கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 142 
 
 

பதார்த்த உணர்விற்கு மட்டும் போதும் என்ற அளவில் வெறும் சொற்கோவையாக அமைந்துவிடும் கவிதைகள் கவர்ச்சி யற்றவை ஆகிவிடுகின்றன. பதத்தையும் பதத்தின் பொருளையும் தழுவி நடக்கின்ற அணி அலங்கார வேலைப் பாடுகளும் வேண்டும். பல பொருள் தருவதற்குரிய சில சொற்களைக் கொண்டு இருவர் வினா விடையாக உரையாடிக் கொள்வ தாகவும், ஒருவர் எந்தப் பொருளோடு கூறுகிறாரோ, அது அல்லாத பிறிதோர் பொருளில் கேட்பவர் அதை உணர்ந்து மறுமொழி கூறியதாகவும் சொற்பொருளணி செறிந்த சித்திரமான வினாவுத்தரச் செய்யுள் தனிப்பாடல் திரட்டில் பலவுண்டு பாடல்களைப் பாடி வேண்டிய பதிசில் பெற்று வாழும் ஒரு பாணனும் அவன் மனைவியாகிய பாடினி ஒருத்தியும் தம்முள் உரையாடுவதாக அமைந்துள்ள தனிப்பாடல் ஒன்றை இங்கே காண்போம். சுவைமிக்க பாடல் அது.

‘இராமன்’ என்ற இயற்பெயரையுடைய வள்ளல் ஒருவனிடம் சென்று இசைப்பாடல்களைப் பாடிய அந்தப் பாணனுக்கு இந்த வள்ளல் தக்க பரிசும் கொடுக்கவில்லை. வெறுங்கையுடன் வீடு திரும்பிய பாணனைக் கண்ட பாடினி ‘என்ன பரிசில் பெற்று வந்தீர்கள்?’ என்று கேட்கிறான். ஏமாற்றம் உணர்வை மறைக்க, வேடிக்கையாக இரு பொருள்படும் பரிசுக் குரிய பெயர்களைக் கூறுகிறான் பாணன். அவ்வாறு அவன் கூறும் பரிசுப் பெயர்களுக்கு அவள் வேறொரு பொருள் கண்டு குதர்க்கமாக அவனை இடைமறித்துப் பேசுகின்றாள். இதுதான் பாடலிற் கொடுத்துள்ள கருத்தின் மொத்தமான சுருக்கம்.

பாடினி : என்ன, ஆகாயத்திற்கும் பூமிக்குமாக இராமனுடைய புகழை ஒரேயடியாக அளந்து பாடியதற்குப் பரிசில்களாக எவை எவை பெற்று வந்தீர்கள்?

பாடினியினது இந்த வினா பாணனைத் திடுக்கிடச் செய்தது. தன் ஏமாற்றத்தை அவனறியாமல் ஒரு பெரிய யானையைப் பரிசிலாகக் கொடுத்தான். வாங்கி வந்தேன்’ என்பதை நயமாக யானைக்கு உரிய ஒவ்வொரு சொற்களாலும் கூறக் கருதினான் அவன். சொல்லப் போவதென்னவோ பொய்தான்! அதை வேடிக்கையாகச் சொல்வதிலும் பரிசில் கிடைப்பது போன்ற இன்பம் இருக்கிறதல்லவா? அந்த இன்பத்திற்காகத்தான் பாணன் அவளை இப்படி வம்புக்கு இழுத்தான். அவள் மட்டும் லேசுப்பட்டவளா என்ன?

பாணன்: ஏன்? களபத்தைப் பரிசிலாகப் பெற்று வந்தேன்!

(களபமென்பதற்கு யானை என்றும் கலவைச் சந்தனம் என்றும் இரு பொருள்கள்

பாடினி: (ஒரு குறுநகையுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே ) அப்படியா? நன்றாக உடம்பு குளிரப் பூசிக் கொள்ளுங்கள்! சரிதானே?

பாணன் : (சற்றே சினங் கொண்டவன் போன்ற முக பாவத்துடன்) அதென்ன? அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டாய்? மாதங்கம் பரிசிலாகக் கிடைத்துவிடுவது அவ்வளவு எளிதா என்ன?’

(மாதங்கம் யானையென்றும் பெரிய பொன் என்றும் பொருள்படும்)

பாடினி : (சிரித்துக்கொண்டே அடடே மாதங்கமா? இனி நமக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லுங்கள். அவ்வளவு தங்கமிருந்தால் வேறு என்ன குறை?

பாணன் : (கடுகடுப்பான நோக்குடன்) மறுபடியும் மறுபடியும் வம்பு செய்கிறாயே! நான், கிடைத்த பரிசில் ‘வேழம் என்று சொல்லுகிறேன். நீ என்னவோ புரியாமல் பேசுகிறாயே!
வேழம் = கரும்பு, யானை என்று இரு பொருளுக்கும் உரிய சொல்)

பாடினி : (ஆச்சரியப்பட்டவள் போன்ற குறிப்புடன்) ‘வேழமா நன்றாகக் கடித்து இனிய சாற்றை உறிஞ்சலாமே?’

பாணன் : நாசமாய்ப் போயிற்றுப் போ நான் பகடு’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நீ என்னடா என்றால்…?

பகடு = எருது, யானை என்ற இரு பொருள்களும் தரும்

பாடினி : (இடைமறித்து) பகடா? ஏறில் கட்டி நிலத்தை உழலாமே – நல்லதாய்ப் போயிற்று!

பாணன் : இந்தா! சும்மா ஆளைப் பைத்தியம் ஆக்கிவிடப் பார்க்காதே நான் சொல்லியது கம்பமா தான் நமக்குக் கிடைத்த பரிசில் என்பதையே அன்றி வேறு ஒன்றும் இல்லை!
(கம்பமா = கம்பத்தில் கட்டப்படும் விலங்காகிய யானை, கம்பு என்ற தானியத்தின் மாவு)
பாடினி: கம்பமா! களி கிளறிச் சாப்பிடலாமே? அந்தக் கம்ப மாவு தானே?. சாப்பிடச் சுவையாயிருக்குமே! (சிரிப்பை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு சொல்லுகிறாள்)

பாணன் : (உட்கார்ந்திருந்தவன் எழுந்துகொண்டே சரி! சரி! உனக்குப் பைத்தியந்தான் பிடித்து விட்டது. பெற்று வந்த பரிசில் ‘கைம்மா! அதுதான் ‘யானை..’ ‘ஆமாம் யானை!’
(கைம்மா = துதிக்கையை உடைய விலங்காகிய ‘யானை’) (பாணன் ஒரு ஏமாற்றத்தோடு கூடிய வெடிச்சிரிப்புச் சிரிக்கிறான்)

பாடினி: (கலக்கத்துடன்) அப்படியானால் உங்களுடைய பரிபாஷையில், ஒன்றுமில்லை என்று பொருள் …! பரிசில் பூஜ்யந்தான் என்று சொல்லுங்கள்…! (துயரும் கலக்கமும் தொனிக்கும் குரலில் சொன்னாள். ஒரு பரிசிலும் தராதவர்களை ‘யானை தந்தான்’ என்று சொல்லி வேடிக்கையாகப் பேசுவது அந்தப் பாணனுக்கு வழக்கம்.)

பாணன் : அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளேன்!

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா நீயென்றாள் பாணி
வம்பதாம் கள்பகம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன், யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்பூ சீர் வேழம் என்றேன், தின்னும் என்றாள்
பகடு என்றேன், உழும் என்றாள் பழனந் தன்னைக்
கம்பமா என்றேன், நற்களியாம் என்றாள்
கைம்மா என்றேன், சும்மா கலங்கினாளே.

இம்பர் = இவ்வுலகில் வான் எல்லை = வானளாவ .

கையில் ஒரு பரிசுமில்லாமல் வீடு திரும்பினாலும் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லாத தாம்பத்தியம் அவர்களுடையது. ஒன்றுமில்லை என்பதை யானை’ என்பதற்குரிய பொருள் தரும் பல சொற்களால் சொன்னான் பாணன். அதற்குப் பல பொருள்கள் இருப்பதாகக் கற்பிப்பது போல் மடக்கிப் பேசினாள் பாடினி. முடிவில் அவ்வளவும் வெற்றுப் பேச்சு என்பது தெரிந்தாலும் அதுவரை அனுபவித்த வேடிக்கை இன்பமாவது ஊதியமாகக் கிட்டியதே! இப்படி ஒவ்வொரு ஏமாற்ற நிலையிலும் வேடிக்கையால் அதை மறைத்துச் சிரித்து மகிழும் மனோபாவம் எல்லோருக்குமா வந்துவிடுகிறது?

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *