கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 12,139 
 

ஊர்க் கூட்டம் துவங்கும் அந்த இடைப்பொழுதில் நெருஞ்சி முள் படராத கையகல வெள்ளைப் பொட்டலில் பயல்கள் ஐந்தாறு பேர் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, சர்வதேச விதிமுறைகள் எதையும் லட்சியம் செய்யாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

எக்கச்சக்கமான வெயிலைக் குடித்துக் கறுப்பேறி இறுகிப்போன அந்தப் பட்டியக்கல் எடுத்துக் கட்ட வழியற்று மேடையில் இருந்து சரிந்துகிடக்கிறது. ஆசன வாயில் வெப்பம் ஏறிவிடாமல் பட்டியக்கல் மேல் போட்ட துண்டுக்கு நோவாது பட்டும் படாமலும் உட்கார்ந்திருக்கிறார் ஊர்ப் பெரியவர். புருவ மயிர் எல்லாம் நரைக்கத் துவங்கிவிட்ட தனக்குப் பின்னால் ஏழெட்டுச் சாதிக்காரர்கள் வசிக்கும் இந்த ஊர் என்ன ஆகுமோ என்ற கவலை அவ்வப்போது அடிக்கடி ஆட்டிவைக்கிறது. நடுராத்திரி ஒண்ணுக்குப் போக எழுந்தால் பின்னர் தூக்கம் பிடிக்காமல் நாய்கள் பின் தொடர இரண்டு மூன்று தெருக்கள் சுற்றி வந்து கால்களும் உடலும் அயர்ந்த பின்பு தான் மறுதூக்கம் வருகிறது அவருக்கு.

இந்த ஆடி மாதத்தில் இரண்டு மழை கண்டு எண்ணெய் பூசியதுபோல் தளதளவென்று குமரிப் பெண்ணாகக் கொப்பும் இலையும் பிடித்திருக்க வேண்டிய வேப்ப மரம்கூட, யார் மீதோ கோபப்பட்டதுபோல் கறுத்து விறைத்துக்கொண்டு நிற்கிறது. பைக்கும் செல்போனுமாக பொழுதா னால் தண்ணியும் தாடியுமாக அலைகிற இந்தக் காலப் பயல்கள் வேப்ப மரம் இப்படி நிற்பதைக் கண்டு கவலைப்படுகிறார்களா; சும்மா பேருக்குத் தான் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறார்களா என்ற கேள்வி பெரியவர்களுக்கு.

மழைக் கஞ்சிபடித்தவன், படிக்காதவன் அத்தனை பேருக்கும் இன்றைய நாளில் ஏதோ ஒரு வேலை டவுனில் கிடைத்துவிடுகிறது. செய்கிற வேலையில் புண்ணியமும் பிழைப்பில் அர்த்தமும் உண்டோ இல்லையோ… பயல்கள் தளும்பாகத்தான் திரிகிறான்கள். ஆனால், ஊர்தான் காய்ந்துபோய்க்கிடக்கிறது.

ஏதோ போன மாதம் இந்த மந்தை யில் ஒரு டெலி சீரியல் பஞ்சாயத் துக் காட்சி ஷூட்டிங் எடுத்ததால், இந்த அளவில் மந்தை ஊர்க் கூட்டம் போடுவதற்கு வசதியாகப் போய்விட்டது. இல்லையென்றால், நீர்க் கருவேலை சந்தோஷமாகத் தூர் பற்றியவாறு கிடந்திருக்கும். நுனாக்கொடி ஊர்ந்து, ஊர்ந்த நிலையிலேயே இந்த வறட்சிக்குக் காய்ந்துகிடக்கும்.

இரவானால் ஆளாளுக்கு சீரியல் பார்க்க உட்கார்ந்துவிடுவார்கள் என்பதால், அந்தி சாயும் பொழுதிலேயே கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள். பொம்பளைகளை விடுங்கள்… வேறு போக்கிடம் இல்லை என்பதால், விடாமல் சீரியல் பார்க்கிறார்கள். சாதியைக் கடந்து ஊருக்குள் பெரிய தலைக்கட்டு என்று பேர் வாங்கிவிட்ட சீனுச்சாமியைக்கூட அந்த நேரத்தில் பிடிக்க முடிவது இல்லை.

”ஷ§கருக்கும் பீ.பி-க்கும் மாத்திரை போடுறதுனால சீக்கிரமாவே படுத்துறணும்னு டாக்டர் சொன்னாலும் சொன்னார், கிழவி நம்பளை வெளியில விடுறதே இல்லை” என்று கிழவி பேரில் பழியைப் போட்டுவிட்டு, தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்துவிடுகிறார். சின்ன வாண்டுகள் போல் விளம்பரத்தில் வரும் இசை முதற்கொண்டு அத்தனை யும் மனப்பாடமாகிவிட்டது. பின்னணி இசைக்கும் பின்னணி இசையை அவர் வாயால் கொடுத்துக்கொண்டே போவதைக் கவனித்து, ஒரு ஊர் தலைக்கட்டு என்றுகூட மரியாதை இல்லாமல் சகட்டுமேனிக்குக் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்துவைத்தால்தான் பொக்காகப் பற்றியிருக்கும் மரியாதையாவது மிச்சமான காலத்துக்கும் நீடிக்கும். இல்லை என்றால், அதுவும் போச்சு. மழை இல்லை. இப்பவாவதுஏதாச்சும் செய்ய வேண்டும் என்று தோன்றி இருக்கிறதே அந்த மட்டிலும் சந்தோஷம்.

”என்னப்பா… ஆரம்பிச்சிடலாமா?” யாரையும் குறிப்பாகப் பார்த்து என்றில்லாமல், உட்கார்ந்த நிலையிலேயே குரல் கொடுத்தார் பெருந் தலைக்கட்டு.

”பெரியவங்க நீங்க காலாகாலத்துல ஆரம்பிங்க. இனியும் எதுக்கு முகூர்த்தம் பார்த்துட்டு இருக்கீங்க?”

”பெரியவங்க என்னப்பா பெரியவங்க? பெரியவங்க என்ன யானை …………..யிலயா பொறந்து வந்தோம்? எல்லாம் மனுசப் பிறவிகளுக்குப் பொறந்ததுதானே? ஆளாளுக்கு மூலைக்கு ஒண்ணா நின்னுட்டு இருந்தா… இந்தா இந்த மரத்திட்டேயும் பட்டியக்கல்லிட்டேயுமா பேசுறது? ஒண்ணாக் கூடுறதே கஷ்டமாயிட்டா அப்பறம் எப்படி காரியசித்தியாகும்?”

”சித்தியாவது, அத்தையாவது. சப்ஜெக்ட்டைப் பேசுங்கய்யா. ஏய்… அங்கங்க நிக்கிறதுக்குப் பதிலா எல்லாம் இந்த மேடைக்குப் பக்கமா வாங்கப்பா!”

அங்கங்கே தோளில் இருந்த துண்டைப் பிட்டத்துக்குப் போட்டும், சிலர் வேட்டியைச் சுருட்டிப் பாதுகாப்பாக டிரவுசரின் மேல் ஏற்றிவிட்டுக்கொண்டும் மென்னசைவுடன் உட்கார்ந்தார்கள். இளவயதுப் பையன்கள் மரங்களின் மீதும் நிறுத்தி இருந்த பைக்குகள் மீதும் ஒய்யாரமாகச் சாயந்து கொண்டு நின்றார்கள்.

நல்லவேளையாக ஊர்க் கூட்டத்துக்கு பஞ்சாயத்துபிரசி டென்ட், கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. வந்தால் ஒரு காரியமும் உருப்படியாவாது. இதே ஊர்க்காரன்கள்தான், இதே தெருக்காரன்கள்தான். ஆனா, புதுசா வேஷம் கட்டிக்கிட்டு வந்த மாதிரி பவுசு காட்டுவான்கள். வெறைச்ச சட்டைகளை மினுக்கிக் காட்டுறதிலேயே குறியா இருப்பான்கள் என்று நினைத்துக்கொண்டனர் பெருசுகள்.

”சரி… ஆரம்பிங்க…”

”அட, என்னங்கய்யா என்னமோ லவ்வச் சொல்லப் போறாப்புல பில்டப் கொடுத்துக்கிட்டு. மழை ரெண்டு மாசம் தள்ளிப்போச்சு. பங்குனி யில எந்த சாதிக்காரங்களும் பொங்க வைக்கல. ஊர்ப் பொதுப் பொங்கல் வெச்சும் அஞ்சாறு வருஷமாச்சு. இப்பிடியே இருந்தா என்னா ஆவுறது?”

”மானம் கண்ண மூடிக்கிட்டு …………….ஐக் காய விட்டாத்தான சாமி நெனப்பே வருது. அதான் ஊரைக் காய்ச்சி எடுக்குது!”

”ஆமாமா… மழை பெய்ஞ்சிட்டாலும்; ஏரி கம்மாய் ரொம்பிட்டாலும்; நெல்லு பரிஞ்சி கதிரு சரிச்சிட்டாலும்; ஆள் கெடைச்சி, அடிச்சித் தூத்தி மலையாக் குமிச்சிட்டாலும்; மூட்டை தெச்சு அட்டியக் கட்டி அடுக்கிட்டாலும்; மேழி பிடிச்சவனுக்குக் கும்பிக்குக் கூழு இல்லே. …….க்குத் துணியில்ல. போங்கடாங்… நீங்களும் உங்க கூட்டமும்!” – மரக்காணி இப்படி மந்திரம்போலப் பாடியதைக் கேட்டதும் சின்னப் பயல்கள் எல்லாம் வாய் பொங்கக் கூட்டத்தைப் பார்த்தார் கள். மொத்தக் கூட்டமும் இறுகிப்போய் இருப் பதைக் கண்டதும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அமைதியானார்கள்.

எதற்காக அந்தக் கோபம்… யார் மீது அந்தக் கோபம் என்று கூட்டம் திகைத்தது. மரக்காணி பலகை போன்று நீண்டு முன் வளைந்த தன்னுடைய உடலைத் திருப்பி, ஒன்றிரண்டு சருகுகள் ஒட்டிய துண்டைத் தூக்கி வீச, அது ஓர் உயிர் உள்ள ஜந்துபோல முதுகில் ஒட்டிக்கொண்டது. மொத்தக் கூட்டத்துக்கும் முதுகு காட்டி நடந்துபோனார். பழைய ஆட்களுக்கு எல்லாம் அவர் அடிக்கடி அப்படிச் சலித்துக்கொண்டு வெளிநடப்பு செய்வது தெரிந்ததுதான்.

”சரி… நாம பேசித் தீர்க்கப்போறது ஒண்ணும் இல்ல. போக்கிடம் தேடி ஓடினது போக மிச்சம் இருக்கிற நாம பொழைச்சி ஆகணும். மண்ணையே முழுசா நம்பி இல்லைன்னாலும், முதல்ல குடிக்கிற தண்ணிக்கி வழியக் காணோமே!”

”அது தெரிஞ்ச விஷயம்தானே. என்ன செய்ய லாம் சொல்லுங்க?”

”பஞ்சாயத்துல இருந்து ஆயிரம் அடிக்கு முக்காலடி போர் போடச் சொல்லுங்க.”

”அவன் எவன்டா இருக்கிற போர் எல்லாமே கண்ண மூடிக்கிச்சி, நம்ப பெரிய கம்மாய்

ரொம்பாம எங்கயும் ஒரு சொட்டுத் தண்ணியப் பார்க்க முடியாது தெரிஞ்சிக்கங்க.”

”அதுதான்… அதுக்கு என்ன வழி?”

”பத்து, இருபதாயிரம் லாரித் தண்ணிய வாங்கி பெரிய கண்மாயில ஊத்துங்க!”

”அவனவனுக்கு எது இருக்கோ, இல்லியோ… வாய் நீண்டுபோச்சு. உக்கி எழத் தெரியாததுக எல்லாம் நக்கல் பழகிடுச்சி. இதுங்க கிட்டப் பேச்சு வாங்கிக்கிட்டு சீவனைக் காப்பாத்த வேண்டியதா இருக்கு. ம்… ம்… இப்ப இருக்கிற ஒரே வழி அம்மனுக்கு மழைக் கஞ்சி எடுக்கிறதுதான்!”

”மழைக் கஞ்சி எடுக்கணும்னா பெரியாம்பள இல்ல சேத்துல குளிச்சிட்டு வரணும். மூணாம் வருஷம் கம்மாய் ரொம்பி மறுகாப் போனதை அவனுக்குத் தெரியாம யாரோ ஒடைச்சிவிட்டதை, ஊர் கூடி யாரு என்னன்னு விசாரிச்சுத் தண்டனை கொடுக்கலைனு ஊர் மேல கோவிச்சுக் கிடக்கிறானேப்பா. அவனை எப்புடிச் சேத்துக் குளியல் போடவைக்கிறது?”

”கோவிச்சுக்கலைன்னாலும் சேத்துக் குளியல் போடுற நிலைமையில அவன் இப்போ இல்ல. வயசும் ஆகிப்போச்சு எழுபதுக்கு மேல. ஆகுற கதையா இது?”

”அவன் உசிரோட இருக்கிற வரைக்கும் வேற யாரையும்கொண்டு மழைக் கஞ்சி எடுக்க முடியாதப்பா. ஊர்ச் சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கே. எப்புடியாச்சும் ஊர் கூடி நின்னு, சாஸ்திரத்துக்காகவாவது சேத்தை அவன் மேல பூசி… அவனை வெச்சித்தான் மழைக் கஞ்சி எடுத்து ஊத்தணும். அப்பத£ன் அம்மனுக்கு மனசு குளிரும். தம் புள்ளைங்கள்லாம் சேத்துல குளிக்கும்படி ஆயிடுச்சே. பயிர்ப் பச்சைகளைக் காவக் காத்து, தானியங்களை ஊருக்குப் பத்திரமா தர்ற பெரியாம்பளையே சட்டியத் தூக்கிட்டுக் கஞ்சிக்கு அலையுறானேனு, வானத்தைக் கிழிச்சுத் தண்ணியக் கொட்டுவா அம்மன்!”

”ஏற்கெனவே ஓசோன் படலம் கிழிஞ்சி போச்சிங்கிறாங்க… இதுல நீங்க வேறயா?” – ஓர் இளம் குரல் கூட்டத்தில் இருந்து மிதந்து வந்தது.

”இந்தக் கிருத்துருவம் பிடிச்ச பயலுங்க வாயையெல்லாம் கொஞ்ச நேரம் பொத்திவையுங்கப்பா!”

அடுத்து வர்ற அமாவாசைக்குப் பிந்திய ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு ஊர்ல எந்தச் சாதிக்காரங்களும் வெளி வேலைக்குப் போவக் கூடாது. கவிச்சி சமைக்கக் கூடாது. வீட்டுல என்ன சமைச்சுச் சாப்பிட்டாலும், மழைக் கஞ்சிக்காக சாஸ்திரத்துக்காகவாவது கூழு காய்ச்சணும். அன்னைக்கு மத்தியானம் வெயில் தாழ எல்லோரும் முத்தாளம்மன் பொட்டல்ல கூடி, கீழத் தெரு பெரியாம்பள வீட்டுக்கு சாதிக்கு ரெண்டு பேர் போய் வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணும் என்று முடிவானது. அதற்கு முன்னக் கூட்டியே கண்டு பேசி சீமைச் சாராயம் வாங்கி ஊத்துவாரோ இல்லை… துணிமணிகள் எடுத்துக் கொடுப்பாரோ அதெல்லாம் தெரியாது. பெரியாம்பளை கோபத்தைத் தணிக்கும் பொறுப்பு பெருந்தலைக்கட்டிடம் அவசர அவசரமாக ஒப்படைக்கப்பட்டது.

கண்மாயில் மடைக்குண்டும்கூடச் சிப்பிச் சிப்பியாக வெடித்துக்கிடக்க, நான்கைந்து லாரித் தண்ணீர் நகரத்தில் இருந்து வரவழைத்து ஊற்றிவிட்டார்கள். நீரில் ஊறி மண் பொதுமினாலும் சேறாகக் கலக்க முடியவில்லை. கடைசியாக கான்ட்ராக்ட் மேஸ்திரி யோசனை சொன்னார். கலவை போடும் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தி, மண் அள்ளிப் போட்டுச் சேறு கலக்குவது.

பெரிசுகளுக்கு மனம் ஒப்பவில்லையானாலும் மழை வேண்டுமானால் இசைவதைத் தவிர வேறு வழியில்லை.

பெரியாம்பளை வீட்டுக் குடிசை முன்னால் இரண்டு மூன்று கட்டில்களைப் போட்டு, அலைந்து திரிந்து வாங்கி வந்த கடா மார்க் சுருட்டு, கல்லிப் பாக்கு, மொரட்டுக் கறுப்பு வெத்தலை எல்லாம் வைத்து ஆட்கள் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பெரியாம்பளை யாருக்காக இல்லைஎன்றாலும், சாவதற்கு முன் தன் பவிசு என்ன என்று நீண்ட நாளைக்குப் பின்னர் தன் கிழவிக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே ரொம்பவும் பிகு காட்டி இறுதியாகச் சேறு பூச ஒப்புக்கொண்டார்.

அன்றைக்கு ஊரே கொண்டாட்டமா… துக்கமா என்று சொல்ல முடியாத ஒரு மனநிலைக்கு ஆளாகி இருந்தது. நேற்று வரை வெள்ளையாகக் கொளுத்திய வெயில் பயந்துவிட்டதுபோல் அடங்கி இருந்தது. நிலம் உள்ளவர்கள், இல்லாதவர்கள், கவர்மென்ட் உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் பயபக்தியுடன் தம் திறமையை எல்லாம் கசக்கிப் பிழிந்து வீடுகளில் விதவிதமாக சகட்டுமேனிக்குக் கூழ் காய்ச்சி ஆறவைத்தார்கள். இந்தப் பிச்சை எடுக்கும் சடங்கில் பங்கேற்பது புண்ணி யமா, உன்னதமா, கேவலமா என்று உள்ளுக்குள் ஒன்றும் புரியாமல் கலவை யான குழப்பத்தில் இருந்தார்கள். யாரிட மும் விவரம் கேட்கவும் பெருந்தயக்கமாக இருந்தது பலருக்கும்.

மூன்று பெரிய மண் தாழிகளைக் குட்டி யானையில் ஏற்றி வந்து அம்மன் கோயிலில் இறக்கினார்கள். எப் போதும் இல்லாத பழக்கமாக நான்கைந்து உருமிகளும் பம்பைகளும் எங்கிருந்தோ வந்து சேர்ந்தன. யார் ஏற்பாடு, யார் செலவு என்பதெல்லாம் புரியவில்லை.

காலையில் இருந்தே எல்லோரின் மனக்கண்ணும் பெரியாம்பளை குடிசை வாசல் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. நடு வயசு ஆட்கள் சிலர்கூட இது இத்தனை முக்கியமான விஷயமா என்று அப்போதுதான் யோசிக்கத் துவங்கினார்கள். புதிய கிராம அலுவலர், ‘இது ஊரே கூடிச் செய்வதுதான் என்றாலும், ஏதேனும் சாதிப் பிரச்னை எழ வாய்ப்பு உண்டா? வந்தால் எப்படிச் சமாளிப்பது? மேலிடத்துக்குத் தகவல் சொல்ல வேண்டுமா? ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது?’ என்று தனக்குள் கேள்விகளைப் புதிது புதிதாக அடுக்கிக்கொண்டு இருந்தார்.

உருமியில் மசி தடவி இழுத்துப் பார்த்த முதல் இழுவையே ஊரின் மொத்த மனதையும் மெல்லிய நூலால் கட்டிவிட்டது. யாருடைய உத்தரவும் இல்லாமல் உருமிகள் ஒன்றோடுஒன்று இணைந்துகொண்டன. ஊ…. ம்உர்ம் ஊ… உர்ம். ஊ… ஊ… ஊ… ஊர்ம் உர்ம். தம்மை அறியாமல் கால்கள் முத்தாளம்மன் பொட்டல் நோக்கித் திரண்டன. வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க… மழையின் முதல் நீர்போல கால்கள் ஊர்ந்து முன் நகர்ந்தன. ரண்டங்… ரண்டங்… ரண்டங் ரண்டங்… என்ற அடிகள் ஒவ்வொருவரின் நெஞ்சுக்கும் பக்கத்தில் வைத்து அடிப்பதுபோல் இருந்தது.

பழக்கமான பையன்கள் கோவணங்களுட னும், பல பையன்கள் ஜட்டியுடனும் பயத் துடன் பெரியவர்கள் விரலைப் பிடித்துக்கொண்டு அடிக்கொரு தரம் அவர்கள் முகத் தைப் பார்த்தபடியும் இன்னொரு பக்கம் ஆர்வத்துடனும் பொட்டல் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

பொட்டலுக்கும் பெரியாம்பளை குடிசைக்கும் இருநூறு அடித் தொலைவுதான் இருக்கும். ஆனால், தாள வரிசைகளுடன் குடிசை முன் அடைய நீண்ட நேரம் ஆனது. குடிசைக்கு முன் நின்றும் ஐந்து நிமிடம் வாத்திய இசை நிற்க வில்லை. யாரோ ஒரு ஆள் இசை லயத்தோடே இரண்டு கைகளையும் உயர்த்தி, பறவை வெளியில் நின்று சிறகை அலைப்பது போல் அலைத்தான். இசை நின்றது. எங்கோ தூரத்தில் மாடு அம்மா என்றழைத்த குரல் எல்லோரின் காதுகளிலும் நிறைந்தது. சேவல் ஒன்று பயந்துபோய் படபடவென்று றெக்கை அடித்துக் கூரை மேல் ஏறியது.

பெருந்தலைக்கட்டுக்குக் கண் ஜாடை காட்டப்பட்டது.

”பெரியாம்பள… வாய்யா கொஞ்சம் வெளியில” வந்தார். எல்லோரையும் புதிதாகப் பார்ப்பதுபோல் பாவனை செய்யப்பட்டது.

”ஊர் சாதி சனம் எல்லாம் திரண்டு என் குடிசைக்கு வந்திருக்கீங்க. நான் என்னய்யா செய்யணும் இந்த ஊருக்கு?”

”உடம்பெல்லாம் கம்மாய்ச் சேறு பூசி, கையில சட்டியேந்தி வீட்டுக்கு வீடு மழைக் கஞ்சி வாங்கி அம்மன் திடல்ல வெச்சி எல்லாருக்கும் பங்கிட்டு ஊத்தணும்யா. அப்பதான் அம்மன் குளிர்ந்து மழையாப் பொழிவாள். செய்வியாய்யா?”

”ஊரே ஒண்ணுகூடிக் கேட்டால் தட்ட முடியு மாய்யா?”- குடிசைக்குக் கீழாகக் குறுக்கி இருந்த உடலைச் சட்டென்று நிமிர்த்தினார் பெரியாம் பளை. நல்ல கட்டான முறுக்கு அதில் ஏறியது. ஆறடிக்குப் பனைபோல உயர்ந்தது.

”கம்மாய்க் காவல் என்னோட பொறுப்பு. அதுல ஒரு மனக்குறை நடந்துபோச்சய்யா. இனிமே நடக்காதுனு உத்தரவாதம் தருமாய்யா இந்த ஊரு?”

”கம்மாய்க் காவல் உன் பொறுப்புதான். இனிமே எந்தக் குறையும் வராம, ஊர் பாத்துக்கும். ஆத்தா மேல ஆணை!”

”கம்மாய்க்குப் பங்கம் வராதுனு நீங்க சொன் னாப் போதாதுய்யா. ஊர்ல இருக்குற ஒவ்வொரு வாயும் சொல்லணும். சொல்லுமா?”

திடீரென்று ஆக்ரோஷமாக அருள் இறங்கியதுபோல் ஊம்… என்று உறுமினார் பெரியாம்பளை. எல்லோரும் ஏதோ குற்றம் இழைத்ததுபோல் குன்றினார்கள்.

”ம்… ம்… உத்தரவாதம் தரச்சொல்லு!”

”கம்மாய்க்குப் பங்கம் வராமப் பாத்துக்கறோம்” என்று பத்துக் குரல்கள் கலவையாக ஒலித்தன.

”கபடு இல்லாத பிள்ளைகள் எல்லாம் எங்கூட வரட்டும்” என்று திங்கு திங்கு என்று பூமி அதிரப் பெரியாம்பளை முன்னேறினார். கூட்டம் தானாக வழி பிளந்தது. யாரும் உத்தரவிடாமலேயே ஏழெட்டு வயதில் இருந்து பதினைந்து வயது வரைக்கும் பையன்களும் பத்துப் பன்னிரண்டு வயது வரைக்கும் பெண்களும் அவருக்குப் பின்னால் அணிவகுத்தனர். எல்லோரும் ஓட்ட மும் நடையுமாகக் கண்மாய்க்குள் திரண்டனர்.

பெரியாம்பளைக்குக் கண் தவிர்த்து உடல் எங்கும் கலக்கிவைத்த சேறு பூசப்பட்டது. ஊர்ப் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் சேறு பூசிவிட்டார்கள். யார் யாரோ இந்த வேலைகளைச் செய்தார்கள். கயிற்றில் கட்டி வைத்திருந்த வேப்பிலைக் கொத்துகளை இடுப்பில் கட்டிவிட்டார்கள். எல்லோர் கைகளுக்கும் இரண்டு பக்கமும் வேப்பிலைகள் கொத்தாக வந்தன. மீண்டும் ஊருக்குள் நுழைய நுழைய குண்டான் குண்டானாகப் பாத்திரங்கள் அனைவர் கைக்கும் வந்தது.

”மழையில்லே…. தண்ணியில்லே…

மழைக் கஞ்சி ஊத்துங்கம்மா” வாத்திய முழக்கம்போல பெரியாம்பளை உரத்து முழங்க, பிள்ளைகள் அனைவரும் பறவையினுடையதைப் போன்ற கீச்சுக் குரலில்…

”மழையில்லே… தண்ணியில்லே…

மழைக் கஞ்சி ஊத்துங்கம்மா” என்று பாடி னார்கள்.

சேறு உடல் சூட்டுக்கு உலர்ந்து உடம்பை இறுக்கிப் பிடித்தது. ஆனாலும், எல்லோரும் பெரியாம்பளைபோல வேப்பிலைக் கொத்துடன் குண்டானை ஏந்தியபடி இடுப்பில் கட்டிய வேப்பிலைக் குஞ்சங்கள் ஆட… குதித்துக் குதித்து வீட்டுக்கு வீடு ஓடினார்கள். வாத்தியக்காரர்கள் பெரியாம்பளைக்கும் பிள்ளைகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் கோயில் திடலுக்குப் போய்விட்டார்கள். வானம் கறுப்பாக மங்கிக்கொண்டுவந்தது. பிள்ளைகளின் ஆட்டத்தில் தெருவெல்லாம் சேற்றுப் பொட்டுக்களாக இருந்தன.

தெருப்புழுதியை எல்லாம் புரட்டிப் போடும் காற்று அடித்தது. எல்லோரும் வேறு ஒரு காலத்துக்குள் புகுந்துவிட்டதுபோல் பயம் கலந்த உற்சாகத்தில் இருந்தனர். நடுத்தர வயதினர் சிலருக்கும், பெண்கள் சிலருக்கும் இப்படிப் பிள்ளைகளாக இல்லாமல் போய்விட்டோமே என்று ஏக்கமாக இருந்தது. எல்லோருக்கும் முன்னாடியும் பின்னாடியுமாக ஊர் நாய்கள் ஓடிக்கொண்டு இருந்தன. பிள்ளைகளின் உற்சாகத்தில் பெரியாம் பளையும் பெரியாம்பளையின் பொறுப்பு உணர்வில் பிள்ளைகளும் தெருவுக்குத் தெரு, சந்துக்குச் சந்து ஆடிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு ஈடாக ஆட முடியாமல், ஓட முடியாமல் ஆண்கள் எல்லோரும் அம்மன் கோயில் எதிரில் கூடியிருந்தனர். யார் யார் வீட்டுச் செம்பு யார் யார் கையிலோ இருந்தன.

காற்று சுழற்றிச் சுழற்றி அடித்தது. பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போய்விடும்போல் இருந் தது காற்றின் வேகம். மாடுகளும் கன்றுகளும் காதுகள் விடைக்க, கட்டை முறித்துக்கொண்டு நின்றன. மத்தியானம் அடித்த பம்பை உருமிச் சத்ததை இப்போது வானம் எதிரொலித்தது. மேகங்கள் தளும்பிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்தன. பெரியாம்பளையும் பிள்ளைகளும் ஏந்திய கூழ் குண்டான்களை வாங்கித் தாழியில் ஊற்றிக் கலக்கினார்கள் இளைஞர்கள்.

எல்லோரும் அடிக்கொரு தரம் வானத்தைப் பார்த்துக்கொண்டார்கள். மேலும் மேலும் வானம் இருட்டிக்கொண்டே வந்தது. கோயில் மந்தையில் இருந்த அரச மரங்களும் வேப்ப மரங்களும் விநோதமான இசையை எழுப்பியபடி ஆடின.

கூழைக் கலக்கி முதல் சொம்பை பெரியாம் பளைக் குண்டானில் ஊற்றினார்கள். மரக் கிளையையே கூரையாகக்கொண்டு வெற்று வெளியில் அமைந்திருக்கும் அம்மன் சிலையைப் பார்த்து ‘தாயே கண்ணைத் திற’ என்ற பெரியாம்பளையின் ஆக்ரோஷமான குரலைக் கேட்டுப் பெரியவர்கள்கூடப் பயந்துபோனார்கள்.

கும்பலின் வெப்ப மூச்சுகள் கர்ப்ப வயிறாகத் திரண்டது. சூடேற்றிய பறையைத் தட்டிப் பார்ப்பது போன்ற திடும் திடுமென ஓசை… தொலைவான மேற்கு மலைகளுக்குள் அதிர்ந்தது. பெரியாம்பளை தலையைப் பின் சரித்து துளியூண்டு வெளிச்சம் மின்னும் கண்களால் மேகங்களை ஊடுருவிப் பார்த்தார். தேனாகத் திரண்ட முதல் துளி அவருடைய திறந்த வாயில் நாக்கில் குறிவைத்து விழுந்தது. நிலத்தில் இருந்து நான்கடி மேலெழும்பிக் குதித்தார் பெரியாம்பளை. இதைப் பார்த்த கர்ப்பம் சுமந்த தாய்மார்களின் கைகள் தம்மை அறியாமல் அடிவயிற்றைத் தடவிப்பார்த்தன. சீராகப் பிடித்து மழையின் நீர் தலை வழி இறங்கி வாய்க்குள் புகுந்து வேர்வையில் உப்புக்கரித்தது சிலருக்கு!

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *