கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 8,950 
 

கோவிலுக்கு போகலாம் என்று முடிவு செய்ததே தாமதமாகத்தான் என்பதால், புறப்பட்டு கோவிலுக்கு வந்து சேர இன்னும் தாமதமானது. மற்ற இடங்களுக்கு புறப்படுவது போலில்லை கோவிலுக்கு புறப்படுவது என்பது. வெள்ளிக்கிழமை வழக்கத்திற்கு அதிகமான கூட்டம் இருக்கும் என்றாலும், சுந்தரியின் வற்புறுத்தலின் பேரில் மறுக்க முடியாது கிளம்ப வேண்டியதாயிற்று.thari

வரிசை வளைந்து, நெளிந்து வெளிவீதி வரைக்கும் இருந்ததை பார்க்கும் போது, எப்படியும் தரிசனத்திற்கு இரண்டு மணி நேரமாவது பிடிக்கும் என்று பட்டது. போதாததற்கு சுற்றுலா வந்தவர்கள் வேறு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவசரமாக வந்து போவதை விட நீண்ட வரிசையில், நின்று வேடிக்கை பார்க்கிற போது நிறைய சுவாரஸ்யங்கள் கண்ணுக்கு தென்படுவதுண்டு. ஊஞ்சல் சேவைக்கான ஏற்பாடுகளில் சிப்பந்திகள் பரபரப்பாக இருந்தார்கள். ஊஞ்சல் சேவை நடக்கும் கண்ணாடி அறை, கலர் விளக்குகளின் பளிச்சிடலில் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருந்தது. ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதை பார்க்கிற போது, ஊஞ்சல் சேவைக்கு இன்னும் நேரமிருப்பதாகப் பட்டது. தரிசனம் முடித்துத் திரும்புகையில் பார்க்க வாய்ப்பிருக்கலாம்.

தெப்பக்குளத்தில் தரிசனம் முடித்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டும், பிரசாதங்களை சாப்பிட்டுக்கொண்டும், சிரித்து பேசியபடி இருந்தார்கள். அவர்கள் வீசி எறியும் குப்பைகளை வயதான ஊழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கோவிலில்கூட குப்பைகளை அதற்கான இடத்தில் போட வேண்டும் என்கிற நாகரீகம் குறைந்து கொண்டு வருவதை என்ன வென்று சொல்வது.thari 1

பெரிய வீட்டுக்குழந்தைகள் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் ஓடி விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடியே, அழுக்குச்சட்டையோடு அச்சு முறுக்கு விற்றுக்கொண்டிருந்த சிறுமிகளின் கண்களில் ஏக்கப்பார்வைகள் நிறைந்திருந்தன. இந்த உற்சாகமும், துள்ளலும் தங்களுக்கு வாய்க்கவில்லையே என்கின்ற ஏக்கமாக அவை இருக்க வேண்டும்.

ஊருக்கு மாற்றலாகி வந்த புதிதில், அப்பா தெப்பக்குள படிக்கட்டுகளில் படிந்துள்ள பாசியில் வழுக்கி விழுந்து, அருகிலிருந்தவர்கள் தூக்கி இழுத்துவந்து படித்துறையில் சேர்த்ததை முன்பெல்லாம் அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. அப்போதெல்லாம் தெப்பக்குளம் இயற்கையான மணல் திட்டுகளுடனான ஆழத்தில் இருந்தது. இப்போது அப்படியில்லை.

குளத்தின் ஆழத்தை குறைக்கும் பொருட்டு மேலும் மணல் நிரப்பி, சிமெண்ட் தளமாய் பூசிவிட்டார்கள். நான்கு மூலையிலும் ஆழ்துளை கிணறு மூலம் நீர் வர ஏற்பாடு செய்து, அவ்வப்போது நிரப்புகிறார்கள். தேவைப்படும்போது குளத்தை காயவிட்டு சுத்தம் செய்வதால், இயற்கையாக இருந்த தாமரைப் பூக்களும், மீன்களும் இல்லாது போய், செயற்கையான வெறும் காட்சிப்பொருளாக இருக்கிறது இப்போதைய குளம். படித்துறை பிரகாரங்களில் மூலிகை ஓவியம் வரைய ஆரம்பித்தது நின்றுபோய் பலவருடங்களாகி விட்டது. அதன் துவக்கவிழா அது இது என்று சொல்லி பத்திரிக்கைகளில் அடித்த தம்பட்டம் எல்லாம் ஒரு நாள் கூத்தாகி போயிருந்தது. மூலிகை ஓவியம் வரைவது நின்று போனது குறித்தோ, மீண்டும் வரையச் செய்வது குறித்தோ யாருக்கும் அக்கறையில்லை என்பதை இவ்வளவு நாள் இடைவெளி உணர்த்துவதாய் இருந்தது.

வரிசை மெதுவாக நகர்ந்து வெளிப்பிரகாரத்திற்குள் நுழைந்து நேரிடையாக சன்னதிக்குள் செல்லாமல், நவராத்திரி மண்டபம் வழியாக திருப்பிவிடப்பட்டு, மேற்கு நோக்கிச்சென்று, மீண்டும் கிழக்கு நோக்கி திரும்பி வந்து, இடதுபுறமாய் சன்னதிக்குள் நுழைவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“போச்சுடி திரும்பினதும் சன்னதிக்கு போயிராலாம்னு பார்த்தா எந்த பக்கமெல்லாம் திருப்பி விடறாங்க பாரு. இஷ்டத்துக்கு ஏதாவது பண்ணிட்டே இருக்காங்க” என்று சுந்தரி சலித்துக்கொண்ட போது, எனக்கும் கூட அலுப்பாக தோன்றியது. நவராத்திரி மண்டபத்தில் காற்றோட்ட வசதி குறைந்து போயிருந்த காரணத்தினால் குழந்தைகள் அழ ஆரம்பித்தன. பிரகார ஓரங்களில் காலங்காலமாக அகற்றப்படாமல் உபயோகமற்று கிடந்த உடைந்துபோன தூண்களில் அனுபவமில்லாதவர்கள் கால்களை தடுக்கிக்கொண்டனர்.

பிரகாரத்தூண்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு வார்னிஷ் பூசப்பட்டு இருந்ததால், சிற்பங்கள் துல்லியமாகவும், அழகாகவும் இருந்தன. சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த அக்கால எழுத்துவடிவ செய்திகள் புரியவில்லையென்றாலும் பளிச்சென இருந்தது.

மூலைகளில் அங்குமிங்குமாக வைக்கப்பட்டிருந்த காற்றாடியின் காற்று, கசகசப்புக்கு இதமாக இருந்தது. சன்னதியின் வடக்குப்புற கதவு வசதிக்கேற்ப திறக்கப்படுகிற போது, சிப்பந்திகள் சிலரை சௌகரியமாக அழைத்துப்போவதும், வருவதுமாக இருந்தனர்.

“என்னடி இப்படி இவங்க ஈசியா போறாங்க?” என்று நான் கேட்டதற்கு

“அவங்க அம்பாளுக்கு சொந்தக்காரங்க எப்படி வேணும்னாலும் போவாங்க. நீயும் சிப்பந்திக்கு பணம் கொடுத்தீன்னா எப்படி வேணாலும் போகலாம். பக்திங்கறதை எல்லாம் விலைபேசி வித்து ரொம்ப நாளாச்சும்மா” என்று அருகிலிருந்த பாட்டி எனக்கு பதிலாக சொன்னது, சிப்பந்திகள் காதில் விழுந்திருக்க வேண்டும் என்பது அவர்கள் திரும்பி பார்த்து விட்டு போனதிலிருந்து தெரிந்தது. பாட்டி அப்படி சொன்னதை சிப்பந்திகள் கவனித்துவிட்டது எனக்கு சிரிப்பாக வந்தது. தூண்களை வேடிக்கை பார்த்தபடியே சிரிப்பை அடக்கிக்கொள்ள பிரயாசைப்பட்டேன்.

கவிதாவுடன் வந்திருந்தால் வெகு சீக்கிரமாய் அம்பாளை தரிசனம் செய்திருக்க முடியும். கவிதா வெள்ளிக்கிழமை தவறாமல் கோவிலுக்கு வருபவள். முன் கூட்டியே சுந்தரி சொல்லி இருந்தால் இன்று கவிதாவோடு வந்திருக்கலாம். தரிசனமும் இலகுவானதாக இருந்திருக்கும். இதை சுந்தரியிடம் சொன்னபோது சுந்தரி கோபப்பட்டாள்.

“அவ தன்கூட யாரையாவது கூட்டிக்கிட்டு போறது பக்திக்கு இல்ல. இவ்வளவு பெரிய கோயில்ல தனக்கு எவ்வளவு மரியாதை கிடைக்குதுங்கறதை மத்தவங்களுக்கு காட்டத்தான். எனக்கு அதுல இஷ்டமில்ல. நான் ஆத்மார்த்தமாய் தரிசனம் பண்ணனும்னு நினைக்கிறேன். அதுல கிடைக்கிற திருப்தியே தனி” என்று சுந்தரி என்னை வாயடைக்கச் செய்தாள்.

அது என்னவோ படிக்கின்ற காலத்திலிருந்தே கவிதாவுக்கும், சுந்தரிக்கும் ஒத்துப்போனதே இல்லை. கவிதாவின் பணமும், பகட்டும் அவளுக்கு நிறைய செருக்கை தந்திருந்தது. அப்போதே கல்லூரியில் அவளுக்கு நிறைய எடுபிடிகள் உண்டு. தன்னுடைய படிப்பிலான பலவீனத்தை பணத்தால் மறைக்க முயற்சிப்பது அவளுடைய வழக்கம். தன் மீதான மதிப்பிற்கும், அங்கீகாரத்திற்கும் மிகவும் சாதாரணமாக அடுத்தவர்களை பலியாக்கிவிடுவாள், அவள் வளர்ப்பு அப்படி. அவளுடைய இந்த வெறுக்கத்தக்க குணாதிசயங்களை சுந்தரி ஆரம்பத்தில் கண்டிக்கப்போக, அவர்களுக்குள் இடைவெளி விழ ஆரம்பித்தது. இதனால் சிரமம் ஏற்பட்டது என்னவோ எனக்குத்தான். இரண்டு பேரையும் சமாளிப்பது அன்றிலிருந்து இன்று வரை எனக்குத்தான் பெரும்பாடாக இருந்தாலும் அதிகமான சூழ்நிலைகளில் நான் சுந்தரியோடு ஒத்துப்போவதே நிகழ்ந்துவிடும். எல்லோரும் கவிதாவோடு நட்பு பாராட்டிக்கொண்டிருக்கும்போது, நான் மட்டும் சுந்தரியோடு நெருக்கமாக இருப்பதை கவிதாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கவிதாவுக்கு எல்லாவற்றிலுமே சுந்தரி நேரெதிர். படிப்பு, எளிமை, அடக்கம் என்பதாக நல்ல இலக்கணங்கள் நிறைந்தவள். முறையாக வாய்ப்பாட்டை பயிலவில்லை என்றாலும் கூட, கேள்வி ஞானத்தினாலேயே சுதி சுத்தமாக பாடும் திறமை உள்ளவள். பாட்டுப்போட்டிகளில் சுந்தரி பெற்றுக்கொடுத்த பரிசுக்கோப்பைகள் கல்லூரியில் இன்னும் கூட இருக்கிறது. கல்லூரி விழாக்களில் சுந்தரிக்கு கிடைக்கின்ற அங்கீகாரத்தை, என்ன காரணத்தாலோ கவிதாவால் ஜீரணிக்கவே முடியாது. தானும் மேடையேற வேண்டும் என்பதற்காக, விழாக்களுக்கு நன்கொடைகளை அள்ளித்தந்து மேடையில் இடம் பிடிப்பாள். அதுமாதிரி சமயங்களில் கவிதாவின் பேச்சு சுந்தரியை கோபப்படுத்த தவறாது. அதுபற்றியெல்லாம் கவிதா கவலைப்பட்டதே இல்லை. கவிதாவின் சுயமும், தாக்குதலும் அதிகமாக, அதிகமாக நாளடைவில் சுந்தரியும் நேரிடையான விமர்சனத்தில் இறங்க துவங்கினாள். அது மாதிரி சமயங்களில் கவிதாவை என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சுந்ரியை உரிமையோடு என்னால் கண்டிக்க முடியும்.

“எதுக்காக நீ கவிதாவோட சரிக்குச்சரி மல்லுக்கு நிக்கிற?”

“நானா மல்லுக்கு நிக்கிறேன்?”

“நீ பட்டு பட்டுன்னு பேசறது அவளுக்கு என்னமோ மாதிரி இருக்குமில்லையா”

“இருக்கட்டுமே. அதுமாதிரிதான் எனக்கும் இருக்கும்கிறதை அவளுக்கு புரிய வைக்க வேண்டாமா?”

“புரிய வைச்சு என்ன ஆகப்போகுது. கவிதா எதுவும் பேசினா பேசிட்டுப் போகட்டும்னு போகவேண்டியது தான”

“பழகின நம்மகிட்டயே அவ இப்படி நடந்துகிறான்னா மத்தவங்ககிட்ட எப்படி பேசுவான்னு யோசிச்சுப்பாரு”

ஒவ்வொரு முறையும் நான் சுந்தரியை சமதானப்படுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவதும், இருவருக்கும் உண்டான இடைவெளி அதிகரித்துத் கொண்டே போனதும் தொடர்கதையாகவே இருந்தது. சமீபத்தில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு கூட கவிதா மூலம் பாஸ் வாங்கி போகலாம் என்று நான் சொன்னபோதும், எப்போதும் போல சுந்தரி கோபப்பட்டதுதான் நடந்தது.

“அவளோட பெருமைக்கு அவ கூட்டிட்டு போறதுக்கு, உன்னையும், என்னையும் தாண்டி நிறைய முக்கியமானவங்க அவளுக்கு இருக்காங்க. இதுல நம்ம நினைப்பு கூட அவளுக்கு வராது” என்று சுந்தரி சொன்னபோது, நான் ஒத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் அது தான் நடந்தது. கவிதா எங்களை கண்டுகொள்ளவே இல்லை.

“எங்க இருந்து பார்த்தாலும், ஏதாவது ஒரு கோபுரம் தெரியும். வா போகலாம். அம்பாளுக்கும், நமக்கும் நடுவுல தரகர் ஒண்ணும் தேவையில்ல” என்று சொல்லித்தான் சுந்தரி என்னை அழைத்துப் போனாள். அவளுக்கு தெரிந்த பேப்பர் ஸ்டோர் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து மிக திருப்தியாக, ராஜகோபுரமும், மூலஸ்தானத்தின் தங்க கவச கோபுரமும் ஒரு சேரத் தெரிய கும்பாபிஷேகத்தை பார்க்க முடிந்தது.

வரிசை இவ்வளவு நேரமாகியும் நகர்வதாகவே தெரியவில்லை. ஊர்ந்து போவதைவிட மெதுவாகச் செல்வதாக இருந்தது. விதானத்தின் வர்ணப்பூச்சுக்கள் முற்றுப்பெறாததில் இருந்து கும்பாபிஷேகத்தை ஒட்டி செய்யப்பட்ட புனரமைப்பு வேலைகள் அரைகுறையாக விடப்பட்டிருந்தது தெரிந்தது. அவசரவேலையே இதற்கு காரணம் என்று சொல்லலாம். வேலை மட்டுமல்ல கும்பாபிஷேகமும், அவசர அவசரமாக நடந்த ஒன்றுதான்.

தேரடிவீதி வரையிலும் நாலாபக்கமும் சாமானியர்கள் நுழையவே அனுமதிக்கப் படவில்லை. நெரிசலை தவிர்க்கிறோம் என்ற பெயரில் பதவியும், அந்தஸ்த்தும் இருப்பவர்களை தவிர மற்றவர்கள் கோவிலுக்கு அருகில்கூட செல்லமுடியாமல் துரத்தியடிக்கப்பட்டனர். எந்த கும்பாபிஷேகத்திலும் கண்டிராத கூத்துஇது.

அலை, அலையாக பக்தர்கள் நுழைவதும், வெளியேறுவதுமாக நிகழ்ந்த எத்தனையோ திருவிழாக்களுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி அது என்று சொல்லலாம். அம்பாளுக்கு திருவிழா என்றால் மக்கள் தன்வீட்டு விஷேசமாக கொண்டாடிய நாட்களை மலையேற்றிவிட்டு, ஆள், அம்பு, சேனை உள்ளவர்கள் மட்டுமே தங்களது விளம்பரங்களுக்காக செய்த கும்பாபிஷேகமாகத்தான் அது இருந்தது.

அவர்களின் அதிகார துஷ்பிரயோகமும், பணமும், பகட்டும், அலுத்து, சலித்து, களைத்து வழிவிட்ட பிறகுதான் பக்தர்கள் கோவிலையே நெருங்க முடிந்த அவலம் இதுநாள்வரை யாரும் கண்டிராதது. எதையும் பார்க்க இயலாமல் ஜனங்கள் அழுது ஆதங்கப்பட்டதை உணர்வதற்கு அம்பாளைத்தவிர வேறு யாருமில்லை. செல்வாக்கு உள்ளவர்களுக்கு கைகட்டி சேவகம் செய்பவர்களாய் சிப்பந்திகள் மாறிப்போன அவலமும் அன்றிலிருந்து ஆரம்பம்.

வரிசை செல்லும் வழியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்று இலவசமாக வழங்கிய குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம் செயலிழந்து பல்லிளித்துக்கொண்டிருந்தது. அது தெரியாமல் வரிசையில் வந்தவர்கள் நாவறட்சிக்கு அதை திருகுவதும், ஏமாறுவதுமாக இருந்தார்கள்.

வரிசை நந்தி மண்டபம் வழியாக சன்னதிக்குள் நுழைய எல்லோரும் கால்களை உந்தியும், குனிந்துமாய் தரிசனம் செய்ய முண்டியடித்தார்கள். அம்பாளுக்கு பச்சை பட்டு உடுத்தப்பட்டிருந்தது. வைர கிரீடமும் வைத்து, வைர மூக்குத்தியும் அணிவிக்கப்பட்டு அம்பாளை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மூலஸ்தானத்தில் சுற்றிக்கொண்டிருந்த சாம்பிராணிப்புகை அம்பாளுக்கு அப்படியே குடைவிரித்தது போல் வித்தியாசமாய் இருந்தது. மல்லிகைத் தோரணங்களில் இருந்து வந்த வாசனை ரம்மியமாக இருந்தது. வரிசையில் நின்றவர்களை சிப்பந்திகள் பிடித்து இழுத்து தள்ளி வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள்.

தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கிவரவும், ஊஞ்சல் சேவை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. “கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்துட்டு போகலாம்” என்று சுந்தரி சொன்ன போது எனக்கும் அதுவாகவே பட்டது.

கூட்டத்தில் யாரோ கையை கிள்ளுவதை போல இருந்ததும் திரும்பிப்பார்த்தபோது கவிதா நின்று கொண்டிருந்தாள்.

“ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்மில்லயா? சேர்ந்தே வந்திருக்கலாம்” என்று என் கையை பற்றியபடி கவிதா சொல்ல “திடீர்னு கிளம்பினோம். சுந்தரியும் வந்திருக்கா” என்று நான் பதிலளித்ததும் கவிதாவின் முகம் மாறியது. அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு சுந்தரியும் திரும்பிப் பார்க்க, இருவரும் சம்பிரதாயமாய் சிரித்துக்கொண்டார்கள். மறுபடியும் கவிதா என்னிடம்

“பார்த்து ரொம்ப நாளாச்சு வீட்டுக்குக்கூட வர்றதேயில்ல”

“அப்படியெல்லாம் இல்ல. வந்தா நீ இருக்குறதில்ல”

“சும்மா பேச்சுக்கு சொல்லாத. நீ வரவர ரொம்ப டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றமாதிரி தெரியுது”
“இல்ல. நா வந்தப்ப நீ எதோ கேம்ப் போயிருக்கிறதா வீட்ல சொன்னாங்க. இன்னும் சொல்லப்போனா ஒரு தடவ வெள்ளிக்கிழமைவேற வந்தேன். அப்பவும் நீ ஊர்ல இல்ல”

“அதெப்பெடி வெள்ளிக்கிழமை நான் ஊர்ல இல்லாம இருப்பேன்? கோவிலுக்கு வரணுமில்லையா?”

“இல்ல. வெள்ளிக்கிழமை நீ கண்டிப்பா ஊர்ல இருப்பேன்னுதான் யோசிச்சு வந்தேன். அப்படியும் நீ இல்ல”

“என்ன சொல்ற நீ? வாரம் தவறாம கோவிலுக்கு வர்றேன். எப்படி ஊர்ல இல்லாம நான் இருப்பேன்? நான் வந்தாதான் இன்னைக்கு வெள்ளிக்கிழமையான்னு குருக்களே கேட்கறார். கோயில்லயே வெள்ளிக்கிழமைன்னா நான் வருவேன்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க. அப்படியிருக்கிறப்ப வெள்ளிக்கிழமை நான் ஊருல இல்லைன்னு நீ சொல்றது சிரிப்பாதான் வருது”

“நிஜந்தான். ஒரு வெள்ளிக்கிழமை வந்தப்ப, இன்னைக்கு கோவிலுக்கு போகவாவது அவ கண்டிப்பா ஊருக்கு வந்துருவான்னு நெனச்சோம். என்ன சூழ்நிலையோ அவ இன்னைக்கு வரலைன்னு, உங்க வீட்ல சொன்னாங்க. நல்லா ஞாபகம் இருக்கு. நான் வந்தது வெள்ளிக்கிழமைதான். நீ ஊர்ல இல்லைங்கிறத, இல்லைன்னு சொல்றதுல்ல எனக்கென்ன வந்தது?”.

“இருக்கலாம். ஒரு வாரம் நான் ஊர்ல இல்லைன்னு நினைக்கிறேன்” என்று கவிதா சொன்னதும், சுந்தரி வேகமாக எங்களது உரையாடலுக்குள் புகுந்தாள்.

“என்ன நினைக்கிறது? நீ ஊர்ல இல்லைங்கிறதை முதல்லையே சொல்லிட்டுப் போயேன். ஒருவாரம் கோவிலுக்கு வரலேன்னா சாமி குத்தமா ஆகிடப்போறது?. அதுக்குப் போய் நான் வரலைன்னா கோவிலே தேடுது, குருக்களுக்கே நான் வந்தாதான் வெள்ளிக்கிழமைன்னே தெரியுது, அப்படி இப்படின்னு எல்லாம் எதுக்காக அளக்கிற?”

“நா ஒண்ணும் அளக்கல. ஒரு தடவ எங்கூட வந்துபார் உனக்கும் தெரியும்”.

“வேண்டவே வேண்டாம். உன்னை கோயில்ல இருக்கிறவங்க தேடறதும், நீ வந்தா தான் வெள்ளிக்கிழமைங்கிறதெல்லாம், உனக்கு பெருமையாயிருக்கலாம். ஆனால், அதுல பக்திங்கிறதே இல்ல. அவங்க தேடறதும், உன்னோட பக்திய மெச்சிக்கிறதுக்காக இல்ல. தட்டுல நீ போடுற பணம் தான் காரணம். பணத்துக்காக உனக்கு கிடைக்கிற மரியாதையும், பணத்துக்காக உன்னை தேடறதும்தான் அது. மரியாதைக்காக கோவிலுக்கு வர்றதைக்காட்டிலும், மனத்திருப்திக்காக கோவிலுக்கு வர்றதுதான் பக்தி. ஒரு நாள் பூராவும் சூடத்தட்டை வைச்சுட்டு நின்னாலும், நீ போடுற பணம் அவங்களுக்கு கிடைக்காது. அதுக்காக அவங்க உனக்கு காத்திட்டிருக்கிறதும், நீ ஏதோ பெரிய ஆன்மீக வாதிமாதிரி பேசறதும் உனக்கு அசிங்கமாப்படலயா”.

சுந்தரியை அமைதியாக இருக்கும்படி கண் காட்டினேன். ஆனால் சுந்தரி விடுவதாய் இல்லை.

“நீ கோவிலுக்கு வரும்போது சூடத்தட்டுல பத்து பைசா போடாம வந்துட்டுப்போனா தெரியும், உனக்கு இங்க என்ன மரியாதை கிடைக்கும்னு. மத்தவங்க மதிக்கிறதுக்காக கோவிலுக்கு வர்றதுனால எந்தப்பலனும் இல்ல. பணத்தால மனுசங்கள விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறது அகம்பாவம். ஆனா, நீ அம்பாளோட அருளையே விலைக்கு வாங்க முயற்சி பண்ற. இதை உனக்கு புரிய வைக்கிறதுக்கு யாரும் உன்கூட இல்ல. அப்படியே சொன்னாலும் புரிஞ்சுக்கிற குணமும் உனக்கு கிடையாது”.

சுந்தரி பேசப்பேச கவிதாவின் முகம் என்னவோ போல் ஆனது. பேச்சிலிருந்து இருவரின் கவனத்தையும் ஊஞ்சல் சேவை பக்கம் திசை திருப்பினேன். ஊஞ்சல் சேவை ஆரம்பமாகி விட்டிருந்தது. வெண்பட்டு அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும் இருக்க, வெள்ளி ஊஞ்சல் ஒய்யாரமாக ஆடியது. சுந்தரி எந்த சலனமும் இன்றி, ஊஞ்சல் சேவையில் ஆழ்ந்து போனாள். திரும்பிப்பார்க்கிற போது, கவிதா வேகமாக சொல்லிக்கொள்ளாமல் போய் கொண்டிருந்தாள். அவளது நடையில் கோபம் தெரிந்தது. சுந்தரியின் தோளைத் தொட்டு, கவிதா சொல்லாமல் போய் கொண்டிருப்பதை காட்ட, சுந்தரி அதை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. எனக்குத்தான் சுந்தரி படபடவென்று பொரிந்தது என்னவோ போலிருந்தது.

ஒரு நிகழ்வின் இன்னொரு கோணம், காயப்படுத்துவதாயும், காயப்படுவதாயும் இருக்க நேர்ந்தாலும், அந்தக்காயம் நிஜத்திற்கு மேலான நிதர்சனமாகவும் இருந்து விடுகிறது. சுந்தரியும் எல்லோருடனும் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தாள்.

“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா………………………………….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *