நான் பார்த்தசாரதியின் வேழம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 9,027 
 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு வந்தீர்களென்றால் என்னை பார்க்காமல் செல்ல இயலாது.இங்கு வாழும் தென்கலையர்கள் எல்லோருக்கும் என்னைத்தெரியும்.ஏனோ தெரியவில்லை என்னை இந்த கோவிலின் முன் நிறுத்திவைத்திருக்கிறார்கள்.எனக்கு தெரிந்தவரை என்னால் ஆன பயனென்று எதுவுமில்லை.கடந்த பத்து ஆண்டுகளாக இதோ இந்த சன்னதியின் முன்புதான் நின்றுகொண்டிருக்கிறேன்.

இந்து மதத்தில்தான் கடவுளுக்கும் மனிதர்களாகிய உங்களுக்குமான தூரம் மிகக்குறைவு.இந்த பார்த்தசாரதி கூட ஒருவகையில் திருவல்லிக்கேணி வாசிதான்.ஏறக்குறைய மனிதர்களுக்கு இருக்கும் எல்லா சம்பிரதாயங்களும் இவருக்கும் இருக்கிறது.பிறந்தநாள் தொடங்கி,திருமணம் வரை ஏகப்பட்ட விசேஷங்கள் அதனையொட்டியே திருவிழாக்கள்.கடவுள் என்பதால் பார்த்தசாரதிக்கு திவசம் மட்டும் கிடையாது.மற்றபடி மனிதர்கள் கொண்டாடும் எல்லா இத்யாதிக்களும் இவருக்கும் உண்டு.

பாகன் என்னை காலையிலேயே எழுப்பிவிடுவான்.எங்கள் வாழ்க்கையில் அநேக நேரம் சாப்பிடுவதிலேயே செலவாகிவிடும்,ஏனென்றால் எங்கள் உருவம் அப்படி.இக்கோவிலுக்குவரும் சில திருவல்லிக்கேணி வாசிகள்கூட எனக்கு போட்டியாக முயன்றுகொண்டிருக்கிறார்கள்.எழுந்தவுடனே பாகன் எனது நெற்றியில் தென்கலை நாமத்தை வரைய ஆரம்பித்துவிடுவான்.மிருகமாய் பிறந்தாலும்கூட மனிதர்களுடன் இருப்பதால்,எனக்கும் ஜாதிமதம் உண்டு.ஒப்பனைகளை முடித்தவுடன் நானும்,பாகனும் திருவல்லிக்கேணியை பவனி வருவோம்.

நாடார் கடை வாழைப்பழம்,செல்லப்பா முதலி கடை தேங்காய்,சாயபு கடை இட்லி,ஆரோக்கியம் கடை கரும்பு என என் காலை உணவைமுடித்துகொண்டு கோவில் வாசலில் வந்து நிற்க ஆரம்பித்துவிடுவேன்.தொடர்ந்து ஆசிர்வாதங்களும்,பக்தர்களின் காணிக்கைகளுமாக என் பொழுது கழியும்.மதியம் வெயில் அதிகம் என்பதால் பட்டாச்சாரியாரிகள் பார்த்தசாரதியுடன் சேர்த்து எனக்கும் ஓய்வு கொடுத்துவிடுவார்கள்.சிலபல மடப்பள்ளி சோற்றுகவளங்களை விழுங்கிய பின் சிறிது கண்ணயர்வேன்.மாலையில் காலையில் செய்த வேலையே தொடரும்.எனக்கும் பார்த்தசாரதிக்கும் வருடம் முழுவதும் ஒரே வேலைதான்.அவ்வப்போது நடக்கும் திருவிழாக்களின் போதுமட்டும் தான் எங்களால் நகரை சுற்றிபார்க்க இயலும்.

காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த என்னை இந்த ஊரில் காட்சிப்பொருளாக்கிய இதே திருவல்லிக்கேணி வாசிகள்,தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென அப்பொழுது போராட்டம் நடத்திகொண்டிருந்தார்கள்.இவர்களுக்கு நான் போல்,இவர்கள் நகரில் இருந்த வெள்ளைக்காரர்களுக்கு,ஆறறிவு படைத்திருந்த காரணத்தால் அவர்கள் சுதந்திரம் வேண்டி போராடினார்கள்.நான் மடப்பள்ளி சோற்று கவளங்களை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

கோவிலுக்கு வரும் தினசரி பக்தர்களில் அநேகர் என்னிடமும் வருவதுண்டு.குழந்தைகளுக்குதான் என்னை கண்டால் எவ்வளவு உற்சாகம்.மனிதர்களுக்கு ஏனோ தெரியவில்லை என்னை பார்த்துகொண்டே இருப்பதில் அலுப்பு தட்டுவதே இல்லை.அப்படிஎன்னதான் இருக்கிறது என்னிடத்தில்.பக்தர்கள் என்னருகில் வந்தவுடன் பாகன் அங்குசத்தால் பிடரியில் குத்த அதுகாறும் என் தந்தத்தில் இருந்த துதிக்கையை உயர்த்தி அவர்கள் தலைமீது வைப்பேன்.இதற்கு ஏன் மனிதர்கள் இவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை.பதிலுக்கு எனக்கு வாழைப்பழம்,தேங்காய்,பணம் என ஏதாவது கிடைக்கும்.பணம் பாகனுக்கும்,மற்றவை எனக்கும் என எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம்.மனிதர்கள் கடவுளின் ஆசிர்வாதம் என கருதும் இச்செயல் என்னைப்பொருத்தவரை அவர்களிடமிருந்து எனக்கும் என் பாகனுக்கும் தேவையானவற்றை பெறுவதற்கான ஒரு செயல்முறை.பார்த்தசாரதிக்கு நன்றி.

ஒருநாள் ஒரு முண்டாசு மனிதரைப்பார்த்தேன்.அவர் அன்றுதான் அந்த கோவிலுக்கு வந்திருக்க வேண்டும்.என்னுடைய ஞாபக சக்தியை மனிதர்களே கண்டு வியப்பார்கள்.அதனால் நான் அவரை அன்றுதான் பார்த்தேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.சிறிது நேரம் கழித்து முண்டாசு மனிதர் கோவிலிருந்து திரும்பி வந்தார்.தலையில் வெண்ணிற முண்டாசு,வில்லெனெ நெளிந்த புருவங்கள்,ஒளிவீசும் கண்கள்,நெற்றியில் சூர்ணமும் மூக்குக்கு கீழ் முறுக்கு மீசையும் வைத்திருந்த ஒரே மனிதர்.என்னிடம் வந்த அவர் எனக்கு சிலபல வாழப்பழங்களை திண்ண கொடுத்தார்.ஏனோ தெரியவில்லை மற்றவர்களைவிட நான் இவரிடம் அதிகம் ஈர்க்கப்பட்டேன்.எனக்கு மட்டும் இவர் பேசும் மொழி தெரிந்திருந்தால் உலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாயிருந்திருப்பேன்.

அன்றிலிருந்து முண்டாசு தினமும் வருவார்.நானும் அவர் வருகையை வேண்டியே வர ஆரம்பித்தேன்.படியளக்கும் பார்த்தசாரதி இரண்டாம்பட்சமாகிப்போனார்.மனிதர்களே தங்கள் தேவைக்காக தானே கடவுளைப்படைத்தார்கள்.ஆனால் இவர்கள் படைத்த கடவுள்தான் இவர்களை படைத்ததாக தனிக்கதை வேறு.மனிதனுக்காக கடவுள்,கடவுளுக்காக நான்,எனக்காக முண்டாசு மனிதர்.இந்த தொடர்சங்கிலியின் கடைசி இணைப்பு என்னுடையது.எத்தனை கவள மடப்பள்ளி சோற்றுருண்டைகளை உண்டாலும் முண்டாசு மனிதரின் வாழைப்பழத்தை சாப்பிடாவிட்டால் அன்றைய பொழுது எனக்கு அரைப்பொழுதே.

எனக்கு புரியாத மொழியில் முண்டாசு ஏதோ மிகப்பெரிதாக செய்துகொண்டிருக்கிறார் என்று மட்டும் எனக்கு தெரிந்தது.என்ன என்பதுதான் தெரியவில்லை.ஒருநாள் பாகனிடம் கேட்டு என்னுடைய பாஷயை கற்றுக்கொண்டு என்னிடம் பழத்தை சாப்பிடும்படி சொன்னார்.என்னால் தான் அவரின் பாஷயை கற்றுக்கொள்ளமுடியவில்லை.ஒவ்வொருமுறை கோவிலுக்கு வரும்போதும் அவர் என்னைப்பற்றி தன் நண்பர்களிடத்தில் ஏதேதோ பேசுவார்.நான் அவரைப்பற்றி எனக்குள்ளே பேசிக்கொள்வேன்.அவர் பெயர் என்ன,என்ன தொழில் செய்கிறார்,எங்கு தங்கியிருக்கிறார் இப்படி என பல கேள்விகளை நான் அவரிடம் கேட்க விரும்பினேன்.மிருகமாக பிறந்ததற்காக மிகவும் வருந்தினேன்.

ஒருமுறை பாகன் சொன்ன கட்டளைகளிலிருந்து அவர் பெயர் சுப்ரமண்ய பாரதி என்றும்,மகாகவி என்றும் வெள்ளைக்காரர்களை எதிர்த்து கவிபாடி கொண்டிருப்பதாகவும் தெரிந்துகொண்டேன்.என் வாழ்நாளில் நான் சந்தித்த பாகர்களில் சிறந்தவன் இவன் தான்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு முண்டாசு வரவேயில்லை.எனக்கும் வந்தவர்களிடம் வாழைப்பழம் வாங்கி மாளவில்லை.பார்த்தசாரதி கோவிலின் முன்பு நிற்கும் ஒரே காரணத்தினால் தான் எனக்கு இவர்கள் இவ்வளவு மரியாதை செய்கிறார்கள்,ஆனால் முண்டாசு நான் எங்கிருந்திருந்தாலும் என்னிடம் அதே பிரியத்துடந்தான் இருந்திருப்பார்.சிட்டுக்குருவியையெல்லாம் நேசித்தவர் என்னை மட்டும் விட்டுவிடுவாராயென்ன.

அன்றிரவு தூங்கும்போது காதுக்குள் எறும்பு புகுந்துவிட்டது.கைகளிருக்கும் மனிதர்களாலேயே ஒன்றும் செய்ய முடியாத போது,நான் என்ன செய்ய,விதியை நொந்து இருந்துவிட்டேன்,அடுத்த நாள் காலை பாகனின் வேலையை கூட செய்யவிடவில்லை,கஷ்டப்பட்டுதான் செய்தான்.என்னை கோவிலுக்கு கூட்டிசெல்வதற்குள் ஒருவழியாகிவிட்டான்.அன்று என்னிடம் வரும் முதல் மனிதர் என் கண்களுக்கு எறும்பாக தெரிவார்,எறும்பு மீதான கோபம் அவர்கள் மீது இறங்கும்,இதுதான் எங்கள் நியதி.

அன்று முண்டாசு எறும்பாகத்தெரிந்தார்.என் தலையில் இடி இறங்கியது.அதே சிரித்த முகத்துடன் என்னிடம் வந்தவர் வாழைப்பழங்களை நீட்டினார்.எவ்வளவோ தவிர்த்தும் அவர் என்னிடமிருந்து போகவில்லை.பாழாய்ப்போனா பாகன் கூட அவரை விழக்கவில்லை.என் தலையினுள் இருந்த எறும்பாக நினைத்து முண்டாசுக்கவியின் தலைமீது என் துதிக்கையால் அடித்தேன்.ஏனோ தெரியவில்லை அவர்மீது என்கால்களை வைக்க என்னால் இயலவில்லை.கவி தரையில் சரிந்தார்.அங்கிருந்தவர்கள் அவரைதூக்கி சென்றவுடன் என்னை சங்கிலியால் கட்டிவைத்தார்கள்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு எனக்கு எந்த உணவும் தரப்படவில்லை.தந்திருந்தாலும் நான் சாப்பிட்டிருக்கமாட்டேன்.மதம் பிடித்த மனிதர்களுக்கு மதம் பிடித்த நான் தேவைப்படவில்லை.என்மொத்த எடையும் கண்ணீராய்ப்போனது போல் உணர்ந்தேன்.

அடுத்த சில நாட்களுக்கு நான் கோவில்பக்கமே செல்லவில்லை.நான் முண்டாசை தாக்கியதற்கு என்னைத்தவிர வேறு எவரும் பெரிதாக வருந்தியதாகவும் தெரியவில்லை.ஒருவழியாக மனிதர்கள் மறந்தவுடன் பாகன் என்னை கோவிலுக்கு அழைத்துசெல்ல தயார்படுத்தினான்.

நானும் முண்டாசை பார்க்கும் ஆவலில் தயாரானேன்.கோவிலுக்கு வரும் வழியில் வந்த சவ ஊர்வலம் என்கதியை கலக்கியது.இதுவரை பார்த்தசாரதியை மட்டுமே மனிதர்கள் சுமந்து பார்த்தநான் அன்றுதான் முண்டாசை மனிதர்கள் சுமந்து செல்வதைப்பார்த்தேன்.சவமாக சுப்ரமண்ய பாரதி.சாரதியை சுமக்கும் கூட்டம் கூட இல்லை அந்த சவ ஊர்வலத்தில்.

மகாகவி என்றார்கள்?!!…..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *