அந்த முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2024
பார்வையிட்டோர்: 256 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாமோதரன் சித்திரக்கலையில் நிபுணன். அவனுடைய வர்ண சித்திரங்கள் பல மேல் நாட்டிற்கூடப் பிரசித்தியை அடைந்தன. இயற்கைக்காட்சிகளையும் மனிதர்களின் அங்க அமைப்புக்களையும் திறம்பட எழுதும் ஆற்றல் அவனிடம் இருந்தது. எவ்வளவோ காட்சிச்சாலைகளிலும் அரண்மனைகளிலும் அவனுடைய சித்திரங்கள் விளங்கிக்கொண்டிருந்தன.

நம் நாட்டிலுள்ள கலைஞர்களுக்குப் பிழைக்கும் வழி பெரும்பாலும் தெரியவில்லை. வாழ்வது ஒரு கலை என்று அறிஞர்கள் சொல்லி வருகிறார்கள். கலை ஞர்கள் தங்கள் கலைச்செல்வத்தை விருத்தி செய்வதிலேயே கருத்துடையவர்களாக இருப்பார்களேயன்றிப் பொருட்செல்வத்தைத் தேடுவதில் அவர்களுக்குச் சிரத்தை இருப்பதில்லை. தாமோதரனோ அத்தகையவனல்ல. அவனுக்குச் செல்வம் ஸம்பாதிக்கும் வழி நன்றாகத் தெரியும். தன் சித்திரக் கலையை விட்டுவிட்டு, பிழைக்கும் சந்தர்ப்பம் ஒன்று வருமானால் அவன் தன் சாமர்த்தியத்தினால் பொருள் ஈட்டிச் சுகமாக வாழ்வானென்பதில் தடையில்லை.

அவனுடைய சித்திரங்கள் அவனது கற்பனைத் திறனை நன்றாக வெளிப்படுத்தின. கற்பனையுலகத் தில் அவன் ஓர் அரசனாக இருந்தான். அவனுடைய வீடு, பொருள், சுகவாழ்வு ஆகியவற்றைப் பார்த்தால் இந்த உலகத்திலும் அவன் அரசனைப்போலவே வாழ்ந்துவர முயன்றானென்று தோற்றும்.

அவனுக்கு ஜமீன்தார்களெல்லாம் பழக்கம். பல சிற்றரசர்களுடைய அபிமானத்தை அவன் பெற்றான். தான் குடியிருக்க அழகான பங்களா ஒன்றைக் கட்டிக்கொண்டான். அது சித்திரமாளிகையாக விளங்கியது. சித்திரக்கலையிலும் வாழ்க்கைக்கலை யிலும் அவன் ஒருங்கே சிறப்படைந்து விளங்கினான்.

ஜமீன்தார்களுக்குள் இளவயதுடையவர்கள் பலர் அவனிடம் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பார்கள். பணத்தைச் சுகபோகங்களில் வரம்புக்கு மிஞ்சி அழித்து வரும் அவர்களின் உள்ளத்தைத் தாமோதரன் அளந்து அறிந்திருந்தான். அவர்கள் உள்ளத் தைச் சிக்கவைக்கும் சித்திரங்கள் பலவற்றை அவன் எழுதி ரகசியமாக வைத்திருந்தான். இயற்கைக் காட்சிகளிலோ, அபூர்வ சித்திரங்களிலோ அந்தச் சிங்கார புருஷர்களுக்கு விருப்பம் இராது. அழகிய பெண் உருவங்கள், காமக்குறிப்புத் தோன்றும் கோலம் அமைந்த காட்சிகள், முழு நிர்வாணப்படங்கள், அரை நிர்வாணப்படங்கள் இவற்றில் அவர்கள் ஈடுபட்டார் கள். உலகம் புகழும் சித்திரங்களினாற் பெறாத லாபத்தை அந்தச் சித்திரங்களால் தாமோதரன் அடைந்தான். ஆனால், அவை மட்டும் லேசானவைகளா? அவற்றிலும் தாமோதரனுடைய கற்பனைத் திறன் சுடர்விட்டு விளங்கியது.

அத்தகைய சித்திரங்களை அவன் வெளிப்படையாக வைப்பதில்லை; எல்லோருக்கும் காட்டுவதும் இல்லை. அவற்றைப் பார்த்து இன்புறுபவர்களும், நூற்றுக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர் களுமாகிய ஒரு கூட்டம் இருக்கிறதென்பதை அவன் அறிந்திருந்தான். அவர்களுக்கு மாத்திரம் அந்தப் படங்களை அவன் காட்டினான்; அளவற்ற லாபம் அடைந்தான்.


பிரமதேவன் திலோத்தமையைச் சிருஷ்டி பண்ணினானாம். அவளைப் பார்த்தபோது அவனுக்கே மயல் தலைக்கொண்டதாம். இப்படிப் புராணம் சொல்லுகிறது. தாமோதரன், ஒரு மடமங்கை ஆடைகளின்றி ஒரு பொய்கையில் நீராடுவதைப் போன்ற சித்திரம் ஒன்றை வரைந்தான். அதில் அவன் கலைத்திறம் முழுவதும் ததும்பி நின்றது. அவனே தன் சிருஷ்டியை வியந்து கொண்டான். ‘அணு அணுவாக இந்தச் சித்திரத்தின் அழகைப் பார்த்து அனுபவிக்கும் ஒருவன் அகப்பட்டால்…’ இப்படி எண்ணமிடும்போது அவன் ஒரு பொற்குவியலையே அதன் விலையாகப் பெற்றுவிடலாமே என்று நினைத்தான். அந்த விலையற்ற சித்திரத்திற்கு விலை மதிப்பிடுவது சாமானியமா?

இளம் ஜமீன்தார்கள், பணக்காரர்கள் பலர் அவனிடமுள்ள படங்களைப் பார்த்து வேண்டியதை வாங்கிக்கொள்வார்கள். தாமோதரனும் தன்னிடம் அவர்கள் விரும்பும் ரகத்திலுள்ள படங்களெல்லாவற்றையும் காட்டுவான். ஆனால் இந்தப் படத்தை அவ்வளவு மலிவாக்கிவிட அவன் மனம் விரும்பவில்லை. ‘இது ஒரு பெரிய பொக்கிஷம்; மற்றொருவர் இதைப் பார்ப்பதற்குக்கூட விலை கொடுக்க வேண்டும்’ என்பது அவன் கருத்து. உண்மையில் அதற்கு அதுவே ஒப்பாக இருந்தது. அதில் பூரணமாக நிரம்பிய கலைச் செல்வத்தை அவன் கொட்டியிருந்தான்; அதிலிருந்து பெருந்தொகையாகப் பொருட்செல்வத்தை அடையலாமென்பது அவன் ஆசை.


குமாரபுரி ஜமீன் தார், தாமோதரனுடைய படங்களைப் பார்க்க வருவதாக எழுதியிருந்தார். அவர் ஒரு சிற்றரசரைப் போன்ற செல்வமுடையவரென்று அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அதுவரையில் அவரைப் பார்த்ததில்லை. தான் ஒருவருக்கும் காட்டாமல் வைத்திருக்கும் படத்தை அவருக்குக் காட்டலாமென்று அவன் நினைத்தான்.

ஜமீன்தார், தாமோதரன் வீட்டிற்கு வந்தார். முப்பது வயது இருக்கும் அவருக்கு. தாமோதரன் உலகப்பிரசித்தி பெற்ற தன் படங்களையெல்லாம் காட்டினான். “இவைகளெல்லாம் மிகவும் நன்றாக இருக்கின்றன. இந்த மாதிரியுள்ள உங்கள் படங்களை நான் பல இடங்களிலே பார்த்திருக்கிறேன். நான் இவைகளை மாத்திரம் பார்த்துப் போக இங்கே வரவில்லை” என்று ஜமீன்தார் பீடிகை போட்டார்.

தன் கண்ணியிலே ஒரு பறவை சிக்கப்போகிறதென்று தாமோதரன் நிச்சயம் செய்து கொண்டான்.

“உங்களிடம் மிக அழகான சித்திரங்கள், அங்க அமைப்புக்களை நுணுக்கமாகக் காட்டும் முதல் தரமான படங்கள் பல இருக்கின்றனவாம். அவைகளை எல்லோரும் பார்க்கமுடியாதாம். அந்தப் படங்களைப் பார்க்கவேண்டுமென்பதற்காகவே வந்தேன்” என்றார் ஜமீன்தார்.

“ஆமாம்; சில பேருக்கு அவற்றின் அருமை தெரியாது. அவைகளைப் பார்த்து ரஸிக்கவும் தெரியாது. ஆகையால் காட்டுவதில்லை” என்று தாமோதரன் கூறினான்.

பிறகு அந்த வகையிலுள்ளவைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி வந்தான். ஜமீன்தார் பிரமித்துப்போனார். ஒரு சித்திரத்தைப் பார்ப்பார்; அதற்கு மேலே அழகுள்ள வேறு படமே இனி இராதென்று நினைப்பார். அடுத்த படத்தைப் பார்க்கும் போது பதின்மடங்கு ஆனந்தங்கொள்வார். அதற்குப் பின் வரும் படத்தைப் பார்த்துச் சொக்கிப்போவார். தாமோதரன் ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக உள்ளவற்றை வரிசையாகக் காட்டிக்கொண்டே வந்தான்.

“உங்கள் சக்தியை நான் என்னவென்று சொல்வது! உங்களுக்கு லக்ஷ லக்ஷமாகக் கொடுக்க வேண்டும்” என்று ஜமீன்தார் பாராட்டினார்.

“உங்களைப்போன்ற அருமை தெரிந்த பிரபுக்கள் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவோ லக்ஷம் பெறும்” என்று அவன் பதிலுக்கு ஸ்தோத்திரம் செய்தான்.

ஜமீன்தார் தமக்கு வேண்டுமென்று நான்கு படங்களைத் தெரிந்தெடுத்தார். ஒவ்வொரு படத்திற் கும் ஐந்நூறு ரூபாய் தருவதாக வாக்களித்தார். பிறகு, “இவ்வளவுதானே? இந்தமாதிரி வேறு படங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டார்.

“இன்னும் ஒரு படம் இருக்கிறது. இது வரையில் நான் எழுதிய படங்களில் அதைப் போல வேறொன்று இல்லை. என்னையே மயக்கும் சக்தி பொருந்தியது அப்படம். அதை இதுவரையில் யாருக்கும் காட்டவில்லை. அதை வாங்குவதற்குரிய செல்வர்கள் இல்லை. என் வாழ்வு முழுவதும் உழைத்தாலும் அப்படி ஒரு படம் அமைவதென்றால் மிகவும் சிரம் சாத்தியம்” என்று தாமோதரன் அடுக்கிக் கொண்டே போனான்.

“யாருக்கும் காட்டக்கூடாதென்ற விரதமுண்டோ?” என்று ஆவலோடு கேட்டார் ஜமீன்தார்.

“அப்படி ஒன்றும் இல்லை. எல்லோருக்கும் காட்டிக்கொண்டே இருந்தால் அதன் மதிப்புக் குறைந்து விடும். அதைப் பார்ப்பதற்குக்கூடக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நானே என் கைத்திறமையைப் புகழ்ந்து கொள்வதாக நீங்கள் எண்ணவேண்டாம்.”

“அப்படியானால் நான் பார்ப்பதில் தடை ஒன்றுமில்லையே? அதை யாருக்காவது கொடுக்கலாமென்ற உத்தேசம் உண்டோ?”

“தக்க விலை வந்தால் கொடுக்கலாமென்றுதான் எண்ணுகிறேன். ஆனால் விலை தருபவர்கள் கிடைப்பது அரிது.”

“அப்படிச் சொல்லாதீர்கள். அபூர்வ வஸ்து ஒன்றைப் பெறவேண்டுமானால் பணந்தானா பிரமாதம்? நான் அந்தப்படத்தைப் பார்க்காமலே, பெற்றுக் கொள்வதாக வாக்களிக்கிறேன். ஆயிரமல்ல, இரண்டாயிரமானாலும் தருகிறேன்” என்று ஜமீன்தார் கூறும் போது தாமோதரன் முகம் மலர்ந்தது.

“இது நிச்சயம்: நீங்கள் யோசிக்க வேண்டாம். நான் கட்டாயம் அதை வாங்கிக்கொள்கிறேன். அதைப் பார்க்க வேண்டுமென்று என் மனம் துடிக்கிறது” என்று ஜமீன்தார் தவியாகத் தவித்தார்.

தாமோதரன் ஒரு நீண்ட பெட்டியைக் கொண்டு வந்தான். ஒரு பக்கத்தில் படங்களை விரித்து வைத்துக் காட்டும் சட்டம் இருந்தது. தான் கொணர்ந்த பெட்டியைத் திறந்தான். அதற்குள் வெகு பத்திரமாக வைத்திருந்த படச்சுருளை எடுத்து அந்தச் சட்டத்தில் மாட்டினான்.

ஜமீன்தார் கண்களை மலர விழித்து அதைப் பார்த்தார்; “ஹா” என்று தம்மை அறியாமலே கூறினார். அவர் முகத்தில் சந்தோஷக் குறிப்பு உண்டாகவில்லை. அந்தப் படத்தைக் கூர்ந்து கவனித்தார். ஒவ்வொரு கணத்திலும் அவர் முகத்தில் கோபக்குறிப்பும் வாட்டமும் தோற்றின. இடையிடையே பெருமூச்சு விட்டார்.

“எப்படி இருக்கிறது?” என்று கேட்டான் தாமோதரன்.

அதற்குப் பதில் அளிக்காமல், “சரி, இதற்கு எவ்வளவு பணம் வேண்டும்?” என்று கேட்டார் ஜமீன்தார்.

“இரண்டாயிரம்.”

“நான் போய் உங்களுக்குச் செக் அனுப்புகிறேன். அப்பால் இந்தப் படத்தை வாங்கிக் கொள்கிறேன்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு உடனே எழுந்து போய்விட்டார். முன்னாலே காட்டிய படங்களைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போன அவர் அந்தப் படத்தைக் கண்டால் ஸ்தம்பித்து மெய்ம்மறந்து விடுவாரென்று தாமோதரன் நினைத்திருந்தான். அவரோ, அதைப் பார்த்தார். அவ்வளவுதான். வியப்பையோ, சந்தோஷத்தையோ அடைந்ததாகத் தோன்றவில்லை. அவ்வளவு சீக்கிரமாக அவர் எழுந்து போய்விட்டதற்கும் காரணம் தெரியவில்லை.

2

நான்கு நாட்கள் கழித்துத் தாமோதரனுக்கு ஜமீன்தாரிடமிருந்து செக் வந்தது. அதோடு அந்தப் படத்தைத் தம் பங்களாவில் கொண்டுவந்து கொடுக்கும்படி ஒரு கடிதம் அவர் எழுதியிருந்தார். தாமோதரன் அன்று மாலை தன் காரில் குமாரபுரி ஜமீன்தார் வீட்டிற்குச் சென்றான். அவரைத் தனியே ஓர் அறையிலே சந்தித்துப் படத்தைச் சமர்ப்பித்தான். “உங்களைப் போலச் சித்திரக்கலையின் அருமை அறிந்தவர்களை நான் கண்டதில்லை” என்று ஸ்தோத்திரம் செய்தான்.

ஜமீன்தார் அவன் கூறியவற்றைக் காதிலே வாங்கிக்கொள்ளவே இல்லை. அவர் ஏதோ யோசனை யில் ஆழ்ந்திருந்தார்.

“இந்தப் படம் இனிமேல் உங்களதாகிவிட்டது. இனி இதை நான் அடிக்கடி பார்க்க முடியாது. இப்பொழுது ஒருமுறை உங்களுடைய அநுமதி பெற்றுப் பார்க்கிறேன்” என்று தாமோதரன் பணிவாகச் சொன்னான்.

ஜமீன்தார் தலையை அசைத்தார். தாமோதரன் அவருக்கு முன் சுவரில் அதைத் தொங்கவிட்டான். அவனும் ஜமீன்தாரும் அதை உற்று நோக்கினர். திடீரென்று ஜமீன்தார் தாமோதரனைப் பார்த்து, “இந்தப் படத்திற்கு மூலம் எது?” என்று கேட்டார்.

“என் மனந்தான்.”

“ஏதாவது போட்டோவையோ அல்லது பெண்ணுருவத்தையோ பார்த்து இதை எழுதியிருக்கலாமல்லவா?”

“இல்லை; என் கற்பனாலோகத்தில் எவ்வளவோ பெண்களை நான் சிருஷ்டிக்கிறேன். அவர்களில் ஒருத்தி இவள்.”

“அப்படியா! …இந்தப் பங்களாவின் பின்புள்ள சோலையில் சிறிது உலாவலாம்; வருகிறீர்களா?” என்று ஜமீன்தார் கேட்டார்.

“ஆஹா! அப்படியே” என்று சொல்லி எழுந்தான் தாமோதரன்.

இருவரும் பின்னாலே உள்ள தோட்டத்தை அடைந்தார்கள். அதில் ஒரு சிறிய காட்டைப்போல மரங்கள் அடர்ந்திருந்தன.

“உண்மையைச் சொல்லிவிடுங்கள்: இந்தப் பெண்ணை நீங்கள் எங்கே பார்த்தீர்கள்?” என்று ஜமீன்தார் கேட்டார்.

தாமோதரன் என்ன சொல்லுவான்? அந்தமாதிரி உண்மையில் ஒருத்தி இருக்கிறாளென்றும் அவளை அடைவதற்கு முயல வேண்டுமென்றும் ஜமீன்தார் எண்ணியிருப்பதாக அவன் நினைத்தான். காமப்பித்தர்களுடைய இயல்புகளையும் ஜமீன்தார்கள் சுகபோகத்தின் பொருட்டுச் செய்யும் பலவகைச் செயல்களையும் அறிந்தவன் அவன்.

“சித்திரகாரனுக்குப் பெண்கள் பஞ்சமா? அவன் நினைத்தால் இந்த உலகத்திலே இல்லாத அபூர்வ சிருஷ்டிகளை உண்டாக்கிவிடலாமே. நீங்கள் இதை உண்மையான பெண் ஒருத்தியின் படமென்று எண்ணியிருப்பது கண்டு ஆச்சரியப்படுகிறேன்!”

இதைச் சொல்லிக்கொண்டிருக்கையிலே ஜமீன்தார் சடக்கென்று தம் பையிலிருந்து ஒரு ரிவால்வரை எடுத்துத் தாமோதரன் முகத்துக்கு எதிரில் நீட்டினார். “இந்தாரும் என்னை ஏமாற்றப் பார்க்காதேயும். உண்மையைச் சொல்லிவிடும். இவளை எங்கே பார்த்தீர்?” என்று கோபத்தோடு கேட்டார்.

தாமோதரன் தைரியசாலி; சமயத்தில் சோர்வடையமாட்டான்.

“உங்கள் கைத்துப்பாக்கியை முதலில் சட்டைப் பையில் போடுங்கள். அப்புறம் பேசலாம்.”

ஜமீன்தார் அப்படியே செய்தார்.

“இந்தப் படத்தில் இருப்பது உலகத்திலுள்ள எந்தப் பெண்ணின் உருவமும் அல்லவென்று சத்தியம் செய்கிறேன். பெரிய அறிவாளியாகிய நீங்கள் இவ்வளவு பதற்றமாக நடக்கக்கூடாது. நீங்கள் உங்களுக்கே அபாயம் தேடிக்கொள்ள நினைத்தீர்கள். தாமோதரன் உலகமறிந்த ஒரு சித்திரகாரனென்பதை நீங்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. என் படத்தைத் தந்துவிடுங்கள். உங்கள் பணம் எனக்கு வேண்டாம்!”

ஜமீன்தார் பெருமூச்சு விட்டார்; சிறிது நேரம் பூமியை நோக்கியபடி நின்றார். அவர் கைகள் நடுங்கின. “இங்கே பாரும். அந்தப் படத்தை இனி மேல் யாரும் பார்க்கக்கூடாது. எனக்கு எப்போது விற்றீரோ அப்போதே அது என்னுடையதாகிவிட்டது. அந்தப் படத்தைப்பற்றியோ இப்போது நடந்த காரியங்களைப் பற்றியோ இனிமேல் நினைக்க வேண்டாம். யாரிடமும் பிரஸ்தாபிக்கக்கூடாது. எல்லாவற்றையும் மறந்துவிடும். உமக்கு இன்னும் ஓர் ஆயிரரூபாய்க்குச் செக் அனுப்பிவிடுகிறேன்” என்று சொல்லி அவர் போய்விட்டார்.

தாமோதரன் வீடுவந்து சேர்ந்தான். மறுநாளே அவனுக்கு மற்றோர் ஆயிரரூபாய்க்குச் செக் வந்தது.

3

ஐந்து வருஷங்கள் கழிந்தன. தாமோதரன் பெரிய செல்வனாகிவிட்டான். நூற்றுக்கணக்கான சித்திரங்களை அவன் எழுதினான். குமாரபுரி ஜமீன் தாருக்குப் படம் கொடுத்த பிறகு அந்தமாதிரிப் படங்கள் எழுதித் தனியே ஜமீன்தார்களுக்குக் காட்டும் காரியத்தை விட்டொழித்தான். அவர்களின் சிநேகத்தையும் வரவரக் குறைத்துக்கொண்டான்.

அவன் எதிர்பார்க்கவே இல்லை: அன்று குமாரபுரி ஜமீன்தார் வந்தார். துக்கமே உருவாக வந்தது போல் இருந்தது அவர் உருவம். “என்னை அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டுக்கொண்டே தாமோதரன் இருந்த அறைக்குள் அவர் நுழைந்தார். அவனுக்குத் திடுக்கிட்டது. “ஆமாம்; உங்களை அடையாளம் தெரியாமலென்ன? உங்கள் துப்பாக்கி வந்திருக்கிறதா?” என்று நையாண்டியாகக் கேட்டான் தாமோதரன்.

“மன்னிக்கவேண்டும். அந்தப் பழைய சமாசாரங்களை மறந்துவிடும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். என்னை ஐந்து வருஷத்துக்குமுன் இருந்த பழைய ஆசாமியாக எண்ண வேண்டாம். நான் இப்போது உங்கள் தயையை எதிர்நோக்கி நிற்கிறேன்.”

‘குமாரபுரி ஜமீன்தாரா இப்படிப் பேசுகிறார்!’ என்று ஆச்சரியப்பட்டான் தாமோதரன். துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் இவ்வளவு பவ்யமாகப் பேசக் காரணம் என்ன?

“உங்கள் முகத்தில் விழிப்பதற்குக்கூட எனக்கு யோக்கியதை இல்லை. ஆனாலும் ஒரு யாசகனைப் போல உங்களிடம் வந்திருக்கிறேன்.”

“துப்பாக்கியால் மிரட்டின நீங்கள் இவ்வளவு தூரம் பணிந்து பேசுகிறீர்களே! இது யதார்த்தமா?…அல்லது…”

“அல்லது, என்ன? ஈசுவரசாட்சியாகச் சொல்லு கறேன். உங்களிடம் ஒரு நண்பனைப்போல் வந்திருக்கிறேன். நான் செய்த தப்புக்களை மறந்து விட வேண்டும்.”

“அப்படியானால், நீங்கள் முன்னே என்னை மிரட்டினதற்குக் காரணம் என்ன? ஏன் அவ்வாறு நடந்து கொண்டீர்கள்?”

ஜமீன்தார் சொல்ல ஆரம்பித்தார்:


உங்களுடைய மனைவி நிர்வாணமாக மற்றொருவனுக்கு எதிரில் நிற்கும் போது உங்கள் மனம் எப்படி இருக்கும்? நீங்கள் எழுதிய படத்தைப் பார்த்தபோது என் மனம் அந்த நிலையில் தான் இருந்தது. என்னுடைய அழகிய மனைவியின் தத்ரூபமான சாயலாகவே அது இருந்தது. அவள் நிர்வாணமாக ஸ்நானம் செய்து நான் கூடப் பார்த்ததில்லை. உங்கள் படம் அந்த நிலையைக் காட்டியது. அதைப் பார்த்தவுடன், என் மனத்தில் கோபமும் சந்தேக எண்ணங்களும் மூண்டன. இது சாத்தியம், இது அசாத்தியமென்று நிதானித்து யோசிக்கும் அமைதி எனக்கு உண்டாகவில்லை. என் மனைவியோ முக்கால்வாசி கோஷாஸ்திரீ. ‘அவளை ஓவியர் பார்ப்பதற்கு நியாயம் என்ன? ஆனாலும் ஸ்திரீகளை நம்பவே கூடாது. அவர்கள் மகா ஸாகஸக்காரிகள்’ என்று எண்ணினேன். பழைய கதைகளில் எவ்வளவோ ஸ்திரீகள் பண்ணிய தந்திரங்களைப் படித்த ஞாபகம் வந்தது. என் எண்ணங்கள் புயலைப் போலத் தோன்றி என் தலையைச் சுழலச் செய்தன. அதனால் தான் பேசாமல் எழுந்து போய் விட்டேன். அன்று முழுவதும் அந்தப் படத்தைப் பற்றிய யோசனை தான்.

என் மனைவியை அனாவசியமாகச் சந்தேகித்தேன். உங்களைப் பயமுறுத்தி உண்மையை அறிவதென்று எண்ணினேன். அதன் பிறகுதான் உங்களை வருவித்து மிரட்டினேன்.

சித்திரகாரருடைய கற்பனையின் திறமையை நான் அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் கூறிய வார்த்தைகளிலிருந்தும் என் மனைவியின் குணங்களி லிருந்தும் என் சந்தேகத்துக்கு இடமில்லையென்று பட்டது. பின் எப்படி அந்தப் படம் அவளைப் போலவே இருக்கிறது? இந்தக் கேள்வி மட்டும் என் மனத்தைக் குழப்பிக்கொண்டேயிருந்தது.

ஒரு வாரம் முழுவதும் உங்கள் படத்தைக் கூர்ந்து கவனித்தேன். என் மனைவியின் மேனியையும் மிக்க கருத்தோடு பார்த்தேன். என் மனமயக்கம் அதிகமாயிற்றேயொழியக் குறையவில்லை. என்னுடைய அருமைக் காதலியிடம் காரணமில்லாமல் சிடுசிடு வென்று விழுந்தேன்; வைதேன். அவள் என் நிலைமாற்றத்தைக் கண்டு விஷயம் தெரியாமல் துடித்தாள்.

அந்தப் படத்தைக் காணும்போதெல்லாம் என் மனத்தில் புயல் மூண்டது; அதை வேறு யாரும் பார்க்கக்கூடாதென்ற எண்ணம் வேறு இருந்தது. ஒரு நாள் மண்ணெண்ணெயை நிறைய விட்டு அதைக் கொளுத்திவிட்டேன்.

அதுவரையில் என் கண்ணுக்கு முன் அந்தப் படம் இருக்கும் வரையில் – எனக்கு உண்மை விளங்கவில்லை. நாளடைவில், சித்திரகாரர் எழுதிய கற்பனைச் சித்திரம் ஒன்றுக்கும் கடவுள் அமைத்த இயற்கைச் சித்திரம் ஒன்றுக்கும் ஒன்றையொன்று அறியாதவாறு தற்செயலாக ஒப்புமை அமைந்தது என்ற முடிவுக்கு வந்தேன். உங்களை அக்கிரமமாகப் பயமுறுத்தினது குறித்து வருந்தினேன். ஆனாலும் உங்களை அணுகுவதற்கு மாத்திரம் துணியவில்லை.

அந்தப் படத்தைக் கொளுத்தின காலத்தில், எதன்மீது ஐயங்கொண்டேனோ அந்த உயிர்ச் சித்திரத்தையும் கொளுத்தும் காலம் இவ்வளவு சீக்கிரம் வருமென்று நான் நினைக்கவில்லை. நான் மகாபாவி! அவளையும் சென்ற வருஷம் இழந்தேன். அவளை இழந்த பிறகு அவள் எனக்குத் தெய்வமாகி விட்டாள். அதுமட்டுமா? உங்கள் படத்தின் அருமையும் எனக்கு அப்போது விளங்கத் தொடங்கியது.

அவளுடைய உருவமாகவே அதைப் பாவித்திருப்பேனே! நான் பாவி! அதை முன்பே கொளுத்திவிட்டேன். அந்தப் படம், என் காதலியாகிய உயிரோவியம் இரண்டையும் இழந்த எனக்குச் சுகம் ஏது? என் மனம் நைந்து கரைந்தது. அப்போதுதான் உங்கள் ஞாபகம் வந்தது. நீங்கள் அந்தப் படத்தின் சிருஷ்டிகர்த்தாவென்று நினைக்கும் போது எனக்கு ஓர் ஆசை தோற்றியது. மறுபடியும் அந்த முகம் மாத்திரமாவது எழுதித் தரவேண்டும். இதுதான் நான் கேட்கும் பிச்சை.

ஜமீன்தார் இந்த வரலாற்றைக் கூறும்போது இடையிடையே கண்ணீர் விட்டார். பேசாமல் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தான் தாமோதரன்.

“நான் கொடுத்த அந்தப் படம் என் கற்பனையிலிருந்து எழுந்தது. அதே கற்பனையை மீண்டும் அப்படியே வருவிக்கமுடியுமா? உங்கள் மனைவியின் போட்டோ இருந்தால், அதைப் பார்த்து வேண்டுமானால் எழுதித் தருகிறேன்.”

“அதுதானே இல்லை! உங்கள் மனத்தில் அந்தப் படத்தை எண்ணிப் பார்த்து முகம் மாத்திரம் எழுதிக் கொடுங்களேன்.”

“அந்த முகத்தை நான் கண்ணால் கண்டிருந்தால் ஞாபகத்துக்கு வரும். என் கனவு அது. ஐந்து வருஷங்களுக்கு முன் கண்ட கனவை அப்படியே இன்றும் காணமுடியுமா? ஆனாலும் பார்க்கிறேன்.”


அன்று முதல் தாமோதரன் நூறு படங்களுக்கு மேல் எழுதிவிட்டான். அந்த நூறு முகங்களிலும் அந்த முகம் இல்லை. பாவம்! ஜமீன்தார் வாரந் தவறாமல் வந்துவிடுவார். ‘அந்த முகத்தை மீண்டும் காண்பேனா’ என்று அவர் உருகுகிறார்; தாமோதரன் தான் என்ன செய்வான்! அவன் ஆயிரம் முகம் எழுதத் தயார்; ஆனால் அந்த முகம் வரவில்லையே!

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *