ஒருநாள் ரோஜாத் தீவு இளவரசி ஃப்ரண்ட்ஸோட ஜாலியா தோட்டத்துக்குப் போனாங்க. அங்கே இருந்த ரோஜாப் பூக்களை பறிச்சு ஒருத்தர் மேல ஒருத்தர் எறிஞ்சு விளையாடிட்டு இருந்தாங்க. அப்போ இளவரசி எறிஞ்ச ரோஜாப்பூ அங்கே வந்த முனிவர் மேல தவறி விழுந்துடுச்சி.
கோபப்பட்டட அவர், ‘‘என் மீது பூவை எறிந்ததால் நீ இந்த பூந்தோட்டத்தில் ரோஜாச் செடியாக இருப்பாய்’’&னு சாபமிட்டுட்டார்.
இளவரசி அவர்கிட்டே மன்னிப்புக் கேட்டாள். கோபம் குறைஞ்ச அவர், ‘‘நீ பகலில் மட்டும் ரோஜாச் செடியாகவும், இரவில் இளவரசியாகவும் இருப்பாய். இங்குள்ள ரோஜாச் செடிகளுள் நீ எந்த ரோஜாச் செடியாக இருக்கிறாய் என்று யாராவது கண்டுபிடித்து அந்தச் செடியை மட்டும் வேரோடு பிடுங்கினால் உன் சாபம் தீரும். தவறுதலாக வேறு செடியைப் பிடுங்கி விட்டால் நீ எப்பொழுதும் ரோஜாச் செடியாகவே இருக்கவேண்டி வரும்’’&னு சொல்லிட்டுப் போயிட்டார்.
அங்கிருப்பதோ ஆயிரக்கணக்கான ரோஜாச் செடி. மறுநாள் காலையில் இளவரசி ரோஜாச் செடியாக மாறிவிட்டாள். ஆனால் இளவரசியின் புத்திசாலித் தோழி விடிகாலையில் பூந்தோட்டத்திற்குச் சென்று அத்தனை செடிகளுக்கும் மத்தியில் இளவரசியை (ரோசாச்செடியை) சரியாகக் கண்டுபிடித்து வேரோடு பிடுங்கினாள். இளவரசியும் தன் உருவத்தை அடைந்தாள்.
அத்தனை செடிகளுக்கு மத்தியில் இளவரசியை எப்படி கண்டுபிடித்தாள் தோழி?
ஓர் ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். ஊருக்கு வெளியே இருந்த அவன் நிலத்தில் ஒரு வேதாளம் இருந்தது. பல வருடங்களாக பயன்படாமல் இருந்த நிலத்தில் நெல் பயிரிட்டான். அவனுக்கு உதவியாக பலரும் அங்கு வந்துசெல்லத் தொடங்கினார்கள்.
அவர்களால் தன் அமைதி கெடுகிறதே என்று நினைத்த வேதாளம், உழவன் முன் வந்து ‘‘இது எனக்கு உரிமையுள்ள இடம். நீ எனக்குத் தொல்லை தருவதால் உனக்கு இழப்புதான் வரும். நீ இங்கே அறுவடை செய்து கட்டுகிற நெற்கட்டில் கலம் நெல் கிடைக்காது. இரண்டு படி நெல்தான் கிடைக்கும். போட்ட முதலைக்கூட உன்னால் எடுக்க முடியாது’’ எனச் சொல்லி மறைந்தது.
ஆனால் புத்திசாலி விவசாயியோ வேதாளத்தின் வார்த்தையை சாதகமாகக் கொண்டு பெரும் செல்வன் ஆனான்.என்ன செய்து இருப்பான் அந்த விவசாயி?
முத்துத்தீவு ராஜா, பவழத் தீவு மீது படையெடுத்து வென்றான். தன் முன்னால் கை விலங்கோடு நிறுத்தப்பட்ட பவழத் தீவு அரசனைப் பார்த்து ‘‘நீ உன் விருப்பம் போல எது வேண்டுமானாலும் பேசலாம். நீ பேசுவது உண்மையாக இருந்தால் உன்னை வாளால் வெட்டிக் கொல்வேன், பொய்யாக இருந்தால் உன்னை தூக்கில் இட்டு கொலை செய்வேன்’’ என்றான்.
எப்படி இருந்தாலும் மரணம் நிச்சயம். ஆனால் புத்திசாலி பவழத் தீவு ராஜா ஒன்றை சொன்னான். முத்துத் தீவு அரசனால் வாளால் வெட்டியும் கொலை செய்ய முடியவில்லை. தூக்கில் போட்டும் கொல்ல முடியவில்லை. அப்படி பவழத்தீவு ராஜா என்னதான் சொல்லி இருப்பான்?
விடைகள்:
ராத்திரி பூரா இளவரசி அரண்மனையில் இருப்பாங்க. ஆனா ராத்திரியில் பனி பெய்யும். அதனால் எல்லா ரோஜாச் செடிகள் மீதும் பனி படிந்து இருக்கும். காலையில் ரோஜாச் செடியாக மாறிய இளவரசி மீது பனித்துளி இருக்க முடியாது.
அறுவடை நெற்கட்டைப் பெரிதாக கட்டினால்தானே… அவன் ஒரு நெற்கட்டில் இரண்டு நெற்கதிர் என்று கட்டினான். வேதாளத்தின் சாபப்படி ஒரு நெற்கதிருக்கு ஒரு படி நெல் கிடைத்தது.
பவழத் தீவு ராஜா… ‘‘என்னை தூக்கில் போடப் போகிறீர்கள்’’ என்று சொன்னான்.
இப்போது அவனை தூக்கில் போட்டால் அவன் கூறியது உண்மையாகிவிடும். பொய் சொன்னால்தான் தூக்குத் தண்டனை. ஆகவே, அரசனைத் தூக்கில் போட்டுக் கொல்ல முடியாது. மாறாக வாளால் வெட்டிக் கொலை செய்தால் அவன் சொன்னது பொய்யாகிவிடும். எனவே வாளாலும் வெட்டிக் கொலை செய்ய முடியாது.
– வெளியான தேதி: 16 ஏப்ரல் 2006