முகம் அறியா எதிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 21,966 
 

தன்னுடைய பர்செனல் வலை தள முகவரியில் வந்திருந்த தகவல்களை அசுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்த பிரபல பணக்காரரான துர்காசேட் சட்டென ஒரு மெசேஜை பார்த்ததும், திடுக்கிட்டார்.

“You are Watching and Scanning”

பின் தன் தோளை குலுக்கிக்கொண்டவர், அந்த மெசேஜை கண்டு கொள்ளாமல் அடுத்த மெசேஜூக்குள் நுழைந்தார். இருந்தாலும், அந்த மெசேஜ் அவர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டது.

இது மாதிரி பல மிரட்டல்கள் வரும்.இதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது. அவருடைய தொழிலில் எத்தனையோ எதிரிகளை பார்த்திருக்கிறார். அவருடைய பணத்துக்கும் ஆள் பலத்துக்கும் அந்த மிரட்டல்கள் அனைத்தையும் காணாமல் போய் செய்திருக்கிறார்.ஆனால் இந்த செய்தி மிரட்டல் போல தெரியவில்லை. என்னை கண்காணித்து கொண்டிருப்பதனால் இவனுக்கு என்ன பலன் கிடைக்கும்.இதில் என்னை ஸ்கேன் வேறு செய்து கொண்டிருக்கிறானாம். அவருக்கு சிரிப்பு வந்தது. அனுப்பியவனை கண்டு பிடித்து மிரட்டலாமா என்று யோசித்தவர், சீ இதுக்கெல்லாம் மிரண்டால் அப்புறம் இந்த உலகத்தில் எப்படி வாழ்வது?

துர்காசேட் அந்த நகரில் வள்ளல் என்று பெயர் எடுத்தவர், எந்த காரியமானாலும் அவரிடம் போய் நின்றால் நன்கொடை அள்ளி வீசுவார். இதனால் பொது மக்களிடம் கேட்டால் அவரை ஆஹா,ஓஹோ என பேசுவர். இந்த நகரில அவருக்கு ஏழெட்டு பங்களாக்கள் இருக்கு, நான்கைந்து கடைகளுக்கு சொந்தக்கார்ர் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அதுவெல்லாம் அவருக்கு சொந்தமா?அவர் என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டால் விழிப்பார்கள். போகிற போக்கில் அவன் சொன்னான், இவன் சொன்னான், என்று வதந்தியாகவே துர்காசேட்டின் புகழ் அந்த நகரில் பரவி கிடந்தது.

மறு நாள் எல்லாவற்றையும் மறந்து அவருடைய “மெயிலை” திறந்து பார்த்தவர் அதிர்ந்து போனார், நேற்று வந்த மாதிரியே அதே செய்தி,உடன் ஸ்கேனிங்க்-1 என்று இருந்தது. “அட்டேஜ் பார்க்க” என்று காண்பித்தது. அந்த அட்டேஜ்மெண்டை திறந்து பார்த்தவர் வெல வெலத்து போனார். நேற்று இரவு ஒரு கிளப்பில் அரை குறை ஆடையுடன் ஒரு பெண்ணுடன் ஆபாசமாய் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் இருந்தது.

யாரவன் எதற்காக இதை அனுப்பி உள்ளான். இனி சும்மா இருந்தால் அவன் மீறி விடுவான். உடனே தன் சகா மகாதேவனை போனில் கூப்பிட்டார்.

மகாதேவன் யோசனையுடன் அந்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தவர் “நேத்து

என்னைய கூப்பிடாம போனயில்லை, அதுதான் எவனோ உனக்கு வெடி வச்சிருக்கான், என்று சொல்லி சிரித்தவரிடம். எரிந்து விழுந்தார் துர்காசேட் பீ சிரியஸ் மகா, இது யார் செய்யும் வேலை என்று எனக்கு தெரியணும். நானே இந்த ஊர்ல எல்லா தப்பும் பண்ணிகிட்டு இருக்கறவன். எனக்கே ஒருத்தன் மிரட்டல் விடறான்னா, அவனை உயிரோட விடறதுல இனி அர்த்தமிருக்காது.

“கூல்” “கூல்” என்று மகாதேவன் சொல்லி விட்டு, இன்னைக்கு வீட்டுலயே இரு எங்கேயும் போகாத, என்ன செய்தி வருதுன்னு பார்க்கலாம்.

இதுக்கு பயந்துட்டு எங்கேயும் போகாம இருக்க முடியுமா?

மகாதேவன் சீரியசனார். இங்க பாரு, இது ஒண்ணும் நம்ம கண்ணுக்கு தெரியறவன் செய்யற காரியம் இல்லை, உடனே ஆளுங்களை அனுப்பி சத்தமில்லாம அவனை முடிச்சுட்டு வர சொல்றதுக்கு? நாளைக்கு என்ன அனுப்பறான்னு பார்ப்போம், அப்புறம் எனக்கு தெரிஞ்ச போலீஸ் ஆபிசர் மூலமா இந்த மெயில் மிரட்டல் ஆசாமியை பிடிக்க ஏற்பாடு செய்யலாம் என்ன சொல்றே? இப்ப உன்னை வாட்ச் பண்ணறவன் நீ வீட்டுல இருக்கும்போது உன்னைய எப்படி தொடர முடியும், அதனால சொல்றேன், இன்னைக்கு நீ வீட்டுலயே இருக்கறே.

வேறு வழி இல்லாமல் சரி என தலையாட்டினார் துர்காசேட்.

மறு நாள் பட படப்புடன் மெயிலை திறந்தவர் மீண்டும் அதிர்ந்தார். அதே மிரட்டலுடன்

இன்று எங்கும் செல்லாமல் இருந்து விட்டால் நீ நல்லவனாகி விட்டாய் என்று அர்த்தமா?

அட்டேஜ்மெண்ட் பார் என்றிருந்தது. அவர் வீட்டின் மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த்தை படம் பிடித்து அனுப்பி இருந்தார்கள்

மகா தேவன் சிறிது நேரம் யோசனையானார். உடனே தன் நண்பனும் போலீஸ் அதிகாரியாய் மற்றோர் ஊரில் பணி செய்து கொண்டிருப்பவரை போனில் அழைத்தார்.

உத்தியோக உடுப்புக்கள் எதுவும் இல்லாமல் சாதாரணமாய் வந்திருந்த போலீஸ் அதிகாரி அந்த மெயிலை அனுப்பியவர் முகவரியை பற்றி யாரோ ஒருவரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தார். அரை மணி நேரம் கழித்து அந்த மெயில் அட்ரசை கண்டு பிடிச்சுட்டாங்க, ஆனா அவன் அந்த மெயிலை உபயோகமே படுத்தறதில்லை அப்படீன்னு சொல்றான். அதுக்கு பாஸ்வேர்டு கூட மறந்துடுச்சு அப்படீங்கறான். எதுக்கும் அவனை கண்காணிப்புலயே வைக்க சொல்லி இருக்கேன்.

இரண்டாம் நாள் மகாதேவனிடம் பேசிக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரி “இந்த துர்காசேட்டுடைய கேரக்டர் எப்படி? என்று கேட்டார். மகாதேவன் வியப்புடன் எதுக்காக இந்த கேள்வியை கேக்கறீங்க? இல்லே பப்ளிக்குல எல்லாம் இவருக்கு நல்ல பேர்தான்னாலும், போலீஸ் ரிகார்ட் அப்படி சொல்லலை.நிறைய கேஸ்ல இவர் பேர் இருக்கு, அதுமட்டுமில்லை, பணத்தாலதான் இரண்டு மூணு கேசுல பேர் வெளி வராம பண்ணிட்டாரு, அப்படீன்னு பேச்சு இருக்கு.

உண்மைதான், இவன் என் பால்ய சிநேகிதன், அதுமட்டுமில்லை, நான் அவனோட ஆடிட்டர் கூட. இவன் நிறைய தப்பு பண்ணறான்னு தெரியுது, ஆனா நான் ஒரு ஆடிட்டர் அப்படீங்கற முறையிலதான் அவன் கிட்ட வச்சிருக்கேன். தான் நிறைய தப்பு பண்ணிட்டதா என் கிட்டயே சொல்லி அழுதிருக்கான், நான் இதுல இருந்து வெளிய வர முடியாது, வந்தா என்னை முடிச்சிடுவாங்க அப்படீன்னு சொல்வான். இதுக்கு கடவுள் சரியான தண்டனை எனக்கு கொடுப்பாரு அப்படீன்னு அடிக்கடி சொல்வான். கொஞ்ச நேரந்தான், பழைய மாதிரி தன்னுடைய வேலைய ஆரம்பிச்சிடுவான் ஆனா அவன் என்னைய நம்புறான், அதுனாலதான் இந்த பிரச்சினைக்கு என்னை கூப்பிட்டிருக்கான்.நான் உங்க உதவிய கேட்டுருக்கேன்.

சட்டென பிரகாசமான அதிகாரி சார் அவரோட மெயில் அட்ரசை கொடுங்க, என்று அவசரமாய் வாங்கியவர், தன்னுடைய லேப்-டாப்பை திறந்து அவருடைய மெயிலை, திறந்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், ஒரே ஒரு எங்கொயரி பண்ணிடலாம, என்றவர், முதல் நாள் எந்த கிளப்பிற்கு துர்காசேட் சென்றாரோ அங்கு சென்றவர். அந்த போட்டோவில் பார்த்திருந்த பெண்ணை பற்றி விசாரிக்க, அவள் ஒரு கிளப் ஆட்டக்காரி எனவும், அவள் ஆடும் அன்று துர்காசேட் எங்கிருந்தாலும் வந்து விடுவார் என்று கூறினார்கள்.

அந்த பெண்ணை தன்னுடைய விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தவருக்கு, அவள் சொன்ன செய்தி இந்த முடிச்சை அவிழ்த்தது.

மகாதேவனிடம் போலீஸ் அதிகாரி விடை பெற்ற பொழுது துர்காசேட் மனோதத்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

டாக்டர் இவனே செல்பி எடுத்து அந்த பொண்ணுகிட்ட ஒரு மெயில் அட்ரசையும் கொடுத்து இது மூலமா தினமும் எனக்கு மெயில் அனுப்பு “உன்னைய நான் கண்காணிக்கறேன்” அப்படீன்னு அனுப்பு, அப்பத்தான், நான் இனிமேல் எந்த தவறுக்கும் போகமாட்டேன் அப்படீன்னு சொல்லியிருக்கான்,

ஆனா அந்த மெயிலை பார்த்துட்டு தான் சொல்லித்தான் கொடுத்திருக்காங்க அப்படீங்கறதை மறந்துட்டு புலம்ப ஆரம்பிச்சுடுறான்..

மகாதேவன் டாக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *