புள்ளிமான்களும், சாதாரண மான்களும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 16,296 
 

அது ஒரு அழகிய காடு. அங்கு பூத்துக் குலுங்கும் மலர்களும், மரங்களும் செழிப்பாக வளர்ந்திருந்தன. ருசிமிக்க இனிமையான பழவகைகளும் வளர்ந்திருந்தன. அக்காட்டில் எல்லா வகையான பறவைகளும் சுதந்திரமாய் திரிந்தன. அக்காட்டின் நடுவே சின்ன நீரோடை ஓடிக் கொண்டிருந்தது. அக்காட்டின் முன்பகுதியில் புறா, மயில்கள், ஆடுகள், அணில்கள், மான்கள், புள்ளி மான்கள், முயல்கள் என சாதுவான பிராணிகள் வாழ்ந்துக் கொண்டிருந்தன.

பின் பகுதியில் சிறுத்தை, புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகங்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தன. அங்கு வளர்ந்திருக்கும் புல்களையும், பழங்களையும் சாப்பிட்ட பின் அந்த நீரோடையில் தான் தண்ணீர் குடிக்க வரும். அங்கு முன்பகுதியில் மான்களும், புள்ளிமான்களும் அதிகம் இருந்தன.

அவற்றில் புள்ளிமான்கள் தங்கள் உடலில் வெண்புள்ளிகள் உள்ளதால் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று எண்ணி அதிக கர்வம் கொண்டன. எனவே சாதாரண மான்களைப் பார்த்து ஏளனம் செய்ய ஆரம்பித்தான்.

புள்ளிமான்களின் தலைவன், “”ஏய்… சாதாரண மான்களே, இப்பகுதியில் வளர்ந்திருக்கும் புல்களும், மரங்களும் எங்களுக்குச் சொந்தம். அதே மாதிரி இந்த ஓடையின் மேல்பகுதியும் எங்களுக்குச் சொந்தம். ஏனென்றால், மான்களில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள். எங்கள் உடலில் உள்ள வெண்புள்ளிகள் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். எனவே நீங்கள் கீழ்ப்பகுதிக்குச் சென்று தண்ணீர் குடியுங்கள். அங்கு இரைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறியது.

அப்போது ஒரு சாதாரண மான் பேசியது. “”நாங்களும் விலங்குகள்தானே. இந்தக் காடு எல்லோருக்கும் சொந்தம்தானே” என்று கூறியது.

அங்கு வளர்ந்திருந்த புல்களையும், பழங்களையும் தாங்களே சாப்பிட நினைத்த புள்ளிமான்கள் ஒரே குரலில், “”நாங்கள் புள்ளிமான்கள். அதனால் நாங்கள் உங்களை விட உயர்ந்தவர்கள். நாங்கள் உங்களை விட உயர்ந்தவர்கள் என்பதற்கு எங்கள் உடலில் உள்ள வெண் புள்ளிகளே சான்று. அதோடு உங்களை விட அழகானவர்கள்” என்றன.

“”எல்லா புல் பூண்டுகளையும், பழங்களையும் நீங்களே சாப்பிடுவதற்காக தானே இப்படிக் கூறுகிறீர்கள்” என்று கூறிவிட்டு வேறுபக்கம் சென்றன சாதாரண மான்கள்.

இது நடந்து இரண்டு மூன்று நாள்களெல்லாம் ஒரு பெரும் ஆபத்து வந்தது. அந்த அடர்ந்தக் காட்டின் பின் பகுதியிலிருந்து ஒரு காட்டுப்புலி வழி தவறிப் போய் முன் பகுதிக்கு வந்தது. அது தன் இரைக்காக நீரோடையில் நீர் பருகிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக் குட்டியை கடித்து இழுத்துச் சென்றது.

அந்தப் பகுதியில் உள்ள சாதாரண மான்கள் எல்லாம் ஒன்று கூடி அந்தக் காட்டுப் புலியிடமிருந்து தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது? என்று விவாதித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தன.

அதன்படி, எப்போதும் ஒன்றாகக் கூடி வசிப்பது என தீர்மானம் செய்து கொண்டன. அன்று இரவு காட்டுப் புலி பிராணிகளை வேட்டையாட வந்தது. ஆனால் எல்லா சாதாரண மான்கள் ஒன்றுகூடி அதை விரட்டின. சாது மிரண்டால் காடு கொள்ளாது அல்லவா? ஒற்றுமையால் ஏற்பட்ட பலத்தால் எல்லா சாதாரண மான்களும் தங்களுடைய கொம்புகளால் காட்டுப் புலியைத் தாக்கின. புலியும் கொம்புகளினால் ஏற்பட்ட காயத்தால் ஓடி ஒளிந்தது.

புள்ளிமான்கள், சாதாரண மான்களிடம் சண்டைப் போட்டுக் கொண்டதால், இத்தனை நாள் தங்கள் இஷ்டம் போல் புல்களையும், பழங்களையும் தின்று வந்தன. ஆனால், இப்போதோ காட்டுப் புலிக்கு பயந்து தங்கள் பகுதியிலிருந்து வெளியே வரமுடியாமலும், மற்ற பிராணிகளிடமிருந்து சேர்ந்து கொள்ள முடியாமலும் தவித்தன. சாதாரண மான்கள் ஒன்றுகூடி புலியைத் தாக்கியதை அறிந்தன.

கடைசியாக புள்ளிமான்கள், சாதாரணமான்களிடம் சென்று, “”நாங்கள் தெரியாத்தனமாக எங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டோம். இனிமேல் அப்படி நடக்க மாட்டோம். புலியிடமிருந்து எங்களையும் காப்பாற்றுங்கள். எங்களை மன்னியுங்கள்” என்றன.

அப்போது சாதாரண மான்கள், “”நீங்கள் அற்ப பிராணிகள். வெண் புள்ளிகள் உள்ளதால், உயர்ந்தவர்கள் என்று கூறுனீர்களே. உங்களை சேர்க்க மாட்டோம். பழங்களையும், புல்களையும் நீங்களே சாப்பிட்ட மாதிரி புலியையும் நீங்களே விரட்டியடியுங்கள்” என்று கூறின.

அந்த சமயத்தில் அருகே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கிளையிலிருந்து, “”ஆபத்தை உணராது சண்டைப் போடும் அறிவற்ற மிருகங்களே!” என்று ஒரு குரல் கேட்டது. அதைக் கேட்டதும், கீழே நின்றிருந்த மான்கள் எல்லாம் அண்ணாந்து மேலே பார்த்தன.

ஆலமரத்தின் உச்சியில் பலவண்ண நிறத்தில் ஒரு அழகிய பறவை உட்கார்ந்துக் கொண்டிருந்தது. அது பேசத் துவங்கியது.

“”மான்களே! உங்களுக்கு இந்தக் காடு மட்டும்தான் தெரியும். நான் கடல்களையும், மலைகளையும் கடந்து கண்டம் விட்டு கண்டம் போயிருக்கிறேன். அங்கு பலவிதமான மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். இப்படித்தான் சில தேசங்களில் மனிதர்கள் கூட தங்கள் வெள்ளை நிறத்தவர் என்பதால் கறுப்பு நிறத்தவர்களிடம் சண்டை போடுகிறார்கள். இந்தச் சண்டையில் மனிதர்களே கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள். அப்படியிருக்க, மிருகங்களான நீங்கள் வெள்ளை என்றும், கறுப்பு என்றும் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று விரோதம் பாராட்டினால் அழிந்து போவீர்கள். எங்கள் இனமான காகம் கறுப்புதான். ஆனால் நாங்கள் அவைகளுடன் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். அவற்றிடமிருந்து நல்ல கூடி சாப்பிடும் படிப்பினை கற்றுக் கொள்கிறோம். நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் இல்லையெனில் புலி, சிறுத்தைகள் போன்ற துஷ்டர்கள் உங்களை கொன்று விடுவார்கள். கூடி வாழ்ந்தால் கோடி துன்பங்களை அகற்றலாம். நிறமும், வெண்புள்ளிகளும் ஒரு பொருட்டல்ல” எனறு கூறிவிட்டு தன் அழகிய இறகுகளை விரித்து வானத்தில் பறந்து சென்றது.

நின்றிருந்த புள்ளிமான்களும், சாதாரண மான்களும் இதைக் கேட்டு வெட்கி தலைக் குனிந்தன. தங்கள் அறியாமை எண்ணி வருத்தம் அடைந்தன. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டன. அன்று இரவு தங்களை வேட்டையாட வந்த புலியை ஓட ஓட விரட்டியடித்தன. பின்பு எல்லாம் மகிழ்ச்சியுடன் கூடி வாழந்தன.

– மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *