கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 12,815 
 

அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52 வயதாகும் கேசவன் ஒரு தனியார் கம்பெனியில் நல்ல பதவியில் இருப்பவர்.

மனைவி பாக்யம் உள்ளே சமலறையில் அடுத்த வேளை உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். முன்நெற்றியில் முடி நரைத்து, வயதுக்கு அழகு சேர்க்கப் பார்க்க நன்றாகவே இருந்தாள்.

படித்துக்கொண்டே இருந்தவர் திடீரென்று “கலி முத்திடுச்சு பாக்யம், என்னவெல்லாம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க பாத்தியா?” என்றார்.

இதைக் கேட்ட பாக்யம் உள்ளே இருந்து வந்தபடியே “எதைப்பத்திச் சொல்றீங்க” என்றாள்.

“இந்தப் பத்திரிக்கையிலே போட்டிருக்கறதைப் படிச்சியோ?”

“எங்க நேரமே ஒழியலை. உங்களுக்காவது ஞாயிற்றுக்கிழமை லீவு, என் அடுப்படிக்கு என்னிக்குமே லீவே இல்லை” என்றாள்.

“உங்களுக்காக உஷா என்று ஒரு பகுதி வருதில்லை அதிலே ஒரு பொண்ணு ஒரு கேள்வி கேட்டிருக்கிறா. படிக்கிறேன் கேளு” என்று தன் தொண்டையைச் செருமிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்.

“நான் பணிபுரியும் இடத்தில் இரண்டு பேர் என்னைக் காதலிப்பதாகக் கூறுகிறார்கள். இருவரையுமே எனக்குப்பிடிக்கும். இருவருமே நல்லவர்கள். நல்லவேலையில் இருப்பவர்கள். இருவரில் ஒருவரையே நான் தேர்ந்தெடுக்கலாம் என்றிருக்கிறேன். எந்த அடிப்படையில் செல்க்ட் செய்வதென்று எனக்குக் குழப்பமாய் இருக்கிறது. நீங்கள் உதவி செய்யுங்களேன்? இப்படிக்கு கே. வி. சென்னை”.

இதைக்கேட்ட பாக்யம் மோவாயில் கையை வைத்து ஆவென்று வாயைப்பிளந்தாள்.

“பாத்தியா பாக்யம் கேள்வியை. காதலுக்குக் கண்ணில்லை அப்படின்னு கேள்விப்பட்டிருக் கேன் ஆனால் அறிவும் இல்லைனு இப்போ புரிஞ்சுபோச்சு. இது என்ன கத்திரிக்காய் வியாபாரமா பேரம் பேசி செலக்ட் பண்றதுக்கு.

காதல் ஒரு உணர்வு, அதை யாராலும் படம் பிடித்து காட்டமுடியாது, சொன்னாலும் யாருக்கும் புரியாது. அதைத் தானா உணரணும். இதைப் புரிஞ்சிக்காம இந்தப்பொண்ணு இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கு. அதுக்கு அந்த உஷா நல்லதா ஒரு பதிலும் எழுதியிருக்கா. யார் பெத்த பொண்ணோ இப்படி திக்குத் தெரியாம திண்டாடுது” என்று சொல்லிப் பெருமூச் செறிந்தார் கேசவன்.

பக்கத்து அறையிலிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள் அவர் மகள் வித்யா. ஒரு நிமிடம் பயந்து போனாள். ஏனெனில் அந்த கேள்வியை கேட்டதே கே.வி. என்னும் கே. வித்யா தான்.

வித்யாவுக்கு வயது 22. நல்ல அறிவும் ஆற்றலும் உள்ளவள். பட்டப்படிப்பை முடித்து ஒரு தனியார் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவள். ஒரே பெண். வீட்டில் மிகுந்த செல்லம். அவளுக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்து வளர்த்திருந்தார் கேசவன். அவளும் அதை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்ததில்லை.

தான் கேட்ட கேள்வி உஷாவின் பதிலோடு வந்திருப்பதை வித்யாவும் பார்த்தாள். அப்பாவின் வார்த்தைகள் சாட்டையடிபோல் அவள் மனதில் இறங்கின.

ஆனாலும் அப்பாவின் பதில் அவளுக்கு ஒரு தெளிவைக் கொடுத்தது. கூட வேலை பார்க்கும் இருவரும் அவளைக் காதலிப்பதாகக் கூறியது முதல் செய்வதறியாது திகைத்தவள் இவ்வாறு ஒரு கேள்வியை எழுதி அனுப்பியிருந்தாள்.

ஆனால் இருவருமே தன்னைக் காதலிப்பதால் ஒருவரைத் தான் காதலித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை என்பது இப்போது புரிந்தது. அவர்கள் இருவரிடமுமே அவளுக்கு அப்பா சொல்லும் ‘அந்த உணர்வு’ வரவில்லை. அப்படியிருக்கையில் எதற்காக ஒருவரை செலக்ட் செய்ய வேண்டும்? இருவரையுமே மறுத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவளாகத் தன் வேலையைத் தொடரலானாள்.

“அசட்டுப் பெண்ணே! கே.வி என்று எழுதி அனுப்பினதால் அது நீயாக இருக்குமோ என்ற சந்தேகம் துளி வந்தது. ஒரு மாத காலமாக உன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை வைத்தே அது நீதான் என்று முடிவும் செய்துவிட்டேன். ஆனால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் என்னிடம் கருத்துக் கேட்கும் நீ இதில் மாத்திரம் என்னிடம் வரவில்லையே என்று ஒரு நெருடல் இருக்கத்தான் செய்தது. அதனால்தான் உன்னிடம் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக அம்மாவிடம் பேசுவது போல் சொன்னேன். நல்ல முடிவை எடுப்பாய் என்று நம்புகிறேன்” என்று நினைத்தபடியே மேற்கொண்டு படிக்கத் தொடங்கினார் கேசவன்.

– ஆகஸ்டு 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)