காதலும் போட்டியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 23,401 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலுப்பூர்ப் பயில்வான் இடியப்ப பிள்ளையிடம் சிட்சை பெற்று, ‘சிறுத்தைப் புலி’ சிங்காரத்தின் முந்திரிப் பழ மூக்கை ஓர் உலுக்கு உலுக்கிவிட்ட தார்பாட்டா பரம் பரையைச் சேர்ந்த ஜாம்பஜார் ‘பாயின்டிங் பாக்ஸர்’ சுல்தானுக்கும், சண்டைச் சேவல்’ சர்தார் முனியப்ப பயில்வானின் ஆசீர்வாதம் பெற்று வீரமுத்துவின் விலா வெலும்பைப் பதம் பார்த்த நாக் அவுட் புகழ்க் காட்டுக் கரடி’ மைக்கேல் காளிமுத்துவுக்கும் ஏழு ரவுண்டு ‘பாக்ஸிங் குத்துச் சண்டை – சிந்தாதிரிப்பேட்டையை அடுத்துள்ள ‘ஜோ லூயி’ திடலில் வருகின்ற செவ்வாய்க் கிழமை நடக்கப்போவதை அறிவித்த துண்டுப் பிரசுரங் கள் நறுமணம்’ கமழும் கூவம் நதிக்கு இருபக்கங்களிலு முள்ள சந்து பொந்துகளில் வட்டமிட்டுப் பறக்கத் தொடங்கியதும், சென்னை மாநகரம் அல்லோலகல்லோலப் பட்டது! டீக் கடைகளிலும், மிலிட்டேரி ஹோட்டல்களி லும், பீடா பெட்டிக் கடைகளிலும் இந்தக் குத்துச் சண்டையைப் பற்றி ஓயாத பேச்சாக இருந்தது. ‘தார் பாட்டா’ சுல்தான் கெலிச்சுத் தமுக்கடிக்கப் போகிறான் என்று ஒரு சாராரும், ‘காட்டுக் கரடி’ ஜயித்து டமாரம் அடிக்கப் போகிறது என்று பிறிதொரு கோஷ்டியினரும் சவால்களும் எதிர்ச் சவால்களும் வாய்வீச்சுகளும் சவடால்களும் அவுட்டுகளும் மனம் போன போக்கில் தாராளமாகப் பிரயோகிக்கலானார்கள்.

நிகழப் போகும் இந்தக் குத்துச் சண்டையின் மிக காஸுக்கான விஷயம் என்னவென்றால், ‘தார்பாட்டா’வும் காட்டுக்கரடி யும் இதற்குமுன் எந்தப் ‘பாக்ஸிங் ரிங்’கிலும் யம கண்டத்திலுங்கூட நேருக்கு நேர் சந்தித்த தேயில்லை! இறுதி ஆட்டத்திற்கு முண்டியடித்துக் கொண்டு அவர்கள் வருவதற்குள் ஒருவன் மூக்கு உடை பட்டு, ராயபுரம் ஆஸ்பத்திரிக்கும், மற்றவன் இரண்டு பற்களை மனமின்றிப் பறிகொடுத்துவிட்டு சைனாபஜார் சங்-சிங்-சுங் என்ற நாமகரணத்தைக் கொண்ட சீனா பல் வைத்தியரிடமும் விஜயம் செய்துவிடுவது வழக்கமாயிருந் தது. இந்தத் தடவை அது தடம் புரண்டு விட்டது! விதி விளையாடிய சதி ஒரு புறமிருக்க, இந்தப் பகாசுரர்கள் நேருக்கு நேர் சந்திக்கும்படியாகச் சகல ஏற்பாடுகளையும் செய்தவர் வேப்பேரியில் ‘லாட்டரி அடித்து வந்த ஜானி வாக்கர் என்ற சட்டைக்காரர் என்று பலருக்குத் தெரியா மல் போகவில்லை!

காலாடிப்பேட்டைக் காட்டன் மார்க்கெட்’ போஷகர் களும், மூர்மார்க்கெட் வஸ்தாதுக்களும், சைனாபஜார்க்கத்த ரிக்கோல் நிபுணர்களும் இந்தக் குத்துச்சண்டையின் முடி வைப்பற்றி என்ன என்னமோ ஹேஷ்யங்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். ‘சைட் பெட்டிங்’ விவகாரங்களில் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த அந்தச் செம்மல்கள் செவ்வாய்க்கிழமையின் நல்வரவை ஆவலுடன் எதிர்பார்த் துக்கொண்டிருந்தார்கள்!

இந்தக் களேபரம் நகரெங்கும் கூத்தடிக்க , மீர்ஸாப் பேட்டையில் குணங்குடி மஸ்தான் சந்திலுள்ள மூன்றாவது மச்சு வீட்டில் இரு இளம் உள்ளங்கள் காதல் வேதனையால் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தன!

“என் மனசு டபக், டபக்குன்னு அடிச்சுக்குது. ஒண் ணுமே தோணுல்லே” என்று ஸலீமா தழுதழுத்த குரலில் சொன்னதும், அவ்வனிதையின் கலவர ரேகைகள் படர்ந்த மதிவதனத்தைக் கலங்கிய விழிகளால் நோக்கினான் தார் பாட்டா’ சுல்தான்.

“இந்தக் குத்துச் சண்டையில் எனக்கு ஏதாவது ஆபத்து வரும்னு ‘காப்ரா’ ஆயிட்டியா? அடி பயித்தியக் காரப் பெண்ணே! சுல்தான் என்ற பெயருடன் வாழும்படி பாழாய்ப்போன ‘நஸீப் (விதி)’ என் விஷயத்தில் சிலம் பாடி யிருக்கிறதே தவிர, பிறவியிலேயே இந்த நாட்டுச் சுல்தானாக நான் பிறந்திருக்க வேண்டியவன்! தெரியுமா?” என்று வீராப்புடன் பகர்ந்து, பளபளத்த தன் ஹிட்லர் மீசையை நைஸாகத் தடவிக்கொண்டான் சுல்தான். அக்காரிகையின் உள்ளத்திலே உண்டான கொந்தளிப்பு அடங்கினதாகக் காணோம்!

“எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லையா? ஆனால் அப்பாஜான் போட்ட ஜபர்தஸ்த் கண்டிஷனை நினைச்சா என் நெஞ்சு பகிருங்குது!” – கைகளை விறு விறுவென்று பிசைந்து கொண்டு, திரு திருவென்று விழித்தாள் அந்த அழகுப் பிழம்பு.

“உன் அப்பாஜான் கண்டிஷனா” – திடுக்கிட்டான் ‘தார்பாட்டா’.

“எல்லாம் இந்தக் கேடுகெட்ட குத்துச் சண்டையால் வந்த விளைவுதான்.” – கொவ்வை அதரங்களைப் பிதுக்கினாள் அவள்.

“என்ன அப்படிப் பேசறே உன் அப்பாவே பெரிய குஸ்திப் பயில்வான் ஆச்சே!”

“அதுதான் என் தலையிலே இடியைப் போட்டுடுச்சு. என்ன செய்வேன்? எப்படிச் சொல்வேன்?” பிரலாபித்த அந்த நங்கை மேலும் தொடர்ந்தாள் : ”நம்ம நிக்காஹுக்கு இந்தச் சைத்தான் சண்டையா சோதனையாக வந்து நடு விலே நிற்கணும்? அல்லாரே!”

ஒன்றும் தோன்றாது பேந்தப் பேந்த விழித்தான் சுல்தான்.

“உன் நிக்காஹுக்கும் இந்தக் குத்துச் சண்டைக்கும் என்ன சம்பந்தம் ஸலீமா? ஆவணி அவிட்டத்துக்கும் அப் துல் காதருக்கும் முடிச்சுப் போடாதே!” – ஒரே குழப்பத் துடன் கத்திவிட்டான் சுல்தான்.

மௌனம் சாதித்த தன் ரோஜா குல்கந்தைக் காணக் காண அவன் சப்தநாடிகளும் ஒடுங்கிவிட்டன.

“என்னைக் கைவிட்டுடாதிங்கோ!” – விம்மினாள் காதலி.

“என்ன!”

“இந்தக் குத்துச் சண்டையில் தாங்கள் கெலித்தால் தான் உங்களுக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுப்பா ராம் அப்பாஜான்!”

“இல்லாட்டிப் போனால்…?”

“இந்த அபலையை நீங்கள் அடியோடு மறந்துடும்படி யாக ஆயிடும்” – விக்கி விக்கி அழுதாள் அப்போதை.

“ஸலீமா! என் முகத்தைப் பார் இலுப்பூர் ஸர்தார் இடியப்ப பிள்ளையின் இந்தச் சேலா (சிஷ்யன்)’ எந்தக் கோதாவிலாவது அந்தர் பல்டி அடிச்சிருக்கானா?’

தன் மார்பைத் தடதடவென்று தட்டிக் காட்டிக் கொண்டே, கடகடவென்று உரக்கச் சிரித்தான் அந்தக் கில்லாடிப் பயல்.

“அல்லாதான் காப்பாத்தணும்!”

“பயப்படாதே ! இந்த ஜாம்பஜார் சிங்கலடி சிங்கம் பிறைக்கொடி நாட்டிவிட்டு, இரண்டு ஜோடிக் கோழிக ளோடு திரும்பி வந்து சேரும். உன்னைப் பெற்றவனின் பாசிபிடித்த காதிலே இந்தச் சேதியை உரக்கப் போட்டு வை” என்று மிக்க உணர்ச்சியுடன் நிதானமாகச் சொல்லி, தன் பியாரி (காதலி)யின் மாதுளைக் கன்னங்களை ஆசை யோடு தடவி ஒரு கிள்ளுக் கிள்ளிவிட்டு நகர்ந்தான் சுல்தான்.

வழிநெடுகிலும் அவன் இதயம் ஓலமிட்டுக்கொண் டிருந்தது. தன் காதலியின் தகப்பனோ அசல் ஹய்வான் – மிருகம். முரடன் நம்பர் ஒன்; ஒரு பேச்சுக்காரன். துர் அதிர்ஷ்ட வசமாக ஏதாகிலும் தலைகீழாக நிகழ்ந்துவிட்டால்? தன் இதய ராணியை இழக்கும்படி சந்தர்ப்பம் சதிசெய்துவிட்டால்?”… எண்ணத் தரங்கங்களிடையே சிக்கி, அவன் சொல்லொணா அவதிப்பட்டதும் மதி மருண்டது. கண்கள் இருண்டன். சித்தம் தவித்தது. ‘அட….சட் நானா பயந்தாங்கொள்ளி? இந்தச் சுல்தானுக்கா ஹிம் மத் – தைரியம் இல்லை? அட சட்… ருஸ்தும்! ஜல்தி சலோ!’ என்று தன்னையும் அறியாது ஏதோ வீரமொழி களை உளறிவிட்டு நவாப் நடையைப் போட்டுக்கொண்டு புறப்பட்டான் சுல்தான்.

இனி சைதாப்பேட்டையில் செயின்ட் ஜார்ஜ் தெருவி லுள்ள எட்டாம் நம்பர் வீட்டில் உக்கிரத்துடன் நடந்து கொண்டிருந்த குட்டி லடாய் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.

நடுக் கூடத்திலிருந்து கிளம்பி வந்த காரசாரமான சம்பாஷணையை வாசலை நோக்கிய அறையின் ஜன்னல் ஓர. மாக ஓட்டி நின்று, செவிகளை நன்றாகத் தீட்டிக்கொண்டு கேட்ட வண்ணம் ஏங்கி நின்று கொண் டிருந்தான், ‘காட்டுக் கரடி’ மைக்கேல் காளிமுத்து.

”ஏ …. லில்லி இதைக் கேட்டுடு. இந்த வஸ்தாத் சொன் னது சொன்னதுதான். அது மாதிரி நடந்தால், அவன் இங்கே வரட்டும். தலையைத் தொங்கப் போட்டுட்டு, இங்கே வந்து கெக்கே பிக்கேன்னு எதுனாச்சும் சால்ஜாப்பு அவன் சொன்னான்னா. அவன் முகத்திலே தார் பூசிக் ‘கல்தா’ கொடுத்து அனுப்பத் தயங்கமாட்டேன். ஆ …மா..” என்று கர்ஜித்துவிட்டுத் துள்ளிக் குதித்தான் அந்தோனிசாமி .

“இது என்னப்பா விதண்டாவாதம்?” – மன்றாடினாள் மகள்.

‘உன் ‘டாடி’க்கு நீ புத்தி கூறத் தேவையில்லை. தவிர உனக்குத் தகுதியில்லை” – சீறினான் கிழவன்.

“என் மாரியேஜ்’ அதுபாட்டும் நடக்கட்டும். இந்தப் பாக்ஸிங்’ இது பாட்டும் நடக்கட்டும். அப்பா.” மன மொடிந்து கதறினாள் லில்லீ.

“ஸ்டாப் நான் சென்ஸ்/ உன் கல்யாணமாவது மண் ணாங்கட்டியாவது! இந்த மட்டிப்பயல் இல்லாதபோனால் எத்தனையோ ஹீரோக்கள்’ மோதிரங்களோட வூட்லே நுழையக் காத்திருக்காங்க லில்லீ! எனக்கு மருமகனாக வரப்போகிறவன் என் ‘ஸ்டாண்டர்டு படிதான் இருக்க ணும். அந்தக் குல்லாவுக்கு ‘ நாக் அவுட் கொடுத்துட்டு. வெள்ளிக் கோப்பையுடன் வந்தால் தான் உனக்கு அவன் சொந்தம் என்று ‘ஐடியா’ வச்சுக்க; சொல்லிட்டேன்!’ என்று இறுதி எச்சரிக்கையை விடுத்து விட்டு அந்தோனி சாமி அவ்விடத்தைவிட்டு அகன்றதும் மக்களின் மாசு களைத் துடைத்து, பரமபிதாவிடம் மன்னிப்புக் கோரும் ஏசுநாதரின் படத்தின் முன் மண்டியிட்டுத் தேம்பித் தேம் பிக் கண்ணீர் சொரிந்தாள் லில்லி. இந்த சோகக் காட்சி யைச் சாளரத்தின் வழியாக நோக்கிக்கொண் டிருந்த அவள் காதலன் ‘காட்டுக்கரடி’ காளிமுத்துவின் கண் களும் குளங்களாகிவிட்டன!

“அழாதே….. டார்லிங் … அழாதே” என்று உணர்ச்சி யுடன் ஹீனக் குரலில் அவன் கூறினதும், வில்லி திடுக்கிட்டாள். ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஏங்கி நிற்கும் தன் கண்ணாளனின் மீது மங்கிய பார்வை வீழ்ந்த தும், அந்த வஞ்சிக்கொடி துவண்டு போயிற்று.

“உன் தகப்பன் சொன்ன யாவற்றையும் காது புளிக்க நான் கேட்டுவிட்டேன்! உன்னைக் கைவிட மாட்டேன்…அஞ்சாதே!’ என்று காளிமுத்து ஆறுதலளித்ததும், அந்த அணங்கு மேலும் கலக்கமடைந்தாள்.

‘டியர்! ஏதாச்சும் அசம்பாவிதமாக நடந்துவிட்டால், என் உள்ளம் இரண்டாகத் துண்டு விழுந்துவிடும், டார் லிங்’ அந்தக் கர்த்தர் தான் நம்மைக் காப்பாற்றணும்.” – பிலாக்கணமிட்டது மனமொடிந்த மாடப்புறா.

“பதறாதே லில்லி அந்த ஜாம்பஜார் சாயபுவுக்குக் குத்து மதிப்பா நாலு கும்மாக் குத்துக்களைக் கொடுத்து. அவனைக் கிறிஸ்துமஸ் கேக் மாதிரி பண்ணிவிட்டு , ஹிப் ஹிப் ஹுரே!’ என்ற கோஷத்துடன் திரும்புவேன்!”

“உள்ளே வரக்கூடாதா டியர்?” – கெஞ்சினாள் லில்லி நீர்சுரந்த விழிகளுடன்.

“தன்மான உணர்ச்சி கொண்ட, கழுத்திலே சிலுவை யைச் சூடிய இந்தக் கிறிஸ்தவன், உன் தகப்பன் போட்ட சவாலுக்குச் சவுக்கடி கொடுத்துவிட்டுத்தான் இந்த வீட்டின் நிலைப்படியைத் தாண்டுவான். உன்னைப் பெற்ற அந்தப் பெரியவர்மீது எனக்கு ஒரு துவேஷமும் கிடையாது லில்லி! கோடையிடி குப்புராவ் பயில்வான் பரம்பரையில் வந்த பாக்ஸர்’ அவர். அவர் லக்ஷ்யத்தை நிறை வேற்றுவேன் . உன் இதயத்தில் குடியேறுவேன் டார்லிங்” என்று வீரமுழக்கம் எழுப்பிவிட்டு, தெனாலி வெண் ணெயை ஒத்த தன் காதலியின் கன்னங்களை மானஸிக மாகச் சுவைப்பது போல், தன் உள்ளங் கையிலே ஈர உதடுகளை ஒத்திச் சைகை காட்டிவிட்டு , ஜூலியட்டிடம் ”டாட்டா ….” வென்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு மறைந்தான் அந்தச் சைதாப்பேட்டை ‘ரோமியோ!’

உண்மையை எடுத்துரைக்கப் போனால், மைக்கேல் காளிமுத்துவின் இதயத்தின் ஓர் முடுக்கில் பீதி புகைந்து கொண்டிருந்தது.

‘இவ்வளவு சூரத்தனமாகப் பேசிவிட்டுக் கிளம்பிவிட் டோமே. ஒருகால் அந்தப் பொல்லாத சாயபு என்னை நசுக்கிப் பொடிமாஸ்’ பண்ணிவிட்டால், என் லவ்’ தன் பிடியை விட்டு நழுவிவிடுமே!’ இந்தப் பயங்கர எண்ணம் அவனைப் பைத்தியமாக்கிவிட்டது .

‘காதலியா அல்லது கானகமா?’ என்ற கடும் பிரசனை யில் தத்தளித்த இந்த இரண்டு வஸ்தாதுகள் பட்டபாடு போதும் போதும் என்று ஆகிவிட்டது! நாட்களும் சடசட வென்று மறைந்தன. செவ்வாய்க்கிழமை வைகறையும் பொல பொலவென்று புலர்ந்தது!

அன்று அந்தி மயங்கும் நேரத்தில் ‘ஜோ லூயி திடலின் முன் ஒரு பர்லாங்கு நீளமுள்ள ‘க்யூ’ நெளிந்து கொண்டிருந்தது. கொட்டகைக்குள் அண்ணன்மார்கள் தங்கள் உதடுகளைக் குவித்து எழுப்பிய சீட்டிகளும், தம்பி மார்கள் ஆர்ப்பரித்த ‘டேய் …. டேய் ‘ என்ற வீரக்கூப்பாடுகளும் ஒன்று சேர்ந்து ஒரு சிறிய பூகம்பத்தை உண்டாக்கிவிட்டன்.

குத்துச் சண்டை நடைபெறப் போகும் மேடையின் மருங்கில் போடப்பட்டிருந்த முதல் வகுப்பு நாற்காலிகளில் ஆரணி பிச்சுமணி ஐயரும், மஞ்சள் மோகன சுந்தர கிராமணியாரும் அமர்ந்திருந்தார்கள்.

“என்ன கிராமணியாரே! ஏதோ மல்லாக்கொட்டை பாக்டரிக்காக டீஸல் இன்ஜின் வாங்கப் பட்டினம் வந்த என்னை, இந்த நரகத்துக்கு இழுத்து வந்து விட்டீர்களே!” என்று பிச்சுமணி ஒரே படபடப்புடன் சொன்னதும். தம் நண்பரை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார் கிராமணியார்.

“குத்துச் சண்டையை இப்போது தான் முதல் தடவை யாக நீங்க பார்க்கிறது போல் இருக்கிறது!” என்று கிரா மணியார் சாவதானமாகப் பதிலளித்ததும், பிச்சுமணி தலையை ஓர் வெட்டு வெட்டி, நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டார்.

“ஆட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே இந்தச் சண் டையைப் பற்றி ஒரு நாலு வார்த்தைகள் நீங்கள் சொல்லி விட்டால், எனக்குப் பார்க்கச் சௌகரியமா யிருக்கும்” என்றார் ஐயர், கெஞ்சிய பாவனையில்.

“இந்த மேடையிருக்கே……… பதினெட்டுச் சதுர அடி சைஸ் இருக்குமில்லியா?” என்ற கேள்வியைப் போட்ட வண்ணம் தொடர்ந்தார் கிராமணியார்.

“கிட்டத்தட்ட இருக்கலாம்.’

“இந்த மேடையைத்தான் ‘ரிங்’ன்னு சொல்லு வாங்கோ. இங்கேதான் குத்துச் சண்டை நடக்கும். சரி……… இந்த ஆட்டத்திலே குதிக்கப் போறாங்களே அந்தச் சூரர்களைக் காலையிலே தராசிலே ‘ போட்டு நிறுத் திடுவாங்க “

“அப்படீன்னா” – வியப்பினால் வாயைப் பிளந்தார் பிச்சுமணி.

“ஒரே நிறை உள்ளவர்களைத்தான் ஜதையாகச் சேர்த்து பாக்ஸிங்’ போட அனுமதிப்பாங்க. பேச்சுக்குச் சொல்றேன் கேளுங்கோ. – 112 பவுண்டு கனம் இருக் கிறவர்களைப் பிளைவெயிட்’ என்று குறிப்பிடுவாங்க. 119 பவுண்டாக இருந்தால், ‘பாண்டம் வெயிட்’ன்னு பிரிப் பாங்க. இப்படியே கனம் ஜாஸ்தி ஆக ஆகப் ‘பெதர் வெயிட்’. மிடில் வெயிட்’ ‘ஹெவி வெயிட்’ என்று தனித் தனியாகப் பிரிச்சுடுவாங்க. புரிஞ்சுதா?”

“அதைக் கேட்பானேன்? பேஷாகப் புரிய வச்சுட் டிங்க! சரி… இப்போ சண்டை போடப்போறாளே….அவர்கள்…?” என்று பிச்சுமணி இழுத்தார்.

“அவங்களா ‘பாண்டம் வெயிட்’ ரகத்தைச் சேர்ந்த வங்க ; 119 பவுண்டு” என்று சொல்லிவிட்டு, வேஷ்டியின் நுனியால், தம் வைர மோதிரத்தை நன்றாகத் துடைத்து அது டால்’ அடிக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். மோகனசுந்தர கிராமணியார். தொடர்ந்தார். ”சண்டை போடுறதுக்கு முன்னாலே இந்த வீரர்கள் கையிலே தோல் உறைகளை மாட்டிக்குவாங்க, அதுக்குப் பேர் ‘கிளவ்ஸ்’. ஆச்சா?”

“ஆகட்டும். மேலே போங்கோ!”

“இன்றைக்கு ஏழு ரவுண்டு குத்துச் சண்டைன்னு நோட்டீஸிலே போட்டிருக்கான். ஒரு ரவுண்டுன்னா மூன்று நிமிஷ ஆட்டம் என்று அர்த்தம் இந்த ரவுண்டுக் குள்ளே யார் இருபது மார்க்குகள் முதல்லே வாங்குகிறாரோ, அவருக்கு அந்த ரவுண்டு ஜயம் என்று அர்த்தம்.”

“கிராமணியாரே! மார்க்குன்னு சொன்னீர்களே. அதை எப்படிக் கணக்குப் போடுவா?” – பிச்சுமணிக்குக் குஷி கிளம்பிவிட்டது!

“ஒரு மார்க்குன்னா ஒரு பாயின்ட். அதாவது ஒரு நல்ல செம்மையான குத்து என்று அர்த்தம். இந்த விதமாக இருபது குத்துக்கள் ஒரு ரவுண்டிலே வுளுந்துடும்.”

அட ராமசந்திரா” பிச்சுமணிக்கு வியர்த்தது. தொடைகள் வெடவெடவென்று அடித்துக்கொண்டன.

“கேளுங்கோ! இந்த மாதிரியான ரொம்ப ஷோக்கான ஆட்டம் வேறு எதுவும் இல்லிங்க. கட்டுறீங்களா?” என்று கேட்டார் கிராமணியார் ஒரே பரவசத்துடன்.

“எதைக் கட்டணும்? நடையைக் கட்டச் சொல் றிங்களா” பிச்சு மணிக்கு ஒன்றுமே புரியவில்லை; பேந்தப் பேந்த விழித்தார். ”நீங்க ஒண்ணு; அப்பாவி மனுஷருங்க! சைட் பெட்டிங் பந்தயப் பணம் கட்றீங்களான்னு கேட் டேன்” என்று கூறிக் கலகலவென்று உரக்கச் சிரித்து விட்டார் கிராமணியார். தொடர்ந்தார் : ”இந்த ஆட்டத் திலே தலை முதல் இடுப்புப் பெல்ட் வரை எதிரி மேலே எங்கே வேண்டுமானாலும் குத்துக்களை ஜோராக விடலாம், ஐயரே! முதுகு மேலேயும், பெல்ட்டுக்குக் கீழேயுந்தான் அது விழக்கூடாது. எதிரியைக் காலாலே உதைக்கக் கூடாது. தலையாலே முட்டக்கூடாது. முண்டாவாலே தள்ளக்கூடாது . ஆ …மா! அப்படித் தவறிச் செஞ்சுட்டா அது ‘பவுல்’…”

“சரி…இவர்கள் சரியாகக் குத்துக்கள் விட்டுக் கொள்ளுகிறார்களா என்று கவனித்துக்கொள்ள ஆசா மிகள் உண்டோல்லியோ?” – வாய் குழறியது

“இல்லாமலா ! ஒரு ரெப்ரியும் மூன்று நீதிபதிகளும் மேல்பார்வை பார்த்துக்குவாங்க. இதில் நாஸுக்கான விசயம் என்ன வென்றால், ரெப்ரி இருக்காரே… அவர் பாடு படா பேஜார், தொல்லை / ஒவ்வொரு சமயம் இந்தக் குத்துச்சண்டை வீரர்கள் கண்களை மூடிக்கிட்டு அடி அடின்னு குத்துகளை ஆவேசத்தோடு விட்டுக்கொள் வாங்க. அந்தப் பொல்லாத வேளையில் இந்த ரெப்ரி அவுங்க நடுவிலே விழுந்து, இரண்டு பேர்களையும் விடு விக்கிறதுக்குள்ளே அந்த அப்பாவி மனுஸர் மேலேயும் நாலைஞ்சு குத்துக்கள் தவறிப் பலமாக வீழ்ந்துடும். அப்போ பார்க்கணுமே அவர் நிலைமையை… கோவிந்தா! கோவிந்தா!”

மோகனசுந்தர கிராமணியார் உணர்ச்சி தாளாது. ‘கோவிந்தா’ கோஷத்தை உரக்கப் போட்டு உரையாடலை முடிப்பதற்கும், ரெப்ரீயும் குத்துச்சண்டை வீரர்களும் மேடையில் தோன்றுவதற்கும் சரியாக இருந்தது! கை களில் ‘க்ளவ்ஸ்’ உறைகளும், கால்களில் கான்வாஸ் ஷூக்களும், கறுப்பு நிஜாரும் தரித்து நின்ற ஆட்டக் காரர்களைக் கண்டு கூட்டம் கடல் போல் ஆர்ப்பரித்தது. ‘தார்பாட்டா’ சுல்தான் தன் இடுப்பைச் சுற்றிச் சிகப்பு நிற பெல்ட்டை அணிந்திருந்தான். ‘காட்டுக்கரடி’ காளி முத்துவின் இடுப்பில் ஊதா நிற பெல்ட் பளிச்சிட்டது.

‘ரிங்’ வளைவின் வலது கோடியில் சுல்தானும், இடது கோடியில் காளிமுத்துவும் தங்கள் தங்கள் உடலுக்கு முறுக்கேற்றியவண்ணம் பிரமாத ஸ்டைலுடன் நின்று கொண்டிருந்தார்கள். ‘டங்’ கென்று மணியோசை எழும் பியது. ‘பாக்ஸ்’ என்று ரெப்ரீ பிரகடனப் படுத்தியது தான் தாமதம், இரு குத்துச் சண்டைச் சூரர்களும் காளைகளைப்போல் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டு சடசட படபடவென்று குத்துகளை அநாயாஸமாகப் பரிமாறிக்கொண்டார்கள். சண்டைச் சேவலைப்போல், கழுத்தை நெறித்து நெறித்துச் சுல்தான் முன்னே றவும், பச்சைத் தவளைபோல் தாவித்தாவிப் பின் வாங்கினான் காளிமுத்து. ஒருவன் பூச்சிகாட்டவும், மற்றவன் ஜாலக் காட்டவும், இந்த நிலை ஒரு நிமிஷத்துக்கு மேல் நிலைத் திருக்கவில்லை. அடிபட்ட வேங்கையைப்போல் கறுவிக் கொண்டு சடாரென்று பாய்ந்த சுல்தான் ‘வால்காட்’ குத்துகளைக் காளிமுத்துவின் முகத்தில் விட்டது தான் தாமதம், ‘காட்டுக்கரடி’ தன் இடது கரத்தைத் தற்காப் புக்காக மடக்கிக்கொண்டு வலது கை முஷ்டியினால் கும் கும்மென்று ‘ஜோலூயி’ குத்துக்களைத் ‘தார்பாட்டா’ முகத்தில் சரமாரியாகப் பொழியலானான். இந்தத் திடீர் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாது திணறிப்போன ஜாம்பஜார் சிறுத்தை ஒவ்வொரு நரம்பிலுமுள்ள வலுவை யெல்லாம் ஒன்று திரட்டி முஷ்டிகளில் தேக்கிக்கொண்டு, குபீரென்று காளிமுத்துவின் மீது பாய்ந்து, இரண்டு ‘கன்போட் ஜாக்’ குத்துகளையும் ஒரு ‘ராக்கி மார்சியானோ’ குத்தையும் சேர்த்து விட்டதும், காளிமுத்து தடுமாறிப் போனான். மேலை நாட்டு அஸ்திரங்களைக் கைகழுவிவிட்டு உள்ளூர்ச் சரக்கைக் கையாளத் திட்டமிட்டு, ஒரு பெரு மூச்சைப் புகையுடன் விட்டுவிட்டுக் கொத்தவால்சாவடிக் கும்மாக் குத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சுல்தான் மீது விட்டான் காட்டுக்கரடி. தார்பாட்டாவும்’ சளைத்ததாகக் காணோம்! ‘ஜாம்பஜார்’ குத்து. ‘மந்தைவெளி’க்குபீர்குத்து ஆகிய இரண்டையும் ஒரே கணத்தில் அவன் அளித்ததும், காளிமுத்துவின் கண்களுக்குத் தீப்பொறிகள் தென் பட்டன. மதுவருந்தியவன் போல் முன்னும் பின்னும் தடுமாறிக்கொண்டு ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

‘தார்பாட்டா’ சுல்தான் முதல் மூன்று ரவுண்டையும், ‘காட்டுக்கரடி’ காளிமுத்து அடுத்த மூன்று ரவுண்டையும் ஜயித்ததாக ரெப்ரீ அறிவித்ததும், கூட்டத்தினரின் திகைப்பு, கட்டுக்கு அடங்காமல் போயிற்று. இனி மிஞ்சி நிற்பது ஒரே ஒரு ரவுண்டுதான் ! ஏழாவது ரவுண்டு! அந்த மூன்று நிமிஷகாலம் இந்தச் சூரர்களின் விதியை நிர்ணயித்து விடப் போகிறது. இந்தப் பீதியும் காதலி களின் நினைப்பும் எதிர்பாராத அந்தப் பொல்லாத நேரத்தில், அவர்கள் உள்ளங்களில் மின்னலிட்டதும் சூறாவளியில் சிக்கிய முருங்கை மரம் போல் அவர்கள் வெல வெலத்துப் போனார்கள். தொடைகளும் வெடவெட வென்று அடித்துக்கொண்டன. இவர்கள் நிலைமையையும் மிஞ்சிவிடும்படி படுமோசமான நிலையில் இருந்தனர். காலரியின் மேல் வரிசையில் வீற்றிருந்த இரு ஜீவன்கள்! ‘தார்பாட்டா’ சுல்தான் ஜயிப்பான் என்று பக்கிரிசாமி தன் நண்பனிடம் ஐந்து ரூபாய் பந்தயம் கட்டியிருந்தான். அதற்குப் போட்டியாகக் காட்டுக்கரடி’ மீது டபுள் கட்டி விட்டான் ‘சொண்டிச் சோறு சோணாசலம்! தன் ‘பேவ ரைட்’ காளிமுத்து மிக்க சோர்வடைந்து நிற்பதைக் காணக்காணச் சோணாசலத்திற்குத் தலை கிறுகிறுத்தது; உதிரம் உறைந்தது. ஒவ்வொரு தடவையும் சாயபுவிட மிருந்து காளிமுத்து பெற்றுக்கொள்ளும் குத்துக்கள் ஏதோ தன்மீதே விழுவதுபோல் அவனுக்குப் பிரமை உண்டாயிற்று! எங்கே தன்னை நம்பினவனை அவன் கைவிட்டு விடுவானோ என்ற கிலி அவன் நெஞ்சைக் கௌவியது. பக்கிரிசாமி தன் பந்தயப் பணத்தைத் தட்டிக்கொண்டு போய்விடுவானோ என்ற எண்ணம் குமிழியிட்டதும் அவனுக்குப் பகீரென்றது?

மணி அடித்தவுடன் ஏழாவது ரவுண்டுக் குத்துச் சண்டை ஆரம்பமாயிற்று. ‘வாழ்வா சாவா?!” என்ற மனப்பான்மையுடன் சுல்தானும் காளிமுத்துவும் மிக்க ரோஷத்துடன் குத்துக்களைப் பரிமாறிக்கொண் டிருந்தார் கள். பாக்ஸிங்’ ஆட்டத்திலுள்ள சகலவிதமான கும்மாக் குத்துக்களையும் அவர்கள் கையாளத் தொடங்கினார்கள். ஆசனங்களை விட்டெழுந்து நின்றவண்ணம் இந்தப் பயங் கர ‘யுத்தத்தைக் கண்கொட்டாது நெஞ்சு படபடக்கப் பார்த்துக்கொண் டிருந்தனர் கூட்டத்தினர். மாரோ …. மாரோ ….’ என்று வீரகோஷம் போட்டுக்கொண்டு எதிரி மீது பாய்ந்த சுல்தான் ஒரு ‘ஸுகர் ராபின்ஸன்’ குத்தை மிக்க ஜபர்தஸ்துடன் விட்டதும், ரயில் பெட்டியி லிருந்து பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்ட ‘ஹோல் டால்’ படுக்கையைப் போல், தடாலென்று கீழே சாய்ந் தான் காளிமுத்து ! அவன் மூக்கிலிருந்து ரத்தம் கடகட வென்று கசிந்தது. ரெப்ரீ அவனருகில் ஓடிச்சென்று ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒவ்வொரு விநாடிக்கு ஓர் எண்ணாக உரக்க எண்ணத் தொடங்கினார். அவர் பத்து என்று சொல்லி முடிப்பதற்குள் காளிமுத்து எழுந்து நின்றுவிட வேண்டும். இல்லாவிடில், ‘நாக் அவுட்’ புகழுடன் வெற்றி சுல்தானுக்குப் போய்ச் சேர்ந்து விடும். நான்கு, ஐந்து, ஆறு என்று ரெப்ரீ தொடர்ந்து எண்ணியும், காளிமுத்து அசைவதாகக் காணோம் ! ஏழு எட்டு என்று ரெப்ரீ மேலும் தொடர்ந்த சமயத்தில் ஒரு காகித உருண்டை மேடை மீது வந்து வீழ்ந்தது. மறு கணத்தில் படா ‘ரென்று இடியோசையுடன் அது வெடித் ததும், அந்த இடம் உண்மையிலே நரகமாக மாறிவிட் டது. பீதியடைந்த கூட்டத்தினர் குய்யோ முறையோ என்று அலறிப் புடைத்துக்கொண்டு வெளியே ஓடலானார் கள். தீபாவளிப் பட்டாசுகளைப்போல் நாற்காலிகளும் காலரிகளும் சடசடவென்று நொறுங்கின. இந்தக் களே பரத்தில் மாட்டிக்கொண்ட பிச்சுமணி ஐயர் அப்போது பிடித்த ஓட்டம், பெங்களூர் மெயிலில் தொத்திக் கொண்டு, காட்பாடி ஸ்டேஷனில் இறங்கி, பஸ்ஸில் ஏறி, தம் ஊரான ஆரணிக்குப் போய்ச் சேரும் வரை நிற்கவேயில்லை! மோகனசுந்தர கிராமணியார் ஒரு துளி பதற்றங் கூட இல்லாமல் சாவதானமாகத் தன் தேன் கூடு போன்ற மீசையை அசைத்துக்கொண்டு கோயில் யானை போல மெதுவாக ஆடி அசைந்து கொண்டு வெளியே வந்தார்! சரேலென்று கூட்டத்தை ஊடுருவிக்கொண்டு பாய்ந்த பத்துப் பதினைந்து சிகப்புத் தொப்பிகள்’ கையில் குண்டாந்தடிகள் துலங்க மேடையை நெருங்கி இரு குத்துச் சண்டை வீரர்களையும் ரெப்ரியையும் அலக்காகத் தூக் கிக்கொண்டு வெளியேறினார்கள்.

“ஏதோ நல்ல வேளையாக நாம் தப்பிப் பிழைச்சோம் பிரதர்ஸ்” என்று ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, “நம்ம குத்துச் சண்டையை ஒரு முடிவும் இல்லாமல் கான்ஸல்’ செய்யும்படியாக ஆயிற்று! சபாஷ்… சபாஷ். நம்ப மீது யாரும் பழி போட முடியாது. தப்பிப் பிழைச்சோம் பிரதர்ஸ்” என்று மிக்க குஷியுடன் கூறி, சுல்தான். காளிமுத்து ஆகிய இவர்களின் கைகளை இறுகப் பிடித் துக் குலுக்கினார். ரெப்ரீ ஜானிவாக்கர். குத்துச் சண்டை வஸ்தாதுகளின் உச்சி குளிர்ந்துவிட்டது. ஏதோ பெரிய கண்டத்திலிருந்து தாம் தப்பிவிட்டதை நினைத்ததும், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண் டார்கள். இனி தம் காதலிகளையும், முரட்டுப் பிடிவாதம் கொண்ட மாமனார்’ களையும் தைரியமாகச் சந்திக்கலா மென்று – உத்ஸாகம் – உண்டானதும், மீர்ஸாப் பேட் டையை நோக்கித் தார்பாட்டா’வும், சைதாப்பேட்யை நோக்கிக் காட்டுக் கரடியும்’ ராஜநடை போட்டுக் கொண்டு வீராப்புடன் புறப்பட்டார்கள்.

அந்த மாதக் கடைசி வாரத்தில் சுல்தானின் நிக்காஹ் வும், காளிமுத்துவின் திருமணமும் நிறைவேறின. உலக வழக்கப்படி இந்தக் குத்துச் சண்டை வீரர்கள் தங்கள் வஸ்தாத் சேஷ்டைகளைக் காதலிகளிடம் காட்டத் தொடங்கத் தவறவில்லை!

நாகூர் அவுலிபா தர்காவிலே ‘பாத்தியா ‘ ஓதித் தன் நன்றியைத் தெரிவிக்கத் தனது லைலா’வுடன் ரயிலேறினான் சுல்தான். அவன் அங்கே போய்ச் சேர்வதற்கு முன்பே, வேளாங்கண்ணியிலுள்ள மாதா கோவிலில் மண்டியிட்ட வண்ணம் தங்கள் நன்றியை ஆனந்தக் கண்ணீரின் மூலம் வெளிக்காட்டிக்கொண் டிருந்தனர் மைக்கேல் காளிமுத் துவும் அவன் இதயத்தைத் திருகி எடுத்துக்கொண்ட காதலி லில்லியும்!

ஒரு அதிமுக்கியமான விஷயத்தை மட்டும் இந்தக் குத்துச்சண்டை வீரர்கள் அறிந்திருப்பார்களேயானால், அவர்கள் சென்னையை விட்டுப் புறப்படுவதற்கு முன், ‘ஜோ லூயீ ‘ திடலில் நடந்த குத்துச் சண்டையின் ஏழா வது ரவுண்டு கண்டத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிய அந்த மனித தெய்வத்தின் காலடிகளில் கட்டாயம் நெடுஞ் சாண் கிடையாக வீழ்ந்து வணங்கியிருப்பார்கள். ‘காட்டுக் கரடி’ காளிமுத்து தடாலென்று மேடையிலே வீழ்ந்ததுதான் தாமதம், பக்கிரிசாமியிடம் கட்டிய ‘டபுள்’ பந்தயப் பணம் தன் மடியைவிட்டு நழுவி விடப் போகி றதே என்று காப்ரா’ அடைந்த ‘சொண்டிச்சோறு’ சோணாசலம் மட்டும் தன் சட்டைக்குள் மறைத்து வைத் திருந்த வெங்காய வெடியை மேடையின் மீது வீசியெறிந்து, ஆட்டத்தைக் குழப்பத்தில் முடித்திருக்கா விட்டால், நமது குத்துச்சண்டை வீரர்களின் ‘காதல் லக்ஷ்யம்’ நிறைவேறியிருக்குமோ இராதோ? அந்த ஆண்டவன் தான் அறிவான்! இந்தச் சேதி அந்த வஸ்தாதுகளுக்குத் தெரியாமற் போனதைக் காலதேவன் புரிந்துவிட்ட தமாஷாக்களில் ஒன்றாகத்தான் கொள்ள வேண்டும்!

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– ‘சுதேசமித்திரனி’ல் நடமாடின

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *