நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…!

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 10,656 
 

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

நேரம்: 08:18:03 சனிக்கிழமை

திட்டமிட்டபடி அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆவேசமாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலலைகள் ஓரளவு ஓய்ந்து போயிருந்தன. இருண்ட வானம் கடலில் கரும்பச்சை பூசிக் கொண்டிருக்க அந்த நீரலைகளைக் கிழித்தபடி கப்பல் வேகமாக ஆழ்கடல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மைக்கேல் கடல் அலைகளை வெறித்துப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

‘அடுத்து என்ன செய்வது’ என்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது.

‘உண்மையிலேயே மேலிடத்தில் இருந்துதான் இந்தச் செய்தி வந்ததா? இல்லை அரசுக்கு எதிரான சதிகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வந்ததா? அரசிற்கு எதிரானவர்களும் மேலிடத்தில் இருக்கிறார்களா? மைக்கேலுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 

கடலலைகள் கொஞ்சம் ஓய்ந்தது போலிருந்தாலும் அவனது நெஞ்சின் அலைகள் அவனுக்குள் வேகமாக மோதிக் கொண்டிருந்தன. 

‘என்ன பாஸ் யோசிக்கிறீங்க? யார் போன்ல? ஏதாவது தப்பு நடந்து போச்சா?”” அருகே நின்ற ஷேர்மன் கேட்டான்.

‘இல்லை ஒன்றுமில்லை! அது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!’

”அவர்தான் பேசினார் என்று உங்களுக்கு நிச்சயமாய் தெரியுமா?’

‘அவராகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.’

‘அவர் அப்படி என்னதான் சொன்னார்? உங்க முகம் சட்டென்று வாடிப்போச்சே..’

‘ஆமாம் நான் சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியை அவர் கொடுத்திட்டார்!’ 

நடந்ததைச் சொல்வதா விடுவதா என்று மைக்கேல் ஒரு கணம் தயங்கினான். யாரிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டும் போல இருந்தது. ஷேர்மனிடம் சொல்லி ஆலோசனை கேட்கலாம் என நினைத்து நடந்ததைச் சொன்னான்.

‘என்ன பாஸ், உங்களுக்குப் பைத்தியமா? இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா ஆயத்தங்களையும் செய்து விட்டு, கடைசி நிமிடத்தில் நம்ம திட்டத்தைக் கைவிடுவதா?’

‘வேறு என்னதான் செய்யச் சொல்கிறாய்?’

‘நாங்க ஒன்றைக் கவனிக்கணும். காலநிலை கூட ‘நமக்குச் சாதகமாய் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எங்க திட்டத்தைக் கைவிடுவது நல்லதா? அத்தனை உயிரும் மூச்சுத் திணறி பரிதவித்துச் சாவதற்கு நாம காரணமாய் இருக்கணுமா? சொல்லுங்க.’

‘வேறு என்ன தான் நாங்க செய்யலாம் என்று நினைக்கிறாய்? 

‘என்னாலே ஏதாவது உதவி செய்யலாம் என்றால் அதற்கு நான் தயாராய் இருக்கிறேன்’

‘அப்போ நான் ஒன்று செய்யப்போகிறேன். குடைசி நிமிடத்தில் மேலிடத்து உத்தரவை மீறி கதவைத் திறந்து அவர்களை வெளியே கொண்டு வந்து விடுவதென்று தீர்மானித்து விட்டேன்!’

‘ரொம்ப நல்ல ஐடியா, ஆனால் நீங்க இப்படிச் செய்வதால் உங்க உயிருக்கு ஏதாச்சும்…….?’

‘என்ன செய்வாங்க? எங்கேயாவது பாதாளச் சிறையிலே என்னை அடைப்பாங்க அல்லது மரணதண்டனை கொடுப்பாங்க! எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை!’

‘என்ன பாஸ் இப்படி அலட்சியமா சொல்றீங்க?’

‘ஆமாம், பல உயிர்களைக் காப்பாற்ற என்னுடைய உயிரைத் தியாகம் செய்ய நான் தயாராயிருக்கிறேன்!’

‘அப்போ உயிர்த் தியாகம் செய்ய நீங்க தயார்!’

‘ஜெஸ்…..!’ பெருவிரலை உயர்த்தி உறுதியோடு சொன்னான். மைக்கேலின் வார்த்தைகளில் உறுதி தெரிந்தது. 

‘எனக்கு அப்பா வேணும்’ என்று கேட்டு அழுத சிறுமி திரேஸா, மைக்கேலின் மனக்கண்ணில் நிழலாய் வந்து போனாள்.

நேரம்: 12:55:09 சனிக்கிழமை

விபத்து நடந்த இடத்தை அடைந்ததும் ஆழ்கடலுக்குள் செல்வதற்கான பிரத்தியேக ஆடைகளை இருவரும் அணிந்து கொண்டனர். கதவைத் திறப்பதற்கு வேண்டிய நவீன உபகரணங்கள் அடங்கிய பெட்டியையும், ஒருவரோடு ஒருவர் செய்தி பரிமாறிக் கொள்வதற்கும் கப்பலில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்தோடு தொடர்பு கொள்வதற்கும்; வேண்டிய சாதனங்களையும் எடுத்துக் கொண்டனர். நீரின் அழுத்தத்திற்கும் குளிருக்கும் ஈடு கொடுக்கக்கூடிய உடைகளோடு ஆக்ஸிஜன் சிலிண்டரும் மாஸ்க்கும் அணிந்து நீரில் குதித்து ஆழ்கடலை நோக்கி நீந்தினர்.

விபத்தில் அகப்பட்ட சப்மரீனை அடைந்ததும் மைக்கேல் நேரத்தை வீணாக்காமல் தான் எற்கனவே குறித்து வைத்திருந்த பின்பக்கத்தில் இருந்த கதவுப் பக்கம் சென்று காரியத்தில் இறங்கினான். எவ்வளவு சீக்கிரம் கதவைத் திறக்கிறோமோ அவ்வளவிற்கு அதிகமான உயிர்களைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையோடு விரைவாகச் செயற்பட்டான். 

அவனுக்குக் கதவைத்திறப்பதற்குத் தேவையான உபகரணங்களை அவ்வப்போது ஷேர்மன் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தான்.

மைக்கேல் பொறுமையாகச் செயற்பட்டான். ஆழ்கடலில் வைத்து ஸப்மரீன் கதவைத் திறப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதும், ஆனாலும் எடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிப்பதில் தனது பாஸ் திறமையானவன் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் ஷேர்மன் கண்டிருக்கிறான். எப்படியும் மைக்கேல் கதவைத் திறந்து விடுவான் என்ற நம்பிக்கை அவன் மனதில் இருந்தது.

திடீரென மைக்கேல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான்.

‘என்ன பாஸ் என்னாச்சு?’

‘காம்பினேஷன் லாக்கை திறந்திட்டேன், இன்னும் ஒரு லாக்தான் பாக்கியிருக்கு எப்படியும் கொஞ்ச நேரத்திலே திறந்திடலாம்.’

‘அந்த லாக்கையும் திறந்துட்டால் கதவைத் திறந்துடலாமா பாஸ்?’

‘ஆமா! நாம பட்ட கஷ்டத்திற்கு சீக்கிரம் ஒரு விடிவு வரப்போகுது.’

‘அப்படின்னா அவங்களை உயிரோட வெளியே கொண்டு வரமுடியுங்கிறீங்களா?’

‘ஆமா, முடியும். இதற்காகத் தானே இத்தனை கஷ்டப்பர்றோம்!’

‘அவங்க வெளியே வந்தால் உங்க நிலைமை என்னாகும் என்று யோசிச்சுப் பார்த்தீங்களா?’

‘இதிலே யோசிக்க என்ன இருக்கு? அவங்க உயிர் பிழைக்கணும், அவங்க குடும்பம் சந்தோஷப்படணும், அதிலே தான் ஆத்ம திருப்தி இருக்கு!’

‘அப்போ அவங்க உயிரைக் காப்பாற்ற உங்க உயிரைத் தியாகம் செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?’

‘இது தியாகமல்ல, மனிதாபிமானம்!’ 

‘எதுவாக இருந்தாலென்ன, நீங்க எதற்கும் துணிஞ்சிட்டீங்க?’

‘ஆமா! மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் என் கடமையைத்தான் நான் செய்யறேன்.’ 

எப்படியும் லொக்கைத் திறந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு மைக்கேல் தனது கவனம் முழுவதையும் அதிலே செலுத்திக் கொண்டிருந்த போது,  பின்னால் நீந்திவந்த ஷேர்மன் சட்டென்று மைக்கேலைப் பிடித்திழுத்து ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் குழாயைத் துண்டித்து விட்டான்.

ஷேர்மனின் இந்த எதிர்பாராத நடவடிக்கையால் அதிர்ந்து போன மைக்கேல், ‘ஷேர்மன் நீயா?’ என்றான் சற்றும் நம்பமுடியாமல். அடுத்த சில விநாடிகளில்,

ஆக்ஸிஜன் இல்லாமல் மைக்கேல் மூச்சுத் திணறத் தொடங்கினான்.

‘ஆமாம் மைக்கேல்.. நானே தான்! மேலிடத்து உத்தரவை மீறி நீ கதவைத் திறக்க முயன்றால், உன் கதையை முடித்து விடும்படி எனக்குக் கட்டளை இட்டிரு க்கிறார்கள். நான் என் கடமையை தான் செய்கிறேன். அதுமட்டுமல்ல, நீ உயிரோடு இருந்தால் எனக்குப் பதவி உயர்வே கிடைக்கப் போவதில்லை! உன்னோட உயிர்த் தியாகத்தால் எனக்குப் பதவி உயர்வும்  வீரச்சாதனை செய்ததற்கான வீரப்பதக்கமும் கிடைக்கப் போகிறது.’

மூச்சுத் திணறி மைக்கேல் உயிருக்குப் போராடும் போது ஷேர்மனின் வார்த்தைகள் துரோகத்தனத்தின் எதிரொலியாக ஒலித்தன. யாரை நல்ல நண்பன் என்று நம்பினானோ, அவனே கூட இருந்து குழி பறித்த போது மைக்கேல் செய்வதறியாது அப்படியே உறைந்து போனான்.

ஆழ்கடலில் உண்மைகள் அமிழ்ந்து போக உயிர் பிரியும் கடைசிக் கணத்தில் மூச்சுக்காய்ப் பரிதவித்து, அவன் விட்ட கடைசி மூச்சும் நீர்க்குமிழியாய்; மேலே வந்து கடல் மட்டத்தில் உடைந்து அழிந்து போயிற்று.

நேரம்: 18:00:00 சனிக்கிழமை

டி.வி-யின் மாலைச் செய்தியில் ஆழ்கடலில் மைக்கேலுக்கு நடந்த விபத்துப் பற்றி அறிவிக்கப் பட்டது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மைக்கேல் தற்செயலாக நடந்த விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாகவும், அவனோடு உதவிக்குச் சென்ற ஷேர்மன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் அறிவித்தார்கள். அந்த விபத்துக் காரணமாக காலம் தாமதித்துத் தான் ஸப்மரீன் கதவைத் திறக்க முடிந்தது என்றும் உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் இறந்து போய்க் காணப்பட்டதாகவும் மேலும் அறிவித்தார்கள். உயிர் தப்பிய ஷேர்மனுடன் நடந்த நேரடிப் பேட்டி செய்தியின் பின் ஒளிபரப்பப்படும் என்றும் சொன்னார்கள். 

காத்திருப்புக்கள், நம்பிக்கைகள், வாக்குறுதிகள் எல்லாம் அந்த ஒரு கணத்தில் உடைந்து சிதறிப் போயின. உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாடகத்தின் முடிவு எதிர்பாராத காரணங்களால் ஒரு சோக முடிவாகப் போயிற்று.

அடுத்த வீட்டுச் சினேகிதி பரபரப்பாக ஓடிவந்து மாலைச் செய்தியில் அறிவித்ததை திரேஸாவிடம் சொன்னபோது திரேஸா அதை நம்ப மறுத்து விட்டாள்.

‘மைக்கேல் அங்கிள் சொன்னது போல வதந்திகளை நான் நம்பத் தயாராயில்லை’ என்று பிடிவாதமாக அந்தச் சிறுமி நம்பமறுத்து விட்டாள்.

கொடிகள் எல்லாம் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு இறந்து போன மாலுமிகளுக்காக நாடே துக்கத்தில் மூழ்கியது. உறவுகள் மௌனமாய் நெஞ்சுக்குள் விம்மி விசும்பின.

தினந்தினம் நடக்கும் ஆயிரமாயிரம் விபத்து மரணங்களில் இதுவும் ஒன்றாகிப் போய்விட்டது. காலம் கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் துயரத்தைத் தனக்குள் விழுங்கிக் கொண்டது.

மைக்கேல் அங்கிள் கட்டாயம் அப்பாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவார் என்ற நம்பிக்கையோடு கள்ளங் கபடமறியா அந்தச் சிறுமி திரேஸா தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாசலிலேயே உட்கார்ந்து இன்னமும் வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறாள்! 

(முற்றும்)

– நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…! (குறுநாவல்), முதற் பதிப்பு: 2020, ஆனந்தவிகடன் பவழவிழா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…!

  1. எதிர்பாராத திருப்பங்களுடன் காதல் பாசம் சோகம் என்று பல உணர்வுகளை வெளிக் கொண்டு வந்திருந்தது. சர்வதேசப் புகழ்பெற்ற எழுத்தாளரான குரு அரவிதன் சாருடைய கதைக்குப் பிரபல ஓவியர்கள் ஐவர் படம் வரைந்திருப்பது பாராட்டுக்குரியது. வேறு எந்தக் கதைக்கும் விகடனில் ஐந்து ஓவியர்கள் படம் வரைந்திருப்பதாக நான் அறிந்த வரையில் தெரியவில்லை. இதேபோல காதலர் தின ஒரே வாரத்தில் இந்தியா இலங்கை கனடா யேர்மனி இங்கிலாந்து ஆகிய ஐந்து நாட்டு இதழ்களில் காதலர்தினக் கதை எழுதிச் சாதனை படைத்திருந்தார். அதில் அவளுக்கு ஒரு கடிதம் என்ற ஒரு கதை விகடனிலும் அந்த வாரம் வெளிவந்து பாராட்டைப் பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *