பிரிவும் பரிவும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,084 
 

கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள்.
“”வா அக்கா… வர்றேன்னு போன் கூட பண்ணலை… திடீர்ன்னு வந்து நிக்கறே!”
“”குலதெய்வம் கோவிலுக்கு போகணும்ன்னு நினைச்சிட்டிருந்தேன். அதான், உன்னை பார்த்துட்டு, இரண்டு நாள் உன்னோடு இருந்துட்டு, அப்படியே கிராமத்துக்கு போகலாம்ன்னு புறப்பட்டு வந்தேன்.”
கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த, லட்சுமியின் மகள்கள் இருவரும், பெரியம்மாவுடன், சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினர். காபியுடன் வந்த லட்சுமி, அக்காவின் அருகில் உட்கார்ந்தாள்.
“”என்ன லட்சுமி எப்படியிருக்கே… குடும்பம் எப்படி போயிட்டிருக்கு… பெரிய மகள், கட்டிக் கொடுத்தவ எப்படி இருக்கா… முகுந்தன் மஸ்கட்டிலிருந்து அடிக்கடி பேசறானா?’ என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள்.
“”உன் எல்லா கேள்விக்கும் பதில்… நல்லா இருக்கோம். குடும்பம் சந்தோஷமா, நிம்மதியா போயிட்டிருக்கு. மூணு பெண்களை பெத்து வச்சிருக்கேன். எப்படி கரையேத்தப் போறோம்ன்னு கவலைப்பட்டேன். முகுந்தன் அந்தக் கவலையை தீர்த்து வச்சுட்டான். பெரியவளுக்கு கல்யாணம் முடிச்சாச்சு. இந்த இரண்டு பேருக்கும் படிப்பு முடிஞ்சதும், நல்ல வரனாகப் பார்த்து, கல்யாணம் பண்ணிட்டா, என் பொறுப்பு முடிஞ்சிடும்.”
பிரிவும் பரிவும்!“”உன் மூத்த பிள்ளை முகுந்தன், தங்கச்சிங்க கல்யாண பொறுப்பை ஏத்துக்கிட்டு, வேலை பார்த்து சம்பாதிச்சு கொடுக்கிறான். இப்படியொரு பிள்ளை பிறக்க, நீ கொடுத்து வச்சிருக்கே. ஆமாம், எங்கே உன் மருமகளை காணோம். அம்மா வீட்டுக்கு போயிருக்காளா?”
“”இல்லக்கா. இங்கே தான் இருக்கா… மாடி ரூமில் குளிக்கிறா போலிருக்கு. இன்னும் அரை மணியில் கீழே வந்துடுவா.”
குளித்து முடித்த ”மதி, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள்.
“”சுமதி, பெரிய அத்தை ஊரிலிருந்து வந்திருக்கா பாரு,” அவளைப் பார்த்து புன்னகைத்து வரவேற்றாள்.
“”சரி சுமதி, நீ போய் சாப்பிடு, உனக்கு பசி தாங்காது. டேபிளில் ஹாட்-பேக்கில், இட்லி சூடா இருக்கு. நானும், அக்காவும் அப்புறம் சாப்பிடறோம்.”
சுமதி எழுந்து உள்ளே செல்ல, அவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் லட்சுமியின் அக்கா.
சாயந்திரம், காலேஜ் விட்டு வந்த நாத்தனார்களுடன் அரட்டையடித்தபடி, சுமதி ஹாலில் உட்கார்ந்திருக்க, லட்சுமி, சமையலறையில் இரவு உணவு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.
“”லட்சுமி, என்ன, நீ மட்டும் சமையலறையில் ஒண்டியா வேலை பார்க்கிறே… உன் மருமகளை துணைக்கு கூட்டிக்க கூடாதா?”
“”எதுக்குக்கா, பெரிசா ஒண்ணும் வேலை இல்லை. டிபன் தானே. இதோ, சட்னி அரைச்சா வேலை முடிஞ்சிடும். நீயும் போய் ஹாலில் உட்காரு. இப்போ வந்திடறேன்.”
“”இருக்கட்டும் லட்சுமி. அந்த வெங்காயத்தை எடு, நறுக்கித் தர்றேன்.”
அங்கு வந்த சுமதி, “”அத்தை, ராத்திரிக்கு தோசை தானே. கார சட்னி கொஞ்சம் செஞ்சுடுங்க, தோசைக்கு பொருத்தமா இருக்கும்,” என்றாள்.
“”சரி, உனக்கு பிடிச்ச கார சட்னியும் ரெடி பண்ணிடறேன். மணி ஏழாச்சு. நீ பார்க்கிற சீரியல் போட்டிருப்பான்.”
“”நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க… இதோ போறேன்.”
ஹாலை நோக்கி வேகமாகச் சென்றாள். எந்தவித பொறுப்பும் இல்லாமல், வீட்டில் சந்தோஷமாக வளையவரும் மருமகளையும், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் மாமியாரையும் பார்க்க, பார்க்க லட்சுமியின் அக்காவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அன்று மாலை லட்சுமியின் மகள்களும், சுமதியும் சினிமாவுக்கு சென்றிருக்க, தங்கையுடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
“”லட்சுமி, நீ குடும்பம் நடத்தற விதமே சரியில்லைன்னு தோணுது. உன் மகள்கள் படிக்கிற வயது; கல்லூரிக்கு போறாங்க. குடும்பப் பொறுப்பு இல்லை. படிக்க, “டிவி’ பார்க்கன்னு சந்தோஷமா இருக்காங்க. ஆனா, உன் மருமக சுமதி, கல்யாணமானவள், உனக்கு உதவியாக இருக்க வேண்டியவள். ஆனா, அவளும் உன் மகள்களை போல, எந்த வேலையும் செய்யாமல் வளைய வர்றா… நீயும், அவளை எந்த வேலையும் சொல்லாம, கையில் வச்சு தாங்கறே!
“”இப்படி இருந்தா, கடைசி வரைக்கும் நீ ஒரு ஏமாளியா, இந்த குடும்பத்துக்கு உழைச்சுட்டு இருக்கணும். மருமகளுக்கு பொறுப்பை சொல்லிக் கொடு. வேலைகளை செய்யச் சொல்லி பழக்கு. நாளைக்கு முகுந்தன் வந்தா, குடும்பம் நடத்த வேண்டாமா… நீ அளவுக்கு மீறி மருமகளுக்கு இடம் கொடுக்கறேன்னு எனக்கு தோணுது.”
“”இல்லக்கா… நீ மேலோட்டமாக பார்க்கிறதாலே உனக்கு இப்படி தோணுது. சுமதி ரொம்ப நல்ல பொண்ணு. நான்தான் அவளை வேலை செய்ய விடாம வச்சிருக்கேன். அவ வயசையொத்த என் மகள்களோடு, அவ சந்தோஷமாக இருக்கட்டுங்கறதுதான் என் விருப்பம். நான், அவளுக்கு ஒரு மாமியாராக இல்லாமல், ஒரு தாயாக இருக்கணும்ன்னு நினைக்கறேன். அவளும் என்னை அம்மா ஸ்தானத்தில்தான் வச்சுருக்கா.”
“”மருமக மேலே அன்பும், பாசமும் இருக்க வேண்டியதுதான். ஆனா, நீ அவளுக்கு, அளவுக்கு மீறி இடம் கொடுத்திருக்கே… ஏதோ, என் மனசில் பட்டதை சொன்னேன். எடுத்துக்கிறதும், விட்டுடறதும் உன் விருப்பம்.”
“”அக்கா, நீ இந்த விஷயத்தை சுமதியின் நிலையில் இருந்து பார்த்தா, நான் அவளை நடத்தற விதம், உனக்கு தப்பா தோணாது. நீ ஒண்ணை புரிஞ்சுக்கணும்… கல்யாணமான சுமதி, தன் கணவனை பிரிஞ்சு வாழ்ந்திட்டிருக்கா. நல்லது நடப்பதற்காக, தன் சந்தோஷங்களை தியாகம் செய்து, தன் மனசிலிருக்கிற அந்த பிரிவை வெளிக்காட்டாமல் வாழ்ந்திட்டிருக்கிற அந்த பெண்ணை, நாம் எந்த விதத்திலும் காயப்படுத்தக் கூடாது. கல்யாணமான புது ஜோடிகள், சந்தோஷமாக வெளியே போவதை, வருவதைப் பார்க்கும் அந்த பெண்ணின் மன”, அந்த சுகங்களுக்காக ஏங்கும். இதெல்லாம், அவ குடும்பத்துக்காக செய்யற தியாகம். அவளோட தியாக உணர்வை புரிஞ்சுக்கிட்டு, அவ மனசுக்கு இதமாக நடப்பது தான் என் கடமைன்னு நினைச்சு வாழ்ந்திட்டிருக்கேன். இப்ப சொல்லுக்கா, நான் என் மருமகளை கையில் வச்சு தாங்கறது தப்புன்னு சொல்றியா?”
கண்கலங்க பேசும் தங்கையைப் பார்த்தவள், “”நீ சொல்றதன் அர்த்தம் எனக்குப் புரியுது லட்சுமி. சுமதியை, நீ இப்படியே கடைசி வரை மகளாக நினைத்து, அன்பாக நடத்தி, சந்தோஷமாக வச்சுக்க.”
தங்கையை பார்த்து உண்மையான புரிதலுடன் சொன்னாள் லட்சுமியின் அக்கா.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *