யாழ்ப்பாணம் நகரில் கன்னாதிட்டி நகைக்கடைகளுக்குப் பிரசித்தமான சதுக்கம். ஒருகாலம் இந்தியவணிகர்களின் வைரமாளிகை, கல்யாணி ஆபரணமாளிகை, நிர்மலா ஜுவலேர்ஸ் போன்ற பெரிய ஸ்தாபனங்கள் எல்லாம் அங்கேதான் நிரை அமைத்திருந்தன. காசிலிங்கப்பத்தர், மாசிலாமணிப்பத்தர் என இரு கூட்டுமுதலாளிகளால் நிறுவப்பட்ட காதம்பரீஸ் நகைமாளிகையும் அவற்றுக்கு இணையாக ஓங்கிவளர்ந்து நின்றிருந்தது. அவர்கள் இருவரிலும் பத்தாவது படித்திருந்த மாசிலாமணி இவ்வியாபாரத்தின் நெளிவுசுளிவுகள் அதிகம் தெரிந்தவர் என்பதோடு நல்ல வாயாடி, நளினமான வார்த்தைகளில் சோடனைகளிட்டு வாடிக்கையாளர்களைச் சொக்கவைத்து வியாபாரம் பண்ணத்தெரிந்தவர். பேச்சோடுபேச்சாக அவர்களின் பிறந்ததேதியைக்கேட்பார், பின் அவற்றின் இலக்கங்களைக் குறுக்கு மறுக்காகக்கூட்டி கண்களை மேலேசொருகிச் சிந்திக்கும் பாவனையுடன் அவர்களுக்கு ஜோசியமும், இராசிக்குப்பொருத்தமான இரத்தினக்கற்கள் எவையென்றும் சொல்லி மயக்குவார். “எட்டாந்தேதியில் பிறந்த நீங்கள் புஸ்பராகம் பதித்து ஒரு மோதிரம் மட்டும் அணிந்துகொண்டீர்களாயின் உங்கள் ஜீவிதபாடுகள் அனைத்தும் ஒரு மாசத்திலேயே தகர்ந்துவிடும். மஹலக்ஷ்மி உங்கள் வீட்டுக்கூரை மேலாகக்கொண்டுவந்து தங்கத்தாரையாகவே பொழியத்தொடங்கிவிடுவாள், அதுக்குப்பிறகு திருகோணத்தில் பிறந்த நீங்கள் ஒருகோணம் ஆளாட்டிப்பாருங்கோ” என்று சொல்லி வார்த்தைவசியம் வைப்பார். “இப்படித்தான் இரண்டு வருஷத்துக்கு முன்னால கொக்குவிலில் தினப்படி சீவியத்துக்கே சிங்கியடித்த ஒரு பக்கிரி என்ர அட்வைஸில புஷ்பராகம் பதித்த ஒரு மோதிரம் வாங்கிப்போட்டார், மனுஷன் இப்போ முழு யாழ்ப்பாணத்தையும் வாங்கிப்போடுற றேஞ்சுக்குப்போட்டுதுங்கோ.” என்பார்.
ஜனங்களுக்கு சிங்கப்பூர் நகைகள் மேல் மோகம் வளர்ந்த ஒரு நேரத்தில் நேரடியாக அங்கிருந்தே நகைகளை வருவித்துச் சந்தைப்படுத்தினார். யாழ்ப்பாணத்தில் மெஷின்வெட்டில் உருவாக்கப்பட்ட காப்புகளையும், சங்கிலிகளையும் அறிமுகம் செய்தார்கள். தாலிக்கொடியின் சவரன்களில் இருக்கும் ஜோர்ஜ் மன்னர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தொங்குவார்கள் அல்லவா, அவர்களில் இட்துபுறமாகப் பார்ப்பவரே அசல் இங்கிலாந்துப் பவுணில் வார்க்கப்பட்ட ஜோர்ஜ் மன்னர். ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கவேண்டும் என்பதற்காக வார்க்கப்பட்ட மற்றவர் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட நகலாவார். சவரன்களின் இறக்குமதியில் வலம்பார்த்த ஜோர்ஜ் மன்னர்கள் கிலோக்கணக்கில் காதாம்பரீஸினூடாக வந்து இறங்கினார்கள். காதம்பரீஸின் கொள்முதல்களுக்கான அந்நியச்செலவாணி இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளிலிருந்து இவருக்கு வேண்டப்பட்டவர்களால் சிங்கப்பூருக்கு டொலர்களாக அனுப்பப்பட அவற்றுக்குப் பகரமான தொகை உள்ளூர் நாணயத்தில் இங்கே உரியவர்களுக்கு இறுக்கப்படும்.
காசிலிங்கத்தார் இயல்பில் அப்பாவி, வாயடிவித்தைகளும் அவ்வளவு வராது. வியாபாரத்தில் பாகஸ்த்தரின் வாக்கு வேதம் அவருக்கு, காசிலிங்கத்தார் வைத்திருந்த நம்பிக்கையையும் அவரது ஆங்கில அறிவின்மையையும் மாசிலாமணி பயன்படுத்தி வியாபாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கையைவிட்டுருவி விளையாடி நாளடைவில் மொத்தமாக அவரைக் கழற்றிக் கொண்டுவிட்டதுவும் இக்கதை முன்நிகழ்வு.
காதம்பரீஸைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்ட காசிலிங்கப்பத்தருக்கு மீளவும் முன்புபோல் அலைந்து திரிந்து தொழில் பண்ணும்படியாயிற்று. அவர் உள்ளூர்ப் பொன்னாசாரிகளைக்கொண்டு நகைகளை இணக்குவித்து யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு நகைக்கடைகளின் தேவைகட்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஒருகாலம் ஜிமிக்கி என்றால் நாணயமிக்க காசிலிங்கப்பத்தரின் பெயர்தான் பிரசித்தம். மெல்ல மெல்ல அவர் பெயரே ’ஜிமிக்கி காசிலிங்கப்பத்தர்’ என நிலைக்கலாயிற்று. பத்தர் ஒருமுறை தன் வியாபார மும்முரத்தில் திரிச்சிராப்பள்ளியிலிருந்து வந்து கன்னாதிட்டி வட்டகையில் புதிதாக அறிமுகமாகியிருந்த ஆசாரியார் ஒருவரைக்கொண்டு 100 சோடி ஜிமிக்கிகள் இணக்குவித்தார். புதியவர் உள்ளூர் ஆசாரிகளைவிட குறைச்சலான கூலிக்கு இணக்கித்தரச் சம்மதித்தபோதுகூட அவர்மேல் காசிலிங்கப்பத்தருக்கு சந்தேகம் வரவில்லை. அப்புதிய ஆசாரியாருக்குத் தவறுதலாக நேர்ந்ததோ, இல்லை தெரிந்துதான் தங்கத்துள் செம்பை அள்ளிவிட்டாரோ இருக்கவேண்டிய மாற்றுக்கு ஜிமிக்கிகள் இருக்கவில்லை.
காப்பு மோதிரம் போன்ற ஒட்டுவேலை குறைவான நகைகளை 22 காரட்டில் இணக்கலாம். சங்கிலி, நெக்லஸ் பதக்கம் தோடு ஜிமிக்கி போன்றவற்றில் அதிகம் ஒட்டுவேலைகள் இருப்பதால் ஒட்டுவதற்குத் தேவையான வெள்ளியைச் செம்பைக் கலக்கையில் அவற்றின் மாற்றுக் குறைந்து அவை 20 காரட்டாகிவிடுவது இயல்பான விஷயந்தான். ஆனால் இவ்வாசாரியாரின் உருப்படிகள் 18 காரட்டுக்கு இறங்கியிருந்தன. காசிலிங்கப்பத்தர் அவற்றைக்கொண்டுபோய் தயக்கத்தோடு மாசிலாமணியிடம் கொடுக்க, சந்தேகத்தில் அவரும் தீற்றிச்சோதித்துவிட்டு ‘என்னங்காணும் 18 காரட்தானே பேசுது…ம்…’ என்று உதட்டைச் சுழித்துவிட்டு நிர்த்தாட்ஷண்யமாக அத்தனையும் திருப்பிவிட்டார்.
“இந்தத்தடவை புதுஆள் வேலை, ஏதோ கொஞ்சம் பிசகிப்போச்சு’ என்று மெழுகிப் பார்த்தார் காசிலிங்கப்பத்தர். அவர் மசிவதாய் இல்லை. மாசிலாமணியின் யோக்கியாம்சங்கள் முழுவதும் அறிந்த காசிலிங்கப்பத்தருக்கு கவலையாக இருந்தது.
இருவரும் கூட்டுவியாபாரம் செய்த காலத்தில் ஒருமுறை ஒரு இளைஞன் அவரிடம் மோதிரம் ஒன்றை விற்பதற்காகக் கொண்டுவந்தான். அதைவாங்கி கண்ணுக்குக் அணுக்கமாகப் பிடித்துப்பார்த்த மாசிலாமணி அதை தீற்றிப்பாராமலே “என்ன தம்பி 18 காரட்டுக்கூடத்தேறாது போலகிடக்கு. எங்கே வாங்கின்னீர், உம்மை நல்லாய்ப் பேய்க்காட்டிப்போட்டங்கள் ஐசே” என்றார்.
“அப்பிடிப் பேய்க்காட்டினதென்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்.”
“என்ன சொல்லுறீர், சாய் ஒருநாளும் இது எங்கட வேலையாயிருக்காது, எங்கடை வேலை கையில் எடுத்தவுடன தெரியும் என்ன, எதிரியின் கையில்தான் இருந்தாலும் லக்ஷ்மியின் அம்சம் அது. எங்களுக்கு தங்கத்தின் மாற்றோட விளையாடிற பழக்கம் இல்லை. நாம் என்றைக்கும் மாற்றுக்குறைஞ்ச நகைகளை வாங்கிறதுமில்லை, விற்கிறதுமில்லை. ” என்று உதட்டைச்சுழிக்கவும் மோதிரக்கார இளைஞன் படியில் இறங்கிக்கடைக்கு வெளியே வந்து அவர்களின் முகப்புப்பலகையைப் பார்த்துவிட்டுவந்து கேட்டான்:
“ஐயா இந்தக்கடைக்கு போன ஆண்டும் இதேபெயர்தானே இருந்தது”
“ஓமோம்………. இதே பெயர்தான் ஒருமாற்றமும் இல்லை” என்றார் மாசிலாமணி. பின்னர் அவன் சூதானமாக தன் பர்ஸிலிருந்த காதாம்பரீஸில் அம்மோதிரம் வாங்கிய சிட்டையை எடுத்து அவரின் மேசையில் வைத்தான்.
மொக்கேனப்பட்டுக்கொண்டிருந்த மாசிலாமணியை உள்ளேயிருந்து வந்த உதவியாள்தான் காப்பாற்றினார்.
மோதிரத்தை கையில்வாங்கிப்பார்த்த உதவியாள் தானும் யோசிப்பதுபோல கண்களை மேலே சொருகி பாவ்லா பண்ணிவிட்டு “ஐயா…ஒரு கஷ்டமர் கொஞ்சம் பெரிசாக்கிறதுக்குக் கொண்டுவந்து தந்திருந்த ஒரு மோதிரத்தை நீங்கள்தான் தவறுதலாக விற்றுவிட்டீர்கள், அப்புறமா அவருக்கு நாங்கள் புதிசாய்ப் பண்ணிக்கொடுத்தோமல்லா, மறந்திட்டீங்களா…இதுதான் ஐயா அந்த மோதிரம்” என்றவர் இளைஞனைப்பார்த்து “என்ன தம்பி ஒரு இரண்டு வருஷம் இருக்கும் என்ன” எனவும் அவனும் சிட்டையுடன் சரிபார்த்துவிட்டும் ‘இருக்கும் இருக்கும்’ என்றான்.
இப்படியான மாசிலாமணியின் ஆரியக்கூத்துக்கள் முழுவதும் அறிந்தவர் காசிலிங்கப்பத்தர்.
மாலை நாலு மணியாகிவிட்டிருந்தும் பகல் முழுவதும் நகரத்தின் தார்வீதிகளால் வாங்கிச் சேமித்து வைத்துக்கொண்ட உஷ்ணத்தின் தகிப்பு இன்னும் கனன்றுகொண்டிருந்தது. எதிரில் கல்லூரி முடிந்து கொன்வென்ட் கல்லூரி மாணவிகளும், வேம்படிமகளிர் கல்லூரி மாணவிகளும் கலந்து வந்துகொண்டிருந்தனர். காலையில் குடித்த கோப்பிக்குப்பிறகு பகல் முழுவதும் ஒன்றுமே இன்னும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.
காங்கேசன்துறை வீதியில் நேராக தாமோதரவிலாஸை நோக்கி நடந்தன அவரது கால்கள். முதுகுப்பக்க பெனியன் ஷேர்ட்டுக்குள் வியர்வையில் தோய்ந்துவிட்டிருந்தது. அங்கே இட்லிக்குச் சொல்லிவிட்டுக் காத்திருந்தார்.
100 சவரன்களுக்குக்குமேல முதல்விட்டு இணக்குவித்த சரக்கைத் தள்ளமுடியாதுபோனால் பெருத்த நஷ்டமாகிவிடும், அடுத்த வேலைகளுக்கான முதலும் முடங்கிப்போய்விடும் முன்னொரு நாள் கடையின் ‘அடுத்தாட்கள்’, வாடிக்கையாளர்கள் இருக்கையில் மோதிரம் விற்கவந்த இளைஞனால் மொக்கேனப்பட்ட மாசிலாமணியின் நினைவுதான் அவரின் மனதில் திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. தானொரு யோக்கியவானென்று இன்றைக்கு நடிக்கிறார். யாழ்ப்பாணத்தைப் பவுணாக்கினாலும் வங்கிப்போடக்கூடிய மாசிலாமணி தன்னுடைய சரக்கைத் திருப்பிவிட்டது பெரும் வெப்பிகாரமாயிருந்தது.
கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே தன் பளபளப்பையும், ஜொலிப்பையும், மதிப்பையும், தேவையையும் இழந்துவிடாத ஒரே உலோகம் தங்கம். சர்வதேசசந்தையின் நிதிநிலவரத்தையே நிர்ணயிக்கும் இத் தக தக உலோகத்துக்கு என்றைக்கும் தீராததேவை இருந்தாலும் எல்லாநாடுகளிலும் அதை அடித்து ஆபரணங்களாக உருமாற்றி கிலோகணக்கில் விற்பனைசெய்யும் முதலாளிவர்க்கத்தினர்தான் ஆண்டுதோறும் கோடாதிபதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றனரேயன்றி அதை ஆபரணங்களாக வார்த்துக்கொடுக்கும் தொழிலாளர்கள் பொன்னாசாரிகளின் வாழ்வுநிலை மாறுவதே இல்லை. ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் ஆண்டுதோறும் கோடாதிபதிகளாக மாறிக்கொண்டிருக்க, அவர்களை உயர்த்திவிடும்
கொத்தன்களும், சித்தாள்களும் எப்படி வாழ்நிலையில் மாறாமல் இருக்கிறார்களோ அதைப்போன்றே- இந்த பொற்றொழிலாளர்களில் செம்பகுதியினர் என்றைக்கும் அன்றாடங்காய்ச்சிகளே.>>
தங்கத்தில் வியாபாரம் என்று பேச்சு. அவனவன் தரகு, சேதாரம், கூலி என்று பிடுங்கல்கள்போக புண்ணாக்கு வியாபாரத்தில்வரும் இலாபம் உண்டோவென்றால் கிடையாது. தங்கவியாபாரத்தை விட்டுவிட்டு புண்ணாக்கு மண்டி ஒன்று ஆரம்பித்தால் பரவாயில்லை மாரிகாலத்திலாவது ஏதோ நாலுகாசைப் பார்க்கலாமே என்றிருந்தது. கூலியில் கொஞ்சம் ஆதாயத்தைப் பார்த்து அவசரப்பட்டு மொத்தத்தங்கத்தை அவனிடம் கொடுத்ததும் எத்தனை முட்டாள்த்தனம். நூறு பவுணுக்கும்மேல் வியாபாரமாகாமல் தொங்கிப்போச்சென்றால் சமாளிப்பதுவும் கஷ்டமாகிவிடும், இனிமேல் 18 காரட்டே தேறும் இத்தனை ஜிமிக்கிகளையும் உருக்கிப் புடம்போட்டு வழமையான 22 காரட்டாக்குவதில் 20 பவுண்வரையில் கரையும், ஐந்து இலக்ஷம் ரூபா இழப்பேற்படும். ஆடிகழிந்து ஆவணிதொடங்கவும் அடுத்துக் கல்யாண முகூர்த்தங்கள் வரப்போகின்றன. ஒரு பத்து தாலிக்கொடிகளாவது இழைப்பித்திருக்கலாம்………சே, என்ன முட்டாள்த்தனம் இவனிடம் போய் மாட்டிக்கொண்டோம். தன்னையே நொந்துகொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு மேசையின் எதிர் இருக்கையில் நாஷனல் ஷேர்ட்டும், வேட்டியுமணிந்த நடுவயதுக்காரர் ஒருவர் களைத்துப்போய் வந்து அமர்ந்தார். பரிசாரகனை அழைத்து போண்டா + வடை + தேநீருக்கும் சொல்லிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு காத்திருந்தார். நாலுநாள் சௌவுரம் பண்ணாத முகத்திலும், பார்வையிலும் பேச்சிலும் மனிதர் வெளியூர்க்காரரென்று தெரிந்தது. பத்தர் அவரிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தார். அவர் தான் ஒரு கல்யாணத்தரகர் என்றும் வாழைச்சேனையில் இருந்து ஒரு சம்பந்த விஷயமாக நல்லூரில் ஒருபகுதியைப் பார்த்துப் பேசுவதற்காக வந்திருப்பதாகவும் சொன்னார். காசிலிங்கப்பத்தரின் மூளை துருதுருவென வேலைசெய்ய ஆரம்பித்தது. அவரின் போண்டா + வடை + தேநீருக்கான ரசீதையும் இவரே சேர்த்துச்செலுத்தி பீடாவும் ஒன்று வாங்கிக்கொடுத்துவிட்டு தனக்கான ஒரு விண்ணப்பத்தையும் அவரிடம் முன்வைத்தார்.
“உங்களால் எனக்கொரு சிறு சகாயம் ஆகவேண்டும் சகோ. ”
“எதென்னாலும் சொல்லுங்க அண்ணாச்சி, உங்களைப்போல நல்லவங்களுக்குப் பண்ணாமல் யாருக்குப்பண்ணப்போறேன் ”
“வேறொன்றுமில்லை அதோதெரிகிற காதம்பரீஸ்நகைமாளிகையிலபோய் நீங்கள் வாழைச்சேனையில் இருந்து வந்திருக்கிற ஒரு நகைக்கடைக்காரர் என்றும், உங்களுக்கு 100 ஜோடி ஜிமிக்கிகள் தேவை என்றும் கேளுங்கள். அநேகமாக ஸ்டொக் இல்லை என்றுதான் சொல்வார்கள். இரண்டு நாட்கள் தள்ளிவந்தால் கிடைக்குமாவென்றும் கேளுங்கள், சம்மதித்தார்களாயின் இரண்டுநாட்கள் கழித்து வருவதாகச்சொல்லிவிட்டு வாருங்கள்…அவ்வளவுதான் விஷயம்”
காசிலிங்கப்பத்தர் வீடு வந்துசேரவில்லை. காதம்பரீஸ் நகைமாளிகையின் ‘அடுத்தாள்’ ஒருவன் அவர் வீட்டு வாசலில் சிகெரெட் புகைத்தபடி காத்திருந்தான். இவரைக்கண்டதும் அதைத்தூர வாய்க்காலில் வீசிவிட்டு
“வணக்கம், முதலாளிக்கு உடனடியாக 100 சோடி ஜிமிக்கிகள் தேவையாம், உடனடியாய் உங்களைச் சரக்கோடு கூட்டிவரச்சொன்னார்“ என்றான்.
உடனே சம்மதித்துவிடுவாரா ஆசாரியார் கொஞ்சம் ’பிறியம்’ காட்டலானார்
“இன்றைக்கு முடியாது பாரும், பார்க்கவேண்டிய சில அவசரசோலி சித்தாயங்கள் இருக்கு, அதுகள முடிச்சிட்டு நாளை முன்மதியம் வந்துபார்க்கிறதாய்ச்சொல்லும் முதலாளியிட்ட.”
மறுநாள் அவர் எடுத்துப்போன 100 ஜிமிக்கிகளையும் ஒரேயடியாக விற்கப்போகும் கனவோடு மறுபேச்சின்றி மாசிலாமணி வாங்கி உள்ளே இரும்புப்பெட்டியுள் அடுக்கி வைத்தார்,
காசிலிங்கத்தாருக்கு முதல் நாள் இறக்கிய மெண்டிஸ் ஸ்பெசலின் கைங்கரியத்தால் நல்ல தூக்கம் பிடித்தது. அடுத்த நாள் காலை உதயத்துடன் அவர் மனதில் அதிர்வுகள் ஆரம்பித்தன. ஒரு அயோக்கியனை அதே அயோக்கியத்தாலேயே வென்றுவிடுவது அறந்தானா? பகல் முழுவதும் தீராத சிந்தனைகள் சுழன்றுசுழன்று தொடர்ந்தன. இரவு தூக்கம் அவரை அணுகப்பயந்தது. நல்லகாலம் அன்று அவர் மனைவி பிள்ளைகளோடு தாய்வீடு போயிருந்தார்.
மாசிலாமணிக்கு ஜிமிக்கிகள் எதுவுமே விலைப்படாவிட்டாலும் அவருக்கு அது ஒரு விஷயமே அல்ல. அதனால் அவர் ஸ்தாபனம் குடைசாயப்போவதுமில்லை. வியாபாரத்தில் கொஞ்சம் பொய், கொஞ்சம் நடிப்பு எல்லாம் அனுமதிக்கப்பட்டதுதான். ஆனாலும் தன்னை ஏமாற்றிவிட்ட ஒரு பிரகிருதியை மேலே நின்று பார்க்கும்போது மாசிலாமணி சிறுபுள்ளியாகத்தெரிந்தார். மூன்றாநாள் மாலைநேரம் மிராண்டாஸ் & சன்ஸ் மோட்டோர்ஸ் உதிரிப்பாகங்கள் விற்பனைச்சாலையின் மூன்றாவது படியில் நின்றுகொண்டு காசிலிங்கம் காதாம்பரீஸை நோட்டம்விட்டார். மாசிலாமணி வழமைபோல வந்திருந்த வாடிக்கையாரிடம்பேசி வியாபாரத்தில் முரமாக இருந்தார். வாடிக்கையாளர்கள் குறைந்த ஒரு நேரத்தில் நேராக மாசிலாமணியிடம்போய் “ இம்முறை ஜிமிக்கிகளின் மாற்றுக் குறைச்சலாக இருப்பதிலை எனக்கும் மனத்திருப்தி இல்லை, நான் சீக்கிரமே அசல்தங்கத்தில இணக்குவித்துக்கொண்டுவாறன், சிரமத்துக்கு என்னைப் பொறுத்தாற்றவேணும்” என்று சொல்லி பணத்தைக்கொடுத்து ஜிமிக்கிகள் அனைத்தையும் திருப்பிவாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார். அப்போதுதான் அவருக்கு முன் எப்போதையும் விட மனதும் உடலும் லேசாக ஆரம்பித்தன.
– ஜீவநதி 2016.03 (90) (9ஆவது ஆண்டு மலர்)