கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 1,376 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செந்திக்கு இரவு நேரங்களில் தெருவில் நடக்கவே பயம். தெரு நாய் ஏதாவது பாய்ந்து வந்து காலைக் கவ்வி விடும். மேலே விழுந்து கடித்துக் குதறிவிடும் என்று அவன் மனம் சதா அஞ்சி நடுங்கும்.

இதுவரை அவனை நாய் எதுவும் கடித்தது இல்லைதான். அதற்காக, இனிமேல் என்றைக்காவது நாய் கடிக்காது என்று உறுதியாய் எப்படிச் சொல்ல முடியும்? அவன் மனசில் எப்போதும் இந்த உதைப்பு இருந்து வந்தது.

செந்தியை நாய் கடிக்கும் என்று அவனது ஜாதகத்தைப் பார்த்த எந்தச் சோதிடரும் சொன்னாரோ இல்லையோ தெரியாது. அவனுடைய பாட்டியும், அத்தையும்,பெரி யம்மாவும் சின்ன வயது முதலே அவனுக்கு நாயை எண்ணிப் பயப்படும்படி கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.

செந்தியின் தாத்தா செந்தில் நாயகம் பிள்ளை நாய் கடித்து, நாற்பது நாட்கள் கஷ்டப்பட்டு, நாய்மாதிரிக் குரைத்துக்கொண்டே செத்துப்போனார். அந்தக் காலத்தில் நாய் கடித்தால் ஊசி குத்திக்கொள்கிற பழக்கம் இருந்த தில்லை.

செந்தியின் மாமா செந்திக்குமார பிள்ளையை கோட்டி நாய் ஒன்று கடித்துவிட்டது. அவரும் ரொம்பவும் கஷ்டப் பட்டார். எத்தனையோ ‘பண்டுவம்-பக்குவம்’ எல்லாம் பார்த்ததில் குறை இல்லை. இருந்தாலும் சாகிறவரை அவருக்கு ஒரு மாதிரியான இரைப்பு இருந்தது. அமாவாசை களில் வாயோரம் நுரை கக்கிக்கொண்டு, மயக்கமாகக் கிடப்பார். ஒரு இழுப்பு நோய் வந்தது. முடிவில் சாவு அவருக்கு விடுதலை அளித்தது.

செந்தியின் பெரியப்பா செந்திவேல் பிள்ளையையும் ஒரு சமயம் வெறி நாய் கடித்துவிட்டது. வயிற்றில், தொப்புள் அருகில் ஊசிபோட்டுக்கொண்டார். நாற்பது நாட்கள். ஊசி என்றால் எப்படியாப்பட்ட ஊசி! கோணி ஊசி பருமன் இருக்கும்! அதை வைத்து, தொப்புளைச் சுற்றி நாற்பது ஊசிகள். தினந்தோறும் வலி சகிக்காது. அப்படிக் குத்திக் கொண்ட பிறகாவது சுகம் கண்டாரா? குணமாகிவிட்டது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஒருநாள்- ஏதோ விஷநாள் தான்-கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு, ரேசரை வைத்து தாடி மீசையை சிரைக்க ஆரம்பித்தார். லேசாக வெட்டிவிட்டதோ, காயம் பட்டு ரத்தம் கசிந்ததோ தெரியலே. உடனே லொள் – லொள்னு குரைக்கத் தொடங்கிவிட்டார். குரைத்துக்கொண்டே கிடந்து, வலிப்பு கண்டு, செத்தேபோனார்.

இப்படி செந்தியின் பாட்டியும், அத்தையும், பெரியம் மாவும் அடிக்கடி சொல்லிச் சொல்லி அவன் உள்ளத்தில் பயம் விதைத்துப் பயிரிட்டு வந்தார்கள்.

நம்ம குடும்பத்துக்கே இது ஒரு சாபக்கேடு மாதிரி. யாரு வயிறு எரிந்து ஏசினார்களோ! நம்ம குடும்பத்து முன் னோரிலே எந்தப் புண்ணியவான் எவர் குடியைக் கெடுத் தாரோ! அல்லது எந்த ஏழை எளியதை நாயைவிட்டு விரட்டி விரட்டிக் கடிக்கப்பண்ணி சித்திரவதை செய் தாங்களோ? அந்தப் பாபம் இப்படி நம்ம குடும்பத்து மேலே கவிந்துகிடக்குது. எத்தனை தலைமுறைக்கு இதுமாதிரிப் பழிவாங்கப் போகுதோ?’ இதுதான் செந்தியின் பாட்டி அகிலாண்டத்தம்மாளின் ஓயாத புலப்பமாக இருந்தது, அவள் சாகும்வரை.

செந்தி சுயமாக எண்ணிப் பார்க்கும் ஆற்றல் பெற்று விட்டதும், இந்த ரகமான பேச்சுக்கள் பேச்சுக்கள் அவனுள் விதம் விதமான பய அரிப்புகளை வளர்த்தன.

நாயினால் கடிக்கப்பட்டு, கஷ்டப்பட்டவர்கள் – அவனு டைய தாத்தா, மாமா, பெரியப்பா – எல்லோரும் ‘செந்தி’ என்று பெயர் உடையவர்களே; தாத்தா பெயர்தான் தனக் கும் இடப்பட்டுள்ளது; எனவே, செந்தில்நாயகமான தானும் என்றைக்காவது ஒருநாள் நாய்க்கடிக்கு ஆளாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

தாத்தா பெயர் இடப்பட்டிருப்பதனால், தானும் செந்தி என்று பெயர் பெற்றிருப்பதால் தன்னையும் நாய் ஏன் கடிக்க வேண்டும் என்று அவன் தன்னையே கேட்டு, அறிவின் துணை யோடு தைரியம் அடைவதற்குப் பதிலாக, அர்த்தமற்ற தெளிவற்ற – இனம்புரியாத மன உளைச்சலுக்கும் ஒருவித பயத்துக்கும் ஆளாகி வந்தான், சிறுவயசிலிருந்தே.

சிறு வயது முதலே நாயிடம் அவனுக்கு உள்ள பயம் வளர்வதற்கான சந்தர்ப்பங்களும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

சோறு வேண்டாம் என்று அடம்பிடிக்கும் சிறுவனான அவனுக்கு, போக்குக்காட்டி சாதம் ஊட்டுவதற்காக அவனுடைய அம்மா, ‘தோ தோ தோக்குட்டி! துரைமார் வீட்டு நாய்க்குட்டி! சின்னதுரை வேட்டைக்குப்போறான், நீயும் கூடப் போ நாய்க்குட்டி!” என்று ராகமிழுத்து நீட்டி முழக்குவது வழக்கம். ஒரு நாய் அந்தப் பக்கம் வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். சோற்றுக் கவளத்தை அதற்குப் போடுவதுபோல் காட்டி, ‘இந்தா பாரு, நாயி புடுங்கிக்கிடப் போகுது! நீ சாப்பிட்டுவிடம்மா’ என்று தன் இடுப்பில் இருக்கும் செந்தியைக் கெஞ்சிக் குழையடித்து வாயில் சோற்றை ஊட்டிவிடுவாள். கடைசிவரை நாய்க்குச் சோறு போடாமலே இருந்துவிடுவாள். சில சமயம் கொஞ்சம் போட்டாலும் போடுவாள்.

ஒரு சமயம் அவள் குரலைக் கேட்டு வேறொரு நாய் வந்தது. எதிர்பார்த்தபடி நின்றது. கண்களில் ஏக்கம் படர அவள் கையையும் செந்தியின் வாயையும் கவனித்துக் கொண்டிருந்தது. அவள் சோறு போடமாட்டாள் என்று அதன் உணர்வு அதற்குப் புலப்படுத்தவும், அந்தத் தடி நாய் ‘உர்’ என்று உறுமிக்கொண்டு, அம்மாவின் இன்னொரு கையில் இருந்த தட்டுமீது பாய்ந்தது. அந்தக் கைதான் செந்தியையும் இடுப்பில் வைத்துப் பற்றிக்கொண்டிருந்தது.

நாயின் பாய்ச்சல் வேகத்தையும் பற்களையும், அவ்வேளைய அதன் முகத் தோற்றத்தையும் கண்ட அம்மா அஞ்சி நடுங்கி, தட்டைச் சோற்றுடன் கீழே போட்டுவிட்டாள். நல்லவேளை, பிள்ளையை கீழே போடவில்லை. நாய் சோற்றைக் கவ்வத் திரும்பியது. என்றாலும், அதன் கால் நகம் செந்தியின் காலில் லேசாகப் பரண்டிவிட்டது. அது வெகுநேரம் எரிச்சல் தந்தது. நாயின் அந்நேரத்திய பயங்கரத் தோற்றமும் உறுமல் பாய்ச்சலும் செந்தியின் மன ஆழத்தில் பதிந்து விட்டன. பயம் வளர்த்தன. அந்தப் பயத்தை வளர்ப்பதாக அமைந்தன தொடந்து பெரியவர்கள் பேசிய பேச்சுக்கள்.

பையன்களோடு சேர்ந்து பள்ளிக்கூடத்துக்கோ அல்லது வேறு எங்கோ போகிறபோது, எவனாவது ஒரு வால்ப்பயல் கல்லை எடுத்து தெருவோடு போகிற நாய்மீது வீசுவான். கல்லெறிப்பட்ட நாய் ஒரு காலை நொண்டிக்கொண்டு, வாள் வாள் எனக் கத்தியபடி ஓடும். அது சிறுவர்களுக்கு வேடிக்கை. ஆனால் செந்திக்குப் பயமாகத்தான் இருக்கும்.

அடிபட்ட நாய், அப்புறம் செந்தி தனியாகப் போகும் போது முறைக்கும். உர்ரென உறுமிக்கொண்டு ஓரமாக விலகிச் செல்லும். செந்தியின் பயம் அதிகரிக்கும். தானே தான் கல்லை அதன்மீது வீசியவன் என்று எண்ணி அந்த நாய் தன்மேல் விழுந்து பிடுங்குமோ என்று அவன் மனம் பதைக்கும்.

ஒருதடவை இரண்டு நாய்கள் வெறித்தனமாகச் சண்டை யிட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் கோபமும் கொதிப்பும் பற்களிலும் குரலிலும் வெளிப்பட்டன. அந்த வழியாகப் போக நேர்ந்த சிறுவன் செந்தி பயத்தால் நடுநடுங்கினான். யாரோ கல்லை வீசி நாய்களை விரட்டவும், திக்குக்கு ஒன்றாக அவை ஓடியபோது, ஒரு நாய் செந்தியின்மீது இடித்துக் கொண்டது. அது வேகமாக ஓடிவந்து மோதிய இடத்தில், அவன் காலில் வலி எடுத்தது. நாயின் மண்டை இடித்த இடம் அது. அதைவிட அதிகமாக பயம் கவ்விப் பிடித்தது அவன் உள்ளத்தில். அந்த மிரட்சியில் அவனுக்கு ஜுரம்கூடக் கண்டு விட்டது.

அதிலிருந்து நாயிடம் உள்ளூற அவனுக்கு இருந்த பயமும் கனம்பெற்று வளர்ந்து அவனது அமைதியை குலைத்துக்கொண்டிருந்தது. அவன் பெரியவனாகி, அவனுக்குக் கல்யாணம் ஆகி, அவன் குடும்பத் தலைவனாய் இரண்டு மூன்று குழந்தைகளின் தந்தை ஆகிவிட்ட பின்னரும், செந்தியின் உள்ளத்தில் அந்தப் பயம் அரித்துத் தொந்தரவு கொடுப்பது மறையவுமில்லை; குறைந்துபோகவும் இல்லை. நாயைக் கண்டால் அவனுக்கு எப்போதும் பயம்தான்.

தெருவில் எங்காவது நாய் குரைக்கும் சத்தம் கேட்டாலே, இரவில் அவன் தூக்கம் கெட்டுப்போகும். ஏதாவது ஒரு தெருவில் வெறிநாய் அலைகிறது என்று கேள்விப் பட்டால் போதும்; அவன் அந்த வீதியின் பக்கமே போக மாட்டான். சுற்றி வளைத்து, சந்து பொந்துகளைக் கடந்து, போகவேண்டிய இடம் போவான்.

‘நாய் கடித்தால், அப்புறம் யார் படுறது? அதிலும், பைத்தியம் பிடித்த நாய்!’ என்று முணுமுணுப்பான் செந்தி.

செந்தி ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தான். தினம் இரவு ஒன்பது மணிக்குமேல்தான் அவன் வீடு திரும்ப முடியும். சைக்கிளில்தான் போய்வந்தான். அப்படி சைக் கிளில் வரும்போது, மேலத் தெரு அருணாசலம் பிள்ளை வீட்டின் பெரிய நாயின் நினைப்பு அவனை உளம் நடுங்க வைக்கும்.

அது பெரிய நாய். கறுப்பாக, பார்ப்பதற்கே பிசாசு கறுப்பாக,பார்ப்பதற்கே மாதிரி. அதன் கண்கள் வெறிபிடித்தவைபோல், என்னவோ தினுசாகக் கூர்ந்து நோக்கும். யாரைக் கண்டாலும் உறுமும். புதிதாக யாராவது தெருவோடு போனால், திண்ணையில் படுத்துக்கிடக்கும் அந்த நாய் எழுந்து நின்று குரைக்கும். சைக்கிள் ஓட்டிச் செல்வோர் பேரில் அதற்கு ஒரு வெறுப்பு. குரைத்துக்கொண்டே சைக்கிளின் பின்னே ஓடும். சைக்கிள் தெருவைக் கடந்து திரும்பி மறைகிறவரை துரத்திச் சென்று, அதை விரட்டிவிட்டோம் என்ற திருப்தியோடு அந்த நாய் தனது இடத்துக்கு வந்து நிம்மதியாகப் படுக்கும்.

ஒருதரம் அது செந்தியின் சைக்கிளை துரத்தியது. அவன் வேகமாய் மிதிக்க, நாயும் பாய்ந்து பாய்ந்து குரைத்தது. அப்படித் தாவிக் குதித்துக் குரைத்த நாயின் பற்களில் இரண்டு செந்தியின் பாதத்தில் லேசாகப் பதிந்தன. அவன் பதறிப் பயந்துபோனான்.

நாயின் பல் பட்டுவிட்டதே. இது நிஜமான கடிதானா? இப்படி லேசாகப் பட்டாலே விஷம்தானா? என்றெல்லாம் செந்தி குழம்பித் தவித்தான். பலபேரிடமும் விசாரித்தான். நாயின் பல் பட்ட இடத்தில் முதலில் சுண்ணாம்பைத் தடவினான். பிறகு அவரும் இவரும் சொன்னார் என்று எதை எதையோ தடவி வைத்தான். நல்ல வேளையாக ஒன்றும் பண்ணவில்லை.

என்றாலும் அந்தக் கறுப்பு நாயை நினைத்தாலே செந்தி யின் உள்ளமும் உடலும் பதறுவது தவிர்க்க இயலாதது ஆகி விட்டது. அந்த நாயின் கண்களில் படாமலே வர அவன் பெருமுயற்சிகள் செய்வதும் இயல்பாயிற்று.

தெருமூலையில் வரும்பொழுதே கறுப்பு நாய் திண்ணையில் கிடக்கிறதா என்று அவன் பார்வை துழாவும். நிலாக் காலம் என்றால் – அல்லது அந்த வீட்டின் வாசல் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் – நாய் கிடப்பது தெரியும். முன்னிருட்டுக் காலத்திலும், விளக்கு இல்லாத நாட்களிலும், நிச்சயமாகச் சொல்ல முடியாது.

அத்தகைய இரவுகளில் செந்தி, எதுக்கு வீண் ஆபத்து என்று எண்ணி, வடக்குத் தெரு வழியே திரும்பி, நடுத்தெரு வந்து சுற்றி, தன் வீடு இருக்கிற குறுக்குத் தெரு சேருவான். வீண் சுற்றுத்தான். அதற்கு என்ன செய்வது? கரிமுடிந்து போகிற அந்தக் கறுப்பு நாய் சைக்கிள் பின்னே ஓடி வந்து, காலைக் கவ்விப்பற்றி, கடித்துக் குதறிவிட்டால்? நாய்க்கடி ரொம்ப மோசமான விஷயம்.

இது விஷயமாக மேலத் தெருக்காரர்களிடம் பேசிய போது, ‘இது சும்மா ஓடிவரும். அவ்வளவு தான். குரைக்கிற நாய் கடிக்காது! என்று தைரியம் சொன்னார்கள்.

‘பழமொழி நமக்குத் தெரிகிறது. நாய்க்குத் தெரியுமா?’ என்றான் செந்தி. அவன் பேச்சை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள மனமில்லாதவர்கள் ‘பெரிய அகராதி! ஹெட் வெயிட்! இவன் நாயிடம் ஏதாவது சேட்டை பண்ணியிருப் பான். அதனால் தான் அந்த நாய் இவனைக் கண்டால் விரட்டுது” என்று முணுமுணுத்தார்கள்.

ஓடுகிறவனைக் கண்டால் விரட்டுகிறவனுக்கு உற்சாகம். நம்மைக் கண்டு இவன் பயப்படுகிறான் என்று நாய்க்குத் தெரிந்துவிட்டது. நாய் அறிவுள்ள பிராணி. இதுமாதிரி விஷயங்களை அது எளிதில் உணர்ந்துவிடும். அதனாலே அது இவனை ஓட ஓட விரட்டுது. அதுக்கு ஜாலி. சில நாய்கள் பயந்து ஓடுகிற மாட்டையும் கழுதையையும் விரட்டி விரட்டித் துரத்துமே அப்படித்தான் இந்த நாயும் விளை யாடுது என்று ஒருவர் அபிப்பிராயப்பட்டார்.

நாய்க்கு அது விளையாட்டாக இருக்கலாம். செந்திக்கு பயத்தை அதிகப்படுத்தி, அமைதியை இழக்கச் செய்யும் வினை ஆகத்தான் அது தோன்றியது.

நண்பர் ஒருவர் செந்தி வீட்டுக்கு அவ்வப்போது வருவது உண்டு. அவரோடு அவர் வளர்க்கும் சிறு நாயும் வரும். குட்டி என்ற நிலையைக் கடந்த, ஆயினும் முற்றிலும் பெரி தாகிவிடாத. அந்த நாய் முதலில் மோந்து பார்க்கும். பிறகு சுற்றிச் சுற்றி வரும். அதற்கு குஷி பிறந்துவிடும். மேலே விழுந்து, பொய்க்கடி கடித்து, துள்ளும்.

அப்படி அச் சிறு நாய் விளையாடுகிறபோது செந்தியின் மனம் பதைபதைக்கும். அவன் நெற்றியில் வேர்வை துளிர்க் கும். ‘சவத்துப்பயல் நாய், கடித்துப்போடும் போலிருக்கே. பல்லைப் பாரு. ஊச்சி ஊச்சியாய்’ என்று அவன் மனம் அச்சக் குரல் கொடுக்கும்.

நண்பர் சிரித்தபடி சொல்லுவார்: ‘சும்மா அது விளையாடுது. எல்லாரிடமும் இப்படித்தான் பழகும். கடிக்காது. கடிக்கிற மாதிரி பொய்க்கடி கடித்து விளை யாடுறதிலே அதுக்கு ஜாலி!’

அது பொய்க்கடி என்று கண்டதா; நிஜக்கடி என்று கண்டதா! இப்படிக் கடித்துக் கடித்து நிஜமாகவே ஒருநாள் பற்களை ஆழமாய் அழுத்தமாய்ப் பதித்துவிடும் என்று செந்தி யின் மனம் புலம்பும். ஆயினும் அவன் அதை வெளியே சொல்லமாட்டான், ‘இவனுக்கெல்லாம் என்னத்துக்கு நாயி?’ என்று மனசுக்குள் சலித்துக்கொள்வான் செந்தி.

விழிப்புநிலையில் மட்டுமின்றி, தூக்கத்திலும் நாய்கள் செந்தியைப் பாடாய்ப் படுத்தி, பம்பரமாய் ஆட்டிவைத்தன. பயங்கரமான நாய் தன்னை துரத்திக் கடிக்க வருவது போலவும், வெறி நாய் காலைக் கவ்வி சதையைக் கடித்துக் குதறுவது போலவும், ஓநாய் போன்ற தோற்றமுடைய தடித்தடி நாய்கள் சைக்கிளில் செல்லும் அவனை விரட்டி வேட்டையாடிச் சூழ்ந்துகொண்டு குரைத்து நெருங்குவது போலவும், இன்னும் பலவிதமாகவும் அவன் கனவுகள் கண்டான். ஒவ்வொரு கனவும் நிஜமாகவே நிகழ்வதுபோல் துயில் நிலையில் அவனுக்குப் படும். அவ்வேளையில் அவன் அனுபவிக்கும் பய உணர்வு அவனை அலறவைத்து விழித் தெழும்படி செய்துவிடும். வேர்க்கும் உடல் உதறலெடுக்க அவன் எழுந்து குறுகுறு என்று உட்கார்ந்திருப்பான்.

ஏதாவது ஒரு நாய் பயங்கரமாகப் பாய்ந்து என்றாவது ஒரு நாள் தன்னைக் கடித்துவிடும்; நாய்க் கடி ரொம்ப மோச மானது; அதனால் அவன் மிகுந்த வேதனை அனுபவிக்க நேரிடும் என்று அந் நேரங்களில் எண்ணிக் குழம்புவான்.

செந்தியின் மனமே அவனுக்கு மோசமான துணையாக இருந்தது.

அன்று அவனுக்கு மனசே சரியில்லை’ தெளிவற்ற ஒரு கலவரம் அவன் உள்ளத்தில் காலையிலிருந்தே நிறைந்து நின்றது. அந்த ஊரில் வெறிபிடித்த நாய் ஒன்று வடக்குத் தெருவில் இரண்டு மூன்று பேரைக் கடித்துவிட்டு ஓடிவிட்டது என்றும், அதை அடித்துக் கொல்வதற்காக ஏகப்பட்ட பேர் கைகளில் தடிக்கம்புகள் விறகுக்கட்டைகள் மண்வெட்டி கடப்பாறை சகிதம் சுற்றித் திரிகிறார்கள் என்றும் அவன் காதிலும் செய்தி விழுந்தது. அது அவன் மனக் குழப்பத்தை அதிகப்படுத்தியது.

பைத்தியம் பிடித்த நாய் மனிதர்கள் கையில் சிக்காமல் ஊருக்கு வெளியே கிழக்கே பார்த்து ஓடிவிட்டது என்றும் அவன் அன்று மாலை கேள்விப்பட்டான். அவனுக்கு இனம் புரிந்துகொள்ள முடியாத ஒரு பீதி உள்ளத்தில் கனத்தது.

அன்று வேலை கொஞ்சம் அதிகமாக இருந்தது. வீடு திரும்பும்போது மணி இரவு பத்து ஆகிவிட்டது. அன்று செந்தி சைக்கிள் எடுத்துச் செல்லவில்லை. சைக்கிளில் ஏதோ சிறு கோளாறு.

நடந்துதானே போகிறோம்; மேலத்தெரு வழியாகவே போகலாம். கறுப்பு நாய் அநேகமாக திண்ணையில் இருக் காது’ என்று எண்ணிக்கொண்டு, அவன் அந்தத் தெரு வழியே நடந்தான்.

தூரத்தில் வரும்போதே நாய் குரைக்கத் தொடங்கி விட்டது.

‘நாசமாப்போற நாய் இங்கேதான் கிடக்குதா?’ என்று அவன் மனம் முனகியது.

அவன் வேகமாக நடக்கலானான்.

நாய் திண்ணைமீது எழுந்து நின்று பலமாகக் குரைத்தது, ஊளையிட்டது.

அதனால் எரிச்சலுற்ற யாரோ, ‘சீ சனியனே, சும்மா கிட. இல்லேன்னா வெளியே போய்த் தொலை’ என்று கத்தினார்கள்.

செந்தியின் வாயும் ‘சீ!’ என்றது. உடனேயே, நாம் இப்படிச் சொல்லியிருக்க வேண்டாமே என்று அவன் மனம் கீச்சிட்டது.

நாய், உள்ளேயிருந்து ஆள் கத்தியதனாலோ அல்லது எதேச்சையாகவோ, திண்ணையிலிருந்து குதித்துத் தெருவுக்கு ஓடி வந்தது.

அதே சமயத்தில் அந்த இடத்துக்கு வந்திருந்த செந்தி, தான் ‘சீ’ என்று சொன்னதால் நாய் வெகுண்டு தன்னைக் கடிக்க ஓடிவருகிறது என்று எண்ணிவிட்டான். அவன் பயம் அதிகரித்தது.

அவ் வீட்டின் வெளி விளக்கு சிந்திக்கொண்டிருந்த மங்கல் ஒளியில் நாயின் கண்கள் கோபக் கொள்ளிகள் போலவும், அதன் கூரிய பற்கள் சதையில் கவ்விக் குதறத் தயாராகிவிட்ட வெறுப்புச் சூரிக்கத்திகள் போலவும் அவனுக்குப் பட்டன. அவன் உடல் நடுங்கி படபடத்தது. அவன் ‘ஐயோ அம்மா செத்தேன்! நாய் கடிக்க வருதே!’ என்று பயங்கரமாகக் கதறிக்கொண்டு ஓடத் தொடங்கினான்.

அவன் ஓடவும் நாய் கோரமாகக் குரைத்தபடி மூர்க்கமாய் அவனைத் தொடர்ந்து ஓடியது.

மனித ஓலமும் நாயின் வெறித்தனமான குரைப்பும், கதவை அடைத்துக்கொண்டு வீடுகளினுள் இருந்த தெருக்காரர்களை வெளியே இழுத்தன. அங்குமிங்குமாகக் கதவுகள் திறக்கப்படும் ஓசை எழுந்து கூச்சலில் கலந்தன.

‘ஓடாதேயுமய்யா. ஓடினால் ஓடினால் நாய் துரத்திக்கிட்டே வரும்’, ‘நில்லு ஏ செந்தி’, ‘அந்த இடத்திலேயே நில்லு’ ‘பயப்படாமல் மெதுவாப் போங்க…’ இப்படிப் பலவாறான உபதேசங்கள் வெடித்துச் சிதறின.

தன் மனபயம் புடதியைப் பிடித்துத் தள்ள, கடிக்க வரும் நாயின் பிடியில் சிக்கிவிடாமல் வேகம் வேகமாய் ஓடிப் போய், தன் வீட்டை அடைந்து, பத்திரமாய் கதவை சாத்தித் தாளிட்டுக்கொண்டு பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் முடுக்க, ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டவன் கடைசிக் கட்டத்தில் முண்டியடித்து ஓடுவது போல், செந்தி ஓடினான்.ஓடிக்கொண்டேயிருந்தான்.

கறுப்புத் தடிநாய் மண்டை வெடித்துப் போகிறமாதிரிக் குரைத்தபடி அவன் பின்னேயே ஓடியது.

– ‘எழுத்தாளன்’, மலர் 1974

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *