யானைகளும், சிங்கங்களும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 18,765 
 

‘என்ன செய்வீங் களோ தெரியாது. அந்த பரத்தைப் போல, நம்ம நரேந்திரனும் இன்ஜினி யரிங் காலேஜ்ல சேர்த்தாகணும்… நரேனும் ஒரு இன்ஜினியராகணும்…’

ஆவேசமாக கண்களை உருட்டி, முகம் சிவக்க நடுக்கூடத்தில் நின்று காமாட்சி, அன்று போட்ட கூச்சல், கோரிக்கையை, இப்போது நினைத்தாலும் மனம் பதறியது, குகநாதனுக்கு. அவளால் அப்படியும் பேச முடியும், கணவன் எதிரில் சத்தம் போட முடியும், சட்டையை பிடித்து கேள்வி கேட்க முடியும் என்று, அதுநாள் வரை குகநாதன், கொஞ்சமும் எதிர்பார்த்தவரல்ல.
காரணம் இருந்தது.

பெண் பார்க்க போன போதும் சரி, திருமணத்தின் போதும் சரி… தனக்கு கணவனாக வரப் போகிறவனின் முகத்தை, காமாட்சி ஏறிட்டு பார்க்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் தான், புக்ககம் வந்தாள்.

ஓராண்டு குடும்பம் நடத்தி, குழந்தை பெற்ற பிறகு தான், கொஞ்சம் பார்த்து பேசத் துணிந்தாள். அதுவும் குடும்பத்தில் பாகப் பிரிவினை நடந்து, தனிக்குடித்தனம் வந்த பிறகு. கூட்டுக் குடும்பமாய் இருந்த போது, எல்லாம் பெரியவர்கள் பார்த்துக் கொண்டனர். சொன்ன வேலைகளை செய்து, போட்டதை சாப்பிட்டு, ஓய்வு கிடைத்தால், நாலு பேருடன் உட்கார்ந்து, ‘டிவி’ கூட பார்க்க மாட்டாள். ஏதாவது வாரப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு, ஓரமாக உட்கார்ந்து விடுவாள்.

அப்பா, அம்மா கூட வாய் திறக்கவில்லை.

அண்ணன் மணிகண்டன் தான், ‘இந்தாடா… உன்னை படிக்க வச்சேன், வேலையும் வாங்கி கொடுத்து, ஒரு கல்யாணத்தையும் பண்ணியாச்சு. இனி, நீ கொஞ்சம் தள்ளி இருந்துக்கோ… நீயாச்சு, உன் குடும்பமாச்சு…’ என்று சொல்லிவிட்டார்.

அவர் ஏன் அப்படி சொன்னாரென்று, குகநாதனுக்கு தெரிந்தேயிருந்தது.

பெற்றவர்கள், சொத்து எதுவும் சேர்க்கவில்லை. உழைத்து, இரண்டு பிள்ளைகளையும் வளர்த்தனர்; அவ்வளவு தான்.

மணிகண்டனுக்கு வேலை கிடைத்த பிறகு தான், குடும்பத்தில் கொஞ்சம் சுபிட்சம்.

தம்பியை டிகிரி படிக்க வைத்தது முதல், எல்லாம் பொறுப்பான அண்ணனாக முன்நின்று செய்தார். அண்ணன் போலவே, அண்ணியும் இருப்பார் என்று எதிர்பார்த்தது நிராசையாகிவிட்டது.

வசதியான இடத்தில் இருந்து வந்தவள். வாய் துடுக்கு வேறு; யாரையும் எடுத்தெறிந்து பேசும் குணம். மைத்துனன் என்று, அன்போ, மரியாதையோ கிடையாது.

காமாட்சியை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. இதையெல்லாம் பார்த்து கூட, அவர் அந்த முடிவெடுத்திருக்கலாம். எல்லாம் நல்லதற்கே என்று பிரிந்து வந்தாயிற்று.
அந்த சம்பவம், ஏதோ ஒரு வகையில் காமாட்சியை ஆழ பாதித்து விட்டது போலும்.

அண்ணனுக்கும் ஒரு பிள்ளை… பரத்! குகநாதனுக்கும் நரேந்திரன் மட்டும் தான். இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயது; வசிப்பதும் ஒரே தெருவில்.

பரத்தை சேர்த்த கான்வென்ட்டில் தான், நரேனையும் சேர்க்க வேண்டும் என்று காமாட்சி வற்புறுத்தினாள். அது பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் பெரிய பள்ளி; டொனேஷன் முதற்கொண்டு எல்லாமே காஸ்ட்லி.

‘இங்க்லீஷ் படிக்கணும், அவ்வளவு தானே… பக்கத்துல புதுசா ஒரு ஸ்கூல் திறந்திருக்காங்க. டொனேஷன் கிடையாது; பீசும் குறைவு. ஸ்கூல் பக்கத்தில் இருக்கிறதால, வேன் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நடந்தே போய் விட்டுட்டு, கூட்டிகிட்டு வரலாம். என் சம்பளத்துக்கு அதுதான் சரிப்படும்…’ என்று எடுத்துச் சொன்னான்.

காமாட்சி கண்ணீர் விட்டாள்.

‘நான் சாப்பிடறத குறைச்சுக்கறேன். எனக்கு நாளும் கிழமையிலும் கூட, துணிமணி எடுக்க வேண்டாம். அந்தப் பணத்துல, பிள்ளைக்கு நல்ல படிப்பு கொடுங்க. நாம தான் தாழ்ந்து போய்ட்டோம். நம்ம குழந்தையாவது உயர்ந்து இருக்கணும்…’ என்ற போது, தாயுள்ளம் புரிந்தது; அவள் வற்புறுத்தியதின் நோக்கம் புரிந்தது.

பரத் சேர்ந்த பள்ளி யிலேயே, நரேனையும் சேர்த்தான். பாகப்பிரிவினைக்குப் பிறகும் அண்ணன் குடும்பத்தார் வர போக இருந்தனர்.

நரேந்திரனை பெரிய கான்வென்ட்டில் சேர்த்ததில், அண்ணிக்கு உடன் பாடில்லை.

‘மயில் ஆடு தேன்னு வான் கோழியும் ஆடிப் பார்த்த கதை தான். கூந்தல் இருக்குறவ அள்ளி முடிஞ்சுக்குறாள்; இல்லாதவளுக்கு ஏன் அந்த ஆசை…’ என்று கேலியாக பேசினாள்.
அது எரியற விறகில், எண்ணெய் வார்த்தது போல் ஆகிவிட்டது.

‘அவங்க முகத்துல கரி பூசவாவது நம்ம நரேந்திரனை… அவங்க புள்ளைக்கு சமமா படிக்க வச்சிரணும்…’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

குகநாதனுக்கும், அப்படி தான் செய்வோம் என்று தோன்றியது.

ஆனால், படிப்பில் பரத் அளவுக்கு நரேந்தின் இல்லை; சுமாராகத் தான் படித்தான். சொல்லப் போனால், பாஸ் மார்க் மட்டுமே எடுத்தான்; ஓரிரு பாடங்களில் பெயில் ஆனான். ஐந்தாம் வகுப்பு வரை இந்த நிலை தான்…

அண்ணன் சொன்னார், ‘அவனை கார்பரேஷன் ஸ்கூலுக்கு மாத்திடு. அவனும் கொஞ்சம் நல்லா படிப்பான்; உனக்கும் செலவு மிச்சமாகும்… ‘ஈகோ’ பார்க்காம செய். உன் மனைவிக்கும் புரியவை…’ என்று.

குகநாதன், காமாட்சியிடம், ‘மெட்ரிகுலேஷன்ல படிச்சாதான்னு இல்லை… கார்பரேஷன் ஸ்கூல்ல படிக்கறவங்களும் சாதிக்கறாங்க. மெட்ரிகுலேஷனுக்கு இணையா, இந்தப் பள்ளிக் கூடங்கள்லயும் தரமாக சொல்லித் தர்றாங்க… எதனாலயோ… நரேந்திரனுக்கு அந்த இங்லீஷ் பள்ளிக்கூடம் பிடிக்கலை. அதனால தான், அவன் குறைந்த மார்க் எடுக்கறான். இந்த ஸ்கூல்ல சேர்த்தால், அவன் நல்லா படிப்பான் பாரேன்…’ என்று எடுத்துச் சொன்னான்.

நரேந்திரனும், ஆமோதித்தான். அரைமனதாக சம்மதித்தாள் காமாட்சி.

ஆனால், நரேந்திரன், கார்பரேஷன் பள்ளியிலும் சுமாராகத்தான் படித்தான்.

பிளஸ் டூ முடித்து பரத்தைப் போல், இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க விண்ணப்பித்த போது, நரேனுக்கு இடம் கிடைக்கவில்லை.

அப்போது தான், காமாட்சியிடம் அப்படி ஒரு ஆவேசம் வெளிப்பட்டது. தான் ஏமாந்துவிட்டது போலவும், ஏமாற்றப்பட்டது போலவும் உணர்ந்தாள்.

‘எல்லாமே திட்டமிட்ட சதி. உங்க அண்ணனும், அண்ணியும் சதி பண்ணிட்டாங்க. நீங்கள் ஒரு தலையாட்டி பொம்மை. அதுக்கு பலியாய்ட்டீங்க. மெட்ரிகுலேஷன்லயே தொடர்ந்து படிச்சிருந்தால், நல்லாவே படிச்சிருப்பான். அவனை வேணுமின்னே, கார்பரேஷன் ஸ்கூல்ல சேர்க்க வச்சாங்க. அவன் கூட படிச்ச பசங்களுக்கு கூட, இன்ஜினியரிங் சீட் கிடைக்கும் போது, நம் பிள்ளைக்கு எப்படி கிடைக்காம போகும்…’ என்று வாதிட்டாள்.

மெரிட்டில் சீட் கிடைக்காதவர்கள், லட்ச லட்சமாக பணம் கொட்டி, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.

லட்சங்களுக்கு எங்கே போவது?

சரிவர படிக்காத மகன் மேல் கோபம் வந்தாலும், வேறு ஒன்றையும் குகநாதன் கவனித்து வந்திருந்தான்.

நரேந்திரனுக்கு படிப்பு தான் வரவில்லையே தவிர, மற்ற விஷயங்களில் அவன் ஆர்வம் மின்னிக் கொண்டிருப்பதை உணர்ந்திருந்தான். படிப்புக்கு அப்பால், பல விஷயங்கள் கற்றுக் கொண்டிருந்தான் அவன்!

பரத்துக்கு சொந்தமாக ஒரு கடிதம் எழுதவாவது தெரியுமோ என்னமோ… வீட்டில் குழாய் உடைந்தால், நரேந்திரனே சரி செய்தான். விளக்கு எரியாவிட்டால், வேறு பல்ப் வாங்கி வந்து அவனே மாட்டி விட்டான். பேரம் பேசி, காய்கறி வாங்கினான். உள்ளூரில் வீட்டுமனைகளின் விலை நிலவரங்கள் உட்பட, பல விஷயங்கள் பேசுவான்…

மனைவியிடம் சொன்னான்…

‘காமாட்சி. பரத் படிப்புல கெட்டியானவன். நம்ம பிள்ளைக்கு படிப்பு பலவீனம்னாலும், நிர்வாகத்திறன் அதிகம். சிங்கம் வலுவானது தான். யானையின் வலுவும் சிங்கத்துக்கு இணையானது தான். நம்ம மகன் யானை. அதன் நடையும், அதன் பிளிறலும் ஒருநாள் காட்டை அதிர வைக்கும் பார். அவன் வேடிக்கை காட்டும் சர்க்கஸ் யானை இல்லை… பட்டத்து யானை. அதன் முதுகில் அம்பாரியில் உன்னையும், என்னையும் வைத்து ஆரவாரமாய் பவனி வரப்போறான் பார்…’ என்றான்.

‘நான் ஒண்ணும் சிறு குழந்தை இல்லை. அம்புலிமாமா கதை சொல்லி, என்னை ஏய்க்காதீங்க…’ என்று, விருட்டென்று திரும்பிப் போனாள்.

அதை நினைத்து, சிரித்தான் குகநாதன்.

”கார் ஓட்டும் போது, வேறு எதன் மேல் கவனம்… ஏன் இந்த சிரிப்பு…” பக்கத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த காமாட்சி கேட்டாள்.

”ஒண்ணுமில்ல… பழச நினைச்சேன். நரேந்திரனும் பெரிய ஆளா, நல்ல நிலமைக்கு வருவான்னு சொன்னப்போ, அதை நம்பாமல் கோபப்பட்டியே… அதை நினைச்சுகிட்டேன்…”

அன்றும் அந்த நம்பிக்கை இருந்ததால் தான், ‘பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுப்பா…’ என்று நரேன் கேட்டதும், ஏன், எதற்கு என்று கேட்காமல் கொடுத்தான்.

ஆனாலும், நரேந்திரன் காரணம் சொன்னான்…

‘ஒரு வீட்டுமனை விலைக்கு வருது. ஒரு லட்ச ரூபாய். நாங்கள் பத்து பேர் சேர்ந்து, தலைக்கு பத்தாயிரம் வீதம் போட்டு, அதை வாங்கறதுன்னும், ஒரு வருஷத்துக்குப் பிறகு அதை விற்று, வர்ற லாபத்தை ஷேர் பண்ணிக்கறதுன்னும் ப்ளான்…’ என்றான்.

ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில், யார் சிபாரிசும் இன்றி உதவியாளராய் சேர்ந்தான்.

‘என்னடா சம்பளம்?’

‘சம்பளத்துக்காக இல்லைப்பா. தொழில் கத்துக்கறதுக்காக போறேன்…’ என்றான். பிறகு, ‘பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனமொன்றில் சேர்ந்தான்.

நண்பர்களோடு திட்டங்கள் போடுவது, விவாதிப்பது என்று திரிந்தான்.

இருபது வயதில் ஆட்களை வைத்து, ஒரு, ‘சர்ச்’ கட்டி கொடுத்தான். அவனுக்கு நாற்பதாயிரம் வரை லாபம் வந்தது. கூட்டாக வாங்கிய மனையை விற்றதில், எல்லாருக்கும் நூறு சதவீத லாபம்.

எல்லாருக்கும் நரேந்திரன் மேல் நம்பிக்கை உண்டானது. அவன் சொன்னதைக் கேட்க, பத்து பேர் தயாராக இருந்தனர்.

நரேன் அதை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டான். குத்தகை அடிப்படையில் இடம் வளைத்து, செங்கல் சூளை போட்டான். நைனிடாலில் எளிமையான முறையில் வலிமையான, ‘ஹாலோ ப்ரிக்ஸ்’ உருவாக்குகின்றனர் என அறிந்து, நேரில் போய் வந்து, இங்கே அதை செய்யத் துவங்கினான்.

நல்ல டிமாண்ட். மளமளவென வளர்ந்துவிட்டான் நரேந்திரன். வீட்டு உபயோகத்துக்கு தனி கார் வைக்கிற அளவுக்கு வசதி வந்து விட்டது.

இன்ஜினியரிங் படித்து, நியூயார்க் போய் பரத் சம்பாதிக்கும் தொகைக்கு குறைவில்லாமல், இங்கே நரேந்திரனும் சம்பாதித்தான்.

”நம்ம மகன் சிங்கமாக இல்லையேன்னு அழுது புலம்பினே; அவன் யானை. சிங்கத்துக்கு குறைவில்லாத பலம் கொண்ட யானை… இப்பவாவது உன் மனம் திருப்தியடைஞ்சுதா?” என்று கேட்டான் குகநாதன்.

‘ஆம்…’ என்று சொல்லாமல், வேறென்ன சொல்வாள் காமாட்சி.

– மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *