கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 16,294 
 

வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி.

‘வாக்கிங்’ போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக் கிடந்த பேப்பரைத் திரட்டி எடுத்துக் கொண்டு படிக்கத் திறந்தபோது அந்த பயங்கரம் அதில் விரிந்து கிடந்தது. ‘அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி: குடும்பத்தைக் கொன்றுவிட்டுத் தன்னையும் சுட்டுக் கொண்ட இந்திய இளைஞர்’ என முதல் பக்கத்தில் வீறிட்ட அந்தச் செய்தி, அந்த கோர சம்பவத்தை கற்பனைக்கு இடம் வைக்காத ஒரு கிரைம் நாவலைப்போல் விவரித்திருந்தது.

வாசற்கதவிலேயே சாய்ந்து கொண்டு அதை வாசிக்கத் தொடங்கினான் மாதவன்.

*

சுரேஷ் ஜெயராமனை ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்திருக்கும். பதினைந்து வருடத்திற்கு முன் அதிகாலையிலிருந்து அமெரிக்கத் தூதரகத்தின் முன் காத்திருந்த வரிசையில் அவரை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அவரை உங்களுக்கு அறிமுகம் இல்லையென்றாலும் அவரது வாழக்கை உங்களுக்குப் பரிச்சயமானதுதான். இந்தியாவின் படித்த, நகர்புற நடுத்தர வர்க்கத்திற்குப் பரிச்சயமான வாழ்க்கை.

அப்பா ஜெயராமன் பொதுத்துறை நிறுவனத்தில் பெரிய அதிகாரி. அம்மா நிர்மலா ஆங்கிலப் பேராசிரியர். இரண்டு பேரும் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் ஓய்வு பெற்றார்கள். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகில் எழுந்து நிற்கும் அடுக்குமாடி வீடு ஒன்றில் 1200 சதுர அடி வாங்கிக் கொண்டு ஓய்வுக்குப் பின் குடியேறினார்கள்

பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே அமெரிக்கக் கனவுகளை சுவாசித்து வளர்ந்த பையன் சுரேஷ். அவன் ‘வெட்டி அரசியல்’ பேசுவதில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள் எவர் மீதும் உயர்ந்த அபிப்பிராயங்கள் கிடையாது. இடம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் பற்றி எழுதும் ஜும்பா லஹரியின் நாவல்கள் பிடிக்கும். ஆனால் அது இலக்கியமா என்ற சர்சைகளுக்குள் இறங்குவதில்லை. கல்லுரி வந்ததும் கதை படிப்பது குறைந்து விட்டது. சினிமாக் கிசுகிசுக்கள் தெரியும். ஆனால் அவற்றை அறிந்து கொள்ள அதிகம் மெனக்கெட்டதில்லை. கணினியில் மேயும் போது, இணையத்திலிருந்து இலவசமாக இறக்கி வைத்த இசைக்கீற்றுக்களை கேட்பதுண்டு. ஆனால் காதுதான் அதைக் கேட்டுக்கொண்டிருக்குமே தவிர கவனம் எல்லாம் கணினியின் மீதுதான் இருக்கும் தொலைக்காட்சிகளில் ‘பிசினஸ்’ சானல்கள் அவனுக்குப் பிடித்திருந்தன. பதின்ம வயதில் எழும் ஹார்மோன் கிளர்ச்சிகள் கூட அவனைக் ‘கவிழ்த்து’ விடவில்லை. பெண் சிநேகிதர்கள் உண்டு. ஆனால் அவர்களில் எவரும் காதலிகள் இல்லை.. பள்ளி இறுதித் தேர்வில் மாநில அளவில் ஏழாவதாகவோ எட்டாவதாகவோ ராங்க். பெங்களூர்

ஐ ஐ எம் ல் எம்.பி.ஏ. அப்புறம் அங்கேயே ஒரு பன்னாட்டுக் கம்பனியில் கணினி முன் அமர்ந்து ஆபீஸ் வேலையும் பார்த்துக் கொண்டு அவ்வப்போது ‘பிளாக்’ எழுதிக் கொண்டு ஒரு இரண்டு வருடம் போயிற்று. அதற்குப்பின் ஸ்காலர்ஷிப் கிடைத்து அமெரிக்காவிற்குப் படிக்கப் போனான். அறையை நான்கு பேருடன் பகிர்ந்து கொண்டு, முறை வைத்து சமைத்து, கட்டில் கிடைக்காத குளிர் நாட்களில் ஸ்லீப்பிங் பைக்குள் பொதிந்து கொண்டு தூங்கி, ஸ்காலர்ஷிப் பணத்தை மிச்சம் செய்து பழைய கார் வாங்கி, அங்கேயும் ஒரு எம்.பி.ஏ முடித்தான்.. அசத்தலான புராஜக்ட். அதனால் கேம்பஸ் இண்டர்வியூவில் மெரில் லிஞ்சில் வேலை கிடைத்தது. அம்மா தன் கூட வேலை பார்த்தவரின் பெண்ணையே தேர்ந்தெடுத்துக் கல்யாணம் செய்து வைத்தாள் அவனுக்கு அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆட்சேபிக்கிற அளவிற்குக் கனகாவும் அப்படி ஒன்றும் சோடை போனவள் அல்ல. அவனது கனவின் இந்திய பிரதியாகவே அவள் இருந்தாள்..

அமெரிக்கப் பொருளாதாரத்தையும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் வால் ஸ்ட்ரீட் வேலையில் அழுத்தம் அதிகம் இருந்தது. ஆனால் அது வாரிக் கொடுத்தது. ‘அப்பா, மாதச் சமபளத்தில் நாள்களை நகர்த்தும் மத்திய தர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகிவிட்டோம்’ என்று உற்சாகமாகக் கடிதம் எழுதினான் சுரேஷ். ”சந்தோஷம். காசு வருகிறபோதே அதில் கொஞ்சத்தைச் சேர்த்து வை. நான் வேண்டுமானால் இங்கே இடம் பார்க்கட்டுமா?” என்று பதில் எழுதினார் ஜெயராமன்..”வேண்டாம். இங்கேயே மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். ஆறை நூறாக்க அதுதான் சிறந்த வழி” என்று சுரேஷ் மின்னஞ்சல் அனுப்பினான்..

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடி எடுத்து வைத்ததும் அதன் பொருளாதாரம் அதிர்வுகள் எழுப்பியது. சுரேஷ் வேலை மாற்றிக் கொண்டான். இராக் யுத்தத்தை அடுத்துப் பொருளாதாரத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.

“ இந்தியாவிற்கே திரும்பிப் போய்விடலாமா?” என்றாள் கனகா.

“ எப்படிப் போக முடியும்? போனால் நம் கெளரவம் என்னாகும்? அவர்கள் நம்மை ஏதோ சாதனையாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்தில் மண் அள்ளிப் போட வேண்டுமா?”

“பெற்றவர்கள்தானே புரிந்து கொள்ள மாட்டார்களா?”

“எப்படி முடியும் கனகா? இத்தனை நாள் இங்கே இருந்துவிட்டு அங்கே திரும்பிப் போனால் மூச்சு முட்டும். அவ்வப்போது லீவிற்குப் போகும் போது பார்க்கத்தானே செய்கிறாய்? ஏர்போர்டில் இறங்கி இமிகிரேஷன் க்யூவில் நிற்கும் போதே எரிச்சல் ஆரம்பித்து விடும். ஏதாவது அரசியல்வாதி அல்லது அவரது குடும்பத்தினர் க்யூவை உடைத்துக் கொண்டு முன்னால் போய் நிற்பார்கள். யாரும் கேட்க முடியாது.அதிகாரம் இருந்தால், பணம் இருந்தால், இந்தியாவில் ஒரு முன்னுரிமை, ஒரு அறிவிக்கப்படாத சலுகை. இல்லாவிட்டால் வேற மாதிரி மரியாதை. எந்த வேலையும் நேரத்தில் முடிக்க முடியாது. மெஜஸ்டிக் சர்க்கிளிலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு டிராபிக்கில் நீத்திப் போக மூன்று மணி நேரம் ஆகும். முழி பிதுங்கி விடும் திட்டமிட்டு எதையும் ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிக்கும் போது திடீரென்று பவர் கட். இரயில்வே ரிசர்வேஷனிலிருந்து எலெக்ட்ரிசிட்டி வரை எதுவும் நிச்சியம் கிடையாது.”

“ 22 வயது வரைக்கும் நாம் அங்கேதான் வளர்ந்தோம் சுரேஷ்”

“நாம் வளர்ந்தோம். இவர்களால் வளர முடியுமா? என்று குழந்தைகள் நிதினையும் நித்தியாவையும் காட்டினான் சுரேஷ். பனிரெண்டு வருஷம் இங்கே படித்த பிறகு அவர்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போகமுடியுமா? போனாலும் அங்கு ஒட்டுமா? “

“பாட்டி தாத்தா பக்கத்திலிருந்து பார்த்து அரவணைத்துக் கொள்ள மாட்டார்களா?”

“பாட்டி பஜ்ஜி வேண்டுமானல் போட்டுத் தருவார். பர்கர் பண்ணத் தெரியுமா அவருக்கு?”

ஏதோ வெறியில் இந்தியாவை விட்டுக் கிளம்பி வந்த மாதிரி அமெரிக்காவை உதறிவிட்டுப் போவது அத்தனை சுலபமல்ல எனப் புரிந்த போது கனகாவிற்குக் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.

ஆனால் சுரேஷ் கலங்கியது அடுத்தடுத்து அமெரிக்க வங்கிகள் திவாலான போதுதான். கலங்கினான் என்று சொல்வதைவிட இடிந்து போனான் என்றுதான் சொல்ல வேண்டும். எவரிடமும் பேசாமல் எப்போதும் யோசனையிலேயே இருந்தான். சில நேரம் கண்ணை மூடிக் கொண்டு காற்றில் விரல்களால் கணக்குப் போட்டான். இரவில் இருட்டில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இணையத்தின் பக்கம் கூடப் போகவில்லை இரண்டொருமுறை காரை எடுத்துக் கொண்டு முப்பது மைல் தள்ளி இருக்கும் ராமர் கோவிலுக்குப் போய் வந்தான். அப்போது அவன் காரை ஓட்டுகிற வேகத்தைப் பார்த்தால் பயமாக இருந்தது.. கனகா சற்றுக் குழம்பி, நிறையத் தயங்கி, மாமனாரைக் கூப்பிட்டு அவராக போனில் கூப்பிடுவது போல கூப்பிடச் சொன்னாள். போன் மணி அடித்த போது அவன் எடுக்கவில்லை. அவள் எடுத்து போன் வந்திருப்பதாகப் போய்ச் சொன்ன போது “ செத்துப் போயிட்டேன்னு சொல்லு” என்று சீறினான்.

அதன் மறுநாளுக்கு மறுநாள் எல்லோருமே செத்துப் போனார்கள், அவனால் சுடப்பட்டு

*

“பேப்பர் படிப்பதை வாக் போய்ட்டு வந்து வைச்சுக்கலாமா? ஏற்கனவே உனக்கு கொழுப்பேறிக் கிடக்குனு ஊர்ல பேச்சு இருக்கு. கொஞ்சம் நடந்தாலாவது அது குறையுதானு பார்க்கலாம்” குரல் வந்த திசையைப் பார்த்தான் மாதவன். தினமும் அவனுடன் கடற்கரையோரம் நடைபழகும் நண்பர்கள் நின்றிருந்தார்கள்.

“கொழுப்பு கிழுப்பு ஏன் சொல்ற? அவன் உள்ளத்தாலும் உடலாலும் இனிமையானவன். அதனால் நடந்தால் நல்லது” என்றான் நம்பி., மறைமுகமாக அவனது டயாபடீசைச் சுட்டிக் காண்பித்து. எல்லாவிஷயத்திலும் பாசிடிவ்வான பக்கத்தைப் பார்க்கிறவன் என்று அவன் தன்னை அறிவித்துக் கொள்வது வழக்கம்.

“காலங்கார்த்தால அவரோட தலையை உருட்ட அவரோட ஹெல்த் ரிப்போர்ட்தான் அகப்பட்டதா உங்களுக்கு?” என்று கடிந்து கொண்டாள் அனுராதா

மாதவன் நண்பர்களோடு கடற்கரையை நோக்கி நகர்ந்தான். மார்கழி மாத பஜனை கோஷ்டி மாதிரி தெருவை அடைத்துக் கொண்டு நடந்தார்கள். மப்ளர் அணிந்திருக்கவில்லை. அரைடிராயரும் நடப்பதற்கேற்ற காலணியும் அணிந்திருந்தார்கள். நாற்பதைத் தாண்டியவர்கள் என்றாலும் டி ஷர்ட் அணிந்திருந்தார்கள். அதையும் மீறி பீர் ஊற்றி வளர்த்த அவர்கலது தொப்பை வயதை அறிவித்துக் கொண்டு முன்னே நின்றது.

அந்தக் காலனிவாசிகள் அந்த அரைடிராயர்களுக்கு ‘அறிவுஜீவி கிளப்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களில் பலர் அறிவு சார்ந்த தொழில்களில் – ‘நாலட்ஜ் இண்டஸ்ட்ரியில்’ – உழைக்கும் வெள்ளைக் காலர் வித்தகர்கள். மாதவன் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளன்.

நம்பி மென்பொருள் நிறுவனத்தில் குழுத்தலைவன். அனுராதா ஐ ஏ எஸ் அதிகாரி. கிறிஸ்டோபர் டெலிவிஷன் செய்தியாளன். சபாபதி வங்கி அதிகாரி.

“ இத்தனை இடிக்கறோம் சார் வாயைத் திறக்கிறாரா பாரு?” என்றார் கிறிஸ்டாபர். மாதவன் மனம் முழுக்க சுரேஷ் ஜெயராமனின் கதை நிறைந்து கிடந்தது.

“யாரும் பேப்பர் பார்க்கலையா?” என்றான் மெதுவாக.

“ஏன் என்ன விஷயம்? அரசாங்கம் இருக்கில்ல? இல்லை கவுந்திருச்சா?”

“அதற்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு. ஆனால் பாவம் அமெரிக்காவில்தான் ஒரு சின்னப் பையன், பையன் இல்லை நம்பளை மாதிரி ஒரு நடுவயசுக்காரன்…. . “

மாதவன் பேப்பரை விரித்துக் காட்டினான்.

“ என்னய்யா கொடுமை இது?” என்றான் நம்பி

“என்னவாக இருக்கும்?’ என்றாள் அனுராதா

“டிப்ரஷன்”

“அது புரிகிறது. ஆனால் ஏன்? இத்தனை படித்தும், அந்தப் படிப்பு தன்னம்பிக்கையைத் தரவில்லையே? மன உறுதியைத் தரவில்லையே”

“ அப்படிச் சொல்லிவிடமுடியாது. அமெரிக்காவில், ஏன் எந்த வெளி தேசத்திலும், முற்றாத இளம் வயதில் படிக்கப் போகிறவர்களுடைய மன உறுதியை அத்தனை எளிதாக சந்தேகப்பட்டுவிட முடியாது. அங்கே சின்னதும் பெரிதுமாக எத்தனையோ ஏமாற்றங்கள், அவமானங்கள். அதைக் கண்ணில் தண்ணீர் வராமல் ஜீரணித்துக் கொள்ள வேண்டியிருக்கும். வலிக்கும் அந்த நிமிடங்களில் தாங்கிப் பிடிக்க அருகில் குடும்பம் என்ற ‘சேப்டி நெட்’ கிடையாது. கிழக்கு மேற்கு தெரியாத ஊர். தாய்மொழியில்லாத பாஷையின் புதிய உச்சரிப்புக்களைப் பழகிக் கொள்ள வேண்டும். புதிய நண்பர்களை சேகரிக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகத் துவங்க வேண்டும். அந்த அனுபவங்கள் எந்த மனிதனையும் புடம்போடும். மன உறுதியைத் தரும்”.

“ பணம் போய்விட்டதே என்ற பதற்றமாக இருந்திருக்கும்.இது ஒரு ஆரம்பம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இது போல இன்னும் சில எதிர்பார்க்கலாம்.”

“ வெறும் பணம் போன ஏமாற்றம் மட்டும் இல்லை என நினைக்கிறேன். அவனுடைய அமெரிக்கக் கனவு முறிந்து விழுந்த துக்கமாகக் கூட இருக்கலாம்”

“ இருக்கலாம். இருக்கலாம். ஆனால் ஒரு கோணத்தில் பார்த்தால் இது ஈகோ பிரசினையாகக் கூட இருக்கலாம் எனத் தோன்றுகிறது. வால் ஸ்ட்ரீட் அனலிஸ்ட். ஆனால் அவனால் அவனது பணத்தையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்னும் போது அவனது ஈகோ விழுந்து நொறுங்கியிருக்கும். ஈகோ இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. ஈகோ இஸ் தி பவுண்டன் ஹெட் ஆப் ஹுயூமன் ரேஸ். அயன்ராண்ட் சொன்னது”

“ எனக்கு அந்த அயர்லாந்துப் பொம்பளையைப் பிடிக்காது. ஆனால் ஈகோ இஸ் தி டிரைவிங் ஃபோர்ஸ் ஆஃப் இந்தியன் மிடில் கிளாஸ் என்று நிச்சியமாகச் சொல்லமுடியும். ஈகோதான் நம்மை செலுத்திச் செல்கிறது”

“ உன்னை வைத்துச் சொல்கிறாயா?”

“ மிடில் கிளாசிற்கு ஈகோவே இருக்க முடியாது. அதைச் செலுத்தும் சக்தி சுயநலம்தான். நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன என்னை விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்பதுதான் அவர்களது தத்துவம். எந்தச் சூழ்நிலையிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அவர்களது லட்சியம்.தன்னைப் பாதிக்காத எந்த விஷயத்தைக் குறித்தும் அபிப்பிராயங்களைக் கூட அவர்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். செல்ஃப் சென்டிரிக் பீபுள்”

“நான் ஆட்சேபிக்கிறேன். உலகில் ஏற்பட்ட பல மாறுதல்களுக்கு மிடில்கிளாஸ்தான் காரணம்’

“இருக்கலாம். ஆனால் அந்த மாற்றங்களால் அதிகம் பலனடைந்ததும் அவர்களாகத்தானிருக்கும்”

“நான் சொன்னதைத்தான் நீயும் சொல்கிறாய். தன்னை மையமாகக் கொண்ட சிந்தனைதான் ஈகோவிற்கும் அடிப்படை’

“நான் தத்துவ விசாரனைக்குள் போக விரும்பவில்லை. சுரேஷ் ஜெயராமன் தன்னை மட்டும் மாய்த்துக் கொள்ளவில்லை. குடும்பத்தையும் சாய்த்திருக்கிறான். என்ன காரணம்?”

“ என்ன காரணம்?”

“அமெரிக்கப் பொருளாதார சுனாமி தன்னுடைய சேமிப்பையெல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது. கடன்கள் மிஞ்சி இருக்கின்றன. தான் போன பின் அந்தக் கடன் சுமை தன் மனைவி மீதோ குழந்தைகள் மீதோ விழுந்து அவர்கள் துன்பப்பட வேண்டாம் எனக் கூட அவன் நினைத்திருக்கலாம். நான் அவனை ஒரு வில்லனாக அல்ல, பாசம் மிகுந்த குடும்பத் தலைவனாகத்தான் பார்க்கிறேன்.”

“ அது உண்மையாக இருக்கும் என்றால் அந்த அன்பும் தன்னை மையமாகக் கொண்டதுதான்”

‘ ஆலை விடுங்கப்பா. ஆபீஸ் சாவி என்னிடம் இருக்கிறது. நேரத்திற்குப் போய் கல்லாவைத் திறக்கவில்லை என்றால் எனக்கு வேலை போய்விடும். என்னைச் சுட்டுக் கொள்ள என்னிடம் துப்பாக்கி கூட கிடையாது” என்றான் சபாபதி.

ஏனே தெரியவில்லை. எல்லோரும் சிரித்தார்கள்.

*

மாதவன் வீட்டிற்குத் திரும்பி பேப்பரை இன்னொரு முறை மேய்ந்தான். எட்டாம் பக்கத்தில் ஒரு ஓரமாய் ஆந்திரப் பிரதேசத்தில் இன்னொரு விவசாயி தற்கொலை எனச் செய்தி வந்திருந்தது. கடன் சுமை தாளாமல் இந்தியாவில் 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்லியது செய்தி.

இந்தத் தற்கொலைகள் பற்றி என்றைக்காவது அறிவுஜீவிகள் கிளப் பேசியிருக்கிறதா என்ற கேள்வி மாதவன் மனதில் ஓடி மறைந்தது. இல்லை. ஏன்? எட்டாம் பக்கத்தில் வந்த செய்தி என்பதால் கவனத்திற்கே வராமல் போய்விட்டதா? அந்த மரணங்கள் முகமற்று, 32 நிமிடத்திற்கு ஒருவர் எனப் புள்ளிவிவரமாகச் சுருங்கிப் போனதால் மனதில் தைக்கத் தவறியதா? ஏன் இந்தச் செய்தி முதல் பக்கத்தில் இடம் பிடிக்கவில்லை? ஏன், ஏன் என்று நாள் முழுதும் கேள்வி குடைந்து கொண்டிருந்தது.

இரவில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது, காலையில் கிறிஸ்டோபர் சொன்னது ஞாபகம் வந்தது:

“மிடில் கிளாசைச் செலுத்தும் சக்தி சுயநலம்தான்..தன்னைப் பாதிக்காத எந்த விஷயத்தைக் குறித்தும் அபிப்பிராயங்களைக் கூட அவர்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். செல்ஃப் சென்டிரிக் பீபுள்.”

உண்மைதானோ?

Print Friendly, PDF & Email

1 thought on “நடுவர்கள

  1. நல்ல கதை சார்., இன்னும் முப்பது வருடம் கழித்து இந்தியா எப்படி இருக்கும் என்று உங்கள் பார்வையை ஒரு கதையாக பதிவு செய்யவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *