(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கண்ணாடித் தொட்டியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி. சின்னஞ்சிறு மீன்கள் மின்னி துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. நீர்ப் பரப்பில் சிறு செடிகள் அழகாகப் படர்ந்திருந்தன. ஆனந்தம் அலை பாய்ந்தது அந்தப் பிஞ்சு மனத்தில் என்றாலும், கண்ணாடித் தொட்டி யில் ஏதோ குறையிருப்பதாகவே அந்த நெஞ்சிற்குப் பட்டது.
பலவகை மீன்கள் அந்தத் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் வண்ணமீன் ஒன்றுகூட அங்கே இல்லை. அதுதான் அவள் கவலை. சுமதி பல இடங்களில் பார்த்திருக்கிறாள். பச்சை நிறத்தில் பல மீன்கள்; சிவப்பு நிறத்தில் சிரிக்கும் மீன், பொன் நிறத்தில் மின்னும் மீன்கள். இப்படிப் பலவகை மீன்களைப் பார்த்திருந்தும் தன்னிடம் அப்படிப்பட்டவை ஒன்றும் இல்லையே என்றுதான் ஏங்கினாள் சுமதி. சிவப்பு மீன் அவள் சிந்தையில் துள்ளிக் கொண்டேயிருந்தது. என்ன விலையானாலும் அந்த நிறத்தில் ஓர் அழகிய மீனை வாங்கிவிட வேண்டும்; அது கண்ணாடித் தொட்டியில் களிப்போடு நீந்துவதைக் காண வேண்டும் என்ற ஆசை அவள் நெஞ்சில் நிறைந்து நின்றது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புகூட பள்ளிச் சிநேகிதி சுசீலா வீட்டிற்குப் போயிருந்தாள் சுமதி சுசீலா வீட்டிற்கு அடுத்த வீடுதான் மரியநாயகத்தின் வீடு. மரியநாயகம் மீன் வளர்ப்பில் நாட்டமுள்ளவனாம். அது ஒரு வியாபாரம் கூட அவனுக்கு. வண்ண மீன்களை நிறைய விலைக்கு மரியநாயகம் விற்பதாகச் சுசீலா சொன்னாள். அடுத்த வீட்டிற்குச் சுமதியை அழைத்துப் போய்க் காட்டினாள். சுமதிக்கு வியப்புத் தாங்க முடியவில்லை. பல நிறங்களில் அழகான மீன்கள் அவள் ஆர்வத்தைத் தூண்டிவிட்டன. மரியநாயகத்திடமிருந்து எப்படியாவது ஒரு சிவப்பு மீனை விலைக்கு வாங்கி விட வேண்டும் என்ற நினைவோடு சுமதி திரும்பினாள்.
சுமதி பணக்காரப் பெற்றோர்களின் செல்லப் பெண். அப்பா பராங்குசம் அவள் மீது அன்பை அள்ளிச் சொரிவார். அம்மாவும் அப்படியே! அப்பாவிடம் பணம் வாங்கி உடனடியாகச் சிவப்பு மீனை வாங்கிவர வேண்டும் என்ற ஆசைத் துடிப்போடு சுமதி அமர்ந்திருந்தாள்.
சுமதி கவனத்தைத் திருப்பினாள் மீன் தொட்டியிலிருந்து. அப்பா வெளியே யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அந்தக் குரல் தெளிவாகக் கேட்டது. பத்து மணிக்கு அவர் வெளியூர் புறப்பட இருந்தார்.
இன்றைக்குத்தான் சார் கடைசி நாள். கட்டவில்லை என்றால் பெயரை அடித்துவிடுவார்கள்…
“அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? முன்பே சொல்லியிருக்கக் கூடாது?”
“அப்பாதான் சார் கேட்கச் சொன்னார். எப்படியாவது தயவு பண்ணுங்கள்..”
“ஊருக்குக் கிளம்புகிற நேரத்தில் உபத்திரவம் பண்ணுகிறாயே! பணத்திற்கு நான் எங்கே போவது?”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க. சார்… ஐந்து ரூபாய் போதும்!”
பேச்சு, சுமதியின் செவியில் பாய்ந்தது. அப்பாவோடு பேசிக் கொண்டிருப்பவன் ஒரு பையன்தான். ஐந்து ரூபாய் கேட்கும் அவன் யாராக இருக்க முடியும்? ஆர்வத்தோடு அங்கே வந்தாள் சுமதி.
அப்பாவுக்கருகில் நின்றிருந்தான் அமுதன். வேலைக் காரன் வீராசாமியின் பையன்தான் அந்த அமுதன். எட்டாம் வகுப்போ அன்றி ஒன்பதாம் வகுப்போ படித்துக் கொண் டிருந்தான். சம்பளம் கட்டுவதற்குப் பணம் கேட்கத்தான் பராங்குசத்திடம் வந்திருந்தான். ஐந்து ரூபாய் நினைவு அவளுக்கும் வந்தது. மெல்ல அணுகினாள் தந்தையிடம்.
“அப்பா!”
“என்ன சுமதி?”
“ஊருக்கு இப்பொழுதுதானே போகப் போகிறீர்கள்?”
“ஆமாம் சுமதி, அதற்கென்ன?”
“ஐந்து ரூபாய் பணம் வேண்டும். நேற்றுச் சொன்னேனல்லவா? அதை இப்பொழுது வாங்க வேண்டும்.”
“அதற்கு இப்பொழுது என்ன அவசரம் சுமதி? நாளை மறுநாள் வாங்கிக் கொள்ளலாமே!” என்று பரிவோடு பேசினார் பராங்குசம்.
ஏக்கத்தோடு நின்றிருந்தான் ஏழை அமுதன். அவனுக்கு வேண்டியது ஐந்து ரூபாய், அதுவும் அவன் செலவுக்கு அல்ல.
பள்ளிச் சம்பளம் கட்டுவதற்கு அமுதனைப் பார்த்தார் பராங்குசம்.
அந்தப் பார்வையில் தாபம் இழைந்தது. ‘பர்ஸை’ப் பார்த்தார். ஒரே ஒரு ஐந்து ரூபாய் நோட்டு! அப்புறம் எல்லாம் பெரிய நோட்டுக்கள்.
இருக்கும் ஐந்து ரூபாயை அமுதனுக்குக் கொடுத்து விட்டால் என்ன? வீராசாமிதான் நாள் முழுதும் மாடாக உழைக்கின்றானே; அவன் மகன்தானே அமுதன்! அவர் மனம் நினைத்தது.
சுமதியைப் பார்த்தார். சுதந்திரச் சிட்டாக அவள் அங்கே நின்றாள். அவளுக்கு வேண்டியது ஐந்து ரூபாய்! வளர்ப்பு மீன் வாங்குவதற்குப் பணம் வேண்டுமாம். வீண் பொழுதுபோக்கு; வெறும் விளையாட்டு அதற்கு ஐந்து ரூபாய் அவசியம் கொடுக்கத்தான் வேண்டுமா? தேவை யில்லை! இப்படியும் ஒரு கணம் நினைத்தார்.
“சுமதி, நாளைக்கு அதை வாங்கிக் கொள்ளலாம். இப்பொழுது என்னிடம் பணம் இல்லை. ஒரே ஒரு ஐந்து ரூபாய்தான் இருக்கிறது. அமுதனுக்குக் கொடுத்துவிடு கிறேன். அப்புறம் உனக்குத் தருகிறேன்…”
சாந்தமாக மகளுக்குச் சொன்னார் பராங்குசம். சுமதி மருண்டாள்; அவள் முகம் இருண்டது. அன்பு மகள் கலங்குவதைக் காண அவர் மனம் கேட்குமா?
“சுமதி, கவலைப்படாதே! பத்து ரூபாய் வேண்டு மானாலும் நாளைக்குத் தருகிறேன். இப்பொழுதே மீனை வாங்கி வருவதால் என்ன ஏற்பட்டுவிடப் போகிறது?”
“பணம் தர முடியாது என்று சொல்லிவிட்டுப் போங்களேன். வீண் பேச்சு எதற்கு?”
சுமதிக்குக் கோபம். அமுதனைப் பார்த்தாள். அவன் அவளுக்குப் போட்டியாகத்தானே நிற்கிறான்? அவனை விழிகளால் சுட்டெரித்தாள் சுமதி.
பராங்குசம் விழித்தார். அவர் பணக்காரர். நிறையப் பணம் இருக்கிறது. பெட்டியில் தூங்குகிறது: பாங்கியில் புரளுகிறது. என்றாலும் இப்போது அவரிடம் பணம் இல்லை சில்லறையாக.
ஐந்து ரூபாய் அவர் இதயத்தில் போராட்டத்தை எழுப்பி விட்டிருந்தது. ஒரே ஐந்து ரூபாய்! அதற்கு இரண்டு பேர் போட்டி!
ஏழைப் பையன் அதற்காக ஏங்குகிறான் ஒருபுறம்: ஆசைமகள் ஆவலோடு கேட்கிறாள். பணம் எப்படியாவது பயன்பட்டாக வேண்டும்!
அச்சத்தோடு நிற்கும் அமுதன். அழுகையை வரவழைத்து நிற்கும் சுமதி.
பராங்குசத்துக்குத் தெளிவு ஏற்படவில்லை. பத்து மணிக்குச் சிறிது நேரமே மிஞ்சி இருந்தது. அவர் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும்.
இப்பொழுது சுமதியைப் பார்த்தார். அவள் மெல்லக் குலுங்கினாள். அமுதனைப் பார்த்தார். அவன் கவலையோடு நின்றான்.
அவர் நெஞ்சு பொறுக்கவில்லை. சுமதி அழத் தொடங்கிவிட்டால் அவருக்கு அமைதி கிடைக்காதே! அவர் முடிவுக்கு வந்தார். அன்பு மகளின் கண்களைத் துடைத்துவிட்டார் தந்தை.
“அழாதே சுமதி! ஐந்து ரூபாய் உனக்குத்தான்!”
மகளோடு பேசிக் கொண்டிருந்தார் தந்தை. அமுதனின் நெஞ்சு உடைந்தது. ‘இதற்குத்தானா இங்கே வந்தேன்?’ அவன் இதயம் விம்மியது.
“நான் வருகிறேன்…” அவன் அடக்கத்தோடு சொல்லிவிட்டு நகர்ந்தான். அந்தக் குரலில் தொனிந்த ஏக்கத்தை நன்றாக உணர்ந்தார் பராங்குசம். அவன் வாசலைத் தாண்டும்வரை நோக்கினார். என்றாலும் பாசம் எதைப் பற்றியும் எண்ண விடவில்லை. சுமதியின் மீது அவர் வைத்திருக்கும் எல்லையற்ற பாசத்திற்கு முன் அமுதன் மட்டுமென்ன, ஆயிரம் ஏழைக் குரலுக்கும் அவர் செவி கொடுக்கமாட்டார்! இன்றுவரை அவரது இயல்பு அதுவாகத்தான் இருந்து வருகிறது.
சுமதி சிரித்தாள்: அவரும் சிரித்தவண்ணம் புறப்பட்டார்.
வைத்த விழி வாங்காமல் கண்ணாடித் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி. புதுமை எழிலோடு அது மின்னிப் பொலிவதாக அவள் உணர்ந்தாள். ஐந்து ரூபாய் ஆனந்தமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. ஆமாம். சிவப்பு மீன் பளபளத்தது. அந்த அழகைப் பார்த்த வண்ணம் தன்னை மறந்து உட்கார்ந்திருந்தாள் சுமதி மரியநாயகத்தின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிவப்பு மீன் இப்பொழுது சுமதிக்கு உரிமையாகி விட்டிருந்தது. ஐந்து ரூபாயாம். அந்த வண்ண மீன் சுமதி மகிழ்ச்சிக் கரையின் ஓரத்திலே துள்ளும் மீனாகத்தான் இருந்தாள். அப்பா ஊரிலிருந்து வந்தவுடன் ஆசையோடு காட்ட வேண்டும் சிவப்பு மீனை என்ற துடிதுடிப்பு அவள் நெஞ்சத்தில்!
மகளைக் கூப்பிட்டாள் தாய். சுமதி எழுந்தாள். எட்டாத ஒன்றை எட்டிப் பிடித்துவிட்ட பெருமகிழ்ச்சி அவளுக்கு!
ஆசையின் உருவமாக நீந்திக் கொண்டிருக்கும் அந்த மீனைப் பார்த்துவிட்டு அவள் கிளம்பினாள்.
ஐந்து ரூபாய் அசைந்து கொண்டிருந்தது. ஆறு மணிக்குப் பிறகு சுமதி வீட்டிற்கு வந்தாள். எங்கேயோ போய்விட்டு. அந்த மீன் துள்ளிக் குதிக்கவில்லை; நீந்தி நெளியவில்லை. அருகே வந்தாள் அலைபாயும் மகிழ்ச்சியோடு.
அங்கே –
சிவப்பு மீன் சிவப்பு மீனாக இல்லை. அதன் கண்கள் வெளுத்திருந்தன. நிறமும் சற்று மங்கியிருந்தது. துணுக் குற்றாள் சுமதி!
சிவப்பு மீன் ஏன் நீந்தவில்லை?
இரையிட்டுப் பார்த்தாள். அது வாயைத் திறக்க வில்லை. வாயைத் திறந்து சுவாசிக்கவுமில்லை.
அப்படியானால் அந்தச் சிவப்பு மீன்…
அது தொட்டியின் மேல்பரப்பில் மிதக்கத் தொடங்கியது. சுமதி துடித்தாள்; அவள் மனம் அழுதது.
ஐந்து ரூபாய் மிதந்து கொண்டிருந்தது! ஆமாம், சிவப்பு மீன் அவளை ஏமாற்றிவிட்டது; அது செத்துப் போய்விட்டது! சுமதியின் அம்மா கோபித்துக் கொண்டாள், காசை வீணாக்கிவிட்டாளே குழந்தை என்று!
அப்புறம் பராங்குசம் வந்தார். கலங்கி நிற்கும் மகள்: கடிந்து நிற்கும் மனைவி! மிதக்கும் சிவப்பு மீன்! அவர் கருத்துச் சுழன்றது. அவர் மனம் அனைத்தையும் உணர்ந்தது. சுமதியின்மேல் அவருக்கு சற்றுக் கோபம்!
காலையில் நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்து அவர் நெஞ்சு வருந்தினார். ஐந்து ரூபாய் என்னபாடு படுத்தி விட்டது! அமுதனிடம் கொடுத்திருந்தால் கொள்ளமாளாத இன்ப வெள்ளத்தில் மிதந்து போயிருப்பானே! அவரது பெருந்தன்மையைப் புகழ்ந்திருக்குமே அவன் நெஞ்சு.
சுமதி என்ன வேலை செய்துவிட்டாள்! ஒரு மீனுக்குப் போய் ஐந்து ரூபாயை விரயமாக்கிவிட்டாளே! பராங்குசம் இப்பொழுது சிந்தித்தார்!
பாவம். அமுதன்! வாடிய மனத்தோடு போன அவன் சம்பளம் கட்டினானோ என்னவோ! கட்டியிருக்கா விட்டால்…? அவன் அடுத்த நாளிலிருந்து பள்ளிக்கூடம் போக முடியாது வீராசாமி வருந்துவான். முதலாளி இப்படிச் செய்துவிட்டாரே என்று.
அழுத சுமதியைத் தேற்றினார். அவர் மனத்தில் புதிய எண்ணம் எழுந்தது. எப்படியாவது அமுதனுக்குரிய சம்பளப் பணத்தைக் கட்டிவிட வேண்டும். அதனால் அவன் மனத்திற்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும்.
வீராசாமி வந்தான் ஊரிலிருந்து வந்த முதலாளியைப் பார்க்க. பராங்குசத்தின் முகம் மலர்ந்தது.
“வீராசாமி, உன் மகன் சம்பளம் கட்டிவிட்டானா? ஊருக்குப் போகிற நேரத்தில் கேட்க வந்தான். அவசரத்தில் நான் கவனிக்கவில்லை. மனசு ரொம்ப வருத்தப்பட்டது. பணம் கட்டிவிட்டானா?”
“வரும்போது பார்த்திட்டுத்தானுங்க வந்தேன். அவன் மேலே வாத்தியாருக்குப் பிரியமாம். அவரே சம்பளத்தைக் கொடுத்திட்டாராம்… பணம் கட்டி விட்டதாகச் சொன்னான்…”
சாவதானமாக மொழிந்தான் வீராசாமி. அந்த பதில் அவருள்ளே அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இரக்க குணம் அவர் இதயத்தில் அரும்பியது. ஆனாலும் உடனடி யாக ஒரு நல்ல செயலைச் செய்ய முடியவில்லையே என்று கலங்கினார்.
வீராசாமி போய்விட்டான். அவர் நெஞ்சில் ஐந்து ரூபாய் நின்றது: அமுதன் நின்றான்; செத்துப்போன சிவப்பு மீனும் நின்றது! மாறி மாறி அத்தனையும் வந்து வந்து நின்றன.
சிவப்பு மீன் செத்துப்போய் விட்டது. ஆனாலும் அவரைச் சிந்திக்கச் செய்துவிட்டது!
– 1958 – ‘கண்ணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.