மதியின் பிழையன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 5,592 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோகமே போர்வையாய்ப் போர்த்தயர்ந்த நீளத்துயிலுக்கு அந்த நகரம் விடுதலை வழங்கி விட்டது. சௌந்தர்ய ரூபவதியான பருவக்குமரி, அலங்காரம் புனைந்து மணமங்களம் துய்க்கப் புறப்பட்ட கோலத்தில் குதூகலித்தது. தெரு விளக்குகள் வண்ணம் வண்ணமாய் ஒளி சிந்தின. மகர தோரணங்களும், பதாதைகளும் கொடிகளும் பொருத்தம் நிறைந்த இடங்களிலெல்லாம் அலங்காரம் தந்தன. மனைகளெல்லாம் கல்யாண வீடுகளோ என வியக்கும் வண்ணம் சோடிக்கப்பட்டிருந்தன. சாத்தியமான இடங்களெல்லாம் பாட்டும் பரதமும் அயர்ந்து மகிழ்ந்தன.

சரயுவின் கிளை நதியோரமாய் அமைந்திருந்த அந்த, அந்தப்புர அரசமாளிகை மாத்திரம் நகரத்தின் அலங்காரத்தையும் ஆரவாரத்தையும் உள்வாங்காது, தவசியின் ஆச்சிரமம் போல அமைதி காத்தது. தர்ம நியாயங்களுக்காகப் போர் செய்து வென்ற மன்னனின் நகர்ப்பிரவேச கோலாகலத்தை உயர நின்று ஆசீர்வதிக்கும் ராஜரிஷியே போல வெண்சாந்து பூசிய அந்த மாளிகை அமைதி கண்டது. மாளிகை உடையாளின் பதினான்கு ஆண்டுகால மௌனவிரதத்தை பாதுகாத்து நன்றது.

உப்பரிகையின் நிலா முற்றத்தில் படர்ந்திருந்த மாதவிக் கொடிப் பந்தலருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் வெள்ளுடைக் கோலத்தில் கைகேயி வீற்றிருந்தாள். கடந்த பதினான்கு வருடங்களாக தாங்கித் தவித்த மனப்பாரம் இறங்கிய நிலையில், மகிழ்வு தாலாட்ட, மனம் பஞ்சினும் மென்மையாகி பரவெளியில் தவழ்வது தவழ்வது போன்ற உணர்வு அவளில் வயாபித்து நின்றது.

மெல்லியதாய்ச் சலசலத்தோடும் நதியின் நீர்ப்பரப்பில் நிலை கொண்டிருந்த அவள் பார்வை, மகிழமரம் நிறைந்த அக்கரைத் தோப்பின் கரும்பச்சையில் சுகங்காணப் புறப்பட்டது.

ப்ப்ஓ…. ப்பொ…. ப்ப்ப்…. ப்ப் ஒ….

மகிழந் தோப்பிலிருந்து எழுந்த அந்த உருக்கும் இனிய ஓசையில் வசப்பட்டு அவள் உணர்வுகள் நிமிர்ந்தன. மனமகிழ்வின் ஒளி மெல்லியதாய் முகத்தில் படர்ந்தது. மகிழந்தோப்பில் உறையும் நிசிக்குயில், பின்னிரவு ஆரம்பித்ததும் நெஞ்சுருக்கும் இசையாகச் சோகரசம் இழையப்பாடுவதும் அதைச் செவியுற்றதும் இப்படி ஒரு மகிழ்வு அவளிடத்தில் வியாபிப்பதும் வாடிக்கையாகி விட்டன.

துணையிழந்த துயர் காரணமாகவோ, அல்லது இயற்கை நியதியின் வயப்பட்டோ பின்னிரவின் எல்லைவரை மகிழந்தோப்பில் நிசிக்குயிலின் வாடிக்கை தொடர்கிறது. தோப்பில் இரவுக் குருவிகள் குருவிகள் பாடுவதும் இயற்கையாய் நிகழக் கூடியதுதான். தசரதனைப் பெரிதும் கவர்ந்த இளையாளாய் அரச போகந் துய்த்த வேளையில் இதெல்லாம் அவளுக்குப் புலப்பட்டிருக்க நியாயமில்லை. பதியினால் புறக்கணிக்கப் பட்டு, சக்களத்திகளால் வெறுக்கப்பட்டு, பெற்ற மகனின் தூஷணைக்குப் பொருளாகி, நகர மாந்தரின் கரிப்புக்கு ஆளாகி, கைமை நோன்பும், பேசா விரதமும் ஏற்றுத் தனியளாய் ஆனவளின் செவிப்புலனுக்குப் புலப்படுவதாயிற்று. ஐந்து வினாடிக்கொருதரமாக சோகரசத்தைத் தேனில் கலந்த பாங்காகப் பாடிய நிசிக்குயிலின் ஓசை நித்திரைக்குச் சத்துரு. வாணாளின் விரசமுற்ற மனத்துயருக்கு மருந்தாகவும் உதவியது.

நிசிக் குயிலிசையின் சோகரசத்தில் நேற்றுவரை கட்டுண்டிருந்தவள், இன்று அதிலே சுவை மாற்றத்தைக் கண்டாள். அந்த இசையிலும் இன்பரசம் இழையோடுவதாய் உணர்ந்தாழ். தென்றல் மகிழம்பூ வாசனையை அள்ளிவந்து விநியோகம் செய்தது. மாதவி மலர் மணமும் சுவாசத்துள் நுழைந்து கிளர்ச்சியூட்டியது. உணவின் சுவையையும், மலரின் மணத்தையும் தென்றலின் இதவையும் இவைபோன்ற சுகானுபவங்களை வெகு நாட்களாகத் துறந்திருந்த கைகேயிக்கு, மலர்மணங்கூட இன்று புலப்பாடாயிற்று. மனக் கிளர்வின் குதூகலிப்புடன் அவள் சிந்தை பின்னோக்கிப் பின்னோக்கிப் பாய்ந்தது. தனிமையில், இதுபோன்ற பின்னோக்கின் தேடலில், கடந்த காலங்களில் புலப்படாத விடைகள் இன்று புலப்படும் போலவும், புதையல் கிடைத்துவிடக் கூடுமாகவும் அவளுக்குப் பட்டது.

தசரதன் கல்லாய்ச் சமைந்து நிற்கின்றான் . அன்னையர் கண்கள் கசிய உருகி நிற்கின்றனர். நகரமாந்தர் பேந்த விழிக்கின்றனர். இராமனோ, விசுவாமித்திரர் முன்செல்ல இலக்குவன் பின் தொடரக் கானகம் நோக்கி செல்கின்றான். சின்னக்காட்சிகளின் பின்,

சீதை சமேதனாய், தந்தையும், அன்னையரும், தம்பியரும், சனகன் பரிவாரமும் புடைசூழ அயோத்திக்குள் பிரவேசிக்கின்றான்.

“ஃப்ப்ஒ… ப்ப்ஒ… ப்ப்.. ப்ப்ஒ…”

நிசிக்குயிலின் ஓசையில் கைகேயியின் சிந்தை தகைகிறது. இதழ்கள் மெல்ல விரிகின்றன. மௌன நோன்பும் கலைகிறது.

இற்றை நாள் வரையில் என்மனமறிந்து பாடிய நிசிக்குயிலே இன்றுன் பாட்டில் சோக பாவத்தை என்னால் ஆசிக்க முடியவில்லை. இன்பரசம் சொட்டப்பாடு. முடியாவிட்டாலும் பரவாயில்லை, எள்ளில் இருந்து எண்ணெய் வடிப்பது போல, உன் பாட்டிலிருந்து இன்ப சுருதியை வடித்தெடுப்பேன். ஆமாம் என்னைத் தெரியும் எனக்கு.

சிந்தை மீண்டும் பின்னோக்கிச் செல்கிறது. அயோத்தி அரசவை அவையோர் வாய் புதைத்து நிற்கின்றனர். வசிட்டரும், விசுவாமித்திரரும் எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர். சோகமே உருக்கொண்டு, வாய்குழறிய வண்ணம் தசரதன் அரியணையில் வீற்றுருக்கின்றான். வசிட்டர் வாய் திறந்து பேசுகிறார். “தசரதா! ராமனை விசுவாமித்திரருடன் தபோவனம் அனுப்பு, லட்சுமணனையும் துணைக்கனுப்பு. அமிர்தத்தை அக்கினி சக்கரம் காப்பது போல உன் புத்திரரை இவர் காப்பார். தவவலிமையால் மேன்மை பெற்றவர், மாவீரர், பேரறிஞர், தத்துவ வித்தகர்,அஸ்திர வித்தையில் அதிமேதை இராட்சகர் பயம் உனக்கு வேண்டாம். காரணமின்றி எந்தக் காரியமும் இல்லை.

கைகேயியின் செவிப்பறையில் இவ்வார்த்தைகள் சங்கநாதம் செய்கின்றன. உணர்ச்சிவசப்பட்டவளாய் மனதிற்குள் பேசிக் கொண்டாள்

“ராமா! தெய்வ மகனே! சீதை மணாளனாய் வந்தநீ. அன்னையர் மூவரிடமும் ஆசி பெற்றபின், தபோவனத்து அனுபவங்களை ஒன்றுவிடாது எடுத்துக் கூறினாயே! அந்த நிகழ்வுகளின் உள்ளார்ந்த பொருள் இப்பொழுதுதான் எனக்கு விளக்கமாகிறது.”

இரவாகி விட்டது. விசுவாமித்திரரும் ராம லட்சுமணர்களும் சரயு நதிக்கரையில் நித்திரைக்கு ஆயத்தமாகின்றனர். ஜபித்தவனை எந்தத் தீங்கும் நெருங்க முடியாத ‘பலம்’ ‘அதிபலம்’ என்ற இரண்டு மந்திரங்களை முனிவர் ஜெபித்துவிட்டு ராஜகுமாரர்களுக்கும் உபதேசிக்கிறார். பின் மூவரும் கவலையின்றி துயில் கொள்ளுகின்றனர்.

ஃப்ஃப்ஓ.. ஃப்ஃப்ஓ ஃப்ஃபஃப் ஃப்ஃப்ஓ தாடகவனம்.

பூர்வத்தில் செழிப்பும் செல்வமும் மிக்க நாடாக இருந்தது. சுகேதுவின் மகளாக, அழகு சௌந்தரியாகப் பிறந்து, சுந்தன் மனைவியாக வாழ்ந்து, மாரீசனைப் பெற்று, அகத்தியரின் சாபத்துக்குள்ளாகிக் கோர உருவந்தாங்கிய தாடகை உறையும் வனம், வேள்வி செய்யும் தவசிகளுக்கு இடையூறு செய்வதை தொழும்பாகக் கொண்டவள் அவள். முனிவர் ஆணையிட ராமன் நாணெற்றுகிறான். நாணொலி வனம் நிறைந்து எட்டுத்திக்கும் ஒலிக்கிறது. தாடகை வந்தாள். அரசகுமாரர்கள் மீது கல்மாரி பொழிந்தாள். ஈற்றில் கோதண்டத்திலிருந்து வெளிப்பட்ட பாணம் தாடகையின் நெஞ்சை ஊடுருவ மலையெனச் சாய்ந்தாள். வனமும் ரமணீயமாயிற்று.

அதிகாலைப் பொழுது, விசுவாமித்திரரின் ஆச்சிரமம் முனிவர் முன்னால் அரசகுமாரர்கள் அமர்ந்திருக்கின்றனர். முனிவர் ராமனை ஆசீர்வதித்துவிட்டு தவவலிமையால் பெற்ற திவ்வியாஸ்திரங்களை உபதேசிக்கிறார். அஸ்திரப் பிரயோகம் செய்யவும் பின் அவற்றை அடக்கித் திரும்ப பெறவும் வல்ல மந்திரங்களை உபதேசிக்கிறார். அஸ்திர தேவதைகளும் பிரசன்னமாகி, உன் விருப்பப்படி இயங்குவோம்’ என வாக்களித்து மறைகின்றனர்.

“ராமா! வெற்றி வீரனே! உன் வில்லாண்மைக்கும் வெற்றிகளுக்கும் விசுவாமித்திரர் தந்த அஸ்திர உபதேசமும் ஏன் ஒரு காரணமாயிருக்கக்கூடாது? ஆம் ராமா? அதுவும் காரணந்தான்” கைகேயியின் கண்கள் ஆனந்தமாய்ப் பனித்தன. மனம் மகிழ்வில் பொங்கிற்று.

“ஃபஃப்ஓ…… ஃபஃப்ஓ…… ஃபஃஓஃப்…….. ஃபஃப்ஓ” இலக்குவனும் விசுவாமித்திரரும் பின்தொடர பின்தொடர இராகவன் இராகவன் முன்னடக்கிறான். இவன் உணர்வுகள் இனம் புரியாத இன்ப உணர்வின் கிளர்வில் மிதக்கின்றன. மனமோகனம் தரத்தக்க அழகிய ஆச்சிரமம் ஒன்று மனித வாசமற்றுவறிதே கிடக்கறது. வனமும் நிசப்த நோன்பேற்றது போல ஆழ அமைதியாய்க் கிடக்கிறது. நடைவழியிடை கிடந்த கற்பாறையில் அவன் பாதங்கள் தோய்ந்து நகர்கின்றன. பின் தொடர்கிறவர்கள் தூரப்பட்டு விட்டதான ஓர் உள்ளுணர்வு மீதுர நடைதகைந்து திரும்பிப் பார்க்கிறான் ராமன். பாறைக்கப்பால் தம்பியும் தம்பியின் தோள் பற்றியவராக முனிவருங் கூடத்தகைந்து நிற்கின்றனர். அரசகுமாரர் உணர்வில் வினாக்குறியும், முனிவரின் உணர்வில் கருணையும் கோடிட்டன.

திடீரென்று பூங்க்காற்றுப் பரவி வீசுகிறது. வனம் கலகலத்து ஒலிக்கிறது. பட்சிசாரங்கள் இனிக்கக் குரல் கொடுக்கின்றன.

மயில்கள் ஆட, மான்கள் மறுக, மந்திகள் தாவ புது வசந்தத்தின் பூரிப்பில் அந்தவனம் திளைத்தது. வழியிடைக்கிடந்த பாறை அசைந்தது, நெளிந்தது. படிந்து கிடந்த புழுதி சரிந்தது. எலும்பும் சதையுமாகி, உயிர் பெற்று மூச்சு வாங்கி எழுகிறது.ஆயிரம் சந்திரப் பிரகாசமுடைய அழகுக் கோலமாக எழுந்த அகலிகை ராமன் காலில் வீழ்ந்து நமஸ்கரித்து நிமிர்கிறாள். வியப்பு மேலிட நின்ற தசரத குமாரர்களுக்கு முனிவர் வரலாறு கூறினார். ராஜகுமாரர்கள் அகலிகையை நமஸ்கரித்து நிமிர்கின்றனர். நிஷ்டை கலைந்த கௌதமனின் வருகை காண்கின்றனர்.

கைகேயி ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தாள். மூச்சுக் காற்று எஞ்சி நின்ற நெஞ்சுச் சுமையையும் ரத்தத்தின் அழுக்கையும் அள்ளிக் கொண்டு வெளியே பாய்ந்தது. நிலா முற்றம் நிறைய ஓடித்திரிய வேண்டும் என்று அவள் கால்கள் துடித்தன. கைகளை அகல வீசி காற்றை உள்வாங்கினாள். அந்தக் காற்றில் மகிழம்பூ மணத்தது, மாதவி மணத்தது. அந்தப்புர தோட்டத்து மலர்கள் அனைத்தும் மணத்தன. வான்வெளியில் அவள் பார்வை நிலைத்தது. அங்கே….. அபர பட்ச முற்பாதிச் சந்திரன் பிரகாசமாகி நின்றது.

“ராமா! இவ்வளவு நற்காரியங்களும் வனத்திடை உன்னால் நிகழ வேண்டுமென்பதாய் தெய்வ சித்தம் இருந்திருக்கிறதே! நீ காரணமாகி, இவ்வளவு காரியங்களும் நிகழ்வதற்காகத் தவவலிமை பெற்ற விசுவாமித்திரர் கருவியானாரா? எல்லாம் அறிந்த வசிஷ்டர், கருவி, காரணம், காரியம் யாவும் தெளிந்த நிலையிலா விசுவாமித்திரருக்குப் பச்சைக்கொடி காட்டினார் அரசர் சித்தம் என்ற தடையையும் நீக்கினார்.? ராமா? தெய்வமகனே! என் செல்வமே! பதினான்காண்டு வனவாசத்தின் போதும் உன்னால் பல காரியங்கள் ஆகியிருப்பதாகக் கதைகிறார்களே! ஒ…..நான் கருவி! மந்தரை கருவி! தெய்வமே! இந்தப் பேதையைப் பழிகாரி ஆக்கித்தானா உன் சித்தத்தைச் செயல்படுத்த வேண்டும். பிழையெல்லாம் என்மேல் சுமத்தாமல் காரியம் பார்க்க உன்னால் முடியாதா?”.

“ராமா! தெய்வமகனே! என் செல்வமே! என் பிழை ஏதுமில்லை என்பதை நீயாவது உணர்வாயா? ஓ….. ராமா…..!”

“அம்மா! பதியின் பிழையுமில்லை. பரதனைப் பயந்து என்னையும் புரந்த உன்மதியின் பிழையுமில்லை. நம்மையெல்லாம் காக்கும் இறைவனின் பிழையுமில்லை. எல்லாம் விதியின் பிழை! கவலை விடு தாயே!”

இராமன் கைகேயியின் பாதங்களைத்தொட்டு நமஸ்கரித்தான். இந்த வேளையில் அவனை அங்கு எதிர்பார்க்காத கைகேயி சிறிது அதிர்ச்சியடைந்தாள். உடனே தன்னைச் சுதாகரித்துக் கொண்டவளாய், அவனை ஆசிர்வதித்து, தோள்களைப்பற்றி தூக்கி விட்டாள். பொங்கி விம்மினாள், கண்களில் அருவி பாய்ந்தது. தழுதழுத்த குரலில்,

“என் செல்வமே! பதினான்காண்டுகள் படாத பாடெல்லாம் பட்டுவிட்டு, கொடியவர்களான வல்லவர்களிடமெல்லாம் மோதிக்களைத்த நிலையில் நகர் வந்த நீ உன் மாளிகையில் ஒய்வெடுப்பதற்குப் பதிலாக, இந்தப் பின்னிரவில் என்னைத்தேடிக் கொண்டு ஏனப்பா வந்தாய்? என்று கூறி முடித்தாள்.

“தாயின் கருவறையிலிருந்து போராடித்தானே புவியில் பிறந்தோம். பிறந்த எவ்வுயிர்க்கும் மரணிக்குமட்டும் போராட்டமோயாது. நான் மன ஆரோக்கியத்தோடும் தேகாரோக்கியத்தோடும்தான் இருக்கிறேன் தாயே! உங்களைக் கண்டு ஆசி பெறுவதையும், ஆறுதல் கூறுவதையும் விட வேறென்ன காரியம் வேண்டிக்கிடக்கிறது.

“அம்மா! நான் கூறுவதைக் கேளுங்கள். தேவலோகத்திலும் புகள் பெற்ற என் தந்தை உங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி, பரதனை அழைத்து ராஜிய பாரம் தாங்கச் செய்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். பரதன் முடியை என் தலையில் சூடியிருப்பான். எல்லாம் அறிந்த சக்கரவர்த்தியே பிழைகளின் மூலாதாரமாய் அமையவில்லையா? ஆமாம் தாயே! தந்தையிலும் பிழையில்லை தாயாகிய தங்களிலும் பிழையில்லை எல்லாம் விதியின் பிழை.”

கைகேயி, ராமனை அணைத்து உச்சி மோந்து ஆனந்தப் பரவசத்தவளாகி பிறவிப் பயனை அடைந்ததான புளகாங்கிதம் முற்றாள். பின் விலத்தி நின்று மகிழந்தோப்பை நோக்கினாள்.

“ஃபஃப்ஓ…… ஃபஃப்ஓ ஃபஃபஃப் ஃப்ஃப்ஓ”

– சாகித்திய விழா மலர் – 1993

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஒக்டோபர் 2007, எம்.ஐ.எஸ்.ஹபீனா கலீல், மருதமுனை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *