விரக்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 3,022 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இவன் காறி உமிழ்ந்த எச்சில் சொல்லி வைத்ததுபோல் அந்தக் கட்டழகியின் தாமரை முகத்தில் போய் விழுந்தது.

திரும்பிப் பார்த்தான்.

இதழ்க் கடையோரம் இன்பம் சிரிப்புப் பூத்து நிற்கும் ஒரு கட்டழகியின் திருவுருவத்தை தாங்கி நின்ற அந்தச் சினிமா விளம்பரத்தில், அவன் உமிழ்ந்த எச்சில் வழிந்து கொண்டிருந்தது.

முகத்தில் எக்களிப்பு கொக்கரிக்கச் சிரித்துக் கொண்டே அவன் ஸ்டேஷனுள் சென்றான். அந்தச் சிரிப்பிலோ உயிர் இல்லை; கசப்பு இருந்தது.

ஸென்ட்ரல் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காலடி எடுத்து வைக்கும்போதே, அவன் மனசில் அந்தக் கசப்பான உண்மையும், கண்காணா நம்பிக்கையுந்தான் ஊடாடிக் கொண்டிருந்தன.

“ஸ்திரீ உலகமே இப்படித்தானா? சுண்ணாம்புக்கும் வெண்ணெய்க்கும் வித்தியாசம் தெரியாமல், இந்த மானிடப் புழுக்கள் அவர்களைச் சார்த்து, ஏன் துன்புற வேண்டும்? இந்திரனும், சந்திரனும் கெட்டது பெண்ணால் தான் என்று கூறுகிறார்களே, அது உண்மையாகத்தான் இருக்குமோ? எது எப்படியாயினும் சரி, என் வாழ்க்கைத் தேனில், கசப்பைத் தெளித்து, அதை நாசமாக்கியது ஒரு பெண்தான். ஆணாகிய அமிர்தத்தை அழிக்க வரும் ஆலகாலமாகத் தான் பெண் விளங்குகிறாள்.”’

இது தான் அவன் மனசில் முளைத்த புதிய உண்மை, காரணம், ஒரு பெண்ணின் சகவாசம் அவனைப் பித்தேறச் செய்தது. அவளுடைய இனிப்பான சகவாசத்தின் ஓவ்வொரு அணுவிலும் கசப்பும் இருந்தது என்பதை அவனுடைய உணர்ச்சி இந்நாள்வரை ருசிக்கவில்லை. கடைசியில் தான், தான் அனுபவித்ததெல்லாம் கற்பகக் கனியின் கொழுஞ்சாறல்ல, காஞ்சிரங்காயின் ரசமென்று அறிந்தான். ஆனால் அவனுக்கென்னவோ, அது போதி மரத்தடிப் புத்தருக்கு ஞானம் பிறந்தது போலத்தான் தோன்றியது. உணர்ச்சிச் சிதைவின் உச்சத்திலே பிறந்தது, அந்தக் கசக்கும் உண்மை.

வாழ்வில் ஏமாந்த அவனுக்கு உலக வாழ்வில் பிடிப்பற்றுப் போயிற்று, தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்வின் முடிவிற்கு ஒரு எல்வை கோலிவிடலாம் என்று அவன் எண்ணியதுமுண்டு. ஆனால், ‘வாழ்க்கை வாழ்வதற்கே” என்று கூறிச் சென்ற எவனோ ஒரு ‘மடப்பய’லின் பொன் வார்த்தை அவன் மனசில் அழியா ஓவியமாக அமைந்திருந்தது. ஆதலால், தற்கொலையின் எண்ணம் அவனுடைய மனசில் லகுவில் பிடிபடவில்லை.

‘பெண்ணுலகத்தின் பேய்ப் பார்வையினின்றே நான் தப்பித்துக்கொள்ள வேண்டும்” என்பதுதான், அவனுடைய தினசரி ஜபமாக இருந்தது. “சாமியாராகப் போய்விட்டால்……?”’ – அப்பா! கூடவே கூடாது. சாமியாராகப்போனால், அவர்கள் நம்மிடம் ‘பிள்ளை வரம்’ கேட்க வந்துவிடுவார்களே! ஆனால் எங்கு திரும்பினும் பட்டணத்து ஒளியிலே, பெண்ணுலகே அவன் கண்ணில் பிரதிபலித்தது. ஜவுளிக்கடை, காபி ஹோட்டல், சினிமா தியேட்டர், அணிகல அங்காடி, செருப்புக் கடை, க்ஷவர ஸலூன்கள் எங்கு பார்த்தாலும். பெண்ணுருவைத்தான் உங்கள் விளம்பரக் கருவியாக உபயோகப்படுத்தியிருக் கிறார்கள். காரணம்? உலகமே அவர்களுடைய சேவைச் சுழலுக்கும், ஜம்பர் பூரிப்புக்கும் மயங்கிவிடும் என்பது தானே?’ அவன் மனம் அலை பாய்ந்தது.

தற்கொலையும் பண்ணக் கூடாது. தன் எண்ணமும் நிறைவேற வேண்டும். இந்த நினைவுதான் அவனைப் போர் முனையில் சாடி நிற்கும் மகா சமுத்திரத்தில், ஒரு துளியாக ஒட்டிக்கொள்ளச் செய்தது. ‘மெட்ராஸ் – ரெக்ரூடிங் ஆபீஸில் தன்னையம் அவன் பதிவு செய்து கொண்டான். பம்பாய்க்குக் கொடுத்த “ரயில்வே வாரண்ட்’டைக் கையில் வாங்கியவுடனேயே, ‘பெண்ணுவகே இனி நம்மை அண்ட முடியாது, போர்முனையில் துப்பாக்கி பிடிக்கச் செல்லும் சிப்பாய்க்கும், பட்டணக் கரையில் பகட்டித் திரியும் பெண்ணிற்கும் பக்கத்திலேயா இருக்கிறது?’ என்ற கண்காணா நம்பிக்கையும் உடன்பிறந்துவிட்டது.

ஆனால், புதிதாக நுழையப் போகும் போருலகில் பெண்ணினத்தின் வாடை தட்டுப்படுமா, பட்டிருக்கிறதா என்பது அவனுக்குச் சிறிதும் தெரியாது.

நேரம் ஆக ஆக, அவனுடைய கசப்பான உண்மையின் வேகம் அதிகரித்தது. கண்காணா நம்பிக்கையோ, ஐஸ் கட்டியைப்போல, உருக ஆரம்பித்தது. காரணம்?

“அதோ, வால்டாக்ஸ் ரோட்டில், அந்த வேப்பமரத் அடியால், எத்தனையோ விதமான நிர்வாணப் படங்களைப் பரப்பி வைத்துக்கொண்டு, எவனாவது ஏமாந்தவன் பச்சை குத்திக் கொள்ள வரமாட்டானா என்று குந்தியிருக்கிறானே, அவன்? அவனுக்கு இந்தப் புது உலகத்து அனுபவம் உண்டா ? போர்முனையில் சாடப்போகும் சிப்பாய் உலகத்தையே தன் பக்கம் இழுத்துவிடுகிறானே. அது எப்படி? அந்த ஆஸ்ட்ரேலிய ஸோல்ஜர் தன்னுடைய பரங்கி மார்பைத் திறந்து காட்டிப் பச்சை குத்திக் கொள்கிறானே, எதற்காக? ஊசியினால் ஏற்படும் வேதனையையும் தாங்கிக்கொண்டு, பல்லைக் கடிக்கிறானே -அதன் காரணம்? ஒவ்வொரு இந்தியக் கடவுள்மார்களும் தங்கள் மனைவிகளை, நாக்கிலும், மார்பிலும் தாக்கிச் சுமந்தார்களாமே சுமக்கிறார்களாமே, அதுபோல் தாமும் செய்யலாம் என்ற எண்ணமா?– இல்லை தானும் ஒரு ‘ஆஸ்ட்ரேலிய மகாவிஷ்ணு’வாக வேண்டும் என்ற கருத்தா? இல்லை வீரலஷ்மியையே, தமது மார்பில் தாங்கி, போர்முனையில் வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்ற வரை உணர்ச்சியா? அதெல்லாமிருக்க முடியாது. தேய்ந்து போகாத மிருக உணர்ச்சி நிறைந்த பஞ்சை உன்னத்திற்கு நெஞ்சை நிமிர்த்தி நிமிர்த்திக் காட்டி, அதைப் பரவசப் படுத்தத்தான் இருக்கவேண்டும்!” – அவன் மனத்தில் சிந்தனைகள் எத்தனையோ விதமாகத் தெறித்து விழுந்தன.

மணி ஐந்தாகியதும்,ப்ளாட்பாரத்தில் வந்து நின்ற பாம்பே மெயிலில் ஏறி அமர்ந்து கொண்டான். என்னவோ, ஸ்திரீவாடையே அற்றுப்போன, புது உலகச் சமூகத்தில் தானும் ஒருவனாகச் சேரப் போகிறோம் என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு இன்னும் மங்கவில்லை.

இளைத்துப்போன சுடியரோகி இருமுவதுபோல புகையைக் கக்கிக்கொண்டு, முதுகை வளைத்துச் சென்றது, ‘பாம்பே மெயில்’.

ஜன்னல்மேல் முழங்கையை ஊன்றி மாறிச் சுழலும் வெளி யுலகைப் பார்த்துப், பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் அவன். மனசிலே குவியும் சிந்தனைக் குப்பையைக் காற்றிலே பறக்க விட்டுவிடலாம் என்பதுதான் அவனது எண்ணமே, என்னவோ? அதே வண்டியில், காக்கிச் , சட்டைகளைப் போட்டுக்கொண்டு, பகல் இரவு என்று தெரியாது, நித்திரையும் கலாட்டாவுமாகப் பொழுதைக் கழிக்கும் பட்டாளத்துப் பேர்வழிகளைப் பார்த்து, அவன் ஏதோ ஒன்றைத் திட்டமாக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான்.

“ஸ்மோக் பண்ணுறீங்களா, சார்!” என்ற’ உபசரணைக் குரல், அவனை உலகத்துக்கு இழுத்துவந்தது.

திரும்பிப் பார்த்தான்.

திறந்து வைத்த சிசுரெட் கேஸுடன் ஒரு ‘ஹவில் தார் கிளார்க்’ உட்கார்ந்திருந்தான். சிகரெட் பிடிக்கலாமென்று சபலம் பெருகியது. மேலும், நொந்து போன மன வேதனையைப், புகைச்சுருளின் போதையிலே, மறந்திருக்கலா மென்று அவன் நினைத்தான்.

ஆனால், அந்த சிகரெட் கேஸினுள்ளும் ஒரு ஸ்திரீயின் புகைப்படம் ?

“என்ன சார் பார்க்கிறீங்க?”

“ஒன்ணுமில்லே. இந்தப் படத்தைத்தான்.”

சிறிது நேரம் மௌனம்: ‘இது யாராயிருக்கலாம்? அவனுடைய மனைவியா? சகோதரியா? இல்லை …….’

“இது யார் படம்?”

“‘மை லவ்’ஸ் ஸார்!”:

“சரிதான்”

மீண்டும் அவன் கை ஜன்னல் பலகையை நாடியது. பற்றவைத்த சிகரெட்டைப் பலமாக இழுத்துக் கொண்டே, வெளியுலகல் மனதைச் செலுத்தினான். ஆனால் , மனசின் மூலையில் மட்டும் அந்த “‘மை லவ்’ ஸ்” என்ற வார்த்தைகள் கட்டிப் போட்ட, காளையங் கன்றைப்போல், துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அதை அவிழ்த்துவிட அவனுக்குச் சக்தி போதவில்லை. “அவனுடைய காதவியா? அவளை இவன் கல்யாணம் பண்ணியிருப்பானா? இல்லை. வெறும் மானஸீக மந்திர ஜபத்தோடு மட்டும் நின்றிருப்பானா? ஆயிரம் இரண்டாயிரம் மைலுக்கு அப்பால் பிரிந்து இருக்கும் இந்த ‘உண்மைக் காதலர்’களின் உள்ளம் எவ்வாறி ருக்கும்? சே! காதலைப்பற்றி எனக்கென்ன நினைப்பு!”

கையிருந்த சிகரெட் எரிந்து, கரைந்து போய், கைவிரலைச் சுட ஆரம்பித்தபோது தான், அவனுக்குத் தன்னி ருப்பிட உணர்ச்சி ஏற்பட்டது. சிகரெட்டைத் தூர எறிந்து விட்டு, கசந்த நாக்கைச் சப்புத்தட்டிக்கொண்டான், சுடுபட்ட விரலை, நாக்கு நுனியில் வைத்து, ஹிதம் பண்ணிக்கொண்டே, மீண்டும் வெளியே தலையை நீட்டினான்.

ஆனால், அவனை அப்படியிருக்க, சுற்றுப்புறம் விட்டுக் கொடுக்கவில்லை. சொப்பன நினைவுடன் வண்டியை இழுத்துச் செல்லும் ‘ஜட்கா’. குதிரை, எப்படி வண்டிக்காரனின் லகானின் வெட்டிப்பினால், தன் நினைவுக்கு வந்து ஓடுகிறதோ, அந்த மாதிரி ஆயிற்று, அவன் நிலைமை.

சொப்பனக் கடலில் திளைத்து, எதிர்கால நினைவுத் திட்டத்தைத் தயாரித்து மகிழும் அவனை அந்த ஹிந்துஸ் தான் மெட்டு இழுத்தது. வேறு வழியின்றி, மீண்டும் வண்டியினுள் பார்வையைச் செலுத்தினான். மேலே படிந்திருக்கும் மெது மண்ணை உதறிவிட்டு, வெளிவர முயலும் இளம் முளையைப்போல், யெளவனம் எட்டிப் பார்க்கும் இளம் பெண்ணொருத்தி பாடிக்கொண்டிருந்தாள்.,

பிச்சைக்காரிதான். பிச்சைச் சோறு செல்லும் அதே தொண்டையிலிருந்துதான், அமுத கானமும் பிறந்து வந்தது. தனது. தாய்ப் பாஷையாகிய மராத்தியிலே அவள் பாடிக் கொண்டிருந்தாள்.

ஆனால், அந்த வண்டியிலிருந்த ஒரு சிப்பாய்க்காவது அந்தப் பாட்டில் ரசிப்பு இல்லை. அந்த முக்காடு விலகிப் போன முகத்தில் ஒருவனுக்குக் கண். அவளுடைய கிழிந்து போன மேலங்கியின் வழியாய்த் தெரியும் இளமையின் விம்மல் பூரிப்பில் மற்றவனுக்குக் கண். வாடிப்போன சாம்பல் பூத்த பசி உதட்டில், ஒரு புன்னகை பூக்காதர் என்பதில் வேறொருவனுக்கு ஒரு கண் . ‘காட்டுக்கெரித்த நிலா’வாக, அவள் போட்டு வெளிவந்தது. அதற்குள் எங்கிருந்தோ தமிழிசை அபிமானியான ஒரு சிப்பாய் தமிழ்ப் பாட்டுப் பாடச் சொல்ல அவளை வேண்டிக்கொண்டான், அவளும், “ஹலை மோதுதே! ஹலை மோதுதே! ஹரியாது ஹென் மனம்!” என்ற ‘தமிழ்ப் பாட்டை’ப் பாடினாள். தமிழிசை அபிமானிக்கு உற்சாகம் கிளம்பி விட்டது. அதற்குள், ஒரு மலையாள ஆசாமி, “ஆயிரம் பெண்களை ஞாங் கண்டிட்டுண்டு. இதுபோலொருவளை ஞாங் கண்டிட்டில்லா!” என்று பாடினான்.

இவர்களுடைய கிண்டலுக்கும், நையாண்டிப் பேச்சுக்கும் அவள் ஆளாக வேண்டி வந்ததே யொழிய, கையில் சல்லிக் காசுகூட ஏறும் வழியைக் காணோம்.

அவன் மனத்தின் நம்பிக்கை மீண்டும் கரைய ஆரம்பித்தது.

“பிச்சைக்காரியின் பாட்டையுமா, கிண்டல் செய்வது? உண்டைச் சோற்றுக்காக, மானமிழந்து, பிச்சையெடுத்துத் திரியும் பேதையிடமா, இவர்களுடைய சிப்பாய்த்தனத் தையும், துப்பாக்கிப் பார்வையையும் காட்டுவது? அவள் பாடினால், அதற்கு எதிர்ப்பாட்டா பாடுவது?. “கெண்டை விழி மானே! என் அண்டை வரலாமோ” என்று பாடினானே அந்தத் தமிழ்ச் சிப்பாய்! தன் வீட்டில் தாயையும், சகோதரியையும் தனியே விட்டுவிட்டு வந்த உணர்ச்சியே இவர்களுக்கு மக்கிப்போய்விட்டதா?.அவளும் அந்த மாதிரி தானே. வந்திருக்கிறாள்?. இருவரும் பிழைக்க வந்தவர்கள். ஆனால், வழி வேறு?. அதையேன் இவர்கள் உணரவில்லை?

ரெய்ச்சூர் ஸ்டேஷனில் வண்டி நின்றது. சிந்தித்துச் சிந்தித்துச் சலித்த மனசுக்கு உற்சாகமூட்ட எண்ணிக் கீழே இறங்கி நாலு ‘பூரியும்’ பாஜியும்’, ‘கரம் சா’வும் சாப்பிட்டான். அந்த வேளையிலுங்கூட, அவன் கண்ணும் மனமும் ஓயவில்லை .

‘அதோ, அந்த ‘இண்டர் கிளாஸ்’ வண்டியில்…’ அவன் மனம் அங்கு சென்றது.

யாரோ ஒரு நர்ஸ் (அவளும், அந்தப் புது உலகத்துப் பேர்வழிதான்) ஒரு காக்கிச் சட்டைப் பேர்வழியின் மார்போடு மார்பாய், முகத்தோடு முகமாய்…சே! அவன் மனத்தில் பழங்கால நினைவுகள் சினிமாப் படம்போல விரைந்தோடின, அவனும்தான் எத்தனை தடவை தன் ‘உயிர்க் காதலி’யுடன், இதேமாதிரி நிலைமையில் இருந்திருக்கிறான்? ஆனால், அந்த உதட்டின் இனிமை அவனுக்குப் புளித்துப் போய்விட்டது.

புளித்துப் போன பழங்காடியின் வாசனை பட்டதுமே, முகத்தைச் சுளித்து, வெளிமூச்சு விடும் காளை மாட்டைப் போல, அவன் முகத்தைச் சுளித்துக்கொண்டான்.

“அவள் ஏன் இந்தப் பட்டாளத்தில் தன்னை ஒரு நர்ஸாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்? போர்முனைப் பணியிலே, பெண்னினமும் சேர வேண்டும் என்ற லட்சிய நினைவுக்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சேர்ந்தாளா? பிளாரன்ஸ் நைட்டிங்கேல் , முதலிய பெண்மணிகளெல்லாம் யுத்த முனையில் புரிந்த அருஞ் சேவைகளினால் தானே. புகழ் பெற்றார்கள், நாமும் ஏன் அப்படிப் பணிபுரிந்து புகழ் பெறக் கூடாது என்ற எண்ணத்தோடு சேர்ந்தாளா? இல்லை பழம் புராண காலங்களிலெல்லாம் பெண்களும் ஆணோடு கைகோத்து, யுத்த சேவை புரிந்தார்களாமே. தசரத சக்ரவர்த்திக்குக் கைகேயியும், கிருஷ்ண பகவானுக்குச் சத்ய பாமையும் வலது கையாக நின்று உதவி புரிந்தார்களாமே, அதுபோல் நாமும் புரியலாமே என்று தான் அந்த ஆணோடு அவ்வனவு ஒன்றிச் சேவை புரிந்துகொண்டிருக்கிறாளா?

“அதெல்லாயிருக்க முடியாது. அவளும் பெண். மாம்பழத்தின் உள்ளிருந்து குடையும் கருவண்டைப் போல, அவளுக்குக் கிறுகிறுப்பு ஊட்டும் அந்த இளமை வெறிதான் அவளை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுகிறது. சே! போர் முனையில் பணி செய்துவந்த அவள் மனசிலுமா இப்படி?”

மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டே , இடத்தில் அமர்ந்தான். தன்னை மறந்து இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால், இழுத்த புகையை யெல்லாம் உள்ளேயே ஜீரணித்துக் கொண்டான். ஆனால் அவன் நினைக்கிறபடி, அவனுடைய புலன்கள் கட்டுப்பட்டுத் தூங்க விடுகின்றனவா? அப்படியானால்தான் இந்த ‘ஜீவயாத்திரை’ புரிய வேண்டியதேயில்லையே, கொஞ்ச நஞ்சம் தூங்கிக் கிடந்த நரம்புகளும் உணர்ச்சி பெற்றுப் புடைத்துக் கொண்டு, அவன் சிந்தனைச் சக்கரத்தின் வேகத்தைக் கூட்டி விட்டன.

அவனுக்கு ஒரு நிலையும் கொள்ளவில்லை. கெட்ட சொப்பனம் காணும் நோயாளி நிலையிழந்து, புரண்டு புரண்டு படுப்பதுபோல, அவன் மாறி மாறி உட்கார்ந்து கொண்டிருந்தான்.

“கடவுள் ஏன் மனிதனுக்குப், பகுத்தறிவு என்று ஒன்றைப் படைக்கப் வேண்டும்?”. மற்ற ஜீவராசிகளுக்கு அமைத்தது போலவே, ஐந்தறிவுடன் நிறுத்தியிருக்கக் கூடாதா? தான் கண்டு பிடித்த ஆறாம் அறிவைப் பரிசீலனை செய்ய, இந்த பககத ஜன்மந்தானா, கண்ணில் படவேண்டும்? சிந்தனை என்பதே மனிதனுக்கில்லாதிருந்தால்?.

“அதோ விடுபட்ட, அம்புபோலப் பறந்து திரிகின்றனவே பட்சி ஜாலங்கள்! அவற்றுக்கென்ன, பகுத்தறிவா இருக்கிறது?. அவற்றுக்கு உற்சாகமில்லையா? கவலை என்பது என்றாவது அவற்றின் வாழ்வில் தோன்றியதுண்டா?. இருக்க முடியாது. அந்தப் பட்சி ஜாலங்களில் நானும் ஒன்றாக இருந்தால்?. சே! பழையபடியும் இந்தச் சிந்தனை பண்ணுகிற சேட்டையைப் பாரேன்.”

இப்படியே அவன் அஸ்திவாரமற்ற ஆகாயப் பரப்பில், மண் கோட்டைகள் சமைத்துக்கொண்டிருந்தான், அவை எந்த நேரமும் மீண்டும் மணலாகிவிடும் என்ற உணர்ச்சியே அவனுக்கு உதிக்கவில்லை.

திருப்பதி யாத்திரை செல்லும் கிழ யாத்திரீகன் பாதி வழி ஏறியதும், ஓய்ந்த இடுப்பில் கையை ஊன்றி, மேலே ஏறிட்டுப் பார்த்துக் கொட்டாவி விடுவதுபோல், மெயில் இரவு மூன்று மணிக்கு, பூனா ஸ்டேஷனில் வந்து நின்று பெருமூச்சுவிட்டது.

அவன் கீழே இறங்கிக் கிட்டிக்கும் குளிரை விரட்டி யடிக்க, ‘கரம் சா’ சாப்பிட்டான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டே ஐஸ் கட்டியில் நடப்பதுபோல், பீளாட் பாரத்தில் உலவிக்கொண்டிருந்தான்.

தலையில் கட்டிய கம்பளிச் சவுக்கத்தை, இயக்கிப் பிடித்தவாறே நிற்கவாரம்பித்தான் அவன்.

ஒதுக்கி வைத்த பொருளை வேண்டுமென்றே எடுத்துப் பார்க்கும் குறும்புக் குழந்தையைப்போல், அவன் கண்கள் அந்தக் காட்சியை நாடிற்று.

எவனோ, ஒரு B.O.R. (அன்னிய ஸோல்ஜர்) எவளோ ஒருத்தியிடம் விடைபெற்றுக் கொண்டிருந்தான். அவன் யாரோ தெரியவில்லை. இரவு குடிக்கப்போன் ஹோட்டலில் சிநேக மானவளோ என்னவோ? . அவன் பிரிந்து சென்றதும், எவன் அவளுக்காகக் காத்திருக்கிறானோ?

ரயிலில் ஏறப் போகுமுன், அப்படியே அவளை நெஞ்சோடு அணைத்து, முகத்தை நிமிர்த்திப் பிடித்து, அண்ணாந்து நின்று துடிதுடிக்கும் சாயந் தடலின் உதடுகளில் தன் முகத்தை முரட்டுத் தனமாக வைத்து அழுத்தினான்.

அவன் மனசில் காந்தமிழந்து போன உணர்ச்சி மீண்டும் வேகம் பெற்றுத் துடிதுடிக்க ஆரம்பித்தது. அப்படியே, தன் மார்போடு கட்டியிருந்த கைகளை இறுக்கிப் பிடித்து கணப்பு ஏற்படுத்திக் கொண்டான்.

“சே! இவர்களுக்கென்ன, வெட்கமேயில்லையா? பத்து ஆண் பெண் நடமாடும் சந்தையிலா, இந்த மாதிரி ‘ஆபாசம்’ பண்ணுவது? அவர்கள் ஆசையை, இப்படித் தான் காட்டிக்கொள்ள வேண்டுமா? நாகரிகத்தின் நரக விளைவுதானா, இதெல்லாம்? நெஞ்சோடு அணைத்து – அப்பா! அவ்வளவு நேரம்? அவன் தான் அந்த அணைப்பின் இன்பத்தைப் பெற்றானோ இல்லை – அவன் தன் மேல், குளிருக்காகப் போட்டிருக்கிறனே, கனத்த ‘கம்பளிக் கோட்ட-அது தான் அனுபவித்ததோ? யார் கண்டார்கள்? இருந்தாலும் இந்த மாதிரி நடுத் தெருவில் நிர்வாணமாய் அலைவதற்கும், இந்த மாதிரி ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் அணைத்துக்கொண்டு முகத்தோடு முகம் தேய்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

“ஆனல்–?”

“அவன் போர்முனைக்குச் செல்பவன். அவன் பதிக்கிற இந்த முத்தத்தான் அவன் வாழ்விலேயே கடைசியாக . இருக்கலாம். ஆவி தீர்ந்த பின்னர் அவன் தரை மகளை ஒருவேளை முத்தமிடலாம். ஆனால், இந்தத் துரை மகளை முத்தமிட முடியுமா?

“அப்பா! ஓரு மட்டும் அவர்கள் விலகிக்கொண்டார்கள், அவர்கள். முகத்தில் கொஞ்சமேனும் வெட்கமிருக்கிறதா?”

அவன் நீண்ட பெருமூச்சுவிட்டாள், உள்ளத்தில் பித்தக் கனல் பயங்கரமாகச் சீறியது. பழங்கால நினைவுச் சேற்றில், அவன் மனப்பன்றி மீண்டும் புரண்டது.

காதல்-எனக்கு இந்த வார்த்தையில்கூட, கசப்பு ஏற்பட்டுவிட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆசைப் பித்தம் அதிகமாகி, ஒருவரையொருவர் கட்டியணைக்கும் வெறி மூண்டால் அதன் பெயர்? சே! எனக்கு என்னவோ, . வெறுத்துவிட்டது. ஆனால், தனி மரம் தோப்பாகி விடுமா? தாமரை இலைக்குக் கீழுள்ள அகண்ட நீல நீர்ப்பரப்பிற்கும், அந்த இலைமேல் தனி வாசம் செய்யும் வைர மழைத்துளிக்கும் வித்தியாசமில்லையா? அதைப் போலத்தான் என் வாழ்வும். உலகத்தின் மனித வெள்ளத்தைவிட அதனுடன் ஒட்டியும் ஒட்டாமலும் வாழும் என் வாழ்க்கைத்துளி சிறந்ததில்லையா?

“இதென்ன? ஆதாரமற்ற முட்டாள் விசாரணை! கடவுளைத் துதிக்கும் கைகள் தான் கொடுவாளையுத் தொடு கிறது. இந்த மனமும் அப்படித்தான், ஆற்றில் குளித்த அதே உடம்பைச் சேற்றிலும் நனைக்கிறது. அப்பா! மனம் என்பதே ஒரு புதிர். அதை ஆராயப் புகுந்தால், வாழைப் பூவின் மடல் உரித்த கதை தான்!”

அவன் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொரண்டான். சிந்தனைச் சக்கரங்களின் கோரப் பற்களிடையே, அகப்பட்டு நைந்து கொண்டிருந்த அவனுக்கு அந்த லாஹிரி வெந்த புண்ணுக்கு விசுறுவதுபோல் இருந்தது.

மெயிலும் பம்பாயை நெருங்கும் உற்சாகத்தில், பேய் வேகத்தில் சென்றது. சிறிது நேரத்தில் மாதங்கள், தாதர், பைகுல்லா எல்லாவற்றையும் தாண்டி, விக்டோரியா டெர்மினலஸ்ஸில் போய், பந்தயத்தில் ஜெயித்த குதிரை போலக் கம்பீரமாக நின்றது..

அவன் மூட்டை முடிச்சுகளைத் தயார் செய்துகொண்டு கீழே இறங்கினான். அப்போது, அவன் மனம் சர்வ சூன்யமாய் இருந்தது. அவனுடைய கண்கான நம்பிக்கையும், கசந்த உண்மையும் மறைந்துவிட்டன. இத்தனை புயல்களுக்குப் பிறகும் அவன் மனசில், “ஆணை அழிக்க வரும் ஆலமல்ல பெண்; அதை அருந்த வரும் அநாதை. ஆனால், ஆண் பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும்” என்ற உண்மை முளைகூட விடவில்லை.

சூன்யமான பாழ் மனசுடன், ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து, போர்பந்தரை நோக்கி நடந்தான்.

“‘பாபுஜி! அச்சா சோக்ரிஹை! பஹத் கம்திரேட் ஹை!” (பாபு, ரொம்ப நல்ல பொண்! குறைஞ்ச ரேட்டு!) என்று கூறிக்கொண்டே பக்கத்தில் நெருங்கினான், பதின் மூன்றே வயதுள்ள ஒரு ‘டாபர் மாமா.’

மனசில் புகைந்த எரிச்சலுடன் “தூ!” வென்று காறித் துப்பினான், அவன்.

நல்லவேளை! அது அவன்மேல் வீழாமல் போயிற்று!

– க்ஷணப்பித்தம் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 50, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *