கிளியின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 5,598 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிறிய ஊர் – அது ஒரு ஒரு அழகான கிராமம். நான்கு புறமும் மலைகள் – ஊரின் நடுவே ஒரு சிற்றாறு – திரும்பும் திசை எல்லாம் பச்சைப் பசேல் என்ற தோட்டங்கள் — அப்பப்பா ; அந்த ஊரின் அழகே அழகு!

ஊரிலுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு – பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் விளையாடுவதற் கென நல்ல நல்ல இடங்கள் இருந்தன. மலைக் குன்றுகளின் சரிவு – ஆற்றங் கரை மணல் மேடு – இன்னும் எத்தனையோ ! ஆனால், அவர்களுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியைத் தந்த இடம் எது தெரியுமா? ஒரு வயதான ஏழை விவசாயியின் வீடுதான்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? சிறிய வீடு – அதைச் சுற்றி பெரிய கோதுமைத் தோட்டம் – அது நிறைய கொத்துக் கொத்தான கோதுமைக் கதிர்கள் – இவை எல்லாம் தான் அந்தத் தம்பி தங்கைகளைக் கவர்ந்திருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. அந்த ஏழையின் வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு திறந்த கூண்டும், அந்தக் கூண்டிலிருந்த அழகான பச்சைக் கிளியும் தான் அவர்களை மகிழச் செய்தன. ஆமாம்; அந்தக் கிளியைக் கண்டுவிட்டால் அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் – குதூகலம்! “வாங்க ! வாங்க!” என்று அந்தக் கிளி கிழவன் சொல்லிக் கொடுத்த பாடத்தின்படி அழைக்கும் போது அவர்களுக்கு ஒரே சிரிப்பு பழத்தைக் கொத்திக் கொத்தித் தின்பதைக் காணும் போது ஒரே பூரிப்பு!

அந்த ஏழை விவசாயியும் தன் வீடு தேடி ஓடிவரும் தம்பி தங்கைகளைக் காணும் போது ஆனந்தப்படுவான் ; பொக்கை வாய் திறந்து சிரிப்பான். ஏன் தெரியுமா? அவனுக்கு உற்றார், உறவினர் யாருமே இல்லை. அவனுக்கு இருந்த துணை – ஒரே ஒரு துணை – அந்தக் கிளிதான். குழந்தையிலும் மேலாக அதை அவன் வளர்த்து வந்தான். பாலூட்டுவான் ; பழம் கொடுப் பான் ; பாசத்தோடு கொஞ்சுவான் ; அவை எல்லா வற்றையும் விட ‘ முழுச் சுதந்திரமும் தருவான். அது தன் விருப்பப்படி எப்போதும் பறக்கலாம்; எங்கும் போகலாம். ஏனெனில் அந்தக் கிளியின் ‘வீடு’ இருக் கிறதே – அதுதான் கூண்டு – அதன் கதவு எப்போதும் திறந்தே யிருக்கும். கிளியும் சற்று நேரம் வெளியே பறந்து செல்லும். மற்ற நேரமெல்லாம் கூண்டிற்குள்ளேயே இருக்கும், “வாங்க!, வாங்க!” என்ற ‘பல்லவி’யைப் படித்துக்கொண்டே. அல்லது கோதுமைத் தோட்டத்தைக் காவல் புரியும் கிழவனின் தோளிலேயே உரிமையோடு தொத்திக் கொண்டிருக்கும்.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந் திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்…. இல்லையா? ஆனால், அதை எப்படிச் சொல்வது; கிளியின் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வந்தது. குடம் பாலிலே துளி விஷம் கலந்தால் போதாதா? அந்தக் கிளிக்கும் கெட்ட நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டு விட்டது. கோதுமைத் தோட்டத்தில் திருட்டுத்தன மாக நுழையும் காக்கைகளுடன் அது பழக ஆரம்பித்து விட்டது. நாளாக ஆக பழக்கம் முற்றிக்கொண்டே வந்தது.

முன்னைப் போல் எல்லாம் அது தன்னைப் பார்க்க வருகின்ற தம்பி தங்கைகளிடம் அதிகமாகக் கொஞ்சு வதில்லை ; கிழவனின் தோளிலும் அதிகமாக உட்காருவதில்லை. காக்கைகளுடன் விளையாடிக் கொண்டி ருக்கவே அதற்கு நேரம் சரியாக இருந்தது. அதைக் கண்ட கிழவனின் மனம் ரொம்பவும் வருத்தப்பட்டது. தனக்கு ஒரே ஒரு மகன் இருந்து – அவன் தவறான வழி நடந்து – கெட்டுப் போயிருந்தால் கூட அவ்வளவு வருத்தப்பட்டிருக்கமாட்டான், அவன். அத்தனை கவலை! அளவில்லா வேதனை!

நாட்கள் நகர்ந்தன. ஆனால் கிளியின் கீழ்த் தரமான செயல்களோ அசையாமல் நிலைத்துவிட்டன. இப்போதெல்லாம் அது வீட்டிற்குக் கூடச் சரியாக வருவதில்லை ; வீட்டில் ஊர்ச் சிறுவர் சிறுமியர்கூட அவ்வளவாகக் கூடுவதில்லை ; எப்போதும் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தக் கூச்சலும், ஆரவாரமும் குறைந்துவிட்டது. கிழவனுக்கு இது மிகமிகக் கலக் கத்தைக் கொடுத்தது.

ஒரு நாள் —

வீட்டு வாசலில் உட்கார்ந்து கோதுமைத் தோட்டத்தைக் காவல் செய்து கொண்டிருந்தான், கிழவன். தோட்டத்தில் அவனது காவலைக்கூட அலட்சியம் செய்து அதிகமான காக்கைகள் கூடி விட்டன. நன்றாக முற்றியிருந்த கோதுமையைக் கொத்தித் தின்ன அங்கே ஒரு பெரும்படையே திரண்டு விட்டது கிழவன் விரட்டினான் ; அவை நகரவில்லை. கல்லெடுத்து எறிந்தான் ; கடுகளவும் பலன் கிடைக்க வில்லை. கிழவனுக்கு கோபம் வந்துவிட்டது. கண்களைப்போல காத்து வளர்த்த பயிரை சேதப்படுத்து வதென்றால்…? கிழவனின் ஆத்திரம் அடங்கவில்லை. வேகமாக எழுந்தான். வீட்டிற்குள் நுழைந்தான், உடனேயே திரும்பியும் வந்தான். இப்போது அவனது கைகளில் பறவைகளைச் சுடும் துப்பாக்கி இருந்தது. காக்கைகளை விரட்ட – அவை தரும் தொல்லையைத் தடுக்க – சரியான வழி கண்டு பிடித்து விட்டான் கிழவன்.

காக்கைகள் துப்பாக்கியையும் — அதன் முனை தங்களை நோக்கித் திருப்பப்பட்டிருப்பதையும் கவனிக்கவில்லை; அவைகள் காரியத்திலேயே கண்ணாயிருந்தன. கிழவன் துப்பாக்கியைத் தயார் செய்துகொண்டான். குறிவைத்தான். ஆனால் பாவம், அந்தக் காக்கைகளின் கூட்டத்திலேதான் அவனது உயிருக்கு உயிரான கிளியும் சேர்ந்திருப்பதைஅவன் கவனிக்கவில்லை. அவனது பார்வை குறைந்த வயோதிகக் கண்களுக்கு அது தெரியவுமில்லை.

டுமீல்…..

கிழவன் சுட்டுவிட்டான். குண்டு பறந்தது, காக்கைக் கூட்டத்தை நோக்கி. மறு கணம் ‘ கா கா ; கா கா ‘ என்று ஒரே சப்தம், காக்கைகள் திசைக்குத்திசை தப்பிப் பறந்தன. ஆனால் … அந்த சப்தத்துக்கு மத்தியிலேதான் ‘கீ கீ’ என்ற ஈனக் குரலும் எழும்பியது.

கிழவன் திடுக்கிட்டான். என்ன சத்தம் அது? கிளியின் குரல் போலல்லவா இருக்கிறது? கிழவன் கிளிக் கூண்டைப் பார்த்தான். அதிலே கிளியைக் காணவில்லை. மறுகணம் துப்பாக்கியை வீசி எறிந் தான். தோட்டத்திற்குள் புகுந்தான். சப்தம் வந்த இடம் நோக்கி ஓட்டமாக ஓடினான்.

கிளியின் சப்தம் ஓயவில்லை. அதற்குள் அந்த டத்தை அடைந்துவிட்டான் கிழவன். கீழே பார்த்தான். அதைத் தொடர்ந்து எழும்பிய அவனது “ஐயோ” என்ற அலறல் துப்பாக்கி சப்தத்தைவிடப் பெரிதாகக் கேட்டது. கிழவன் ஏன் அப்படிக் கத்தினான் தெரியுமா? அங்கே கீழே விழுந்து கிடந்தது கிழவனின் சொந்தக் கிளிதான்! அதுவும் பயங்கரமான நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்து துடிதுடித்துக் கொண்டிருந்தது!

கிழவன் கீழே உட்கார்ந்தான். கிளியை எடுத்தான். அவனுக்கு சொல்லமுடியாத படபடப்பு, துடிதுடிப்பு!

கிளியின் வயிற்றிலே துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது. அது கத்திக்கொண்டேயிருந்தது. சப்தம் வரவரக் குறைந்தது ; கிழவனின் அன்பொழுகும் முகத்தை ஒரு முறை பார்த்தது; துள்ளி எழும்பியது : இறக்கைகளைப் படபடவென்று அடித்துக்கொண்டது. மறுகணம் அதன் சப்தம் அடங்கியது; இறக்கைகள் ஓய்ந்தன; தலை சாய்ந்தது; பிணமாகிவிட்டது!

கிழவன் அழுதான் ; அலறினான். என்ன பலன்? பல ஆண்டு காலமாக அவனது பாசத்துக்கும் பற்றுக்கும் உரிய ஒரே உயிராக இருந்ததே அந்தக் கிளி ; அது கண நேரத்தில் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக வேண்டிய பரிதாபம் ஏன் ஏற்பட்டது?

உங்களுக்கு விடை கிடைக்கிறதா? ஆனால் அந்தக் கிழவனின் உலர்ந்துபோன உதடுகள் முணு முணுத்தன “கெட்ட சகவாசம் ; கெட்ட சகவாசம்!” என்று !

கிளியின் உயிரில்லா உடலை எடுத்துக் கொண்டான் கிழவன். தள்ளாடித் தடுமாறி நடந்தான். அவன் கண்களிலிருந்து பெருகிப் பாய்ந்த கண்ணீர், கிளியின் உடலிலிருந்த வழிந்தோடிய இரத்தத்தோடு கலந்தது.

அதன் பிறகு கிளியைப் பார்க்கச் சென்ற தம்பிகளின் கண்களில் கிளி அகப்படவில்லை; கீழ்க்கண்ட எழுத்துக்கள் தான் புலப்பட்டன:

“கெட்ட சகவாசம் வேண்டாம்!

கெட்ட சகவாசம் வேண்டாம்!”

(ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது)

– புத்தர் பொம்மை, முதற் பதிப்பு: நவம்பர் 1957, தமிழ் நிலையம், புதுக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *