புருஷோத்தமன் தெருவில் சந்தானத் தின் வீடு எது என்று கேட்டால், உடனே கை நீட்டும் அளவுக்குப் பிரசித்தம். காரணம், சந்தானத்தின் கேரக்டர். தன்னுடைய வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சந்தானம் முன்வைக்கிற கண்டிஷன்களாலேயே, சென்னையில் பிரபலமாகி இருந்தார். சந்தானம் வாடகைக்கு விடுவதாக இருப்பது அவர் குடியிருக்கும் வீட்டின் மாடி போர்ஷன். சந்தானம் எப்போதுமே நாளையைப் பற்றி சிந்திக்கிறவர் இல்லை. அதற்கு மறுநாளை மட்டுமே சிந்திக்கிறவர். ஊரே சாலையில் பயணித்தால், சந்தானம் மட்டும் இருப்புப் பாதையில் பயணிப்பார். இதில் என்ன விசேஷம் என்று கேட்கலாம். ரயிலில் அல்ல. அண்டர் லைன். இருப்புப் பாதையில் நடந்து செல்லும் அபாயத் தனி ரகன் சந்தானம்.
‘ஒரே பிள்ளை அதும் பொட்டைப் பிள்ளையாப் பெத்துவெச்சிருக்கோம். அதைக் கண்காணாத எடத்துக்கு எதுக்குக் கட்டிக் கொடுக்கணும்?’
மேலும், ‘அப்படியே வீட்டோட ஒருத்தன் மாப்பிள்ளையா வந்தா, அவனைக் கீழ் போர்ஷன்ல குடிவெச்சுட்டு, நானும் என் சம்சாரமும் மாடியில் இருந்துக்கிடுவோம்ல?’
சந்தானம் யோசனைகளுக்கா கவே வாழ்கிறவர். அவரிடம்வாழ் வதற்கான அத்தனை யோசனை களும் இருந்தன. எல்லாமே முன் தீர்மானங்கள். வாழ்க்கையை எந்தவித வித்தியாசங்களும் இன்றி, தான் எதிர்பார்த்தாற்போலவே வாழ்ந்துவிடுவதில் நிகரற்றவர். அவருடைய ஒரே பெண் அஞ்சு இப்போதுதான் எட்டாவது வகுப்பு படிக்கிறாள். அவள் திருமணத்தை முன்னிட்டுக் கட்டியதே அந்த வீடும் மாடியும். ஆகவே, நாளைக்கு மறுநாள் யோசனையின் வெளிப்பாடாக, சந்தானம் தான் கட்டிய அரண்மனையின் மாடியை ஒரு நல்ல வனுக்குத்தான் வாடகைக்கு விடுவேன் என்று காத்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருட காலம் காத்திருந்தார். ஆனால், அவருடைய கண்டிஷன்களைக் கேட்கும்போதே மயங்கிச் சரிந்தவர்கள், மருத்துவமனை நோக்கி ஓடியவர் கள், சொந்த ஊருக்கே திரும்பியவர்கள் அநேகர். ஆகவே, பழுக்காத பழம் பாலில் விழாத கதையானது.
ஓர் ஊர் என்றால், ஆங்காங்கே கல்யாண விநாயகர் கோயில் இருக்கும்தானே? அவரைச் சுற்றியவுடன் கல்யாணம் ஆகும் என்கிற நம்பிக்கையில் பெண்கள் சுற்றி வருவார்களே… அதேபோல், சமயங்களில் நடக்கவும் செய்யும் அல்லவா? அதுபோன்றதொரு நம்பிக்கையைச் சந்தானத்தால் வெறுப்பான ஒரு புரோக்கர் கிளப்பிவிட… அது நன்றாகவே வொர்க்-அவுட் ஆகத் தொடங்கியது.
சாம்பிளுக்கு இதோ ஒரு வீட்டு புரோக்கர் ரூம் வேண்டுபவரிடம், ”சார்… இங்கே ஒரு மாடி ரூம்… நீங்க கவலைப்படாதீங்க. உங்களுக்குக் கண்டிப்பாப் பிடிக்கும். ஆனா, ஓனர் ஒரு மாதிரி பேக்கு. கண்டிப்பா உங்களுக்கு இந்த வீட்டை வாடகைக்கு விட மாட்டாரு. நீங்க மட்டும் போய்ப் பாத்துட்டு வாங்க…’ என்றவுடன், வீடு தேடும் யாருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வருமா… வராதா? கண்டிப்பாக வரும். உடனே என்ன கேட்பார்?
”ஏய்யா… அவன்தான் குடுக்க மாட்டாருங்கிற… அப்புறம் என்ன தலை முடிக்குய்யா நான் படியேறிப் போய்ப் பாக்கணும்?’
சிரிப்பார் புரோக்கர். சொல்வார்.
”சார்… இவர் வீடு ரொம்ப ராசி. கடந்த ரெண்டு வருஷமா, இவர் வீட்டுக்குப் போய் வெரட்டு பெற்று ஓடி வந்தவங்க எல்லா ருமே இன்னைக்கு இந்த சாலிகிராமம் ஏரியாலயே மனசுபோல வீடு அமைஞ்சு நல்லா இருக்காங்க. சில விஷயம் எல்லாம் சென்டிமென்ட்டா சொல்றதை நம்பணும். போங்க… போய்ப் பார்த்துட்டு வாங்க. மறந்தும் சினிமா உதவி டைரக்டர்னு சந்தானத்துகிட்ட சொல்லிடாதீங்க. சொன்னா, அவ்ளோதான்.”
”ஏன் புரோக்கர்… சினிமான்னா பிடிக் காதா?”
”நீங்க வேற… எம்.ஜி.ஆரே வந்து கேட்டாலும் சந்தானம் வீடு கொடுக்க மாட்டான். கவர்மென்ட்டாப் பாத்து அரசுடமை ஆக்குனாத்தான் உண்டு.”
அதற்கப்புறம் கிலி நீங்காமலே ‘சந்தான தரிசனம்’ கிடைத்து வெரட்டு பெற்று வெளியே வந்து, உங்களுக்கும் அடுத்த இரண்டு நாட்களுக் குள் வேறு தங்கும் இடம் அமைந்துவிட்டால், நீங்களும் இந்த சென்டிமென்ட்டுக்கு உடன்பட்டு தானே ஆவீர்கள்?
ஆனால், எதற்கும் சந்தானம் கவலையே பட மாட்டார். சினிமாவில் வேலை பார்க்கிறவர்கள் தங்களைத் தேடி வரும் நண்பர்களுக்கு அட்ரஸ் சொல்லும் அழகே தனி.
”பிரசாத் லேபுக்கு எதுக்கா திரும்பு… லெஃப்ட்ல கட் பண்ணு. ரைட்ல வா. அப்டியே வந்தாக்கா… இரு இரு. நீ எதுல வர்ற மச்சி? ஆட்டோலயா? போனை ஆட்டோக்காரனாண்ட குடு. ஹல்லோ… நீங்க புருஷோத் தமன் தெருவுக்கு வந்து, ஆங்க்… லூஸுப் பய சந்தானம் வீடு இருக்குல்ல… அதுக்கு அப்டியே பேக் ஸைடு தெரு. ஆங்க்… ரைட்.’
இப்படி லூஸுப் பய சந்தானம் என்று, பலருக்கும் அறிமுகம் ஆகாமலேயே அறிமுக மாகி இருந்தார் சந்தானம். சில இயக்குநர்கள் படம் எடுத்து ஹிட் ஆன பிறகும் சென்டி மென்ட்டுக்காக அடிக்கடி வந்து சந்தானத்திடம் நேரிலும் போனிலும் வீடு வாடகைக்கு இருக் கிறதா என்று கேட்டுவிட்டு, அவர் பதிலுக்குத் திட்டுவதை சந்தோஷமாக எடுத்துக்கொள்வதும் நடக்கிறது.
சந்தானம் அப்படிப் போடும் கண்டிஷன்கள்தான் என்ன? அவை ஒன்றும் பிரமாதம் இல்லை. ‘மணல் கயிறு’ விசு எஸ்.வி.சேகர் வாயிலாகப் போடுவாரே கண்டிஷன்கள். அவை எல்லாம் தாயம் வாங்க வேண்டும். முதல் கண்டிஷன்… குடி வரும் நபர் அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருக்க வேண்டும். இசை ஆசிரியராக இருக்கக் கூடாது. வேதியியல், இயற்பியல் போன்ற அறிவியல் அல்லது கணக்கு வாத்தியார்கள் தேவலாம் (டியூஷன் எடுப்பாம்ல… நம்ம பிள்ளை நாளைக்களிச்சு டென்த்து, அதுக்கப்புறம் ப்ளஸ் டூ. அலையாம டியூஷன் படிக்கும்லா?)
அப்படி இல்லாவிட்டால் வேறு எந்த வேலை என்றாலும் கொடுப்பார். கல்யாணம் ஆகி, மனைவி இருந்தால் கொடுப்பார். (நம்ம பேபிக்குப் பேச்சுத் தொணையா இருக்கும்லா?) பேபி, சந்தானத்தின் சந்தானம் அல்ல. சம்சாரம். அவர் அவளை பேபி என்று கூப்பிடுவதிலேயே ஒரு வன்முறை இச்சை இருப்பதாக மற்றவர்கள் நினைப்பர். கன குணவதி. ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் அல்லவா? இவள் சந்தானத்தின் வெற்றிக்குச் சகல புறங்களிலும் இருப்பவள்.
அந்தத் தெருவில் இருக்கிற அனைவருக்கும் அப்படி ஒரு நம்பிக்கை சந்தானத்தின் மேல் மாடி காலி என்பதில் இருந்தது (சகல அர்த்தங் களிலும்). அந்த மாடி அறை பூட்டிக்கிடக்கிறதும், அவ்வப்போது அதை யாராவது வந்து பார்க் கிறதும், சந்தானத்தின் கண்டிஷன்களால் அவர் கள் தலை தெறிக்க ஓடுவதும், நித்திய நிகழ்வுகளில் ஒன்றாகி… அதனாலேயே அது குறைந்து, பின் சுத்தமாக நின்றும்போனது. சந்தானம் இதற்கும் அல்ல; எதற்கும் சளைத்தவர் அல்ல என்பது எம்ஜி.ஆருக்கே வீடு தர மாட்டேன் என்று அவர் மிரட்டலான, அமர்த்தலான தொனியில் சொல் வதில் இருந்தே புரிந்துகொள்ள முடியும். மேலும், எம்.ஜி.ஆர். காலமாகிவிட்டபடியால் இந்த டீலிங் அவருக்கும் சம்பந்தம் இல்லாதது என்பது வேறு கிளைக் கதை.
சந்தானம் பண நஷ்டம்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. காலியாகவே இருக்கிற மாடியை அவ்வப்போது ஊரில் இருந்து வரும் உறவினர்கள் உபயோகித்துக் கொள்வதைத் தடுப்பதற்காகவா வது அங்கே யாராவது குடியிருக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானார்.
புரோக்கரைத் தேடினார். மூன்று வருட எம்ஜி.ஆர். வீராப்புகளின் பிறகு, ”லூஸுப் பய சந்தானமாவது திருந்துவதாவது? அது எல்லாம் நடக்கவே நடக்காது’ என்று தீவிரமாக நம்பினார்கள். அழாக்குறையாகக் கெஞ்சத் துவங்கிய சந்தானத் திடம் ‘கண்டிஷன்களைப் பற்றிச் சொல். அப்புறம் பார்ட்டிய ஏத்துறோம்” என்ற எர்ரம் ராஜு என்கிற புரோக்கர் மட்டும் ஆபத்பாந்தவராகத் தெரிந்தார்.
‘முந்தி மாதிரி ரெம்ப கண்டிஷன் எதுவும் போடலை ராசூ. எதாச்சும் டீசன்ட்டா வேலைக்குப் போறவன். அதிர்ந்து பேசாதவனா இருந்தா ஓ.கே. சினிமாவுல இருக்குறவன் மட்டும் வேணாம்.’
தன் முன் நிற்பது சந்தானம்தானா என்று சந்தேக சந்தோஷனாக வாயெல்லாம் பல் காட்டினார் எர்ரம் ராஜு.
”நீங்க கவலையேபடாதீங்க சந்தானம். வர்றவன் உங்ககிட்டேயே பேச மாட்டான். போதுமா?’ என்றார். பகை நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.
ஒரு சுபயோக சுபதினத்தில் ஆனானப்பட்ட எம்ஜி.ஆருக்கே தர வாய்ப்பில்லாத அந்த வீடு, அகிலன் என்னும் ஒரு கிராஃபிக்ஸ் டிசைன ருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. கோடம்பாக் கமே ஆச்சர்யப்பட்டு, தன் மூக்கின் மேல் விரல் வைத்துக்கொண்டது.
”இவனா? இந்தத் தாடிக்காரனா அந்த மன நலம் குன்றிய யானையைப் போராடி ஜெயித்தது? எப்படி?’ என வியந்தார்கள். கூடிப் பேசிக்கொண்டார்கள். இப்போதெல்லாம் லூஸுப் பய சந்தானம் என்கிற பெயர், அதன் வைப்ரேஷன் முதலான சகல ரேஷனையும் இழந்து போக, அனைத்தும் அகிலன் புறம் திரும்பியது. டீக் கடையில் மரியாதையாக ஒதுங்கி வழிவிட்டார்கள். ஹோட்டலில் சிநேகபாவர் கள் சிரித்தார்கள். தம் அடிக்கிற பங்க் கடையில் அவன் கேட்கா மலேயே சிகரெட் பற்றவைத்தார் கள். எல்லாம் அந்த ஒற்றை வெற்றிக்காக. கிட்டத்தட்ட முதல் மேட்ச்சிலேயே டபுள் செஞ்சுரி அடித்த டெண்டுல்கர்போல் மதிக்கப்பட்டான் அகிலன்.
‘சந்தானம் வென்றான்’ என்கிற புதுப் பட்டத்துடன் உலாவிய அகிலன், அனைவருக்கும் அளந்தது ஒரு சின்னப் புன்னகை மட்டும்தான். அவன் சத்தியசந்தனாயிருந்தான். சந்தானத்திடம் ஒரு வார்த்தைகூடப் பேசவே இல்லை. ஒரு முறை பிடிவாதமாக அவனைத் துரத்திக்கொண்டு வந்தவராக மணி கேட்டுப் பேச்சுக்கொடுத்த எதிர் வீட்டுக்காரர் செல்வத்திடம், அகிலன் தன் கடிகாரத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட, அதன் பின் மறு நாள் அவரே இவனைத் தேடி வந்து மன்னிப்புகளைக் கேட்டுவிட்டு வாட்சைத் திரும்பக் கொடுத்துவிட்டுச் சென்றார். ‘கண்ணியம் காத்தான்’ என்ற பெயருக்கு ஏற்ப அப்போதும் பேசாமல் சின்னப் புன்னகையோடு இருந்தான் அகிலன்.
அவன் உண்டு அவன் வேலை உண்டு என்னும் அளவுக்கு ஏற்ப வாழ்ந்த அகிலனை நினைக்கும்போது எல்லாம் சந்தானத்துக்கு நெஞ்சு விம்மும். கூடவே, ஒண்ணாம் தேதி ஆனால் ஒரு கவரில் வாடகைப் பணத்தை ஒரு வார்த்தை பேசாமல் கொடுத்துச் செல்லும் சிட்டி ரோபோவாகத் தெரிந்தான் அகிலன். அவன் மீதான ஆச்சர்ய மிகுதியில் சென்னைக்கு ரயிலைத் திருடி வந்த சந்தானம் ஒரு உபாயம் செய்தார்.
‘என்னிடமே பேச மாட்டாயா நீ? நிஜமா, இல்லை நடிப்பா? இன்றைக்குத் தெரிந்துவிடும்’ என்று முடிவு எடுத்தவராக, அன்றைக்கு காலை வேலைக்குக் கிளம்பும் முன் மாடிக்குச் செல்லும் குழாய் கனெக்ஷனைத் திருகி மூடிவிட்டுச் சென்றார் சந்தானம். அன்றைக்கு மாலை வீட்டுக்கு வந்தவர் நேரே பேபியிடம் போய், ”மாடித் தம்பி எதுனா சொல்லிச்சா?” என்றார். அவள் அவரைப் பார்த்து வைப்ரேஷனோடு கூடிய புன்னகையை மட்டும் செலுத்திவிட்டு உள்ளே சென்றாள். அப்படியானால் பேபியின் பாஷையில் இல்லை என்று அர்த்தம். பேபியின் புன்னகைகள் ‘சயனைடு குப்பி’ வகையறாவைச் சேர்ந்தவை என்பதால், அநாவசியக் கேள்விகளைத் தவிர்ப்பார் சந்தானம்.
எங்கே போவாய் நண்பா? இன்னும் இரண்டு நாளானால் நாறிப் போக மாட்டாய்? ஒருவேளை தான் சரியாக அடைத்தோமா மாடிக் குழாயை என்ற சந்தேகத்தில், நள்ளிரவு படி ஏறிப் போய் மாடிக் குழாயில் தண்ணீர் வராததை உறுதி செய்துகொள்ளத் தவறவும் இல்லை சந்தானம். மறு தினம் காலை வங்கிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார் சந்தானம். புன்னகைத்த பேபியிடம் ”லீவு” என்றார்.
சரியாக 11 மணிக்கு ஒரு கடிதம் வந்தது. சாதாரண அஞ்சலட்டை.
‘நேற்று முதல் குழாயில் தண்ணீர் வரவில்லை. மாலைக்குள் சரிசெய்யவும்.
இப்படிக்கு,
மாடியில் குடியிருக்கும் அகிலன்.’
என்றிருந்தது. வியந்து வியர்த்த சந்தானம், உடனே குழாயைத் திருகித் தண்ணீர் பிரச்னை யைத் தீர்த்துவிட்டார்.
அதன் பின் எப்போதுமே அகிலன் வழிக்கு சந்தானம் செல்வதே இல்லை. அகிலனைத் தேடி யாரும் வந்தது இல்லை. சத்தமாக ஒரு சினிமா பாட்டு இல்லை. டி.வி. பார்த்தது இல்லை. ஒரு குடி ஆட்டம் கூட்டம் ஏதும் இல்லை. சந்தானம் மனசளவில் அகிலன் எனப்படுகிறவனின் நடத்தைக்கு ஒரு ரசிகர் மன்றமே வைத்திருந்தார்.
இன்னும் சில மாதங்கள் கழிந்தன. ஒரு சனிக்கிழமை. வேலைக்குச் சென்று திரும்பிய சந்தானத்தைப் பார்ப்பதற்காக வந்து காத்துக்கிடந்தார் எர்ரம் ராஜு.
‘வாய்யா… எர்ரம் ராசூ… என்ன இந்தப் பக்கம். ரொம்ப நாளாக் காணோம். சௌக்கியமா?” என்றார் மெத்த குரலில் சந்தானம்.
‘நல்லா இருக்கேன் சார். மாடியில இருந்த அகிலன் தம்பி… காலி பண்ணி ஆந்திரா போயிட்டான் சார்.”
”என்னய்யா சொல்றே… எதுக்குய்யா திடீர்னு?”
”அவன் உன் வீட்டுக்கு வந்த நேரம்… ஏதோ பெரிய கம்பெனியில நல்ல வாய்ப்பு கிடைச்சுச்சாம். அதான் ஆந்திரா கௌம்பிட்டான்.”
”சே… எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமக்கூட ஏன்யா போனான்?”
”அதுவா… நா சொல்லலை? உங்ககிட்டகூட ஒரு வார்த்தை பேசாதவனா குடிவெக்கிறேன்னு. அதான். அட்வான்ஸ் காசு எப்போ தர்றீங்க சந்தானம்?’
இவர் திக்பிரமை விலகாமல் ஒரு தேதியைச் சொல்ல, கேட்டுக்கொண்ட எர்ரம் ராஜு கிளம்பிச் சென்றுவிட்டார்.
அதன் பின் இன்னொரு புரொஃபசர் சந்தானத்தின் பழைய கண்டிஷன்களுக்கு ஏற்ப ஒரு டியூஷன் சென்டரை அங்கே ஆரம்பிக்க, நல்ல வாடகையும் நல்ல அட்வான்ஸுமாக அந்த இடம் பிஸியாகிப்போனதும், தன் தரை வணங்காத மீசையை வான் நோக்கி நீவிக்கொண்டு சந்தானம் வளைய வருவதும் எல்லாம் அடுத்து வந்த சில மாதங்களில் நடைபெற்றன. இந்தக் கதை இன்னும் சில நிமிடங்களில் முடியப்போகிறது. இனி, க்ளைமாக்ஸ்தான் பாக்கி.
தேசிய விடுமுறை தினம் ஒன்றில் தமக்குப் பிடித்த சில பல மெனு வகையறாக்களை பேபி யின் தும்பிக்கையால் பரிமாறப் பெற்று, உண்ட ஆனந்தத்தில் தனது வீட்டுக்குள் உருண்டுகொண்டு இருந்தார் சந்தானம். ஒன்பதாவது படிக்கும் அவர் மகள் அஞ்சு டி.வி- யைப் போட்டு கார்ட்டூனைப் பார்க்கத் துவங்க, புயல் மாதிரி வந்த பேபி… ”குடுடி அதை…’ என்று ரிமோட்டைப் பிடுங்கி தன் ஆஸ்தான சேனலைப் பார்க்க முயல, ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ் சேனல்கள் எதுவுமே வராமல் இருந்தன. வரிசையாக மாற்றியவள் தெலுங்கு சேனல் ஒன்று தெரிந்ததில் திருப்தியுற்று குஷன் ஷோபாவில் குதித்து அமர்ந்துகொண்டாள். கூடவே, 20 வருடங்களாக வேலை பார்க்கும் தன் ஆப்த நண்பர் ஸ்ரீனிவாசலு புண்ணியத்தில் சந்தானத்துக்கு மட்டும் தெலுங்கு நன்றாகப் புரியும்.
விளம்பரங்களுக்குப் பின் வந்த மெகா சீரியலில் ‘லூஸுபிட சம்மந்தம்’ என்னும் கேரக்டரில், அச்சு அசலாக நமது சந்தானத்தின் கெட்-அப் மற்றும் டயலாக்குகளோடு கூடிய கேரக்டரைப் பார்த்துக்கொண்டே திக் பிரமை அடைந்தார் சந்தானம். இது என்ன என்னைப் போலொருவன் என்னைப் போலவே வேற்று மொழியில் பேசுகிறான்? இதில் நடித்திருப்பவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே… இவன்… இவன்… மாடியில குடி இருந்த அகிலன்தானே? அடப் பாவிகளா? உன் பேராவது அகிலனா… இருக்காது… உம் பேர் கூட எனக்குத் தெரியாதேடா… இதுக்காடா அவ்வளவு வேஷம் போட்டாய் என்னிடம்? லேசாக அழுகிற மாதிரி ஆனார் சந்தானம்.
திரையில் அந்த ‘லூஸுப் பய சம்மந்தம்’ பாத்திரம் தன் வீடு பார்க்க வந்திருந்த ஒருவனிடம் சொல்லிக்கொண்டு இருந்தது…
”நா இல்லு என்.டி.ஆருக்கே லேதுரா…
நுவ்வு எவுர்றா சினிமாக்கொடுக்கா… லேதுரா லேது!”
தெலுங்கும் புரியாமல், தன் வீட்டு மாடியில் நல்லவன்னு நம்பிக் குடிவைத்த ஒருவன், அந்த நாடகத்தை நடித்து இயக்கி இருப்பதோ, ஓடிக் கொண்டு இருப்பது சாட்சாத் தன்னுடைய கணவனின் ஆட்டோகிராஃப் என்பதோ எதுவுமே புரியாத பேபி, ஒரு கணம் யோசித்தாள். ‘எம்.ஜி.ஆருக்கே வீடு தர மறுக்கும் தன் கணவன், ஒரு தெலுங்கு நாடகத்தைப் பார்த்து ஏன் கண் கலங்குகிறார்’ என்று!
– அக்டோபர் 2012