இறுதி வாக்கு சித்தர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 18,986 
 

இறுதி வாக்கு சித்தர்மாடு மேய்க்கப் போன சின்னான்தான் அவரை முதலில் பார்த்தான்.ஊருக்கு வெளியே இருந்த அய்யனார் கோயிலிலிருந்து இருநூறு அடி தள்ளி ஒரு பெரிய மரம் இருந்தது. கீழே அந்தக் காலத்தில் யாரோ கட்டிய ஒரு சிறிய கல் மேடை. அதன் மேல்தான் அந்த சித்தர் அமர்ந்திருந்தார்.

தலையில் சடா முடி. நீளமான தாடி. நெற்றியில் விபூதி. உடம்பு குறுகலாக இருந்தது. வயிறு உள் வாங்கியிருந்தது.யாருடனும் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்தவர் திடீரென சின்னானைக் கூப்பிட்டார். “இங்கே வா…”
பயந்துகொண்டே அருகில் போனான் சின்னான்.

“சாப்பிட ஏதாவது வைச்சிருக்கியா?”

“இல்லே…”

“ஏதாவது கொண்டு வா…”

அருகில் இருக்கும் அய்யனார் கோயிலுக்குப் போனான் சின்னான். கீழே சில பழங்கள் இருந்தன. கொண்டு போனான். “சாமீ… பளம்தான் இருக்கு…”

“கொடு. அதான் வேணும்…”ஊருக்குள் போனதும், தான் சித்தரைப் பார்த்ததைச் சொன்னான். யாரும் பொருட்படுத்தவில்லை.அதன்பிறகு அய்யனார் கோயிலுக்குப் போன சில பெண்கள் சித்தரைப் பார்த்தார்கள். மரத்தடியில் ஒரு யோகி மாதிரி அவர் அமர்ந்திருப்பதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

“ஊர் ஊரா சுத்தற பக்கிரி போல இருக்கு. ஆருக்கும் பிரச்னை இல்லேன்னா இருந்துட்டுப் போவட்டும்…” என்று சொல்லிவிட்டார் பெரிய பண்ணை.
அன்று மாலை. ஆறு மணிக்கு ஊருக்கு வெளியிலிருந்து ஏதோ மணி அடிக்கும் ஓசை கேட்டது. பலருக்கும் அது என்னவென்று புரிபடவில்லை.
காளியண்ணனும் முத்துவும்தான் ஓடினார்கள்.

சித்தர் தங்கியிருந்த மரத்துக்குப் பக்கத்தில் ஒரு சூலம் இருந்தது. அருகே ஒரு மணி இருந்தது. அதைத்தான் வேகமாக அடித்துக் கொண்டிருந்தார் சித்தர்.
சற்று நேரம் ஆனதும் மணி அடிப்பதை நிறுத்தினார்.“வந்துட்டீங்களா? ஊருக்குள்ளே போய் ஒரு சேதி சொல்லுங்க…”

“என்ன சாமீ?” “இன்னைக்கு திங்கட்கிழமை. புதன்கிழமை உச்சி வெயிலுக்கு முன்னால ஊர்ல ஒரு பொணம் விழப் போகுது…”

“சாமீ?” முத்துவுக்கு உடல் நடுங்கியது.

“ஆமா… அந்த ஆள் வூட்டுக்கு பின்னால ஒரு கிணறு இருக்கும். அதுல நாலு ராட்டினம் இருக்கும்…” கூறிவிட்டு மரத்தை நோக்கி நடந்தார். மரத்துக்கடியில் படுத்துத் தூங்க ஆரம்பித்தார்.காளியண்ணனுக்கும் முத்துவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

“பெரியபண்ணை கிட்டே சொல்லிடுவோம்…” என்றான் காளியண்ணன்.“நெசமாலுமா சொல்றீங்க? சித்தர் அப்படியா சொன்னாரு?” வியப்புடன் கேட்டார் பெரிய பண்ணை.

“ஆமா அய்யா. வேகமா மணி வேற அடிச்சாரு…”

“ஊர்ல வூட்டு பின்னால கெணறு வெச்சிருக்கவன் ஆரு?” என்றார் பெரிய பண்ணை.“நெறைய பேர் வூட்ல இருக்குங்க…”“அட… அதுல நாலு ராட்டினம் போட்டது ஆரு?”“தெரியல்லியே…”“எதுக்கும் ஊரு சனங்கள சாக்கிரதையா இருக்கச் சொல்லுவோம்…” என்றார் பண்ணை.

அடுத்த நாள் காலை. ஏதோ கூக்குரல் கேட்கவே பண்ணை வீட்டை விட்டு வேகமாக வெளியே வந்தார். “என்ன ஆச்சு?”

“மூலைத் தெரு சண்முகம் காத்தால போயிட்டாருங்க…”

“என்ன? நம்ம சண்முவமா? நல்ல கட்டுமஸ்தான ஒடம் பாச்சே?’

“திடீர்னு ஜன்னி வந்துடுச்சு…” வேக வேகமாக சண்முகம் வீட்டுக்கு ஓடினார் பெரிய பண்ணை.

“எலே… வழிய உடுங்க…” என்று வீட்டுப் பின்பக்கம் போனார். பின்புறம் ஒரு கிணறு இருந்தது. அதில் நான்கு ராட்டினங்கள் இருந்தன.

திகைத்துப் போய் நின்றார் பெரிய பண்ணை.மாலையிலேயே ஊரைக் கூட்டினார் பண்ணை.

“அந்த சித்தர் வாக்கை வெைளயாட்டா நினைக்க வாணாம். அந்த சாமிக்கு ஏதோ சக்தி இருக்கு. இன்னொரு வாட்டி அவர் வாய்லேந்து இந்த மாதிரி எதுவும் வந்துடக் கூடாது. அவர மனசு கோணாம நாம பாத்துக்கணும்…”அனைவரும் தலையாட்டினார்கள்.மறுநாள் காலை. பெரிய பண்ணையும் ஊர் மக்களும் சித்தர் முன் பவ்யமாகக் கை கட்டி நின்றார்கள்.

“சாமீ… நீங்க நம்ம ஊருக்கு வந்தது எங்க பாக்கியம். ஊரு நல்லா இருக்கணும். எப்பவுமே நல்ல அருள் வாக்காவே சொல்லணும்…”

அவர் முன்னால் ஒரு தட்டு நிறைய பல வகையான பழங்களை வைத்தார்கள். இன்னொரு தட்டில் சிறிது ரூபாய் நோட்டுகள் இருந்தன.

நான்கு வாழைப் பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டார் சித்தர். மீதி பழங்களை அப்படியே புறம் தள்ளினார். ரூபாய் நோட்டுகளை எடுத்து காற்றில் வீசினார்.பலமாகச் சிரித்தவர் படுத்துக் கொண்டுவிட்டார்.

பத்து நாட்கள் அமைதியாகப் போயின. திடீரென ஒரு நாள் ஊருக்கு வெளியிலிருந்து மணியோசை கேட்டது. போகப் போக பெரியதாகக் கேட்டது. ஊர் மக்கள் ஓடினார்கள்.அரைக் கண்களைத் திறந்து கொண்டு பெரிய குரலில் சித்தர் கத்த ஆரம்பித்தார்.

“அந்த பொம்பளைக்கு காலம் முடிஞ்சு போச்சு. ரெண்டு மாசம் முன்னாலதான் அவ புருசன் ஆத்து வெள்ளத்துல போனான். இப்போ இவளும் பின்னாலயே போகப் போறா… இன்னிக்கு ராத்திரிக்குள்ள எல்லாமே முடியப் போகுது…”“அய்யா…” என்றார் தலையாரி ரங்கசாமி.“என்ன?” என்றார் பண்ணை.“பேச்சியம்மாவை சொல்றார் போல இருக்கு…”“அட… ஆமாம் இல்லே… ஓடுங்கடா… அல்லாரும் ஊருக்குள்ள ஓடுங்க. பேச்சியம்மாவை எப்படியாவது உஷார் படுத்துங்க…”அனைவரும் பேச்சியம்மா வீட்டுக்கு ஓடினார்கள்.

வீட்டு வாசலில் கூட்டமாக இருந்தது.“குழம்புல ஒரு பெரிய அரணை விழுந்திருக்கு. அதைப் பாக்காம பேச்சியம்மா சாப்பிட்டுடுச்சு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்க…”பேச்சியம்மா திரும்பி வரவில்லை. போஸ்ட் மார்ட்டத்துக்கு உடம்புதான் போனது.

மறுபடியும் ஊர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

“அந்த சித்தர் இங்கே இருக்கறது நல்லதில்லே. அவரை எப்படியாவது நம்ம எல்லையை விட்டு விரட்டணும்…”

“அவர் போகல்லேன்னா?”“அடிச்சு உதைச்சு அனுப்பிடுவோம்…”பண்ணையார் எழுந்தார்.“அது தப்பு. அவரை சீண்டி விட்ட மாதிரி ஆயிடும். பெரிய குத்தம் ஆயிடும். கோபத்துல அவர் இன்னும் பெரிய பெரிய சாபமெல்லாம் கொடுத்தா ஊரே நாசமாப் போயிடும். கோயிலுக்கு நேர்ந்துக்கலாம். சித்தர் எதுவும் வாக்கு சொல்லக் கூடாதுன்னு அய்யனாருக்கு வேண்டிக்குவோம். பொங்கல் வெப்போம்…”

அன்றிலிருந்து சித்தருக்கு தினமும் வாழைப்பழம் தவறாமல் கொடுத்து வந்தார்கள். வைத்து விட்டு எதிரே நிற்காமல் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

இரண்டு மாதங்கள் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.திங்கட்கிழமை மாலையில் மீண்டும் மணிச் சத்தம் கேட்டது,

“அவன் வீட்டு வாசல்ல பாதாம் கொட்டை கொடுக்கற மரம் இருக்கும். அய்யோ பாவம். அவனுக்கு ஆயுசு இன்னும் மூணு நாள்ல முடியப் போகுது. அதுவும் துர் மரணம்…”ஊரே திக்கித்து நின்றது. மறுபடியும் ஓர் இறுதி வாக்கா?“யார் ஊட்ல பாதாம் மரம் இருக்குது?”

“அய்யா… என் வூட்ல…” என்று ஒருவர் முன்னால் வந்தார்.

“எங்க வூட்லயும் இருக்குங்க…” என்று மேலும் இருவர் வந்தார்கள்.“என்னடா இது ரோதனை? மூணு பேர் ஊட்ல மரம் இருக்குதா? அப்போ மூணு பேரும் சாக்கிரதையா இருங்க…”இரண்டாம் நாள் மதியம். தலையாரி ஓடி வந்தார்.“அய்யா… மாணிக்கவேலு போயிட்டாருங்க…”

“என்னய்யா சொல்றே?”“வீட்டு வாசல்ல பாதாம் மரம் இருந்தாத்தானே சாவு வரும்னு மாணிக்கவேலு மரத்தை வெட்டியிருக்காருங்க. மரம் அவர் மேல சாஞ்சிடிச்சு. கழுத்து மேலயே மரம் விழுந்து….”பெரிய பண்ணை தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

ஒரே வாரம்தான். மறுபடியும் மணி அடித்தது.“இன்னும் ஒரே நாள். நாளைக்கு காத்தால ஒம்பது மணி வரைக்கும்தான் கெடு. அவனும் போறான். வலது தொடைல பெரிய மச்சம். தூக்கத்துலயே போயிடறான்…”பெரிய பண்ணைக்கு பொறி தட்டியது. வேட்டியை விலக்கிப் பார்த்துக் கொண்டார். வலது தொடையில் பெரிய மச்சம்.“அய்யா… ஒங்க தொடைல மச்சம்…” என்றார் காளியண்ணன்.

“உடு. நடக்கறது நடக்கட்டும்…” என்றார் பண்ணை.ஊருக்குள் அனைவரும் வெலவெலத்துப்போய் விட்டார்கள். பண்ணை வீட்டு முன்பாகக் கூடி விட்டார்கள். இரவு முழுக்க யாரும் தூங்கவில்லை.காலை. பண்ணை வீடு எப்போதும் போல அமைதியாகவே இருந்தது.காலை பத்து மணிக்கு பெரிய பண்ணை வீட்டை விட்டு வெளியே வந்தார்.

“எனக்கு ஒண்ணும் ஆகலே. இறுதி வாக்கு சித்தரோட வாக்கு முதல் முறையா தப்பாப் போயிடுச்சு. இனிமே அவரைப் பாத்து பயப்பட வேணாம். அவரை ஊரை விட்டு துரத்த இதான் சரியான நேரம்…”அனைவரும் மரத்தடிக்குப் போனார்கள். சித்தர் கீழே விழுந்து கிடந்தார். வாயில் நுரை தள்ளியிருந்தது. மூச்சு நின்று போயிருந்தது.அவரின் வேட்டி விலகிப் போய் வலது தொடை தெரிந்தது. அதில் பெரிதாக ஒரு மச்சம் இருந்தது!

– ஆகஸ்ட் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *