நெய்தலின் நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2023
பார்வையிட்டோர்: 1,611 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எப்படியாவது கடலில் பயணித்து பார்க்க வேண்டும் என்ற என் கனவு நினைவாகும் வகையில் எனக்கு அந்த வேலை கிடைத்தது. 

இளம் வணிகவியல் படிப்பை முடித்து வீட்டில் வேலையின்றி இருந்த என்னை பொழுதுபோக்காகவும் வருவாய் ஈட்டும் வகையிலும் இருக்கட்டுமே என்று எனது பெரியப்பா ஒரு அக்கவுண்டென்ட் வேலை வாங்கிக் கொடுத்தார். அது ஐந்தாறு மாதங்களே நீடிக்கும் முற்றிலும் தற்காலிகமான வேலை. அக்கவுண்டன்ட் என்றால் பெரிய நிதி நிறுவனம் வணிக நிறுவத்தில் வேலை என்று திகைப்படைய வேண்டாம். வருவாட்டு கணக்கு எழுதுவது. 

எங்கள் ஊரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளியுள்ள கோடியக்கரை என்ற ஊரில்தான் அந்த வேலை பார்த்தேன். கடற்கரையில் பொழுதை போக்குவது கடலோடு சொந்தம் கொண்டாடுவது அதன் அழகை அள்ளி அள்ளி பருகுவது கடலில் கொஞ்ச தூரமாவது பயணித்து பார்ப்பது போன்ற காரணங்களுக்காகவும் ஒரு மாறுபட்ட சூழலில் வாழ்ந்து பார்ப்போமே என்ற ஆவலிலும்தான் அங்கே பணிபுரிய நான் ஒத்துக்கொண்டேன். 

கோடியக்கரை மற்று கொடியக்காடு ஆகிய இரு ஊர்களும் கடலும் கடலைச் சார்ந்த பகுதியாகும். கிழக்கு மற்றும் தெற்கு புறங்கள் கடலாலும் வடக்கு மற்றும் மேற்குப் புறங்கள் உப்பங்கழி சதுப்பு நிலங்களாலும் எல்லைகளாகக் கொண்ட ஒரு தீவு போன்ற சுற்றுலாத் தளமாகும். அது ஒரு பெரிய வன விளங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம். மான்கள், குதிரைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் மற்றும் பல விலங்குகளை காணலாம். 

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வெளி மாநிலங்கள் மற்றும் ஐரோப்பா கண்ட நாடுகளிலிருந்தும் அண்டார்டிக்காவிலிருந்தும் லட்சக்கணக்கான பறவைகள் வலசை வந்து முட்டையிட்டு குஞ்சு பறித்து ஏப்ரல் மே மாதங்களில் தங்கள் இடத்திற்கு திருப்புகின்றன. அதில் மிகவும் பிரசித்திபெற்றது பூநாரை எனப்படும் பறவையாகும். அதன் பேரில்தான் அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு பூநாரை இல்லம் என பேயரிடப்பட்டிருந்தது. 

மக்களின் தொழில் மீன்பிடித்தலாகும். வருடம் முழுவதும் அத்தொழிலை மேற்கொண்டாலும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அங்கே மீன் பிடி காலம் என அழைப்பர். அக்காலத்தில் அதிக அளவு மீன்கள் கிடைக்கும். வெளி ஊர்களில் இருந்து அங்கு வந்து தங்கி மீன் பிடிப்பார்கள். எனக்கு வேலை கொடுத்தவர் ரெங்கையாப்பிள்ளை என்ற கைநாட்டுப் பேர்வழி ஆவார். பையன் ருஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்தான். 

இராமேஸ்வரத்திலிருந்து ஆறு மீன்பிடி விசைப் படகுகளை வரவழைத்து மீன்பிடித் தொழில் நடத்தினார். இவரிடம் படகு ஏதுமில்லை. 

மீனவர்கள் விடிகாலை நான்கு மணிக்கே கடலுக்கு சென்று மாலை நான்கு மணிவாக்கில் மீன்களோடு கரை திரும்புவார்கள். அவர்கள் கொண்டுவரும் மீன்களை எடையிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தக்கவாறு வாரம் ஒரு முறை படகு காரர்களுக்கு பணம் பட்டுவாடா வேண்டும். பிடித்து வந்த மீன்களில் இரால் போன்ற மீன்களை உடனே மொத்த வியாபாரிகளிடம் கை மாற்ற வேண்டும். மொத்த வியாபாரிகள் மூன்று மணிக்கே கருவாட்டில் ஈக்கள் மோய்ப்பதுபோல மேயத் தொடங்கி விடுவார்கள். மீதம் உள்ள மீன்களை உப்புத் தொட்டியிலே ஊர வைத்து மறுநாள் முதல் சில நாட்கள் வெய்யிலில் காயவைத்து கருவாடாக்கி மூட்டை கட்ட வேண்டும். அதனை பத்து நாட்களுக்கு ஒருமுறை மொத்த வியாபாரியை வரவழைத்து எடையிட்டு அனுப்ப வேண்டும். எல்லா வேலைகளுக்கும் ஒரு ஆண் ஒரு பெண் நியமித்திருந்தார். என் வேலை என்பது மீன்களை நிறுக்கும்போது எடையை நோட்டில் குறித்துக்கொண்டு படகு காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதும் மொத்த வியாபாரியிடம் பணம் பெருவதும்தான். 

மணல் தரை தென்னங்கீற்றால் வேயப்பட்ட கருவாட்டு குடோன் தான் என் அலுவலகம். ஒரு மேஜை ஒரு நாற்காலி ஒருமரப் பெஞ்சு தான் அலுவலக தளவாடம். இரண்டு ஒரு குயர் நோட்டு ஒரு பேனா, ஒரு கால்குலேட்டர் தான் அலுவலக ஆவணங்கள். மூக்கை சுழிக்க வைத்த கருவாட்டு மணத்தை நுகர்ந்து நுகர்ந்து நாளடைவில் மணம் மனத்தோடு இரண்டரக் கலந்துவிட்டது. 

தங்குவதற்கு அவர் வீட்டு மாடியின் இரண்டாவது தளத்தை அங்கே எனக்கு ஓதுக்கி இருந்தார். அங்கே உணவகங்கள் இல்லாததால் அவர் வீட்டில்தான் சாப்பிட்டேன். அவர் வீட்டில் எப்போதும் மீன் உணவுதான். நான் சைவம். எனக்காக தனியே சைவ உணவு தயாரித்து கொடுத்தார்கள். ஒருநாள் இரால் கிரேவியைகொண்டு வந்து இதில் முள் இருக்காது சாப்பிட்டுப் பாருங்களேன் என அன்பால் கட்டாயப்படுத்தினார். அப்போதுதான் இரால் மட்டும் உண்ண தொடங்கினேன். இன்று வரை இராலைத் தவிர வேறு மீன்களை நான் உண்டதே கிடையாது. 

ஒருவார காலமே அவர் வீட்டில் இரவை கழித்தேன் பின்னர் என் இரவுகள் கடற்கரை மணலில் கழிந்தன. காலையில் குளிக்க மட்டும் அவர் வீட்டுக்குப் போய் காலை உணவு உண்டு வருவேன். மதியமும் இரவும் அவரே கடற்கரைக்கு எனது உணவை கொண்டு வந்து கொடுப்பார். 

அலைகள் கரையைத் தொடும் இடத்திலிருந்து சுமார் ஐம்பது மீட்டர் தள்ளி மணற் பரப்பில் பாயை விரித்து தூங்குவேன். ஒரு படகின் உரிமையாளர் ராஜபாண்டி மற்றும் அவரது அண்ணன் மகன் கடற்கரையில் என்னோடு தூங்குவார்கள். 

கோவப்பாடாத நேரங்களில் அதிக சப்தமின்றியும் ஆத்திரம் வந்தால் ஆர்ப்பரித்தும் அலைகள் மூலம் தன் இருப்பை கடல் நிருபிக்கும். சப்தமெல்லாம் மெல்ல மெல்ல ஓசையாகி இசையானது. வெப்பமும் அற்ற குளிருமற்ற மெல்லிய காற்று மேனியை தழுவிக்கொண்டே இருக்கும். சுவர்களற்ற கூரையற்ற படுக்கையறைக்கு சொந்தம் கொண்டாடும் என் பரந்து விரிந்த உணர்வின் தாபம். ஒவ்வொரு வின்மீனிலும் யாரேனும் எனது மூதாதையர் ஒருவர் இருப்பதாக உணர்வேன். 

ஆரம்பத்தில் கடலை பற்றி கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன். யோசிக்க யோசிக்க அதன் மர்மங்கள் கூடிக்கொண்டே போனதால் அதை பற்றி சிந்தனை செய்வதை ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டேன். சிந்தனைக்கு கட்டுப்பட்டதில்லையே அது. ஆனால் அலையின் சப்தம் அடங்கிப் போனது. அது பற்றிய சிந்தை இற்றுப்போனது. அதன் மீதான பயன் அற்றுப்போனது. மொத்தத்தில் என்னைப் போலவே அது மௌனமானது. நல்ல வேளை அந்த நாட்களில் சுனாமி வரவில்லை. வந்திருந்தால் மௌனம்கூட இருந்திருக்காது. 

அந்த மர்ம தேசத்தில் ஒருநாள் பயணித்துவிட வேண்டும் என்ற ஆசை மேலோங்கத் தொடங்க ராஜபாண்டியை கேட்டேன். 

அவர் அழைத்துப்போக மறுத்துவிட்டார். காரணம் புதிதாக கடல் பயணம் செய்தால் வயிறு குமட்டல் வரும் வாந்தி வரும் மயக்கம் வரும் என்றெல்லாம் வர்ணித்தார். எது வந்தாலும் பரவாயில்லை. தாங்கிக் கொள்கிறேன். ‘ஒரு நாள் என்னை அழைத்து போங்க’ என கெஞ்சி கூத்தாடினேன். 

“சரி. உங்க ஓனரை கேட்டு கிட்டு ஒரு நாளைக்கு அழைச்சிகிட்டு போறேன்” என்றார். 

மனம் துள்ளியது.

ஒரு சிந்துபாத் 

ஒரு மெகல்லன் 

ஒரு வாஸ்கோடகாமா என மாறி மாறி வந்து வந்து போயினர். 

இதை ஓனரிடம் சொன்னதும் ஒத்துக்கொள்ளவில்லை. 

“எதாவது ஒண்ணு ஆச்சின்னா ஒங்க அம்மா அப்பாவுக்கு யாரு பதில் சொல்லுறது? முடியவே முடியாது” என்றார். 

“ஒண்ணும் ஆகாது. பயப்படாதிங்க. எத்தன பேரு டெய்லி கடலுக்கு பொய்ட்டு வாராங்க. எனக்கு மட்டும் என்ன ஆவப்போகுது?” 

“நீங்க நைட்ல கடற்கரையில படுக்குறதே எனக்கு திக்கு திக்குன்னு இருக்கு. உங்க பெரியப்பாவுக்கு தெரிஞ்சிது உன்ன நம்பிதானே அனுப்புனேன். கடல் மண்ணுல படுக்கவச்சிருக்கேன்னு திட்டுவார்” 

“சார். நான் ஒண்ணும் சின்ன குழந்தையில்லை. அம்மா அப்பா பெரியப்பா எல்லாம் என்ன ஒண்ணும் செய்ய முடியாது. நான் யாருக்கும் அடங்காதவன்னு அவங்களுக்கே தெரியும்” 

“அப்பன்னா ஒங்க பெரியப்பா கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்கிடுறேன்” என்றார். 

“உப்பு பொறாக மேட்டர் சார் இது. ஒருத்தர் கிட்டேயும் கேட்ட வேண்டாம். நீங்க போக வேண்டாம்ன்னாலும் ஒரு நாளைக்கு வம்படியா போட்ல ஏறி உக்காந்துடுவேன்” என்றேன். 

அப்படி இப்படின்னு பேசியதும் ஒத்துக்கொண்டார். 

“பௌர்ணமி அலை அதிகமா இருக்கும். ஒரு வாரம் கழிச்சி போகலாம்” என்றார். 

“அலை அடிக்குப் போது போறதுதான் சார் ஜாலியா இருக்கும். ஒரு த்ரில் இருக்கும். நாளைக்கு பௌர்ணமி தானே நாளைக்கே போறேன்” 

“எதெயெடுத்தாலும் வம்புதானா?” 

ராஜபாண்டியும் அருகில் இருந்தார் அவருடைய படகில் அழைத்துபோகும்படி அறிவுறுத்தினார். 

“விடியக்காலை நாலு மணிக்கு ரெடி ஆயீடுங்க. எல்லாத்துக்கும் நாலஞ்சி லெமன் வச்சிகிடுங்க” என்றார் 

“காலையில நான் கொண்டாறேன்” என தெரிவித்து வீட்டிற்கு திருப்பினார் ஓனர். 

அன்றிரவு கடல் மௌனனத்தை களைந்திருந்தது. அன்று பௌர்ணமி என்பதால் மட்டும் இல்லை. ஒரு புதிய பயணியை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தாலாக இருக்கலாம். 

சரியாக நான்கு மணிக்கு படகுத்துறைக்குப் போனேன். ஓனர் காலை மற்றும் மதியத்திற்கான உணவு வீட்டில் சுட்டிருந்த பத்து பதினைந்து முறுக்கு, காராச்சேவு, ஒரு பாட்டிலில் எலும்பிச்சை சாறு, பத்து எலும்பிச்சம் பழம் எல்லாவற்றையும் ஒரு மஞ்சள் துணிப்பையில் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார். ‘நல்லபடியா திருப்பனும் ஈஸ்வரா’ என கடவுளை வாய்விட்டு வேண்டிக்கொண்டார். 

எனக்கு சிலிர்த்துப் போனது. இந்த சித்துபாத் மீது ஓனருக்கு எவ்வளவு அக்கறை, பிரியம், அன்பு, பொறுப்பு. இன்னும் எத்தனை வார்த்தைகளை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். 

ராஜபாண்டியும் எனக்காக மூன்று பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வந்திருந்தார். நிலவு மேற்கே சாய்ந்து கொண்டிருந்தது. அதன் ஒளி பிம்பங்கள் அலைகளின் முகட்டில் பளிரென மின்னின. மீனவர்கள் நால்வரோடு குகன் போல நானும் ஐவரானேன். 

விடிவதற்குள் குறிப்பிட்ட அளவு மீனை பிடித்துவிட்டார்கள். நான் கடலையும் நிலவையும் மாட்டிய மீன்களையும் வேடிக்கை பார்த்தேன். நிலவு கடலுக்குள் மூழ்க ஒரு செம்பந்து கிழக்குப் பக்கம் கடலை கிழித்து மேலே வந்து வெளிச்சம் அடித்தது. 

திடீரென ஒரு பெரிய திருக்கை மீன் வலையில் மாட்ட மேல இழுக்க முடியாமல் நால்வரும் தினறினார்கள். நானும் சேர்ந்து இழுத்தேன். 

“ஏங்க பாட்டால்லாம் பாடிகிட்டு இழுக்க மாட்டிங்களா?” என்றேன். 

“ஓ பாடுவோமே. சேர்ந்து நீங்களும் பாடுங்க பாப்போம்” என்று ராஜபாண்டி ஐலசா பாட்டை ஆரம்பித்தார். 

ஏலேலோ வரை அவர் பாட, வரியின் ஐலசா வரை மீதத்தை கோரசாக முவரும் பாடினர். எனக்கு பாடல் தெரியாததால் கூட்டத்தோடு கோவிந்தா போட்டேன். 

ஏலேலோ ஐலசா 
வானமுட்ட ஏலேலோ நிற்கிறானே ஐலசா 
ஓடி ஓடி ஏலேலோ இழுக்கவேணும் ஐலசா 
மண்ணநம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா 
மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா 
கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா 
இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா 
பூவநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா 
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா 
காய நம்பி ஏலேலோ பழமிருக்க ஐலசா 
பழத்த நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா 
உன்ன நம்பி ஏலேலோ நானிருக்கேன் ஐலசா 
உச்சி வெயிலில் ஏலேலோ உருகிறேனே ஐலசா 
உள்ளம் மட்டும் ஏலேலோ உன்னிடமே ஐலசா 
போட்டுக்குள்ளே ஏலேலோ திருக்கை வந்துச்சி ஐலசா. 

போதுவாக அவர்கள் பாடுவதில்லை. எனக்காக படியதாக தெரிவித்தார் துரைபாண்டி. அவர் பெருமைக்குறியவர் என்பதை மேலும் உணர்ந்தேன். 

அலைகளில் ஏறி இறங்கி படகு போகும்போது ஏற்படும் ஆட்டம் எனக்கு குமட்டலோ மயக்கமோ வாந்தியோ வரவில்லை. மாறாக தாலாட்டுவது போலே இருந்தது. தின்பண்டங்கள் பிஸ்கட்டுகளை பகிர்ந்து உண்டோம் . அவை எனக்கானது என வாங்கிக்கொள்ள மறுத்தார்கள். சண்டை போட்டு வாங்க வைத்தேன். 

மீன்களை கம்பியில் குத்தி படகின் புகைப்போக்கி வழியாக கீழே இறக்கி சில நிமிடங்களில் வெளியே எடுத்து வெந்துபோன மீன்களை உரிந்து உணவுக்கு சைட்டிஷ்ஷாக பயன் படுத்தினார்கள். அந்த நாற்றம்தான் என் குடலை பிடுங்கியது. எலும்பிச்சை சாரை பருகி சரிசெய்து கொண்டேன். அதனை அறிந்ததும் மேலும் மீன் சுடுவதை எனக்காக நிறுத்திக் கொண்டார்கள். மதிய வாக்கில் நடுக் கடலை அடைந்தோம் தென்திசையில் இலங்கையின் வெல்வெட்டித்துரை காட்டு மரங்களின் பசுமை தென்பட்டது. வடக்கே கோடியக்கரையின் மரங்கள் தென்பட்டன. இலங்கைக்கும் இந்தியாவுக்குமான மைய கடல் பகுதி அது. இரு புறமும் பதினொறு கிலோமீட்டர் தூரம் உள்ளதாக கூறினார்கள். அதுவரைதான் அவர்களின் மீன்பிடிப் பகுதியாம். எல்லை மீறிப்போனால் இலங்கை கடற்படை கைது செய்துவிடுமாம். 

‘இதுவரை இன்று வந்ததே வெல்வெட்டித்துரை காட்டை காமிக்கத்தான்’ என்றார் ராஜபாண்டி. எனக்கு பெருமையாக இருந்தது. கோலம்பஸ் மேற்கிந்திய தீவை இந்தியா என பார்த்தது போல எதையோ ஒரு தீவை கண்டுபிடித்ததைப்போல உணர்ந்தேன். 

நான் வந்த அதிர்ஷ்டம் அன்று நிறைய மீன்கள் பிடிபட்டதாக ராஜபாண்டியின் அண்ணன் மகன் திருவாய் மலர்ந்தார். ஏனெனில் அவர் ரிசர்வ் டைப். அதிகம் பேச மாட்டார். அதிகமென்ன சுத்தமாக என்றே சொல்லலாம். சித்தப்பா இருக்கிறார் என்ற மரியாதையோ என்னவோ. ஒரு நாள் தனியே பேசி பார்க்க வேண்டும். 

மாலை மூன்றரை மணிக்கு கரையை அடைந்தோம். ஓனர் மூன்று மணிக்கே வந்து கடலை பார்த்தவாறு நிற்பதாக கூறினார். எனக்கு படகோட்டி படத்தில் வரும் பாடல் ஞாபகத்திற்கு வர முணுமுணுத்தேன். அந்த கடல் பயணம், மணல் படுக்கை, அவ்வாறான மனிதர்களின் அன்பு அதற்கு முன்னும் பின்னும் வாழ்நாளில் எப்போதுமே எனக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *