பத்மஸ்ரீ பச்சையம்மா…!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,038 
 
 

சகலவித அரசு மரியாதையுடன் பத்மஸ்ரீ பச்சையம்மாவின் உடல் அவளுடைய சொந்த ஊரான போத்தனூரில் ஊர் சனம் புடைசூழ அடக்கம் செய்யப்பட்டது..

“தாயி… இந்த ஊருக்கு பெரும தேடிக்கொடுத்த எஞ்சாமி…. ஒன்ற பிள்ள குட்டிங்க நோய் நொடியில்லாம நல்லா வாழோணம்…”

ஊரே திரண்டு வழியனுப்பியது….

யாரிந்த பச்சையம்மா…….??

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி பாலக்காடு ரூட்டில் அமைந்துள்ளது போத்தனூர் ( Podanur ) ..

ஏற்கனவே பல பெருமைகளைப் பெற்ற போத்தனூருக்கு பச்சையம்மாவால் கூடுதல் பெருமை….

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அரசு போத்தனூர் ரயில் நிலையத்தைதான் பிரதான ரயில் நிலையமாய் அமைத்திருந்தார்கள்..

இப்போது தீரன் சின்னமலை நினைவு ரயில்வே நிலையமாய் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறது…

கதிர்வேலு கவுண்டருக்கும் காளியம்மாளுக்கும் , மூன்றாவது மகளாய் பிறந்தவள் பச்சையம்மா. பிறக்கும்போதே சிரித்துக் கொண்டே பிறந்த ஒரே குழந்தை அவளாகத்தான் இருக்கும்…

மருத்துவ மிராக்கிள்….!!!!!

பொம்மை குட்டி மாதிரி இருந்தாள். அவள் பிறந்த நேரம் கவுண்டரின் விவசாயம் நல்ல விளைச்சல்… அக்கம் பக்கத்திலுள்ள எல்லா சந்தையிலும் அவரது காய்கறிகள் , அரிசி ‌ , கரும்புதான்….

பிறந்தவுடனே மாமன் மாரிமுத்துவுக்கு இவள்தான் என்று எழுதிவைத்து விட்டார்கள்…

அவனை ‘ மாமா…மாமா..’ என்று சதா சீண்டிக் கொண்டேயிருப்பாள்..

மாரிக்கு பச்சையென்றால் உயிர்… சின்ன உருவமாயிருப்பதால் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஊர்சுற்றுவான்..

வளர வளர பச்சையின் வாயும் வளர்ந்தது…சரியான வாயாடி…மாரி அவளைப் ‘ பச்ச மிளகாய் ‘ என்று கேலி பண்ணுவான்.வயைத்திறந்தாலே பழமொழிதான்… விடுகதை தான்…

“அக்கா..தங்கச்சி… அடுத்தடுத்த வீடு….கிட்ட இருந்தாலும் தொட்டுக்க முடியாது…?? அது என்ன…?”

“ஐய்யே…இது தெரியாதா …??இரண்டு கண்ணுதான்….”

“வெளிய வெள்ளி….உள்ள தங்கம்…”

“கண்டுபிடிச்சிட்டேன்…முட்ட…”

இப்படியே பொழுதைப் போக்கினாலும் வீட்டு காரியத்தில் சுட்டி…..

மளமளவென்று அடுப்பை பற்ற வைத்து நொடியில் சமைத்து விடுவாள்…

பள்ளி படிப்பை நாலாவதுடன் நிறுத்தி விட்டாள்.ஆனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி ஓடி உதவி செய்வாள்…

வயசுக்கு வந்ததும் வெளியே போகக்கூடாது என்று அப்பா.. அம்மா..கண்டிப்புக்கெல்லாம் அஞ்சவே மாட்டாள்….

பதினெட்டு வயதில் ஒரு மரப்பாச்சி பொம்மை மாதிரி அழகாக அம்சமாக அவள் நடந்து வந்தால் யாராலும் வைத்த கண்ணை எடுக்க முடியாது……

அவளைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம்….

“ஏய்… பச்ச …. உனக்கு சிகப்பின்னு பேரு வச்சிருக்கணும் பிள்ள…..ஆத்தாளும் அப்பனும் கறுப்பு…நீ எப்படி அம்மிணி…?”

“அதுவா…நா பொறக்கும் போது சிரிச்சுகிட்டே பொறந்தேனா…

நர்ஸம்மா நல்லா நாலு அடி வச்சதில அழுதழுது மொகமெல்லாம் செவந்திடுச்சு….”

பச்சை ரொம்பவே தைரியசாலி..அவளுடைய அப்பா வழி சொந்தம் , பூவாத்தா அத்தை…. வயது தொண்ணூறுக்கும் மேலே…..பழுத்த பழம்…

கிழவிக்கு பச்சையம்மா என்றால் உயிர்.

‘என்ற அறிவுக் கொழுந்து’ என்று கொஞ்சிக் கொண்டே இருப்பாள்.

“இத பாரு அம்மிணி …. நாமெல்லாம் தீர்த்தகிரி சக்கரையோட பரம்பர… அந்த சின்னமல வீரனோட தகிரியம் நமக்கும் இருக்கணும்….??”

“ஆரு ஆத்தா அந்த வீராதி வீரன் … ???”

“அவரு பேரு தீர்த்தகிரி. வெள்ளக்காரன எதுத்து நின்னவரு…ஓடாநெல கோட்டையைக் கட்டி அவிகள ஓட ஓட விரட்டினவரு…கடைசியில பாவி மக்கா அவரத் தூக்கில இல்ல தொங்கவிட்டுபுட்டாங்க….”

உடனே கிழவி ஒப்பாரி வைத்து விடுவாள்……

“கண்மணி பாப்பா ….

கதையாக நீகேளு….!!!!!!

பொன்மணி பாரதம் பூக்கக் காரணமாரு?

தீரன் வீரன் தென்னாட்டு சூரன்..

தீர்த்த கிரிதான் சின்ன மலைதான்.

ஈரோட்டுப் பெருமை பேரான காங்கயம் பாராட்டும் அருமை ஊரான..

பக்கம்மேலப் பாளையம் மேதகு சிற்றூர்

ஆளப் பிறந்தவன் ஆண்சிங்கம் பெற்றூர்.

ரத்தின சாமி கவுண்டர் அவர்க்கு
பெற்றாள் பெரியாத்தா

பிள்ளை செருக்கு
அட்டியன் தொட்டய்யன் ஆண்ட பரம்பரை…..

கெட்டியன் தீர்த்தன் கிளைத்தான் பெரும்படை…..

சங்க கிரியிலொரு பங்கம் நேர்ந்ததோ! ….

சிங்கக் குகையிலொரு சிறுநரி பூந்ததோ! …..

தங்கப் பாரதம் தன்னிலை இழந்ததோ! …..

சுங்கம் வரியென சுதந்திரம் மறந்ததோ….. ????”

இது மாதிரி கதைகளைக் கேட்டு கேட்டு அவளுக்குள் நாட்டுப் பற்று எனும் தீ எரியத் தொடங்கியது..

அவளுக்கும் மாரிக்கும் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது .. அவளுடைய எல்லா ஆசைக்கும் உறுதுணையாய் இருந்தான் மாரி…

ஊரில் என்ன பண்டிகை வந்தாலும் பச்சைதான் முன்னால் நிற்பாள்….

“பச்ச……தை நோம்பி வருவதில்லை….கும்மி பாட்டு சொல்லுடி… பத்து பேரை தயார் பண்ண வேண்டாம்..????”கிராமமே களைகட்டும்…

மூணு நாள் ‘ நோம்பி’ …

“நம்ப பெரியாத்தாள கூப்பிட்டுக்கலாம்.ராமாயணக் கதை அழகா சொல்லுவா….”

வாய் வழியாய் வந்த கும்மிப் பாட்டு…..

“தேவர் எல்லாம் துதித்திட…..
தசரதர் மனம் களித்திட…
ஆதிவம்சம் தன்னிலே…
அவதரித்தார் ஸ்ரீ ராமர்….

அயோத்தியில் பிறந்து வளர்ந்து…..
அழகோங்கிய சீதைக்கு…
அயன் ராமன் மாலையை…
அன்புடனே சூட்டினான்…..

கைகேயி எண்ணப்படி…
தம்பி லட்சமணன் கூடவர…
கைபிடித்த சீதையுடன்…..
காடு வந்தான் ராமனுமே….

தன்னுடைய வனத்திலே…
தசரதனின் மருமகள்….
கோதண்ட ராமனை….
பிரிந்திருந்த நேரத்திலே…..

மாய ராவணன் ஆண்டிபோல்….
அம்மா பிச்சை போடென்று…
ஆடி வந்தான் அருகிலே..
ஆரென்றாள் சீதையும்….

பிச்சையிட்ட சீதையை…
பிடித்திழுத்து ஓடினான்….
பறவையான ஜடாயு….
போர் புரிந்து தோற்றதாம்….

அனுமானென்ற ஒர் குரங்கு…..
அசோக வனம் சென்றதாம்…
அங்கு சீதையைக் கண்டதாம்..
அருகினிலே சென்றதாம்…

மோதிரத்தை பெற்றதாம்…
வனம் முழுதும் எரித்ததாம்…
விரைந்து வந்து ராமனிடம்…
விவரமெல்லாம் சொன்னதாம்….

வானரங்கள் எல்லோரும்….
ராமனுடன் சேர்ந்துதான்….
ராவணனை வென்றனராம்…
சீதையை மீட்டனராம்…..

வெற்றி பெற்று மீண்டுமே….
வீடு வந்தார் கோசலர்…
பட்டம் கட்டி மன்னராய்…
பலரும் வாழ்த்த வாழ்ந்தனர்…”

எல்லோர்மனதிலும் மகிழ்ச்சி பொங்கியது…..

மாரிமுத்து பச்சையம்மா தம்பதிகளுக்கு வரிசையாக மூணு பெண் மக்கள்…

“என்னடி பச்ச… ஒட்டுக்கா மூணு பிள்ளைய பெத்து வச்சிருக்க….சீரு குடுத்தே கட்டாது போலியே…”

“அட வாய மூடுங்கடி… வீட்டுக்கு மகாலட்சுமியா வந்து பொறந்திருக்குங்க ….சீருக்கு என்ன கொற…..??? “

பெண் பிள்ளைகளை யாரும் மட்டமாக பேசினால் பச்சைக்கு கோபம் வந்துவிடும்….

ஒருநாள் மாரிமுத்து பச்சையம்மாவிடம் கேட்டான்….

“பச்ச….மாரப்ப கவுண்டர் நேத்து என்ன பாக்க வந்தாரு…. உங்கிட்ட ஒரு விசயம் கேக்கணுமாம் …நாளைக்கி கூட்டிட்டு வர சொன்னாரு..”

மாரப்ப கவுண்டர் ஊரில் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ள பெரிய மனுஷன்.அவர் எதுக்கு தன்னை பார்க்க வேண்டும்….??

“என்ன விசயம் ..??”

“போனாத்தான் தெரியும் பிள்ள….”

“வணக்கம் ஐயா..சவுக்கியங்களா, பாக்கணுமின்னு கூப்பிட்டு வந்தாரு…”

“வா..பச்சையம்மா…. சவுரியம்தான்..உம்பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா….? நான் எதுக்கு கூப்பிட்டேன்னா…

நீதான் ஊர் நாயம் பேசறவளாச்சே… பஞ்சாயத்தில உன்னையும் உறுப்பினரா சேக்கலாம்னுதான்…!!”

“ஐயா… சொல்றேன்னு தப்பா நெனக்காதீங்க… இவளுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருமே… சரிப்பட்டு வருமா..??”

“மாமா சொல்றது சரிதான்…நீங்கள்ளாம் வேட்டிக்கு ஒரு நாயம் , புடவைக்கு ஒரு நாயம் பேசறவிங்க…

நான் சொல்றது நாயம்ன்னு பட்டா மறுக்க ஒரு பேச்சு வரக்கூடாது…

புடவையும் வேட்டியும் எனக்கு ஒண்ணுதான்… சரின்னு பட்டிச்சினா இப்பவே ரெடி…என்ன மாமா நாஞ்சொல்றது…?”

“பச்சையம்மா…. இப்படி ஒரு ஆள்தான் நமக்கு வேணும்..”

பச்சையம்மா சொல்லுக்கு ஊரே கட்டுப்பட்டது… நியாயம் கிடைத்த சந்தோஷத்தில் பெண்கள் கை ஓங்கியது..

அடுத்த வருஷமே பஞ்சாயத்து தலைவர் ஆகிவிட்டாள் பச்சையம்மா….

பச்சையம்மா பஞ்சாயத்தை நடத்தும் அழகே தனி…

சம்பந்தப்பட்டவர்களை உட்கார வைத்து , பொறுமையாக இரண்டு பக்க நியாயத்தை கேட்டு , ஊர் சனங்களின் அபிப்பிராயத்தையும் கேட்டுவிட்டு தான் கூறும் முடிவு சரியா என்று நாலு பெரிய மனிதர்களின் தீர்ப்புப்படிதான் நியாயம் வழங்குவாள்…..

கூடுமானவரை குடும்பத்தை பிரிக்கமாட்டாள்…. அவள் ஊருக்கே குலசாமியாகிவிட்டாள்…..

எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது….

ஒரு நாள் பச்சையும் மாரியும் தோட்டத்து வேலை முடித்துவிட்டு பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தார்கள்…..

போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும்….

தண்டவாளம் விலகி பெரிய விரிசல்… வேகமாக ரயில் வந்தால் அதோகதிதான்….

“மாமா….இங்க பாருங்க….உடனே எதாச்சும் பண்ணுங்க மாமா….”

“நானென்னத்த பண்ணுவேன் பிள்ள…..??”

“வாங்க…..அவசரமா ஓடிப் போயி விவரத்தை சொல்லுவோம்….”

இரண்டு பேரும் பத்தடி கூட நடந்திருக்க மாட்டார்கள்…. வேகமாக வந்து கொண்டிருந்தது சேலத்திலிருந்து விரைவு வண்டி …..

கண்ணிமைக்கும் நேரத்தில் பச்சையம்மா செய்த காரியம்…

மாரிமுத்துவுக்கு சப்த நாடியும் ஒடுக்கியது… கட்டியிருந்த சிவப்பு புடவையை உருவி உயரப்பிடித்து ஆட்டிக்கொண்டே பாய்ந்து விட்டாள் பச்சை…

ஒரு நிமிஷம் தாமதித்திருந்தாலும் அப்படியே தலை நசுங்கி சிதறியிருக்கும்.

மாரிமுத்து ‘ பச்ச… பச்ச…’ என்று கத்திகொண்டே பாய்ந்து அவளைத் தள்ளி விட்டான்…

வண்டி ‘ க்றீச்சென்று ‘ பெரிய சத்தத்துடன் நின்றது… ஆனால் மாரிமுத்துவை காவு வாங்கிவிட்டு தான் நிற்க முடிந்தது…..

ஆயிரம் பேரை காவு வாங்கவேண்டிய ரயில் …. பாவம் மாரிமுத்துவுடன் தன் பசியைத் தீர்த்துக் கொண்டது.

பச்சையம்மா அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள்…யாரோ ஒரு புண்ணியவான் வேட்டியை அவிழ்த்து அவள் மேல் போர்த்தினார்..

ஆனால் அவளது வாழ்க்கை தடம் புரண்டு விட்டது…. அவள் பிரமை பிடித்தது போல் ஆகிவிட்டாள்..
ஊரே கூடி ஒப்பாரி வைத்தது…

“மாந்தோ பனையோலை…
மயிலணையும் மாஞ்சோலை..!!!
மாந்தோப்பு பனசாஞ்சா..
மயில் வந்து எங்கணையும்…..???

பூந்தோ பனையோலை….
குயிலணையும் பூஞ்சோலை…!!
பூந்தோப்பு பனசாஞ்சா….
குயில் வந்து எங்கணையும்…??

வண்ண கொடிக்காலு…..
வளர் காம்போ வெத்திலையோ….
வளச்சி பறிக்கயிலே…
வயசிலியே தாயிழந்தேன்…

வடக்கே மதுரையிலே….
வாத மரம் கூடாரம்…..
வளையோ வளையலின்னு…
வளயல்கடை செட்டிமன்னன்..

அந்த சொல்ல கேட்டதுமே…
வடபுறத்து நடதொறந்து…
வச்சிரம் போல் தாழ்திறந்து…
வளையல் கட செட்டிமன்னா…
நீங்க வாசல் மேல் வையுங்க….

அம்மா..! வளர்த்தார கூப்பிடுன்னான்..
வளர்த்தாரு காலமுங்க…

வளர்த்தார் இல்லாத இடத்துக்கு…
வளையல் வில கூறமாட்டேன்….
அந்த சொல்ல கேட்டதுமே…
அய்யா..வாசல் விட்டு தாண்டுங்கய்யா..

நா வடபுறத்தோ நடசாத்தி…
வச்சிரம் போல் தாழ்வாங்கி…..
வடிச்சுவிட்டேன் கண்ணீர..
கூடப் பொறந்த அண்ணாரு..

வடக்கேத்த நன்னாட்ட…
வாங்கித்தர நானிருக்கேன்…
வடிக்காத கண்ணீர…..
வாராது ரோகமெல்லாம்……”

அன்றைக்கு ஊரே தூங்கவில்லை….

மாவட்ட கலெக்டர் பச்சையம்மாளுக்கு ஒரு லட்சம் ரூபாயும் பதக்கமும் வழங்கினார்… ஒரு பாராட்டு கூட்டமும் நடந்தது..

“இது எம் மவராசன் மாமனுக்கு சேரவேண்டியது..தண்டவாளத்தில தலைய குடுத்து உசிரப்பணயம் வச்ச எஞ்சாமி…

இந்த பணம் எனக்கு வேண்டாம்..என்ற மாதிரி புருஷன தொலச்சிட்டு நிக்கற பொம்பளைங்களுக்கு என்னோடே அன்பளிப்பு…..!!!!

அந்த வருஷம் ஊருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருந்தது..

பச்சையம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது….!!!!

“ஆத்தா …பாரு… நம்ப ஊருக்கே உன்னால கவுரவம்….”

பச்சை முகத்தில் ஒரு சலனமும் இல்லை…

“ஆடின்னு அழுகிறதுமில்லை….
சித்திரைன்னு சிரிக்கிறதுமில்லை…”

விருது வாங்க போக மறுத்து விட்டாள் பச்சையம்மா….

“இது எந்த நாயத்தில சேத்தி…. விருது மாமனுக்கில்ல போவணும்….!!!!”

“பச்சையம்மா…. விருது வாங்கப்போனயினா ஊருக்கே பெரும…. கூட நாங்க வாரோம்….”

***

அன்றைக்கு ஊரே விருது வாங்கும் விழாவைக் கண்டு மகிழ்ந்தது….

பச்சையம்மாள் இப்போது பொக்கைவாய் கிழவி…வயது எண்பத்தைந்து ஆகிவிட்டது….. ஆனாலும் அவளைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம்…..

“ஆத்தா…. எனக்கு நாண்டுகிட்டு சாகலாம் போல இருக்கு….

எம்புருசன் போனதுக்கப்புறம் எங்கம்மா என்னிய ரொம்ப கேவலமா நடத்துது .அக்காள வரிச வச்சு அழைக்குது.. நானுன்னா இளக்காரமா போச்சு…

“அம்மிணி……
வண்ண மக வாரானா…
வாசலெல்லாம் வழிச்சு விட்டு.
வழியெங்கும் கோலமாம்….
கெட்டமக வாரான்னா…
கொட்டைய இடிம்பா …
கோட்டய பூசும்பா…”
இது உலக வழக்கம் தாயி…”

“ஆத்தா… வானம் கருக்குது..மழைய காணோமே….??

“சித்திரைல சீர்கூட்டும்……
வைகாசியில வாய்திறக்கும்…..
புரட்டாசியில புரண்டு உருண்டுபோகும்.
ஐப்பசில அடமழ…..
கார்த்திகையில் கருபொழுது…”

சொல்லிக் கொண்டே போவாள்….

பிறந்த குழந்தைக்கு அவள் மடியில் தான் வைத்து பெயர் வைக்கிறார்கள்…

“ஆத்தா நல்ல பேராச் சொல்லு…..”

“சின்னமலை….. சின்னமலை….”

“ஆத்தா… உங்கிட்ட ஒரே ஒரு கேள்வி…எப்படி வந்தது அந்த தெகிரியம்….??? ஒத்த ஆளா நின்று ரயிலையே நிறுத்திப்பிட்டியே…!!!!!”

“எல்லாம் சின்னமலை மவராசன் குடுத்த தெகிரியம். நம்ப உடம்புல ஒடற ரத்தம் அவனோடது….மாமா இருந்து பாக்க குடுத்து வைக்காத பாவியாயிட்டேனே…!

“பச்சையம்மாவுக்கு மூச்சு இழுத்து இழுத்து வாங்கியது…ஆசுபத்திரி போக மறுத்தது விட்டாள்..

“மாமனோடு வாழ்ந்த வீட்ல தான் என்ற உயிர் போகோணோம்….. என்ன கட்டாயப்படுத்தாதீங்க….”

அவள் ஆசைப்படி பிள்ளைகள் பக்கத்தில் இருக்கும்போது கடைசி மூச்சு பிரிந்தது…..

சகலவித அரசு மரியாதையுடன் பத்மஸ்ரீ பச்சையம்மாளின் உடல் அவளுடைய சொந்த ஊரான போத்தனூரில் ஊர் சனம் புடைசூழ அடக்கம் செய்யப்பட்டது..

“தாயி… இந்த ஊருக்கு பெரும தேடிக்கொடுத்த எஞ்சாமி…ஒன்ற பிள்ள குட்டிங்க நோய் நொடியில்லாம நல்லா வாழோணம்…”

ஊரே திரண்டு வழியனுப்பியது….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *