத்தாவது முறையாக எழுப்பி, ”ஒரு பொண்ணு ஆசையா ‘சாப்பிட்டீங்களா?’னு கேட்டா என்னடா அர்த்தம்?” என்றான்.

அரைத் தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து அவனை முறைத்து விட்டு மீண்டும் படுக்கப்போனவனைத் தடுத்து நிறுத்தி, ”இந்த ஒரே ஒரு தடவை மட்டும் சொல்லிட்டுப் படுடா.”

”நிச்சயமா… சாமி சத்தியமா… என் சொந்த பந்தம் தலையில அடிச்சு சத்தியம் பண்றேன். உன்னை அவ லவ் பண்றா, போதுமா?” என்றவன் தலை வரை போத்திக்கொண்டு படுத்துவிட்டான்.

என்றைக்கும் இல்லாமல் அன்று பாடிக்கொண்டே குளித்தான் பிரபா. ‘சௌம்யாவுடன் நாள் முழுக்கச் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே இருந்தால் எவ்வளவு பரவசமாக இருக்கும்?!’ – நினைக்க நினைக்க பிரபாவுக்கு இனித்தது.

மறுநாள் புத்தக அரங்கத்தில் பரவசத்தோடு நுழைந்தான் பிரபாகரன். அங்கு இருந்த அத்தனை கூட்டமும் அவனையே கவனிப்பதாக உணர்ந்தான். காரணம், சௌம்யா; அவளின் புன்னகை; அவளின் நெருக்கம்.

அன்றைக்கு சௌம்யாவும் கவர் பிரிக்காத ஆப்பிள் செல்போன்போல ஜொலித்தாள். அவளின் மாநிறத்துக்கு, பாசிப் பச்சை நிற புடவை பொருத்தமாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்க, இன்னும் அழகாக இருந்தாள்.

அருகில் சென்று ”குட் மார்னிங்” என்றான்.

பதிலுக்குப் பார்வையால் ‘வணக்கம்’ சொன்னாள். அருகே ஓனர் இருந்தார். அதனால்தான் அந்தப் பார்வை வணக்கம். ‘இந்த ஓனர்களை எல்லாம் யார் ஸ்டாலுக்கு வரச் சொன்னது?’ – தேவை இல்லாமல் கோபம் வந்தது.

புத்தகக் கண்காட்சி தொடங்கியது முதல், ஒவ்வொரு நாளும் மலையில் இருந்து உருட்டிவிட்ட தேங்காய்போல வேகமாக உருண்டோடியது.

15 நாட்கள் போனதே தெரியவில்லை.

தினம் தினம் அவ்வப்போது சௌம்யாவும் பிரபாவும் பார்வையாலும், இரண்டு ஸ்டால்களின் ஓனர்கள் இல்லாத நேரத்திலும் காபி சாப்பிடும் சமயங்களிலும், மதிய உணவு இடைவேளைகளில் நேரிலும் இயல்பாகப் பேசிக்கொண்டனர். பெரும்பாலும் சினிமா, சௌம்யாவின் ஊரான சோழபுரம், அவனுடைய கல்லூரி கலாட்டாக்கள்… இவை பற்றி இருந்ததே தவிர, அவளைப் பிடித்திருக்கிறது என்பதை அவனால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. சந்தர்ப்பம் அமையவில்லை.

‘பிரபா’ என, அவள் உரிமையோடு பெயர் சொல்லிக் கூப்பிடுவது ஆனந்தமாக இருந்தது. இனம்புரியாத ஒரு நெருக்கம் தெரிந்தது. இருவரும் இணையாக வாழ்வதற்கு அத்தனை தகுதிகளும், இருவருக்குமே இருப்பதாக உணர்ந்தான். இருந்தாலும் பேசுகிறாள், பழகுகிறாள் என்பதை வைத்துக்கொண்டு திடீரென விருப்பத்தைச் சொல்ல முடியுமா?

சௌம்யாவின் செல்போன் எண்ணை விடாப்பிடியாகப் பெற்று, வீட்டில் இருந்தபடி ஓரிரு முறை போன் செய்தபோது, அவள் பேசவில்லை. தினமும் காலை ‘குட் மார்னிங்’ எஸ்.எம்.எஸ்-க்கும் பதில் அனுப்பியது இல்லை. அதுதான் சற்று குழப்பமாக இருந்தது.

புத்தகத் திருவிழா நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. அதற்குள் அவள் மனதில் இருப்பதை அறிந்தாகவேண்டும் அல்லது தன் விருப்பத்தையாவது சொல்லிவிட வேண்டும்.

அன்றைய தினம். மேகத்தில் மறைந்து… மறைந்து வெளிப்படும் நிலவுபோல, மனிதத் தலைகளுக்கு இடையே அவ்வப்போது சௌம்யா முகம் தென்பட்டது. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் மதியம் ‘சாப்பிட்டாச்சா?’ என்பதுபோல் சைகையில் கேட்டான். ‘இன்னும் இல்லை. போ வர்றேன்’ என, வாய் அசைவில் உணர்த்தினாள்.

பிரபாகரன் முதலில் சென்று கேன்டீனில்

ஓர் ஓரத்தில் அமர்ந்தான். சௌம்யா வந்தாள். அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.

இதைவிட்டால், விருப்பத்தைச் சொல்ல சந்தர்ப்பம் அமையுமா எனத் தெரியவில்லை என்றாலும், எதைக் கொண்டு தொடங்குவது… முதல் கோட்டை எந்தப் புள்ளியில் இருந்து இழுப்பது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தான்.

சில நிமிட அமைதிக்குப் பின்… ”ஒருநாள் நீங்க இல்லாதப்போ உங்க ஸ்டாலுக்கு வந்து பார்த்துட்டு, கருத்துப் பதிவு புக்குல ‘வாழ்த்துகள்’னு எழுதி, என் அட்ரஸையும் எழுதிட்டு வந்தேன். நீங்க ஏன் எங்க ஸ்டாலுக்கு வந்து புத்தகம் எதுவும் பார்க்க மாட்டேங்கிறீங்க, வாசிக்கிற பழக்கம் இல்லையா?” – சௌம்யாவிடம் கேட்டான் பிரபா.

”படிப்பேன். நேரம் எங்க இருக்கு?”

”எந்தெந்த எழுத்தாளரோட புக்ஸ் எல்லாம் படிப்பீங்க?”

”தேர்ந்தெடுத்துப் படிக்கிற அளவுக்கு நான் புத்தகப் புழு இல்லை. கையில என்ன கிடைக்குதோ, அதைப் படிப்பேன்.”

”காதல் கவிதைப் புத்தகம் பிடிக்குமா?” – முதல் புள்ளிக்கும் இரண்டாம் புள்ளிக்குமான கோட்டை ஆரம்பித்தான்.

”நீங்க கவிதை எழுதுவீங்களா?” என சௌம்யா கேட்டாள்.

”படிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். எழுத வராது. காலேஜ்ல படிக்கிறப்போ, கட்டுரைப் போட்டியில கலந்துக்கிட்டேன். பரிசு கிடைக்கலை. அப்புறம் இது நமக்குச் சரிபடாதுனு எழுதறதை விட்டுட்டு, நிறையப் படிக்க ஆரம்பிச்சேன். பதிப்பகத்துல வேலைக்குச் சேர்ந்ததே ஓசியில படிக்கத்தான். கி.ரா., ஜெயகாந்தன், பூமணி, சுஜாதா, எஸ்.ரா. இன்னைக்கு புதுசா கவனத்தை ஈர்க்கிற எல்லா எழுத்தாளர்களோட படைப்புகளையும் வாசிப்பேன்.”

”நான் எப்பவாச்சும் கவிதைங்கிற பேர்ல வார்த்தைகளை மடிச்சு மடிச்சுக் கிறுக்குவேன்” என்றாள் சௌம்யா.

”ஐயோ… சூப்பர்ங்க. பொண்ணுங்க கிறுக்கினாலே, அது கவிதைதானே” எனச் சொல்லிவிட்டு, அவள் முகத்தில் பரவும் வெட்க உணர்வைப் படம்பிடித்தான்.

உணவு வந்தது. சாப்பிட்டனர்.

”உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சா?” என்றாள் சட்டென. கேட்டுவிட்டு தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.

அப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. ‘எதற்காகத் திடீரென இப்படி

ஒரு கேள்வி? தன்னைப்போலவே அவளும் எந்தப் புள்ளியில் ஆரம்பிப்பது என்கிற குழப்பமோ?’ என யோசித்தபடி, ”சின்னப் பையன்ங்க நான். 27 வயசுதான் ஆகுது. ஆமா… எதுக்கு கேட்கிறீங்க?” என்றான் முகம் பார்த்தபடி.

”சும்மாதான் கேட்டேன்” என்றாள்.

அழகான ஓர் இளம்பெண் ஒரு பையனிடம் கேட்கும் இந்தக் கேள்வியை, ‘சும்மா’ என எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், ‘இதைவிட்டால் வேறு சிறந்த சூழ்நிலை அமையாது. அவளே பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு பேச்சைத் தொடங்கிவிட்டாளோ?’ எனத் தோன்றியது.

”ஏன்… நீங்கதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்குங்களேன்” படீரெனச் சொல்லிவிட்டாலும், உள்ளுக்குள் இருந்த உதறலை அவனால் மறைக்க முடியவில்லை. ‘ஆமாம்’, ‘இல்லை’ இரண்டில் ஒன்று சொல்லித்தானே ஆகவேண்டும்.

அவள் அமைதியாக பிரபாகரனைப் பார்த்தாள். பின் தலைகுனிந்தவள், நிமிடங்களுக்குப் பிறகு நிமிர்ந்தவள் கண்களில் நீர்த் துளிகள் கோடிட்டு இறங்கின. எதுவும் பேசவில்லை.

”ஸாரி சௌம்யா. உங்களை மாதிரி நான் சும்மா கேட்கலை. என் மனசுல இருக்கிறதை விளையாட்டாச் சொன்னாலும் உண்மையாத்தான் கேக்கிறேன்.”

பாதி உணவில் சட்டெனக் கை கழுவிவிட்டு, அங்கிருந்து விருட்டென எழுந்து நடந்தாள்.

”நான் கேட்டது தப்புன்னாலும் பரவாயில்லை. பதில் சொல்லாமப் போகாத சௌம்யா” என்றதைப் பொருட்படுத்தாமல், நடையில் வேகம் கூட்டினாள்.

அன்று முழுக்க அவள் ‘எழுதுகோல்’ ஸ்டால் பக்கமே திரும்பவில்லை. அவனைப் பார்ப்பதையோ, அவன் பார்வை படும்படி நிற்பதையோ, தவிர்த்து மறைந்து நின்றாள்.

அவளிடம் அப்படிக் கேட்டது ஒன்றும் அவனுக்குப் பிழையாகத் தெரியவில்லை. திட்டிவிட்டாவது போயிருக்கலாம். பதில் சொல்லாத அவளின் அழுகை, நெஞ்சில் குத்தியது.

அன்று விழாவின் நிறைவு நாள் என்பதால், அரங்கம் முழுக்க அலைந்து திரிந்து தேடித் தேடி புத்தகங்களை வாங்கினார்கள். எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். எதிரெதிர் ஸ்டால்களில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாத அளவுக்குக் கூட்டம். ஏ.எஸ் நூல் களஞ்சியம் ஸ்டாலிலும் அதிகமான வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.

இரவு 9 மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக நெரிசல் குறைய ஆரம்பித்தது. எதிர் ஸ்டாலில் சௌம்யாவைக் காணவில்லை. ஓனரும் அவர் மனைவியும் மட்டுமே இருந்தனர்.

கேன்டீன் சென்று தேடினான். அங்கும் இல்லை. கண்காட்சி அலுவலகத்திலும் இல்லை. வாசலுக்கும் ஸ்டாலுக்கும் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே ‘எங்கே சென்றிருப்பாள்?’ என யோசிக்கும் வேளையில், ”தம்பி, சௌம்யாவையா தேடுறீங்க?” என்றார் சௌம்யா ஸ்டால் ஓனர், அவன் தோளைத் தொட்டுத் திருப்பியபடி.

‘அவளைத் தேடுவது இவருக்கு எப்படித் தெரியும்?’ என்ற கேள்வியோடு பார்த்தான்.

”சௌம்யா இப்ப இங்க இல்ல தம்பி. நேத்தே ஊருக்குப் போயிட்டா. போகும்போது எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா. இத்தனை நாட்களும் நீங்க பேசிப் பழகினது, முதல் நாளே லன்ச் வாங்கிட்டுவந்து கொடுத்தது, அப்பப்போ அவளையே நீங்க பார்த்துட்டு இருந்தது, கடைசியா ‘நீங்க கல்யாணம் பண்ணிக்கிறியா?’னு கேட்டது வரைக்கும் எதையும் மறைக்கல. ரொம்பத் தங்கமான பொண்ணுப்பா அவ. நாங்க யாருன்னு உங்கிட்ட சொன்னாளா?”

” ஸ்டால் ஓனர்தானே நீங்க?”

”இல்ல தம்பி. கிட்டத்தட்ட எங்களுக்கு சௌம்யா மருமகள் மாதிரி.”

‘மருமகளா?’ – அதிகப்படியான அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். ”மருமகள் மாதிரின்னா புரியலை சார்.”

”அதுதான் தம்பி விதிங்கிறது. என் ஒரே பையன் அசோக். ப்ளஸ் டூ முடிச்சதும் மிலிட்டரியில சேர்ந்துட்டான். எட்டு வருஷம் சர்வீஸ் முடிச்சிருந்தான். இப்பதான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி காஷ்மீர் பார்டர்ல கேம்புக்கு அனுப்பினாங்க. அதையும் அவனா விரும்பிக் கேட்டுத்தான் போனான்.

சௌம்யாவும் என் பையனும் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட்ஸ். அந்தப் பழக்கத்துல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருக்காங்க. பையன் ஊருக்கு வந்தா, சௌம்யாவைப் பார்க்க சோழபுரம் போயிடுவான்.”

சோழபுரம்… இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மாலை. அனுமார் கோயிலின் காம்பவுண்டை ஒட்டி அமைந்துள்ள, மக்கள் அதிகம் புழங்காத பூங்காவில் அமர்ந்திருந்தான் அசோக்.

கிட்டத்தட்ட ஆறடி உயரம். 30-வயதுக்குள் இருப்பான். மழுமழுவென ஷேவ் செய்திருந்த முகத்தில் பகத்சிங் போல் மீசை. காதுகள் ஒட்டிய இரண்டு புறங்களிலும் நகத்தில் கிள்ளிப் பிடிக்கிற அளவுக்கு ஒட்ட ஒட்ட வெட்டிய கிராப். கண்களுக்கு ரேபான், கால்களுக்கு ரீபோக். மிலிட்டரியில் மட்டும் சேராமல் இருந்தால், அஜித், விஜய்க்கு வில்லனாக நடிக்க கண்களை மூடிக்கொண்டு தேர்வுசெய்யலாம்.

பூஜைக் கூடையுடன், பூங்காவுக்குள் பட்டாம்பூச்சிபோல் நுழைந்தாள் சௌம்யா. அசோக்கைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, ஓடிவந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

”என்ன மிலிட்டரி சார்… திடுதிப்புனு வந்து நிக்கிறீங்க. ஒரு போன் பண்ணிருக்கக் கூடாது? சரி… எப்ப காஷ்மீர்ல இருந்து வந்தீங்க?”

”இன்னைக்குக் காலையிலதான். உன்னை நேர்ல பார்த்து 9 மாசம் 11 நாள் ஆகுது. அதான் ஓடிவந்துட்டேன். போன்ல உன் குரல் கேட்டா… அவ்வளவு குளிர்லயும் ஹீட்டாயிடுறேன்.”

”ஐயய்யோ… பாத்து உருகிடப்போறீங்க. எனக்குக் கொஞ்சம் மிச்சம்வைங்க” என்றவள், ஒரு பக்கம் சற்று கலைந்திருந்த அவன் மீசையை திருகி மேலே ஏற்றிவிட்டாள். அவன் கையை எடுத்து தன் தொடை மீது மலர்த்திவைத்து, அவன் விரல்களின் இடைவெளிகளில் தனது ஒவ்வொரு விரல்களையும் இணைத்து அழுந்தப் பற்றிக்கொண்டாள்.

”சொல்லுங்க ஆபிஸர், அப்புறம் என்ன விஷயம்?”

”அப்பாவுக்கு ஒரு பதிப்பகம் வெச்சுத் தரலாம்னு ஐடியா!”

”அவங்களுக்குச் சிரமம் கொடுக்கிற மாதிரி ஆகிடாதா?”

” ‘பொழுதே போகல. வீட்டுல சும்மாதானே இருக்கேன். பெட்டிக் கடை வெச்சுக் கொடு’னு கேட்டாங்க. நான்தான் பெட்டிக் கடை வேணாம்னுட்டேன். லாபம் வருதுங்கிறதுக்காக பீடி, சிகரெட் விற்க முடியுமா? அது மறைமுகமா உயிரைக் கொல்ற மாதிரிதானே. புத்தகம்னா, படிக்கிறவங்களுக்கு அறிவு வளரும்; ஆத்ம திருப்தியாவும் இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டும்தான்.”

”ஏன் பெரியவங்களுக்கு அறிவு வளர வேணாமா?”

”எவ்வளவு பெரிய மரமா இருந்தாலும், வேருக்குத்தானே தண்ணி ஊத்துறோம். அது மாதிரிதான் இதுவும். எதிர்காலம், இளைஞர்கள் கையில இருந்து இப்போ குழந்தைங்க கைக்கு வந்துடுச்சு.”

உண்மைதான் என்பதுபோல் புன்னகைத்தவள், ”சரி நான் கிளம்பட்டுமா. அம்மா திட்டுவாங்க.”

அசோக், பூஜைக் கூடையில் உடைக்கப்படாத தேங்காய், பிரிக்கப்படாத ஊதுவத்தி கவர் இருப்பதைப் பார்த்து, ”கோயிலுக்குக்கூடப் போகாம வந்துட்டியா? கோபத்துல சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்துடப்போறார்!”

”அவர் காலங்காலமா இங்க இருக்கிறவர்தான். எப்ப வேணாலும் பார்த்துக்கலாம். நீங்கதான் டக்குன்னு டாட்டா காட்டிட்டு காஷ்மீர் போயிடுவீங்க.”

”சரி… கிளம்பலாம். நாளைக்கு வரும்போது பதிப்பகத்துக்கு ஒரு நல்ல தலைப்பு சொல்லணும்.”

சௌம்யா தலையாட்ட, இருவரும் எழுந்து பூங்காவின் வாசலுக்கு வந்தனர்.

மறுநாள்

வழக்கம்போல் வீட்டில் பொய் சொல்லிவிட்டு, விருதுநகர் வந்திருந்தாள் சௌம்யா.

அசோக், அவளை பைக்கில் உட்காரவைத்து சினிமாவுக்குக் கூட்டிப்போனான். பிரமாண்டமான துணிக்கடைக்குக் கூட்டிச்சென்று, அவளுக்குப் பிடித்தமான வண்ணத்தில் சுடிதார் வாங்கிக்கொடுத்தான். சௌம்யா, ஸ்வெட்டர் பரிசு தந்தாள்.

ஹோட்டலுக்குள் நுழைந்து, தனி கேபினில் எதிரெதிரே அமர்ந்தனர்.

”என்ன சாப்பிடுற சௌம்யா?”

”உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதுதான்.”

”எனக்கு முத்தம் சாப்பிடணும்போல இருக்கு.”

சௌம்யா சற்றும் தயங்காமல், ”ஓ.கே இந்தா” எனக் கன்னத்தை அவனுக்கு வசதியாகக் காட்டினாள்.

‘ப்ச்.’

இப்படிப்பட்ட தனிமையான தருணங்களில் கொடுக்கப்பட்ட ஐந்தாவது முத்தம் இது. கையில் குறிப்பேடுடன் வந்த பேரரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்த நேரத்தில், ”பதிப்பகத்துக்கு டைட்டில் கேட்டிருந்தேனே யோசிச்சியா?”

”ம்… ‘நடைவண்டி’, ‘வெளிச்சம்’, ‘மின்மினி’ எப்படி?” என, இல்லாத காலரைத் தூக்கிவிட்டு கெத்து காட்டினாள்.

”நான் ஒண்ணு சொல்லட்டுமா… எப்படி இருக்குனு பாரு. ‘ஏ.எஸ். நூல் களஞ்சியம்’!”

”நம்ப பெயரோட இன்ஷியலால்ல இருக்கு?!”

”ஆமா… நான் மிலிட்டரில இருந்து வந்ததும் நாமதானே பார்த்துக்கப்போறோம். அதனாலதான் இந்தப் பெயர். சின்னதா ஆரம்பிச்சு பெரிய அளவுல இதை விரிவுபடுத்தணும். சென்னை, மதுரை, நெய்வேலினு எல்லா ஊர் புக் எக்ஸிபிஷன்லயும் ஸ்டால் போடணும். இன்னும் பத்து வருஷத்துல குழந்தைகள் அறிவுசார்ந்த எல்லா புத்தகங்களும் நம்மகிட்ட இருக்கணும். பெரிசா லாபம் இல்லாட்டியும், ஒரு சேவை மாதிரியாச்சும் பண்ணணும் சௌம்யா” என்றான் பிரகாசமான கண்களுடன்.

அடுத்த வாரம் முழுக்க இணையத்தில் தேடித் தேடி குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தான் அசோக்.

சோழபுரம் சென்று சௌம்யாவைச் சந்திக்க நேரம் கிடைக்காமல், போனில் மட்டும் பேசி தகவல்களைப் பரிமாறிக்கொண்டான். அவளும் புத்தகம் கிடைக்கும் பதிப்பகங்களின் முகவரிகள் சேகரித்து அனுப்பினாள்.

நல்ல நாள் ஒன்றில் வீட்டின் அருகே வாடகைக்குப் பிடித்திருந்த அலுவலகத்தில் ‘ஏ.எஸ். நூல் களஞ்சியம்’ என்ற போர்டு மாட்டப்பட்டது. வாசலில் வெட்டத் தயாரான நிலையில் புது ரிப்பன். உள்ளே இரும்பு ரேக்குகளில் விதவிதமான புத்தகங்கள்.

சௌம்யா வாசலில் பெரிய வண்ணக் கோலம் போட்டிருந்தாள். அசோக்கின் நெருங்கிய சில நண்பர்கள் மட்டும் குழுமியிருந்தனர். அசோக் கத்தரிக்கோலை எடுத்து அவன் அப்பாவிடம் கொடுத்து, ”கட் பண்ணுங்கப்பா” என்றான்.

ரிப்பன் இரண்டு துண்டுகளாக விழ, அனைவரும் கை தட்டினார்கள்.

நண்பர்கள் வாழ்த்திவிட்டுப் போனபின், ”நான் ஊருக்குப் போனதுக்குப் பிறகு, அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போ சௌம்யா.”

”நிச்சயமா.”

அசோக், அந்த மாத இறுதியில் அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு, சௌம்யா கன்னத்தில் செல்லின் வழியே அழுத்தமான முத்தம் கொடுத்துவிட்டு காஷ்மீர் சென்றான்.

அவன் சென்ற 10-வது நாளிலேயே… பூமிப்பந்து, கண்ணாடிக் குடுவையாகக் கீழே விழுந்து சிதறியது. காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அசோக் சுடப்பட்டு இறந்தான்.

அசோக்கின் தந்தைதான் சௌம்யாவுக்கு போனில் தகவல் சொன்னார். அந்த நேரம் அவளது அப்பா, அம்மா, அண்ணன் யாரும் இல்லை. சௌம்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

தகவல் கேட்டதும் பெருங்குரலில் அழுதாள். தலையில் அடித்துக்கொண்டதில், மயங்கித் தரையில் சரிந்தாள். பின் சுதாரித்து எழுந்தவள் வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு, ”ஃப்ரெண்டுக்கு உடம்பு சரி இல்லை. பார்க்கப் போறேன்” எனப் பொய்த் தகவல் சொல்லிவிட்டு, விருதுநகர் வந்தாள்.

அசோக் வீட்டில், ஊரே திரண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அசோக்கின் உடல் வந்தது. சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியப் புள்ளிகள். சில சாதிக் கட்சியினர், கவுன்சிலர்கள், ஊர்த் தலைவர்கள், பொதுநல அமைப்பினர்கள், சுற்றுவட்டாரப் பள்ளிகளின் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என இறுதி மரியாதை செய்ய, ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்தனர்.

அசோக்கின் சில நண்பர்கள் மட்டும் சௌம்யாவை அடையாளம் கண்டுகொண்டு ஆறுதல் சொன்னார்கள். அசோக்கின் அப்பா, அம்மாவுக்கு ஆறுதல் சொல்லியபடியும் அழுதபடியும் உடல் அருகிலேயே அமர்ந்திருந் தாள்.

அன்று மாலை, குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் அசோக்கின் உடலுக்கு

தீ மூட்டப்பட்டது.

புத்தகத் திருவிழா அரங்கத்தில், மினி வேன்களிலும் ஆட்டோக்களிலும் புத்தகங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். பிரமாண்டமான மின்விளக்குகள் சிலவற்றை அணைக்கத் தொடங்கியிருந்தனர்.

பெரியவர், கண்ணீரைத் துண்டால் ஒற்றிக்கொண்டார்.

தற்போது அவர் மீது மதிப்பும் மரியாதையும் பல மடங்கு உயர்ந்திருந்தது. தனது ஒரே மகனையும் நாட்டுக்கு அர்ப்பணித்து நிற்கும் அவருக்கு, என்ன ஆறுதல் சொல்ல முடியும்? கலங்கி நின்றான் பிரபா.

”எல்லா விஷயங்களும் நாம விரும்பியபடி நடக்குதா என்ன? எங்களோட ஒட்டுமொத்த உலகமும் ஒரே ராத்திரியில இடிஞ்சு விழுந்து தரைமட்டமாகிருச்சு. பாவம், அந்தப் பெண்ணால அசோக் இறந்ததைத் தாங்கிக்க முடியாம, பிரமை பிடிச்சவ மாதிரி ஆயிட்டா. எந்த அளவுக்கு என் பையனும் இந்தப் பொண்ணும் பழகி இருந்தாங்கனு, அவனோட மரணத்துக்கு வந்த சௌம்யா திரும்ப அவங்க வீட்டுக்குப் போகாததை வெச்சு

தெரிஞ்சுக்கிட்டேன்.

அவ அப்பா, அம்மா எவ்வளவு கூப்பிட்டும் போகலை. எங்களுக்கும் போகச் சொல்ல பிடிக்கலை. கேட்டா, ‘அசோக்கைக் கல்யாணம் பண்ணியிருந்தா… இங்கதானே வாழ்ந்திருக்கணும்’னு சொல்றா. அவகூட என் பையனுக்கு வாழக் கொடுத்துவைக்காட்டியும் கொஞ்ச காலம்னாலும் பிடிச்சுப்போய் பழகியிருக்கான். அதனால நாங்களும், ‘சரி… இருந்துட்டுப் போம்மா’னு சொல்லிட்டோம். இறந்துபோனவங்க நேசிச்ச ஒரு பொருளை நாம ஞாபகமா எடுத்துவெச்சிருப்போம் இல்லையா… அதுமாதிரிதான் சௌம்யாவும்!

அவ, என் பையனோட மனசால வாழ்ந்துட்டு இருந்தாலும் வெளிக்காட்டிக்காம எல்லார்கிட்டயும் இயல்பாப் பழகுற மாதிரி உன்கிட்டயும் பேசியிருக்கா. இதுவரைக்கும் நிறையப் பேரு அவகிட்ட கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க. அப்போ எல்லாம் சிரிச்சுட்டே கேலியா வந்து சொன்னவ, நீங்க கேட்டதும் என்னவோ தெரியலை… அழுதுட்டே ஓடி வந்து சொன்னா. இங்க இருக்கப் பிடிக்கலேன்னு கிளம்பி ஊருக்குப் போயிட்டா” என்றார்.

சௌம்யாவின் சிரிப்புக்குள்ளும் இயல்பான வார்த்தைகளுக்குள்ளும் இவ்வளவு வலி இருப்பதை பிரபாகரனால் உணர முடிந்தது. எப்படிப்பட்ட அன்பும் ஆழமும் நிறைந்த காதல் அவர்களுடையது. தாலி கட்டிக்கொள்ளாவிட்டாலும் சௌம்யா, அசோக்கின் மனைவிதான் என்பதை உணர்ந்தான் பிரபா. சௌம்யாவின்மேல் இருந்த மரியாதை ஆயிரம் மடங்கு கூடியிருந்தது. அவள் அப்படி வாழ்வது சரியா… தவறா எனத் தெரியவில்லை. ஆனாலும், அவளின் காதலை உடைக்க அவன் விரும்பவில்லை!

– ஏப்ரில் 2015

Print Friendly, PDF & Email

3 thoughts on “திருவிழாவில் தொலைந்தவள்

  1. ஒரு இனிமையான சிறுகதை .திரு எம் ஜி கண்ணியப்பனின் சிறந்த படைப்பு .வாழ்த்துக்கள் .சிறுகதைககுக்கு காட்சியும் கணமும் சேர்த்தால் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் .இன்றைய நவீன காலத்தில் இவை சாத்தியமே …..

  2. நான் சிறு கதைகளுடைய பக்கங்களை புரட்டிக்கொண்டே வரும்பொழுது பார்த்த இந்த தலைப்பு எனக்குள்ள ஒரு அதிர்வை கொடுத்தது அதே சமயம் படித்துமுடிக்கும்பொழுது கண்களில் ஈரமும் மனதில் பாரமும் தங்கி நின்றது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு இம்மாதிரி ஒரு அனுபவம், கதை ஆசிரியருக்கு நன்றி.

    நன்றிகளுடன் ப.விஜயகுமார்

  3. அன்புடையீர்,
    வணக்கம். திருவிழாவில் தொலைந்தவள் சிறுகதை அருமை. யதார்த்தமான நடை. திருவிழாவில் தொலைந்த சௌமியா , படிக்கும் வாசகர்கள் நெஞ்சங்களிலிருந்து தொலைந்து இருக்க மாட்டாள். கதாசிரியருக்குப் பாராட்டுக்கள். சிறுகதைகள் இணையத்தளம் ஆசிரியருக்கு நன்றி.

    பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *