ஜல்லிக்கட்டு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 2,092 
 
 

“அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலை நான் கட்டியதால் கிடைத்த புண்ணிய அருளால் எனக்கு கிடைத்த என் அருமை மகளே சிவனவி, மேலை நாட்டிலிருந்து வணிகன் ஒருவன் வந்துள்ளானாமே…அவன் உனக்கு பரிசு பொருட்களையும்,வாசனைத் திரவியங்களையும் கொடுத்து நம் ஓலைச்சுவடிகளைக் கேட்பான்.

கொடுத்து விடாதே. முன் காலத்தில் நம் முன்னோர்கள் எழுதிவைத்த அறிவான கருத்துக்களையும்,கண்டு பிடிப்புகளையும் வருங்காலத்தில் அவனது நாட்டில் பயன்படுத்தி சந்திர கிரகத்துக்கும்,செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி அதை அவன் கண்டு பிடித்ததாக கூறுவான். நம் மூதாதையையர் ராமனின் வில்லையும்,அறிவு நிறைந்த சொல்லையும் அந்நியர்கள் பயன்படுத்தக்கூடாது. நம் சேர நாட்டிலேயே மலையை ஆளும் குறு நில மன்னர்கள் தமிழை கொஞ்சம் மாற்றி பேசுகிறார்கள். அதை மலையாளம் என்கிறார்கள். இந்த அந்நியன் அறைகுறையாக தமிழ் கற்றுக்கொண்டு விட்டான். பெயர் என்னவோ பாஸ் கோட கோமாவா?” என தன் மகளைப்பார்த்து கேட்டார் சேரமன்னர்‌!

“வாஸ்கோடகாமா என்று கூறினான் தந்தையே…” என்றாள் சிவனவி!

“ம்..யாரங்கே..?அந்த அந்நியனை வரச்சொல்”

என தனது கம்பீரமான குரலில் சிம்மத்தின் கர்ஜனை போல் உத்தரவை பிறப்பித்தார் மன்னர்!

“உத்தரவு மகாராசா…” என்ற காவலன் வெள்ளைக்காரனை மன்னரிடம் அழைத்து வந்து நிறுத்தினான்!

“குட் மார்னிங் பிரபு” என்ற வாஸ் கோடகாமாவை,மேலிருந்து கீழ் வரை பார்த்த மன்னர்,”என்னது குட்ட என சொல்லுகிறாய்?” என கோபமாக சீறினார்!

“மன்னா… குட் என்றால் நல்லது என்றும்,மார்னிங் என்றால் காலை என்றும் கூறுகிறான்…” என மந்திரி மார்த்தாண்டம் விளக்கினார்!

“இங்கே காளையுமில்லை, கத்திரிக்காயுமில்லை. யானை, குதிரை தான் இருக்கிறது. காளைகளெல்லாம் சல்லிக்கட்டு விளையாட சென்று விட்டன…”என சிலேடையாக பேசினார் மன்னர்!

“காளை இல்லை மன்னா…காலை என்றால் காலைப்பொழுது” என மேலும் விளக்கிய மந்திரியைப்பார்த்து “ஓ..ஓ…என் முன்னால் நின்று கொண்டு என்னை வணங்காமல் காலைப்பொழுதை வணங்குவதாக என்னிடமே சொல்லுகிறானென்றால் இவன் சூழ்ச்சிக்காரன்” என்றார் மன்னர் வாள் மீது கை வைத்தவாறு!

“பொங்கல் வாழ்த்துக்கள் பிரபு.” என்ற வாஸ் கோட காமா, ஒரு கல்லை மன்னர் கையில் கொடுத்ததை பெற்ற மன்னர்,

“பொங்கல் என்பதை ‘கல்’என்று புரிந்து கொண்டு விட்டான். வெறும் கல்லைக்கொடுத்து நமது பாரதத்தின் பொக்கிசமான கோகினூர் வைரக்கல்லை திருடிச் சென்று விடுவான். பக்கத்து ராசியங்களையும் பாதுகாப்பாக இருக்கச்சொல்லி ஓலை அனுப்பி விடு…” என்றார் மந்திரியிடம் மன்னர் எச்சரிக்கையுடன்!

“சரி மன்னா…அப்புறம் ஒரு விசயம்….நமது நாட்டு மாடுகளை பிடித்திருப்பதால் மாடு விலைக்கு கேட்கிறான்” என்று பணிந்த மந்திரியை ஏறிட்டு,

“அவனைப்பார்த்தால் மாடு பிடிக்க வந்தவனாகத்தெரியவில்லை,நாடு பிடிக்க வந்தவன் போல் தெரிகிறான்” என்றார் மன்னர் அலுத்தமாக!

“இன்னொரு முக்கியமான விசயம் மன்னா. நாம் ஜல்லிக்கட்டு நடத்துவது மிருகவதை என்கிறான். ஆனால் காளை கறி சுவை மிகுந்தது என்று முரண்பாடாக பேசுகிறான்” என மந்திரி சொல்ல சிம்மாசனத்திலிருந்து எழுந்த மன்னர்,

“அப்படியா சொன்னான்? அவனை நம் அரண்மனை அகழியில் உள்ள முதலைகளுக்கு போட்டு விடு.

ஜல்லிக்கட்டு நடத்தி மக்கள் பரிசுகளை அள்ளிக்கொண்டு போக ஏற்பாடு செய். பாண்டிய நாட்டிலே நாளை நடக்கும் சல்லிக்கட்டைக்காண நான் அலங்கா நல்லூர் செல்லவேண்டும். அந்த நாட்டு மன்னர் அழைப்பு அனுப்பியுள்ளார். எனவே நம் சேர நாட்டில் இன்றே சல்லிக்கட்டை நடத்தி விடுங்கள். அப்படியே அனைவருக்கும் தண்டோரா போட்டு பொங்கல் வாழ்த்துக்களை நான் சொன்னதாக கூறச்சொல்”என்று கூறி விட்டு சேரமன்னர் ஓய்வெடுக்க தமது அறையை நோக்கி சென்றார்!

“உத்தரவு மன்னா” என்ற மந்திரி, வாஸ்கோட காமாவை வெளியில் அழைத்துச்சென்று இனிமேல் மறந்தும் கூட அரண்மனைப்பக்கம் தலைகாட்டி விடாதே…மன்னர் சொன்னால் மறுக்க முடியாது. உயிர் பிச்சை தருகிறேன் ஓடிவிடு ” என கூறிய மந்திரியார், உடனே காவலர்களை அழைத்து “இந்த அந்நியனை வெளியே அனுப்பிவிட்டு அரண்மனை வாயிலை இழுத்து மூடுங்கள். இனிமேல் இவன் போன்ற தோற்றத்தில் அந்நியர்கள் வந்தால் உள்ளே அனுமதிக்காதீர்கள். இது மன்னரின் ஆணை” என அதிகாரமாக கட்டளையிட்டார் மந்திரி மார்த்தாண்டம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *