தற்கொலைப் போராளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 8,601 
 
 

நானும் எனது பாலஸ்தீனிய நண்பனும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, நான் சாப்பிடும் வேகத்தைப் பார்த்துவிட்டு, ‘ஏன் தற்கொலைப் போராளி போன்று சாப்பிடுகிறாய். ஆறுதலாக சாப்பிடு’ என்றான்.

சிறு வயதில் விடுதியில் இருந்து படித்த காலத்தில் மதிய உணவை சீக்கிரம் உண்டு விட்டு கிரிக்கட் விளையாடச் செல்வது எனது வழக்கம். நான் மட்டுமல்ல விடுதியில் இருந்தவர்கள் எல்லோரும் இதைத்தான் செய்வோம். வீடுகளில் இருந்து வரும் என் வகுப்பு மாணவர்கள் தாம் கொண்டு வந்த சாப்பாட்டுடன் நேரே கிரிக்கட் மைதானத்துக்குப் போய் விடுவார்கள். நாங்கள் விடுதி மாணவர்களாக இருந்ததால் சாப்பாட்டுக்கு விடுதிக்கே போய்விடவேண்டும். எங்களது கிரிக்கட் மட்சுகள் ஐந்து நாட்களுக்கு மேலாகத் தொடரும். சீக்கிரம் போகாவிட்டால் எமக்கு இந்துக்கல்லூரியின் மைதான சுவரில் உள்ள தூண்கள் கிடையாமல் போய்விடும் . அவைதான் எங்களது விக்கட்டாகும். சுவரானதால் விக்கட் கீப்பர் தேவையிராது. இப்படி அவசரமாக சாப்பிடும் பழக்கம் பல்கலைக்கழகத்தில் இருந்தகாலத்திலும் தொடர்ந்தது.

எங்கள் எல்லோருக்கும் சிறுவயதுப் பழக்கங்கள் நிழல் போன்றவைதானே. விரும்பாத நேரத்திலும் விட்டுவிட முடிவதில்லை.

அந்த நண்பன் என்னை தற்கொலைப் போராளியோடு ஒப்பிட்டபோது அவனது பேச்சு, எனது ஆவலைத் தூண்டியது. அவனது நாட்டில் அவர்களைப் பற்றி அவன் அறிந்திருக்கக்கூடும். அவர்களோடு அவன் பழகி இருந்திருக்கவும் கூடும். ரஷ்ஷியா சென்று படித்தததால் இவனால் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிவர முடிந்திருந்தது. எனது நாட்டிலும் தற்கொலைப்போராளிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களோடு நான் பேசியதோ பழகியதோ இல்லை. ஆனால் கேள்வி ஞானம் மட்டும் உள்ளது. தற்கொலைப் போராளிகள் கடைசியாக உயிரை தியாகம் செய்யப் போகும் முன்பு அவர்களது தலைவர்களுடன் விருந்துண்ணுவார்;கள். கடைசியான உணவு என்ற போது இரசித்து சாப்பிடுவது தானே நியாயம். ஏதற்காக அவசரப்படவேண்டும்?

எனது சிந்தனைக்கு இந்த விடயம் முரண்பாடாகத் தெரிந்து இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவல் தூண்டியது

தற்கொலைப்போராளியின் மனநிலை எப்படி இருக்கும்? தனது உயிரை விடும்போது ஏதோ ஒரு பெரிய கொள்கைக்கு அல்லது இலட்சியத்திற்கான குறைந்த பட்சமான ஒரு சிறு படியாகவாவது பிரயோசனப்படுமென்று நினைத்திருப்பானா? இல்லை தங்கள் தலைவர் மேல் உள்ள அபிமானமா?

தற்கொலைப் போராளிக்கு அவனது சமூகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு சகல வழிகளும் அடைபட்டதால் தற்கொலைக்கு தயாராகின்றானா?. அல்லது மன அழுத்தம் கொண்ட மனநோயாளிபோல போல் தற்கொலைக்கு முடிவு செய்கிறானா?

உயிரை பாதுகாக்க மனிதர்கள் எவ்வளவு காரியங்கள் செய்கிறர்கள். கொலை செய்கிறார்கள் அதாவது தனது உயிரைப் பாதுகாக்கச் செய்யும் கொலையை சட்டம் அங்கீகரிக்கிறது. கொலைத்தண்டனையை வைத்திருக்கும் அமெரிக்காவின் இரண்டாவது திருத்தம் அங்கீகரிக்கிறது. பிச்சை எடுப்பவன் கூட தன் உயிரைப் பதுகாக்கத் தானே பிச்சை எடுக்கிறான் என்பதால் சமூகத்தால் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். உயிர் வாழ்வதற்கு திருடுபவனை எக்காலத்திலும் நீதிபதிகள் கருணையுடன்தான் பார்க்;கிறார்கள். இது மேல் நாட்டு நடைமுறை என்னும் போது இதற்கு ஒரு படி மேல் சென்று திருடுகிற கள்ளர்களை சமூகத்தின்; ஒரு அங்கமாக மதித்து அவர்களை நகரக் காவல்களாக்கியது நமது பழம் தமிழ் பாரம்பரியம்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரர்கள் கூட கடைசி வரையும் ஏதாவது விதமாக மன்னிப்பு கிடைக்கும் என்று தான் கடைசிவரையும் உயிர் வாழுகிறார்கள். தண்டனை விதிப்பதற்கு முன்பு அவர்கள் செய்த கொலையில் ஏதாவது கீறல் போல் அவனது உயிர் பாதுகாப்புக்கு காரணத்தை தேடுவதிலேயே நவீன சட்டம் தனது நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறது. அமெரிக்காவில் சராசரியாக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் பல வருடங்கள் மேல் முறையீடுகளில் உயிர் வாழ்கிறார்கள். பெரும்பாலான நாடுகள் மரணதண்டனையை சட்டத்தில் இருந்து நீக்கி விட்டன. இப்படி உயிர்களை பாதுகாக்க நீதித் துறையும் சட்டத்துறையும் மனித நாகரிகத்தில் முக்கிய அங்கமாகின்றன. இதற்கு மேல் போய் சுகாதாரம், மருத்துவம் என்பன காலம் காலமாக இந்த உயிரை காப்பாற்றுவதற்கு போராடுகின்றன. மேற்கு நாடுகள் சுகாதாரம், கல்வி என்பவற்றை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்த போதும் நீதித்துறையை தன் வசமே வைத்திருக்கிறது.

மனித நாகரீகத்தின் வளர்ச்சி, மனித உயிரையும் அந்த உயிர் உள்ள உடலை ஆரோக்கியமாக வைப்பதையுமே இலட்சியமாக கொண்டுள்ளது.

இவ்வளவு பெறுமதியான உயிரை, மயிரைப் போல் தூக்கி எறிவதற்கு மனம் துணிந்தவன் ஏன் அவசரப்பட்டு சாப்பிடவேண்டும்? இது முரண்பாடான விடயமில்லையா .அல்லது ஒரு இலட்சியத்திற்கு தயாரானவர்கள் இலகுவாக உயிரை கொடுக்கிறார்கள் என அவன் சார்ந்த இயக்கம் வெளி உலகத்திற்கு காட்டுவதற்காக செய்யும் பிரச்சார ஏற்பாடாக இருக்குமா? மாவீரர் துதி பாடுவதும் சமாதிகளை வழிபடுவதும் இறந்தழிந்தவன் வித்தாகி விளைவான் என பொய் பேசுவதும் கவிதை எழுதுவதும் இந்த உயிர்களை எடுப்பதற்கான பிரச்சார தயாரிப்பு தானே? போர்க்கால கவிதைகள், கதைகள் என எழுதுவது ஆய்வு செய்வதெல்லாம் யாரோ ஒரு அப்பாவியின் உயிரை எடுப்பதற்கான செயல்கள்தானே?

இதைவிட அடிப்படையான கேள்வி ஒன்றுள்ளது. தனது உடைமைகளை மதிப்பவன்தான் மற்றவரது உடைமைகளை பாதுகாப்பான். அது போல் தனது உயிரை மதிக்காத மனிதன் எப்படி மற்றவர்களது உரிமையை பாதுகாப்பதற்கு தயாராக இருப்பான்? இந்தக் கேள்விக்கு இரணுவ வீரனை பதிலாக உதாரணம் காட்ட முடியாது. இரணுவ வீரன கடைசிவரையும் போராடினாலும் தனது உயிரை பாதுகாக்க விரும்புகிறான். படுகாயப்பட்டவன் கூட உயிர் வாழ்வதற்காக தனது மூச்சை வைத்திருக்க விரும்புகிறான்

இப்படி தற்கொலைக்கு துணிந்தவர்களுக்கு அமெரிக்காவில் வாழ ஒரு கிரீன் கார்டையோ அல்லது அழகிய பெண்ணுடன் காலம் முழுவதும் அல்லது சில நாட்கள் அல்லது வாரங்கள் வாழ உத்தரவாதம் கொடுத்தால் அவனது மன நிலையில் மாற்றம் ஏற்படுமோ என்பதை அறிய விருப்பமாக இருந்தது.

தற்கொலை செய்ய விரும்புபவனது முகத்தைப் பார்த்து அவனது உள் மனக்கிடக்கையை அறிந்து கொள்ள விரும்பினாலும் அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு தற்கொலைப் போராளியை இயக்குபவரின் வாக்கு மூலத்தை எழுத்தில் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு சமீபத்தில் எதிர்பாராதவிதமாகக் கிடைத்தது.

***

84 ஆம் ஆண்டு பிறந்த நான் வவுனியாவில் படித்து விட்டு 2004 இல் கொழும்பில் கணக்கியல் படிக்கச் சென்றேன். ஆறுமாதகாலத்தின் பின் கிளிநொச்சிக்கு எனது நோயுற்ற மாமாவை பார்க்கச் சென்ற போது அங்கே விடுதலைப்புலிகளால் பிடிக்கப்பட்டேன். ஆரம்பத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றேன். அதன் பின் எனக்கு சிங்களம் தெரிந்தது என அவர்களுக்கு தெரிய வந்ததால் விசேட படையணியில் சேர்க்கப்பட்டேன். அந்தப் படையணியில் சேர்ந்ததும் எனக்கு அரசியல்வாதிகள் அதிகாரிகள் எப்படிக் கொல்லப்படவேண்டும். கொலை செய்யும் போது எப்படி அந்தக் குண்டுகளை வெடிக்கப் பண்ணவேண்டும் என்பதில் பயிற்சியளிக்கப்பட்டது .

இதை விட உளவியல் பாடங்கள், சித்திரவதையை தாங்குதல். உண்மைகளை எப்படி மறைக்கலாம். தொடர்ச்சியாக ஒருவரை அவரையறியாது தொடர்வது. மற்றவரின் நம்பிக்கையை எப்படி பெறுவது எப்படி தொடர்ச்சியாக மாற்றங்களோ தவறுகளோ ஏற்படாது பொய் சொல்லுவது என்பன சொல்லித் தரப்பட்டது. உறவினர்கள் தொடர்புகள் கடவுள் நம்பிக்கை என்பன மனத்தை கோழையாக்கும் எனக் கூறப்பட்டது. கடவுளின் படங்கள் உறவினரது போட்டோக்கள் அகற்றப்பட்டது. எனது பேர்சில் இருந்த அம்மாவின் படம் என்னை கோழையாக்கும் எனக் கூறி எனது பயிற்சியாளரால் அதுவும் அகற்றப்பட்டது.

இந்தப் பயிற்சிகளின் பின்பு எனது மனதில் பெரிய மாற்றம் நடந்தது போல் உணர்ந்தேன். சுற்றி இருப்பவர்களுடன் பேசவோ சிரிக்கவோ முடியவில்லை. நட்பு பாசம் என்ற உணர்வுகளை முற்றாக மறந்தேன். கனவில் கூட அம்மா அப்பா மற்றும் உறவினர்கள் வருவது குறைந்து விட்டது. இடைக்கிடை பக்கத்து வீட்டு மாமி மட்டும் கனவுகளில் வந்து போனார். அதுவும் குறைந்து விட்டது. முற்றாக உணர்வுகளை அடக்கிவிட்டேனோ என வியப்பாக இருந்தது. இதைத்தான் ஞானிகள் பெற்றார்களோ?

பயிற்சி முகாமில் பயிற்சியைத் தவிர்ந்த நேரங்களில் தனியாகத்தான் நேரத்தை கழித்தேன். நண்பர்கள் என்னுடன் பேசினாலும் மனம் விட்டு பேசுவதில்லை. எப்பொழுதும் யாராவது ஒட்டுக் கேட்பது போன்ற நினைவு. தனியாக நான் விடப்பட்ட காலத்திலும் என்னை தொடர்ந்து யாரோ கண்காணிப்பதாக உணர்ந்தேன். வீரதீர செயல்கள் நடைபெறும் வீடியோக்களை பார்க்கும் போது அந்த நேரத்தில் மனதில் பெருமையடைந்தேன். மனதில் உற்சாகம் உடலெங்கும் கரை புரண்டு ஓடுவது போல் தோன்றும். முக்கியமாக அந்தச் சண்டையில் கலந்து கொள்ளும் வீரனாக என்னை அவனது உடலில் புகுத்திக் கொண்டது போன்று எண்ணி அந்த எண்ணத்தில், கனவுகளில் உயரப் பறந்தேன்;. ஏதோ ஒரு உயர்ந்த இலட்சியத்துக்காக இப்படியான ஒரு சண்டையில் பங்கு பற்றி ஒரு சரித்திர நாயகனாக நான் வளர்ந்திருப்பதாக நினைப்பேன்.

இந்த நேரத்தில் கொழும்புக்குச் செல்ல வேண்டும் என கட்டளை வந்தது. நேரடியாக செல்லாமல் நுவரெலியாவில் ஒரு ஹோட்டலில் ஆறுமாதம் வேலை செய்து விட்டு கொழும்புக்குச் செல்ல வேண்டும்.

மட்டக்களப்புக்குச் சென்று அங்கிருந்து நுவரெலியாவுக்கு சென்றேன். ஏற்கனவே ஒழுங்கு படுத்திய படி எனக்கு ஹோட்டலில் வேலை கிடைத்தது. அது ஆறு அறைகளைக்கொண்ட உல்லாசப் பிரயாணிகள் தங்கும் ஹோட்டல். அங்கு உணவு பரிமாறுவது எனது வேலையாக இருந்தது.

அங்கு வேலை செய்த போதுதான் எனக்கு முதலாவது காதல் அனுபவம் கிட்டியது. பாலைவனத்து மழை போல் அந்தக் காதல் மறைந்தாலும் அந்த சில நாட்கள்தான் வாழ்க்கையின் வசந்தகாலம். கற்பனைகளும் கனவுகளும் பூத்துக் குலுங்கியதால் கொலை குண்டு இரத்தம் என்பதை மறந்து இருந்தன். அங்கு சமைப்பதற்கு வரும் சிசிலியாவுக்கு என் மேல் காதல் வந்தது. அவளது கண்களும் பேச்சும், மரத்துப் போய் இருந்த உணர்வுகளுக்கு நீர்ப்பாசனம் செய்தன. எனக்கு சிங்களம் தெரிந்ததால் அவள் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினாள் .தகப்பன் உடப்புசல்லாவ பகுதியில் ஒரு விவசாயி. நல்ல சனங்கள். அவர்களோடு நான் பேசுவதும் பழகுவதும் போலித்தனமானது என்பது புரிந்து. இயக்கத்தில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதற்காக எனக்கு வழங்கப்பட்ட பயிற்சியால் எனது உறவும் பேச்சும் அவர்களுக்கு என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை.

என் மேல் சிசிலியா கொண்ட காதலை இயக்கத்தில் மட்டக்களப்பில் இருந்து என்னைக் கொன்றோல் பண்ணுபவருக்கு அறிவித்தபோது, இன்னும் இரண்டு மாதம் வரை தொடர்ச்சியாக காதல் பண்ணச்சொல்லி தகவல் வந்தது. சிசிலியாவுடன் எனக்கு உண்மையான அன்பு ஏற்பட்டதற்கு காரணம் அவளது அப்பாவித்தனம்தான். எனது காதலை முத்தத்துக்கு மேலாக நான் கொண்டு செல்லப் பயந்தேன். ஒரு நாள் உல்லாசப்பிரயாணியாக வந்த வெள்ளைக்காரருக்கு அவர் தங்கியிருந்த அறையில் பியரை கொண்டு போய் கொடுத்து விட்டு வரும் போது மாடிப்படியில் எனது கையைப் பிடித்துக் கொண்டு என் உதட்டில் அவள்தான் முதல் முத்தம் கொடுத்தாள். கோடைகாலத்து முதல் மழையில் முற்றாக நனைந்தது போல் அவளது முத்தத்தால் சிலிர்த்துப் போய் நான் அந்த இடத்தில் உறைந்து போய்விட்டேன்.

இதன் பின்பு அவளை மாடியில் காணும்போதெல்லாம் எனக்கு வயிற்றை கலக்கும். நாலுமாடிகள் கொண்ட உயரமான கட்டிடத்தில் மிகவும் ஒடுக்கமான மாடிப்படி. நான் மேலேயே கீழேயோ செல்லும் போது சிசிலியா வராமல் இருக்க வேண்டிக் கொள்வேன்

கொழும்புக்கு போகும்படி வந்த உத்தரவு அவளிடம் இருந்து என்னை காப்பாற்றினாலும் பெரிய இழப்பாக இருந்தது. அவளிடம் வெளிநாடு ஒன்றுக்கு போக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் .அங்கிருந்து உனக்கு கடிதம் எழுதுவேன் என்றும் கூறி விடைபெற்ற போது கண்ணீருடன் விடை தந்தாள். எப்பொழுதும் பொய் சொல்லுவது இலகுவாக இருந்த எனக்கு அன்று மட்டும் மிகவும் கடினமாக இருந்தது. கொழும்பு வந்து சேரும் வரையும் பஸ்சில் அழுதபடி வந்தேன். .

இயக்கத்தின் கட்டளைப்படி ஆங்கிலம் படிப்பதற்கு ஒரு டியுட்டரியில் சேர்ந்து விட்டு தெகிவளையில் ஒரு தமிழ் வீட்டில் இருந்தேன். அவர்களுடன் பழகுவது சந்தோசத்தை கொடுத்தாலும் என்னால் அவர்களுக்கு எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் பிரச்சினைகளை நினைத்து வருந்தினேன். இவ்வளவு காலமும் இருந்த வாழ்க்கையிலும் பார்க்க கொழும்பு வாழ்க்கை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. பழைய நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் விருந்துகளுக்கு போக முடிந்தது. அவர்கள் மனம் விட்டு தங்கள் காதல் அனுபவங்களையும் கனவுகளையும் என்னுடன் பகிர்ந்தார்கள். அவர்கள் தம் காதலிகளை எனக்கு அறிமுகப்படுத்தி கடற்கரை கிளப் என பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற போது நானும் ஏன் சிசிலியாவுடன் இப்படி இருக்கக் கூடாது என நினைக்கத் தோன்றும். நாட்டை விட்டு இயக்கத்தை விட்டு ஓடிவிடுவோமா என தோன்றும். இதைவிட சிசிலியாவுக்கு கூறி விட்டு வந்த வார்த்தைகள் அவளது முத்தம் போல் ஈரமாக மனதில் நனைத்தபடி இருந்தது. எல்லாவற்றிற்கும் மேல் தலைவர் மீது எடுத்த உறுதி மொழி எனது தலையில் தொங்கும் வாளாக இருந்தது.

நான் பட்ட துன்பத்துக்கு முடிவாக இயக்கத்தில் இருந்து ஒப்பரேசனுக்கு தயாராகும் படி செய்தி வந்தது.

கொழும்பில் அரசாங்கம் பாலம் ஒன்று திறக்கவிருப்பதால் அங்கு வரும் முக்கியமானவர்கள் மத்தியில் தற்கொலைக் குண்டு வைப்பதற்கு ஒருவனை அனுப்புவதாகவும் அவனுக்கு தங்க ஒரு இடம் பார்த்துக்கொடுக்குமாறும் எனக்கு உத்தரவு வந்திருந்தது.

பார்ப்பதற்கு பதினைந்து வயதான சிறுவன். நீர்கொழும்;பு பக்கத்தால் வந்து சேர்ந்தான். வயதைக் கேட்ட போது பதினேழு என்றான். என்னால் நம்ப முடியவில்லை. ஒன்றுவிட்ட தம்பி எனச்சொல்லி அவனை எனது அறையில் வைத்துக்கொண்டேன். அவனுக்கு சாப்பாடு எல்லாம் நான் தான் வாங்கிக் கொடுப்பது. அவனைப் பார்தால் இயக்கம் என சொல்ல முடியாது. கட்டையாக சிறிது குண்டாக பிள்ளையார் போல இருந்தான். அவனுக்கு ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பின்பும் ஐஸ்கீரீம் வேண்டும். எங்கே இருந்து வந்தான் என்பதையோ அவனது உறவினர் பற்றிய விபரங்களையோ நான் கேட்க விருப்பவில்லை. தற்கொலையாளியாக சாக வந்துவிட்டான். மற்ற விடயங்களை கேட்டு என்ன பிரயோசனம்?

சாப்பாட்டு நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவனை சந்திப்பதை தவிர்த்துக்கொண்டேன். டீயூட்டரியில படிப்பது என்ற சாட்டு எனக்கு வசதியாக இருந்தது. அப்பாவிப் பொடியனாக அந்த அறைக்குள் முழு நேரமும் இருந்தான். பல சஞ்சிகைகளையும் பல ஆங்கில குறுந்தட்டுகளையும் நான் வாங்கி வைத்திருந்த படியால் அதை பார்த்துக்கொண்டிருந்தான்.

சஞ்சிகைகளை மீண்டும் மீண்டும் அவன் பார்த்துக்கொண்டிருந்த போது ‘ என்ன எல்லாம் படித்து முடித்து விட்டாயா?’ எனக்கேட்டேன்.

‘இல்லே அண்ணே… எனக்குப் படிக்கத் தெரியாது’ என்றான்.

***

பாலம் திறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாக அவனுக்குரிய குண்டு பொருத்தின அங்கி வந்து விட்டது.

பாலத்தை பத்துமணிக்கு திறந்து வைக்க விருப்பதாக தமிழ்பத்திரிகையில் செய்தி இருந்தது. அவனது உடைக்குள் தற்கொலை அங்கியை பொருத்தி எட்டுமணிக்கே வெளியே கொண்டுவந்தாகி விட்டது கட்டையாக குண்டாக இருந்தவன் குண்டோடு இன்னும் குண்டாகி விட்டான். அதை அவனுக்கு சொல்ல நினைத்தாலும் சொல்வதற்கு மனம் இடம் தரவில்லை. நகைச்சுவையை இரசிக்கும் மனநிலையில் அவனும் இல்லை. சிறிது தவறினால் அவனது உயிர் மட்டுமல்ல எனது உயிரும் போகலாம். இயக்கத்தை பொறுத்தவரை எனது உயிருக்கு அதிக மதிப்பு உண்டு.

வெள்ளவத்தையில் இருந்த முஸ்லீம் ஹோட்டலில் ஆட்டுக்கறி கோழிக்கறியுடன் பரோட்டா வாங்கிக் கொடுத்த போது மிகவும் ருசித்து சாப்பிட்டான்.

‘அண்ண தலைவரோடு சாப்பிட்டபோது சாப்பாடு நல்லா இருந்தது. ஆனால் தின்னப் பயமாக இருந்தது. அதோடு கமராக்காரன் அப்படிப் பார் இப்படிப்பார் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். என்னால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை. இதைப் பார்த்த தலைவரும் அன்று சரியாகச்சாப்பிடவில்லை. இன்றைக்குத்தான் ஒழுங்காக ருசித்து சாப்பிட முடிகிறது.’

அவனது பேச்சை அனுதாபத்துடன் ரசித்தேன். பதில் எதுவும் சொல்லாமல் அவனது உப்பிய முகத்தை தடவிவிட்டு வனிலா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தேன்.

பத்து மணிக்கு பாலம் திறக்க இருப்பதால் நாங்கள் அரைமணி நேரம் தாமதமாக செல்லவேண்டும் என்பது எங்களுக்கு கிடைத்த உத்தரவு. செகியூரிட்டி செக்கப்புகள் குறைந்து விடும் என்பதும் ஒரு காரணம்.

வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் நாங்கள் கால்நடையாக பாலம் திறக்கும் இடத்திற்கு சென்றோம். காலை நேரத்தில் ஏராளமானவர்கள் காலி வீதியால் வேலைக்குச் சென்று கொண்டிருந்ததால் எங்கள் மீது சந்தேகம் விழவில்லை. வாகனங்கள் எல்லாம் தடுக்கப்பட்டு பல நிமிட நேரம் காக்க வைத்து அணு அணுவாக சோதனை போட்டார்கள்.

‘மெதுவாக செல்லுங்கள் அண்ணை. மூச்செடுக்க கஸ்டமாக இருக்கிறது.’ அவன் இவ்வாறு அடிக்கடி சொன்னான்.

தியேட்டர்களின் முன்னாலிருந்த கட் அவுட்டுகளை நின்று பார்த்த போது அவனது கண்கள் அகலமாக திறந்து முகத்தில் ஒரு மெதுவான புன்முறுவல் தெரிந்ததை அவதானிக்க முடிந்தது. வாசிக்கத் தெரியாத அவனுக்கு சினிமா முக்கியமாக தெரிந்ததில் வியப்பில்லை

எப்படி சின்னவனாகவும் அப்பாவியாகவும் இருக்கும் இவனை ஏன் தெரிந்தெடுத்தார்கள். என்று எனக்குள் வியந்தேன். படிக்கவில்லை என்கிறான். எந்த மாதிரியான குடும்பத்தில் இருந்து வந்தானோ?

அவன்மீது பரிதாபம் வந்து எனக்கு கண்கலங்கியது. இயக்கத்தில் சேர்ந்த பின்பு சிசிலியாவை பிரிந்த போதுதான் கண்கலங்கினேன். இப்பொழுது இது இரண்டாவது தரம்.

பாலம் திறக்கும் இடத்திற்கு வந்தோம். ஏராளமானவர்கள் தெருவெங்கும் கூடி இருந்தார்கள். இந்த இடத்தில் எத்தனை பேர் மரணிக்கப் போகிறார்கள். ஏராளமான தமிழர்கள் வாழும் பகுதியானதால் அவர்களும் பலர் இறக்கப்போகிறர்கள். அதைவிட எத்தனை பேர் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகப் போகிறார்கள். நான் கூட இன்றோ அல்லது சிலநாட்களிலோ பிடிபடக்கூடும்.

பாலத்திற்கு சமீபத்தில் இராணுவத்தினர் பொலிஸ் என நூற்றுக்கணக்கில் பலர் நின்றார்கள். அவர்களுக்கு மத்தியில் அரசியல்வாதிகள் போல் தெரிந்தவர்கள் வெள்ளைநிற தேசிய உடையில் நின்றனர். அவர்களைச் சுற்றி பாதுகாப்பாக அரணாக இராணுவ அதிகாரிகள். இவர்களுக்கு மத்தியில் இவனைக் கொண்டு போய் வெடிக்கப் பண்ணவேண்டும். முகத்தை மார்போடு சேர்த்து வெடித்தால்தான் உனது முகமும் சிதறி அடையாளம் தெரியாது போகும் என அடிக்கடி அம்மான் சொல்லும் வார்த்தையை நினைவு படுத்த வேண்டும்.

ஓரளவு மக்கள் கூட்டத்துக்குள் ஊடுருவிக் கொண்டு செல்லும் போது வெள்ளைக்காரர் ஒருவர் கழுத்தில் மாலையோடு நின்றார். அவர்தான் அந்த நிகழ்ச்சிக்கு முக்கியமான நபர் போல் பளிச்சென தெரிந்தார்.

இது என்ன பிரச்சினையாகிவிட்டது. எந்த வெளிநாட்டவரையும் எமது ஒபரேசனில் கொல்லக்கூடாது. தற்செயலாக வெளிநாட்டவர்கள் இறந்தால் அது அரசாங்கத்திற்கு இயக்கத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்வதற்கு இலகுவாகப் போய்விடும் என்பதால் கண்டிப்பான உத்தரவாக இருந்தது.

எதற்கும் அம்மானுக்கு தொலைபேசி எடுப்போம் எனத்தீர்மானித்து ‘தம்பி நில். நான் மேலிடத்தில் பேசவேண்டும்;’ என்றேன்.

‘அம்மானிடம் சொல்லுங்கள் என்னை நம்பச் சொல்லி’ என்ற போது அவனது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது

கையால் பேசாதே என சமிக்ஞை செய்து விட்டு, வன்னிக்கு எடுத்து, ‘அம்மான் வெள்ளைக்காரர் ஒருவர் கூட்டத்தில் நிற்கிறார்’ என்றேன்.

‘கொஞ்சம் பொறு. நாங்கள் செக் பண்ணிவிட்டு சொல்கிறோம்’ என்றார்.

அந்த ஐந்து நிமிடங்கள் வாழ்க்கையில் மிகவும் நீளமானவை. எந்த முடிவுமற்று நீண்டு கொண்டு செல்லும் இரயில் பாதை போல் இருந்தது. போனில் பேசும் போது சிலர் என்னைத் திரும்பி பார்த்தார்கள். தமிழில் மெதுவாக பேசிவிட்டு சிங்களத்தில் ஒரு சில வார்த்தைகள் சத்தமாக பேசியதை அம்மான் புரிந்து கொள்வார்.

சைலன்சில் இருந்த கைத்தொலைபேசியில் வெளிச்சம் வந்தது.

பேசிய போது ‘நமக்குத் தேவையான ஒரு பெரிய நாட்டின் தூதுவர். அவர்தான் பிரதான விருந்தாளியாக வந்து தொலைத்து விட்டார். உடனே ஒப்பரேசனை கான்சல் பண்ணு.’

‘அம்மான் இந்த இடத்தை விட்டு வெளியேறமுடியாது சுற்றிபாதுகாப்பு வலயம்’

‘இந்த ஒப்பரேசனை அவருக்காக நாங்கள் நிறுத்தியதாக தெரிவதற்காக சுவரில் மோதி அவனை வெடிக்கச் சொல்லு’.

கைத்தொலைபேசித்தொடர்பு நின்று விட்டது

இதை எப்படி அவனிடம் சொல்லுவது? ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும்.

‘தம்பி இந்த ஒப்பரேசனை கான்சல் பண்ணிவிட்டதாக அம்மான் சொன்னார். வெளிநாட்டு தூதுவர் இருப்பதால் வேண்டாம் என்கிறார். ஆனால் உன்னை எவரும் இறக்காமல் சுவரில் மோதி வெடிக்க வைக்கட்டாம் என அம்மான் சொன்னார்’ என்றேன்.

அவனது முகத்தை பார்க்க முடியாமல் திரும்பியபடி சொன்னேன்.

‘அம்மானிடம் சொல்லுங்கள் என்னை நம்பும் படி’

அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறி கடற்கரைப் பக்கம் வரும்வரை இரண்டு முறை செக்கிங் நடந்தது. நல்லவேளையாக கடற்கரை ரோட்டில் ஓட்டோ கிடைத்தது. அதன் பின்பு எந்த செக்கிங்கும் இல்லை.

வீட்டுக்குள் சென்றதும் கட்டிலில் போர்த்திக்கொண்டு படுத்து விட்டேன். .உணவு தண்ணீர் பாத்ரும் எதற்கும் எழும்பவில்லை.

மாலை ஆறுமணிக்கு தொலைக்காட்சியை பார்த்தேன். தலைப்புச் செய்தியாக பயங்கரவாதிகள் அனுப்பிய தற்கொலைக்குண்டுதாரியை இராணுவத்தினர் பிடிக்க முயற்சித்த போது அவன் தன்னைவெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டான். எனினும் உயிர்சேதம் எதுவும் இல்லை. புதிதாக திறந்து வைத்த பாலத்தை கொழும்பு நகரின் முக்கியமான கட்டுமானபணி என்று அதைத் திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றிய வெளிநாட்டு தூதுவர் கூறினார் என அந்த செய்தி தொடர்ந்தது.

எனது காதில் எதுவும் விழவில்லை.

‘அம்மானிடம் சொல்லுகள் என்னை நம்பும் படி’ என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.

***

எனக்குக்கிடைத்த அந்த வாக்குமூலத்தைப் படித்த போது தற்கொலைப் போராளிகளை ஓரளவு புரிந்து கொண்டது போல் உணர்ந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *