சிவக்கொழுந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 1,866 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடைசிப் பேருந்தும் வந்து போய்விட்டது. இனி எப்போதாவது ஒரு லாரி வரும். அந்த டிரைவருக்கு இஷ்டமிருந்தால் லாரியை அங்கே நிறுத்துவார். நீண்ட தூரம் சரக்கை ஏற்றிப் போகும் லாரிக்காரர்கள் அங்கே நிறுத்திச் சற்று இளைப்பாறுவார்கள். ஒரு டீயை டிரைவரும் கிளீனரும் சுவைத்துச் சிறிது நேரம் ருசிபார்த்து விட்டு, மேலே உள்ள துண்டால் வாயைத் துடைத்து, பீடியையோ , சிகரெட்டையோ பற்ற வைத்துக் கொண்டு கிளீனருடனும், டீக்கடைக்காரருடனும் ஊர் வம்பு பேசுவார்கள். அந்த டீக்கடைக்கு அடிக்கடி வருபவர்கள், சற்று உள்ளே எட்டிப் பார்க்காமலிருக்க மாட்டார்கள்.

“பாப்பா, தூங்கப் போயிடுச்சா?” என்று உள்ளே கண்களை மேய விட்டுக் கேட்பார்கள். “பாப்பா” என்று செல்லமான வார்த்தையால் அழைத்தது பூங்காவனத்தைத்தான்.

தாண்டவராயன் கையைத் துடைத்துக் கொண்டு மிகவும் பழகியவர் போலப் பேசத் தொடங்குவான். வேலை முடிஞ்சுப் போச்சு . தூங்கப் போயிட்டா. இன்னும் கொஞ்ச நேரம் தான். சற்றுக் கண் இமையை மூடிட்டு எழுந்தாதான், காலை இட்லிக்கு மாவு அரைக்கணும். பஜ்ஜிக்கு வாழைக்காய். உருளைக்கிழங்கு நறுக்கி வைக்கணும். பாய்லரைப் பத்த வைக்கணும், இவ்வளவும் நாலு மணிக்குள் நடந்தாகணும். விடிகாலை நாலு மணியிலேர்ந்து பஸ் வரத் தொடங்கிவிடும். கண்டக்டர் மனசுவெச்சா இந்த டீக்கடையில் நிறுத்துவார். இப்போ மணி என்ன பன்னண்டா? – இனி பஸ் வராது. நாள் பூராவும் உழைச்ச களைப்பு, படுக்கப் போயிட்டா. குடிக்க கை கழுவத் தண்ணி கொண்டு வருவது பெரும்பாடு . என்ஜின் போட்டுட்டாங்கன்னா – போயி நாலு தபா பானையிலே அவ கொண்டு வந்தா ஒருநாளைக்குப் போதும். சுனைநீர் மாதிரித் தண்ணி” என்று தாண்டவராயன் மூச்சு விடாமல் பேசுவான். வந்தவங்க கேட்டாலும் கேட்காவிட்டாலும் அப்படியே பழைய கதை எல்லாம் சொல்லத் தொடங்கி விடுவான்.

உள்ளே இருந்து பூங்காவனம் குரல் கொடுப்பா – “தே, இங்கே வாயேன்”

தாண்டவராயனுக்கு ஒரு கால் சற்று ஏற்றத்தாழ்வு. ஆனால் அங்கத்தில் குறையிருந்தாலும் அழகில் குறையில்லாதவன்.

“இது என்ன பழக்கம். ஒண்ணு விடாம கதையை விலாவாரியாக வரவங்க போறவங்களிடம் பாடம் படிக்கணுமா? எவ்வளவு தடவைச் சொல்றது? புரிஞ்சுக்கமாட்டே” என்று சிணுங்குவாள் பூங்காவனம்.

“இல்லே புள்ளே – பார்ட்டி ஒத்துப் போனா உள்ளே தங்கிட்டுப் போன்னு கேட்கலாம்னுதான்” என்று அசடு வழிவான் தாண்டவராயன். பூங்காவனம் முகத்தில் கடுமை தோன்றும்.

பூங்காவனத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூத்துக் கொட்டகையில் தான் சந்தித்தான்.

‘கூத்துக் கொட்டகை” ஒருமுறை அவன் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

அருப்புக் கோட்டை பேருந்து நிலையத்தில் உச்சி வெயில் வேளையில் அவளைச் சந்தித்தான் தாண்டவராயன். சற்றுச் சாய்த்துச் சாய்த்து அவன் நடந்து வருவதையே பூங்காவனம் பார்த்துக் கொண்டு டீக்கடை நிழலில் நின்று கொண்டிருந்தாள். அவனை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கும் நினைவு.

அந்தப் பேருந்து நிலையத்தில் மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க இடம் கிடையாது. தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பூங்காவனத்தைச் சிறிது நேரம் பார்த்தத் தாண்டவராயன் அவளுடன் ஏதாவது பேச வேண்டும் என்ற முனைப்பில், ”ரொம்ப வெயிலாக இல்லே? ஒரு டீ சாப்பிடலாமா?” என்றான். அவன் நடையையே பார்த்துக் கொண்டிருந்த அவள் அவன் குரல் கேட்டுத் திடுக்கிட்டாள். நாணம் அவளைச் சூழ்ந்து கொண்டது. குப்பென்று வியர்த்து விட்டது. தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ஒரு நொடியில் பெண்களைக் கவர்ந்து விடும் ராசி தாண்டவராயனுக்கு.

“உங்களை மானாமதுரையில் வெச்சுப் பார்த்தது. கூத்துக் கொட்டாயிலே நான் பார்த்திருக்கிறேன். உங்கள் கால் மட்டும் சரியா இருந்திச்சின்னா, ஹீரோவாப் புகழ் பெற்றிருப்பீங்க. இவ்வளவு வருஷம் கழிச்சுப் பார்க்கிறேன். நீங்க நடந்து வரும்போதே தொலைவிலேயே கண்டுகிட்டேன்” என்று பூங்காவனம் நீண்ட கால சிநேகம் போல் டீயை உறிஞ்சிக் கொண்டே பேசினாள், சுற்றும் முற்றும் ஒருமுறை கண்களைச் சுழலவிட்டபடி..

தாண்டவராயன் மெல்லச் சிரித்தான். “நானும் பார்த்திருக்கேன். தாயி – நீ அல்லி அரசாணி ஸ்பெஷல் நாடகத்திலே வேசம் கட்டிக்கும் போது – அதே கொட்டகையில் நான் வேலை பார்த்திருக்கேன். விடலைங்க ஒன்னைச் சுத்திச் சுத்தி வருவாங்க. எனக்கும், நெருங்க ஆசை.

ஓ! பூங்காவனம் தனக்குள் சிரித்துக் கொண்டாள். பெருமூச்சு விட்டாள். “பொம்பளேங்க மற்றவர் பார்க்கும்படியா இருக்கக்கூடாது என்பார் எங்கப்பா. அவரும் வேசம் கட்டிக்கிறவருதான். என் அம்மாவைச் சேர்த்துக்கிட்டாரு. அப்படியே நானும் போயிடக்கூடாதுன்னு கவலைப்பட்டாரு. நானும் எவ்வளவோ கனவு கண்டேன்” பழைய நினைவுகளை நினைத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள், பூங்காவனம். தாண்டவராயனுக்கு அவளைப் பற்றி மேலும் அறிய ஆவல். அவள் எங்கே போகப் போறா? கேட்டுக்கொண்டால் போகிறது!

“எதுவரைக்கும் டிக்கட்டு..? ” தாண்டவராயன கேட்டான். பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தும் வரவில்லை. சுள்ளென்று வெயில் அடித்தது. உஸ் உஸ்’ என்று சேலைத் தலைப்பால் விசிறிக் காற்றை வரவழைத்தாள்.

‘ஹூம்’ என்று அவள் பெருமூச்சு விட்டாள். “சொல்லலாம்னா சொல்லு” – தாண்டவராயன் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். புகை சூழ்ந்தது.

கையால் புகையை விலக்கினான். பீடியை அப்படியே கீழே எறிந்து விட்டுக் காலால் தேய்த்தான்.

“நீங்க இந்த வழக்கத்தை விட்டுடணும்” என்றாள். தொடர்ந்துச் சிரித்தாள். சிரிக்கும் போது இன்னும் அழகாக இருந்தாள்.

ஒரு பஸ் வந்தது. திருவலஞ்சுழி’ என்று பெயர் எழுதியிருந்தது.

“நான் திருவலஞ்சுழிக்குப் போக வேண்டும் என்று நினைத்தேன்; நினைத்தபடி பஸ்ஸூம் வந்துவிட்டது. கடவுள் ஆசியும் இருக்கிறது வருகிறேன்” என்று கூறியபடி பஸ்ஸை நோக்கி வேகமாக நடை போட்டாள்.

பின்னழகை ரசித்த தாண்டவராயன், “நில்லு புள்ளே – டீ வாங்கிக் கொடுத்ததற்கு நன்றி சொல்லாமப் போறியே” என்றான்.

“பஸ்ஸிலே விவரமா சொல்லறேன்யா” என்று கூறிக் கடைக்கண்ணால் சிரித்தாள். தொடர்ந்து வருவதற்குப் பச்சைக்கொடி.

பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். ஜன்னல் ஓரமாக அவள் உட்கார்ந்தாள். சற்றுத் தள்ளி அடுத்த இருக்கையில் உட்காரப் போனான், தாண்டவராயன்.

“ஏன்யா – எவனாவது வந்து இங்கே உக்காருவதற்குப் பதில் நீ உட்காரதுல எனக்குச் சம்மதம்தான்” என்றாள் பூங்காவனம். சிரித்தாள். அந்தச் சிரிப்பு தான் அவனை இழுத்தது.

பஸ்ஸின் குலுக்கலில் அவர்கள் இன்னும் நெருங்கினார்கள். தோள் உராய்ந்தது ஓரிடத்தில் ரொம்பவும் குலுக்கல்.

“கண்மாய் மதகு உடைஞ்சுப் பாலம் ரிப்பேர். அதனாலே வேறு சாலை போட்டிருக்காங்க” என்றான் தாண்டவராயன்.

அடிக்கடி இந்தப் பாதையிலே போய் வருவீங்களா? பூங்காவனம் கேட்டாள்.

‘ஆமாம். திருவலஞ்சுழியில் சாப்பாட்டுக் கடை ஒண்ணு நடத்தறேன். கட்டுப்படியாகலே, மூடிவிடப் போறேன். அடிக்கடி, மளிகை , காய், கனி வாங்க அருப்புக்கோட்டை வரை வந்து போய்ப் பழக்கம் தாண்டவராயன் சுருக்கமாக தன் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தின் ஆரம்பத்தைச் சொல்லிவிட்டான். சிறிது மௌனத்திற்குப் பிறகு.

“நீ எங்கே போறே?’ அவளைக் கேட்டான்.

“அங்கே ஒரு சாமியார் இருக்கார். அவர் ஆசிரமத்துக்கு…”

“எதுக்கு …?”

“மன அமைதியைத் தேடி?”

“இந்த வயசிலேயே உனக்கு மனச்சங்கடமா?”

“ஆமாம். பொம்பளை ஆச்சே! எந்த வயசிலேயும் வரலாம்.”

“அப்படி என்ன வயசாயிடுச்சு. பாத்தா தெரியலையே?” அவன் சிரித்தான்.

“உங்க வயசை விட நாலு வயசு குறைச்சல்.”

“எனக்கு அறுபத்தாறு !” குறும்பாகப் பார்த்தான்.

இருவரும் சிரித்தனர்.

“இரண்டு டிக்கெட் திருவலஞ்சுழிக்கு பூங்காவனம் ரவிக்கைக்குள்ளிருந்து பர்சை எடுத்து ரூபாயைக் கொடுத்தாள்.

“நான் சீட்டு எடுக்கிறேன்”

“நான் எடுக்கிறேன்”.

கண்டக்டர் சலித்துக் கொண்டார். “துட்டு இரண்டு பேரும் தாங்க. வசதியுள்ள குடும்பம் போலிருக்கு. புருஷன் செலவு செய்ய அம்மணி பாக்கமாட்டாது போலிருக்கு…” என்றார் கண்டக்டர். சிரித்துக்கொண்டே மீதி காசைக் கொடுத்தான். அவள் உள்ளங்கையில் அழுத்தியவாறு

அவனைச் சுடுபவன் போல் முறைத்தாள் பூங்காவனம்.

“பாத்தியா – அவரு ஆம்புளைக் குணத்தைக் காட்டிட்டாரு.”

“இங்கேயே வெட்டிடட்டுமா?” என எழ முயன்றான் தாண்டவராயன்.

“வேண்டாம், இப்படித்தான் அவருக்கும். முன்கோபம் என்கிட்டே வாலாட்டின ஒருத்தரை இரண்டா வெட்டிப்புட்டாரு.”

“அப்புறம்?”

“ஏழு வருடம். நான் சாட்சி சொன்னதாலே, தண்டனை குறைஞ்சது. இல்லாட்டி ஆயுள் தண்டனை கிடைச்சிருக்கும்.”

“ஏழு வருடம் ஆயிடிச்சா?”

“வெளியே வந்துட்டாரு. நன்னடத்தைக்காக தண்டனையைக் குறைச்சிட்டாங்க. வந்த பிறகு ஒழுங்கா இல்ல. தண்ணிப்பழக்கம். ஜெயில்லே கத்துக்கிட்டார்னு நெனைக்கிறேன். சொல்லிப் பார்த்தேன். கேக்கலே. என்னைக் கூத்துலே வேஷம் போடக் கூடாதுன்னுட்டாரு. சாப்பாட்டுக் கடை வெச்சாரு. என் நகை எல்லாம் போச்சு. குடிப்பழக்கம் தலைக்கு மேலே சொன்னா கேக்கலே. ரொம்ப கஷ்டம் நான் விட்டுட்டு வந்துட்டேன்.”

“ஐயோ …”

“ஏன்யா… சேர்த்துகிட்டவர்தான். இருந்தாலும் ஒழுங்கா இருக்கணுமில்லே? தாலியைக் கழற்றி வீசிட்டு வந்துட்டேன்”

அப்போது தான் அவள் கழுத்தைப் பார்த்தான் தாண்டவராயன்.

“என்னா பாக்கறே?”

“உன் துணிச்சலை. நானும் கடையை மூடிட்டு வரப்போறேன்.”

“என்ன பண்றதா உத்தேசம்?”

“நானும் சாமியார் கிட்ட போயி ஜோசியம் கேக்கறேன்.”

“இவரு ஜோசியம் சொல்ற சாமியார் இல்ல. ஆசிரமம் வச்சிருக்காரு. அங்கேயே மனநிம்மதிக்குத் தங்கிடலாம். ஒரு ஆயிரம் ரூபா வச்சிருக்கேன். அவருகிட்ட கொடுத்து வச்சிடலாம் முடிஞ்ச வேலை செய்யலாம். தினமும் சோறு கிடைக்கும். பயமில்லை அமைதியும் ஏற்படும்.

திருவலஞ்சுழி கடைத்தெருவில் பஸ் நின்றவுடன் இருவரும் இறங்கினர்.

“நான் ஆசிரமத்துக்குப் போயிட்டு வரேன்.”

“வருவியா?”

“அப்படித்தான் நெனைக்கிறேன். சாமியார் எப்படிப்பட்டவரோ? உங்கக் கடையை என்ன பண்ணப் போறீங்க?”

“பணம் கொடுக்க வேண்டியவங்களுக்கெல்லாம் கொடுத்துட்டு தலை முழுகிட்டு வந்துருவேன்.”

“இன்னிக்கே முடிஞ்சிடுமா?”

“பாப்பம்… இல்லைன்னா இங்கே தங்கி நாளைக்காவது பொறப்பட்டுடலாம்.”

“சாமியாரிடம் சரியில்லைன்னா நான் உங்க கடைக்கிட்டே வந்துடறேன்” பூங்காவனம் சிரித்தாள்.

தாண்டவராயன் தன் கடைப் பக்கம் நின்று அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆற்றங்கரைக்குப் போகும் பாதையில் சற்றுத் தொலைவு போய் அவளும் திரும்பிப் பார்த்தாள். கையைத் தூக்கி அசைப்பது போல் இருந்தது. நாடக நடிகை இல்லையா? பழக்கம் விட்டுடுமா?

மாலை வந்தது. தெருவிளக்குகள் ஏற்றப்பட்டன. அநேகமாக எல்லா வேலையும் முடிந்து விட்டன. சில பாத்திரங்களை விற்க வேண்டியது தான் பாக்கி.

எட்டு மணிக்கு மேல் பூங்காவனம் அங்கே வந்து சேர்ந்தாள். “அங்கே ஒண்ணும் சரியா வராது போலிருக்கு. சாமியாரும் எல்லா ஆண்பிள்ளைகள் போலத்தான் தோணுது. அங்கே நிறையப் பெண்கள். ஒரு பெண் மெல்லிய குரலில் என்னிடம் பேசினாள். அவள் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டேன். சாமியார் பயங்கரமாயிருப்பான் போல் தோன்றுகிறது. நான் உடனே திரும்பிப் போக முடிவு செய்தேன். வந்துட்டேன். உங்க வேலை எல்லாம் முடிச்சுட்டிங்களா?”

அநேகமாக முடிஞ்சுடுச்சு. இந்தப் பாத்திரங்களை விக்கணும். சோறு வடிக்கும் பானை, அலுமினியப் பாத்திரங்கள், ஒரு பாய்லர், கரண்டிகள்….

“எல்லம் எவ்வளவுக்குப் போகும்?”

“இரண்டாயிரம் போகும். ஆனா, முந்நூறுக்குக் கேக்கறாங்க. அடி மாட்டு விலையா…”

“இந்தா, பிடிங்க ரூபா ஆயிரம். எல்லாவற்றையும் வண்டி புடிச்சு ஏத்துங்க.”

“எங்கே ? எல்லாவற்றையும் விற்றுட்டு குன்னக்குடி முருகன் பேறிலே சாலையிலே ஒரு டீக்கடை போடலாமா?”

“வேணாம். இராமேசுவரம் போற சாலையிலே பல மைல் தூரத்துக்கு டீக்கடை இல்லே. இப்ப வர எல்லா பஸ்களும் அந்தச் சாலையிலே தான் போறது. வியாபாரம் சீக்கிரம் சூடு பிடிக்கும்.”

பூங்காவனம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் சொல்படி தங்கச்சி மடம் போகும் சாலையிலே ஒரு தகர ஷெட் கிடைச்சது. கீழே மண் சுவர். நாலஞ்சு பெஞ்சுகள். பாய்லர் வைக்க ஒரு மேடை. வெளியே வெயில், மழை தடுக்க தட்டியால் ஆன சார்பு தட்டி, கல்லா மேஜை. பிறகு சிறு தடுப்பு. அதற்குப் பின்னால் சமையல் அறை. அதையும் தடுத்துச் சின்ன படுக்கை அறை. கயிற்றுக் கட்டில் இரண்டு மூன்று முறை தான் அது பயன்பட்டிருக்கும்.

காலை நாலு மணிக்கே வியாபாரம் ஆரம்பமாகிவிடும். இரவு பத்துப் பதினொன்று வரை நடக்கும். பேருந்துக்காரர்கள் சிலர் அங்கே நிறுத்தி – டீ, மசால் வடை, பஜ்ஜி சாப்பிடுவாங்க. இட்லியும், நல்ல சட்னியும் கேட்டுப் போட்டுச் சாப்பிடுவார்கள். பயணிகள் சிலரும் சாப்பிடுவார்கள். பகல் உணவு சுமாராயிருக்கும். வியாபாரத்தைக் கவனிக்கும் பூங்காவனத்தின் கரத்தால் டீ சாப்பிடவே சில லாரி டிரைவர்கள் வருவார்கள்.

“இனி நான் டீ கொணார்ந்துக் கொடுக்க மாட்டேன். நீயே கொடு. நான் டீ அடிக்கிறேன். அடுப்படி பாக்கறேன்.

“ஏன் பூங்காவனம் ?”

“டீ சாப்பிட வரானுங்களா, இல்லை என்னைக் கைபிடிச்சு இழுக்க வந்தாங்களா?”

“அதையெல்லாம் பெரிசா நினைக்காத புள்ளே ! ஒருத்தன் இரண்டு பேரு இருப்பான். மகாலட்சுமி மாதிரியிருக்கும் உன் முகத்தைப் பாத்துக்கிட்டே ஒரு டீ சாப்பிடுவாங்க. பிறகு ஒரு பஜ்ஜி. வடை சாப்பிடுவாங்க. பிறகு இன்னொரு டீ சாப்பிடுவாங்க. பகல் தயிர் சோறு, சாம்பார் பொட்டலம் வாங்க வரவங்க ஏன் வராங்க தெரியுமா?”

“சீ… என்னை வைச்சு வியாபாரம் பண்ணனும்னு நெனக்கிறயா? உன்னோட சேர்ந்ததே தப்பு. நீயும், நாய் ஜன்மம்னு முதல் நாளே ராவு தெரிஞ்சுக்கிட்டேன். பாயிலே – படுக்க விட்டியா?” சீறினாள்.

“ஏ. நாக்கு நீளுது – உம்” என்று அவளை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு அறைக்குப் போனான்.

“இது என்ன ஜென்மம்.. உம்?”

அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள், “சிரி, புள்ளே – உன்னைக் கேக்கணும் கேக்கணும்னு ரொம்ப ராவு நினைக்கிறேன். உன் பேரு பூங்காவனமா , சிவக்கொழுந்தா?”

“ஏன் கேக்கறே? இத்தனை நாளைக்குப் பிறகு என்ன சந்தேகம்.”

“சிவக்கொழுந்து பேரு நல்லா இருக்கு. உன் கையிலே பச்சை குத்தியிருக்கே ? அந்தப் பேரும் நல்லா இருக்கு.”

பூங்காவனம் தன் இடக்கையைப் பார்த்தாள். பூசிய மஞ்சள் மேனியில் பச்சை நிற “சிவக்கொழுந்து” – எழுத்து கோணல் மாணலாகக் குத்தப்பட்டிருந்தது. அவை பழைய நினைவுகளைக் கண்முன் கொண்டு வந்தன. அவள் ஒன்றும் பேசவில்லை.

“சிவக்கொழுந்து – அதுவும் என் பெயர் தான்.”

“இரண்டு பேர்களா ? உனக்கு நூறு பெயர் வைக்கலாம்!” – தாண்டவராயன் சிரித்தான். அவளும் கன்னங்குழியச் சிரித்தாள்.

“இனி பேரைப் பற்றிக் கேட்காதீங்க. வலக்கையில் தாண்டவன் என்று எழுதிக்கிடவா?”

தாண்டவராயன் செல்லமாக அவளை அணைத்துக் கொண்டான்.

“சீ. விடுங்க…”

இரவு பத்து, பதினோரு மணிவரை பெட்ரோமாக்ஸ் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். சில சமயம் மங்கும். காற்றடித்தவுடன் குப்பென்று பிரகாசமாகும். அதுவரை பூங்காவனம் விழித்திருப்பாள்.

பிறகு அப்படியே உள்ளே பெஞ்சியில் படுத்துக் கொள்வாள். உறங்கிப் போவாள். நடுவே ஏதோ பூச்சி ஊர்வது போலிருக்கும்.

சீன்னு உதறுவாள். பிறகு சிறிது சிணுங்குவாள். சில நிமிடங்களில் மறுபக்கம் திரும்பிப் படுத்துவிடுவாள்.

அன்று?

“கடைசி பஸ் வந்து போயிடுச்சு . வேறுலாரியும் வராது போலிருக்கு. கடையைக் கட்டு சீக்கிரமா. பெட்ரோமாக்ஸை அணைத்து, லாந்தர் லைட்டைக் கொளுத்து, எண்ணெயாவது மிச்சமாகும்” என்றான் தாண்டவராயன்.

அவளுக்கும் அன்று அசதியாக இருந்தது. மனசே சரியில்லை . இடக்கையில் சிவக்கொழுந்து என்று அவர் பெயரைப் பச்சைக் குத்திக் கொண்டது தவறோ என்று எண்ணினாள். சிவக்கொழுந்து குடிக்கு அடிமையானவன் என்றாலும், அவனுடைய சில குணங்களை மறக்க முடியாது. தன் அனுமதியின்றித் தன்னை தொடமாட்டான். இந்த தாண்டவராயன்? நேரம் காலம் கிடையாது. கண்டிப்பும், சீறுதலும் இல்லாதிருந்தால் அப்படியே விழுங்கியிருப்பான்.

‘சிவக்கொழுந்து’ அந்தப் பெயரை ஒருமுறை நினைத்துக் கொண்டாள். “அவர் எங்கே அலைகிறாரோ? அவருக்கென்ன? அழைத்தால் நூறுபேர். வேறு யாரையாவது சேர்த்துக் கொண்டு வேஷம் கட்டி ஊர் ஊரா சுற்றுவார். நான் விட்டு வந்தது தவறோ?” இப்படியாக அவன் நினைவுகள் தோன்றி மறைந்தன.

“என்ன – சிவக்கொழுந்து யோசிக்கறே?” – தாண்டவராயன் கேட்டான்.

பூங்காவனம் சீறினாள். “இனி அந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடாதே. பூங்காவனம் பெயர் பிடிக்கலைன்னா என்னை விட்டு விடு” – உண்மையிலே ஏக்கமும், வருத்தமும் கலந்த சீற்றம், தாண்டவராயன் ஒன்றும் பேசவில்லை. அவளே கிளாசுகளைக் கழுவி, பாய்லர் நெருப்பை அணைத்தாள். தாண்டவராயன் முணுமுணுத்தான்.

“இவளைத் தலை முழுகணும்”

நல்ல நேரத்துக்கும், வேகத்துக்கும் நோக்கத்துக்கும் சம்மதிக்காத இவளிடம் அழகு இருந்து என்ன பிரயோஜனம்?”

லாரி ஒன்று அந்த டீக்கடை முன் வந்து நின்றது. லாரி டிரைவர். தன் அருகே இருந்த ஒருவரை மெல்ல கைபிடித்து கீழே இறக்க முயன்றான்.

“கொஞ்சம் ஒரு கை குடுங்கய்யா. இவருக்குக் கடுமையான காய்ச்சல். மாத்திரை போட்டுக் கொண்டு ஒரு டீ சாப்பிட்டால் குளிர்நின்று விடும்” என்று சாலையிலிருந்து குரல் கொடுத்தான் அந்த டிரைவர்.

தாண்டவராயன் லாரியை நோக்கி விரைந்தான். பூங்காவனம் கடை வாசலில் நின்று என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பக்கம் லாரி டிரைவரும், மறுபக்கம் தாண்டவராயனும் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அதற்குள், உள்ளே இருந்த பெஞ்சியைச் சரிப்படுத்தியிருந்தாள். பெட்ரோமாக்ஸ் மங்கி மங்கி ஒளி வீசிக் கொண்டிருந்தது.

“உடனே சூடா மூணு டீ போடு. சாமி படத்துக்குக் கீழே காய்ச்சல் மாத்திரை இருக்கு. கொண்டா” என்று தாண்டவராயன் பரபரப்புடன் பூங்காவனத்தைப் பார்த்துச் சொன்னான்.

போர்வையால் நன்றாகத் தலை முதல் போர்த்திக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடத்தி அழைத்து வந்தவனை மெல்ல பெஞ் சியில் படுக்க வைத்தார் லாரி டிரைவர்.

ஆவி பறக்கும் டீ ஒரு கிளாசில் எடுத்துக் கொண்டு வந்த பூங்காவனம் மற்றொரு கண்ணாடி டம்பளரில் சூடான வெந்நீர் எடுத்து வந்தாள்.

“முதலில் மாத்திரையைப் போட்டுக் கொண்டு சுடு தண்ணி ஒருவாய் குடிக்கட்டும். பிறகு டீ சாப்பிடட்டும். அதற்குள் நீங்கள் டீ சாப்பிடுங்க” என்று லாரி டிரைவரிடம் மிகவும் பழகியவள் போல் நீட்டினாள் பூங்காவனம்.

அந்த இக்கட்டான நிலையிலும் பூங்காவனத்தின் வடிவழகை தலை முதல் கால் வரை விழுங்கி விடுபவன் போல் பார்த்த டிரைவர், அவள் கையை உரசுவது போல் டீ டம்ளரை வாங்கிக் கொண்டான். நடுத்தர வயது, லுங்கி மேலே பச்சை நிற அரைக்கை ஷர்ட், தலையில் குளிருக்காக கட்டப்பட்டிருந்த முண்டாசை இன்னும் அவிழ்க்கவில்லை . சிகரெட் பிடித்ததால் சற்றுக் கறுத்த உதடுகள். ஒரு வாரமாக வழிக்கப்படாத தாடி மீசை. வயதைப் புலப்படுத்தும் ஓரிரு வெள்ளி நிற ரோமங்கள்.

பூங்காவனம் கடுமையாகப் பார்த்து விட அங்கிருந்து அகன்றான். பிறகு மற்றொரு டீ டம்ளரை தாண்டவராயனிடம் நீட்டினாள்.

“எனக்கு எதுக்கு? சோறு சாப்பிட்டுத் தலையைச் சாய்க்க வேண்டியதுதான்” என்று கூறியவாறு டம்ளரை வாங்கிக் கொண்டவன். “நீ பாதி குடி” என்றான்.

“நீங்க குடித்துவிட்டுக் கொடுங்க….” பூங்காவனம். தாண்டவராயன் ஒரு மடக்கு குடித்துவிட்டு மீதி டீயை அவளிடம் நீட்டினான்.

தம்பதியரின் அந்நியோன்யத்தைக் கண்ட வியந்த லாரி டிரைவர். பெஞ்சில் சாய்ந்திருந்த காய்ச்சல் கண்டு கிளீனரைப் பார்த்து, “கொஞ்சம் கொஞ்சமாக டீயைக் குடி. வேண்டாம்னு சொல்லக்கூடாது சிவா” என்றான்.

சிவா …..

பூங்காவனம் திரும்பிப் பார்த்தாள்.

“மாத்திரை போட்டுக் கொண்டு ஒரு மணி நேரம் தூங்கினா எல்லாம் சரியாகிவிடும்” – தாண்டவராயன்.

“ஐயோ ஒரு மணி நேரம் ? லாரியில் தக்காளி லோடு’, விடிகாலைக்குள்ளே இராமநாதபுரம் போய்ச் சேராக்காட்டி, பழம் எல்லாம் கிழம்தான். சட்டினி, சாம்பார், ரசம் பண்ணினாலும் தீராது” என்றான்.

“ஏ, புள்ளே. ஒரு கூடை தக்காளி லாரியிலிருந்து வாங்கிக்க” என்றான் தாண்டவராயன்.

“லாரிலேர்ந்து சில்லரையாக கொடுக்கக்கூடாது. உங்களுக்கென்ன தக்காளிதானே வேண்டும்? தளதளன்னு இருக்கு. தக்காளி ஒரு கூடை தரேன்’ என்று கூறி லாரி டிரைவர் பூங்காவனத்தைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான்.

பூங்காவனம் பல்லைக் கடித்துக் கொண்டாள். “ஓசியிலே தக்காளி வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

“‘தாயிக்குக் கோபம் வருது சரி. காசு தாங்கிறேன் வேறு கணக்கிலே சரிகட்டிட்டா போச்சு” என்றான் டிரைவர்.

தாண்டவராயன், பூங்காவனத்தைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.

“ஏய், என்ன அப்படி கோபம் வருது? வாடிக்கைக்காரங்ககிட்ட, சற்று இங்கிதமா நடந்துக்கணும்” என்று மெல்ல கடிந்து கொண்டான்.

“நான் படுக்கப் போறேன். நீங்களே அந்தக் காய்ச்சல்காரரைப் பாத்துக்குங்க….” என்று வெடுக்கென்று சொல்லி உள்ளே புறப்பட்டாள் பூங்காவனம்.

“சிவா கிளீனரா எங்கிட்ட வந்து ஏழு வருடம் ஆகுது. கடுமையான உழைப்பாளி. நல்லாப் பாடுவாரு . ஆளும் வாட்ட சாட்டமா நடிகர் கணக்கா இருக்காரு. அவரைக் கிளீனர் வேலை எப்படி வாங்குவது? என்ன செய்யறது? கூடவே வச்சுக்கிட்டேன். நம்பிக்கையானவங்க எனக்கு வேணும். அவரும் பிழைக்கணுமில்லே?” என்று தாண்டவராயன் கேட்காமலே, டிரைவர் கதையைக் கூறினான்.

“இவரு இங்கேயே படுத்துக்கிட்டு இருக்கட்டும். நான் லாரியிலே தூங்கறேன். தக்காளி லோடு இருக்கு பாத்துக்கணும். காய்ச்சல் குறைஞ்சுருக்கு. இன்னும் அரைமணி கழித்து வரேன்” என்றார்.

“ஏங்க, நீங்க இங்கேயே படுத்துக்குங்க. நான் போய் லாரி லோடைப் பார்த்துக்கிறேன்” என்றான் தாண்டவராயன்.

உள்ளே இருந்து ‘தூ’ என்ற துப்பும் சத்தம் கேட்டது. தொடர்ந்து “இங்கே வாங்க” அதட்டும் குரல்.

“உங்க புத்தியை விடமாட்டீங்களே? இது இரண்டாவது முறை” என்று சீறினாள்.

“முதல் முறை நான் சொன்னதைக் கேட்டே… நூறு ரூபா துட்டைக் கொண்டு வந்தேன்.”

“சீ…. துட்டை வாங்கிட்டு, அந்த ஆளை ஓட ஓட விரட்டினதை மறந்துட்டீங்களா? நானு அதப்போல ஆளு இல்லே. இன்னொரு வாட்டி அப்படி நினைச்சுடாதீங்க. உங்க கெட்ட குணம் புரிஞ்சுடுச்சி. இத இப்பவே நானு இங்கிருந்து பெட்டியோட புறப்பட்டுடறேன்” மெல்லியதாகப் பேசினாலும் கடுமை இருந்தது.

“ஐயோ, டீக்காரரே! நான் போறேன். லாரிக்குப் பின்புறம் ரெட்லைட் போடாம வந்துட்டேன்!” என்று லாரி டிரைவர் சூழ்நிலை உணர்ந்து புறப்பட்டார்.

பூங்காவனம் முகத்தை மூடிக்கொண்டு விம்மினாள். தாண்டவராயன் அவள் முதுகைத் தடவிச் சமாதானப்படுத்த முயன்றான்.

“பாவம் காய்ச்சல்காரர்னு சும்மா இருந்தேன். இல்லாட்டி, அந்த ஆளைக் கூட்டிண்டு நடையைக் கட்டுங்கன்னு கண்டிஷனா சொல்லியிருப்பேன்” என்று சமாதானமாகிவிட்டதுபோல் பேசினாள் பூங்காவனம்.

வெளியே இருந்து காய்ச்சல்காரர் கடுமையான காய்ச்சல் வேகத்தால் முனகுவது கேட்டது. பூங்காவனத்தைச் சமாதானப்படுத்த தன் கரங்களால் அவள் உடல் முழுவதும் வியாபித்து. “புள்ளே, அந்த மனுசன் முனகுகிறான் போல, போய்ப் பாக்கறேன்” என்று கூறிக் குனிந்து அவள் முகத்தை திருப்பித் தன் முகத்துடன் இணைக்க விரும்பியவனைப் பலமாக பூங்காவனம் தள்ளிவிட்டாள்.

காய்ச்சல் அதிகமாகிவிட்டது போல் தோன்றியது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. உடல் கொதித்துக் கொண்டிருந்தது. உதடுகள் என்னென்னவோ முணுமுணுத்தன.

“பூங்காவனம்! இங்கே ஒடி வாயேன்” – தாண்டவராயன் குரல் கொடுத்தான்.

என்ன தோன்றியதோ பூங்காவனம் துள்ளி எழுந்தாள். பெஞ்சியில் படுத்திருந்தவனைப் பார்த்தாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ஐயோ…”என்று வார்த்தை பூங்காவனத்திடமிருந்து வந்தது. அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்தாள்.

“நீங்களா?” என்று அவள் வாய்விட்டுக் கூவ முயன்றாள். ஆனால் அவள் இதயக்குரல் வெளியே எழவில்லை.

“ஓடிப்போய் நாட்டு வைத்தியரைக் கூட்டிட்டு வாங்க சீக்கிரம் இருட்டு வேளை டார்ச் இருக்கா பாருங்க. டார்ச் இருக்கும், பாட்டரி இருக்காது. இங்கே ஒண்ணும் சரியாயில்லை. ஹரிக்கேன் எடுத்துப் போங்க…. டீ குடிக்க வந்தவரை பாம்பு கடிச்சுடுத்துனு சொல்லி கையோட கூட்டியாருங்க…. “

“ஆமாம்… அஞ்சுதலை நாகம் ! ஓடுவீங்களா, என்ன கேள்வி. அப்படிச் சொன்னாதான் வைத்யரு பரபரப்புடன் வருவாரு . பாதி வழி வந்த பிறகு உண்மையைச் சொல்லுங்க…”

காய்ச்சலால் படுத்திருப்பவனைக் குனிந்து பார்த்தாள். பவுர்ணமி நிலவொளியில் நிலாக்கற்றை அவன் முகத்தில் நன்றாக விழுந்திருந்தது.

தாண்டவராயன் ஹரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு ஓடினான்.

ஆ! ஆம்… அவரேதான், கன்னம் ஒட்டி – மீசை தாடி வளர்ந்து கறுத்துப்போய், இன்னும் பத்து வயது கூடியது போன்ற முதுமை தோற்றத்துடன்.

“சி-வ-க்….. கொழுந்து…” அவன் நெற்றியைத் தொட்டவாறு மெல்ல அழைத்தாள். கண் திறந்தான் சிவக்கொழுந்து.

“ஐயோ.. என்ன நேர்ந்தது இவருக்கு ?” உள்ளே ஓடி. பானையிலிருந்து நீரை மெல்லிய துணியில் நனைத்து அவன் நெற்றியில் ஒட்ட வைத்தாள்.

அதே அழகான உதடுகள்….. ”சிவக்கொழுந்து! நான் தவறு செய்துவிட்டேன் . யார் குடிக்கவில்லை? குடிப்பழக்கம் யாருக்கு இல்லை? அதுக்காக உங்களை வெறுத்தேனே. தவறு செய்துவிட்டேன். உங்களை விடத் தாண்டவராயன் மோசமானவரு. மனுஷ மிருகம். வேளை காலம் தெரியாது. ஒவ்வொரு நாளும் சப்பாத்திக்கள்ளி மேலே இருப்பது போல இருக்கிறேன். இந்த நிலையிலா உங்களை நான் சந்திக்க வேண்டும்? காய்ச்சல் வேகம் சீக்கிரம் குறைய வேண்டும். நீங்க சரியாக வேண்டும். உங்களுடன் நான் வந்துவிடுகிறேன். உங்களை நான் காப்பாத்தறேன். லாரியில் அடிமை போல் ஊர் ஊரா அலைய வேண்டாம்” பூங்காவனம் புலம்பினாள்.

சிவக்கொழுந்து கரத்தைத் தூக்க முயன்றான். அவன் இடக் கரத்தில் பூங்காவனம் என்று பச்சை குத்தியிருந்தது அழியவில்லை. அவன் கண்களில் படாமலில்லை. அந்தக் கரங்களை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள்.

அதே அரிக்கன் விளக்கு அசைய தாண்டவராயன் வந்து கொண்டிருந்தான். அவருடன் வருவது டாக்டர் தமிழ்ச்செல்வன். அந்தப் பகுதியில் பெயர் பெற்ற நாட்டு வைத்தியர்.

காய்ச்சலில் படுத்திருக்கும் நோயாளி அருகே பூங்காவனம் உட்கார்ந்திருப்பதையும், அவன் உடம்பைப் பிடித்து விடுவதையும், தாண்டவராயன் பார்த்து விட்டான். முகம் சுளித்தான். அவனுக்குப் பிடிக்கவில்லை எரிச்சலாகவும் இருந்தது.

“ஏங்க? நீங்க போனவுடனே, இவருக்கு இரண்டு முறை விக்கல் வந்தது. உடம்பைத் தூக்கித் தூக்கிப் போட்டது. நன்றாக வியர்த்து விட்டதால் காய்ச்சல் நின்று விட்டது என்று சந்தோஷப்பட்டேன். சூடாக டீ போட்டுக் கொண்டு ஓடி வந்தேன். கண்ணத் திறந்து பார்த்தார். டீ இறங்கவில்லை. வாய்வழியே விழுந்தது. வைத்யரய்யா சீக்கிரம் பாருங்க…” என்று பரபரத்தாள்.

தாண்டவராயன் பூங்காவனத்தைக் கடுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். “இந்தக் காய்ச்சல் தொற்று நோய், நெருங்கித் தைலம் தடவித் தேய்ச்சாயா? உனக்கு வந்தா என்ன செய்வது?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் தாண்டவராயன்.

மீண்டும் கண் திறந்தான் காய்ச்சல்காரன், சிவக்கொழுந்து பிறகு கண்கள் மீண்டும் மூடின. திறக்கவில்லை.

“ஐயா, ஐயா என் தெய்வமே கண் தொறங்க நான்தான் பூங்காவனம்” என்று குரல் கொடுத்தாள். பச்சை குத்தியிருந்த தன் கையை அவன் விழிகளின் முன் காட்டினாள். சிவக்கொழுந்து சற்றே விழிகளைத் திறந்து பார்த்தான்.

“என்ன செய்வேன்! தெய்வங்களே, காப்பாத்துங்களேன். குன்னக்குடி முருகா, மதுரை வீரா, முனியாண்டி வாங்க எல்லாரும் வாங்க….. என் சாமியைக் காப்பாத்துங்க” மனசுக்குள்ளேயே கூவினாள்.

டிரைவரும் விழித்தெழுந்து தூக்கக் கலக்கத்துடன் ஓடோடி வந்தார். வைத்தியர் அரிக்கேன் விளக்கொளியில் குனிந்து பார்த்தார்.

வயிற்றைத் தட்டிப் பார்த்தார்; நாக்கை நீட்டிப் பார்க்க முயன்றார். முடியவில்லை விழிகளைத் திறக்க முயன்றார். முடியவில்லை .

வைத்தியர் கையசைத்தார், “இனி தைலத்துக்கு வேலை இல்லை. மூச்சு நின்று பத்து நிமிஷமாகுது. மேலே ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்க. சொந்தக்காரங்களுக்குச் சொல்லியனுப்புங்க” என்று கூறிவிட்டுக் கை கழுவிக் கொள்ளத் தண்ணீர் கேட்டார்.

பூங்காவனம் எட்டு ஊர் கேட்குமாறு ஓவென அலறினாள்.

“புள்ளே. நீ ஏன் அழுவுறே? தாண்டவராயன் கடுமையாகக் கேட்டான்.

அவள் தொடர்ந்து அழுவதைப் பார்த்து. “ஏதோ நெருங்கிய சொந்தக்காரர் போயிட்ட மாதிரி அழுவறியே…” கோபமாகப் பேசினான்.

“சிவக்கொழுந்து என்ன மாமனா, மச்சானா, தாயாதியா இப்படி அழுவுறாளே?” வெளியே கேட்குமாறு பேசினான். அவன் ஆத்திரம் அவனுக்குத் தான் தெரியும்.

டிரைவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. தாண்டவராயனைத் தனியே அழைத்தான்.

“அண்ணே! நீங்கான் காப்பாத்தணும். இவருக்கு எந்த ஊரு. யாரு சொந்தக்காரர்கள் என்று தெரியாது. “எனக்கு ஒருத்தருமில்லை. எனக்கு யாரும் சொந்தமில்லை. கட்டின மனைவியும் ஓடிப்போயிட்டாள்னு” சொல்லி இருக்கார். ஏழு வருஷமா என்னோடயே இருந்தாரு. நீங்களே காரியத்தையும் செஞ்சிடுங்க. போலீசு , கீலிசுன்னு போயிட வேண்டாம்” என்று கூறி நூறு ரூபாய் நோட்டுக் கத்தையை எடுத்துக் கொடுத்தான்.

காலையில் டீ குடிக்க ஜனங்க வருவதற்கு முன்பே நடத்தணும்.

வைத்தியரிடம் தாண்டவராயன் மூன்று பச்சை நோட்டுகளைத் திணித்து “சாமி! நீங்கதான் எதனாச்சும் ஆட்களை கொடுத்து உதவணும். இந்த அநாதைப் பொணத்தை எரிப்பதா? புதைப்பதா தெரியலே விடியறதுக்குள்ளே நடத்திடுங்க” என்று கெஞ்சினான்.

அந்த துயரமான சூழ்நிலையிலும் பூங்காவனத்தை ரசித்துக் கொண்டிருந்த டிரைவரும் துக்கப்படுவது போல் நடித்தான்.

பூங்காவனம் கலைந்த கூந்தலைச் சரி செய்து கொண்டாள். சரிந்திருந்த மேல் துணியை ஒழுங்குப்படுத்திக் கொண்டாள்.

“அனாதைப் பொணமா? இன்னொரு முறை சொல்லாதீங்க வைத்தியரய்யா இவரை எரிக்கக் கூடாது. பொதைச்சிடுவோம் இந்த ஓட்டலுக்குப் பின் பக்கமே அதற்கு வேண்டியதைச் செய்வோம்” என்றாள். உள்ளே ஓடிச்சென்று அவளும் பச்சை நோட்டுகளைக் கொண்டு வந்து வைத்தியர் தமிழ் செல்வனிடம் நீட்டினாள்.

வருஷம் முழுசா உழைச்சாக்கூட வைத்தியத்தில் இவ்வளவு பணம் வராதே ! சரி என்று தலையை ஆட்டினார்.

“ஏய் பூங்காவனம்! உனக்கு என்ன பித்தா? ஏன் இப்படி பேசறே?” தாண்டவராயன் கத்தினான்.

“இப்ப விவாதம் வேண்டாம். ஆக வேண்டியதைப் பார்ப்போம். ஒரு கை பிடிங்க – இப்படி பள்ளம் வெட்டிடுவோம். துணிகளைக் களைந்து குளிப்பாட்டிப் புதுத்துணி உடுத்துவோம். பெட்டியிலே அவருடைய துணியே இருக்கு” என்று பரபரப்பாக உத்தரவிட்டாள் பூங்காவனம்.

தாண்டவராயன் பூங்காவனத்தையே வெறித்துப் பார்த்தான். டிரைவரும், அவனும் பிரேதத்தைக் கீழே படுக்க வைக்கக் கை கைாடுத்தனர்.

அப்போதுதான் தாண்டவராயன் முன் தன் கரத்தை நீட்டினாள். “சிவக்கொழுந்து” பளிச்சென்று தெரிந்தது. இடக்கரத்தில் அதிலும் என் பெயர்தான் …. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கடைசியாகப் சிவக்கொழுந்துவின் சடலத்தின் மீது விழுந்து அழுதாள்.

தாண்டவராயன் சிலை போல் நின்றான். சிலையால் வேறு என்ன செய்யமுடியும்?

– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *