ஈஸ்டர் மகிழ்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 1,690 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இன்று பெரிய வெள்ளிக்கிழமை. இறை யேசுவின் திருப்பாடுகளை நினைவுபடுத்தும் வகையில் பெரிய சிலுவைப்பாடு நடந்து முடிந்து, தேவாலயத்தில் நற்கருணை பெட்டியின் முன் கறுப்புத்திரை போடப்பட்டிருந்தது. சகோதரி தெரசா இறைவன் முன் கரங்களை விரித்து மனதார வேண்டிக் கொண்டிருந்தார். ஆலயத்திற்கு வந்தவர்கள் அனைவரும் திரும்பிப் போயிருக்க, உபதேசியார் அமலோற்பவம் ஒவ்வொரு விளக்கையும் விசிறியை யும் அணைத்துவிட்டு, கதவுகளையும் ஜன்னல்களையும் மூடத்தொடங்கினார். சகோதரி தெரசா கைகளை விரித்து, சிலுவையில் தொங்கும் யேசுநாதரைப் பார்த்து விசித்து விசித்து அழுதவாறு ஜெபித்துக்கொண்டிருப்பதை பார்த்து மனமுருகி “என்ன சிஸ்டர் அழுது கொண்டிருக்கிறீர்கள்? என்ன விஷயம்?” என்று கேட்டார், உபதேசியார்.

“உங்களுக்குத் தெரியாத விஷயமா? என் தாய் தந்தையரை இந்த ஒரு ஆண்டுக்குள் எடுத்துக்கொண்ட இறைவன் இப்போது என்னைக் கவனமாகப் பாதுகாத்துவந்த மதர் பிலோமினாவையும் எடுத்துக்கொள்ள விழைந்து கொண்டிருக்கிறார்.”

உபதேசியார் கேள்விப்பட்ட செய்திதான்.

“மதர் பிலோமினாவுக்கு வயிற்று வலி வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவர்களுக்கு வயிற்றில் ஏதோ ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லி யிருக்கிறார். அந்த ஆபரேசன் முடிந்தும் அவர்கள் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார். என்ன செய்வதென்று தெரியவில்லை” தெரசா கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

“இதிலே பங்குத்தந்தை நாளை இரவு நடக்கப்போகும் நடுநிசி ஈஸ்டர் திருப்பலிக்கு எல்லாஏற்பாடுகளையும் நான்தான் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார்.”

“இவ்வளவு மன வேதனையோடு ஈஸ்டர் திருப்பலிக்குத் தயாரிப்பில் இறங்க முடியுமா என்று நீங்கள் வருத்தப் படுகிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. வேண்டுமானால் நமது பங்குத்தந்தை டேவிட் அவர்களிடம் நான் சொல்லி வேறு சிஸ்டர்களிடம் இந்த ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லட்டுமா, சிஸ்டர்” என்று அன்புடன் கேட்டார், உபதேசியார் அமலோற்பவம்.

“வேண்டாம், உபதேசியாரே. இறைவன் யேசு இத்தனை பாடுகள் பட்டதைவிடவா எனக்குத் துக்கமும் துன்பமும் அதிகமாகி விட்டன? எனக்குக் கொடுத்த பணிகளை நானே செய்துகொள்கிறேன். பங்குத் தந்தை . டேவிட் அவர்களிடம் ஏதாவது சொன்னால் ‘ஏன் முன்னாலே என்னிடம் சொல்லவில்லை’ என்று வருத்தப் படுவார்கள். பரவாயில்லை. ஆனால், நாளைக் காலையில் முதலில் நான் போய் மதர் பிலோமினா அவர்களைப் பார்த்து விட்டு தேவாலயத்திற்கு விரைவில் வந்துவிடுகிறேன். நீங்கள் தேவாலயத்தை. அலங்காரம் செய்வதற்கு வேண்டிய பொருட்களை எனக்காகப் பங்குத்தந்தையின் பங்களாவிலிருந்து எடுத்து வந்து வைத்துவிடுவீர்களா?” என்று தயவுடன் கேட்டார், சகோதரி தெரசா.

“கண்டிப்பாகச் செய்கிறேன் சிஸ்டர். வேறு எதுவும் உதவிகள் வேண்டுமா? பூக்கள் புதியதாக வேண்டும். தென்னம்பாளைகள் அறுத்து வந்து விரித்து வைப்பதற்கு ஏற்பாடு: செய்துவிட்டீர்களா, சிஸ்டர்?” என்று கேட்டார், உபதேசியார்.

“நான் ஆஸ்பத்திரிக்குப் போய், முதலில் மதர் பிலோமினா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொள்கிறேன்” என்று ஆலயத்தைவிட்டு கான்வென்டை நோக்கிக் கிளம்பினார், தெரசா.


மறுநாள் பெரிய சனிக்கிழமை. அதிகாலையே பேருந்து பிடித்து மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தார். தெரசா. மதர் பிலோமினாவைப்பார்த்து “எப்படியம்மா இருக்கிறது, இப்போது?” என்று கேட்டார்.

“எனக்கு இப்போது உடம்புத் தெம்பாக இருக்கிறது. இந்த ஆண்டு பாதர் டேவிட் உன்னைத்தானே தயாரிப்புகளையும் செய்யச் சொல்லி சொன்னார்கள். நீ ஏன் வீணா என்னைப் பார்க்கக் கிளம்பி வந்தாய்?” என்று கேட்டார், பிலோமினா.

“அம்மா, என் தாய் தந்தையும் இறந்தபோது நீங்கள் எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தீர்கள்? இன்று இரவு மகிழ்ச்சியான வேளையில் நீங்கள் ஈஸ்டர் திருப்பலி காணவே நாளைய ஈஸ்டர் கொண்டாட்டங்களிலோ சேரமுடியவில்லை. அதனால் உங்களைப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றுதான் கிளம்பி வந்தேன். நான் கொண்டுவந்த பழங்களை சாப்பிட்டு ஓய்வு எடுங்கள். நான் ஈஸ்டர் முடிந்து வந்து உங்களைப்பார்க்கிறேன்.
தேவாலயத்தை அலங்கரிக்க பூ வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். வருகிறேன், அம்மா” என்ற எழுந்தார், தெரசா.

“மகிழ்ச்சியாக இரு, தெரசா. ஈஸ்டர் வாழ்த்துக்கள்” என்று வழியனுப்பினார் பிலோமினா.

அவருக்கும் வாழ்த்துச் சொல்லிவிட்டு, தெரசா வெளியே வந்தபோது பெரிய ஊர்வலம் ஒன்று சாலையில் போய்க்கொண்டிருந்தது.

அருகில் நின்ற பெண்ணிடம் “என்ன ஊர்வலம் போகிறார்கள்?” கேட்டார். தெரசா,

“யாரோ தலைவரை வெட்டிக் கொன்றுவிட்டார்களாம். பஸ்களை தீ வைத்துக் கொளுத்திக் கடைகளை எல்லாம் மூடிவிட்டார்கள். ஒரு வாகனமும் ஓடவில்லை” என்றாள், அந்தப்பெண்மணி.

‘என்ன சோதனை இறைவா? இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் பூக்கள் வாங்கிக்கொண்டு தேவாலயம் திரும்ப வேண்டுமே’ என்று எண்ணிய தெரசா, பதினெட்டுக் கிலோ மீட்டர் நடந்து தேவலாயம் போய்ச் சேர முடியாதே. என்ன செய்யப் போகிறேன்’ என்று மனதிற்குள் வருத்தப்பட்டவாறு, யோசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த டாக்டர் ரமேஷ், “அலோ சிஸ்டர். என்ன இந்தப் பக்கம்?” என்று கேட்டார். தன் பிரச்சினைகளைச் சொன்ன தெரசா, “நான் பூக்கள் வாங்கிக்கொண்டு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் தேவாலயத்தில் இருக்க வேண்டும். இரவு திருப்பலிக்கு தேவாலயத்தை அலங்கரிக்க வேண்டும்” என்றார்.

“தெரசா… நாம் கல்லூரியில் படிக்கும்போது இருந்த அவசரங்களிலேயே இன்றும் இருக்கிறாய். நீ கொஞ்சம்கூட மாறவில்லை” என்று டாக்டர் ரமேஷ் சிரித்தார்.

“நான் என்ன உதவி செய்ய வேண்டும்? எந்த பஸ்சும் ஓடவில்லை, இல்லையா. வலைப்படாதீர்கள். நான் என் காரை அனுப்பி வைக்கிறேன். டாக்டர் கார் என்றால் யாரும் தடுக்கமாட்டார்கள்” என்றார்.

“மிகவும் நன்றி” என்றாள், தெரசா.

“உனக்குப் பூக்கள் வேறு வேண்டுமே? ஒன்று செய்… நான் என் வீட்டிற்கு போன் பண்ணிச் சொல்கிறேன். எங்கள்தோட்டத்தில் பூத்த பூக்களை என் மனைவி பறித்து வைத்திருப்பாள். வாங்கிக்கொண்டு கிளம்பு” என்றார், டாக்டர்.

“ரொம்ப நன்றி டாக்டர்” என்று நெகிழ்ந்து போனார், தெரசா.

“போய் வாருங்கள். ஈஸ்டர் வாழ்த்துக்கள். உங்கள் யேசுவிடம் எனக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்”. என்றார், டாக்டர்.

“கண்டிப்பாக ஜெபிக்கிறேன் டாக்டர்”என்று கைகூப்பி நனறி. தெரிவித்துவிட்டு, டாக்டரின் காரில் தெரசா கிளம்பினார்.

நேராக ஆலயத்திற்கு வந்து, கொண்டுவந்திருந்த பூக்களையும் உபதேசியார் கொண்டு வைத்திருந்த துணிகளையும் கொண்டு, மற்ற சகோதரிகள், பாட்டு வகுப்பு மாணவிகளின் துணையோடு தேவாலயத்தை அலங்கரிக்கத் தொடங்கினார்.

மாலையில் தேவாலயத்திற்கு வந்து பார்த்த பாதர் டேவிட், “மிகவும் பிரமாதமாக அலங்கரித்திருக்கிறீர்கள் சிஸ்டர். உங்கள் இரசனையும் கலைத் திறனும் பாராட்டவேண்டியவை. இன்று நடுநிசித் திருப்பலிக்கு வரும் மக்கள் அனைவரும் தேவாலய அலங்காரத்தைப் பற்றிக் கண்டிப்பாக பாராட்டிப் பேசுவார்கள்” என்றார்.

“மிக்க நன்றி பாதர்” என்று கைகப்பிய தெரசாவிடம், “உங்களுக்கு போன் வந்திருக்கிறது” என்றார், உபதேசியர், தெரசா விரைந்து சென்று, போனை எடுத்தார்.

“தெரசா, நான் மதர் பிலோமினா பேசுகிறேன். எனக்கு உடல் நல்ல குணம் கிடைத்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். ஆபரேஷன் எதுவும் தேவையில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். நானும் நடுநிசித் திருப்பலியை உங்களோடு பங்குகொள்ள வருகிறேன்?”

தெரசாவின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது!

– ராணி 23-04-2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *