அவளின் பதிலுக்காக…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 9,076 
 

எனது கல்லூரியின் இறுதி ஆண்டு இது. ஆண்மை பொங்க பெரிய மீசையை உதட்டின் மேல் படற விட்டிருந்தாலும், பெண்மையை கண்டால் பத்தடி தள்ளியே நிற்பேன் – கொஞ்சம் வெட்கம் தான் காரணம். அதிலும் நான்கு பெண்கள் கூடி நின்றால் அவர்களை கடந்து செல்வதற்குள் பேஸ்மெண்ட் கொஞ்சம் நடுங்கித் தான் போகும் – கொஞ்சம் பயம் தான் காரணம்.

ஆனால், நேற்று இந்த பயமும், வெட்கமும் என்னை தனியே விட்டுவிட்டு எங்கு சென்றதோ தெரியவில்லை!!!

ஆம், எங்கிருந்து தைரியம் வந்ததோ தெரியவில்லை அவளிடம் அந்த மூன்று வார்த்தைகளை சொல்லிவிட்டேன். அதுவும் தோழிகள் படை சூழ பேருந்துக்காக அவள் காத்து நின்றிருந்த சமயத்தில், அவர்கள் முன்பு வைத்தே அந்த மூன்று வார்த்தைகளை அவளிடம் சொல்லிவிட்டேன்!!!

நான் அவ்வாறு அவளிடம் கேட்பேன் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேராசிரியர்களையே கேள்விகளால் கதறவிடும் கரார் பார்ட்டியான அவளே சற்று அதிர்ச்சி உறைந்துவிட்டாள் – என் மூன்று வார்த்தைகளில்.

பதிலுக்காக அவள் கண்களை நோக்கி நான் நின்றேன். என்ன சொல்வது என்று தெரியாமல், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் என் கண்களையே அவளும் நோக்கினாள். சொன்னால் நம்பமாட்டீர்கள், கண் கொட்டாமல் என் கண்களையே அவள் நோக்கிய சமயத்தில், முறுக்கிவிட்ட என் மீசை கூட வெட்கத்தில் தரையை நோக்கி நாணியது!!!

அவள் ஏதோ என்னிடம் சொல்ல முயன்ற சமயம் பார்த்து பேருந்து வந்துவிட்டது. என்னை திரும்பித் திரும்பி பார்த்தவாறே பேருந்தில் ஏற சென்ற அவளிடம், “பதில் சொல்லாம போறியே?” என்று வினவினேன். அதற்கு அவள் தன் கண்களை சுருக்கி ஒரு “முறைப்பை” பதிலாக அளித்தாள்.

அவளது முறைப்பை என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது என்பது தெரியாமல் குழம்பி நின்றேன். ஆர்வமிகுதியில் வீட்டிற்கு சென்றதும் பலமுறை அவளுக்கு போன் செய்து பேச முயன்றேன். ஆனால், அவை அனைத்துமே தவறிய அழைப்பாக தான் சென்று சேர்ந்தது.

இருந்தபோதும் முயற்சியை கைவிட மனமில்லாத நான், என் “என்ன செயலியின்” (அதாங்க வாட்ஸ்அப்) உதவியைக் கொண்டு பல மெசேஜ்களை அவளுக்கு தட்டிவிட்டேன். ஆனால், அவைகளும் அவளிடம் சென்று சேர மாட்டேன் என்று ஒற்றைக்காலில் அடம்பிடிப்பதை போல ஒற்றை டிக்கிலேயே நின்றது!!!

தவறு செய்து விட்டேனோ என்று என் மனம் வருந்த தொடங்கியது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்து, வேதனையில் நெழிந்த அந்த சமயம், “டோக்… டோக்…” என்று என் வாட்ஸ்அப் ரிங்டோன் மென்மையாக ஒலித்தது.

“அவள் தான் மெசேஜ் செய்திருப்பாள்! ஐயோ, நான் சொன்ன மூன்று வார்த்தைகளுக்கு “ஓகே” சொல்லுவாளா அல்லது “முடியாது” என்று கூறி என் இதயத்தை நொறுக்கிவிடுவாளா?” என்ற பதட்டத்தில் என் வாட்ஸ்அப்பை அவசர அவசரமாக திறந்து பார்த்தேன்…

“Relatives in House. Cant talk now. Buy a Cadbury Silk Heart Pop 4me 2morrow.” என்று அவள் பதில் அனுப்பி இருந்தாள்!!!

“ஓகே” என்று நேரடியாக சொல்லாவிட்டாலும், உரிமையாக என்னிடம் Heart Pop கேட்டதால், மகிழ்ச்சி என் உச்சந்தலையை நோக்கி பாய்ந்து சென்றது. இது என்ன கனவா? நிஜமா? என்று அறியாமல் தவித்து நின்றேன். நாளைய பொழுது விடியலுக்காக காத்திருந்த எனக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகவே தோன்றியது.

அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து, அவள் ஆசையாக கேட்ட Heart Pop chocolateஐ வாங்கிவிட்டு, வகுப்பறையின் வாசலிலேயே ஒரு வாட்ச்மேனை போல அவள் வருகைக்காக காத்து நின்றேன். தூரத்தில் அவள் வருவதை என் கண்கள் என் இதயத்திடம் சொல்ல, அது தாறுமாறாக படபடக்கத் தொடங்கியது!!!

என் அருகில் வந்த அவள், “Chocolate எங்கடா?” என்று மிகவும் இயல்பாக கேட்டாள். நானும் என் கையில் வைத்திருந்த சாக்லேட்டை புன்னகை பூக்க அவளிடம் நீட்டினேன். ஆனால், அதை வாங்கிக் கொண்ட அவள் பதில் எதுவும் கூறாமல் அவள் இருக்கையை நோக்கி நகர்ந்தாள்.

பதிலுக்காக அவள் பின்னாடியே சென்ற நான், “ஏய், நான் சொன்னது…” என்று இழுத்தேன். அதற்கு “இருடா, அலையாத.” என்று கூறிய அவள், தன் புத்தகப் பையை திறந்து அதை என்னிடம் நீட்டினாள். நானும் மகிழ்ச்சியுடன் “Thanks di” என்று அதை பெற்றுக் கொண்டு, HOD அறையை நோக்கி பயணித்தேன் – என் Assignmentஐ Submit செய்ய!!!

நான் அவளிடம் சொன்ன மூன்று வார்த்தைகள் – “Assignment எழுதி தருவியா???”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *