தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: இளம் எழுத்தாளர்கள் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 206,686 
 
 

நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனக்கு, அப்பாவை விட தாத்தா மீதுதான் கொள்ளைப் பிரியம். நான் குழந்தையாய் இருக்கும்போதே, அருமையாக, நிறைய கதைகளைச் சொல்லுவார்.

நான் தாத்தாவின் கதைகளில் ஐக்கியமாகி, கற்பனையில் இளவரசனாக இந்த உலகையே வலம் வருவேன். ஆனால், இதெல்லாம் பழைய கதை. ஏனோ, இப்போது, தாத்தாவைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவர் ஆசையாகக் கொஞ்சினாலும் எனக்கு வெறுப்பாகத்தான் இருக்கிறது.

இந்த வருடம் அரசுத் தேர்வை எழுத வேண்டும் என்பதால் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது. விளையாட்டை மூட்டை கட்டிவைத்துவிட்டு படித்தாலும் நேரம் போதவேயில்லை. பள்ளிக்கும், டியூஷனுக்கும், வீட்டிற்குமாக சைக்கிளில் அலைவது மிகவும் சிரமமாயிருந்தது. அதனால் டாடியும் மம்மியும் என்னை “மெதுவாக பைக்கில் செல்லுமாறு’ அறிவுரை கூறி அனுமதித்தனர்.

ஆனால் தாத்தா இதனை ஏற்றுக்கொள்ளவேயில்லை. எனக்கு, இரு சக்கர வாகனத்தை ஓட்டும் தகுதி வரவில்லை என்று கூறி எங்கள் மூவரையும் கண்டித்தார். நவீன காலத்தைப் புரிந்து கொள்ளாத “கிழம்’ என்று எனக்கு கோபம் ஏற்பட்டது. தாத்தாவை, முறைத்துப் பார்த்துவிட்டு “பைக்கில்’ பறந்தேன்.

ஒரு வாரம் மிகவும் ஈஸியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

அன்று, அவசரமாக பள்ளிக்கு “பைக்கில்’ சென்று கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சிறுவன் என் முன் வந்துவிட்டான். அவன் மீது மோதாமல் தவிர்க்க பைக்கை வலதுபுறம் திருப்பியபோதுதான் டிராபிக் போலீஸ் ஜீப் மீதே லேசாக இடித்துவிட்டேன்.

கையும், களவுமாகப் பிடிபட்டுவிட்டேன். மிகவும் அவமானமாக இருந்தது.

சாலையில் செல்லும் மனிதர்கள் முன்னால், எவ்வளவோ கெஞ்சியும் அந்த போலீஸ்காரர் என் பைக் சாவியைத் தரமறுத்துவிட்டார். செல்போன் மூலமாக அப்பாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்தார்.

என் அப்பாவை அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சல்யூட் அடிக்காத குறையாக வரவேற்றார்.

“”ஸôர், இவன் உங்கள் மகனா? உங்க அப்பாவிடம் படித்த ஸ்டூடண்ட் நான். படிக்காமல் சுற்றித் திரிந்த எனக்கு ராகவன் ஸôர் கற்றுத்தந்த ஒழுக்கமும் படிப்பும்தான் இந்தப் பதவியை தந்தது. ஆனால் அவர் பேரனா இப்படி?” என்று என்னை நோக்கினார்.

நான், உடனே என் ராகவன் தாத்தாவின் காலில் மானசீகமாக விழுந்து மன்னிப்பு கேட்டேன்.

தி.வா.விக்னேஷ், 11-ஆம் வகுப்பு “இ’ பிரிவு, எஸ்.பி.ஓ.ஏ.மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, கோயம்புத்தூர்.
ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *