கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 17 
 
 

    காளமேகப் புலவர் ஒரு முறை சிதம்பரம் நடராசப் பெருமானைக் கண்டு வழிபடுவதற்குச் சென்றிருந்தார். சிதம்பர தரிசனத்தின் மகிமையைப் பற்றிப் பலரிடத்துப் பல காலம் கேட்டுக் கேட்டு ஆசையையும் பக்தியையும் வளர்த்துக்கொண்டு அங்கே போவதற்குக் காத்திருந்தவர் அவர்.

    சிதம்பரம் கோவிலுக்கும் தலத்துக்கும் தனியுரிமை படைத்தவர்கள் தில்லை மூவாயிரவர். இறுமாப்பும் தங்கள் படிப்பிலும் பதவிகளிலும் அகந்தையும் கொண்டவர்கள் தில்லை மூவாயிரவர். எல்லோரும் தங்களை மதித்து மரியாதை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவர்கள். ஆனால் அந்த அளவுக்கு அவர்கள் பிறரை மதிக்க மாட்டார்கள். கம்பர் உட்பட அநேகம் புலவர்களோடு தகராறு செய்து பழக்கப்பட்டவர்கள். அவ்வாறிருந்ததனால் தில்லை மூவாயிரவர் என்றால் எல்லோருக்குமே ஒரு விதத்தில் பயம் ஏற்பட்டிருந்தது. காளமேகப் புலவர் சிதம்பர தரிசனத்துக்கு வரப்போகிற செய்தி தில்லை மூவாயிரவருக்கு எட்டியது. அவர்களிடம் இருந்த குறும்புப்படி அவரிடமும் ஏதாவது வம்பு செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    காளமேகப் புலவர் வந்தார். தரிசனம் செய்தார். மான், மழு ஏந்திய கரத்தினனாய்க் கூத்தப் பெருமான் பொன்னம்பலத்தே ஆடும் கோலாகலக் காட்சி அவர் உள்ளத்தை ஈர்த்தது.

    கூத்தப் பெருமானின் கையில் தாவிப் பாய்கிறார்போல் விளங்கித் தோன்றிய மான்குட்டி, மேல் நோக்கி ஓடிப் பறக்கிறாற் போன்று அழகாகக் காட்சி தந்தது. நடராசப் பெருமானுடைய திருமுகத்துக்கு நேரே தன்னுடைய முகத்தையும், முன்னங் கால்களையும் தூக்கிக்கொண்டு தோன்றிற்று மான்குட்டி அக்காட்சியில் உணர்வெல்லாம் பறிகொடுத்து அவர் நின்றபோது தில்லை மூவாயிரவர்கள் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் வந்து சூழ்ந்துகொண்ட விதத்திலிருந்து ஏதோ வம்புக்குத்தான் வந்திருக்கிறார்கள் என்பது காளமேகப் புலவருக்கும் புரிந்துவிட்டது. அவரால் எந்த வம்பையும் சமாளிக்க முடியும். எனவே அவர் அஞ்சாமல் தில்லை மூவாயிரவர்களை நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் சொன்னார்கள்:

    “காளமேகப் புலவரே! உங்களை நாங்கள் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.”

    “கேளுங்கள். நான் எந்தக் கேள்விக்கும் எப்போதும் தயார்.”

    “இப்போது நீங்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் நடராசப் பெருமானின் கரத்தில் உள்ள மான், பெருமானின் திருமுகத்துக்கு நேரே பாய்வது போல் கால்களைப் பாய்ச்சிக் கொண்டு நிற்பதற்குக் காரணம் என்ன?”

    மகா ஞானிகளாகிய தில்லை மூவாயிரவர் தங்களுக்குக் காரணம் தெரியாத்தனால் இதைக் கேட்கவில்லை. தன்னிடம் ஏதாவது குறும்பு செய்ய வேண்டுமென்பதற்காகவே கேட்கிறார்கள் என்பது காளமேகத்துக்குத் தெரிந்துவிட்டது. குறும்பைக் குறும்பாலேதான் வெல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு பதில் கூறலானார்.

    “கூத்தப் பெருமானுடைய சடையில் மானுக்கு மிகவும் பிரியமான அறுகம்புல் ஆரத்தைப் பக்தர்கள் சாத்தியிருக் கிறார்கள். குடிப்பதற்கு இனிய கங்கையின் தெள்ளிய நீர் பாய்கிறது. அதனால்தான் மான் அங்கே பாய்வது போல் தோற்றுகிறது.”

    காளமேகப் புலவர் ஒரு வெண்பாவாகவே விடையைக் கூறினார்.

    “பொன்னஞ் சடை அறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும்
    தன்நெஞ்(சு) உவகையுறத் தாவுமே – அன்னங்கள்
    செய்யக்கமலத் துற்றுலவும் தில்லை நடராசன்
    கைக்கமலத் துற்றமான் கன்று”

    இப்படிக் குறும்பாக உடன் பதில் வரும் என்று தில்லை மூவாயிரவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் அத்தனை பேரும் அப்போது அந்த ஒரு புலவருக்கு முன்னால் தலைகுனியும்படி நேர்ந்துவிட்டது.

    சந்தர்ப்ப ஞானம் அதிகம் உள்ளவர்களால் எப்போதும் எதையும் சமாளித்து மறுமொழி கூறுவதற்கு முடியும். காளமேகப் புலவர் சந்தர்ப்ப ஞானம் அதிகமாக உள்ளவர். மிக விரைவாகக் கவி பாட வல்லவர். யாருக்கும் எதற்கும் எங்கும் அஞ்சாத இயல்புள்ளவர். அத்தகையவர் தில்லை மூவாயிரவர்களைத் திகைக்க வைத்ததில் வியப்பில்லை. மான்குட்டி அறுகம்புல்லுக் காகத் தாவுகிறது என்று கற்பனை செய்ததுதான் அற்புதம்.

    – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *