கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 12,521 
 

“”ம்ம்ம்மா….” என்று அலறிற்று. அழுகையும் அலறலுமான அதன் குரல் எனக்குள் என்னவோ செய்ய… தொடர்ந்த சில நிமிடங்கள் நகராது தத்தளித்தன.

“”என்ன பெரியக்கா… இப்படி கலங்குற… ஒன்னும் நடக்காது…” கலக்கமாகத்தான் இருந்தது. பசுமாடு வேறாகவும் கன்று வேறாகவும் போவதற்குள் அது படும் வேதனை.

மடிச்சுமை

கொஞ்ச நேர அமைதிக்குப் பின் “அது’ நிகழ்ந்தது. கன்று, வேறாய், வைக்கோல் பொதியின் மேல் கிடக்க… பசுமாடு அதனை அரவணைத்துக் கிடந்தது.

கன்றின் உடல் முழுக்க ஈரமாயிருந்தது. மெல்ல அது அசைய பயமாய்க்கூட இருந்தது. காற்றின் களங்கம்கூட ஏதுமின்றி அதன் உடல் தூய்மையாய் இருந்தது. பசுமாடு நாக்கால் தடவித் தடவி எடுக்க கன்றின் உடல் நன்கு பளபளத்தது.

மெல்ல எழுந்து நிற்க முயன்ற கன்று, புரண்டு விழுந்து, இயலாமற் போய் பசுமாட்டின் மடிமீது சாய, அதன் தீண்டலில் மடி சுரந்து ஒழுகிற்று.

“”அம்மா…” என்று கதற வேண்டுமாய் எனக்குள்ளும் பொங்கிற்று. பெருமூச்சுடன் எழுந்து உள்பக்கம் நடந்தேன். இனி ஏதும் கவலையில்லை. தன்னையும் தன் கன்றையும் இனி அது பார்த்துக் கொள்ளும்.

காலை மணி ஏழரைக்கு மேல் இருக்கும். நல்ல நேரமா கெட்ட நேரமா என்று எனக்குள் கேள்வி எழுந்தது.

“”நல்லது நடக்கற எல்லா நேரமும் நல்ல நேரந்தான்…” என்று இல்லாமல் போன அவர் காற்றில் பதில் சொல்வது போலிருந்தது.

“”அத்த… கொஞ்ச நேரம் வெச்சிக்கங்க…”

என்றபடி பேரனை மடியில் கிடத்திவிட்டுப் போனாள் மருமகள். உயரமாய் சிவப்பாய் இருந்தாள். தினமும் வேலைக்குப் போகிறாள். சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவள், ஆறுமாதம் முன்பு பேரன் பிறந்ததிலிருந்து மோட்டார் சைக்கிளில் போகிறாள். ரோஜாப்பூ நிறத்திலான அந்த வண்டியும் அவளைப் போலவே அழகாயிருக்கும். என்ன வேலை என்பது தெரியவில்லை என்பதைவிட புரியவில்லை.

ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ரயில் நிலையத்தில் அதை நிறுத்திவிட்டு, பின்னர் ரயிலில் போய், வந்து, இறங்கி… பாவம்… அலைந்து கருத்துப் போகிறாள்.

“”என்ன அத்த… புதுசா பாக்கற மாதிரி பாக்குற..? பேரன பத்திரமா பாத்துக்க… செல்லம்… அம்மா போய்ட்டு வர்ட்டா…”

கையசைத்துச் சிரித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்று மறைய… பேரன் சிரித்து சிரித்து மடியில் புரண்டான்.

“”ஏன்டா…. செல்லம்… இன்னும் ஆறுமாசம்…. அப்புறமா.. உங்க அம்மாவ வேலைக்குப் போக விடுவியா….”

என்றபடி இறுக்கிக் கொஞ்ச.. அதற்கும் அவன் சிரித்துச் சிரித்து மீண்டும் மடியில் புரள…

மீண்டும் பொங்கிற்று எனக்கு.

“”அம்மா… உனக்கு எத்தன தோசை ஊத்தட்டும்…” மகனின் குரல் கலைத்தது. மணி ஒன்பது. எது தவறினாலும் ஒன்பது மணிக்கு இவனின் இந்தக் கேள்வி தவறுவதில்லை. “”இல்லப்பா… நான் சோறும் தயிரும் சாப்பிட்டுக்கறேன்…” கொஞ்ச நேரத்தில் மகன் தோளில் மாட்டிய பையுடன் வந்தான். பக்கத்தில் இருக்கும் கிராமத்து வங்கியில் வேலை. நடந்துபோகும் தொலைவுதான். அவர் இருந்து செத்துப் போனதில் கிடைத்த வேலை.

“”ஏம்மா… இவன எப்பப் பாத்தாலும் தூக்கி வெச்சுகிட்டே இருக்காத… அப்புறம் அதையே

பழகிட்டு உன்னய விட மாட்டான்…”

என்றபடி கிளம்பி நகர்ந்து மறைந்தான்.

* * *

மணி பதினொன்றிருக்கும். சர்க்கரையும், ஏலக்காயும், கொஞ்சம் தூக்கலாய் மிளகும் சேர்த்து அரைத்துக் கொண்டிருந்தேன். பசுவின் மடி சாய்ந்து கன்று பால் குடித்துக் கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அது தூங்கிவிடும்.

தொட்டிலில் இருந்த பேரன் புரண்டழுதான்.

“”…தங்கத்துல கிண்ணஞ் செஞ்சி

தாத்தா கொண்டு தருவாரு…

வைரத்துல வைரத்துக்கு…”

என்று குரல் கொடுக்க… அமைதியானான்.

கன்றும் அமைதியாயிற்று. லாகவமாய்ப் பால் கறந்தேன். சீம்பாலில் சொம்பு நிறைந்தது. சர்க்கரையும், ஏலமும், மிளகும் இட்டுக் காய்ச்ச வேண்டும்…. மடிச்சுமை இறங்கிய சுகத்தில் பசுவும் கண் மூட… எனக்கும் கண்ணை இழுத்தது.

வழக்கமாய் ஒரு மணி நேரத் தூக்கத்தில் விழித்தெழும் பேரன் எழாது மீண்டும் புரண்டழுதான். நெற்றியில் கை வைக்கச் சூடாய் இருந்தது. வயிறும் சூடாய் இருக்க…

காய்ச்சல் வந்தால் கொடுக்கச் சொல்லிக் கொடுத்திருந்த மருந்தில் ஐந்து சொட்டு நாக்கில் விட்டேன். மீண்டும் தூங்கிப் போனான்.

மதியச் சாப்பாட்டுக்கு மகன் வந்தபோதும் பேரன் எழாது உறங்கிக் கொண்டிருக்க… காய்ச்சல் விட்டபாடில்லை. “”என்னம்மா ஆச்சு… சொட்டு மருந்து கொடுத்தியா?”

“”கொடுத்திட்டம்பா… ஆனாலும் காய்ச்சல் விடலயே…”

“”பாக்கலாம்… சாயங்காலம் வரைக்கும் பாத்துட்டு சேலத்துக்கு போய்ட்டு வந்துறலாம்…”

“”பாக்கறது என்ன பாக்கறது… சாயங்காலம் போய் காமிச்சுட்டு வந்துருங்க…”

மகன் சரியாய் சாப்பிடவில்லை. எப்போதும் முகம் பார்த்துச் சிரித்தபடி அருகில் படுத்திருக்கும் தன் மகனிடம் எதையாவது பேசியபடி சாப்பிடுவான்.

“”அம்மா… மூணு மணிக்கு ஒரு தடவை மறுபடியும் சொட்டு மருந்து கொடுத்துடு…”

* * *

ஐந்தரை மணிக்கு மருமகள் வந்து தொட்டபோதும் பேரனுக்கு தூக்கம் கலையவில்லை. உடல் அனலாய் தகித்தது. மருமகள் முகம் இருண்டு போயிற்று.

“”சொட்டு மருந்து எப்ப அத்த குடுத்த…?”

“”மூணு மணிக்கும்மா…”

“”ஏன் தெரியலயே… காய்ச்சல் குறையவே இல்ல…” போனை எடுத்து…

“”நான்தாங்க பேசறேன்… தம்பிக்கு காய்ச்சல் விடவே இல்ல…” சரிங்க… கார் ஒண்ணு ஏற்பாடு பண்ணுங்க… ம்ம்… நான் வந்துர்றேன்…”

சில நிமிடங்களில் கார் வந்து நின்றது.

“”அத்த… நான் பேங்க்ல போய் அவரைக் கூட்டிகிட்டு… சேலம் போய்ட்டு வந்துடறம்… பாத்துட்டு வர எப்படியும் பத்து மணிக்கு மேல ஆயிரும்… பக்கத்து தோட்டத்து தம்பிய வந்து அதுவரைல கூட இருக்கச் சொல்லு…”

கேட்டுக் கொண்டே… வெந்நீர், பால் ஆகியவற்றைத் தனித்தனியே ஊற்றிக் கொண்டிருந்தேன்.

“”அத்தே…” என்ற மருமகளின் அலறல் கேட்டு அதிர்ந்து திரும்ப…

பேரனுக்கு… கழுத்து சாய்ந்து… காலும் கையும் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது. வாயில் நுரை பொங்கி…

“”அத்தே… அத்தே…” என்றபடி புரண்டழுதவளைத் தேற்றவும் தோன்றாது என்னவென்று, உணரவும், செய்யவும், மனமின்றி…

“”ஒண்ணுமில்ல… ஒண்ணுமில்ல… காய்ச்சல் மீறிப் போச்சு… பயப்படாத…” என்றபடி பேரனை மடியில் கிடத்தி வாயைத் துடைத்தேன்.

சில விநாடிகளில் இழுப்பு நின்று போனாலும், தலை நிற்காது துவண்டு போயிற்று.

“”ஒண்ணுமில்லம்மா… பயப்படாத… நாம சேலம் போயிறலாம்…” மகன் வந்துவிட்டிருந்தான்.

அக்கம் பக்கத்துத் தோட்டம் கூடியிருந்தது. வீட்டைப் பக்கத்துத் தோட்டத் தம்பியைப் பார்க்கச் சொல்லிவிட்டு நால்வரும் காரில் ஏறினோம்.

* * *

மருத்துவமனை ரொம்பவும் பழையதாக இருந்தது. டாக்டர் சின்னப் பெண்ணாய் இருந்தது.

“”காய்ச்சல் அதிகமா இருக்குது… எதுவும் பிரச்னை இல்ல… இனிமே… இந்த அளவுக்கு போக விடாதீங்க…”

எங்களை வெளியே போகச் சொல்லிவிட்டு அறைக்கதவை சாத்திக் கொண்டார்கள். பேரனின் கதறல் கதவிடுக்கில் கசிந்து மனதை உலுக்கிற்று. மகன் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்க… மருமகள் என் மடியில் புரண்டு காதை இறுக்கிக் கொண்டு…

“”ஒன்னும் ஆவாது தாயி… அழுவாத…”

என்றபடி அவளைக் கட்டிக் கொண்டேன்.

கதவு திறந்து எங்களை உள்ளே விட்டபோது பேரனின் கையிரண்டிலும் குளுகோஸ் தண்ணீர் ஏறிக் கொண்டிருந்தது.

“”நல்லா தூங்கிடுவான்… கைய ஆட்டாம பாத்துக்கங்க…” ஜன்னல் வழியே தூரத்து ஏற்காடு மலை தெரிந்தது. மலையில் ஏறும், இறங்கும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் இருட்டில் மின்மினிப் பூச்சிகளாய் எரிந்து மறைந்துகொண்டு இருந்தது.

“”மணி என்னப்பா?”

“”பதினொன்னுக்கு மேல ஆகுதும்மா… நீ தூங்கு…”

“”மாட்டுக்கு சாயங்காலப் பால் கறக்காம வந்துட்டனே… என்ன பண்ணிச்சோ தெரியலயே…”

பக்கத்துத் தோட்டத்துத் தம்பி கறந்திருப்பான் என்று மனம் ஆறுதல் சொல்லிற்று.

* * *

இரவு முழுக்கத் தூங்காமலிருந்ததில் கண்ணிரண்டும் புகைந்து எரிந்தது. காலை ஆறரை மணியிருக்கும். மருத்துவமனையை நீளமாய் ஒரு குச்சியும், துணியும் வைத்து மணக்கத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். பேரன் கண் விழித்துக் கொஞ்சம் சிரிக்க… நிம்மதியாய் இருந்தது.

“”ஏம்பா… வூட்டுக்கு ஒரு போன் போட்டு நேத்து சாயந்திரம் பால் கறந்தாச்சான்னு கேளு… காலைப் பால் வேற கறக்கணுமில்ல… இல்லேன்னா மடி கட்டிக்குமே…”

“”இப்பதாம்மா கேட்டேன்… கிட்டப் போனா மாடு உதைக்குதாம்… கறக்காம விட்டுட்டாங்க போல இருக்கு…”

மனம் “சுருக்’கென்றது.

“”ஏம்மா… ஐம்பத்தெட்டாம் நம்பர் பஸ்சுல போயிரட்டுமா? நீங்க இருந்து பாத்துட்டு வந்துருங்க…”

“”இரு… அத்த… நான் ஆட்டோல கூட்டிட்டு போய் பஸ் ஏத்தி விடறேன்…”

மகனுடன் வேலை செய்யும் ஒருவர் வந்து அவனோடு பேசிக் கொண்டிருந்தார்.

“”பெரியக்கா… ஏன் பஸ்சுல ஏறி செரமப்படறீங்க… நான் மோட்டார் சைக்கிள்ல கூட்டிகிட்டுப் போயிடறேன்… வாங்க…”

மகனுடைய வண்டியைப் போலல்லாது கொஞ்சம் உயரமாய் இருந்தது அவர் வண்டி.

“”போலாமா… பெரியக்கா…”

* * *

மாடும் கன்றுமே மனதில் ஓடிக் கொண்டிருக்க… வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

“”இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு வூட்டுக்குப் போக…?”

“”பெரியக்கா… இன்னும் பத்து நிமிஷத்துல போயிறலாம்… நீ நல்லா கெட்டியா பிடிச்சுக்க…”

குலுங்கலில்லாமல் மோட்டார் சைக்கிள் போய்க்கொண்டு இருக்க, என்னை மீறி கண் இழுத்த… ஒரு நொடி…

* * *

எத்தனை நாட்கள் கண்மூடிக் கிடந்தேன் என்பது தெரியவில்லை. மீண்டும் கண் விழித்தபோது மருத்துவமனை வாசம் வீசிற்று. வலது கையைத் தூக்கி ஒரு பையில் வைத்துக் கட்டியிருந்தார்கள். வலது கண்ணைச் சுருக்கி விரிக்க முடியாது வலி பிடுங்கிற்று. வலது காலில் இரண்டு இடங்களில் கட்டுப் போட்டிருந்தது. கண்ணில்பட்ட மகனை அருகில் அழைத்தேன்.

“”பேரன் எங்கப்பா…? காய்ச்சல் விட்டுருச்சா…?”

“”நல்லாருக்காம்மா… இரு கொண்டு வரச் சொல்றேன்…” பேரன் என் முகம் பார்த்து வழக்கம்போல் சிரிக்க… எனக்குள் பொங்கிற்று. அசைந்து எழ முயன்றேன்.

“”வேணாம் அத்த… இன்னும் இரண்டு நாள் ஆகட்டும்…” மருமகளின் குரலில் இருந்த தெளிவு மகிழ்வூட்டிற்று. பேரனின் சிரிப்பும் மருமகளின் இழைவும் சூழல் இயல்பாய் இருப்பதை உணர்த்திற்று. சட்டென்று மாடும் கன்றும் நினைவுக்கு வர, அதேநேரம் டாக்டரும் உள்ளே நுழைந்தார்.

“”என்னம்மா… எப்படி இருக்கீங்க… கையில வலி இருக்கா…?”

“”ஆமாங்க… லேசா…” என்றேன்.

“”எப்படி இருந்தாலும் இருபத்தியோரு நாள் அசைக்கவே கூடாது… புரிஞ்சுதா…”

இருபத்தியோரு நாளா? என்னைத் தவிர யாரையும் அருகே விடாது. எட்டி உதைக்கும். பசு மாடும் கன்றும் என்ன ஆவது?

நலிவுற்ற பேரனின் வலியறிந்து உணர்ந்து சீராக்கி… மீண்டும் தன் தாயோடு அவன் மகிழ்ந்து புரண்டு சிரிக்கையில்… மீண்டும்… விட்டுவிட்டு வந்துவிட்ட பசுமாடும் கன்றுமே நினைவில் அலையாய் எழுந்தன. என்னைத் தவிர பேசவும், தடவித் தரவும் யாருமே இல்லாது அவை… மனம் என்னிலிருந்து நழுவிற்று. நழுவும் மனதுக்குள் பசு மாட்டின் அலறல் கேட்டது. பால்சுரந்து கறக்காமல் விட்டு மடிச்சுமையுடன் கூடிய அதன் அலறல்.

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *