கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 13,401 
 
 

என் கண்கள் அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் படுக்கையின் மேல் நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தேன். ஊரடங்கி நள்ளிரவாகியும் அவள் உள்ளே வரவில்லை. இருள் வேகமாகக் கரைந்து எங்கும் வெளிச்சம் பரவி விடிந்துவிடும்போலத் தோன்றியது. நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முதலிரவு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. நீரோடையின் சலசலப்பைப் போல வெளியிலிருந்து அர்த்தம் புரியாத பேச்சுக் குரல்கள் காதில் விழுந்துகொண்டிருந்தன. அவளுடைய உறவினர்கள் என்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏதாவது காரணங்களைச் சொல்லி அவளைத் தடுத்து நிறுத்தவோ அல்லது முடிந்தவரை காலம் தாழ்த்தவோ முயலலாம். கூடத்துக்குச் சென்று மற்றவர்கள் எதிரில் அவளை அழைக்க எனக்குத் தயக்கமாயிருந்தது. அறைக்கு வரும் முன்புதான் அவளுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டிருந்தேன். அவள் எவ்வளவு நேரமானாலும் நிச்சயமாக வருவாளென்று உள்ளூர நம்பினேன். மூலையில் முக்காலியின் மேல் வெள்ளியாலான தண்ணீர்க் கூஜாவும் பழங்கள் நிரம்பிய தட்டும் வைக்கப்பட்டிருந்தன. கட்டிலில் புதிய படுக்கை விரிப்பு சுருக்கங்களில்லாமல் விரிந்திருந்தது. என் இமைகள் கனத்துக் களைப்புடன் கவிந்தன. அப்போது அவளது வெண்மையான உருவம் தெளிவாக நினைவுக்கு வந்தது. அவள் முகத்துக்கு முன்னால் வந்து விழும் தாமிர வண்ண மயிர்க் கற்றைகள்கூடத் துல்லியமாகத் தெரிந்தன. அவளை உடனே பார்த்துப் பேசும் விருப்பம் மேலிட்டது. உயிர் ததும்பும் அவள் உடலைத் தொட்டுத் தழுவி வெம்மையையும் மென்மையையும் ஒருங்கே உணர வேண்டும். அவளை அணைத்துக்கொண்டு எவ்வித எண்ணங்களுமில்லாத நிம்மதியான உறக்கத்தில் ஆழ வேண்டும். அதையே நினைத்தபடி என்னையறியாமல் தூங்கிவிட்டேன்.

o

என் திருமணம் நடக்கவிருந்த மண்டபத்தை நேற்று அடைந்தபோது யாரையும் காணவில்லை. சமையல்காரர்கள், மேடை அலங்கரிப்பவர்கள், மேளக்காரர்கள் என ஒருவரும் வந்திருக்கவில்லை. என்னை மணக்க விருந்தவளும் அவளுடைய வீட்டாரும்கூட இல்லை. என் விரல்கள் தாமாக மீண்டுமொருமுறை அவளுடைய எண்ணைத் தொடர்புகொள்ள முயன்றன. அவள் கைப் பேசி எங்கள் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த கொஞ்ச நாட்களாக அணைத்துவைக்கப்பட்டிருந்தது. என்னுடன் வாடகைப் பேருந்தில் வந்த உறவினர்கள் சிரித்துப் பேசியபடி மண்டபத்தினுள் நுழைந்தார்கள். பிள்ளைகள் எழுப்பிய விளையாட்டுக் கூச்சல்கள் கூரைகளில் மோதி எதிரொலித்தன. அலுவலக அறைக்குள்ளிருந்த மேலாளரிடம் சென்று பதிவுச்சீட்டைக் காட்டினேன். தங்கும் அறைகளின் தனித்தனியான சாவிகளை அவர் மேசை இழுப்பறையிலிருந்து எடுத்துக்கொடுத்தார். அவற்றை உடனே ஆளுக்கொன்றாக உறவினர்கள் வந்து வாங்கிக்கொண்டு சென்றார்கள். ‘நான் போய் சாமான்களை வச்சுட்டு வர்றேன்’ என்று பெரியப்பாவும் மெல்ல நகர்ந்தார். அவர்தான் இறந்துவிட்ட என் அப்பாவுக்குப் பதிலாகத் திருமணச் சடங்குகளை நடத்திவைக்கப் போகிறவர். நீண்ட காலம் கழித்துச் சந்தித்த உறவினர்களுடன் என்னுடைய அம்மா ஆர்வமாகப் பேசியவாறு அவர்களை அழைத்துச் சென்றாள். அக்காக்கள் முகம் கழுவிக்கொண்டு வருவதாகச் சொல்லிப் பின்தொடர்ந்து போனார்கள். தனித்துவிடப்பட்ட நான் கைப்பேசியில் சமையல்காரரின் எண்ணைத் தேடி அழுத்தினேன். மறுமுனையில் இரண்டுமுறை நீளமாக மணியொலித்தும் பதிலில்லை. நான் மறுபடியும் முயன்றுகொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் வாகனமொன்று தடதடத்தபடி வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து சிறிய துளைகள் நிரம்பிய நீண்ட இரும்புக் கரண்டிகளுடன் சிலர் இறங்கினார்கள். முன்பக்கமிருந்து தோளில் சிவப்புத் துண்டுடன் ஒருவரும் இறங்கினார். நான் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்த சமையல்காரர் அவர்தான். அவசரமாக அவரை நெருங்கி ‘எப்ப சமையல் ஆகும்?’ என்றேன். அவரிடமிருந்து பல நாள் ஊறிய வெங்காய சாம்பார் நெடி வீசியது. ‘அதுக்கென்ன வேகமா செஞ்சுடலாம்’ என்றபடி மண்டபத்துக்குள் நடந்தார். சற்று நேரத்தில் மற்றொரு வாகனம் வந்தது. அதில் வந்தவர்கள் என்னைக் கவனிக்காமல் அவர்கள் பாட்டுக்குப் பட்டியலைச் சரிபார்த்து மளிகைச் சாமான்களை இறக்கி இருப்பு அறைக்குள் கொண்டுபோய் வைத்தார்கள். பட்டத்தின் வாலைப் போன்றிருந்த அந்த நீண்ட பட்டியலை என்னிடம் தந்துவிட்டு மளிகைச் சாமான்காரர்கள் கிளம்பினார்கள். அதை அர்த்தமில்லாமல் கொஞ்ச நேரம் படித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நடுவிலேயே நிறுத்திவிட்டு மேடை அலங்கரிப்பவரைக் கைப்பேசியில் அழைத்தேன். நல்ல காலமாக ‘உடனே வர்றோம்’ என்று பதில் வந்தது. பிறகு என்னை மணக்கவிருந்தவளிடம் பேசுவதற்குச் சிலமுறை முயன்றேன். அவள் கைப்பேசியிலிருந்து ஒலிக்கும் வழக்கமான இனிய மேலைநாட்டு இசைக்கீற்று கேட்கவில்லை. அதற்கான காரணங்களை யோசித்துப் பார்க்கையில் மனம் பேதலித்ததை உணர்ந்தேன்.

உணவுக்கூடத்தின் பெரிய மரக் கதவுகளைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த அலங்கோலமான காட்சி திகைக்கவைத்தது. நீண்ட வரிசையான மேசைகளில் சாப்பிட்ட தட்டுகளும் பிளாஸ்டிக் தம்ளர்களும் இன்னும் எடுக்கப்படாமலிருந்தன. கடைசியாக நடந்த விருந்தில் மாமிச உணவு பரிமாறப்பட்டதுபோலும். சதைத் துணுக்குகள் ஒட்டிய எலும்புத்துண்டுகளும் எண்ணெய் மினுக்கும் சோற்றுப் பருக்கைகளும் இறைந்திருந்தன. அங்கங்கே தண்ணீர் கொட்டி மேசை விரிப்பில் ஈரப்படலம் தெரிந்தது. அந்தக் கூடம் முழுக்க இறைச்சியும் மசாலாவும் கலந்த மணம் சூழ்ந்திருந்தது. அதன் ஆழத்தில் ஏதோ அழுகத் தொடங்கிய நாற்றம் தட்டுப்பட்டது. தட்டுகளையும் தம்ளர்களையும் ஒன்றுவிடாமல் அகற்றி விட்டுத் தரையைக் கழுவித் தள்ளினாலும் காற்றிலுள்ள வாசனை மறைய நீண்ட நேரமாகும். இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகிற பெண் வீட்டார் அதனால் மிகுந்த அருவருப்படையலாம். பதற்றத்துடன் அலுவலக அறைக்குச் சென்றேன். அங்குத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மேலாளர் ‘என்ன?’ என்பதுபோல் பார்த்தார். நான் பொறுமையின்றி ‘சாப்பிடற இடம் இப்படி அசிங்கமாயிருக்கே?’ என்றேன். அவர் ‘அது ஒன்னுமில்ல, கம்பெனிக்காரங்க விருந்து தரக் கட்டாயப்படுத்திக் கேட்டாங்க . . . காலிபண்ண நேரமாயிடுச்சு. இதோ சுத்தம் பண்ற ஆளுங்க வருவாங்க’ என்று மறுபடியும் தொலைபேசியில் பேச்சைத் தொடர்ந்தார். நான் வெளியில் வந்து குழப்பத்தோடு மீண்டும் சாப்பாட்டுக் கூடத்தைப் பார்த்தேன். அது பெரிய போர் நடந்து முடிந்த களம்போல் தாறு மாறாகக் காட்சியளித்தது. சுவரில் பெரும் மின்பொருள் நிறுவனம் ஒன்றின் வண்ணச் சுவரொட்டி தொங்கியது. அந்த நிறுவனம்தான் பொருட்களை விற்கவும் ஆள்பிடிக்கவும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். மாமிச உணவை ருசித்துச் சாப்பிடும்போது மிகுந்த மணமுடன் இருக்கிறது. அதுவே உண்ட பின்னால் ஆறிப்போய் அருவருப்பாக நாற்றமடிக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். ‘இன்னும் சுத்தம் பண்ணாம இருக்காங்களே?’ என்றபடி பெரியப்பா அருகில் வந்தார். தொடர்ச்சியாகப் பீடி இழுப்பதால் அவருடைய கறுத்த உடம்பில் உதடுகள் வெளுத்தும் கன்னங்கள் ஒடுங்கியுமிருந்தன. பீடி பிடிப்பதற்காக அடிக்கடி கூட்டத்தின் நடுவிலிருந்து அவர் திடீரென மறைந்துவிடுவார். இப்போதும் அவர்மேல் காட்டமான வாடை குப்பென்று அடித்தது. அது பழக்கத்தால் என்னைப் பெரிதாக உறுத்தவில்லை. ‘கொஞ்ச நேரத்துல ஆளுங்க வர்றாங்களாம்’ என்றேன். அவர் தட்டுகளை உற்றுப் பார்த்தபடி சமையலறைப் பக்கமாக நடந்தார். தனியாக நிற்கப் பிடிக்காமல் அவர் பின்னால் சென்றேன்.

சமையலறை அடுப்பில் அகன்ற பாத்திரத்தின் நீரிலிருந்து புகைபோல் ஆவி பறந்துகொண்டிருந்தது. மற்றொரு அடுப்பில் தலைமைச் சமையல்காரர் நின்றபடி நீண்ட கரண்டியால் வாணலியில் மாவைக் கிளறிக்கொண்டிருந்தார். கொஞ்சம் தவறினாலும் விரலை வெட்டிக்கொள்வதைப் போல் கூரிய கத்தியால் காய்களை மின்னல் வேகத்தில் இன்னொருவர் அரிந்துகொண்டிருந்தார். மூலையில் வெண்மையாகக் கழுவப்பட்ட அரிசி குன்றுபோல் குவிந்திருந்தது. இந்தச் சமையலை முடிக்க நீண்ட நேரமாகும் என நினைத்தேன். எனக்கு அடிவயிற்றில் பயம் மூண்டது. பெரியப்பா ‘எப்ப சமையல் முடியும்?’ என்றார். ‘உங்க கலியாண வேலைகளைப் பாருங்க, இது தானா ஆயிடும்’ என்றார் சமையல்காரர் அடுப்பிலிருந்து கண்களை எடுக்காமல். இருப்பு அறையில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் பொட்டலங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. எண்ணெய், பருப்பு, மிளகாய், உப்பு போன்ற பொட்டலங்களெல்லாம் இன்னும் பிரிக்கப்படாமலிருந்தன. பெரியப்பா உலர்ந்த திராட்சை இருந்த பையை எடுத்துக் கிழித்து நாலைந்து திராட்சைகளை வாயிலிட்டுச் சப்பினார். தலைமைச் சமையல்காரர் ‘கொஞ்சம் குங்குமப்பூ வேணும். போயி வாங்கியாந்திடுங்க . . .’ என்றார். அது மிகவும் தேவையானதா என்பதில் எனக்குச் சந்தேகமேற்பட்டது. ‘நீ போ, நான் இங்கயிருந்து பாத்துக்கறேன்’ என்று பெரியப்பா கனத்த கட்டிலிலிருந்து ஒரு பீடியை உருவியபடி குத்துக் காலிட்டு உட்கார்ந்தார். நான் வெளிப்பக்கமாக நகர்ந்தேன். இந்தக் குங்குமப்பூ இல்லாவிட்டாலும் சமையலில் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. அதை வெளியில் போய்ச் சுற்றியலைந்து வாங்க முடியாது.

மீண்டும் சாப்பாட்டுக் கூடத்துக்குள் நுழைந்தேன். அங்கு மண்டியிருந்த மாமிச நாற்றம் மறுபடியும் மூச்சுமுட்டவைத்தது. ஒரு பெண் வேலையாள் வந்திருந்து தட்டுகளையும் பிளாஸ்டிக் தம்ளர்களையும் வேகமாக எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் வாயில் புகையிலையை அடக்கியிருந்ததால் உதடுகள் செஞ்சாறு படர்ந்து ஈரத்துடனிருந்தன. மேசை விரிப்புகளின் மேல் அங்கங்குத் தட்டுகளிலிருந்து கொட்டப்பட்ட எலும்புகளும் தோல்களும் சேர்ந்து சிறு குவியல்களாக இருந்தன. ஒரே ஆள் அதையெல்லாம் துப்புரவாக்க நீண்ட நேரம் பிடிக்கும். நானும் அதில் ஈடுபட விரும்பினேன். என்னை யாராவது கவனிக்கிறார்களா எனச் சுற்றிலும் பார்த்துவிட்டுத் தட்டுகளையும் தம்ளர்களையும் எடுக்கத் தொடங்கினேன். அவள் என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுப் பேசாமலிருந்தாள். அவளைப் போல் துரித கதியில் இயங்க முயன்றேன். எண்ணெய்ப் பிசுக்கு படர்ந்த தட்டுகள் வழுக்கின. சில தட்டுகளில் துப்பப்பட்ட தசைகள் நைந்து பஞ்சைப் போல் கிடந்தன. கெட்டியான கால் எலும்புகள் முட்டுகளுடன் வெண்மையாகப் பளபளத்தன. சிலவற்றில் அம்மைத் தழும்புகளைப் போன்ற புள்ளிகளுடனிருந்த சுருண்ட தோல்கள் ஒதுங்கியிருந்தன. கீழே மெல்லிய சோற்றுப் பருக்கைகள் புழுக்களைப் போல் சிதறியிருந்தன. அந்தப் பெண் செய்ததைப் போல் தட்டுகளை ஒரு பிளாஸ்டிக் கூடையில் எடுத்து அடுக்கினேன். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் எஞ்சிய தம்ளர்களை நசுக்கிப் போட்டுக்கொண்டிருந்தேன். பிறகு எலும்புத்துண்டுகளுடனும் சதைத் துணுக்குகளுடனும் கிடந்த மேசை விரிப்பைச் சுருட்டி இன்னொரு கூடையில் போட்டேன். கைகளில் எண்ணெய்ப் பசையும் சோற்றுப் பருக்கைகளும் மசியைப் போல் ஒட்டியிருந்தன. அவை என் உடைகளில் படாதவாறு கைகளைத் தேவையற்ற உறுப்புகளைப் போல் தூரமாக நீட்டி வைத்திருந்தேன். மறுபடியும் குளித்தாலும் என்னிடமிருந்து இந்த வாடை போகாது எனப்பட்டது. என்னை மணக்க விருந்தவள் ஞாபகம் வந்தது. அவளுடைய வாசனை மிகுந்த வெண்மையான உடலில் முகம் புதைத்து இவற்றையெல்லாம் மறக்கத் தோன்றியது.

இப்போது கூடத்தின் மேசைகள் அனைத்தும் காலியான பரப்புகளுடன் காட்சியளித்தன. அந்தப் பெண்மணி என்னைப் பாராட்டுவதைப் போல் புன்னகையுடன் பார்த்தாள். பிறகு வெளியில் சென்று துடைப்பத்துடன் வந்து தரையையும் மேசை நாற்காலிகளையும் லாவகமாக வீசி அழுத்திப் பெருக்கினாள். மூலையில் சோற்றுப் பருக்கைகளும் எலும்புகளும் கருமையாகத் திரண்டன. நான் வெறுமனே அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நடுவில் யாரோ சிலர் எட்டிப்பார்த்துவிட்டு அவசரமாக நகர்ந்தார்கள். அந்தக் கழிவுக் குவியல்களை மற்றொரு கூடையில் அவள் வாரினாள். பின்னர் ஒவ்வொன்றாகக் கூடைகளை இழுத்துக்கொண்டு வெளியில் சென்றாள். கடைசியாகப் பிளாஸ்டிக் குழாய்ச் சுருளை எடுத்துவந்து கை அலம்பும் குழாய் ஒன்றில் மாட்டித் தண்ணீரைக் கீழே பரவச் செய்தாள். மறுபடியும் துடைப்பத்தை எடுத்துத் தரையைக் கழுவித் தள்ள ஆரம்பித்தாள். அந்தக் குழாயை எடுத்து எல்லா இடங்களிலும் நீரை அழுத்திப் பீய்ச்சிக்கொண்டு வந்தேன். அவள் அதே துடைப்பத்தால் மேசை நாற்காலிகளையும் தேய்த்தாள். இறுதியில் அவ்வளவு பெரிய கூடம் ஓரளவு சுத்தமாகத் தோன்றியது. அப்படியும் காற்றில் காரமான மாமிச மணம் பரவியிருந்ததை உணர்ந்தேன். பளபளத்த ஈரத் தரையில் மேசை நாற்காலிகளின் மங்கலான பிம்பங்கள் தலைகீழாகத் தெரிந்தன. அவள் கன்னத்தில் புகையிலைக் கட்டியை ஒதுக்கிக்கொண்டு வாயைத் திறந்தாள். ‘என்ன பிள்ள வீட்டுக்காரங்களா?’ என்றாள். ‘எனக்குதான் கலியாணமே’ என்றேன். அவள் துடைப்பக்கட்டையோடு கையை மோவாயில் வைத்து வியந்தாள்.

அங்கிருந்து பின்படிக்கட்டுகளின் வழியாக மேலேறினேன். ஆளற்ற கல்யாணக் கூடம் பெரும் சன்னல்களின் வழியாக வந்த வெளிச்சம் போதாமல் அரையிருட்டில் விரிந்திருந்தது. காலியான நாற்காலிகள் கலைந்து தாறுமாறாகக் கிடந்தன. மேடையை இருவர் அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். வண்ணத் தாள்களும் பூக்களும் ஒட்டிய தட்டிகளை எடுத்து இருபக்கங்களிலும் கட்டினார்கள். மேடையிலேறி அவர்களிடம் ‘ஏன் இவ்வளவு நேரம்?’ என்றேன். பற்களில் இடுக்கியிருந்த குண்டூசியை எடுக்காமல் ‘பொண்ணு வர்றதுக்குள்ள எல்லாம் முடிச்சுடுவோம்’ என்று ஒருவர் சொன்னார். பின்புறம் வான் வெளியைப் போல் தொங்கவிருந்த நீலத்திரை கீழே மடிந்திருந்தது. பக்கத்தில் கூடைகளில் பூச்சரங்கள் சுருண்டிருந்தன. அங்கிருந்து கீழே பார்ப்பது நடக்கப்போகிற என் திருமணத்துக்கான ஒத்திகையைப் போலிருந்தது. சில மணி நேரம் கழித்து எதிரில் ஆட்கள் குழுமியிருப்பார்கள். மணமகள் வரவேற்பும் பிறகு திருமணமும் முன்கூட்டித் தீர் மானிக்கப்பட்டவைபோல் நிறை வேறப்போகின்றன. அக்காவும் அம்மாவும் கை நிறையப் பொருட்களுடன் பரபரப்பாக மேலேறி வந்தார்கள். அக்கா என்னைப் பார்த்ததும் ‘நீ போயி தயாராகு’ என்றாள். அம்மாவின் முகம் வேர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. அவள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அக்காவிடம் அவள் தாம்பாளத்தைப் பற்றி அவசரத்துடன் விசாரித்துக் கொண்டிருந்தாள். படிகளிலிறங்கி நாற்காலிக் கூட்டத்தின் இடைவெளி வழியாக நடந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்ச்சி நடக்கவிருந்தது. இனிமேல் அது தானாக நடந்தேறிவிடும். அதை மீண்டும் என்னால் மாற்றியமைக்க முடியாது.

மணமகனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறை உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. கதவை லேசாகத் தட்டினேன். ‘துணி மாத்திட்டிருக்காங்க இருங்க’ என்று ஒன்றுவிட்ட மாமியின் மகளுடைய குரல் வந்தது. மூடிய கதவைப் பார்த்தவாறு அமைதியாகக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் கதவைத் திறந்து ‘ஓ, நீங்களா?’ என்றபடி புன்னகையுடன் மேலும் அகலத் திறந்தாள். அவளை எனக்குக் கல்யாணம் செய்து வைக்கப்போவதாக முன்பு பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. அதற்குள்ளாக நான் வேறொருத்தியைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். இன்னும்கூட அவளுக்குத் திருமணமாகவில்லை. அம்மா சொன்னவாறு அவளை நான் ஏற்றுக்கொண்டிருந்தால் இந்தச் சூழல் முழுவதும் வேறாக இருந்திருக்கும். உள்ளே அக்காவின் உறவுக்காரப் பெண்மணி சுவர்ப்புறமாகத் திரும்பிப் புடவையின் மடிப்புகளை இழுத்துவிட்டுக்கொண்டிருந்தாள். அறைக்குள் கனத்த பவுடர் நெடி மிதந்தது. படுக்கையிலும் மேசையிலும் பெட்டிகளும் பூக்களும் துணிமணிகளும் இறைந்திருந்தன. மூலையில் கழிவறையுடன் இணைந் திருந்த குளியலறைக்குள் புகுந்தேன். கீழே ஈரத் தரையில் மண்ணும் சல்லி வேர்களைப் போல் நீண்ட மயிரிழைகளும் படிந்திருந்தன. ஒரு வாளி நீரைப் பிடித்துச் சுற்றிலும் ஊற்றிவிட்டுச் சிறுநீர் கழித்தேன். முகத்தையும் கைகால்களையும் பலமுறை தேய்த்துக் கழுவிக்கொண்டு வெளியில் வந்தேன். ‘நேரமாகுதே, பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப வருவாங்க?’ என்று பெரியம்மா கேட்டாள். ‘இன்னும் கொஞ்ச நேரத்துல வரலாம்’ என்றேன் பொதுவாக. கட்டிலுக்கடியிலிருந்த என் புதிய பெட்டியைத் தேடித் திறந்தேன். பெண் வீட்டார் தந்திருந்த பகட்டான நீள அங்கியை எடுத்து ஓரமாக ஒதுங்கி உடுத்திக்கொண்டேன். அறையிலிருந்த பெண்கள் என்னை வினோதமாகப் பார்த்ததை உணர்ந்தேன். என்னுடன் திருமணம் செய்வதற்காகப் பேசப்பட்ட பெண் மாறாத புன்னைகையுடன் நின்றிருந்தாள். பவுடரைப் பூசிக்கொண்டு அவசரமாக வெளியேறினேன்.

முன்புற வழியாக மண்டபத்தின் நுழைவாயிலை அடைந்தேன். பிள்ளைகள் ஓடிப்பிடித்து உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இங்கு ஒளிந்துகொள்ள நிறைய ரகசிய இடங்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது உறவினர்கள் வருகை தந்துகொண்டிருந்தார்கள். சிலர் என்னை நீண்ட காலம் கழித்துச் சந்தித்ததால் மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தார்கள். ஒருவர் ‘பொண்ணு வந்தாச்சா?’ என்று கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்றார். நான் கைப்பேசியை எடுத்துப் பார்த்தபடி வெளியில் வந்தேன். இருபக்கமும் சாலை நீண்டிருந்தது. பெரியப்பா என்னருகில் வந்து ‘இன்னும் பொண்ணு வீட்டு ஆளுங்களைக் காணலையே?’ என்றார். நான் பதிலளிக்காமல் கடிகாரத்தைப் பார்த்தேன். தூரத்து நகரத்தில் வசிக்கும் உறவினர்கள் குடும்பமாகக் கைகளில் பைகளுடன் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை வரவேற்றவாறு மேலே கூடத்துக்குத் திரும்பினேன். அது இப்போது விளக்குகளின் வெளிச்சத்தால் மிகவும் பிரகாசமாயிருந்தது. அங்கங்கே சிறு குழுக்களாக ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். எங்கும் பேச்சுக் குரல்கள் கலவையாக எதிரொலித்துக்கொண்டிருந்தன. பலரிடமும் சென்று வணங்கிக் கைகுலுக்கினேன். இசைக் குழுவினர் உள்ளே வந்து கல்யாண மேடைக்குப் பக்கத்து மேடையில் இசைக் கருவிகளைப் பரப்பினார்கள். பெரிய டிரங்குப் பெட்டிகளைப் போன்றிருந்த ஒலி பெருக்கிகளைப் பார்வையாளர்களை நோக்கி வைத்தார்கள். ஒலி வாங்கியைத் தட்டிப் பரிசோதித்தார்கள். அது ஒரு தரம் பிசகாகத் திடீரென்று யானையைப் போல் ‘பாங்’ எனப் பிளிறியது. எனக்குப் பயத்தால் உடல் அதிர்ந்து அடங்கியது. அப்போதுதான் வந்திருந்த அக்காவின் கணவர் ‘என்னப்பா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப தான் வருவாங்க?’ என்றார். மேடையிலிருந்து மிகவும் சத்தத்துடன் ஒரு சினிமாப் பாடல் வேறெதையும் கேட்கவொட்டாமல் ஒலிக்க ஆரம்பித்தது. அவருக்கு ‘வருவாங்க’ என்று சைகைகாட்டிவிட்டு நகர்ந்தேன்.

நான் படிக்கட்டில் நின்று கைப்பேசியின் பெயர்ப்பட்டியலைத் துழாவிக்கொண்டிருக்கையில் பெண் வீட்டார் வந்துவிட்டதாகப் பெரியப்பா வந்து சொன்னார். அவசரமாக வெளிவாயிலுக்கு விரைந்தேன். மண்டபத்தின் எதிரிலிருந்த கோயிலெதிரில் சில கார்களும் ஒரு பேருந்தும் நின்றிருந்தன. அருகில் பட்டாடைகளும் நகைகளும் பளபளக்கப் பெண் வீட்டார் நின்றிருந்தார்கள். பெண்ணின் அப்பாவைக் கண்டு வணங்கினேன். என் கண்கள் கல்யாணப் பெண்ணைத் தேடின. அவள் கோயிலுக்குள் ஒரு நாற்காலியில் முழு அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள். என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் அவள் நான் வந்ததை அறிந்திருந்தாள் என்பதை எப்படியோ உணர்ந்தேன். எனக்கு அவளுடன் தனித்துப் பேச வேண்டும்போலிருந்தது. நான் மீண்டும் அவளைப் பார்த்தேன். பின்னால் வந்திருந்த மாமா தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘ரொம்ப நேரமாயிட்டதால இந்தக் கல்யாணம் நடக்குமான்னு எல்லாரும் சந்தேகப்பட்டாங்க’ என்றார் சிரித்தபடி. ஆனால் பெண்ணின் அப்பாவும் மற்ற உறவினர்களும் சிரிக்கவில்லை. பெண்ணின் அப்பா கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் ‘சரியாத்தான் வந்திருக்கோம்’ என்றார். மணப்பெண் ஒரு கணம் என்னைத் திடீரெனத் திரும்பிப் பார்த்தாள். என்மேல் தீப்பட்டதைப் போல் தோன்றியது. எனக்கும் மாமாவுக்கும் தொடர்பில்லை என்பதுபோல் அவரிடமிருந்து விலகி நின்றேன். மேளதாளங்களுடன் தட்டுவரிசைகளையேந்தி அக்காக்களும் பெரியப்பாவும் பிற உறவினர்கள் சூழ வந்துகொண்டிருந்தார்கள். கோயிலில் சடங்குகள் முடிந்ததும் நானும் மணமகளும் கழுத்தில் மாலைகளுடன் ஊர்வலமாக மேடைக்குச் சென்றோம். எங்களுடைய அசைவுகளை ஒன்று விடாமல் புகைப்படக் கருவிகள் தொடர்ந்து பதிவுசெய்துகொண்டிருந்தன. அனைவர் கண்களும் கவனித்துக்கொண்டிருந்ததைப் போன்ற உணர்வு உடலெங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

இசைக்குழுவின் சத்தத்தால் கல்யாணக் கூடமே பெரிய வாத்தியக் கருவிபோல் அதிர்ந்துகொண்டிருந்தது. தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் தொடர்ந்து கையைப் பற்றிக் குலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குரல்களும் என் காதில் அரைகுறையாகத்தான் விழுந்தன. வீடியோ, புகைப்படக் கருவிகளின் வெளிச்சம் கண்களைக் கூசவைத்தன. எல்லாம் ஓய்ந்ததும் நானும் அவளும் அரசர்கள் காலத்து அரியணைகளைப் போன்றிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தோம். நான் அவளை உற்று நோக்கினேன். அவளும் என்னை ஏறெடுத்துப் பார்த்தாள். அப்போது அவள் முன்பின் அறிமுகமற்ற புதியவளாகக் காட்சியளித்தாள். அவள் கண்களிலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முதல் கேள்வியாக ‘உன் செல்போன் என்னாச்சு?’ என்றேன்.

‘என் வீட்டுல பிடுங்கிவைச்சுட்டாங்க . . .’ என்றாள் மீண்டும் தலைகுனிந்தபடி.

‘எவ்வளவுதரம் உன்கிட்ட பேச முயற்சி பண்ணினேன் தெரியுமா?’ என்றேன்.

‘நான் என்ன செய்ய முடியும்?’ என்றாள் அவள்.

ஒரு பழைய திரைப்படப் பாடலை இசைக்குழுவின் பெண் குரல் உருக்கத்தோடு பாடியது. ‘ஏம்மா போய்ச் சாப்பிடலாம்மா’ என்று அவளுடைய உறவினர் யாரோ அழைத்தார்கள். ‘சரி, வா போகலாம்’ என்றவாறு நானும் மாலையைக் கழற்றிவைத்துவிட்டு அவளுடன் நடந்தேன்.

சாப்பிட்டு முடித்துத் தனியாக அறைக்கு வந்ததும் அணிந்திருந்த ஆடையை முதலில் களைந்தேன். கழிவறைக்குப் போய்விட்டுக் கட்டிலில் விழுந்தேன். விளக்குகளை அணைத்த பின்பும் உறக்கம் வராமல் தரையில் உருண்டுகொண்டிருந்த பெண்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘இந்த இடம் வேணாம்னு முதல்லே சொன்னேன், இவங்க மேல் சாதிக்காரங்க, அதுவும் பணக்காரங்க . . .’ என்றது அம்மாவின் குரல்.

‘பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப ஆணவம் பிடிச்சவங்களா இருக்கறாங்க’ என்றாள் அம்மா மீண்டும்.

‘மெதுவாப் பேசும்மா, அவங்க காதுல விழப்போகுது’ என்றேன்.

‘ஆமாம்மா, அவங்க சரியாகூடச் சாப்பிடலை’ என்று மூலையிலிருந்து அக்கா பேசினாள்.

‘நம்ம கௌரவத்துக்குக் கல்யாணம் பண்ணவாவது ஒத்துகிட்டாங்களே?’ என்று அம்மாவின் குரல் கம்மியது.

‘அதான் எல்லாம் முடிஞ்சுப் போச்சே, இப்ப என்ன பண்றது?’ என்றாள் பெரியம்மா சமாதானக் குரலில்.

நான் குரல்களற்ற பக்கமாகத் திரும்பிப் படுத்தேன். எதையும் பேச விரும்பாமல் கண்களை மூடினேன். நான் மணந்துகொள்ளவிருந்தவளுடன் ஒன்றாக வெளியூரில் வேலை செய்தபோது ஒருமுறை கடற்கரை விடுதிக்குப் போனது ஞாபகம் வந்தது. அவளுடன் சேர நீண்ட நாள் ஆசையால் கெஞ்சினேன். அவள் ‘அது வேணாம்’ என்று பிடிவாதமாக மறுத்தாள். பிறகு அவளுடைய ஆடைகளைக் களைந்து பாலேடு போன்ற சருமத்தை வருடிக்கொண்டிருந்தேன். உள்ளே மறைந்திருந்த உறுப்புகள் மிகவும் வெண்மையுடன் வெளிப்பட்டதைக் கொஞ்சமும் நம்ப இயலவில்லை. நெடுநாட்களாகத் தெரியாதிருந்த பெரும் ரகசியமொன்றை அறிந்தவன் போலானேன். மறுநாள் அவளிடம் தயங்கியவாறு ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று கேட்டேன். ‘என் வீட்டுல ஒத்துகிட்டா செய்துக்கிறேன்’ என்றாள் மிகச் சாதாரணமாக.

இருள் விலகுவதற்கு முன்பாக அதிகாலையில் யாராலோ எழுப்பப்பட்டேன். விளக்கு வெளிச்சம்பட்டுக் கண்கள் நெருப்பாக எரிந்தன. ‘முகூர்த்தத்துக்கு நேரமாவுது போய்க் குளிச்சுட்டு வா’ என்றாள் பெரியம்மா. அம்மாவும் மற்ற பெண்களும் தலைசீவிக்கொண்டிருந்தார்கள். மூலையில் மாமி பட்டுப் புடவையை உடுத்தி நீவிக்கொண்டிருந்தாள். அவளுடைய பெண் கண்ணாடியைப் பார்த்துக் கவனமாகப் பொட்டு வைத்துக்கொண்டிருந்தாள். அந்தக் கண்ணாடியின் வழியாகவே என்னை நோக்கிச் சிரித்தாள். நானும் பிரதிபிம்பத்தைப் பார்த்துப் பதிலுக்குப் அரைகுறையாகப் புன்னகைத்துவிட்டுக் கண்களைக் கசக்கியபடி சாத்தியிருந்த கழிவறையைத் திறந்து நுழைந்தேன். அங்கிருந்த சிறுநீரும் மலமும் கலந்த நெடி அப்போதுதான் தூங்கியெழுந்த புத்துணர்ச்சியுடனிருந்த என்னைப் பலமாக அறைந்தது. கீழே கழற்றிப் போட்டிருந்த வாடிய மல்லிகைச்சரம் பாம்பைப் போல் மெத்தென்று காலில்படவும் பயந்து உதறினேன். உள்ளேயிருந்த விளக்கின் சுவிட்சைத் தேடிப் போட்டேன். மலம் கழிக்கும் பேசினில் நீர் ஊற்றப்படாமல் மலம் நுரைத்துப் பொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு திகைப்படைந்தேன். பலரும் மலங்கழித்துப் பேசின் கழுத்துவரை நிறைந்திருந்தது. கீழே கால் வைத்து நடக்க முடியாமல் தரையில் களிமண் கட்டிகளாகச் சிதறியிருந்தது. அங்கங்கே பக்கச் சுவர்களில் தெறித்து மஞ்சளாக உறைந்திருந்தது. பேசினின் திறந்திருந்த மூடியிலும் அட்டையாக ஒட்டியிருந்தது. அப்போதுதான் கழித்த ஈரப் பளபளப்புடன் செவ்வரிகளோடியிருந்தது. உடனடியாக அறையிலிருந்தவர்களைத் திட்டும் வார்த்தைகள் விஷம்போல் உருவாயின. இந்த நாற்றம் வெளியில் எப்படி எட்டாமல்போனது என்றும் தெரியவில்லை. பிறகு கோபத்தை அடக்கியவாறு அமைதியாக நின்றேன். என்னுடைய அம்மாவும் உறவினர்களும் பழக்கமின்மையால் செய்திருக்கலாம். அல்லது கல்யாணத்துக்குத் தயாராகும் அவசரமாகவும் இருக்கலாம். இன்னும் விடியாத இருட்டும் காரணமாகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லையெனக் கருதியிருக்கலாம். சற்று நேரம் கண்களை அழுத்தி மூடியிருந்தேன். சுற்றிலும் சூழ்ந்திருந்த நாற்றம் கலந்த காற்றைச் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி மயக்கம் வரும்போலிருந்தது. என் உடல் கட்டுப்பாடில்லாமல் அதிர்ந்துகொண்டிருந்தது. காலியான அடி வயிற்றிலிருந்து குடல் சுருண்டு மேலேறி வாந்தியாக வெளிப்பட்டுவிடும் எனப் பயந்தேன். என்னையறியாமல் வாயிலிருந்து கசந்த எச்சில் ஊறிக் கண்ணாடிக் குழாயைப் போல் வழிந்தது. கண்களிலிருந்து நீர் பீறிட்டுத் தாரையாக ஒழுகியது. இந்த நாற்றம் வாழ்க்கை முழுவதற்கும் ஞாபகம் கொள்ளப் போதுமானதாயிருக்கும் என்று பட்டது. என்னையே நினைத்து அருவருத்தவாறு சுவரைப் பிடித்தபடி நின்றிருந்தேன். அந்த இடத்தைச் சுத்தப்படுத்தாமல் என்னால் குளிக்க முடியாது. இந்தக் காரணத்துக்காகத் திருமணத்தைக்கூட நிறுத்திவிடலாம் என்கிற எண்ணம் ஒரு கணம் வந்து சென்றது.

நான் பின் வாங்குவதில்லை என்ற தீர்மானத்துடன் கதவை உட்புறமாக மூடித் தாழிட்டேன். மூச்சை இழுத்து அடக்கிக்கொண்டு நகர்ந்து தண்ணீர்க் குழாயைத் திறந்தேன். என் கால் விரல் இடைவெளிகளில் மலம் அழுந்திச் சேற்றைப் போல் பிதுங்கியது. கீழே உருண்டுகிடந்த சிறு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து வாளியில் கொட்டிய நீரை அள்ளிப் பேசினிலும் தரையிலும் வீசினேன். அதையே கொஞ்ச நேரம் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன். அருவருப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. மலம் என்பது எல்லாருடைய உடலிலிருக்கும் கழிவுதான். என்னால் இப்போது மலத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியும். எவ்வித எண்ணமுமின்றி அதைக் கழுவவும் இயலும். நான் நாற்றத்தை நுகராத வெறுமை நிலையை அடைந்தேன். எல்லா இடங்களிலுமிருந்த மலத்தை உற்றுக் கவனித்தேன். அவற்றில் நீர் பரவி ஊறியிருந்தது. மூலையில் சாய்ந்துகிடந்த பிளாஸ்டிக் துடைப் பானை எடுத்தேன். அதன் பிடியில் அப்பியிருந்த மலம் கையில் பசையைப் போல் ஒட்டியது. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. முதலில் சுற்றியிருந்த சுவர்களின் மீது நீரை இறைத்துத் தேய்த்தேன். அவற்றிலிருந்த மலமும் கறைகளும் அழுக்கும் குழியில் கரைந்தோடின. பிறகு பேசினின் குழாயைத் திறக்க முயன்றேன். அது உட்புறமாக உடைந்து சத்தமிட்டதால் நீர் வெளியில் வரவில்லை. பேசினில் நீரைக் கொட்டித் துடைப்பானால் சுழற்றினேன். உள்ளே அடைத்திருந்த மலம் கடகடவென்ற ஓசையுடன் சுழித்திறங்கிச் சென்றது. சுற்றி ஒட்டியிருந்த மஞ்சள் படிவத்தை மேலும் கீழுமாக அழுத்தித் தேய்த்தேன். பீங்கானின் வெண்மை லேசாகத் துலங்கித் தெரிந்தது. அதன் மேலிருந்த நாட்பட்ட மலத்தின் கறுத்த கறைகள் மட்டும் மாறாமலிருந்தன. நான் மிகுந்த திருப்தியை அடைந்தேன். உள்ளூரப் பெரும் சகிப்புத்தன்மையைக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். என் உள்ளமும் துடைக்கப்பட்டுச் சுத்தமாகிவிட்டது. மணமகளின் ஞாபகம் உடனடியாக வந்தது. இவையெல்லாம் என்னவென்று அறியாத தூரத்தில் அவளிருந்தாள். அவளுடைய நளினமான கையை என் அசுத்தமான கையால் பற்றிக்கொள்ள வேண்டுமெனத் தோன்றியது. அப்போது இந்த அழுக்கானது மிகவும் தெளிவாகத் தெரியவரும். ‘சும்மா தண்ணியை ஊத்திட்டிருக்காம வெளியில வா’ என்று பெரியம்மாவின் குரல் கேட்டது. அரைகுறையாகக் குளித்து முடித்து வெளியில் வந்தேன்.

முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அவசரமாக உடையணிந்து மணமேடைக்குச் சென்றேன். அங்கு எல்லோரும் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். கீழே கூட்டத்தில் என் சொந்தக்காரர்களின் முகங்கள் மட்டும் மிகவும் தனித்துத் தெரிந்தன. மேடைமேல் பெரும்பாலும் பெண்ணின் உறவினர்கள் தான் கூடியிருந்தார்கள். அவர்கள் என் மேல் சட்டையைச் சம்பிரதாயப் படி கழற்றச் சொன்னார்கள். நான் கொஞ்சம் முரண்டு பிடித்த பிறகு அவிழ்த்தேன். பெண் வீட்டார் முறையில் பலவிதமான சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்தேறின. தடு மாறிக்கொண்டிருந்த புரோகிதருக்கு அவர்கள் ஆசிரியர்களைப் போல ஒன்றாகச் சேர்ந்து அவற்றைச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் பலமுறை சடங்குகளைத் தவறாகச் செய்ததால் திரும்பவும் சரியாக வரும்வரை செய்ய வற்புறுத்தப்பட்டேன். அது எனக்கு முதலில் வேடிக்கையாகவும் பிறகு சற்று அவமானமாகவுமிருந்தது. அருகில் மணமகள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். நான் அவளிடம் பேச விரும்பினேன். இந்தத் திருமணம் நடப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். உணவுக் கூடத்தையும் கழிவறையையும் நாற்றத்தைச் சகித்துக்கொண்டு தூய்மைப்படுத்தியதை எப்படியாவது சொல்லிவிட விரும்பினேன். நான் மேலானவன் என்பதை அவளுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் காட்ட வேண்டும். மற்றவர்களுக்காகத் துன்பமேற்கும் குணம் எனக்குள் பொதிந்திருக்கிறது. ஆனால் எப்போதும் எங்களருகில் காவலுக்கிருப்பதைப் போல் யாராவது இருந்துகொண்டிருந்தார்கள். சுற்றிலும் குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. புகைப்படக் கருவிகளின் கண்கள் விரிந்து விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. எங்களுக்குள் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ள முடியவில்லை. கடைசியில் கெட்டிமேளம் முழங்க மௌனமாக அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டினேன்.

o

அவளுடைய பாரம்பரிய வீட்டின் அறைக்குள் எவ்வளவு நேரம் தூங்கியிருந்தேன் எனத் தெரியவில்லை. ஆனால் மிகச் சரியாக அவள் உள்ளே நுழைந்து கதவைத் தாழிடு கையில் விழித்துக்கொண்டேன். நிலைவாசப்படி முன்னால் அவள் முழு அலங்காரத்துடன் பெரும் சுடராக ஒளிர்ந்தாள். இரவு நெடுநேரமாகியிருக்கலாம். என் உறக்கம் முற்றிலுமாகக் கலைந்துவிட்டது. அதுவரை நடந்தவையெல்லாம் கெட்ட கனவுகளாக மறைந்து புதிய வாழ்க்கை தொடங்கப்போகிறது. நான் எழுந்து சென்று அவளை அணைத்துக்கொண்டேன். ‘நமக்குக் கல்யாணமாகிட்டதை நம்ப முடியலை’ என்று அவள் காதில் கிசுகிசுத்தேன். அவள் பதிலுக்குப் புன்னகைத்தாள். அவளைத் தழுவியவாறு நடத்திச் சென்று கட்டிலில் படுக்கவைத்தேன். ‘விளக்கு எரிஞ்சிட்டிருக்கு . . .’ என்று அவள் செங்குழம்பு பூசிய விரலை நீட்டிச் சொன்னதை நான் பொருட்படுத்தவில்லை. அவள் மேலிருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைந்தெடுத்தேன். உள்ளே வெண்மையான உடல் வெளிச்சத்தில் பளிங்குபோல் பளபளத்தது. நீண்ட கைகால்கள் சந்தன மரத்தால் கடைந்தெடுக்கப்பட்டவை போலிருந்தன. குளத்திலிருக்கும் மலர்களின் அடிப்பகுதியைப் போல் மார்பகங்கள் மேலும் வெளுத்திருந்தன. அடி வயிறு குழைந்து அதில் மென்மையான முடிகள் பசிய புற்களைப் போல் படர்ந்திருந்தன. இந்த நிறம் மூதாதையர்களின் வழியாகப் பரம்பரையாகத் தொடர்ந்து வருவது போலும். அதை அனுபவிக்கும் தாபத்துடன் அவளுக்குள் புதைந்தேன். என்னுடல் அவள் மேல் முழுமையாகக் கவிந்தது. என் அங்கங்களெல்லாம் அவளுடைய உறுப்புகள் ஒவ்வொன்றுடனும் சீராகப் படிந்தன. அவளுடைய பிறப்புடன் இயற்கையாயிருந்ததைப் போன்ற அபூர்வமான மணம் மேலெழுந்து கமழ்ந்தது. அதை ஆழமாகச் சுவாசித்து நெஞ்சில் நிறைத்தபடி மிகவும் வேகமாக உச்சமடைந்து கொண்டிருந்தேன். அவளும் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள் என்றுதான் எண்ணினேன். கீழிருந்த அவளுடைய கருவிழிகள் மேலே செருகிப் பாதி மூடிய கண்கள் பிறைநிலவுகளைப் போலிருந்தன. அவை இறந்தவர்களின் முழுதாக மூடப்படாத கண்களைப் போலும் காணப்பட்டன. அவளின் முகம் திடீரெனச் சலனமடைந்து சுருங்கியது. துர்நாற்றத்தைச் சுவாசிக்க நேர்ந்ததுபோல் நாசி சுளித்தது. அவள் ஒவ்வாமையுடன் பிரிந்து விலகிச் சென்றதைப் போல் தோன்றியது. என் உடலின் பகுதிகள் பிடிப்பின்றித் தளர்ந்தன. நான் வானில் பறந்து சென்றுகொண்டிருக்கையில் அடிபட்டுக் கீழே காற்றில் சுழன்று விழுவதைப் போல் உணர்ந்தேன். அவளிடமிருந்து மெல்லப் புரண்டு களைப்புடன் திரும்பிப் படுத்துக்கொண்டேன். மறுபுறம் அவள் அரை மயக்கத்திலிருந்து நழுவித் தூக்கத்தை அடைந்திருப்பாள் என நினைத்தேன். நான் உறக்கம் வராமல் கண்களைத் திறந்தபடி படுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அழுகிய மாமிசத்தினுடையதும் கழிவறை மலத்தினுடையதுமான மறந்திருந்த நாற்றம் ஞாபகத்துக்கு வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *