பாக்கு வெட்டி மறைந்த மாயம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 142 
 
 

    ‘கூழுக்கும் துணிக்கும் பாடிய சில்லறைப் பாடல்களில் கவிதையென்ன, நயமென்ன வேண்டிக்கிடக்கிறது?’ என்று பலர் தனிப்பாடல்களைப்பற்றி மட்டமான எண்ணமுடையவர்களாக இருக்கின்றனர். நயமும் கவித்துவமும் சொந்த வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட காவிய சிருஷ்டிகளில் தான் இருக்க வேண்டு மென்று ஏதாவது நியதி உண்டா என்ன? வாழ்க்கையில் சொந்த அனுபவங்களை ஒட்டி வெளியிடப் பெற்ற எந்த ஒரு தனிப் . பாடலும் அதனதன் நிலையில் நோக்கும்போது நயமும் கவித்துவமும் உடையவைதாம். இந்த உண்மையை மறந்து விடுகின்றனர் மேற்கூறிய எண்ணமுடையோர்.

    வெற்றிலை போடும் பழக்கமுடையவர் அந்தக் கவிராயர். சதா வெற்றிலைச் செல்லமும் கையுமாக இருக்கும் அவருக்கு அது ஒரு பொழுதுபோக்குக் கலையைப் போல. உருண்டை உருண்டையாக இருக்கும் முழுக் கொட்டைப் பாக்குகளைப் பாக்கு வெட்டியால் வெட்டிச் சீவல்’ செய்து போட்டுக் கொள்வதில் அவருக்கு ஒரு தனி இன்பம். நறுக் நறுக்’ கென்று கொட்டைப் பாக்கின் மண்டையைச் சீவித் தூள் செய்யும் அந்தக் கூரிய பாக்கு வெட்டியின் வெட்டுவாயைப் பார்த்துக்கொண்டே அதை ஓர் அலாதி வேலையாகக் கருதிச் செய்வார். அந்தப் பாக்கு வெட்டியில் வெட்டிய சீவலை மென்றுகொண்டே வெற்றி லையை நரம்பு உரித்துக் காம்பு கிள்ளிச் சுண்ணாம்பு தடவும் போது கூட அவருக்கு அவ்வளவு சுகமாக இருக்காது. பாக்கு வெட்டியை எடுத்துச் சீவுவதில்தான் கொள்ளை ஆசை. வளர்ப்பானேன்! வெற்றிலை போடுவது அவருக்கு எவ்வளவு அவசியமோ அதைக் காட்டிலும் பன்மடங்கு அவசியத்திற்கும் ஆசைக்கும் உரிய பொருளாக இருந்தது அந்தப் பாக்கு வெட்டி!

    உலக இன்பங்களை வெறுத்த ஞானிகள் பொன்னையும் பொருளையும் மண்ணையும் பெண்ணையும்தான் துறப்பதற்குரிய பெரும்பொருள்களாகக் கூறுகிறார்கள். ஆசாபாசங்களில் சிக்கி உழலும் சாதாரண மனிதர்களில் பெரும்பாலோர் இவை களெல்லாம் அல்லாத சில சாதாரணப் பொருள்கள் மீதும் இவைகளின் மேல் உள்ளதைக் காட்டிலும் மிகுதியான பற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்ததுதான் வெற்றிலை போடுவதில் தொடங்கி அதன் சாதனமாக வந்த பாக்கு வெட்டியில் கவிராயருக்கு ஏற்பட்ட இந்த அளவு கடந்த காதல். காரண காரியத் தொடர்பு கற்பிக்க முடியாதது அல்ல. விறகு வெட்டிக்குக் கோடரியும், சமையற்காரிக்கு அரிவாள்மணையும் சாதனங்கள்தாம். ஆனால் அவைகளைப் பற்றுடன் போற்றிப் பேணுவதாகச் சொல்லிவிட முடியாது. பேணுவார்களேயானால் அது பொருளின் அருமையை உணரத்தக்க, ‘அது கிடையாமற் போதல், கைதவறிப் போதல்’ ஆகிய சந்தர்ப்பங்களிலேதான் இருக்கும். இந்த உதாரண விஷயம் காரண காரியத்தொடர் புடையது. ஆனாலும் புலவருக்குப் பாக்கு வெட்டியின் மேலிருந்த காதல் இந்தத் தொடர்பின் குறுக்கமான எல்லையைக் காட்டிலும் பெரியதுதான். ஒருவகைப் பிரமையோடு கூடிய பற்று.

    இந்த நிலையில், அந்தப் பாக்கு வெட்டியை இழந்து விட்டால் கவிராயர் என்ன பாடுபடுகிறார் என்று பார்க்கவிரும்பிய சிலர் அதை ஒரு நாள் அவருக்குத் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துவிட்டனர். கை ஒடிந்து விட்டது போலத் திண்டாடினார் கவிராயர். அன்று முழுவதும் அவருக்கு ஒன்றுமே ஓடவில்லை. காலையிலிருந்து அவருக்குச் சாப்பாடு கூட வேண்டி யிருக்கவில்லை. பாக்கு வெட்டி! பாக்கு வெட்டி!’ என்று பறந்தார். சுவடி முடிச்சிலிருந்து சுண்டைக்காய்ப் பானை வரை வீட்டில் தேடியாகிவிட்டது. அங்கெல்லாம் இருந்தால்தானே அது கிடைக்கும்? இதையெல்லாம் விடப் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால் அன்று முழுவதும் அதுவரை அவர் வெற்றிலையே போடவில்லை. பாக்கு இல்லாத குறை என்று சொல்வதற்கு இல்லை. ஏற்கனவே சீவி வைத்திருந்த சீவல் போதுமான அளவு இருந்தது. இருந்தும் பாக்கு வெட்டி போன வருத்தத்தில் அவருக்கு ஒன்றுமே ஓடவில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் பாடிப் பழகிய நாவல்லவா? பாக்கு வெட்டி போன துயரம் ஒரு பாட்டாக உருப்பெற்று அநுதாபங்கொள்ளத்தக்க நிலைக்கு வந்து சேர்ந்தது.

    விறகுதறிக்க கறிநறுக்க
    வெண்சோற்று உப்புக்கு அடகு வைக்கப்
    பிறகு பிளவு கிடைத்த
    தென்றால் நாலாறாகப் பிளந்து கொள்ளப்
    பறகு பறகென்றே சொறியப்
    பதமாயிருந்த பாக்கு வெட்டி
    இறகு முளைத்துப் போவதுண்டோ ?
    எடுத்தீராயிற் கொடுப்பீரே.’

    புலவர் பாட்டை முடிக்கவும் பாக்கு வெட்டியுடன் அம்பலவாணன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. “சோதனையில் உமக்குத்தான் கவிரயாரே வெற்றி. ஆனால், எங்களுக்கும் தோல்வி கிடையாது” என்று கூறி, வந்த அம்பலவாணன் தங்கள் சூழ்ச்சியை விவரித்தான். ‘எப்படியோ உங்களிடமிருந்து பாக்கு வெட்டியைப் பற்றி ஒரு பாடல் சம்பாதித்துவிட்டோமல்லவா? அதுதான் எங்கள் வெற்றி.’ கூறிக்கொண்டே பாக்குவெட்டியை முன்வைத்துவிட்டு நகர்ந்தான், இந்த அரிய திட்டத்தை நடத்தி முடித்த ‘விடலைப் பயல்’ அம்பலவாணன்.

    – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *