இன்னும் போகாமல் இருந்துகொண்டு…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,585 
 

பஸ் ஸ்டான்டிலிருந்து வீட்டிற்கு நடக்கும் போது ரவி தாத்தாவையே நினைத்துக் கொண்டு வந்தான். பார்த்து நான்கு மாதமாகிறது. எப்படி இருக்கிறாரோ? ரவி வீட்டில் நுழைந்தபோது வீடு அமைதியாக இருந்தது. வராண்டாவில் தாத்தாவைக் காணவில்லை. கொல்லையில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டும் கேட்டது. கொண்டு வந்த பையை ஓரமாக வைத்துவிட்டு ரவி கொல்லைக்குச் சென்றான். அம்மா அங்கே துணி துவைத்துக் கொண்டிருந்தாள். ரவி வந்ததை அவள் கவனிக்கவேயில்லை. ரவி மெதுவாக “அம்மா’ என்றான். ரவியைப் பார்த்தவுடன் அவள் முகம் மலர்ந்தது. வியர்வையில் முகத்தின் மஞ்சள் மினுமினுத்தது.

இன்னும் போகாமல்நான்கு மாதங்களுக்கு முன் பார்த்தபோது அம்மா நன்றாகத்தான் இருந்தாள். இப்போது கொஞ்சம் இளைத்திருப்பது போல் இருந்தது.

“”நீ வரேன்னு சொன்னதையே மறந்துவிட்டேன் ரவி” என்றாள் சோர்ந்த குரலில். சரி…வா.. முதல்ல காபி குடி. அப்புறமா குளிச்சிட்டு சாப்பிடலாம்” என்றார்.

“”அப்பா எங்க காணோம்…” என்றான் ரவி.

“”அவர் காலையிலேயே ஆபிஸ் போயாச்சு. எது எப்படியிருந்தாலும் அவர் வேலை அவருக்கு..” என்றாள் அலுப்புடன்.

ரவி திடீரென்று ஞாபகம் வந்தவன் போல, “”தாத்தா எங்க… வராண்டாவிலே காணோமே” என்றான்.

“”ம்ம்.. இருக்காரு உங்கத் தாத்தா. யாரும் கடத்திட்டுப் போயிடல. போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றாள் காரமாக.

ரவி அதற்குமேல் பேசாமல் குளிக்கப் போனான். அம்மாவின் பேச்சைக் கேட்ட பிறகு ஏனோ ரவிக்கு, தாத்தாவை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. முன்னெல்லாம் தாத்தா நாளின் பெரும்பொழுது வராண்டாவில்தான் இருப்பார். இப்போது தாத்தாவுக்கென்றே தனியாகக் கட்டப்பட்ட முன்புற அறையின் தாத்தா கட்டிலில் படுத்திருந்தார். அறையின் கிரீல் கதவுப் பூட்டியிருந்தது. குளித்துவிட்டு வந்த ரவி அந்த அறையின் வாசலில் நின்று கம்பி வழியாக அறைக்குள் பார்த்தான். தாத்தா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். எலும்பும் தோலும் மட்டுமே இருந்தது. கன்னங்களின் குழி ஆழமாகியிருந்தது. உடம்பில் அங்கங்கே காயங்கள் தெரிந்தன. அறையில் டெட்டால் நாற்றம் அதிகமாக இருந்தது.

அதற்குமேல் ரவியால் அங்கே நிற்கமுடியவில்லை. மீண்டும் உள்ளே வந்த ரவி “பாவம் தாத்தா… உடம்பெல்லாம் காயம் பார்க்கவே பரிதாபமாயிருக்கு…’ என்றான். அவ்வளவுதான் ஆரம்பித்துவிட்டார் அம்மா.

“”ஆமா.. உனக்கு மட்டும் இல்ல. வர்றவங்க போறவங்க எல்லார்க்கும் அவரைப் பார்த்தாதான் பாவமா இருக்கு. என்னைப் பார்த்து யாருக்குப் பாவமாயிருக்கு. என் கஷ்டம் யாருக்குத் தெரியுது? உங்க தாத்தா என்னல்லாம் செய்யிறார்னு தெயுமா? கொஞ்ச நேரம் சும்மா இருக்காரா?” மூச்சு வாங்கியது. சட்டென்று எழுந்து ரவி, அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“”ப்ளீஸ்மா.. உட்காருங்க… ஏதோ தெரியாம சொல்லிட்டேன்” என்றான்.

அம்மா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு தணிந்த குரலில் ஆரம்பித்தாள்.

“”நான் என்ன செய்யிறது ரவி. நீயே சொல்லு. எனக்கும் ஐம்பது வயசு தாண்டியாச்சு. உங்கப்பா காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி ஆபிஸýக்கு போயிடுறாரு. அவருக்கு தேவையானதை செய்துட்டு அப்புறமா உங்க தாத்தாவைக் கவனிக்கணும். குளிக்க வைச்சு, துணி மாத்தி, சாப்பாடு ஊட்டி…. இதையெல்லாம் செய்து முடிக்கிறதுக்குள்ளே எனக்கு போதும் போதும்ன்னு ஆயிடுது” என்றாள்.

“” யாரையாவது வேலைக்கு வச்சுக்கலாம்ல.. ” என்றான் ரவி.

“”வேலைக்கா, யாரு வரா! நகரத்திலக் கூட இப்ப வேலைக்கு ஆள் கிடைப்பாங்க. கிராமத்தில கிடைக்க மாட்டாங்க. அப்படியே வந்தாலும் கொஞ்ச நாள் வருவாங்க. அப்புறம் நூறு நாள் வேலை, அங்க வேலை, இங்க வேலைன்னு போயிடுவாங்க. காசையும் குடுத்துட்டு வேலையும் நாமதான் செய்யணும்”

ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அம்மாவின் கஷ்டமும் அவள் இளைத்திருப்பதன் காரணமும் புரிந்தது.

ரவிக்கு அம்மாவின் கஷ்டம் புரிந்த அதேவேளையில் தாத்தாவையும் தொல்லையாக நினைக்க முடியவில்லை. அம்மா ரவியை சாப்பிடக் கூப்பிட்டாள். ரவி சாப்பிட அமர்ந்தான். நான்கு மாதங்களுக்குப் பிறகு அம்மாவின் சமையல் சாப்பிடப் போவது மகிழ்ச்சியாக இருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் வரையில் ரவி தன் கிராமத்திலேயே படித்தான். கல்லூரிக்குப் போன பிறகுதான் ஹாஸ்டல் வாழ்க்கை. அதுதான் அம்மா சமையலின் அருமையைப் புரியவைத்தது. இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான். வெளியில் கிரீல் கதவு தடதடவென்று அடிக்கும் ஓசை கேட்டது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ரவி வெளியில் ஓடினான். வெளியில் தாத்தா கிரீல் கதவை தன்னால் முடிந்த மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தார். அங்கேயே சிறுநீரும் மலமும் கழித்திருந்தார்.

ரவி வீட்டுக்குள் ஓடினான். சாவியை எடுத்துக் கொண்டு வந்து கதவைத் திறந்தான். தாத்தாவை வெளியில் அழைத்துக் கொண்டு வந்து விட்டான். தண்ணீர் கொண்டுவந்து அறையைச் சுத்தம் செய்தான். பிறகு தாத்தாவை சுத்தம் செய்து உடையை மாற்றி நாற்காலியில் அமர வைத்தான். அம்மா ரவியைப் பாவமாகப் பார்த்தாள்.

“” வா.. வந்து சாப்பிட்டு தூங்கு. ஊர்லருந்து வந்ததே உனக்கு அலுப்பாயிருக்கும்” என்றாள். ரவிக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை.

“”இல்ல வேண்டாம்மா. கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன். அப்புறமா பார்த்துக்கலாம்” என்றபடியே படுக்கைக்குச் சென்றான்.

ரவிக்கு தூக்கம் வரவில்லை. போன தடவை ரவி வந்திருந்த போதும் தாத்தா மோசமாகத்தான் இருந்தார். அவருக்கு நினைவுகள் சரியில்லாமல் போய் மூன்று, நான்கு வருடங்களாகிவிட்டன. டாக்டரிடம் காட்டியபோது, “”எண்பது வயதாகுதுங்கிறீங்க. இது மறதியால ஏற்படற ஒரு நோய். வயதான சில பேருக்கு இப்படியிருக்கும். இதுக்கு “அல்ûஸமர்’ன்னு பேரு. இதுக்கு மருத்துவம் கிடையாது…” என்று சொல்லிவிட்டார்.

தாத்தாவிற்கு ரொம்ப பழைய விஷயங்கள் மட்டுமே ஞாபகம் இருந்தது. நிகழ்காலம் அவர் நினைவில் இல்லை. தாத்தா தானாக எதையாவது பேசிக்கொண்டும் செய்துகொண்டும் இருப்பார். இப்படித்தான் ஒருமுறை அப்பாவின் நண்பர் வந்திருந்தார். அப்பா வழக்கம் போல் ரவியைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த தாத்தா தன் மனைவியிடம் பேசுவது போல், “”நம்ம பிள்ளைய சொல்றியா, அவனை நம்பி ஒரு பிரயோஜனமுமில்லை. அவன் எங்க உருப்படப் போறான்..” என்றார்.

வந்திருந்த நண்பர் சிரித்துவிட்டார். அப்பாவின் முகம் அசடு வழிந்தது.

“”இன்னும் போகாம இருந்துக்கிட்டு ஏன் என் உயிரை வாங்குறீங்க..” அம்மாவின் குரல் ஓடிக்கொண்டிருந்த ரவியின் சிந்தûனையை நிறுத்தியது. எழுந்து வெளியில் ஓடினான். தாத்தா வாசலில், வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த செடிகளை வேரோடு பிடுங்கிப் போட்டிருந்தார். அம்மா அவர் அருகில் கோபாக நின்றிருந்தாள். ரவியைப் பார்த்ததும், “”ஏன் இவரை வெளியில விட்ட… இதுக்குத்தான் எப்போதுமே கதவை பூட்டியே வச்சுருக்கேன்” கத்தினாள்.

ரவி எதுவும் பேசாமல் தாத்தாவிடம் சென்றான். கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து நாற்காலியில் அமர வைத்தான். தாத்தா எதுவும் புரியாமல் குழந்தை போல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ரவிக்குக் கண் கலங்கியது. முன்னெல்லாம் தாத்தா எப்படியிருப்பார்? அவர் கட்டியிருக்கும் வேட்டி அப்படியொரு வெள்ளையாயிருக்கும். ஓயாமல் எதையாவது செய்து கொண்டிருப்பார். வீட்டுக் கொல்லையிலிருந்த பல மரங்கள் அவர் நட்டவைதான். ஏன் இந்த வீடு கட்டும் போதுகூட அவர் என்னமாய்க் கஷ்டப்பட்டார். சிமெண்ட் மூட்டைகள் அடுக்கப்பட்ட இடத்தில் அவைகளுக்கு நடுவே அந்த சூட்டையும் பொறுத்துக் கொண்டு காவலுக்குப் படுத்துக் கொள்வார். எத்தனையோ முறை அப்பாவுக்கு பண உதவி செய்திருக்கிறார். அதுமட்டுமா, ரவி, எத்தனை குறும்பு செய்தாலும் பொறுத்துக் கொள்வார். பள்ளிக்கூடம் செல்ல அடம்பிடித்து ஓடுபவனைப் பிடிக்க வருபவரை கல்லை எடுத்து அடிப்பான். சிரித்துக் கொண்டே வந்து பிடித்துக் கொள்வார் தாத்தா. தாத்தாவுக்கு பழைய விஷயங்கள் மட்டுமே நினைவில் இருக்க, மற்றவர்களுக்கு பழைய விஷயங்கள் சுத்தமாக நினைவில் இல்லை. தாத்தா இன்று பிரயோஜனமில்லாதவர். எல்லோருக்கும் சுமை. ஏன் அவருக்கே அவர் சுமை. ஏதும் அறியா குழந்தை போல் பரிதாபமாக அவர் பார்த்த பார்வை நினைவில் நின்றது.

அம்மா ஏன் இப்படிக் கத்துகிறாள்? “”ஏன் அவரை வெளியில உட்கார வைச்சிருக்க? உள்ளார வைச்சுப் பூட்ட வேண்டியதுதான… வெளியில விட்டா இன்னும் எதையாவுது செய்து தொலைக்கப்போறாரு…”

ரவி, அம்மாவை தீர்க்கமாகப் பார்த்தான். “”அம்மா, இன்னைக்கு நாம சந்தோஷமா இருக்கோம்னா அதுக்கு தாத்தாதான் காரணம். பழசை மறந்துடாதீங்க. நான் இங்க இருக்குற வரைக்குமாவது அறைக் கதவைப் பூட்டாம விடுங்க. அவர் எதையும் செய்துடாம நான் பார்த்துக்கறேன். என்னோட அறியாமையைப் பொறுத்துக்கிட்டவர் அவர். இந்த முடியாத காலத்துல அவரைப் பொறுத்துக்கறது நம்மோட கடமை இல்லையாம்மா. ப்ளீஸ்மா… அவரை அடைச்சு வைக்க வேணாம்….” என்றான்.

அதற்குள் குரல் உடைந்து கண்கள் கலங்கி கண்ணீர் கன்னங்களைத் தாண்டிக் கொண்டிருந்தது.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *