மாண்புமிகு அப்புசாமி ஒன்லி

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,529 
 
 

அப்புசாமிக்கு உற்சாகம் ‘பொங்கலோ பொங்கல்’ என்று பொங்கியது. ‘இன்பத் தேன் வந்து பாயுது கண்ணினிலே’ என்று பாட வேண்டும் போலிருந்தது.

ஹோட்டலில் நெய் தோசை என்ற பெயரில் கொண்டுவந்து தரப்படும் மாபெரும் வறண்ட மாவுப் பரப்பில் அசல் நெய் வாசனையே அடித்தால் என்ன ஆனந்தம் ஏற்படுமோ, அதைப் போல நூறு மடங்கு குதூகலம் ஏற்பட்டது. கையிலிருந்த முகவரியை இடைவிடாது படித்தார். ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் வருகிற மாதிரி, இடைவெளி விட்டு இடைவெளி விட்டு சொட்டுச் சொட்டாகப் படித்தார்.

‘மாண்புமிகு உயர்திரு அப்புசாமி அவர்கள் மட்டும்’

‘மட்டும்’ என்ற எழுத்துக்களின் மீது ·ப்ளாரசண்ட் மசியினால் மஞ்சளான பச்சை நிறமோ, பச்சையான மஞ்சள் நிறமோ தகதகவெனப் பூசப்பட்டிருந்ததால், அந்த எழுத்துக்கள் மட்டும் புதிதாகத் திறக்கப்பட்ட ஒயின் கடை போர்டு போல ஜொலித்தன.

திருமண நிகழ்ச்சிக்கு அப்புசாமி மட்டும் வரவேண்டும். அவர் வீட்டிலிருந்து வேறு யாரும் (வேறு யாருமென்ன, சீதாப்பாட்டி) வந்துவிடக்கூடாது என்பதுதான் அந்த ‘மட்டு’ வுக்கு அர்த்தம்.

“இவ்வளவு எர்லியாகப் போஸ்ட் வந்து விட்டதா? ஏதாவது குரியர் சர்வீஸில் வந்த மெயிலா?” என்றாள் சீதாப்பாட்டி, பாட்டிகள் முன்னேற்ற கழகத்துக்குக் கிளம்பத் தயாராகத் தன் முகத்துக்கு நிலைக் கண்ணாடி முன் நின்று ·பைனல் டச்சஸ் கொடுத்தவாறு.

‘மெயிலுமில்லை, பாசஞ்சருமில்லை. இது ஐயாவுக்கு உங்கள் பாட்டிகள் கழகப் பெரிய மனுஷி பொன்னம்மா டேவிட் நேரில் வந்து பார்த்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாளாக்கும். அவள் வீட்டுக் கல்யாண டின்னருக்குப் போய், நான் மணமக்களை வாழ்த்தி பல வார்த்தைகள் பேச வேண்டும் என்று கெஞ்சிவிட்டுப் போயிருக்கிறாள்.”

“அந்த ஷி-டெவில் நம்ம வீட்டுக்கு வந்து போனாளா?”

“ஆமாம் நீ குளித்துக் கொண்டிருந்தாயல்லவா? காரில் வந்தாள். ஹாரனை அழுத்தினாள். விரைந்து சென்றேன். வினயமாய் தந்தாள். விர்ரென்று மறைந்தாள்.”

“உங்களுக்கு வெட்கமாயில்லை? ஹார்ன் அடித்துக் கூப்பிட்டதும் பக்கிமாதிரி ஓடினீர்களா? ப்ரெஸ்டிஜ் என்று உங்களுக்கு ஒன்று கிடையாதா? வரவர அரசியல் தலைவர்கள் மாதிரி ஆகிவிட்டீர்கள்.”

சீதே… ரொம்பத்தான் ஒட்டாதேமே. நீ எத்தினி வாட்டி ஹார்ன் அடிச்சு என்னை வண்டிகிட்டே ஓடி வரச் சொல்லியிருக்கே? ஒருநாள் உன் செருப்பைத் தூக்கிட்டு வண்டியோடவே ஓடிவந்தேன். நீ ராமரா? நான் பரதனா? உன் செருப்பைத் தூக்கிட்டு ஒரு ·பர்லாங்
ஓடியாந்தேன் காரோடு. அதுக்கெல்லாம் இந்தப் பணக்காரக் கிழவி எவ்வளவோ தேவலையே.”

“ஸ்டுப்பிட்! என் மானமே போய் விட்ட மாதிரி இருக்கிறது. ‘மட்டும்’ என்று போட்டிருப்பது என்னை இன்ஸல்ட் பண்ணணும் என்கிற நோக்கத்தில்தான், நீங்கள் போகாமலிருந்து விடுங்கள். தட் வில் எ லெஸன் ·பார் ஹெர் சென்ட்டர்-ஸ்டேட் ரிலேஷன் ஷிப்பைச் சில அரசியல் பர்சனாலிடிஸ் கெடுக்க முயல்வதுபோல, பொன்னம்மா இஸ் டூயிங் ஸம் மிஸ்சி·ப்…”

அப்புசாமி அழைப்பிதழைக் காட்டினார். வாய் இனிக்க மறுபடி உரக்கப் படித்தார். ‘மாண்புமிகு உயர்திரு. அப்புசாமி அவர்கள் மட்டும்’.

சீதாப்பாட்டி கொதித்தாள். “அந்த ‘மட்டும்’ என்கிறதில்தான் அவள் கொழுப்பே அடங்கியிருக்கிறது.”

“சீதே!” என்றார் அப்புசாமி. “வேடிக்கையா கீதுமே. இந்தக் காலத்திலே எந்தப் பொம்பளைக்குக் கொழுப்பு குறைவா கீது? ஆனால் ஒண்ணுமட்டும் நிச்சியம். உனக்கு இருக்கற கொழுப்பை விட. எவளுக்கும் குறைச்சலாத்தான் இருக்கும். கழகங்களும், சங்கங்களும், கூட்டங்களும் உன்னைக் கூப்பிட்டு கூப்பிட்டு மாலை போடறாங்க. எனக்கு ஒரு மதிப்பு மரியாதை வந்தால் உன் குடல் ஏன் கருகுது? கும்பி ஏன் எரியுது?” 

“நான் வேணும்னால் தினமும் பூக்காரன்கிட்டே சொல்லி ஒரு மாலை கொண்டுவந்து உங்க கழுத்தில் போட்டு விடச் சொல்றேன். உங்க ·பெலிஸிடேஷன் கமிட்டின்னு பர்மனெட்டா ஒரு யூனிட் போட்டுடறேன். அவுங்க உங்களைத் தினமும் பாராட்டியாகணும்னு ஏற்பாடு பண்ணிடறேன். திருப்தி தானே? ஹஸ்பண்ட் அண்டு ஒய்·புக்கு நடுவில் ரி·ப்ட் ஏற்படுத்தப் பார்க்கிறாளே அந்தப் பொன்னம்மா டேவிட்.”

“அடியே ஐஸலகும்மா! புருஷன் மேல அட அட! இன்னா அக்கறை! ரேஷன் கடே சர்க்கரே! வெண்ணெய் தடவி சறுக்கறே!”

“சினிமா பாட்டுக்காரங்க மாதிரி என்ன உளர்றீங்க? நம்ம இன்டர்னல் விவகாரத்திலே வந்து மூக்கை நீட்ட அவளுக்கு என்ன உரிமை இருக்கு? என்னவோ அல்டீரியர் மோட்டிவோடதான் உங்களை அவள் கூப்பிட்டிருக்கிறாள்.”

“இப்போ பொலம்பி இன்னாமே புரோசனம். சுடச்சுட வெண்பொங்கலிலே முந்திரிப் பருப்பைப் பார்த்தப்போ வூட்டுக்காரன் நினைப்பு வந்திருக்கணும். போன வாரம் ஒரு சபாவுலே மார்கழி மாசம் தலைமை தாங்கினியா?”

“எஸ். பாவை பற்றிய ரிஸர்ச் ரியலி எ வொன்டர்·புல் எக்ஸ்பொஸிஷன்.”

“அது இன்னா பொஸிஷனாயிருந்தா எனக்கென்ன? என் பொஸிஸனைப் பற்றி அக்கறைப்பட்டியா?”

“ஐ கான்ட் காச் யூ. வாட் ஆர் யூ டிரைவிங் அட்? வேர் டு யு கம் இன் த பிக்சர்? உங்களைப் பற்றி அக்கறைப் பட என்ன அவசியம்?”

“நீ ஒரு தர்மபத்தினியாயிருந்தால் நினைச்சுருப்பே. நான் ஈராக்குன்னா, நீ அமெரிக்கா. மூணாவது மனுஷி வந்து விரிசல் ஏற்படுத்திட்டாள்னு பொலம்பறியே பொலபொலன்னு. பிரசாதமாக உனக்குப் பூசணிக்காய் சைஸிலே ஒரு பொங்கல் பொட்டலம் கட்டிக் குடுத்தாங்களே… நீ அதை வீட்டுக்குக் கொண்டு வந்தியா? ‘வீட்லே யாரும் கிடையாது. இங்கேயே குடுத்திடுங்க’ன்னு என் வாயிலே மண்ணைப் போட்டியேடி. வெண்பொங்கலா, முந்திரிப் பருப்புப் பொங்கலான்னு தெரியாத அளவுக்கு முந்திரிப் பருப்பாம். சர்க்கரைப் பொங்கலிலே, மாசி மகக் கூட்டம் மாதிரி நெய்யிலே பொறித்து வீங்கிய திராட்சைப் பழமாம். புத்துருக்கு நெய் சொளசொளன்னு சொட்டுச்சாம்.”

“ஹ¥ டோல்ட் யூ?”

“எனக்குன்னு ஒரு உளவு ஸ்தாபனம் உன்னுடைய இருபத்திநாலு மணி நேர நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனிச்சு, அப்பப்ப எனக்கு ரிப்போர்ட் அனுப்பிக்கிட்டே இருக்கு.”

“ரிஸப்ஷனுக்கு டூ டேஸ் இருக்கில்லியா? ஆல்ரைட். உங்கள் இஷ்டப்படி நீங்கள் போகலாம். உங்களைத் தடுக்க நான் யார்?”

“இத்தனை வருஷமாச்சு இதைத் தெரிந்துகொள்ள. பொம்பளைங்களுடைய மிரட்டலுக்கு ஆண்கள் அடி பணியற காலம் மலை ஏறிகிட்டு வருதுமே.” 

சீதாப்பாட்டி காரைக் கிளப்பிக் கொண்டு சென்றவள், பா.மு. கழகத்துக்குச் செல்லவில்லல. திருவல்லிக்கேணியில் காரே நுழைய முடியாத ஒரு சந்து அருகே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றால். காணும் பொங்கல் முடிந்து பல நாளாகியும் அங்கிருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் கண்டுகொண்டே உட்கார்ந்திருந்தனர். சில விடலைப் பையன்கள் தெருவில் ஸ்டாண்ட் போட்டு ‘கேரம் போர்டு’ விளையாடிக் கொண்டிருந்தனர். சில எருமை மாடுகள்; சில கட்டில்கள்; வரட்டிகள் – பாதி காய்ந்தவை – காயும் பருவம் வராத கன்னி வரட்டிகள்; நாட்டு வெடிகுண்டு போல சில. சின்ன சைஸ் பாய்லர் உருண்டைகள் – பிடி கருணைக் கிழங்கு போல.

சீதாப்பாட்டியைப் பார்த்ததும் கேரம் போர்டு ஆட்டம் டக்கென்று நின்றது. ரெட் போட்டுவிட்டு ·பாலோ போடக் குறிபார்த்துக் கொண்டிருந்த ரசகுண்டு பதறிக்கொண்டு, “பாட்டி நீங்களா? என்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு வந்தான். “உன்னோடு கொஞ்சம் பேசணும். பீமாவையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வா. பொங்கலுக்குப் பாட்டியை வந்து பார்க்கற பழக்கமெல்லாம் போய்ட்டது போலிருக்கு. பெரிய மனுஷன் ஆகிவிட்டீர்கள். ஹ¤ம்… அப்படித்தானே? பெட்டர் லேட் தேன் நெவர்… நாளைக்கு வாங்க. உங்களுக்குப் பொங்கலுக்கு வாங்கி வைத்த பாண்ட், ஷர்ட் பீஸையெல்லாவற்றையும் நான் என்ன செய்யறது?… ஹ¤ம்…”

“பாட்டி! ரொம்ப மன்னிச்சுக்குங்க… நாளைக்கு தாத்தா இல்லாத நேரமா வர்றோம்.”

“அது என்ன ஆஸ்பீஷியிஸ் டைம்?” வாட் இ·ப் தாத்தா இருந்தால்?”

“அதை நாளைக்கு வர்ரப்ப சொல்றோம். நீங்க தாத்தாவை மத்தியானம் எப்படியாவது வெளியே அனுப்பிச்சுடுங்க.”

ரிஸப்ஷன் தினம். மாலை ஏழு மணிக்கு விருந்து. அப்புசாமியை அழைத்துப் போக ஆறரைக்கு கார் அனுப்புவதாக பொன்னம்மா டேவிட் சொல்லியிருந்தாள்.

அப்புசாமி தன் அறைக் கதவை இறுகச் சாத்திக்கொண்டு கடம் அடித்துக் கொண்டிருந்தார் நாலு மணியிலிருந்தே. கடம் என்றால் வயிற்றில் பானையை வைத்துக்கொண்டு ஓசைப்படுத்துவார்களே, அந்தக் கடம் இல்லை. மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தார் – அதாவது தான் பொன்னம்மா டேவிட் வீட்டு டின்னரின்போது பேச வேண்டிய பேச்சை உருப்போட்டுக் கொண்டிருந்தார்.

இன்னதுதான் பேச வேண்டும் என்று பொன்னம்மா டேவிட் தனது ஆள் மூலம் ஒரு ஷீட் காகிதத்தில் எழுதிக் கொடுத்திருந்தாள்.

…திருமணத் தம்பதிகளை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். உங்கள் மதிப்புக்குரிய பொன்னம்மா டேவிட்தான் உங்கள் பா.மு.க.வின் அடுத்த தலைவி என்பது நிச்சயம். அவர் கெட்டிக்காரர். சிறந்த விவேகமுடையவர். சொல் ஆற்றல் உடையவர். உங்கள் கழகத் தலைமைக்கு இப்போது வேண்டியதெல்லாம் இளமை… இளமை… இளமை. சீதாக்கிழவியைக் கட்டிக்கொண்டு இன்னும் எத்தனை வருஷத்துக்கு மாரடிக்கப் போறீங்க. என்னடாது, சொந்தப் பெண்சாதியைப் பற்றி இவர் மட்டமாகப் பேசுகிறாரே என்று… அடேங்கப்பா மனப்பாடம் பண்ணி மாளாது போலிருக்குதே… பேசாம கடகடன்னு படிச்சிட வேண்டியதுதான் – என்று நினைத்துக் கொண்டார். நீங்கள் நினைக்கலாம். தங்க ஊசியென்று கண்ணைக் குத்திக்க முடியுமா? ‘அபாரமான பழமொழி. நிச்சயம் கை தட்டுவாங்க’ – நினைப்பு ஓடியது. சொந்த துப்பாக்கின்னு தலையிலே வெச்சி அழுத்திக்க முடியுமா? சபாஷ்! இது இன்னும் அபாரமான உதாரணம். மறுபடி கைதட்டுவாங்க நிச்சயம் – என்று உணர்ந்தார். (குறிப்பு: ஒரு கைதட்டல் முடிஞ்சதும் கொஞ்சம் டைம் கொடுத்துவிட்டு அடுத்த பேச்சுப் பேசவும். இதை மனப்பாடம் செய்ய வேண்டாம்)

‘இது கூட எனக்குத் தெரியாதா? அந்தப் பொம்பளை என்னை மாங்கா மடையன்னு நினைச்சிட்டா போலிருக்குது. ஹ¤ம்… மாங்காய் மடையன்னு வேணும்னா நினைச்சுக்கட்டும். ஆரஞ்சுப்பழ மடையன்னு வேணும்னா நினைச்சுக்கட்டும். கை நீட்டி ஐநூறு ரூபா துட்டு வாங்கியாச்சு. அவள் எழுதிக் குடுத்ததைப் படிக்க வேண்டியது நம்ப கடமை. உம்… தங்க ஊசின்னு கண்ணிலே குத்திக்க முடியாது. சொந்தத் துப்பாக்கின்னு தலையிலே வெச்சி அழுத்திக்க முடியாது. அதேமாதிரிதான் சொந்தப் பெண்சாதி என்கிறதாலே அந்தப் பொம்பிளை பண்ற அராஜகத்தை, அக்கிரமத்தை, அநியாயத்தை, அலட்டல்களை, அநாகரிகங்களை, அவலங்களை, அட்டூழியங்களை, அடாவடிகளை, அசிங்கங்களை (குரலைக் கொஞ்சம் இறக்கிக் கொள்க.) இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்… (கைதட்டுவார்கள். தட்டு ஓய்ந்தபின் பேசவும்) நீங்கள் கைதட்டி ஆரவாரிப்பது அவளுடைய சர்வாதிகாரத்துக்குக் கொடுக்கும் சாட்டையடி. இத்தனை வருஷம் உங்கள் பாட்டிகள் முன்னேற்றக் கழகத்துக்கு பிரெஸிடெண்டா இருந்தாளே. எந்தப் பாட்டிக்காவது இலவச பல்ஸெட் வாங்கிக் கொடுத்திருப்பாளா? தன் தங்கப் பல்செட் காணோமென்று தங்கம்மா பாட்டி கதறினதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தங்கப் பல்ஸெட்டைத் தொலைத்து விட்டு வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்தத் தாய்க்குலத்தை வாழ வைத்தாயா? அவுங்க வீட்டுக்கு எதிரேயிருக்கிற குளத்துக்குத் தூர் வாரினாயா? கொசுக்கடியைப் பல்லைக் கடிச்சுக் கிட்டுப் பொறுத்துக்கலாம்னா, பல்ஸெட்டே இல்லை. சரி, கார்லே இத்தனை பேர் கஷ்டப்பட்டுக் கழகத்துக்கு வர்றீங்களே, இலவச பெட்ரோல் போட்டுக்கொள்ள ஒரு வக்கு வகை உண்டா, தொக்குத் தொகை உண்டா? நான் கேட்க ஆசைப்படுகிறேன். அவளுடைய காருக்கு மட்டும் டாங்க் ·புல்லாகக் கழகச் செலவில் பெட்ரோல். கழகக் காரியத்தைக் கவனிக்கிறாளாம். யாரிடம் இந்தக் காது குத்தல். (உங்கள் காதைப் பிடித்துச் சபை முன் காட்டுங்கள்…) பாருங்கள் என் காதை. எனக்கு ஏற்கனவே காது குத்தியாகி விட்டது. (கைதட்டுவார்கள். அது ஓய்ந்ததும் பேசுங்கள்) பூக்கடை கிட்டேயிருக்கிற பழக்கடையருகே காரை நிறுத்தி பிஸ்தாவும், முந்திரியும், பாதம்பருப்பும் பை பையாக வாங்கிக் காரில் அடுக்கிக்கொள்கிறே? நீ குடிக்கிற சாத்துக்குடி ஜூஸ¤க்காக கூடைக் கணக்கில் டி. நகரில் பழம் வாங்குகிறாய். ஏன்? டி. நகர் பழம்தான் இனிக்குமா? ஏண்டி நகர் பழம்தான் இனிக்குமா? அடியே கெயவி! நான் கேட்கறேன். 

ஏன், டீ நகர் பழம் தான் இனிக்குமா? ஏண்டி, நகர்ப் பழம்தான் இனிக்குமா? (ஏன் + டி என்று முதலிலும் ‘ஏண்டி’ என்று இரண்டாவதாக சேர்த்து நயம்படக் கூறவும்) அடியே கெயவி, நான் கேட்கிறேன்… உன் சொந்த முறையில் முந்திரியும், பிஸ்தாவும் சாத்துக் குடியும் வாங்குவதற்குக் கார் அலைகிறதே… அந்த பெட்ரோல் செலவை உங்க பாட்டனா கொடுப்பான்… கணக்கு உண்டா? வழக்கு உண்டா? கழக உறுப்பினர்களே… பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள். இதோ… என் அருகில் அடக்கமே உருவாக அமர்ந்திருக்கிற திருமதி பொன்னமா டேவிட்டைப் பாருங்கள். அமைதியே உரு, ஆனால் செயலில் புயல், அடக்கமே வடிவு, ஆனால் போராட்டமென்று வந்தால் புலி. கட்டியிருப்பது நூல் புடவை. ஏன் தெரியுமா? இந்த நகரத்து ஏழைப் பாட்டிகளின் கண்ணீரைத் துடைக்க நூல் புடவைதான் உதவியாயிருக்கும்… சீதேக் கிழவி போலப் பட்டுப் புடவை கட்டினால் அது கண்ணீரை உறிஞ்சாது… அங்கத்தினர்களின் உழைப்பையும் ரத்தத்தையும்தான் உறிஞ்சும். (பெரிய கைதட்டல் வரும். அது ஓய்ந்தபின் – குரலைத் தழதழக்க வைத்துக் கொண்டு) ஆகவே உங்கள் அனைவரையும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்… உங்களின் பொன்னான வாக்குகளை பொன்னம்மா டேவிட்டுக்கே போட்டு, வரப் போகிற கழகத் தேர்தலில் அவரைத் தலைவியாக்குங்கள்… இல்லையேல் பாட்டிகள் பின்னேற்றக் கழகமாகிவிடும்… பா.மு.க., பா.பி.க என்று ஆக வேண்டுமா?

உங்கள் வருங்கால பிரசிடெண்டின் அருமை மகனாரின் திருமணத்துக்கு வந்து இந்தமாதிரி வாழ்த்த எனக்கு ஒரு சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி. வணக்கம். வாழ்க பொன்னம்மா டேவிட்… வீழ்க சீதேக் கிழவியின் அராஜகம்…”

சபாஷ்! சபாஷ்! வொன்டர் ·புல்… நிஜமாகவே கை தட்டல் ஒலி கேட்டது.

எதிரே சீதாப்பாட்டி! முகம் மலரச் சிரித்துக் கொண்டு நின்றாள். “இவ்வளவு பெரிய ஆரட்டரா நீங்கள்? அற்புதமான வாய்ஸ் மாட்யுலேஷன்! குமரி அனந்தன்னு ஒரு ஸ்பீக்கர்… அவருடைய பேச்சே நாடகம் மாதிரி இருந்தது. ஐ பீல் வெரி ப்ரெளட். இவ்வளவு நன்றாகப் பேச வரும் உங்களுக்கு என்று எனக்குக் கொஞ்சமும் தெரியாது. இமோஷன் காட்ட வேண்டிய இடத்தில இமோஷன், டைமிங் தர வேண்டிய இடத்திலே டைமிங், அடுக்கிப் பேச வேண்டிய இடத்திலே அடுக்குப் பேச்சு, துடுக்குகளை கண்டெம் பண்ற இடத்திலே ஒரு ·போர்ஸ்… ஒரு ஸிம்ப்பதி க்ரியேட் பண்ண, தொண்டையிலே ஒரு கரகரப்பு… ஒ! வொண்டர் ·புல்… திரீ சியர்ஸ் ·பர் யூ…”

அப்புசாமி திருவாதிரைக் குழம்பு போல இனிமையாகக் குழம்பி, “நீ… எப்போ வந்தே? நான் பேசினது பூராவையும் கேட்டுட்டியா? வந்து… வந்து…” தடுமாறினார். 

சீதாப்பாட்டி அமைதியாக அப்புசாமியின் கட்டிலில் உட்கார்ந்தாள், “நீங்கள் ஒரு பிரசார பீரங்கி என்பதை அந்தக் கெட்டிக்காரப் பொன்னம்மா புரிந்து கொண்டிருக்கிறாள் நான் ஒரு வடிகட்டின இடியட். நீங்க எப்படிப்பட்ட பவர்·புல் மீடியா என்பதைத் தெரிந்து கொள்ளாமலிருந்துவிட்டனே… பழக்கடையில் இருக்கிற மூலிகை பற்றி வீட்டுக்காரனுக்குத் தெரியாது என்பார்கள்… அந்த ப்ராவர்ப் சரியாகத்தானிருக்கிறது… விஷ் யூ பெஸ்ட் அ·ப் லக்… உங்களுடைய இந்த ஸ்பீச்சைக் கேட்டபிறகு பேசாமல் நான் பிரசிடெண்ட்ஷியல் எலெக்ஷனிலிருந்து வித்ட்ரா பண்ணிக்கொண்டு விடலாமா என்று தோன்றுகிறது. என்னைப் பற்றி பெரிய ஸ்கேமே கிளம்பிவிடும் போலிருக்கிறது… ரியலி, சாத்துக்குடி அ·பேர், பெட்ரோல் விஷயம் இதெல்லாம் என் இமேஜை நிச்சயம் போ·பர்ஸ் பண்ணிடும். நீங்க பொன்னம்மா டேவிட் நிகழ்ச்சிக்குப் போய் இந்த ஸ்பீச்சைப் படிக்கவே வேண்டாம். நான் வித்ட்ரா பண்ணிக் கொண்டுவிட்டேன் என்று இப்பொழுதே லெட்டர் அனுப்பிடறேன்.

ஆந்திரா கெடா மார்க் பாக்கட் சாப்பிட்டது மாதிரி அப்புசாமிக்கு உடம்பு பூரா கிக் பரவியது. “ஏண்டி, நிஜமாத்தான் சொல்றியா? நான் அவ்வளவு நல்லாவா பேசினேன்.”

சீதாப்பாட்டி புன்னகைத்தாள் “என்னை அட்டாக் பண்ணிப் பேசறதுன்னா உங்களுக்குப் பிரமாதமான மூடு வந்து விடுமே… நான் ஆர்டினரி மெம்பராகக் கூடக் கழகத்திலே இருக்கப் போறதில்லே… இதை நானே என்னை பொன்னம்மா டேவிட் இன்வைட் பண்ணாவிட்டாலும்கூட – அவள் வீட்டுக் கல்யாண ரிஸப்ஷனுக்கு வந்து என் வாயாலேயே சொல்லி விடப் போகிறேன் – உங்கள் பேச்சு முடிந்ததும் என் ரெஸிக்னேஷன் கடிதத்தை எல்லார் எதிரிலும் தந்துவிடப் போகிறேன்…”

அப்புசாமி “சப்பாஷ்…” என்றார். “அடே அப்புசாமி, வெற்றி! வெற்றி!” என்று கையிலிருந்த காகிதங்களை மேலே வீசி எறிந்தார்.

அறை எங்கும் காகிதங்கள்… ஒரு சிறு டப்பாங் குத்து நடனம் ஆடி முடித்தார் “ஐஸல கும்மா… அத்திரிகும்மா… கும்மா கும்மா… குலோப்புஜானு… மை நேம் இஸ் ஜாலி. என் சம்சாரம் காலி… சின்னச் சின்ன ஆசை… ஹைய்… சிறகடிக்கும் ஆசை…”

“ப்ளீஸ்” என்றாள் சீதாப்பாட்டி… ஓவராகச் சந்தோஷப் படாதீங்க… சந்தோஷமோ, துக்கமோ எதுவும் ஓவராக இருக்கக் கூடாது… இரண்டிலும், சமமாயிருக்கணும்… சீதோஷ்ண சுகத்துக்கே “ஷ¤ஸம ஸங்க விவர்ஜித: துல்ய நிந்தா ஸ்துதிர் மெளனி சந்துஷ்டோ ஏன கேனசித்… ஹி ஹ¤ இஸ் த ஸேம் இன் ஆனர் அண்ட் டிஸானர் – தட் மேன் இஸ் டியர் டு மி”ன்னு கீதையில பகவான் சொல்லியிருக்கிறார்…”

“இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்… சுடச் சுடப் பொங்கல் கிடைச்சா, பொண்டாட்டியாயிருக்கிறவள் வீட்டிலே இருக்கிற புருஷனுக்கு விடியற் காத்தாலே கொண்டு போய்க் கொடுக்கணும்னு ஒரு வார்த்தை சொல்லாம பூட்டாரே…”

“ஐயம் ஸீரியஸ்லி டாக்கிங், யு ஆர் கட்டிங் ஜோக்ஸ்… உங்களுடைய ஒரு ஸ்பீச்… என் மனசையே மாற்றி, இத்தனை வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆபீஸையே க்விட் பண்ண வைக்கப் போகிறது என்பதை நினைத்தால் ‘வேர்ட் இஸ் மோர் பவர்·புல் தேன் வோர்ட்ஸ்’ என்கிறது சரியாயிருக்கும் போலிருக்கிறது… பைத வே… நான் எதற்கு மாடிக்கு உங்களைத் தேடிக் கொண்டு வந்தேன் என்கிறதைச் சொல்லலையே.”

“சொல்லுமே. சொல்லு, நீயாக மாடிப்படி ஏறி ஐயாகிட்டே வரணும்னா… ஏதாவது பெரிய வேலை வெச்சிருப்பே… ஒட்டடை அடிக்கணுமா? இல்லை, பாத்ரூமெல்லாம் பவுடர் போட்டுத் தேய்க்கணுமா? கிரைண்டரைத் துடைச்சிக் கழுவணுமா?”

“நோ… நோ… நான்தான் இனிமேல் ·புல் டைம் ஹவுஸ் ஓய்·பாக மாறிவிடப் போகிறேனே… நான் பண்ணின சோஷியல் சர்வீஸெல்லாம் போதும் – அனாவசியமாக ஏதாவது ஸ்கேண்டலில் மாட்டிக் கொண்டு பதவி விலகறதைவிட, நாமாக விலகிக் கொள்கிறது நல்லதுன்னு தோணிப் போய்விட்டது… சாரிடி பிகின்ஸ் அட் ஹோம் என்கிற மாதிரி சர்வீஸ் பிகின்ஸ் அட் ஹோம்… டாக்டர் வீரேந்திரன் ·போன் பண்ணினார்… அதைச் சொல்லத்தான் வந்தேன்.”
 
“வீரேந்திரனா? எங்கேயோ கேட்ட பேர் மாதிரி இருக்கிறதே.”
 
“கண் டாக்டர் வீரேந்தர். ஆப்தல் மாலஜிஸ்ட். அடுத்தவாரம் அப்பாயிண்ட்மென்ட்
தந்திருந்தாரே… யார் யாரையோ சிபாரிசு பிடித்து அவர்க்கிட்டே அப்பாயிண்டமென்ட் வாங்க வேண்டியிருந்தது.”

“ஓ!”

“என் கண்களை செக்-அப் பண்ணிக்கப் போறேன்னேன். நீங்களும், எனக்கும்கூட செக்-அப் பண்ணு. எதிரே எருமை மாடு வந்தால் பசு மாடு மாதிரி தெரியுது. பசு மாடு வந்தா எருமைமாடு மாதிரி தெரியுது. நீ வந்தாயானால் பாதிப்பசு, பாதி எருமையாத் தெரியுதுன்னு ஜோக் பண்ணினீங்களே!”

“ஹி! ஹி! அப்படி ஒரு ஜோக் அடிச்சேனா?”

“மனசைப் புண்படுத்தற ஜோக்கெல்லாம் நல்லாவே ஞாபகத்திலே இருக்கும். ஆனால் ஜோக்கை கரெக்ட் ஸ்பிரிட்டிலே எடுத்துக் கொண்டு விட்டால் அப்படி மனசு கஷ்டப்படாது… நான் கொஞ்சம் ஸீரியஸ் டைப்பானதால்…”

“சரி, அந்த டாக்டருக்கு இப்ப என்ன கேடு? நான் இத்தனை பக்கத்தையும் உருப்போட்டாகணும். இல்லாட்டி வெறுமே படிச்சிடட்டுமா?”

“நீங்க வெறுமேயே படிச்சிடுங்க… பிரைம் மினிஸ்டர், கவர்னர், சீ·ப் மினிஸ்டர் இவர்களெல்லாம் முக்கிய ஸ்பீச்சை எழுதி வெச்சுத்தான் படிப்பாங்க… டி.வி.யில யு குட் ஹாவ் ஸீன்.”

படிச்சாலே போதும் என்கிறே… சரி. டாக்டர் விஷயம்.

“உங்ககிட்டே எப்படிச் சொல்றதுன்னு தயக்கமாக இருக்கு… பயமாகக்கூட இருக்கு… அந்த ஆள் திடீர்னு டில்லி போகிறாராம்… அடுத்த வாரம் நமக்குக் கொடுத்திருக்கிற அப்பாயிண்ட்மென்ட்டை அட்வான்ஸ் பண்ணி இன்றைக்கு செக்-அப்புக்கு வர முடியுமான்னு செகரட்டரி கேட்கிறார். இதைவிட்டால் ஆகஸ்ட் நைன்ட்டீன்த்துத் தானாம். “மை காட்… ஏழெட்டு மாசம் தள்ளிப் போகிறது… வாட் டு யு ஸே… யு ஆர் பிஸி” ன்னு சொல்லிடறேன்… அவர் இஷ்டத்துக்கு நாம ஆட முடியுமா?” என்றவர் பிஸி ஹி மேபி… வாட் டு யு ஸே… செகரட்டரி லயனில இருக்கிறாள்… ஒரு ஹா·ப் எனவர் ஆகும்… அதற்கு மேல் ஆகாது என்கிறாள் போய்விட்டு வந்துடலாம்னா இப்பவே போகலாம். வேண்டாம்னா வேண்டாம்… வாட்ச்சைப் பார்த்தாள். உங்களுக்குப் பொன்னம்மா ஆறறைக்கு வண்டி அனுப்பிடுவாள். த டைம் இஸ் நெள ·போர் தர்ட்டி… இங்கிருந்து கிளினிக்குக்குப் போக ஒரு ஹா·ப் எனவர். ·பைவ் அப்புறம் அங்கே டெஸ்ட்டிங் ஒரு ஹா·ப்பனவர். திரும்ப ஒரு ஹா·பனவர் ·பைவ் தர்ட்டிக்கு வி வில் பி ஹியர். ஒன் அவர் நீங்க ரெஸ்ட். எடுத்துக் கொள்ளலாம். ஸிக்ஸ் தர்ட்டிக்குப் பொன்னம்மா கார் உங்களைப் பிக்-அப் பண்ண வருது… நீங்க அந்தக் காரில் போகிறீர்கள். நான் என் காரிலே உங்களை ·பாலோ பண்ணி வறேன்.

“நீ எதுக்குடி?”

“சொன்னேனே, மறந்துட்டீங்களா? டுடே ஐயம் ரிசைனிங் மை பிரசிடென்ட் போஸ்ட்… உங்க ஸ்பீச் முடிந்ததும் நான் எழுந்து ரிசைன் பண்ணி விடுவேன்.”

பிரபல கண் டாக்டர் வீரேந்திரனைப் பற்றிக் கொஞ்சம் வர்ணனை.

அவர் ஒரு பிரபலமோ பிரபலமான கண் டாக்டர். ஆனால் கண்ணிலேயே படமாட்டார்- அதாவது சாதாப்பட்ட ஆட்களுக்கெல்லாம் தென்படமாட்டார். நல்ல கண்ராசியுள்ள டாக்டரென்பதால், அவர் உதறியெறிந்தாலும் கூட்டம் அவர் கிளினிக்கில் போய் ·பீஸை வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் காத்திருக்கும். முறைப்படி அப்பாயிண்ட் மெண்ட் வாங்குவதெல்லாம் ஆறு மாசத்துக்கு முன்னால். சில சமயம் ஒரு வருஷத்துக்கு முன்னாலெல்லாம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு காத்திருந்து சென்றாலும் அவரைத் தரிசித்து அவர் திருக்கரத்தால் உங்கள் கண்ணைத் தீண்டிவிட மாட்டார்.

முதலில் அவரது உதவியாளரான டாக்டர்களிடம். பிறகு அவரது மனைவியார். அந்த அம்மாளும் கண் டாக்டரே… ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ போல ‘கண் டாக்டரைக் கண் டாக்டரே காமுறுவர்’ போலும்.

அந்த டாக்டரம்மா பார்த்தபிறகு. டாக்டரின் அப்பா ஒரு அறையில் கிழச் சிங்கம் மாதிரி இருப்பார். அவர்தான் மூலவர், அதாவது டாக்டர் வீரேந்திரனைக் கண் டாக்டருக்குப் படிக்க வைக்கலாம் என்பதைக் கண்டறிந்தவர். அவரிடம் நாம் கண்ணைக் காட்ட வேண்டும். அவர் அன்பாக பொக்கைப் பல் சிரிப்புடன் வரவேற்று, அன்றைய பேப்பரில் வந்திருந்த அயோத்தி விவகாரம், அத்வானி விஷயம் அவரைக்காய் விலை இதையெல்லாம் நம்மோடு பேசி அறிவொளி ஊட்டி விட்டு, நமது கண்ணை ஊறப்போட்ட மொச்சைப் பருப்பைப் பிதுக்குவது போல அழுத்தி பிதுக்கிப் பார்ப்பார். நம்ம அதிருஷ்டம் நல்ல அதிருஷ்டமாயிருந்தால், கண் அதனுடைய இடத்திலேயே இருக்கும். குருட்டு அதிருஷ்டமாயிருந்தால், கண் பிதுங்கி வந்துவிடும். (தயாராக உள்ள சர்ஜன் படை வந்து கண்ணை உள்ளே வைத்துத் தைத்து, கண் ஆபரேஷன் ·பீஸாக இருபத்தையாயிரமோ முப்பத்தையாயிரமோ செதுக்கி விடுவார்கள்.)

‘பெரியவர் பார்த்தாச்சா?’ என்று கேட்டபின், அங்குள்ள நர்ஸ் நம்மை ஒரு மிக நவீனமான கருகும் மென்ற இருட்டு அறைக்குக் கூட்டிப் போவாள். நாம் நுழைந்ததும் பொட்டென்று ஒரு சத்தம். ஸ்பாட் லைட் மாதிரி ஒரு கம்ப்யூட்டர் யந்திரத்தின் மீது மட்டும் பச்சை ஒளி வட்டம் விழும்.அங்கேதான் டாக்டரின் மகன்-ஆஸ்திரேலியாவில் கண் டாக்டர் பயிற்சி பெற்றுத் திரும்பிய நவநாகரிக இளைஞன்- வெகு ஸ்மார்ட்டாக அழகாக நின்று கொண்டிருப்பார்.

அவர் நல்ல சீரான வெள்ளைப் பல்லுடன் ஒரு சினிமாக் கதாநாயகனது லட்சணத்துடன் பால் வடியும் முகத்துடனிருப்பார். அவர் அழகைப் பார்க்கவே நமக்கு இன்னும் 998 கண்கள் வேண்டியிருக்கும். வெகு எளிமையாக இருப்பார்.

கம்ப்யூட்டரின் எதிரில் உள்ள சிறிய ஸ்டூலில் நம்மை அமரும்படி புன்னகையுடன் கை காட்டுவார். கம்ப்யூட்டரின் மறுபக்கம் அவர் உட்கார்ந்து கொள்வார்.

இப்போது அருகிலுள்ள நர்ஸ் பலிபீடத்தில் ஆட்டுத் தலையை அழுத்துவதுபோல-அல்லது காற் சிலம்பைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனின் தலையைக் கொலையாளிகள் வெட்டுப்பட்டறையில் அழுத்தியதுபோல – கம்ப்யூட்டரில் இதற்கென்று பிரத்தியேகமாக உள்ள வளைவில் நம் முகத்தை வைத்து அழுத்துவார். நம் கண்ணை எதிர் முனையிலிருந்து அந்த இளைஞரான டாக்டர் பார்த்துவிட்டு பதில் பேசாமல் போய் விடுவார்.

அப்புறம் வேறொரு கம்ப்யூட்டர் சிறிது நேரத்தில் புரியாத சில குறிப்புகளைப் படபடவென்று வரைந்து தர அதை நர்ஸ் ந்ம் கையில் திணித்து டாக்டர் விரேந்திரனின் அறை வாசலில் உட்கார வைத்துவிடுவார்.

அவர் கொஞ்ச நேரம் பொறுத்து மணியை அழுத்தியதும் வேறு ஒரு நர்ஸ் நம்மை உள்ளே அழைத்து போக (உள்ளேயும் இருட்டு), டாக்டர் வீரேந்தர். ‘நத்திங் டு ஒர்ரி…’ என்று நமது சோதனை ரிப்போர்ட்டுகளை ஒரு வினாடிகூடப் பார்க்காமலும் நம் கண்ணைக் கண்ணெடுத்தும், பார்க்காமல் கூறிவிட்டு, “ஆல்ரைட் யு கான் கோ… என்பார்.

அப்புறம் நமது ஈமச் சடங்கு

கவுண்ட்டரில் ஒரு குமாஸ்தா பெண்மணி, ‘தெளஸண்ட் எயிட் ·பி·ப்டி என்று ஒரு சீட்டுத் தருவாள். ‘இன்னும் ஸிக்ஸ் மன்த்ஸ். கழித்து வாங்க.’

“ஏன்?”

“ஆபரேஷனுக்கு அப்போதான் டாக்டர் அப்பாயிண்ட்மென்ட் தந்திருக்கிறார். வரும்போது ப்ளீஸ் ப்ரிங் திஸ் கார்ட்…” என்று அழகிய உரையுடன் ஒரு கவரைத் தருவாள்.

“ஆபரேஷனுக்குச் சார்ஜ் தனியா, இதே ஆயிரத்தெட்டு நூறிலே அது அடக்கமா?” என்று கேட்டுவிடாதீர்கள். அதுதான் ஜோக் ஆ·ப் த இயர் ஆகிவிடும்… வெறும் டெஸ்ட்டுக்கு மட்டும்தான் ஆயிரத்தெட்டு நூறு.

“ஆபரேஷனுக்கு இப்போது சார்ஜ் சொல்ல முடியாது. ‘அது ஆறாம் மாச ஆரம்பத்தில் உங்களுக்கு இன்ட்டிமேட் செய்யப்படும்…”

இவ்வளவு பிரபலமான டாக்டராக வீரேந்தர் இருந்தாலும்… பெரிய மந்திரிகளுக்கெல்லாம் கட்டுப்படியாதவராக இருந்தாலும்… எப்படிக் கடவுள் சாதாரண ஒரு கைப்பிடி அவலை விரும்பிச் சாப்பிட்டானோ அந்த மாதிரி – எப்படி ஒரு சுருளிராஜன், ‘தின்னுப்புட்டுப் போடியம்மா….’ என்று காளி தேவியிடம் சொன்னதும் காளி மாதா அந்த ஏழையின் குடிசையில் வந்து சாப்பிட்டுப் போனாளோ… அது மாதிரி அவருக்கு பீமாராவ் ரசகுண்டு ஆகிய இரண்டு சாமானியர்களிடம் ஒரு அன்பு, பாசம், மரியாதை.

டாக்டர் வீரேந்தர் ஒரு சமயம். கோடம்பாக்கம் சாலையில் – காரில் தன்னந் தனியாக – பல லட்ச ரூபாய் (கறுப்போ வெளுப்போவான பணம் ) ப்ளஸ் மனைவியுடன் வந்து கொண்டிருந்தபோது கார் கோளாறு காரணமாக ராத்திரி பதினொரு மணிக்கு ஆள் ஆரவமற்ற சாலையில் நின்றுவிட்டது.

மூன்று ரவுடிகள் டாக்டரைத் தாக்கி, பணத்தையும் பத்தினியையும் கைப்பற்ற முயலுகையில், கோடம்பாக்கம் தியேட்டரில் சினிமா பார்த்துட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பீமாராவும் ரசகுண்டுவும், “டாய்!” என்று கூவியவாறு ஒரு மிலிடிரிப் பாய்ச்சல் பாய்ந்து குண்டர்களை அடித்து நொறுக்க, பறக்கச் செய்து, டாக்டரையும் அவர் மனைவியையும் உடைமைகளையும் காப்பாற்றினார்கள்.

டாக்டர் வீரேந்தர் அதற்குப் பிரதி உபகாரமாக ஆயிரம் ரூபாய் கொடுத்ததுடன். “நீங்க எப்ப வேணும்னா என் கிளினிக்குக்கு வரலாம். நீங்கள் யாரையாவது சிபாரிசு பண்ணினாலும் அந்தக் கேஸை முதலில் கவனிக்கிறேன் என்று வாக்களித்திருந்தார்.

ஆனால் பீமாராவும் ரசகுண்டுவும் அந்த சம்பவத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. எந்தப் பெரிய மனிதனை ஆபத்திலிருந்து காப்பற்றினாலும் உணர்ச்சி வசப்படக் கூடாது. அவர் சில வரம் தருவது வழக்கம்தான். 

ஆனால் வாக்களிக்கப்பட்ட டொனேஷன் மாதிரி அது வரவுக்கு வந்து சேராது. கேட்டிலேயிருந்து சீட்டு எழுதி அனுப்பினால், ‘ஐயா ஊரிலே இல்லை’ னு நறுக்கென சொல்லிக் கழற்றி விட்டுவிடுவார்கள்.

ஆனால் டாக்டர் வீரேந்தர் ஒரு விதி விலக்கு, பீமாராவும் ரசகுண்டுவும் ஒரு ஓட்டல் பில்லில் தங்கள் பெயர்களை எழுதி அனுப்பியதும், “உடனே அவர்களை உள்ளே வரச் சொல்,” என்று கட்டளையிட்டார். அவர், வீடு, நர்ஸிங் ஹோம், பணம் ஆகியவற்றின் கதவுகள் அவர்களுக்கு எப்போதும் திறந்தேயிருக்கும்.

“ஹலோ, ஜென்டில்மேன்,” விஷ்யூ ஹாப்பி பொங்கல் அண்ட் ந்யூ இயர்… உங்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் மட்டும் அன்றைக்கு ராமர் லட்சுமணர் மாதிரி வந்து காப்பாற்றவில்லையென்றால்… நானும் என் மனைவியும் என்ன கதி ஆகியிருப்போமோ…” என்றார்.

“தொட்டுவார்த்தைகளெளுஹே’ளு பேடா டாக்டரவுரேல்லா ஒந்து சின்ன ஹெல்ப் மாடுபேகு… ” என்றான் பீமாராவ்.

“உங்களுக்கில்லாத உதவியா?”

ரசகுண்டு தாங்கள் வந்த விஷயத்தை அவரிடம் விளக்கினான்.

அவர் சம்மதித்தார். ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, டாக்டர் தந்த பொங்கல் இனாமைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருவரும் திரும்பினர்.

 வரிசையாக சினிமா கொட்ட கையில் போடப்பட்டிருப்பது போல டாக்டர் வீரேந்தரின் ரிசப்ஷன் ஹாலில் நாற்காலி வரிசைகள் போடப்பட்டிருந்தன, ஹவுஸ் ·புல். 

“சீதே” என்றார் அப்புசாமி. “நாம ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டுடணும். வீட்டுக்குப்  போகணும் வேறு ஜிப்பா மாட்டிக்கணும். டின்னருக்குப் புறப்படணும். ஆறரைக்கெல்லாம் பொன்னம்மா வண்டி அனுப்பிச்சிடுவாள்.”

“இதோ இப்போ முடிந்துவிடும்…

முதலில் உங்கள் கண்ணுக்குத்தான் டிராப் போடச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் டாக்டர். ஜஸ்ட் நெள உங்கள் எதிரில்தானே உள்ளே போய் அவரிடம் பேசிவிட்டு வந்தேன் என்றாள் சீதேப்பாட்டி.

“இம்மாங்கூட்டம் இருக்குதே தாயி… கியூ குயூன்னு காக்க வைத்துடப்போறானுகள்.

“நத்திங் டூயிங்… உடனே டாக்டர் உங்களை உள்ளே கூப்பிடுவார் பாருங்களேன். நீங்க பிஸியான வி.வி.ஜ.பி.ன்னு அவர்கிட்டே சொல்லி வைத்திருக்கிறேன்…”

‘அப்படியா?’ அப்புசாமி சொல்லிவாய் மூடுமுன்… ‘டிங் டாங்’ என்று டாக்டரின் அறைக்கு வெளியிருந்த விசேஷ மணி சப்தித்தது.

காரியதரிசிகளின் டெஸ்க்கிலிருந்து ஒரு பெண் விழுந்தடித்துக் கொண்டு உள்ளே பரபரப்புடன் ஓடினாள். அடுத்த கணம் அதே ஆவேசத்துடன் வந்தவள், “மிஸ்டர் அப்புசாமி ப்ளீஸ்” என்றாள். ‘தாங் யூ,’ என்று சீதாப்பாட்டி நன்றி கூறிவிட்டு காத்து உட்கார்ந்திருந்த அத்தனை பேஷண்ட்டுகளின் கண் எரிய (எல்லாருடைய கண்களிலும் டிராப்ஸ் விட்டிருந்ததால்) டாக்டரின் அறைக்குள் கணவருடன் பிரவேசித்தாள்.

“ஹலோ மேடம், ஹெள ஆர் யூ… உங்களுக்குத் தந்த அப்பாயிட்மெண்டை ஒரு வாரம் முன்னாலே கொண்டு வந்துட்டேன். ஸோ ஸாரி” என்றவர், “ப்ளீஸ்… உங்கள் ஹஸ்பெண்ட் இப்படி வந்து உட்காரலாமே” என்றார்.

அப்புசாமி டாக்டரின் எதிரில் உட்கார்ந்தார். கடியாரத்தை ஒரு கண்ணிலும் டாக்டரை ஒரு கண்ணிலும் பார்த்தவறாயிருந்தார்.

மணி ஆறே கால்… ஆறரைக்குப் பொன்னம்மா காரை அனுப்பி  விடுவாள். ஏழுக்கெல்லாம், டின்னர் ஆரம்பமாகிவிடும்…

“டாக்டர்… ஹி! ஹி!,” என்றார் அப்புசாமி. டாக்டர் வீரபத்ரன் அப்புசாமியின் கண்ணின்மீது தனது தலையிலிருந்த சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நீர் கொட்டுவது போன்ற ஓர் ஒளியைப் பாய்ச்சி, “நத்திங் டு ·பியர்… லேசாக காட்ராக்ட் ·பார்ம், ஆகியிருக்கிறது. நோ ப்ராப்ளம்… ட்ராப்ஸ் விடச் சொல்றேன்… கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் செக்கப் செய்கிறேன்… நானே நர்ஸை அனுப்புகிறேன்.

“டாக்டர்…” என்றார் அப்புசாமி, “நான்… நான்.”

சீதாப்பாட்டி “இவர் ஒரு மேரேஜுக்குப் போகணும்… அதுதான் கொஞ்சம் சீக்கிரமாக… ப்ளீஸ் டாக்டர்…’ என்றாள். டோண்ட் மிஸ்டேக் ஹிம்… ஹி இஸ் ஆல்வேஸ் பிஸி…” என்றார் புன்னகையுடன்.

“நத்திங் டு வொர்ரி… கைலாஷ்!” என்று டாக்டர் குரல் கொடுக்க ஒரு நர்ஸ் கையில் சொட்டு மருந்துடன் தோன்றினாள்.

“முதலில் சாருக்கு ட்ராப்ஸ் விட்டு உட்கார வை… இவருக்குத்தான் முதல் ப்ரியாரிடி… அன்டர்ஸ்டாண்ட். ஹி இஸ் மை பெஸ்ட் ·பரண்ட்… கெஸ்ட் ரூமுக்கு அழைத்துப் போய் ட்ராப்ஸ் விடு… என்றார்.

அப்புசாமியை ராஜோபசாரமாகக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று பிரத்தியேக அறையில் சோபாவில் உட்கார வைத்தாள். 

பிறகு, “ப்ளீஸ்… சார்… முதலில் லேசாகக் கொஞ்சம் எரியும்… அப்புறம் சரியாகிவிடும், என்றவாறு அப்புசாமியின் இரு கிழட்டுக் கண்ணையும் விரல்களால் அகலப்படுத்தி கண் டிராப்ஸை விட்டாள். அப்புசாமி, “ஹா! ஊ!” என்று துள்ளினார். “அடியே பாவி, ஆஸிட்டை ஊற்றித் தொலைச்சிட்டியா?”

சீதாப்பாட்டி “ஆரம்பத்திலே எரியும். அப்புறம் சரியாயிடும் கண்ணை மட்டும் திறந்து விடாதீங்க” அக்கறையுடன் பஞ்சினால் துடைத்து விட்டாள்.

நர்ஸ் நேயர் விருப்பம் மாதிரி மறுபடியும் ஒரு தடவை “சார், ஒன்றரை மணி நேரத்துக்குள் தயவு செய்து கண்ணைத் திறக்காதீங்க… பாப்பா பெரிசாகணும்…” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

‘ ஏண்டி பாவி, உங்க  விட்டுப் பாப்பா பெரிசாவதற்கும், நான் கண்ணைத் திறக்கறதுக்கும் என்னடி சம்பந்தம்?” அப்புசாமி அலறினார்.

“சீதாப்பாட்டி” ப்ளீஸ் என்று ஆறுதலாக அவர் கையைப் பற்றினாள். “ப்ளீஸ், டோன்ட் ஷெளட்… இப்போ கண்ணைத் திறந்தால் எல்லாம் வேஸ்ட் ப்யூபில் டயலேட் ஆனால்தானே டாக்டர் சரியாகப் பார்த்து டி·பெக்டைக் கண்டு பிடிப்பார். இல்லாவிட்டால் அவர் பாட்டுக்குக் கண்ணை ஆபரேஷன் பண்ணி மாற்றுக் கண் வந்தால் வெச்சுக்குங்கன்னு சொல்லிவிட்டால் அது ரொம்பக் கஷ்டமில்லையா? அட்லீஸ்ட் ஒரு ஒன் அவர் பல்லைக் கடித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருங்கள்…”

 “ஐயோ… ஆறரை மணிக்கெல்லாம் நான் டின்னர் பேச்சுப் பேசப் போகணுமே… இப்படி கண்ணிருந்தும் குருடாட்டம் பண்ணிட்டானே டாக்டர்…”

அதற்குள் டாக்டரின் அறையிலிருந்து ஒரு ஸ்பெஷல் நர்ஸ் வந்து சீதேபாட்டியிடம், “இங்கே ஒரே கிரெளடாக இருக்கிறது, உங்களுக்கு அசெளகரியமாக இருந்தால் நீங்கள் உங்கள் காரில் போய் உட்கார்ந்து கொள்ளச் சொல்கிறார் டாக்டர். அப்புறம் நானே வந்து கூட்டிச் செல்கிறேன், என்றாள்.

“வெரி கைண்ட் ஆ·ப் யூ” என்று சீதாப்பாட்டி கூறிவிட்டு அப்புசாமியை அழைத்துக் கொண்டு காருக்குப் போனாள்.

அப்புசாமி, “சீதே” நான் இப்போ திறந்துடப் போறேன். நிஜமாத் திறந்துடப் போறேன்,” என்று புலம்பிக் கொண்டிருந்தார். ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி தூங்கட்டுமே!’ என்று பட்டென்று கண்ணைத் திறந்து பார்த்தார்.  

அம்மாடியோவ். இது மெட்ராஸா, வேறு ஏதாவது சந்திர சூரிய மண்டலமா? எங்கு காணினும் வெளிச்சமடா.. எங்கு நோக்கினும் கூசுதடா… சாதா நாளில் அழுது வடியும் சாலை ஓர விளக்குகூடக் கோடி சூரியப் பிரகாசமாக ஏராளமான மாயாஜாலங்களுடன் அவர் கண்ணுக்குள் வந்து புகுந்து ஒளிச் சாட்டையால் அவர் கண்ணைச் சொடுக்கியது.

லபக்கென்று கண்ணை மீண்டும் இறுக மூடிக் கொண்டார். சினிமாவில் சில காமிராமேன்கள் கதாநாயகி தலையை ஒரே சமயத்தில் ஏழு அல்லது எட்டு தெரிவதுபோலக் காட்டுவார்கள். சூரியக் கிரணங்கள் நீரில் தகதகவென விழுந்து தங்கம் கொதிப்பது போலத் தகதகக்கும். பட்டப்பகலில் கலர் கலராக நட்சத்திரங்களும் ரவுண்டுகளும் முக்கோணங்களும், செவ்வகங்களும், சுருக்கமாகச் சொன்னால், ஜெகஜ் ஜோதியாக ஜாமெட்ரி அளவுகள் பிரதிபலிப்பதுபோல் காட்டுவார்களல்லவா?

“இட் இஸ் நியரிங் செவன்… இன்னும் ஐந்து நிமிஷம்தான் இருக்கிறது. வுட்லண்ட்ஸ¤க்குப் போக டைம் இருக்குமா? கான் ஐ டு ஒன் திங்… க்ளினிக்குக்குள்ளே போய் பொன்னம்மாவுக்கு ஒரு போன் பண்ணி, ‘நீங்க வர ஒரு தர்ட்டி மினிட்ஸ் லேட்டாகும்னு சொல்லிடறேன்…”

“சீதே! இவ்வளவு பதட்டத்திலேயும் உனக்கு மூளை வேலை செய்யுதே.. இதனால்தாண்டி நீ கிழவீங்க சங்க பிரசிடெண்ட்டா இத்தனை வருஷம் இருந்தே…”

“காரிலிருந்து இறங்கிடாதீங்க… கீழே விழுந்துவிடுவீர்கள்… லெட் மி டு ஒன் திங்… உங்களையும் கூடவே அழைச்சிட்டுப் போயிடறேன். க்ளினிக்கில் போன் எங்கேஜ்ட் ஆக இருக்கும். வேறு ஏதாவது ரோடு சைட் ஷாப்பிலிருந்து போன் பண்ணிக்கலாம்.. வாட் டு யு ஸே.”

“நீ சொன்னால் சரிதான்…”  என்றார்.

சீதாப்பாட்டி காரை லேசாகக் கிளப்பிக் கொண்டு சென்றாள். ஒரு ஐந்து நிமிஷமானதும் நிறுத்தினாள். “ப்ளீஸ்… ஜாக்கிரதையாக இறங்குங்கள்.. நாம போன் பண்ணிடலாம்…”

“வேணுமானால் நானும் பேசிடறேன்…”

“நான் நம்பர் டயல் பண்ணி முதலில் பேசிடறேன்…” என்ற சீதாப்பாட்டி அவரைச் சிறிது தூரம் நடத்தி அழைத்துச் சொன்றாள். “ப்ளீஸ்… இந்த சோபாவில் நீங்கள் உட்கார்ந்திருங்கள்…” என்று உட்கார வைத்தாள்.

“ஏண்டி சீதே! சோபாவா இது? பாறாங்கல்லு மாதிரி என்ன ஒரு கெட்டி”, என்றார்.

“உங்களுக்குப் போகிற இடமெல்லாம் குஷனும் டன்லப் பில்லோவும் இருக்குமா? ஜஸ்ட் எ மினிட்… வந்துடறேன்.”

சீதாப்பாட்டி டெலிபோனில் பேசுவது அவருக்குக் கேட்டது. “ஹலோ… மிஸஸ் பொன்னம்மா டேவிட்! நான் சீதா பேசறேன்.. மை ஹஸ்பெண்ட் இஸ் ஹெல்ட் அப்… இங்கே கண் டாக்டரிடம் வந்தோம்.. அவர் இன்னும் ஹா·ப் எனவரில் அங்கு வந்து விடுவார்… ப்ளீஸ்… ஒன் அவரானாலும் வெயிட் செய்கிறீர்களா? வெரி கைன்ட் அ·ப் யூ…”

“சீதே!” என்றார் அப்புசாமி, “என் மேலே அவங்களுக்கு எவ்வளவு மதிப்பு பார்த்தியா?”

பதிலில்லை. “சீதே!  நீ இன்னும் வரலியா?” திருதராஷ்டிரன் காந்தாரியைக் கூப்பிடுவதுபோல அப்புசாமி கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு “சீதே! சீதே!” என்று கூப்பிட்டுப் பார்த்தார்.

ஒரு சின்னப் பையன் குரல் கேட்டது. “தாத்தா, பாட்டி ஹண்ட்ரட் ருபீஸை சேஞ்ச் பண்ணப் போயிருக்கிறாள். உங்களை இங்கேயே கண்ணை மூடிட்டு உட்கார்ந்திருக்கச் சொன்னாள்… இதோ இப்ப வந்துடுவாளாம்…” 

கார் புறப்படும் சத்தம் கேட்டது.

அப்புசாமி மனைவியின் பொறுப்பான நடவடிக்கையால நெகிழ்ந்து போனார்.

“ஏய்யா.. என்னாய்யா கடைவெச்சிருக்கேங்க… ஒரு நூறு ரூபாய்க்கு சில்லறை கிடையாதா? இந்தக் கியவிதான் ஆகட்டும், ஒரு டெலிபோனைப் பண்ணிட்டு நூறு ரூபாய் நோட்டைத் தந்தால் எவன்தான் சில்லறை தருவான்…”

காரின் வரவுக்காக அவர் காதுகள் ஆவலுடன் காத்திருந்தன.

கால் மணிக்குமேல் பொறுக்க முடியவில்லை. கண்ணை பட்டென்று திறந்தார்…

‘செடிகள், புதர்கள், கருகும்மென்று இருட்டு, சில குடிசைகளில் காடா விளக்கு… சாலையோர கார்கள் விளக்கு.

பளீர் பளீர் என ஒளி வீசி அவர் கண்ணைப் பலநூறு கத்தியால் குத்துவதுபோல் உறுத்தியது…

“சீதே! சீதே! அடிப்பாவி! கடை என்றே, டெலிபோனில் பேசினியே.. எல்லாம் மாயமா?” விளக்குக் கம்பத்தருகே ஒரு பாறாங்கல் (சோபா) இருந்தது.

கீழே ஒரு துணி விரித்துப் போட்டிருந்தது. அதில் கால்மணி நேர கலெக்ஷனாகச் சில பல பத்து பைசா, இருபது பைசா நாணயங்களிருந்தன.

கண்ணைத் திறந்து ஓர் அடி எடுத்து வைக்க முடியாதபடி கண்ணில் வெளிச்சம் கூச்சலிட்டது.  

ஏதோ ஒரு மொபஸல் பஸ்ஸோ லாரியோ வந்தது. ஒரு ஜோடி ஒளி ராட்சஸர்கள் போல் அவை  ஓடி வந்தன. அப்புசாமி கண்ணை இறுக மூடிக்கொண்டு, “இஸ்டாப், இஸ்டாப்” என்றார்.

அந்தச் சரக்கு லாரி நிற்காமல் போய்விட்டது. வேறு எந்தப் பஸ்ஸ¤ம் நிற்கவில்லை. எந்தக் காலத்திலோ கெளதமரால் சபிக்கப்பட்டுக் கல்லான அகலிகையை போல, யாராலோ அரைகுறையாய் செதுக்கப்பட்ட நாட்டியப் பெண் போல பஸ் ஸ்டாப் கம்பமானது ஒடிந்து ஒளி குன்றிப் போயிருந்தது.

மணி சுமார் எத்தனை இருக்கும்? தன்னிடம் யாரோ ஒரு பையன் வந்து ஏதோ சொன்னானே? சீதே பேசினாளே டெலிபோன்… நூறு ரூபாயை மாற்றி வருகிறேன் என்று போனாளே!…

அப்புசாமி சாலையோரமாகத் தட்டுத் தடுமாற நடக்கலானார்? எந்தப் பக்கம் நடப்பது? இது எந்த இடம்… டெஸ்ட் ஸீரியலில் அடுதடுத்து முயற்சி செய்து தோற்கும் பாரத கிரிக்கெட் கோஷ்டி போல, அடுத்தடுத்து முயற்சி செய்து, தடால் தடால் என்று விழுந்தார்.

“ஏய்யா! குருட்டுப் பெரியவரே” ஒனக்கு எதுக்குய்யா இந்தக் கொழுப்பு… இப்படி ரோடு ஓரத்திலே படுத்துக் கெடந்துட்டுக் காலையில் விடிஞ்சு எந்திருச்சிப் போய்யா… லாரிங்க மசாலா அரைக்கிறாப்பல அரைச்சுப் போட்டுப் போயிடும்.. நடு ரோடுக்கு வந்துட்டியேடா அறிவு கெட்ட நாயே.. அறிவு வேணாம்.. கையில ஒரு தடி கூட இல்லே..” யாரோ ஒரு கிராமத்து முரட்டு ஆள் அவரைத் தரதரவென இழுத்துச் சாலையோரத்தில் மங்கென்று உட்கார வைத்தார்.

அப்புசாமிக்குப் பார்வை சகஜ நிலைக்கு வந்தபோது ராத்திரி எட்டு மணி இருக்கும்…  

பூந்தமல்லியிலிருந்து வந்த பஸ்ஸ¤க்குக் கையைக் காலை காட்டி ஆட்டி நிறுத்தினார். பிறகுதான் ஜிப்பாப் பையில் பைசா இல்லை என்று தெரிந்தது.

அங்கே சீதாப்பாட்டி ரசகுண்டுவுக்கும், பீமாராவுக்கும் ஸ்பெஷலாக ஆலூ சப்பாத்தி செய்து தர அவர்கள் வயிறு புடைக்க ரசித்துத் தின்றனர்.

“அவ்வா.. உங்க ஆசி இஹ¤டுவாகளுக்கு எப்போதும் பேகு..” என்றார் பீமா.

“உங்க கோவாபரேஷன் இல்லாவிட்டால் உங்க தாத்தாவை பொன்னம்மா டேவிட் பார்ட்டியில் கலந்துகொள்ளாமல் செய்திருக்க முடியாது. கண் டாக்டர் அப்பாயிண்ட்மென்டை உங்கள் உதவியால் அட்வான்ஸ் பண்ணிட்டேன். அவருக்கும் என் தாங்க்ஸைச் சொல்லுங்கள்…” என்று அவர்களை வழி அனுப்பி வைத்துட்டு, ஒரு எண்ணுக்கு டயல் செய்தாள்.

“ஹலோ.. பொன்னம்மா டேவிட்டா? நான் சீதே பேசுஸன்னுடைய ரிஸப்ஷன் நன்றாக நடந்ததா? என் வீட்டுக்காரர் ஏதோ பேசுவதாக இருந்ததே. இன்னும் அவர் அங்கிருந்து புறப்படவில்லையா? ஹெள வாஸ் த ஸ்பீச்? ஸ்பீச்சுக்கு ரிஸப்ஷன் எப்படி இருந்தது? அந்த ஸ்பீச்சை அவரே தயாரித்திருந்தால்கூட அவ்வளவு நன்றாக இருருக்காது. ஒரு ஜர்னிலிஸ்டால் கூட இப்படி எழுத முடியாது, எனி ஹவ் அடுத்தாப்பல” உங்க வீட்டு ·பங்க்ஷன் எதற்காவது அழைக்கும்போது இவர் மட்டும், அவர் மட்டும் என்று ஸில்லியாகப் போடாதே அன்டர்ஸ்டாண்ட்?”

போனை டொக்கென்று பெருமிதத்துடன் பாட்டி வைப்பதற்கும் வாசற் கதவு டொக் டொக்கென்று தட்டப் படவும் சரியாக இருந்தது. அப்புசாமியாகத்தானிருக்கும்.

சீதாப்பாட்டி வேண்டுமென்றே அரை மணி கழித்துச் சாவகாசமாகக் கொட்டாவி விட்டவாறே கதவைத் திறந்தாள்.

“வெல்கம் ஜென்ட்டில்மேன்… டாக்டர் இவ்வளவு நேரம் பண்ணிட்டாரா? ஓ! மைகுட்னஸ்! உங்களை நான் வழியிலே எங்கோ ட்ராப் பண்ணிட்டேனில்லே… பை த வே.. டின்னர் ஸ்பீச் ·பன்ட்டாஸ்டிக்காக இருந்ததாம்… ஜஸ்ட் நெள அந்த பொன்னம்மா டேவிட் போன் செய்தாள். அடுத்தாப்பலே அவளுடைய  மகள் கல்யாணம் வருதாம்… அதற்கு இப்பவே ஸ்பீச் ரெடி பண்ணி அனுப்பறேன்னு சொல்லியிருக்கிறாள். ஏதாவது இருந்தால் சாப்பிட்டுப் படுங்கள்… ப்ளீஸ் ஹெல்ப் யுவர் செல்·ப். குட் நைட் டியர்…”

“டி…ய…ர்..” அப்புசாமி பல்லை ஏகப்பட்ட நறநற செய்தவாறே சமையலறையை நோக்கி விரைந்தார்.

“அநியாயமா ஒரு டின்னர் போச்சு. ஒரு மாலை போச்சு, எனக்கு வர வேண்டிய புகழ் எல்லாம் போச்சு… பாவிடி நீ.. சதிகாரிடி நீ…”

“அட்லீஸ்ட் உங்களுக்காக ஆறின சப்பாத்தி இரண்டு வைத்திருக்கிறேன். அதற்காக எனக்கு நீங்க தாங்க்ஸ் சொல்லனும்… ஸ்பீச்சா தயார் பண்றீங்க ஸ்பீச்?”

அப்புசாமி அடிபட்ட பெருச்சாளி போல மூச்சிரைத்துக் கொண்டு தள்ளாடியவாறு சப்பாத்தியை நெருங்கினார்.

பொதுவாகப் பெண்களிடம் வாலாட்டக் கூடாது – முக்கியமாகப் புத்திசாலிப் பெண்டாட்டியிடம் வாலாட்டினாலில் வாலை டா·பர்மேன் பண்ணி விடுவார்கள் என்பதை இத்தனை வயதுக்கப்புறம் அவர் மறுபடி புரிந்துகொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *