செல்லப் பல்லி..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 2,087 
 

கதாநாயகியை, ‘வீட்டை விட்டு வெளியே போ’ என்கிறான் கணவன்.

“நா ஏன் போகணும்.போக வேண்டியது நீயும். உன் அம்மாவும்.!!”

“என்னது..நீயா. அவ்வளவு திமிரா.??”

அவளை அடிக்க கை ஓங்குகிறான் அவன்..!

“த்ஸ்ஸ்ஸ்.!”

பக்கத்திலிருந்து உச்சு கொட்டும் சப்தம்.

நாலு பக்கமும் திரும்பி பார்த்தேன் . நான் மட்டும்தான்.

கணவர் மும்முரமாய் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

ப்ரியாவும். சூர்யாவும் அறைக்கதவை சாத்திக் கொண்டு ஏதோ வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

ஏழிலிருந்து ஒன்பது வரை என்னுடைய சீரியல் நேரம்.

ஏற்கனவே சப்பாத்தி.மட்டர் பன்னீர்.. தயிர்சாதம். டைனிங் டேபிளில் தயார்.

இரண்டு மணி நேரத்துக்கு யார் வந்தாலும் அசைக்க முடியாது.

ஏழிலிருந்து ஏழரை ..நாக தேவதை.!

ஏழரை to எட்டு. மாமியாரும். சாமியாரும்.!

எட்டு to எட்டரை. மயக்கும் மோகினி.!

எட்டரை to ஒன்பது..அத்தை.!

விளம்பரங்கள் முடிவதற்குள் ஓடிப்போய் மாடியைப் பார்த்து, “ப்ரியா..! சூர்யா.!! சாப்பிட வாங்க. அப்பாவையும் வரச்சொல்லுங்க.” என்று உரக்க குரல் குடுத்து விட்டு என்னுடைய அரியாசனத்தில் அமர்ந்து கொண்டேன்..

ஓங்கின அவன் கையைப் பிடித்தாள் கதாநாயகி.!

“திருப்பி உன்ன அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்.???”

மறுபடியும் அதே சத்தம்.டி.வி.யின் கீழேயிருந்து வந்தது.

ஆம். எப்போதும் வரும் அதே பல்லிதான். ஒரு வாரமாகவே சரியாக ஏழு மணிக்கு நான் உட்கார்ந்ததும் அதுவும் வந்து விடுகிறது.சில சமயம் தனது குட்டித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.!

இளம் பழுப்பு நிறத்தில், வெள்ளைப் புள்ளிகள். உருண்டையாய் மின்னும் கண்கள்.

எங்கேயிருந்தாலும் என்னையே பார்ப்பது போல பளபளக்கும்.. அழகாகத்தான் இருக்கிறாள்..

நான் சோஃபாவிலிருந்து. எழுந்திருக்கும் வரை அதுவும் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருக்கும்.

சீரியலின் இடைவேளைபோதுதான் நான் அதை கவனித்திருக்கிறேன்.

அதை ஒரு பொருட்டாகவே நான் மதித்ததில்லை..

இன்றைக்குத்தான் அதன் சத்தம் என் காதில் விழுந்தது.!!

இப்போது கதாநாயகியின் மாமியார் உள்ளேயிருந்து ஓடி வந்தாள்.

பளாரன்று கதாநாயகியின் கன்னத்தில் அறைந்தாள்.

“ப்ச்சு.” என்றது பல்லி.!!

“என்னடா. நீயும் சீரியல் பாக்கிறயா.??”

“ஆமாம் ” என்பது போல தலையை ஆட்டியது.

எனக்கு ஒரே ஆச்சரியம். பல்லி என்னிடம் பேசுகிறதா ?? எனக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.

பாம்பைக் கண்டால் படை நடுங்குகிறதோ இல்லையோ பல்லியைக்கண்டால் இந்த பூலோகமே நடுங்கும்.!

ப்ரியா ‘பல்லி’ என்ற மூன்றெழுத்தைக் கேட்டாலே அலறுவாள்.

“அம்மா.அந்த பல்லிய போகச் சொல்லேன். எனக்கு பிடிக்கவே யில்லை.பயம்மா இருக்கும்மா.!”

என் புடவைத் தலைப்புக்குப் பின்னால் ஒளிந்து கொள்வாள்.

சூர்யா வேற டைப்.

ஃபூ.இத்துனூண்டு பல்லிக்கு என்ன பயம்.இப்போ பாரு.

நீண்ட ஒட்டடைக் கம்பை எடுத்துக் கொண்டு ‘ ச்சூ.ச்சூ.’ என்று விக்ரம் மாதிரி சிலம்பாட்டம் ஆடுவான்..

நேராக அவன் தலையில் விழுந்தது.

அவ்வளவுதான்..அலறிப் புடைத்துக்கொண்டு வீட்டைச் சுற்றி ஓடி.’ பல்லி.பல்லி.’ என்று எட்டூருக்கு கேட்பது மாதிரி கத்திவிட்டான்.

அதற்கப்புறம் பல்லி பேச்சை எடுப்பதேயில்லை.

இவர் கதையே வேற.

“இந்த சாம்பார் ஏன் திறந்திருக்கு.??? பல்லி .கில்லி.விழுந்து வைக்கப் போறது.!!”

“நான் இப்போ தாளிக்க திறந்தேன். எல்லாம் மூடி தான் இருக்கு.!!”

“எனக்கு இந்த வாழைப்பழம் வேண்டாம்.பல்லி நக்கியிருக்கும்.!!”

“நுனியைப் பிச்சு போட்டுட்டு சாப்பிடக்கூடாதா.???”

“ஐய்யய்யோ.விஷம்மா. எல்லாம் பழத்தில எறங்கி இருக்கும்..!”

வாங்கின பழத்தில் பாதி குப்பைத் தொட்டியில் தான். ‘பல்லிக்கு விஷமேயில்லை’ என்று அடித்துச் சொன்னாலும் அவர் நம்பத் தயாராயில்லை..!

எனக்கு மட்டும் பல்லி பயம் அறவே கிடையாது.பல்லி என்றில்லை. எந்த உயிருள்ள, செத்த.சீவராசிகளிடம் பயம் தோன்றியதே இல்லை.

நான் கல்லூரியில் படிக்கும் போது ‘Zoology ‘ மேஜர்.சகல விதமான சீவராசிகளை ஃபார்மலின் கரைசலில் போட்டு டிசெக்க்ஷன் போர்டில் வைத்து அறுக்க வேண்டிய கட்டாயம்.

பல்லி, தவளை, கரப்பு.etc.etc.

என்னுடன் கூட டிசெக்ஷன் பண்ணுபவள் பூர்ணிமா.

ஒரு நாள் ஒரு தவளை அரைகுறை மயக்கத்திலிருந்து ஆணியைப் பிய்த்துக் கொண்டு அவள் மேல் துள்ளியதிலிருந்து லிட்டரேச்சர் மேஜருக்கு மாற்றிக் கொண்டவள்.

நான் ‘ பல்லியை ‘ முறத்தால் அடித்து விரட்டிய வீரத் தமிழச்சி மரபைச் சேர்ந்தவளாயிருக்கவேண்டும்..!!

ஞாயிற்றுக்கிழமை.அன்று மட்டும் எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவோம்.. சீரியல் ஏதும் இல்லை என்பது ஒரு காரணம். குழந்தைகள் முகத்தை நன்றாகப் பார்க்கலாமே..

இல்லையென்றால் முகமே மறந்து விடும்.!

“அம்மா. ஏன் எல்லா அம்மாக்களுக்கு மட்டும் சீரியல் பிடிக்குது. அப்பாக்கள் பாக்க மாட்டாங்களா.??”

“அப்பாக்களுக்கு பணம் பண்றது தான் ஒரே குறி.இவங்கள்ளாம் அடுத்த நிதி மந்திரி ஆகப்போறமாதிரி நினப்பு.

interest rate..stock market.oil price தவிர வேற எதிலையும் கவனம் இருந்தால்தானே.”

“நீ மட்டும் எண்ணெய் விலை பத்தி கவலைப் படாம இருக்கியா.??”

என் கணவருக்கு ரோஷம் வந்துவிட்டது.

“நானா.??”

“ஆமா. ‘நல்லெண்ணெய் வில கூடிட்டு போகுது. !?தேங்காயெண்ணயில‌ வாசனையே இல்ல ‘ன்னு சொன்னியே.!!”

“அப்பா ஜோக்கடிக்கிறாரும்மா. கொஞ்சம்தான் சிரியேன்..!”

“அம்மா.இன்னிக்கு பூரி. கிழங்கு சூப்பர். இன்னும் இரண்டு எடுத்துக்கட்டா.!!”

மேலேயிருந்து ‘ த்ஸ்ஸ்ஸ்’ சத்தம்.

“அட.நீ இங்கதான் இருக்கியா.??”

“அம்மா யாரோட பேசற.??? பல்லி தான் இருக்கு.தலைல விழப்போறது.!!”

ப்ரியா தட்டை எடுத்துக் கொண்டு மாறி உட்கார்ந்தாள்.

“உனக்கும் பூரி வேணுமா.???”

நான் செல்லியைப் பார்த்துக் கேட்டேன்.!

ஆம். அதற்கு பேர் வைத்து விட்டேன். செல்லி.. என் செல்லப் பல்லி..!

“அம்மா.என்னம்மா உளறிட்டு இருக்க.??? பல்லிகிட்டயா பேசற.????”

“டேய்.சூர்யா.அது பல்லின்னு சொல்லாத.அவ பேரு செல்லி. என்னோடே செல்லப்பல்லி.!!”

“ஏம்மா. எல்லாரும் செல்லமா பூனை.நாய்தான் வளப்பாங்க.நீ பல்லிய வளக்கிறயா.???”

“ப்ச்ச்ச்.ப்ச்ச்ச். என்றாள் செல்லி.”

“பாரு.ஆமாம்னு சொல்றா..!”

“அப்பா.அம்மாவ ஒரு நல்ல டாக்டரா பாத்து காண்பிக்கணும்.!!”

திங்கட்கிழமை..ஏழு மணி..சரியாக செல்லி டி.வி. பக்கத்தில். இன்னும் சீரியல் ஆரம்பிக்கவில்லை.

அவள் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஒரு சின்ன பூச்சி. மூலையில் பறந்து வந்து உட்கார்ந்த அடுத்த வினாடி பாய்ந்து வந்து கவ்வினாள்.

பூச்சி உடலை அப்படியும் இப்படியும் அசைத்துப் பார்த்தது.. ம்ஹூம்.லபக்கென்று செல்லி அதை முழுங்கிவிட்டது.

சீரியலை மறந்தே போனேன்.

“த்ஸ்ஸ்.”தலையைத் தூக்கி என்னைப் பார்த்தாள்.

செல்லி தான் நியாபகப்படுத்தினாள்.!

இப்போதேல்லாம் செல்லி நான் எங்கே போனாலும் நாய்க்குட்டி மாதிரி கூடவே வருகிறாள்.

எங்களுக்குள் ஒரு வார்த்தை பரிமாற்றமே நடக்கத் தொடங்கி விட்டது.

ஆமாம் என்றால் ஒரு தடவை ‘ ப்ச்ச்ச்’ என்று சத்தம் வரும். இல்லையென்றால் ‘ த்ஸ்ஸ்ஸ். த்ஸ்ஸ்ஸ் . த்ஸ்ஸ்ஸ்.’ என்று மூணு தடவை சத்தம் போடுவாள்.

காலையில் என்ன டிபன் பண்ணலாமென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

உப்புமா செய்யலாம். என்று நினைக்கும்போது ‘த்ஸ்ஸ்ஸ்.’ என்று மூன்று முறை மேலேயிருந்து சத்தம் வந்தது.

“ஓ..வேண்டாமா.சரி. கிச்சடி. பொங்கல். இட்லி..!”

எல்லாமே No.no.no.!’

“தோசை..????”

‘ஆமாம் என்ற பதில்.

“சரி. இன்னிக்கு தோசை தான்.. அதுவும் மசால் தோசை.”

‘ ப்ச்ச்ச்.! என்றாள்.

மேலே பார்த்து.”தாங்யூ.!” என்றேன்.

அப்போதுதான் உள்ளே நுழைந்தாள் அன்னம்மா.. எங்கள் வீட்டில் வேலைக்கு உதவி செய்பவள்.பத்து வருஷ பழக்கம்.

“என்னம்மா. அண்ணாந்து பார்த்து பேசிக்கிணு இருக்க.மேல போன மாமியாரு கூப்பிட்டுதாங்காட்டியும்.?? அங்க போயி உன் நியாபகம் வந்திருச்சு போல.”

“சும்மாயிரு அன்னம்மா.இப்ப போயி அவுங்களை நியாபகப்படுத்திட்டு.மேல நல்லா பாரு.!!

அன்னம்மாவுக்கு ஒரு மாசமாகவே கண் சரியாகத் தெரியவில்லை. புரை..ஆபரேஷன் பண்ணிக்கொள்ள பயம்..!

“ஒண்ணுத்தையும் காணலியே. மொதநாத்து தான் ஒட்டடை அடிச்சு விட்டேன்.க்ளீனா இருக்குதே.!

“அந்த மூலைல பாரு..!”

“ஓ.அந்த சனியன சொல்றியா. இங்கையும் வந்திடுச்சா.? எங்கையில மட்டும் சிக்கட்டும்.தல வேற.வாலு வேற தான்.!”

“ஐய்யோ.அன்னம்மா.செல்லிய அப்பிடி சொல்லாத.!”

“இதென்னடி கூத்தா இருக்குது..பல்லியப்போய் செல்லின்னு கொஞ்சிறியே.!! உனக்கென்ன பயித்தியம். கியித்தியம். பிடிச்சு போச்சா.???”

“பசங்களும் அதையேதான் சொல்றாங்க!! இந்தா.இந்த டீயைப் பிடி.உக்காரு.உனக்கு எல்லாமே புரியும்படி சொல்றேன்.!”

முதல் நாள் டி.வி.பார்க்கும்போது நடந்ததிலிருந்து ஒன்று விடாமல் சொன்னேன்.

“செல்லி விவரமான ஆளாயிருப்பா போலியே. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராத் தெரியுது.!”

“இரு. ஒரு நாள் காட்டித் தரேன். தயவுசெய்து அந்த ஒண்ணும் பண்ணிடாத அன்னம்மா.!”

‘ப்ச்ச்ச்’ என்று மேலிருந்து குரல் கேட்டு அன்னம்மாவே அசந்து விட்டாள்.!

ஒரு தொந்தரவும் இல்லாமல் எங்களுடைய நட்பு நாளொரு மேனியும். பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டுதான் இருந்தது..

இப்போதெல்லாம் சீரியல் பார்க்கும் ஆர்வத்தைவிட செல்லியிடம் பேசுவது எனக்கு வழக்கமானது.

பிஸ்கெட் துண்டுகள். ஓமப்பொடி.பொரி. திராட்சை பழம்.என்று ஏதாவது போட்டுக் கொண்டிருப்பேன்.

சில நாள் தொடவே மாட்டாள்!

அன்னம்மா கூட என்னிடம் குறைபட்டுக் கொண்டாள்.

“ஏம்மா.நெதம் மூலைல குப்ப வருது.சுத்தமா பெருக்கிட்டுத்தானே போறேன்.”!!

“அம்மா.நீங்க தினமும் அவளுக்கு லட்ச ரூபாய் தரணும்..மூலையப் பெருக்க.”

ப்ரியா பெரிதாகச் சிரித்தாள்.

எனக்கு சுத்தமாய் புரியவில்லை.

“அம்மா.. தினமும் டி.வி.பாக்கிறயே.உனக்கு புரியலையா.???”

ஒருநாள் மாலை ஐந்து மணி இருக்கும்.அன்னம்மா வேலையெல்லாம் முடித்து விட்டு கிளம்பும் சமயம்.

சூர்யா அறையில் ஏதோ குசுகுசுவென்று ரகசிய குரல்கள்.

பல்லி என்ற பேர் அடிபடவே மறைந்து நின்று கேட்டேன்.

“அன்னம்மா .. இந்த பல்லி செய்யுற அட்டகாசம் தாங்கல. அம்மா குடுக்கிற இடம்தான்.அம்மா பின்னாடியே போகுது. எப்படியாவது விரட்டி அடிக்கணும். நீங்கதான் ஏதாவது ஐடியா குடுக்கணும்.!!”

“பாவம் தம்பி.!!இருந்துட்டு போவுது.அம்மா பிரியமா வச்சிருக்குது. ஒரு பூச்சி.பொட்டு.இருக்குதா பாரு.உன்னிய என்ன செய்யுது.???”

“அத பார்த்தாலே குமட்டிட்டு வருது.அன்னம்மா..!!”

அன்னம்மா. ஒரு வாரத்துக்கப்புறம் அந்த பல்லி இந்த வீட்ல இருக்கக் கூடாது. உங்களுக்கு நூறு ரூபா தரேன்.!!”

“பாக்கலாம் தம்பி.!! அம்மா என்ன சொல்லுதோ.????”

“அம்மாவ நான் சமாளிச்சுக்கிறேன்.நீ உன் வேலய ஆரம்பி.!”

சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

இவர் அதுக்கு மேல.

“சங்கரி.. நானும் பொறுமையா இருந்து பாத்துட்டேன்.ஒண்ணு நான் இந்த வீட்ல இருக்கணும்.இல்லைனா பல்லி.இரண்டில ஒண்ணு முடிவு பண்ணு.!”

“பல்லி..”என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

இரண்டு நாள் சத்தமில்லாமல் நகர்ந்தது.

செல்லியும் என்னிடம் அவ்வளவாய் பேசவில்லை. ஆனாலும் ‘ நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்.போ.போ.போ. என்று என் பின்னால் வந்து கொண்டுதான் இருந்தாள்.

“என்ன செல்லி. ஏன் சைலன்ட் ஆய்ட்ட..பயம்மா இருக்கா.????

‘ப்ச்ச்ச்’ என்றாள்.

வருவதை முன்கூட்டியே அறியும் சக்தி மிருகங்களுக்கு மனிதர்களை விட அதிகம். பாவம்.ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று அதற்கு தெரிந்திருக்கும்..!

எனக்கு எல்லார் மேலும் எரிச்சலாய் வந்தது.சும்மா அதுபாட்டுக்கு யாரையும் தொந்தரவு பண்ணாமல் மூலையில்,ஏதோ வாயிலகப்பட்ட பூச்சியைப் பிடித்து தின்றுகொண்டு காலத்தைக் கழிக்கிறது. அதைப் போய்.!

வியாழக்கிழமை.

என் செல்லம் சுத்தமாய் மிரண்டு போயிருக்கவேண்டும்.

“செல்லி. என்னம்மா.???”

பதிலே இல்லை.

சமயலறைக்கு போனவள் மூலையில் ஏதோ உருண்டையாய் காப்பி கலரில்.!!

அங்கங்கே வெங்காயத் துண்டுகள்.!

வாசல் கதவிடுக்கில் கொஞ்சம் பூண்டு பற்கள்!

ஏதோ சதி நடக்கிறது.!!

அன்னம்மா வந்ததும் பிடித்துக் கொண்டேன்.

“அன்னம்மா.என்ன நடக்குது இங்க. உண்மையைச் சொல்லு.!!”

“என்னம்மா..????”

பதறினாள் அன்னம்மா.‌

கீழே குனிந்து அந்த உருண்டைகளைப் பொறுக்கினேன். அவளிடம் காட்டினேன்..

“ஆமா.இது என்ன கண்ராவி. அந்த பல்லி சனியன் முட்ட, கிட்ட, போட்டிருக்கும். ஐய்யே.அத தொடாத.கை கழுவு முன்னே.!”

“நிறுத்து ஒன் டிராமாவ.மோந்து பாரு.! காப்பித்தூள் வாசம் வருதா இல்லையா.??? வெங்காயம் வேற வீடு முழுசும்.செல்லிய சாகடிக்கத்தானே இந்த வேல.!!”

“என்ன மன்னிச்சுக்கம்மா. பிள்ளைகளும் , ஐயாவும் கண்டிஷனா சொல்லிட்டாங்க. பல்லியை வீட்ட விட்டு துரத்தலைனா என்ன துரத்திடுவாங்களாம்..!”

பல்லிக்கு எதிராக இத்தனை பெரிய சதியா.???

***

வெள்ளி.சனி.செல்லியைக் காணவில்லை.பயந்து கொண்டு மூலையில் பதுங்கியிருக்க வேண்டும்.

திங்கட்கிழமை.

வழக்கம்போல அன்னம்மா வேலைக்கு வந்தாள். ஆனால் முகத்தில் ஏதோ பறிகொடுத்த மாதிரி சோகம்.

“என்ன அன்னம்மா. உடம்புக்கு சரியில்லையா.??? ஏன் உம்முன்னு இருக்க.???”

“நானு நல்லாத்தானே இருக்கேன்.உம்மூஞ்சிதான் சரியில்ல.!!”

“செல்லிய பாத்து மூணு நாளாச்சு.என்ன !! எல்லோரும் சேர்ந்து விரட்டி அடிச்சிட்டீங்களா.இல்லைனா ஒரேவழியா சாகடிச்சிட்டீங்களா..?”

“அப்பிடியெல்லாம் சொல்லாத.!!அது என்ன வாடகை குடுத்து வீட்ல குடியிருக்குதா.????எங்கனாச்சும் வேற வீட்டுக்கு போயிருக்கும். விடு.அதையே நெனச்சு புலம்பி ஆளே எளச்சு போயிட்ட. !!விடும்மா.!!

அன்னம்மா சொல்லிவிட்டாளே தவிர ஞாயிற்றுக்கிழமை சம்பவம்.. நினைத்தாலே ஈரக்குலையேல்லாம் நடுங்குகிறது.

குடும்பத்தோடு ஒரு கல்யாணத்துக்கு எல்லோரும் கிளம்பி விட்டார்கள். வரும்வரை வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டும்.

சுத்தமாய் வீட்டைப் பெருக்கி முடித்தாள். துடைக்க மாப்புமாய் வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.

வாசற்கதவிடுக்கில் பல்லி வால். கதவின் பின்புறம் பார்த்தவள் துணியைப் போட்டு விட்டு அப்படியே உட்கார்ந்தாள்.தலை தனியாக . பாவம். பரிதாபமாய் கிடந்தது பல்லி..

யாரோ போகும் அவசரத்தில் கவனிக்காமல் கதவை அடித்து சாத்தியிருக்க வேண்டும்.

அது நிச்சயம் செல்லி தான்.பத்து நிமிடம் கையும் காலும் ஓடவில்லை.

நன்றாக டெட்டால் போட்டுக் கழுவி விட்டாள்.

அவர்கள் திரும்பி வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டாள்.!

அம்மாவிடம் சொல்லி விடலாமா என்று ஒரு வினாடி யோசித்தாள்.

சங்கரி தாங்கமாட்டாள்..

குழந்தைகளிடம் கூட மூச்சு விடவில்லை.

“அம்மா. எவ்வளவு நாள் இப்படியே இருக்கப்போற.????ப்ளீஸ் அம்மா.அது வேற வீட்டுக்கு போயிருக்கும்.!!”

“என்ன விட்டுட்டு போக மாட்டாடா. எனக்கு நல்லா தெரியும்.அவ நிச்சயம் உயிரோட இல்ல.!!”

ஒரு பத்து நாள் போயிருக்கும்..

“அம்மா. அம்மா. சீக்கிரம் வா.உன்னோட செல்லி..!!”

“அண்ணாந்து பார்த்தாள்.!”

‘ப்ச்ச்ச்.!!’ என்றது.

“பாத்தியா. உன் செல்லி தான்.!”

“அடிப்போடி. என்னோடே செல்லிய எனக்கு அடையாளம் தெரியாதா.??? என்ன யாரும் சமாதானப் படுத்த வேண்டாம்..”

அம்மா போய்விட்டாள்.

“டேய்.அதக் கூப்பிட்டு பாரு!!”

‘செல்லி.செல்லி!” என்று கூப்பிட்டான் சூர்யா..

திரும்பியும் பார்க்கவில்லை.

“அதுக்கு வேற பேர் வைக்கலாம்.லில்லி.நல்லாருக்கா!!”

“லில்லி.லில்லி” என்று கூப்பிட்டாள் ப்ரியா.

“ப்ச்ச்ச். ப்ச்ச்ச்!!” என்று பதில் வந்தது.

“ஹைய்யா.பாரு. அம்மா சொன்னது சரிதான்.. நம்மளோட புது ஃப்ரெண்ட். நீ இனிமே எங்கேயும் போகாத. இங்கியே இருக்கணும்.சரியா.!”

‘சரி’ என்பது போல் தலையைத் தூக்கிப் பார்த்தாள் லில்லி. அவர்களின் செல்லப் பல்லி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *