மாரியாயி ஒரு மாடு தானே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,721 
 

இன்று யோசப்பின் மகளுக்குத் திருமணம்.

நானும் போகவேண்டியிருக்கிறது.

யோசப்பர் எனக்கு ஒருவகையில் பெரியப்பாமுறை. நான் கிளறிக்கல் எடுபட்டு கொழும்புக்கு வேலைக்கு வந்தபோது அவர் வீட்டில் ஒரு அறையில் தான் இருந்தேன். அது என் அப்புவின் ஏற்பாடு.

அங்கு அவர்களோடு இரண்டு வருடங்கள் இருந்த எனக்கு அவர்கள் வாழ்க்கை முறையும், போக்கும் பிடிக்காததால் அங்கிருந்து வெளியேறி இங்கு கொட்டாஞ்சேனையில் ஒரு அறை எடுத்து இருக்கிறேன். பிறகு திருமணம் செய்து மனைவியுடன் கொழும்பு வந்த போது ஒரு நாள் அங்கு போனேன். பின்னர் அங்கு போகவில்லை.

யோசப்பரும் மனைவியும் பம்பலப்பிட்டியில் உள்ள கத்தோலிக்க வட்டத்தில் பிரபலமானவர்கள். பெரிய பக்தியான குடும்பம். தினப்பூசை தவறவிட மாட்டார்கள். அவர்கள் இருவருக்கும் இரண்டு வார்த்தைக்கு ஒருமுறை யேசுவை அழைக்கா விட்டால் திருப்தி ஏற்படாது. பெரியம்மா கொழும்பில் சகல வேதக்கோயில்களையும் தரிசித்து வருவா, எந்த நேரமும் சருவேசுரன் தமது குடும்பத்துக்குச் செய்யும் கிருபைகளைப் பற்றிக் கூறிக் கொண்டேயிருப்பா. அவர்களோடு இரண்டு வருடங்கள் கூட இருந்ததால் அவர்களின் வாழ்க்கையை நான் நன்கு அறிவேன். அவர்களின் பக்தி எல்லாம் வார்த்தைகளிலும், செபத்திலும், கோயிலுக்குள்ளும் தான். கோயிலுக்கு வெளியே இந்த உலக இன்பங்களை அனுபவிக்கும் அவாவினால் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். கிறிஸ்த்துவின் போதனைகள் அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.

யோசப்பர், எனது பெரியப்பா, அரசாங்கத்தில் ஒரு மதிப்புள்ள அதிகாரி, அவர் தன் குடும்பத்தின் நலத்துக்காக செய்யும் சின்னத்தனங்களையும், சட்டவிரோத, அரசாங்கவிரோத காரியங்களையும் எனக்குத் தெரியும். அவர் பணக்காரனாக வருவதற்கு கைலஞ்சம் தான் காரணம். சமீபத்தில் ஒரு புடவைக் கடையும் கொழும்பில் பிரதானவீதியில் போட்டு ஒரு முதலாளியுமாகி விட்டார்.

அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் அடிக்கடி கடவுளை அழைத்து, பக்திமான்களாகக் காட்டிச் சமூகத்தில் பெரிய மனிதர்களாக இருக்கிறார்களோ என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு.

இவர்களுடைய இந்தக் போக்கும், ஆங்கில பாணி வாழ்க்கை முறையும் மனதில் எந்த நேரமும் அருவருப்பையே ஏற்படுத்திக் கொண்டிருந்தன. தாங்கள் தமிழர்கள் என்பதை அருவருப்போடு ஒத்துக் கொள்ளும் அந்தப் பெரிய மனிதர்களுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை.

அவர்களின் மூத்த மகள் எலிசபேத்துக்குத் திருமணம்.

அவர்களின் பிள்ளைகள் அவர்களைவிட மோசம். அந்த வீட்டுக்குப் போக எனக்கு வெறுப்பாக இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இருந்து எனது வீட்டாக்கள் ஒருவரும் வராததினாலும், இரண்டு வருடங்கள் அங்கு இருந்ததினாலும் நானும் திருமணத்துக்கு புறப்பட்டுச் சென்றேன்.

யோசப்பரின் வீடு மிக மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் நடு ஹோலில் யோசப்பரின் மகள் எலிசபெத்தும், மாப்பிள்ளையும் வீற்றிருக்கிறார்கள். திருமணம் கன்னிமரி மாதா கோவிலில் விமரிசையாக நடந்து முடிந்தது.

யோசப்பரும் மனைவியும் வாசலில் நின்று வாய் நிறையச் சிரித்தபடி எல்லோரையும் உபசரித்துக் கொண்டு நிற்கிறார்கள். வெளியில் கார்கள் வரிசைவரிசையாக நிற்கின்றன. பம்பலப்பிட்டியில் உள்ள பெரிய மனிதர்கள் எல்லாம் வந்து மண மக்களை ஆசீர்வதித்துச் செல்கிறார்கள்.

நான் ஒரு மூலையில் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டு அங்கு நடப்பவற்றை யெல்லாம் அவதானிக்கிறேன். என் கண்கள் அவர்களது வேலைக்காரி மாரியாயி யைத் தேடிக் கொண்டிருந்தன.

திருமணச்சூழல் முழுவதும் ஆங்கிலபாணி, அவர்கள் தமிழர்கள் என்பதற்கு ஒரு அறிகுறியும் இல்லை. பெரியம்மாவே பெரிய கொண்டையும் போட்டு, சொண்டுக்குப் பூச்சும் பூசி இந்தியாச் சேலை ஒன்றும் கட்டி எடுப்பாக நிற்கின்றா. அங்குள்ளவர்கள் அணிந்து வந்த உடுப்பும், உபசரிப்பும் , பேச்சும், வீட்டுச் சூழலும் அவர்கள் சிரிக்கிற சிரிப்பும் அவர்கள் எவரையும் இலங்கையர் என்று காட்டிக் கொடுக்கவில்லை.

பெண்கள் எல்லாரும் உடலை இறுகச் சேலை கட்டி, குமரிகள் முக்கால் நிர்வாண மினி உடுத்து, கை, கால், சொண்டு, கண் எல்லாம் மை பூசி, கொண்டைகளை வானை நோக்கி விட்டு ஒருவரோடு ஒருவர் முட்டாமல் நின்று சல்லாபிக்கின்றனர்.

எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகின்றது. பெரியப்பாவைத்தான் எனக்கு அறவே பிடிப்பதில்லை. போலிக் கௌரவத்தில் பெருமையாக வாழ்பவர். அவருடைய கூடப் பிறந்ததுகளும், யாழ்ப்பாணத்தில் கஷ்டப்படுகிறார்கள். அவருக்கு அவர்கள் நினைப்பேயில்லை. பெண்சாதி கீறிய கோட்டைத் தாண்டும் தைரியம் இல்லாத கோழை. ஆனால் பணம் சம்பாதிப்பதில் மற்றவர்களை உருட்டிப் புரட்டுவதில் பெரிய தைரியசாலி.

அவரும் மனைவியும் வருவோரிடம் பேசிக் கொள்வதை நான் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“எல்லாம் தேவகிருபைதான்!”

“சருவேசுரன் எங்களைக் கைவிடமாட்டார்”

“வல்லதேவன் எங்களோடுதான் இருக்கிறார்; எல்லாம் நல்லவிதமாக முடிந்தது. தேவனுக்குத்தான் நன்றி” “திருமணம் என்பது மோட்சத்தில் நிச்சயிக்கப் படுகின்றது” யோசப்பர் திருமணம் என்பது மோட்சத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று கூறியதும், மாப்பிள்ளையையும், பெண்ணையும் திரும்பிப் பார்த்தேன்.

மாப்பிள்ளை ஒரு டாக்டர். சீதனம் ஒரு லட்சம் பணமும், ஒரு காரும் வீடும் வளவும். அந்தப் பணத்தை யோசப்பர் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்து எடுத்ததில்லை. நிச்சயமாக பொய்யிலும் புரட்டிலும் திரட்டியது.

யோசப்பரும் மனைவியும் வருபவர்களுக்கு திரும்பத்திரும்ப அவற்றையே கூறிக் கொண்டிருந்தார்கள். எனக்குக் கேட்கப் பிடிக்கவில்லை.

“மாரியாயி எங்கே?”

வீட்டுக்குப் பின்புறம் கடற்கரை. அந்த இயற்கை அழகை இரசிக்கும் எண்ணத்தோடு எழுந்து பின்னால் சென்றேன்.

கடல் அலைகள் நுரை கக்கி கரையை வந்து மோதிக் கொண்டிருக்கின்றன.

கடற்கரையை நோக்கி நடந்து சென்றேன். வாழைகள் நிறைந்திருக்கும் அந்த வீட்டு வளவின் எல்லையில் ஒரு மூலையில் ஒரு வாழையைக் கட்டியணைத்தவாறு கடலை நோக்கியவண்ணம் மாரியாயி தனியாக நிற்கின்றாள்.

இவள் ஏன் இங்கு நிற்கின்றாள்?

மாரியாயி அந்த வீட்டு வேலைக்காரி. அந்த வீட்டில் உள்ள ஒரு தமிழ்ப்பெண். காலை நான்கு மணிக்கு எழுந்து, இரவு பத்து பன்னிரெண்டு மணி வரை வேலை செய்யும் ஒரு நேர்மையான ஜீவன்.

அவள் சரித்திரம் எனக்குத் தெரியும்.

அவளுக்குப் பதின்மூன்று வயதாக இருக்கும் போது, பதுளையில் உள்ள கீனாகலைத் தேயிலைத்தோட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டாள். பதுளையில் யோசப்பரின் நண்பர் ஒருவர் தோட்டத்தில் பெரிய கிளாக்கராக இருந்தார். அவர்தான் அவளைக் கொண்டு வர உதவி செய்தார். மாரியாயியின் தகப்பன் மண்சரிவில் அகப்பட்டு மாண்டான், தாயும் விஷ அட்டை கடித்து கால் அழுகி இறந்துவிட்டாள். பின்பு அவள் பாட்டியுடன் வளர்ந்தாள். அந்தக்கிழவி தான் ” நீ போய் மகராசியா இரு” என்று கூறி அவளை யோசப்பரின் கையில் ஒப்படைத்தாள். அடுத்த வருடத்தில் அவளுடைய பாட்டியும் இறந்து விட மாரியாயி இந்த வீடே தஞ்சமெனக் கிடக்கிறாள்.

அவளுக்குக் கிட்டவாக நான் போனேன்.

“மாரியாயி”

அவள் திடுக்குற்றுத் திரும்பினாள்.

கண்களில் நிறைந்த கண்ணீர்.

என் உள்ளம் நலுங்கிற்று.

“மாரியாயி நீ ஏன் அழுகிறாய்?”

அவள் இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு விம்மினாள்.

அவள் இதயம் மிகவும் தாக்கப்பட்டிருக்கிறது.

என்மனம் அவளின் அழுகைக்கு காரணம் தேடி அலைந்தது. நான் சற்று மௌனமாக நின்றேன். பிறகு,

“ஏன் அழுகிறாய் மாரியாயி சொல்லேன்?” என்று கேட்டேன் அவள் குனிந்து நின்றாள்.

“நான் தூக்கி வளத்த புள்ளைக்கே கலியாணம் நடந்திரிச்சு” என்றாள். அவள் விட்ட பெருமூச்சு, அது பெருமூச்சே.

நானும் ஒரு பெண்; எனக்கும் மனித உணர்ச்சிகள் உண்டு, நானும் வாழத்துடிக்கிறேன். எனக்கும் ஒரு கலியாணம் கட்டிவையுங்கள் என்று அவளால் வாய் திறந்து கூறமுடியுமா?

அவளின் நெஞ்சின் அலைகள் எனக்குத் தெரிகிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு அவளுக்கு ஒரு காதல் இருந்ததாம். கொழும்புத்துறை முகத்தில் வேலை செய்த தொழிலாளி சிரிசேனா என்பவனை அவள் காதலித்தாள். அவனும் அவளைத் திருமணம் செய்வதாக இருந்தான். ஆனால் இதையறிந்த யோசப்பரும், மனைவியும் அவன் ஒரு நாள் அவளோடு பின் வளவில் பேசிக் கொண்டிருந்த போது பிடித்து அடித்து, பொய் கூறி பொலிசில் கொடுத்து உதைத்து விரட்டி விட்டு, மாரியாயியை ஒரு மாதமாக வீதிக்குச் செல்ல விடாமல் அறையில் பூட்டி, அடித்து, வெருட்டி பயமுறுத்தி அவளுடைய ஆசைகளைச் சிதைத்து விட்டார்கள். நாய்கள்!

இந்தத் திருமண நாளில் அந்த நினைவுதான் அவளுக்கு வந்து விட்டதா?

“அதற்கு நீ என் அமகிறாய் மாரியாயி!” –

அவளின் உட்கிடக்கையை அறிய எனக்கு ஆவல்.

“நம்ம பாட்டிக்கிட்ட, எனக்கு கலியாணங் கட்டி வைப்பதாச் சொல்லித்தான், ஐயா என்னை அழைச்சு வந்தாரு, எனக்கு ஞாபகமிருக்கு!” அவள் திரும்பவும் கடலை நோக்கினாள்.

யோசப்பரின் மகளுக்கு இப்போது இருபது வயதுதான் இருக்கும். அவளைத் தூக்கி வளர்த்த இவளுக்கு நிச்சயமாக முப்பது வயதுக்கு மேலாக இருக்காதா?

மாரியாயி தேயிலைத் தோட்டத்தில் இருந்திருந்தால் வயிற்றுக்கு ஒழுங்காக சோறு கிடைக்காவிட்டாலும், வெய்யிலிலும், மழையிலும் குளிரிலும் மலையில் கொழுந்தெடுக்க வேண்டியிருந்தாலும், குறுகிய லயக் காம்பராக்களில் இருளோடு இருளாகக் கிடந்து உழன்றாலும், தோட்ட முதலாளிகளின் நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருந்தாலும், ஒரு தொழிலாளியைக் கைப்பிடித்து, இப்போது ஏங்கித் துடிக்கும் அந்த மனித சுகங்களையென்றாலும் அனுபவித்திருப்பாளே?

இந்த வீட்டுக்கு வந்து இவர்கள் போடுகிற வைக்கோலைத் தின்று விட்டு மூசிமூசி உழைக்கும் செக்குமாடாகப் போய் விட்டாள்.

தேயிலைத் தோட்டத்தில் உழைப்பை மட்டும் சுரண்டுவார்கள். இங்கே இவர்கள் அவள் உழைப்பை மட்டுமல்ல, உணர்ச்சிகளையும், ஆசாபாசங்களையும் நசிக்கிச் சாகடித்து விடுவார்கள். மாரியாயிக்கு இருக்கிற பெண்ணுணர்ச்சிகளும் யோசப்பருக்கும் மனைவிக்கும் புரியாதவையல்ல. தம் மகளுக்கு காலாகாலத்தில் திருணம் செய்து வைத்தவர்களுக்கு புரியாதென்பது பொய்.

நான் மௌனமாக நின்றதை உணர்ந்த மாரியாயி திரும்பி என்னைப் பார்த்தாள்.

கண்களில் நிறையக் கண்ணீர், திரும்பவும் வாழைமரத்தை அணைத்தவாறு கடலைப்பாத்துக் கொண்டு நின்றாள்.

யோசப்பரின் வீட்டில் ‘பொப்” சங்கீதப் பாட்டுக்களும், அவர்களின் சிரிப்பொலியும், கூத்தும், குதூகலமும் எனக்குக் கேட்கிறது.

உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி என்று போதித்த யேசுவை அடிக்கடி வாய்விட்டு அழைக்கும் அவர்களுக்கு, அவர்களின் காலடிக்குள்ளே அவர்களுக்காக தன் சுகங்களைத் தியாகம் செய்து உழைக்கும் மாரியாயியை மனதார நேசிக்க முடியவில்லையே ஏன்?

ஓ! அவர்கள் சுரண்டுகிற வர்க்கம்.

மாரியாயி சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவள் அவர்களால் இவளை நேசிக்க முடியாது தான்.

“மாரியாயி”

அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீ இவர்களைத் தானே நம்பி வாழ்கிறாய்?” –

“ஆமாங்க, எனக்கு உலகத்தில் வேறு ஒருத்தருமில்லையே! ஐயா”. அவளுடைய கண்கள் நனைகின்றன.

“நான் உனக்கொரு உண்மை சொல்கின்றேன்!”

“என்னங்கையா?”

“உனக்குக் கலியாணம் நடக்காது”

– சிரித்திரன் 1972 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *