ஓர் வாடிக்கையாளனின் சபலம்…!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 25,160 
 
 

ஏனோ..அன்று அதிகாலை மூன்று மணிக்கு விழிப்பு வந்து..எழுந்து..பாத் ரூம் சென்று விட்டு திரும்ப வந்த படுத்த போது.. சரியாக எனது அலைபேசி அழைத்தது.. இரண்டாவது ரிங்கில்லே..எடுத்து.., அழைத்தது யார் என தெரிந்தும்.. “ ஹலோ..” என்றேன்.

நண்பன் தான் அழைத்திருந்தான்..அவன் எனது நண்பன் மட்டுமல்ல…எனது முதலாளியும் அவர் தான். நான் அவர் கம்பெனியில் தான் வேலை செய்கிறேன்.. அவரது கார் டிரைவர்.. பெயர்தான் கார் டிரைவர்..ஏறக்குறைய..அவரின் வலது கை போல் தான் செயல்பட்டுகொண்டிருந்தேன். அவர் வீட்டில் அவர் தம்பிக்கு என்ன சலுகை இருந்ததோ..அது அனைத்தும் எனக்கும் இருந்தது.. அவரின் உடன் பிறவா தம்பி போல் தான் அந்த வீடு என்னை பாவித்தது. எனக்கு பெண் பார்த்து.. திருமணம் செய்து வைத்தது கூட அந்த வீடு தான்.

முதலாளியின் குரலில் பதட்டம் இருந்தது..எப்போதும் நான் காணாதது…அவரின் பதட்டம். பக்கத்தில் இடியே.. விழுந்தாலும்.. ஜஸ்ட் லைக் தட்.. பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன்.

“ சபரி..உடனே கிளம்பி வீட்டுக்கு வா..அப்பாக்கு திடீர் நெஞ்சு வலி..”
அதற்கு மேல்.. ஏதும் பேசாமல் அடுத்த ஏழாவது நிமிடத்தில் முதலாளியின் வீட்டில் இருந்து..கார் செட்டை திறந்து..காரை வெளியே எடுத்து பங்களா வாசல் முன் நிறுத்தியிருந்தேன்.

“ சபரி..யார்ட்டடா..போவோம்..இந்நேரம் எந்த டாக்டர் இருப்பார்..?”
நான் ஏதும் பதில் சொல்லாமல் காரை மட்டும் செலுத்தினேன். நான் யாரிடம் போவது என்று முடிவு செய்து விட்டதாக எண்ணிய முதலாளி அமைதியாக இருந்தார்.

நான் காரை அந்த மருத்துவமனையின் உள்ளே சென்று நிறுத்தி..கதவை திறந்து உள்ளே ஓடி நர்ஸை அழைத்தேன். அட்மிட் பண்ணி டாக்டர் வந்து செக் பண்ணி.., “ உடனே மதுரைக்கு கொண்டுபோங்க..கொஞ்சம் சீரியஸாத்தான் இருக்கு..டயத்துக்கு கொண்டுபோயிட்டீங்கன்னா..காப்பாத்திரலாம்..” என்றார்.

குடும்பத்தினர் அனைவரும் பதறினர். காரில் அவரை அழைத்துச்சென்றால் சௌகரியமாக இராது என எண்ணிய நான்..ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸை வரவைத்தேன். பெரிய முதலாளியை வேனில் ஏற்றி..முதலாளியின் சகோதரியையும்.. அவர் கணவரையும்..கூட அனுப்பினேன்.
எங்கள் அருகில் யாரும் இல்லாத போது.. நான் என் முதலாளியை பெயர் சொல்லித்தான் அழைப்பேன். “ தாமு..நாம கார்ல போயிரலாம்..வீட்ல போயி..தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு உங்க அப்பாவோட தங்கச்சியும் அழைச்சிட்டு போயிடுவோம்..”

“டேய்..நாளைக்கு முக்கியமான ரிஜிஸ்ட்ரேசன் இருக்கு..பணம் வாங்கியாச்சு..”

“அதுல்லாம் காலைல பார்த்துக்குவோம்..கிளம்பு..”

ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வேன் சென்றடைந்த போது..நானும் சென்றடைந்தேன். எங்கள் ஊர் டாக்டர் கொடுத்த லெட்டரை கொடுத்தவுடன்..அட்மிட் செய்து..ஐ.சி.யு. கொண்டுசென்றனர்.
பெரிய டாக்டர் வந்து..பார்த்து.. டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்து.., “ இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள்ள..ஆப்ரேஷன் பண்ணியாகணும்..ஏற்பாடு பண்ணுங்க..” என்று சொல்லி விட்டு படு இயல்பாக தன் ரூம் சென்றார். அந்நேரம் மணி காலை 8:30. என் முதலாளிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செல்லும் அவசரம். பரிதவித்துக்கொண்டிருந்தார். நான் ஹாஸ்பிடலில் விசாரித்து..கால் டாக்ஸியை வரவைத்து..என் முதலாளியை அதில் ஊர் போக சொல்லிவிட்டு.. “நாங்க பார்த்திக்குவோம்..நீங்க உங்க வேலையை பாருங்க..நான் போன் பண்றேன். ” என்றேன். என் முதலாளி தன் பேகில் வைத்திருந்த பணத்தை முழுவதும் என்னிடம் கொடுத்து விட்டு கிளம்பினார்.

நான் அந்த பணத்தை வைத்து.. மேற்கொண்டு ஆப்ரேஷனுக்கு வேண்டிய வேலைகளை செய்;ய ஆரம்பித்தேன். பணம் கட்டிய பிறகு..அந்த ஆஸ்பத்திரியில் வேலை துரிதமாக நடக்க ஆரம்பித்தது. ஒரு வழியாக எல்லாம் நல்ல படியாக முடிந்து..என் பெரிய முதலாளியின் உயிர் காப்பாற்றப்பட்டது. சற்று நிம்மதி ஏற்பட்டது. போனில் என் முதலாளிக்கு தகவல் சொன்னேன். இன்னும் பணம் கொண்டு வர கேட்டேன். அதிகாலையிலிருந்து..பரபரப்பாக இயங்கியதால் சற்று அயர்வு உண்டானது. உடம்பு கச..கச வென இருந்ததால் குளிக்க எண்ணினேன். என்னிடம் எப்போதும் இரண்டு செட் உடைகள் காரில் இருக்கும் என்பதால்..அதை எடுத்து வந்து..ஹாஸ்பிடலில் கீழ் தளத்தில் இருந்த அந்த நர்ஸிடம் கேட்டேன்.

“ மேடம்..நான் இங்க ஒரு பேஷண்டுக்கு துணைக்கு இருக்கேன். இங்கே குளிக்க இடம் இருக்கா..? ”

அந்தபெண் பேஷண்ட் பெயர் கேட்டுவிட்டு.., என் பதிலை கூட எதிர்பார்க்காமல்.., “ மொட்டை மாடிக்கு போங்க..அங்க பாத்ரூம் இருக்கு..” சொல்லிவிட்டு தன்; வேலையை பார்த்தது.

பொதுவாகவே எல்லா ஆஸ்பத்திரிலேயும் இந்த நர்ஸ்ங்க மட்டும் அழகான பெண்ணாப் பார்த்துதான் வேலைக்கு சேர்ப்பாங்க போல.. ஒரு வேளை..வருகின்ற நோயாளிகள் இந்த பெண்களைப் பார்த்து.. சற்று தன் நோய் பற்றிய கவலையை மறப்பார்கள் போலும். ஆனால் எல்லா நர்ஸ்களிடமும் இருக்கும் அந்த தூய தாயுள்ளம் கொண்ட சேவை..,எல்லா நோயாளிகளிடமும் அவர்கள்; காட்டும் அக்கறை..அப்பெண்களின் புறஅழகை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. சில செவிலியர் தன்னை டாக்டர் போல நினைத்துக்கொண்டு..ஓவராக அலட்டிக் கொண்டும்..எவர் என்ன கேட்டாலும் அலட்சியமாக பதில் கூறிக்கொண்டும் திரிவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

மொட்டை மாடியில் மிகப்பெரிய வாட்டர் டேங்கின் கீழே..வரிசையாக மூன்று பாத்ரூமும் கழிவறையும் இருந்தது. நான் குளித்துவிட்டு..வந்து..பேண்ட் பனியனை மாற்றி..சட்டையை அணிவதற்கு முன்..பழைய பேண்டின் டிக்கெட் பாக்கெட்டில் வைத்திருந்த..பணத்தை எடுத்து..எண்ணிக்கொண்டிருந்த போது..,

“ என்ன..குளிச்சாச்சா..? ” என்ற பெண் குரல் கேட்டது.

நான் ரூபாயை எண்ணியவாறே..திரும்பி பார்த்தேன். எனக்கு குளிப்பதற்கு இடம் சொன்ன அந்த நர்ஸ் பெண் தான் நின்றிருந்தது. என் கையிலிருந்த பணத்தை பார்த்ததும் சற்று மிரண்ட கண்ணினால் உற்று பார்த்தது. பின் இயல்பாக அதன் முகம் மகழ்ச்சிக்கு சென்றது. என்னை பார்த்து சிரித்தது.

“ ஆமாம்மா..குளிச்சாச்சு..” என்று சொல்லிவிட்டு..அந்த பெண்ணிற்கு முதுகு காட்டி நின்று கொண்டு .. பணத்தை நான் அணிந்திருந்த பேண்டின் டிக்கெட் பாக்கெட்டில் வைத்தேன். சட்டையை எடுத்து அணிந்து கொண்டு திரும்பினேன். அந்த பெண் கொடியில் காயப்போட்டிருந்ததில் எதையோ தேடுவது போல் பாவ்லா காட்டியது போன்று தெரிந்தது. நான் பழைய துணிகளை பையில் வைத்து கிளம்ப தயாரானேன்.

“ சாப்பிட்டாச்சா..? ” அந்த பெண்தான் கேட்டது. என்னை நோக்கி ஒரு மூன்றடி முன் வந்தது.

“ இல்ல.., இனிமேல்தான்..” என்றேன்.

“ ஆஸ்பத்திரி கேன்டின்ல சாப்பிடாதிங்க..நல்லாயிருக்காது..மெயின் ரோட்ல ஒரு கடை இருக்கு..அங்கே சாப்பிடுங்க.”

“ சரிங்க..நீ சாப்பிட்டியாம்மா..?” கேட்டேன்.

“நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்..இரண்டு மணிக்கு மேல்தான் சாப்பாட்டு டைம்.” என்றது.

“ நான் வர்றேன்மா..” என்று சொல்லி கீழே இறங்கினேன். பின்னாடியே.. அந்த பெண்ணும் இறங்கி வந்தது. எதுக்குடா..இந்த பெண் வேலையை போட்டு விட்டு.., மேலே வந்தது..? என எண்ணியவாறு இறங்கி கொண்டிருந்தேன். நல்ல அழகான பெண் தான். என் வீட்டுக்காரியெல்லாம் இவள் பக்கத்திலே கூட நிற்க முடியாது..நல்ல வனப்பான உடல் அமைப்பு. மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது..சற்று கிறுகிறுக்கத்தான் செய்யும். ரோட்டில் எத்தனையோ அழகான வடிவான பெண்களைப் பார்த்து..ஏங்கும் நான்.. அதில் ஒருத்தியாக இந்த பெண்ணையும் எண்ணிக்கொண்டேன். ஆனால்..அதற்கு..பின்…நான் எது கேட்பதென்றாலும் அந்த ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணிடம் தான் சென்று கேட்பேன். அந்த பெண்ணைத்தவிர..மற்ற பெண்கள் எல்லாம் சற்று இறுமாப்பு கொண்டு அலைவது போல்தான் தெரிந்தது..ஏதேனும் கேள்வி கேட்டால்.. என்னை ஒரு அற்ப பிறவி போல் பார்த்துக்கொண்டு தான் செல்வர்.

ஐ.சி.யு..விலிருந்து..என் முதலாளியை வெளியே கொண்டுவந்து..ஒரு தனி ஏ.சி..ரூம் கொடுத்து மருத்துவம் பார்த்தனர். துட்டுக்கேத்த லட்டு இந்த ஆஸ்பத்திரிகளில். நான் என் பெரிய முதலாளிக்கு தேவையான மருந்து..மற்றும் உணவிற்கு ஏற்பாடு செய்து கொடுத்து கொண்டு..என் முதலாளியின் அத்தைக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்துக்கொண்டு..அந்த ஆஸ்பத்திரியிலேயே கிடையா கிடந்தேன். எப்போதும்போல் தூங்குவது மட்டும் காரிலே தூங்கிகொண்டேன். அவர் மகன் இருந்து..எங்ஙனம் தன் தந்தையை பார்ப்பாரோ..அது போல் பார்த்துக்கொண்டேன். அப்படி பார்த்துக்கொள்வேன் என்று எண்ணி தான் என் முதலாளி என்னை இங்கே விட்டு சென்றிருக்கிறார். முதலாளியின் மனைவிக்கு தன் கைக்குழந்தையை பராமரிக்கும் பணி வேறு இருந்ததால் உடனே சென்று விட்டார்.

அன்று ரூமிற்கு பெரிய டாக்டர் வந்து..முதலாளியை செக் பண்ணிக்கொண்டிருந்தார். அவர் கூட இரண்டு நர்ஸ் வந்திருந்தார்கள்.. அவர்களில் ஒருத்தி..எனக்கு குளிக்க இடம் சொன்ன பெண். நான் உட்பட அந்த ரூமில் ஆறு பேர் இருந்தோம். செக் பண்ணிக்கொண்டிருந்தவர்..அந்த சின்ன டாக்டரிடம் ஏதோ சொன்னார். எனக்கு ஓர் அடி முன் அந்த பெண் நின்று கொண்டிருந்தது.. எதற்கோ சின்ன டாக்டர்.. சற்று தள்ளி வந்த போது. அந்த பெண்ணும் சற்று பின் நகன்றது.. இப்போது எனக்கும் அந்த பெண்ணுக்கும் ஒரு இஞ்ச் இடைவெளி மட்டுமே. ஏறக்குறைய அந்த பெண்ணின் கூந்தல் என் மூக்கில் உரசியது.. பூ வாசனை கிரக்கியது. நான் என்னிலை மறந்து நின்றிருந்தேன். அது எதேச்சையா நடந்ததா..அல்லது நடத்தப்பட்டதா தெரியவில்லை. அந்த பெண் சற்று தள்ளி வந்து.. தன் பின்புறத்தை என் மீது மோத விட்டது. எல்லோர் கவனமும் நோயாளி மீது இருக்க அதை எதிர்கொண்டேன். நான் நகர வில்லை. அந்த ஏ.சி அறையிலும்..என் உடல் சூடேறியது. இரத்தம் ஓட்டமும், இதயத் துடிப்பும் அதிகரித்தது. ஒரு வித மான படபடப்பு.. உண்டானது. கொஞ்சம் போதையும்.. தலைக்கேறியது. அந்த பெண்ணின் உடலில் இருந்து வந்த ஒரு வித வாசனையும்..என்னை அசையாதிருக்க செய்தது. சாட்சாத் திருமணமானவன்தான்.. ஆனால் அந்த அழகான பெண்ணின் ஸ்பரிசம்..என்னை ஆசை கொள்ள செய்தது. எல்லாம் அந்த ஐந்து நிமிடம் மட்டுமே.. அதன் பின் எனக்கு ஏனோ இந்த உலகத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்தது போல் இருந்தது. எல்லோரும் சென்ற பின் கடைசியாக சென்ற அந்த பெண்..எதுவுமே..நடக்காதது போல என்னை பார்த்தும் பார்க்காதது போல் சென்றது. நான் குழம்பி போனேன். அப்போ..இது தற்செயலாக நடந்த ஒன்று தானா..வேண்டுமென்றே..அந்த பெண் உரசவில்லையா.. எந்த பெண்ணாவது இப்படி ஒரு ஆடவனை இடித்துக்கொண்டு நிற்குமா..? நான் என் நிலை திரும்ப சில நிமிடமானது.

அன்று மாலை என் பெரிய முதலாளி சற்று தெம்பாக இருந்ததால்..பெட்டில் இருந்து எழுந்து..காலை நீட்டியவாறு.. தலையணையை முதுகுக்கு பின் முண்டக்கொடுத்து..சாய்ந்து உட்கார்ந்திருந்தார். டி.வி.யில் நகைச்சுவை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தார். அந்நேரம் அந்த பெண் ரூம் வந்தது..“என்ன தாத்தா..உடம்பு இப்ப நல்லாயிருச்சு பார்த்திங்களா..?, இன்னும் இரண்டு நாள்ல வீட்டுக்கு போயிரலாம்..அப்புறம் உங்க இடம் தான்..இன்னும் எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கலாம்.. பண்ணிக்குவீங்க தானே..?, சும்மா.. உடம்பு..துறு..துறு..ன்னு ஆயிரும். ” என்று கேலி செய்தது.

“ வேறு எந்த பெண்ணைம்மா கல்யாணம் செய்றது.. வேணும்னா..உன்னைய கல்யாணம் செஞ்சிக்கிறேன்..வரியா..?! ” என்றார்.

“ பண்ணிக்குவோம் தாத்தா…சொத்தெல்லாம் இன்னும் உங்க பெயர்லதான்ன இருக்கு..? ” என்று சொல்லி சிரித்து விட்டு…ஊசியை போட்டு விட்டு.., “ அப்புறமா நாம தனியா பேசிக்குவோம்..என்ன..? ” என கூறிய பின் என்னை பார்த்து சிரித்தபடியே வெளியே சென்றது.

எப்போதும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விடும் பழக்கம் கொண்டிருந்த நான். அன்றும் அது போல் எழுந்து..வெளியே கடைக்கு சென்று..டீ சாப்பிட்டு விட்டு..ஹாஸ்பிடல் ரிசப்ஷன் ஹாலில் இருந்த..வெளி நோயாளிகள் அமரும் சேரில் அமர்ந்து..டி.வி.யில் செய்தி சேனல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த பெண்தான் ரிசப்ஷன் கவுண்டரில் அமர்ந்திருந்திருந்தது. காலை ஷிப்ட் போலும்.. ஆஸ்பத்திரிக்கு பேப்பர் போடுபவன் வந்து பேப்பரை கொண்டு வந்து போட்டதும்..அதை எடுத்து கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அந்நேரத்திற்கு ஹாலில் யாருமில்லை.
இரண்டு நிமிடத்திற்கு பின்..என் பக்கத்தில் யாரோ அமர்ந்திருந்தது போல் இருக்க..திரும்பி பார்த்தேன். அந்த பெண்தான் இருந்தது.. என்னை இடித்துக்கொண்டு அமர்ந்திருந்தது.

“ என்ன போட்டுருக்கான்..இன்னிக்கு பேப்பர்ல..” என்றவாறு ஏறக்குறைய என் மீது சாய்ந்து கொண்டு.. பேப்பரை பிடித்திருந்த என் கைகளுக்கு மேலே..தன் மார்பு பகுதியை இருத்தி..பார்த்தது.

எனக்கு பேப்பரில் உள்ள எழுத்துக்களெல்லாம் மங்கலாக தெரிந்தது. பேச வாய் வரவில்லை. இதுபோல் எந்த பெண்ணும் என் மனைவி உட்பட..யாரும் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்தது இல்லை. சாய்ந்திருந்த அந்த பெண்ணை விலக்கிவிட மனம் வரவில்லை. மனதில் சபலம் சடுகுடு..ஆடியது. உடம்பு லேசாக நடுங்குவதை மட்டும் உணர்ந்தேன். என்ன மாதிரி பெண் இவள்.. சிறுகுழந்தை போல் நடந்து கொள்கிறாளே.. ஒரு வேளை.. விவரமாக ஏதேனும் செய்கிறாளா..? கேள்விகளும்,ஐயமும் மாறி மாறி..உதயமாகி..குழப்பத்தை உண்டு பண்ணியது. இப்போது அவள் கை என் தொடையின் மீது இருந்தது.. சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவள்.. நெஞ்சை நிமிர்த்தி வைத்துக்கொண்டு..பெருமூச்சு விட்டதை..பார்த்த நான் ஆடிப்போனேன்.. இவையெல்லாம் என் கவனத்தை அவள் உடல் மீது வைக்க..அவள் செய்த காரியமோ..?

“ எனக்கு ஒரு உதவி செய்வீங்களா.. இன்னிக்கு ஷிப்ட்..நாலு மணிக்கு முடியும் போது..உங்க கார்ல.. என்னை கூட்டிப்போய்..எங்க வீட்ல விட்டிருங்களா..?, பளீஸ்.. எனக்கு பஸ் கிடைக்க ஐந்து மணி ஆயிரும்..கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு போகணும்.. என்றாள். சொல்லிவிட்டு என்னை அவள் பார்த்த பார்வையில்..எப்படி அவளுக்கு மறுப்பு சொல்லமுடியும். திடீரென்று..அந்த பெண் எழுந்து விலகி சென்றது. ஆஸ்பத்திரியை தூத்து, துடைக்கும் ஆயா..உள்ளே வந்து கொண்டிருந்தது. என்னை பார்த்தவாறே உள்ளே சென்றது. ரிசப்ஷன் கவுண்டரிலிருந்த அந்த பெண்.. நாலு மணி என்று நான்கு விரலை..காண்பித்து.. “ பக்கத்து பஸ் ஸ்டாப். ” என்று சொல்லிவிட்டு ஒரு நோட்டை எடுத்து..பிரட்டிக்கொண்டிருந்தது. நான் வெளியே சென்றேன்.

பத்து மணியளவில்.. ஆஸ்பத்திரியில் பெரிய முதலாளிக்கு துணைக்கு அமர்ந்திருந்தேன். ரூமை சுத்தம் செய்ய..காலையில் பார்;த்த ஆயா வந்தது. என் முதலாளி உறங்கி கொண்டிருந்தார்.

நான் வெளியே சென்று நின்று கொண்டேன். பத்து நிமிடத்தில் வெளியே வந்த ஆயா..சற்று தள்ளி நின்று கொண்டிருந்த..என் அருகே வந்து.. “ தம்பி டீ குடிக்க காசு இருந்தா கொடுங்க..” கேட்டது.

நான் பையை துழாவி..பத்து ரூபாய் எடுத்து கொடுத்தேன். மிகுந்த சந்தோஷத்தில் வாங்கி கொண்ட ஆயா.., “ தம்பி ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்காதிங்க.. அந்த நர்ஸ் பெண்ணுட்ட பார்த்து பழகுங்க.., எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.. வேறு என்னன்னு சொல்ல..?! ” ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தவாறே இறங்கி கீழே சென்றது.

அப்போ..தவறான நடத்தை கொண்ட பெண்ணாகத்தான் அந்த நர்ஸ் இருப்பாளோ..சில நேரங்களில் அவளின் செயல்பாடு அவ்வாறகத்தானே உள்ளது. ஆனால் ஆள் சூப்பரா இருக்காளே.. இன்று மாலை கல்லெறிந்து பார்ப்போமா..?, சிக்கிச்சின்னா…அனுபவிப்போமே.. எனது சபலத்துக்கு ஒரு வடிகால் வேண்டுமே.. அந்த பெண்ணும் அதற்கு உடன்படுபவள் போலத்தானே தெரிய வருகிறது. எனக்கு திருமணம் எனது முதலாளியே பெண் பார்த்து செய்து வைத்ததால்..என் மனைவி ஒன்றும் அவ்வளவு அழகானவள் இல்லை தான்..என் முதலாளிக்கு தூரத்து சொந்தம் அவள். நான் ரோட்டில் பார்த்து ஏங்கிய பெண்கள் போல் என் மனைவி இல்லாதது எனக்கு ஒரு ஏக்கமாகவே இருந்தது. மனசாட்சியை சற்று தூக்கி ஓரம் வைத்து விட்டு.. நல்ல அழகான அம்சமான பெண் எனும் போது.. சான்ஸ் கிடைத்தால் முருங்கை மரம் ஏறிட வேண்டியது தான். அதற்கான பணமும் என்னிடம் இருக்கும்போது. ரூமில் அந்த பெண் என் மீது சாய்ந்தது..சேரில் பக்கத்தில் அமர்ந்து..பெருமூச்சு விட்டதை நினைத்து பார்த்ததும்.. அந்த பெண் உடல் மீது ஆசை கொண்ட மனம்.. மோகத்தீயை கொழுந்து விட்டு எரிய விட்டது. நான்கு மணியாக காத்திருந்தேன்.

பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அந்த பெண்.. தூரத்தில் நான் காரில் வந்து கொண்டிருந்ததை பார்த்ததும்.. மெதுவாக நடக்க ஆரம்பித்தது.. சற்று தள்ளி சென்று திரும்பி பார்த்தது.. பஸ் ஸ்டாப்புக்கு சற்று தள்ளி இருந்த ஒரு பத்து அடி பாதையில் திரும்பி நடந்தது. திரும்பும் முன் என்னை பார்த்து..விட்டு சென்றது. நான் காரை அந்த பெண்ணை தொடர்ந்து செலுத்தினேன். திருப்பத்தில் திரும்பியதும் பார்த்தேன்..அந்த ரோட்டில் அந்த பெண் தவிர வேறு யாரும் இல்லை. சற்றென்று காரை வேகப்படுத்தி.. அருகே சென்று கதவை திறந்து விட்டேன்.

நொடிப்பொழுதில் காரில் ஏறிய பெண்..என்னை பார்த்து சிரித்து.. “ ம்..அப்புறம்..” என்றது.

“ உன் வீட்டுக்கு எப்படி போணும்..? ”

“ முதல்ல நேரா போயி..லெப்ட் திரும்பி..கொஞ்ச தூரம் போங்க..மெயின் ரோடு வரட்டும்..அப்புறம் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் தெரியும்ல.. அதான் திண்டுக்கல் ரோடு..”

“ ஏய்..நீ அவ்வளவு தூரத்தில இருந்தா இங்க வேலைக்கு வர்ற..”

“ என்ன செய்ய.. பிழைக்கணும்ல..”

“ அது சரி தான்..”

“ கார்ல பிளேயர் இருக்குல்ல..பாட்டு போடுங்க..கேட்டுக்கிட்டே போவோம்..”
பிளேயரை ஆன் செய்த.. இருபது செகண்டில்.. “தீப்பிடிக்க..தீப்பிடிக்க..முத்தம் கொடுடா..” பாடியது.

“ சூப்பர் பாட்டுல்ல.., ஆமாம்..உங்க முதலாளிக்கு எல்லாமே நீங்க தான் போல..எல்லா பணமும் நீங்க தான் வைச்சிருக்கீங்க.. கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்கல்;ல.. எனக்கு ஒரு இரண்டாயிரும் பணம் கொடுக்க முடியுமா..? ஆனால்..நான் சும்மா வாங்க மாட்டேன். ”

நினைத்திருந்தேன்.. இதுபோல் ஏதோ ஒன்று வரும் என்று.., “ சும்மா வாங்க மாட்டேன்னா..என்ன அர்த்தம்..” கேட்டேன். ஏதும் பேச வில்லை அவள்.. கார் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரை நெருங்கியது.. “ உன்னை எங்கே இறக்கி விடணும்..? ”

“ என் வீட்டுக்கு வர்றிங்களா..? ”

“ வந்து..”

“விருப்பம்னா இருந்துட்டு போங்க..” என்றாள். அந்த இருந்துட்டு என்பதை அழுத்தமாகவும்…ஒரு விதமான கிரக்கத்தோடும் தலையை சாய்த்து என்னை பார்ததவாறே சொன்னாள். எனக்கு கை காலெல்லாம் லேசாக நடுங்கியது..இரத்த ஓட்டம் அதிகரித்ததால்..உடம்பு சூடேறி..பரவச நிலைக்கு ஆயுத்தமானது மனது. இந்த பெண்ணினால் எனக்கு இது போல் நடப்பது மூண்றாவது முறை.. கிடைத்திருப்பது அருமையான சந்தர்ப்பம். வீணடிக்க விருப்பம் இல்லை தான். ஆனால்..அவள் வீட்டுக்கு சென்று..ஏதேனும் பிரச்சனை ஆயிருச்சுன்னா..எப்படி சமாளிப்பது..? பெண் சிங்கத்தை அதன் குகையிலா சந்திப்பது.. என்ன வரப்போது..?, அவள் விரும்பிதானே..அவள் வீட்டுக்கு போறோம். நாம் ஏதும் பலவந்தமாக செய்யப்போவதில்லை.

அந்நேரம் திடீரென்று மனதுக்குள் எச்சரிக்கை மணியடித்தது. எதிரில் ஆஸ்பத்திரி ஆயா..ஒரு பிம்பம்மாக நின்று கொண்டு.., ‘ ஜாக்கிரதையா இருங்க..’ என்று அதட்டியது.

“ என்ன..பேசாமலேயே வர்றீங்க.. லெப்ட்ல இருக்கிற அந்த சின்ன பாலத்து வழியா உள்ளே போங்க..” என்றாள்.

“ உன் வீட்ல வேற யார் இருக்கா..? ”

“ நான்..எங்க அம்மா..அப்புறம்..என் அண்ணன்..” என்றாள்

“ அண்ணன்னா..”

“ பயப்படாதிங்க..ஒண்ணும் பிரச்சனையில்லை.. கார இப்படி ஓரமா நிறுத்துங்க..”

“ இல்ல..நான் உன் வீட்டுக்கு வரல்ல.. கிளம்புறேன்..” என்றேன். அவள் முகம் சட்டென்று சுருங்கியது.. வருத்தப்பட்டவள்..

“விருப்பம்மில்லையா..? ”

“ இல்ல வந்து..”

“ சரி..உங்க இடம்..இன்னொரு உதவி செய்யுங்க..நான் ஒரு பத்து நிமிஷத்தில..திரும்பி வந்திர்ரேன்..என்னை நான் சொல்ற இடத்தில இறக்கி விட்டுருங்க..” என்றாள்.

நான் சரி என்பது போல் தலையசைத்தேன். வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன். அவள் இறங்கி அவள் வீடு நோக்கி நடக்க தொடங்கினாள். வண்டியை லாக் செய்து விட்டு அவள் செல்லும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த தெருவில் பாதி தூரம் சென்றவள்..அடுத்த வந்த வலது பக்கத்திருப்பத்தில் திரும்பினாள்.. நான் அதே பாதையில் சற்று விரைவாக நடந்து சென்றேன். திருப்பத்தில் அவளுக்கு தெரியாமல்..நின்று கொண்டு..அவள் செல்லும் வீட்டை பார்த்தேன். திரும்பியும் காருக்கு வந்து..அதே பாதையில் காரை செலுத்தி..அவள் சென்ற திருப்பத்தில் திருப்பி.. காரை ரிவர்ஸ் எடுத்து..மீண்டும் நான் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்து நின்று கொண்டேன். பத்து நிமிடம்..இருபது நிமிடமானது.. இருபது முப்பது நிமிடமானது.. அவள் வரவில்லை.நான் காரை விட்டு இறங்கி அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவள் வீட்டை நெருங்கி.. வீட்டு வாசலை கடந்தேன்.. உள்ளே பார்த்தேன். அவள் ஒரு ஆணுடன்..எனக்கு முதுகு காட்டி நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆள் அவனின் அண்ணனாக இருக்க கூடும்..ஆள் அடியாள் போல் இருந்தான். நான் அதே பாதையில் சென்று..அங்கேயும் இங்கேயும் சுற்றி கார் இருக்கும் இடம் வந்த ஒரு நிமிடத்தில்..அந்த பெண் என் காரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

சற்றும் அலட்டிக்கொள்ளாமல் காரை திறந்து உட்கார்ந்தவள். “ ஸாரி..ரொம்ப லேட்டாயிருச்சு..கிளம்புங்க..” என்றாள். அவள் போட்டிருந்த சென்ட் வாசைன மூக்கை துளைத்து உள்ளே சென்று பரவசத்தை உண்டு பண்ணியது.

மெயின் ரோடு வரும் வரை ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

“ சரி..நீ எங்கே போகணும்னு சொல்லு இறக்கி விட்டுர்றேன்..”

“ நீங்க வீட்டுக்குத்தான் வர மாட்டேன்னிட்டிங்க..ஏதாவது லாட்ஜ் வேணும்னா போலாமா..? ”

நான் சட்டென்று காரின் சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்து..அடடா.. இந்த யோசனை நமக்கு தோணலையே..என நினைத்துக்கொண்டு..சிரித்தவாறே திரும்பி அவளை பார்த்தேன்.

அதிர்ஷடம் எல்லார்க்கும் எப்போதாவது ஒரு முறை தான் வரும்..எனக்கு இப்ப வந்திருக்கு என்ற சினிமா டயலாக்கை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். இதுக்கெல்லாமா கடவுளுக்கு நன்றி சொல்லுவாங்க.. நான் சொல்லிக்கொண்டிருந்தேன். வாழ்க்கையில் ஒரு அழகான பெண்ணை அனுபவிக்கும் வாய்ப்பு. மனம் வேறு ஒரு அழகான பெண் விஷயத்தில் கிரங்கி தவிக்கும் போது..என் வீட்டுக்காரியின் முகம் கூட மறந்து போய் விட்டதே..!

மெயின் ரோட்டில் சிக்னல் விழ..காரை நிறுத்தி விட்டு..அப்போதுதான் ரியர்விய..கண்ணாடியில் பார்த்தேன். அவள் வீட்டில்.. அவளுடன் பேசிக்கொண்டிருந்த..அடியாள் போல் இருந்தவன்.. பைக்கில் இருந்து கொண்டு..என் காரையே பார்த்துக்கொண்டிருந்தான். இருபது செகண்டில் சிக்னல் விழ..நான் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு.. பின்னால் பார்த்தவாறே வந்தேன்.. அவன் அப்பட்டமாக என் காரை பின் தொடர்வது தெரிந்தது.

“ சரி.., இவள லாட்ஜ்க்கு கூட்டிட்டுபோன்னா..என்ன நடக்கும்னு நமக்கே தெரியல..ஆனால் எது வேணும்னாலும் நடக்கலாம். ஒரு வேளை அவளுக்கு தெரிந்து.. எனக்கு தெரியாது என நினைத்து எங்களை பின்தொடர்ந்து வரும் அவள் அண்ணன்..நாங்கள் போகும் இடம் அறிந்து..என்ன பிரச்சனை வேண்டுமானாலும்..செய்யலாம். அதற்கு அவளும் உடன்படலாம். மாட்டிக்கொண்டு முழிக்கப் போவது நானாகத்தான் இருப்பேன். கையில் வேறு நிறைய பணம் இருக்கிறது. ஒரு வேளை சீட்டிங் பண்ணிட்டா. உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணான்னு ஆயிரும். திரும்பவும்..கண்முன் பிம்பம்மாக ஆயா தோன்றி ‘ ஜாக்கிரதையாக இரு..’ என்று எச்சரித்தது. காரை வேகமாக செலுத்தி..அவள் அண்ணனின் கண் பார்வையிலிருந்து மறைந்து..சடாரென்று இடது புறம் திரும்பி..ஒரு குறுகலான பாதையில் காரை நிறுத்தி..

“ நீ இங்க இறங்கி.. எங்கே போனாலும்..போ.., எனக்கு ஒரு அவசர வேலையிருக்கு.. இப்ப தான் ஞாபகம் வந்தது..இறங்கு..” என்றேன்.
அந்த பெண் இறங்காமல் உட்கார்ந்திருந்தது.

“ இறங்குன்னு சொல்றேன்ல..” குரலில் கடுமை காட்டினேன். வேண்டா வெறுப்பாக இறங்கியது. காரை அதே பாதையில் செலுத்தி..திரும்பி பார்க்காமல் சென்றேன்.. மெயின் ரோடு வந்து… செர்மான்ஸ் ஹோட்டலை கடந்து..பழங்காநத்தம் செல்லும் பாதையில் போய் கொண்டிருந்த போதுதான் மீண்டும்.. அவள் அண்ணன் என் காரை பின் தொடர்வதை பார்த்தேன். ‘ அடப்பாவி..உன் தங்கச்சியை நான் எங்கேயும் கூட்டிட்டு போலடா.. உனக்கே தெரியாம இறக்கி விட்டுட்டேன்.. இன்னும் என் பின் வந்து என்ன செய்யப் போற..?’ நினைத்தவாறே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

பொதுவாகவே..நாம் எங்கேயாவது கிளம்பும் போது.. பெரியவங்க..பார்த்துப்போ..என்றும்..யாருடனாவது பழகும் போது..ஜாக்கிரதையா பழகு என்றும் சொல்வதை..பலர் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் பார்த்துப்போ..என்று சொல்வது..அன்று முழுவதும் நம் மனதில் எதிரொலித்துக்கொண்டிருக்கும் போது.. நம் கவனம் பாதையில் முழுமையாக இருக்கும்..அதனால் பல விபத்துக்கள் தவிர்க்கப்படும். கவனத்துடன் செயல்படுவதால் நமக்கு வரும் ஆபத்து நம்மை விட்டு விலகும். நமக்கு வரும் விபத்தை முன் கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை மணி தான் நம் வீட்டு பெரியவர்களிடமிருந்து வெளிப்படும் அந்த வார்த்தைகள். இதை நான் பலமுறை அனுபவப்ப+ர்வமாக உணர்ந்துள்ளேன்.. இம்முறையும்..ஆஸ்பத்திரி ஆயாவுக்கு நான் நன்றி சொல்லிக்கொண்டேன். ஜாக்கிரதையா இரு..என்ற வார்த்தையை நான் உதாசீனம் படுத்தியிருந்தால்.. ஒரு வேளை அவள் வீட்டுக்கு அல்லது லாட்ஜ்க்கு சென்றிருக்கலாம். அவள் அண்ணன் மூலமாக நாங்க கண்காணிக்கப்பட்டு.. பிரச்சனையாகி..என் மானம் கப்பலேறியிருக்கும்..அதுமட்டுமல்ல முதலாளி என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணம் கூட பறிபோயிருக்கும்.

பழங்காநத்தம் ரவுண்டனாவிலிருந்து..இடது புறம் திரும்பி..பெரியார் நோக்கி காரை செலுத்தியவாறு திரும்பி..பார்த்தேன்.. பைக்கில் வந்த அவள் அண்ணன் என் காரை பின் தொடராமல் திருமங்கலம் செல்லும் பாதையில்.. அவன் பைக்கில் செல்லுவதை பார்த்தேன். நான் இடது புறம் செல்கிறேன் என தெரிந்தும் என் காரை தொடராமல்..அவன் ஏன் எதிர் திசையில் செல்கிறான்..ஒரு வேளை அவன் உண்மையிலேயே என் காரை தொடர்ந்து வரவில்லையோ..?!, நான் தான் தவறாக ஏதேனும் நினைத்துக்கொண்டு.. அந்த பெண்ணை அவசரப்பட்டு இறக்கி விட்டு விட்டேனா..ஒன்றும் புரியவில்லை எனக்கு. காரை ஓரமாக நிறுத்தி..அந்த டீக்கடையில் டீ சொல்லிவிட்டு..பணம் கொடுப்பதற்கு பர்ஸை திறந்தேன். பர்ஸிலிருந்த என் மனைவி போட்டோ..என்னை பார்த்து நக்கலாக சிரித்தது போல் இருந்தது. எதற்கோ மனம் வருந்தியது.

மறுநாள் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் வேலைக்கு வரவில்லை. அதற்கு அடுத்த நாள் நான் என் பெரிய முதலாளியை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிப்போகும் தினம்..ஹாஸ்பிடல் ரூமில் நான் என் முதலாளியுடன்.. இருந்த போது வந்தது. எனக்கு ஏனோ அந்த பெண்ணைப் பார்த்ததும் மனதுக்குள் ஒரு பயம் வந்தது. எழுந்து சென்று வெளியே நின்று கொண்டேன். ரூமிலிருந்து வெளியே வந்த பெண் என்னை பார்க்காமலேயே சென்றது. அதற்கு பின் அந்த பெண் என்னை பார்த்து சிரிக்கவும் இல்லை..என்னிடம் பேசவும் இல்லை.

– முதல் பரிசு – 2009 தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி.

Print Friendly, PDF & Email

1 thought on “ஓர் வாடிக்கையாளனின் சபலம்…!

  1. சபலம் மனிதனின் தனிப்பட்ட வெளி படாத எண்ணங்களின் இருள்.

    வெளி சத்துக்கு வந்தால் அசிங்கப படுவது மனிதன் தான் .

    மனிதனின் நேர்மைக்கு அவனின் பயமே காரணம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *