மண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 10,584 
 
 

அன்று ஞாயிற்றுக்கிழமை.

நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான்.

விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி கேட்பதிலும் ஓதிக்கொடுப்பதிலும் அவனுக்கு ஒரு தனி சந்தோஷம். மற்ற நாட்களில் மதரஸாவிற்குச் சென்று விடுவார்கள்.

லொக்… லொக்… லொக்… லொக்… அந்த அறையிலிருந்து இருமல் சத்தம் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது.

மூச்சுத்திணறலுடன் தாய் ஜமீலா படும் அவஸ்தையைக்கண்டு நஜீரின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. எவ்வளவு வைத்தியம் செய்தும் இந்தப்பாழாய்ப்போன ‘இருமல்’ மட்டும் ஓய மாட்டேங்குதே; தொடர்ந்து படுக்கையில் கிடத்திவிட்டதே!

மருத்துவர் கூறியது அவன் காதில் ஒலித்தது. “நஜீர்,உங்கம்மா, உழைப்புக்கு ஏற்றார்போல் வேளா வேளைக்கு சாப்பிடாமல் இருந்ததால் வயிறு புண்ணாகி அல்சர் வந்துவிட்டது. மிகவும் பலகீனமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லே. எலும்பு தேய்மானமும் அதிகமாக இருக்கு. இனி உங்க தாயுடைய வாழ்க்கை உங்க கையில்தான் இருக்கு. சத்தான ஆகாரம் கொடுத்து ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்.”

“வாப்பா!, வாப்பா!”… தந்தையின் சிந்தனையை கலைத்தன இரு குழைந்தைகளும்.

சமையல் அறையில் பாத்திரம்பண்டம் உருட்டும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, “ரேஷ்மா, இங்கே வாடி,” அம்மாவின் கூப்பாடு அடங்குவதற்குள் “ஏம்மா”, என ஓடிப்போய் நின்றாள். தாயை நன்கு புரிந்து வைத்து இருந்தாள். கூப்பிட்ட குரலுக்கு போகலைன்னா அடுத்தது தர்ம அடிதான்னு அவளுக்கு நன்றாகத் தெரியும்.

“இந்தா இந்த சாயாவைக் கொண்டுபோய் அந்தக் கிழவியிடம் கொடு”, புரியாமல் நின்ற மகளிடம் “ஏண்டி இன்னும் நிக்கிறே? வயசு ஏழு முடியப்போகுது, இன்னும் எதெற்கெடுத்தாலும் முழிச்சிக்கிட்டே இரு. சொல்றதைப் புரிஞ்சிக்கிற புத்தியே இல்லே. இங்கே பாருடி, இருமி இருமி தூங்கவிடாமே உயிரை வாங்கிக்கிட்டே இருக்கே உன் அருமை பாட்டி அதுக்கிட்டே போய் கொடு”. ரேஷ்மாவுடன் தம்பி தாவூதும் பின் தொடர்ந்தான் “பாட்டி… பாட்டி…, இந்தாங்க சாயா, சூடா குடிங்க”. பேரப்பிள்ளைங்களைப் பார்த்ததும் அசதியிலும் ஒரு ஆனந்தம். தாவூத் கஷ்டப்பட்டு கட்டிலின் மீது ஏறி, “பாத்தி, வலிக்குதா என்று கேட்டு தைலத்தை எடுத்து தன் பிஞ்சு கரங்களால் ஜமீலாவின் தொண்டையைத் தடவி விட்டான். “அக்கா பாத்தியா? வாப்பாவும் இப்பிதான் செய்வாங்க. இல்லே பாத்தி?”. ஜமீலா பேரனின் பிஞ்சுக்கரங்களை தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். மழலைச் சொற்களால் பேரன் தன் மீது காட்டும் பரிவையும் பாசத்தையும் கண்டு பூரித்துப் போனாள்.

“யா அல்லாஹ்! என் பேரப்பிள்ளைகளுக்கு நிறைந்த ஆயுளைக்கொடு”, என்று துவா கேட்டாள்.

“பாட்டி நாங்க ஓதிட்டு வரோம்; அப்புறமா கதை சொல்லணும் என்ன!”…

“சரிடா கண்ணுங்களா!” சிட்டாய் பறந்தனர் இருவரும்.

அலுவலக கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்த நஜீர், “ரேஷ்மா, பாட்டி சாயா குடிச்சிட்டாங்களா?”

“பாட்டி கஷாயம் கேட்டாங்களாம்; அம்மா சாயா கொடுத்துட்டாங்களாம்”, சலிப்போடு சொன்னாள் ரேஷ்மா.

“அப்படியா! கதீஜா… கதீஜா… இங்கே வா”

“ஏன் ஏலம் விடுறீங்க, அடுப்படியில் வேலையாய் இருக்கேன் இல்லே”

“அடுப்படின்னா வேலைதான் இருக்கும். நீ என்ன கபடி ஆடிட்டு இருக்கேன்னா சொல்றேன்”

“இதுலே ஒண்ணும் குறச்சல் இல்லே”. எள்ளும் கொள்ளும் வெடித்தது முகத்தில்.

“கணவன் கூப்பிட்ட குரலுக்கு இதமா பேச கத்துக்க”

“முதல்லே எதுக்கு கூப்பிட்டீங்க… சொல்லுங்க”.

“அம்மா கஷாயம் கேட்டாங்களாமே, ஏன் போட்டுக் கொடுக்கலே?”

“ஹூக்கும்,…. அதுக்குள்ளே போட்டுக்கொடுத்துட்டாங்களா? கிழவிக்கு குசும்பு ஜாஸ்திதான்”.

“இதப்பாரு கதீஜா, அவங்க என்னைப்பெத்தவங்க; வயசானவங்க! மரியாதக்கொடுத்துப் பேசு, அவர்களுக்கு பணிவிடை செய்யறதுதான் நம்முடைய முதல் கடமை

உன்னை அவங்க மருமகளாகவாப் பார்த்தாங்க; மகளாய்த்தானே பார்த்தாங்க! நீ கேட்டதை வாங்கிக் கொடுத்து, அலங்காரம் செய்து அழகுப்பார்த்தாங்க. உன்னை உட்கார வச்சி விதவிதமாக சமைச்சுப் போட்டாங்க. தாயில்லாத குறையே தெரியாம பார்த்துட்டாங்க. இப்போ அவங்களுக்கு முடியலே; நாம காட்டும் அன்பான பேச்சும், அரவணைப்பும் தான் அவர்களை வாழ வைக்கும். இதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கிறே?”

“சரி .. சரி புராணம் பாட ஆரம்பிச்சிடாதீங்க. கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு. நீங்க சொல்றதை மட்டும் நான் கேட்கணும், ஆனா நான் சொல்றதைமட்டும் கேட்காதீங்க”, சொல்லி விட்டு விருட்டெனெ நகர்ந்தாள். “யா ரஹ்மானே! இவளுக்கு எப்போதான் புத்திவரப்போகுதோ”.

“என்ன வாப்பா, எங்களை ஓதச்சொல்லிட்டு நீங்களும் அம்மாவும் என்னென்னவோ பேசிக்கிறீங்க, ஒண்ணுமே புரியலே!”

“இல்லம்மா கண்ணுங்களா, நீங்க ஓதுங்க”. பிள்ளைகளின் முன்னால் பெற்றோர்கள் சண்டைப் போட்டுக்கொள்வது எவ்வளவு முட்டாள்தனம் என தன்னையே நொந்துக்கொண்டான் நஜீர்.

***************

“கதீஜா… கதீஜா…” அழைத்துக்கொண்டே வந்தாள் தோழி நஸீரா. முற்றத்தில் ரேஷ்மாவும் தாவூதும் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

“அம்மா குளிச்சிட்டு இருக்காங்க ஆன்ட்டி, உட்காருங்க, வந்திடுவாங்க”.

ஈர முடியை முடிந்துக்கொண்டே வந்த கதீஜா, “வா நஸீரா, என்ன இன்னிக்கு அலங்காரம் எல்லாம் பலமா இருக்கு! ஏதாவது விசேஷமா?

“அவரு என்னை ரெடியா இரு, சீக்கிரம் வந்துடறேன்; ஷாப்பிங் போயிட்டு அப்படியே ஹோட்டலுக்கும் போயிட்டு வரலாம் என்றார், அதான்”.

“அது சரி நீ என்ன முடிவு எடுத்திருக்கே? உன் புருஷன் என்ன சொல்றாரு?”

“நான் எவ்வளவோ சொல்லியும் பார்த்துட்டேன்; அழுதும் பார்த்துட்டேன்; ஒண்ணும் நடக்கலே. அம்மா மேலே உயிரையே வச்சிருக்காரு, வாய் திறந்தாலே புலி போலப் பாய்கிறார். என்ன செய்றது?”

“எம்புருஷனும் முதல்லே அப்படித்தான் இருந்தாரு. ‘அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும்’ பிடிவாதமாக இருந்து சாதிச்சிட்டேன் இல்லே!. இப்பப்பாரு வாழ்க்கை வானம்பாடி பறவை போல ஆனந்தமாக ஓடிட்டு இருக்கு. இந்த வயசிலே அனுபவிக்காம பின்னே எப்போ அனுபவிக்கிறது!”

நஸீரா சொல்லச்சொல்ல கதீஜாவுக்கும் ‘ஆசை’ இறக்கைக்கட்டி பறந்தது.

“சரி கதீஜா நான் வரேன், அவர் வந்துடுவாரு”, தான் வந்த வேலை முடிந்தது போல நகர்ந்தாள் நஸீரா. கதீஜாவிடம் இருந்து பெருமூச்சு ஒன்றுதான் பதிலாக வந்தது.

********************

இரவு சாப்பாடு முடிந்ததும் தாய்க்குக் குடிக்க பால் கொடுத்து, வேண்டிய பணிவிடை செய்துவிட்டு வந்தான் நஜீர்.

திடீரெனெ ஞாபகம் வந்தவனாய், “கதீஜா, மீரான்பாய் வீட்டுக் கல்யாணம் எப்போது?” எனக்கேட்டான்.

“நாளைக்கு இராத்திரி கல்யாண மண்டபம் போயிடுவாங்க, அடுத்த நாள் காலையில் நிக்காஹ்”.

“ஓஹோ, அப்போ கண்டிப்பா போகணும் நீ தயாரா இரு, நான் சீக்கிரமாக வந்துடுறேன்”.

“ஆமா, நான் பிக்கல் பிடுங்கல் இல்லாத ஆளு பாருங்க, கூப்பிட்டதும் வாரிச்சுரிட்டிகிட்டு வரத்துக்கு… உங்கம்மாவை விட்டுட்டு நான் எங்கு வர. இதுக்குதான் நான் சொல்றதைக் கேட்டால் எந்த கஷ்டமும் இல்லே. உங்களுக்குதான் ஏற மாட்டேங்குதே… என்ன செய்ய?”

“அம்மா தாயே! நீ வரலைன்னாலும் பரவாயில்லே; பழைய பல்லவிகளைப் பாட ஆரம்பிச்சிடாதே. நீ அம்மாவைப் பார்த்துக்கோ; நான் போயிட்டு வந்துடுறேன்”.

படுக்கையை விரித்து உறங்கத்தொடங்கினான்.

“நம்ம வாயாலேயே வெளியே போறதைக் கெடுத்துக் கொண்டோமே…” என முணுமுணுத்துக் கொண்டாள் கதீஜா.

“நஜீர்… நஜீர்…” சன்னமாக தாய் கூப்பிடும் குரல் கேட்டு, இதோ வந்துட்டேம்மா, என ஓடோடிச் சென்றான். பிள்ளைகளும் பின் தொடர்ந்தனர்.

“என்னம்மா, என்ன செய்யுது?” பரிவோடு கேட்டான் நஜீர். தாயின் கைகால்களை நீவி விட்டான்; நெட்டி எடுத்தான். வாஞ்சையோடு தாயின் தலையை வருடினான், தாயின் நிலைக்கண்டு கண்கலங்கினான், தாய் கவனித்து விடுவார்களோ என கண்ணீரை உள்வாங்கிக் கொண்டான்.

“என்னவோ சொல்ல வந்தாயே, தயங்காமல் சொல்லும்மா!”

“கொஞ்ச நாளாவே நீயும் கதீஜாவும் பேசிக்கொள்வதும் ஒருவருக்கொருவர் மனச்சங்கடப்படுவதும் எனக்கும் தெரியும். நீங்க இருவரும் சந்தோஷமாக இருந்தால்தானே என் வயிறு குளிரும். அவளும் சின்ன பொண்ணுதானே! அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குமில்லே! அவளுக்கு என்னைப் பராமரிக்கிறது கஷ்டமாக இருக்குதுன்னு நான் நினைக்கிறேன். மருமக இஷ்டப்படி கொஞ்ச நாளைக்கு என்னைக்கொண்டு போய் விட்டுடுப்பா! மனச்சங்கடப் படாதே.”

“என்னம்மா! சொல்றீங்க, அதுதான் புரியாம பேசிக்கிட்டு இருக்குதுன்னா நீங்களுமா! வாப்பா இல்லாமே என்னை வளர்க்க எவ்வளவு சங்கடங்களை அனுபவிச்சீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களை முதியோர் இல்லத்திலே விடும் அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரனும் இல்லே; நீங்க அனாதையும் இல்லே. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்குதுன்னு ரசூல் (ஸல்) சொல்லி இருக்காங்க, என்னை அல்லாவுக்கு முன்னே பாவியாக ஆக்கிடாதீங்க!, என் சொர்க்கத்துக்கான பாதையே இந்த மண்ணில் நீங்க தாம்மா” நஜீரின் குரல் தழுதழுத்தது…

இடையே குறுகிட்டு ரேஷ்மாவும் தாவூதும் “வாப்பா, பாத்தி எங்கே போறாங்க? பாத்தி பாவம்பா, பாத்தி எங்களுக்கு வேணும்பா, பாத்தி எங்கேயும் போக சொல்லாதீங்க… அம்மா கெட்ட அம்மா, எப்பவும் பாத்தியைத் திட்டறாங்க.” தாவூத் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதான். ரேஷ்மாவின் முகம் சுருங்கி வாடி இருந்தது. உதடு துடித்தது.

“அம்மா, பார்த்தீங்களா… இந்தப் பிஞ்சு உள்ளங்களின் தவிப்பை! இவர்களை விட்டு உங்களால் இருக்க முடியுமா? அல்லாவின் துவா பரகத்தால் கதீஜாவும் உங்களைப் புரிஞ்சுக்குவா. நம்மை ‘மவுத்’ ஒன்று தான் பிரிக்கணும். அதுவரை நான் உங்களைப் பிரிய மாட்டேன். நிம்மதியா கவலை இல்லாமே படுத்து தூங்குங்க. இஷா தொழுதுட்டு வந்து விடுகிறேன்” எனக் கூறிவிட்டு பள்ளியை நோக்கிச் சென்றான் நஜீர்.

****************

தந்தையின் திடீர் வருகையைக்கண்டு வியப்படைந்தாள் கதீஜா.
“அஸ்ஸலாமு அலைக்கும்”, வாங்க வாப்பா”.

“வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, நல்லா இருக்கீயாம்மா?”

“அல்ஹம்துலில்லாஹ்! நீங்க எப்படி இருக்கீங்க வாப்பா? தம்பி, மருமக எல்லாம் சொளக்கியமா?”
“அல்ஹம்துலில்லாஹ்!”

தாத்தாவைப் பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் ஓடி வந்தனர். இருவரையும் வாரி அணைத்து முத்தமிட்டு விளையாடச்சொல்லி அனுப்பி வைத்தார் உமர் ஷரீப்.

“கதீஜா, இதுநாள் வரை உன் மேலே ஒரு குறையையும் சொல்லாத மாப்பிள்ளை நேற்று இஷா தொழுகை முடிந்ததும் மனம் வருத்தப்பட்டு பேசிய அவருடைய பேச்சிலிருந்து அவர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என புரிந்துக்கொண்டேன். அவருடைய இந்த நிலைக்குக் காரணம் நீதான். தாயில்லாப் பிள்ளையாகிய உனக்கு ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் என்று ஐவேளை தொழுகையிலும் கண்ணீர் மல்க துவா கேட்டு வந்தேன். என் வேண்டுதலை அல்லாஹ் நிறைவேற்றி விட்டான்.

பெற்றோரைப் பராமரித்து, உடன் பிறந்தவர்களை அரவணைத்து, உற்றார் உறவினர்களை ஆதரித்து, நண்பர்களை நாடி, நல்லவர்களைப் போற்றி தீன்வழி நடந்து, நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்பவனே உண்மையான முஸ்லிம். நம்முடைய மார்க்கமும் அதைத்தான் கூறுகிறது. இத்தகைய எல்லா குணங்களுமுள்ள கணவனை அடைய நீ நல்ல அமல் செய்திருக்க வேண்டும்.”

கணவனுடைய கடமைகளைத் தன் கடமையாக ஏற்று வாழ்க்கை நடத்துபவளே உண்மையான மனைவி. அவருடைய தாய் உனக்கும் தாய் தானே! அவர்களை வெறுத்து பேசலாமா? கணவன் மனம் புண்பட நடந்துக்கொள்ளலாமா? உன் தம்பி மனைவி என்னை ஒதுக்கினால் நீ தாங்குவாயா? தாய் பிள்ளைகள் என்பது இருவருக்கும் பொதுதானே!”

தந்தையுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தில் சாட்டைகளாக விழுந்தன. பதில் அளிக்க முயலும்போது புரைஏறி நீண்ட இருமலாக வெளிவந்தது.

சத்தம் கேட்டு தாவூத் வேகமாக அம்மாவிடம் வந்தான். கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டான்; ஆள்காட்டி விரலை உயர்த்தி, “பாத்தியா! நீயும் பாத்தி மாதிரியே லொக்… லொக்.. செய்யறே. பாத்தியைப் போகச்சொன்னே இல்லே, நீ முதல்லே அங்கே போ. தாத்தா, அம்மாவைப் போய் விட்டுட்டு வா…”. ஏதோ அலுவலக முதலாளி போல சொல்லிவிட்டு துள்ளிக்குதித்து ஓடிவிட்டான்.

அந்த ஒரு வினாடி, மகனுடைய வார்த்தையில் இருந்த உறுதியையும் ஆழ்ந்த பார்வையையும் கண்டு நிலை குலைந்துப் போனாள் கதீஜா. அடுத்து வந்த இருமலும், ‘சோடா பாட்டிலில் சிக்கிய குண்டு போல’ தொண்டைக்குழியிலேயே நின்று விட்டது.

பேரனின் சொற்களைக்கேட்ட உமர் ஷரீப் சிலிர்த்துப் போனார். “யாரப்பில் ஆலமீன், உன்னுடைய பெருமைக்கு எல்லையே இல்லை”.

“பார்த்தியாம்மா, இறைவன் எவ்வளவு சீக்கிரம் உன் மகன் மூலமாக உனக்கு பாடம் புகட்டிவிட்டான். ஒன்றுமே அறியாத அந்தப் பிஞ்சு உள்ளத்தில் உன்னுடைய நடவடிக்கை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது பார்த்தியா?”

நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும், ‘பிள்ளைகளுக்கு நாம் வாழும் வாழ்க்கை முறையும் ஒரு படிப்பினைதானம்மா!

உன்னைச்சொல்லி தப்பில்லை. என் மேலும் தப்பு இருக்குதுன்னு நினைக்கிறேன். நீ தாயின் பராமரிப்பில் வளர்ந்து இருந்தால், நல்லது கெட்டது சொல்லி, யார் யாரிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என அறியுரை வழங்கி இருப்பாள். நம் இருவருக்குமே அந்த கொடுப்பினை இல்லே”.

தந்தைக் கலங்குவதைக்கண்டு நெகிழ்ந்துப் போனாள் கதீஜா. “வாப்பா, வருத்தப்படாதீங்க. நான் தான் மற்றர்வகளைப் போல ஆடம்பர வாழ்க்கையிலும் துனியாவின் மோகத்திலும் நம்ம மார்க்க நெறிமுறைகளை மறந்து மனதை அலைபாய விட்டு, மறுமை வாழ்க்கையை மறந்து விட்டேன். அல்லாஹ்வை மறந்து பெரும் பாவத்திற்கு ஆளாகி இருப்பேன். என் மகன் என் கண்களைத் திறந்து விட்டான். மன்னிச்சிடுங்க வாப்பா.”

“ஆணோ, பெண்ணோ, ஆணோ, பெண்ணோ, நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச்செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.” (அல்குர் ஆன் 016:097) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறி உள்ளான்.
“மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டால் இறைவன் மன்னிப்பானம்மா! நீ மறுமை வாழ்க்கைக்கு இனி நல்ல அமல் செய்யம்மா. கணவனிடம் அன்பாக நடந்துக்கொள். உன் மாமியாருக்குச் செய்யும் பணிவிடை உன் தாய்க்குச் செய்வதாக நினைத்துக்கொள். இல்லறத்தை நல்லறமாக நினைத்து நடத்தும்மா.

கனத்த இதயத்தோடு இங்கே வந்தேன்; இப்போது நிறைந்த மனதோடு செல்கிறேன். ஆண்டவன் துணை இருப்பான். அசருக்கு நேரம் ஆயிடுச்சி, இன்னொரு நாள் வந்து சம்பந்தியைப் பார்க்கிறேன்” குளிர்ந்த மோர் சாப்பிட்டு, குளிர்ச்சியாகக் கிளம்பினார் உமர் ஷரீப்.

*******************

மக்ரிப் தொழுகை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த நஜீரின் காதுகளில் மனைவி கதீஜா இனிய குரலில் குரான் ஓதும் குரல் கேட்டது. ஊதுபத்தி மணம் வீடு முழுவதும் நிறைந்து இருந்தது. இரு கைகளையும் ஏந்தி, “யா அல்லாஹ், நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அளித்து விட்டாய்”. நன்றி கூறினான் நஜீர்.

தாயின் அறையை நோக்கிச் சென்றான். ஜமீலாவின் முகத்தில் என்றுமில்லாத பூரிப்பு. “கதீஜா என்னைத் தலைக்குக் குளிக்க வச்சி சாம்பிராணி புகை காட்டி சீவி முடித்து விட்டாளப்பா. கஷாயம் வைத்துக் கொடுத்தாள். நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன் நஜீர், எப்படி இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டதுன்னு மட்டும் புரியவே இல்ல, கதீஜாவுக்கு அல்லாஹ் எல்லா பாக்கியங்களையும் வழங்கட்டும்”, மனம் குளிர்ந்துப் போய் கூறினாள் ஜமீலா.

நஜீர் முகத்தில் புன்னகை, அவனுக்குத் தெரியும் யார் காரணம் என்று!

கணவன் வந்த சுவடு அறிந்து தேநீர் கொண்டு வந்தாள் கதீஜா. கையில் வாங்கிய நஜீர் மனைவியைப் பாசமுடன் அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பிலிருந்த கதீஜா, “இந்த மன நிறைவை எங்களுக்கு எப்பொழுதும் வழங்குவாயாக, யா அல்லாஹ்!” என்று இறைஞ்சினாள்.

“நீ உன் தாய்க்குச் சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” என்ற அண்ணல் நபி (ஸல்) சொல் திரும்ப திரும்ப நஜீரின் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

வெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *