கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 13,284 
 

“ஏம்மா திலகா, புது கணக்கு ஆசிரியர் வசந்தகுமார் எப்படி? நல்லா பாடம் சொல்லிக் கொடுக்கிறாரா?”

தலைமையாசிரியர் தன் மகளைக் கேட்டார்.

“ரொம்ப விரட்டல் ஜாஸ்தியா இருக்கு. சரியான சிடுமூஞ்சியா இருக்காரு. சந்தேகம் கேட்கவே என் தோழிகள் எல்லாம் பயப்படுறாங்கப்பா.”

தலைமையாசிரியர் சிந்தனையோடு நடந்தார்.

சின்ன வயசு, நல்ல திறமையிருக்கு. ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி சிடுமூஞ்சின்னு சொல்ற அளவுக்கு நடப்பது ஏன்? கூப்பிட்டுச் சொல்லணும்.

அன்று மாலையே வசந்தகுமாரைக் கூப்பிட்டனுப்பினார்.

கொஞ்சமும் பதட்டமில்லாமல் வசந்தகுமார் தலைமையாசிரியர் ரூமை நோக்கி நடந்தான்.

“குட் ஈவினிங் சார்! கூப்பிட்டீங்களாமே!”

பணிவோடு உள்ளே நுழைந்தான்.

“உட்காருங்க, உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.”

“என்ன விஷயம் சார்?” கேள்விக்குறியானான் வசந்தகுமார்.

“நீங்க ரொம்ப நல்லா சொல்லிக் கொடுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன் ரொம்ப சந்தோஷம் ஆனால் மாணவிங்ககிட்ட ரொம்பக் கடுமையா இருக்கீங்க போலிருக்கு இதைப்போல தொடர்ந்து நடந்தீங்கன்னா உங்களுக்குச் சிடுமூஞ்சிங்கிற பேர்தான் நிலைக்கும் உங்க குணத்தை நீங்க மாத்திக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்.”

வசந்தகுமார் சிரித்தான்.

“புரியுது சார் ஆனால் எனக்கோ சின்ன வயசு இங்க உள்ள மாணவிகளுக்கும் டீன்ஏஜ் பருவம் நான் அவங்ககிட்ட ஆசிரியர் என்கிற முறையிலே அன்பா இருந்தேன்னா, அவங்க அதை தப்பா எடுத்துப்பாங்க அவங்க. நீங்க கூட என்னை தப்பா நினைக்கக் கூடும். இந்த வயசிலே பெண்களோடு பழகறதும், நெருப்போடு பழகறதும் ஒண்ணுதான்னு உங்களுக்குத் தெரியாதா? நடத்தை மோசமானவன்னு பெயர் எடுக்கிறதை விடச் சிடுமூஞ்சிங்கிற பெயர் எவ்வளவோ மேலில்லையா சார்.”

தலைமையாசிரியர் ஆச்சரியமாய் வசந்த குமாரைப் பார்த்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *