கிளியின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 11,697 
 

“துறவி ஒருவர், அக்பருக்கு அழகான கிளி ஒன்றைப் பரிசாக அளித்தார்.

அதை மிகவும் மகழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அக்பர், நன்றியுள்ள வேலையாள் ஒருவனை அழைத்து, கிளியைக் கொடுத்து, ‘மிகவும் கவனத்தோடு, அதற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுத்து வளர்த்து வர வேண்டும்; கிளிநோய்வாய்ப்பட்டிருக்கிறது என்றோ அல்லது செத்துவிட்டது என்றோ என்னிடம் வந்து சொன்னால் உனக்கு மரணதண்டனை அளிப்பேன்” என்று கட்டளையிட்டார்.

கிளியை ஏற்றுக் கொண்ட வேலையாள், தினமும் அதைக் கவனத்தோடு வளர்த்துப் பாதுகாத்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு, கிளிநோய் வாய்ப்பட்டு மாண்டுவிட்டது.

கிளி செத்துவிட்ட செய்தி அரசருக்கு எட்டினால், மரணதண்டனை அல்லவா கிடைக்கும். செய்வது அறியாமல், வேலையாள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். சொன்னாலும் தண்டனை, சொல்லாமல் இருந்துவிட்டால் தண்டனை கிடைக்கத்தான் செய்யும். இந்த இக்கட்டான நிலையிலிருந்து தப்பிக்க வழி என்ன?

மதியூக மந்திரி பீர்பாலிடம் ஓடி, அவர் காலில் விழுந்து வணங்கி, நடந்ததைக் கூறினான் வேலையாள்.

”பயப்படாதே, நான் காப்பாற்றுகிறேன்” என ஆறுதல் கூறி, அவனை அனுப்பி வைத்தார் பீர்பால்.

மறுதினம் வழக்கம்போல் அரச சபைக்குச் சென்ற பீர்பால் அரசரை வணங்கிவிட்டு.

”அரச பெருமானே, உங்கள் கிளி…” வார்த்தையை முடிக்கவில்லை பீர்பால்.

”என் கிளிக்கு என்ன நேர்ந்தது? நீர் என்ன சொல்லுகிறீர்? என் கிளி செத்துவிட்டதா?” எனப்படபடப்போடு கேட்டார் அரசர்.

”மன்னர் பெருமானே! கிளி பெரிய துறவியைப் போலாகிவிட்டது. முகம் வானத்தை நோக்கியுள்ளது. கண்கள் மூடிக்கொண்டிருக்கின்றன!” என்றார் பீர்பால்.

உடனே விரைந்து சென்று பார்த்தார் அக்பர்.

கிளி கூண்டுக்குள் செத்துக் கிடந்தது.

”கிளி செத்துவிட்டது” என்று ஏன் முன்பே சொல்லி இருக்கக்கூடாது?”

”அது எப்படி சொல்ல முடியும்? நீங்கள் விரும்பினால் அவ்வாறு சொல்லலாம். ஆனால் அது பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்” என்றார் பீர்பால்.

”ஜனங்கள் உம்மை புத்திசாலி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிளி உயிரோடு இருக்கிறதா, செத்துவிட்டதா என்பதைக்கூட உம்மால் அறிந்து கொள்ள முடியவில்லையே, கிளி இறந்துவிட்டது என்ற முன்னமேயே நீர் சொல்லியிருந்தால், நான் இவ்வளவு சிரமத்தோடு இங்கே வந்திருக்க வேண்டியதில்லை அல்லவா? என்றார் அக்பர்.

”அது எப்படி சொல்ல முடியும்? அரசர் பெருமானே, கிளி செத்துவிட்டது என்று முன்னமேயே நான் சொல்லி இருந்தால் என் தலையை அப்பொழுதே கொய்து இருக்க மாட்டீர்களா?” என்றார் பீர்பால்.

அதைக் கேட்ட அக்பர் வேலையாளிடம் தாம் முன்பு கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார். நல்லவேளையாக, நன்றியுள்ள அந்த வேலையாளின் தலை வெட்டப்படுவதிலிருந்து தந்திரமாக அவனைக் காப்பாற்றிய பீர்பாலின் மதியூகத்தைப் புகழ்ந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *